Talking History (Romila Thapar in conversation with Ramin Jahan Begloo With the participation of Neeladri Bhattacharya)

குறிப்பிட்ட அறிவுத்துறையில் சாதனை படைத்த ஆளுமைகளிடம் இருந்து கருத்துக்களைப் பெற மூன்று வழிமுறைகள் உள்ளன. முதலாவது அவர்களது எழுத்துக் களை வாசிப்பது. இரண்டாவது அவர்களது உரைகளைக் கேட்பது. மூன்றாவது அவர்களது படைப்புக்களைக் கற்றுத் திறம் போகியோரின் உரைகளைக் கேட்பது அல்லது படிப்பது. இவை அல்லாமல் அவர்களுடன் உரையாடுவது. உரையாடும் போது, மேலும் ஆழமான கருத்துக்களை அவர்களிடம் கேட்டறியமுடியும். அய்யங்களைப் போக்கிக் கொள்ள முடியும்.

talking historyஆனால் ஒரு சிக்கல், பெரிய ஆளுமைகளைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அனைவருக்கும் வாய்ப்பதில்லை. ஆளுமைகளுடனான நேர்காணல்கள் ஒரு குறுகிய எல்லைக்குள் நின்றுவிடுவதால் ஆளுமைகளின் முழுப் பரிமாணத்தையும் நாம் அறிய உதவுவதில்லை. இத்தகைய நிலையில் ஓர் ஆளுமையின் படைப்புக் களைக் கற்றறிந்த ஒருவர் அவருடன் நிகழ்த்தும் நீண்ட உரையாடல் பல கருத்துக்களை வெளிக்கொணரும் தன்மையது. ஆனால், உரையாடல் நிகழ்த்துபவர் குறிப்பிட்ட ஆளுமையின் படைப்புக்களை ஆழமாகக் கற்றறிந்திருந்தால் மட்டுமே இது நிகழும். இங்கு அறிமுகம் செய்யும் நூல் வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பருடன் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பாகும்.

ரொமிலா தாப்பர்

பண்டைய இந்தியாவின் வரலாறு குறித்த சிறந்த ஆய்வாளராகவும், வரலாற்றாசிரியராகவும் உலக அளவில் புகழ் பெற்றவர் ரொமிலா தாப்பர். பஞ்சாபில் 1931-ஆம் ஆண்டில் பிறந்தவர். இவரது தந்தை இராணுவ மருத்துவராகப் பணியாற்றியமையால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாறுதல் நிகழும். இதனால் லாகூர், ராவல்பிண்டி, புனே எனப் பல நகரங்களில் தம் சிறுவயதுக் காலத்தைக் கழிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் திலும், புனே பல்கலைக்கழகத்தில் தத்துவத்திலும் முதுகலைப்பட்டம் பெற்ற இவர் இலண்டன் பல்கலைக் கழகத்தின் ‘கீழைத்தேய ஆப்பிரிக்க ஆய்வுப்பள்ளியில்’ சேர்ந்து ‘அசோகரும் மௌரியர்களின் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றார். இவரது ஆய்வு நெறியாளராக இருந்தவர், ‘வியத்தகு இந்தியா’, ‘ஆஜீவக சமயத்தின் வரலாறு’ ஆகிய நூல்களின் ஆசிரியரான ஏ.ஏல் பாஷம்.

இலண்டன் வாழ்க்கையில் இவரது நண்பர்களில் ஒருவர், இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி குமாரி ஜயவர்த்தனா. மார்க்சிய அறிஞர் எரிக் ஹாப்ஸ்பாமின் சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பும் இவருக்குக் கிட்டியது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரிய ராகவும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாற்றுத்துறையின் பேராசிரியராகவும் பணி ஓய்வுக்குப்பின் அதே துறையில் மதிப்புறு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு மதிப்புறு முதுமுனைவர் (டி.லிட்) பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. அய்ரோப்பிய நாடுகள் சிலவற்றின் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆரிய இனம் என்ற ஒன்று கிடையாது. அது ஒரு பண்பாட்டு வகைமை தான் என்று கூறும் இவர் வரலாற்றில் மதவாத உணர்வைப் புகுத்துவதைக் கடுமையாக எதிர்த்து வருபவர்.

உரையாடியோர்

ராமின் ஜகன்பெக்குலு ஹரியானா மாநிலத்தில் உள்ள குளோபல் பல்கலைக்கழகத்தில் செயல்படும் அமைதி குறித்த ஆய்வுக்கான மகாத்மா காந்தி மையத்தின் நிர்வாக இயக்குநராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வருபவர். இவருடன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் நீலாத்திரி பட்டாச்சார்யாவும் பங்கேற்றுள்ளார்.

இவர்களுள் ராமின் ஜகன்பெக்குலு (இனி: ராமின்) உரையாடலைத் தொடங்குபவராக உள்ளார். பெரும் பாலும் வினா வடிவிலேயே அவரது உரையாடல் அமைய ரொமிலா தாப்பர் விடை கூறுபவராக அமைகிறார். ஆனால் கேள்வி பதில் போன்று இவ்வுரையாடல் அமைய வில்லை. இடையிடையே நீலாத்திரி பட்டாச்சார்யா (நீலாத்திரி) கலந்து கொள்கிறார்.

இவ்வுரையாடலின் மையப்பொருளாக வரலாறு அமைந்துள்ளது. ராமின் இவ்வுரையாடலை நல்ல தயாரிப்புடன் நிகழ்த்தியுள்ளார். ரொமிலா தாப்பரின் வரலாற்று நூல்களை ஆழமாக வாசித்துவிட்டு வந்துள்ளமை அவரது உரையாடலில் வெளிப்படுகிறது. இடையிடையே கலந்து கொள்ளும் நீலாத்திரியும் இவரைப்போன்றே ஆழமான வாசிப்புடன் வந்துள்ளார்.

உரையாடல் பகுப்பு

உரையாடல் வடிவம் என்றாலும் முன்னதாகவே திட்டமிட்ட உரையாடல் என்பதால் உரையாடலை ஆறு தலைப்புகளாகப் பகுத்துள்ளார்கள். முதல் இயல் ரொமிலாவின் வாழ்க்கைக் குறிப்பை, அவரது கல்விப் பயிற்சியை, ஆசிரியப்பணியை உள்ளடக்கி ‘பஞ்சாபில் இருந்து இலண்டன் வரை’ என்ற தலைப்பைக் கொண்டுள்ளது.

இரண்டாவது இயல், கடந்த காலம் குறித்த வாசிப்பு, வரலாற்று உண்மை, வரலாற்றியலாளனின் நோக்கம், வரலாற்றுச் சான்றுகள், வாய்மொழி வரலாறு, இன்னும் சில தலைப்புக்களைக் கொண்டு ‘வரலாற்றிய லாளனின் செயல்பாடு’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது. வரலாற்று வரைவியல் தொடர்பான செய்திகளை இத்தலைப்பில் இடம் பெற்றுள்ள உரையாடல் வெளிக்கொணர்கிறது.

மூன்றாவது இயல் ‘பண்டைய இந்தியா குறித்த நம் கால எழுத்துக்கள்’ என்ற தலைப்பிலானது. கீழைத் தேயவாதிகள், ஆசியக்கொடுங்கோன்மை, நினைவும் மறதியும் என சில தலைப்புகளில் நிகழ்ந்த உரையாடல் களைக் கொண்டுள்ளது.

நான்காவது இயல் ‘வம்சாவளியும் மன்னராட்சியும்’ என்ற தலைப்பிலானது. அறத்திற்கும் அரசியலுக்கும் இடையில் அசோகரின் ஊடாட்டம், அசோகர் - காந்தி ஒப்பீடு, அசோகரைக் குறித்த மதிப்பீடு, என அசோகரை மையமாகக் கொண்ட உரையாடல்கள் இவ்வியலில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் வகுப்புவாதச் சிந்தனைகள், இந்து தேசியத்தின் சித்தாந்தம் என்பன குறித்தும் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.

அய்ந்தாவது இயல் ‘வரலாற்றாசிரியனும் காவியமும்’ என்பதாகும். இதே தலைப்பில் ரொமிலா தாப்பர் கட்டுரையன்று எழுதியுள்ளார். அக்கட்டுரையை மையமாகக் கொண்டே இத்தலைப்பில் இடம் பெற்றுள்ள உரையாடல்கள் அமைந்துள்ளன.

‘சோமநாதர்’ ‘சகுந்தலா’ என்ற தலைப்பில் இரு நூல்களை ரொமிலா தாப்பர் எழுதியுள்ளார். இவ்விரு நூல்களும் பரவலான வாசிப்புக்கு ஆளானவை என்பதுடன் அரசியல் அடிப்படையில் முக்கிய மானவை. இவ்விரு நூல்களையும் மையமாகக் கொண்டே ஆறாவது இயலில் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் இவ்வியலின் தலைப்பு ‘சோமநாதாவும் சகுந்தலையும்’ என்று அமைந்துள்ளது.

கடந்த காலத்தை வாசித்தல்

முதல் இயல் ரொமிலா தாப்பரின் சிறு வயது அனுபவங்கள், குடும்பச் சூழல், கல்வி, நட்பு வட்டம் என்ற செய்திகளைக் கூறிச் செல்ல, இரண்டாவது இயல் வரலாறு எழுதுவோன் குறித்த செய்திகளை விவாதிக்கிறது.

இ.எச். கார் என்ற வரலாற்றறிஞர், வரலாறு எழுதுவோன் கடந்த காலத்தை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பது குறித்து,

‘கடந்த காலத்தை நேசிப்பதோ, கடந்த காலத்தில் இருந்து தன்னை விலக்கி வைத்துக் கொள்வதோ வரலாற்றாசிரியனின் செயல் அல்ல. நிகழ் காலத்தைப் புரிந்து கொள்ள உதவும் வழிகாட்டி யாக கடந்தகாலத்தில் தேர்ச்சியும் புரிதலும் கொண்டவனாய் இருக்க வேண்டும்.’

என்று கூறியுள்ளதை முன்வைத்து ராமின் உரை யாடலைத் தொடங்குகிறார். இவ்வுரையாடலின்போது ரொமிலா தாப்பர் கடந்த காலம் குறித்த வாசிப்பு குறித்துப் பின்வரும் செய்திகளை முன்வைக்கிறார்.

பண்டைய இந்தியாவை ஒரு பொற்காலமாகச் சித்தரிக்கும் கற்பனைப் போக்கு முன்னர் இருந்தது. மக்கள் செழிப்பாக வாழ்ந்ததாகவும், ஒழுங்கமைப்பு சீராக இருந்ததாகவும் ஒரு சித்திரம் உருவாக்கப் பட்டிருந்தது.

தேசியம் என்ற சித்தாந்தத்தைக் கட்டமைக்க, பொற் காலம் ஒன்று தேவையாக இருந்தது, ஒரு நாட்டின் அடையாளத்தைக் கட்டமைக்க எல்லா தேசியங் களுக்கும் வரலாறு அவசியம். இது குறித்து ‘அபின் அடிமைக்கு கசகசா பூவைக் கொடுப்பது போன்றது தேசியவாதத்திற்கு வரலாறு’ என்ற ஹாப்ஸ்பாம் வெளிப்படையாகக் கூறுவார் (கசகசா செடியின் விதையில் இருந்தே அபின் தயாரிக்கப்படுகிறது).

எல்லா தேசியவாதங்களுக்கும் ஒரு கட்டம் வரை கடந்தகாலம் குறித்த கற்பனை தேவைப்படுகிறது. அவர்கள் (தேசியவாதிகள்) வெற்றி பெற்றால் அக்கடந்த காலம் மீண்டும் வரும் என்று நம்புகிறார்கள். இதனால் தான் பல அய்ரோப்பிய தேசியவாதங்களுக்கு, பெரிக்கிளியனின் ஏதென்ஸ் குறித்த சித்திரமும் சீனர்களுக்கு சின் பேரரசின் சித்திரமும் தேவைப் படுகிறது.

பண்டைக்கால வரலாற்றுக்கான சான்றுகள் அரிதாகவே இருந்ததால் பொற்காலத்தை மையமாகக் கொண்ட கற்பனைகளை உருவாக்குவது எளிதாக இருந்தது.

ஹரப்பா நாகரிகம் குறித்த பல கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டனவே. அங்கு வாழ்ந்த மக்களின் பொருள்வளமானது மெசபடோமியா, எகிப்து நாகரிகம் பண்பாட்டுடன் ஒப்பிடுகையில் வளம் குறைந்த ஒன்று தான். இவ்விரு நாகரிகங்களின் வளத்தை அங்குள்ள கோவில்களிலும், கல்லறைகளிலும் காணமுடிகிறது. இலக்கியத்தில் வருணிக்கப்படும் செய்திகளுக்கும், தொல்லியல் ஆய்வில் கண்டறியும் உண்மைகளுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. ஆனால் இலக்கியத்தில் இடம்பெறும் வருணனைகளை அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட களத்தின் மீது திணிக்க வேண்டியுள்ளது. இதைத்தான் ‘தொல்லியல் மீதான பனுவலின் கொடுங் கோன்மை’ என்பர்.

பனுவல் ஒன்று ஒரு குறிப்பிட்ட களத்தை வருணிக்கலாம். ஆனால் அவ்வருணனை உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு பனுவல் வர்ணிப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலை முன்னர் இருந்தது.

இராமாயணத்தில் இடம் பெறும் அயோத்தி நகர் குறித்தும், மகாபாரதத்தில் இடம்பெறும் அஸ்தினாபுரம், இந்திரபிரஸ்தம் குறித்தும் அருமையான வருணனைகள் இருநூல்களிலும் இடம் பெற்றுள்ளன. இவ்விரு இடங் களிலும் நிகழ்ந்த அகழ்ஆய்வுகள் அக்காலத்தில், சாதாரண குடிமக்களாக அங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. மயன் என்பவனால் கட்டப்பட்ட சிறப்பான மாளிகைகளைத் தேடுவது வீண்வேலையாகவே முடியும்.

பரிணாம வளர்ச்சியென்பது ஒரே நேர்கோட்டில் அமைவதில்லை. தொல்லியலானது பழைய சமூக அமைப்புகளையும் வாழ்க்கைமுறையையும் நாகரிகத் தையும் அறிந்து கொள்ள உதவுகிறது. வேட்டையாடிகள் உணவு சேகரித்து வாழ்வோர், மேய்ச்சல் நில வாழ்க் கையினர், குடியானவர்கள் நகரங்களில் வாழ்வோர் எனப் பல்வேறு சமூகப் படிநிலைகளில் மக்கள் வாழ்ந்துள்ளனர். இப் படிநிலைகள் ஒவ்வொன்றையும் கடந்துதான் ஒவ்வொரு சமூகமும் வளர்ச்சியடைந்து வந்துள்ளனவா அல்லது சில படிநிலைகளுக்குள் நுழையாமலேயே வளர்ச்சியடைந்துள்ளனவா என்பதும் கேள்விக்குரிய ஒன்று.

romila thappar and neelathiri

மேய்ச்சல் நில வாழ்க்கையினர் பலர் வேளாண் மையை உபதொழிலாகக் கொண்டிருந்தனர். பெரும் பாலும் உபதொழில் முக்கிய தொழிலாக மாறிவிடுவதும் உண்டு. வேதகால சமுதாயமானது வேளாண்மையையும், மேய்ச்சல் நில வாழ்க்கையையும் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. ஹரப்பா நாகரிகத்தில் அந் நகரமானது சுற்றிலும் உள்ள வேளாண் உற்பத்தியைச் சார்ந்து இருந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே தானியங்களைச் சேமிக்கும் குதிர்கள் அங்கிருந்துள்ளன.

ஹரப்பா நகரம் குறித்து தொல்லியல் குறிப்பிடும் உண்மைகளை வேதங்கள் குறிப்பிடவில்லை. குடியிருப்புப் பகுதிகள், தெருக்களின் அமைப்பு, வடிகால்கள், வீடுகளின் கட்டட அமைப்பு, இடுகாடுகள் என்பன ஹரப்பா அகழ் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  • ···

ஒவ்வொரு சமூகமும் தான் வாழும் சூழலுக்கேற்ப தம் வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொள்கின்றன. இதுவே பின்னர் ஒரு சமூக அமைப்பிலிருந்து மற்றொரு சமூகஅமைப்புக்கு மாறுதலைத் தோற்றுவிக்கின்றன.

வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வெப்ப மண்டலப் பகுதிகளிலும், பனிமண்டலங்களிலும் வாழும் மக்களின் எதிர்பார்ப்புகள் ஒன்று என்றாலும் அதை அடைவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள் வெவ்வேறானவை. புதிய தொழில் நுட்பமுறைகளைப் பயன்படுத்துவதாலும் சமூக பொருளியல் அமைப்புகளை உருவாக்குவதாலும் ஒரு சமூகத்தில் மாறுதல்கள் நிகழ்கின்றன.

வரலாற்றியல் இம்மாறுதல்களை விளக்க வேண்டும். சான்றாக, கற்கருவிகளில் இருந்து உலோகக் கருவிகளுக்கு மாறியது, செம்பு - வெண்கலம், இரும்பு என உலோகங்களைப் பயன்படுத்தியது என்பனவற்றை அது விளக்க வேண்டும். தொழில்நுட்ப கண்டுபிடிப்பு (தொல் அறிவியல் கண்டுபிடிப்பு) குறித்த ஆய்வானது ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையையும், சிந்தனை முறையையும் புரிந்து கொள்ள மிகவும் அவசியமாகும்.

வரலாற்றுண்மை

இ.எச். கார் என்ற வரலாற்றறிஞர் ‘கடந்த காலத்தின் உண்மைகள்’, ‘வரலாற்றுண்மைகள்’ என்ற இரண்டையும் வேறுபடுத்திக் கூறுகிறார். அவரது கருத்துப்படி வரலாற்று உண்மைகளை மட்டுமே வரலாற்றியலாளன் பதிவு செய்ய வேண்டும்.

இந்த இடத்தில் வரலாற்று உண்மை என்றால் என்ன? என்ற வினா எழுகிறது. இவ்வினாவை

  1. வரலாற்று உண்மை என்பது எது?
  2. ஒரு வரலாற்றுண்மை எவ்வாறு உருவாக்கப் படுகிறது?

என்று அமைத்துக் கொள்ளலாம். வரலாறு என்பது கருத்துருவான செய்திகளை அடிப்படையாகக் கொண்டது. அதே நேரத்தில் தொல்லியலானது. கண்ணுக்குப் புலனாகும் தன்மை கொண்டது. இருந்தாலும் கருத்துருவானது பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

கடந்தகால நிகழ்வு ஒன்றை வரலாற்று உண்மை சுட்டிக்காட்டலாம். அது வாசிப்புக்கு உள்ளாகி ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் பொருத்தப்படலாம். அந்த நிகழ்வு எதை வெளிப்படுத்துகிறது என்பது குறித்து வாசிப்பில் வேறுபாடு தோன்றவும் இடமுண்டு.

அண்மைக்காலம் வரை நம் பண்டைய வரலாறு இந்தியவியல் என்றே வகைப்படுத்தப்பட்டது. இது தொடர்பான தரவுகளைச் சேகரிப்பது மட்டுமே முக்கியமாகக் கருதப்பட்டது. இத்தரவுகளுக்கு விளக்கம் தருவதில் அதிகமாக ஆர்வம் காட்டவில்லை. இதனால் இந்தியாவின் கடந்தகாலம் குறித்த காலனியக் கருத்தாக்கங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஒரு சமூக விஞ்ஞானம் என்ற முறையில் தரவுகள் சேகரிப்பைத் தாண்டி பல்வேறு வினாக்களை எழுப்பி ஆராய்வதில் இருந்து வரலாறு பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. ஒரு தரவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்து வதுடன் அதன் வரலாற்றுச் சிறப்பையும் வரலாற்றி யலாளன் விளக்க வேண்டும்.

வரலாற்று ஆதாரங்கள்

ஒரு வரலாற்றுப் பனுவலை ஆராயப் புகுமுன் முதற் படியாக அதை மதிப்பீடு செய்வது அவசியம். இதன் பொருட்டு பின்வரும் வினாக்களை வரலாற்றியலாளர் எழுப்ப வேண்டும்.

  1. இந்தப் பனுவல் எங்கிருந்து பெறப்பட்டது?
  2. இதன் ஆசிரியர் யார்?
  3. அவருடைய சமூகப் பின்புலம் என்ன?
  4. இப்பனுவலின் உள்ளடக்கம் என்ன?
  5. பனுவல் உருவாக்கப்பட்டதன் நோக்கம்
  6. எதை வெளிப்படுத்த பனுவல் விரும்புகிறது?
  7. எந்த சமூகக் குழுவை நோக்கிப் பனுவல் பேசுகிறது?
  8. அது பரப்புரை செய்யும் அல்லது மறுக்கும் கருத்தின் சமூக நோக்கம் என்ன?
  9. அது எழுதப்பட்டபோது எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டது?

பல நூற்றாண்டுக்களுக்கு முன்னர் எழுதப்பட்ட பனுவல்களில் இவ்வினாக்கள் அனைத்திற்கும் விடை காணமுடியாது. ஆயினும் இவ்வினாக்களுக்கு விடை காண முயல வேண்டும். பனுவல்களை மதிப்பீடு செய்வது அதன் நம்பகத்தன்மையைக் கண்டறிய உதவும்.

வாய்மொழி வரலாறு

வாய்மொழிச் சான்றுகளை மையமாகக் கொண்டு வரலாறு எழுதும் வாய்மொழி வரலாறும் உருவாகி யுள்ளது. நேர்காணல்களும் கூட வாய்மொழி வரலாற்றில் சான்றுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. தொடக்கத்தில் வாய்மொழி வரலாறு ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகவே இருந்தது. பின்னர் இப்போக்கு மாறியது.

ஆப்பிரிக்க வரலாற்று வரைவில் வாய்மொழிச் சான்றுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாய்மொழிக் காப்பியங்களும் வரலாற்றுச் சான்றுகளாயின. மில்மன் பரி, ஆல்பர்ட் லார்டு ஆகியோரின் சேகரிப்புகளும் ஆய்வுகளும் காவியங்களின் முந்தைய வடிவமாக வாய்மொழி மரபு உள்ளதை வெளிப்படுத்தின. நம் நாட்டின் இராமாயணமும் பாரதமும் வாய்மொழி மரபின் வளர்ச்சியாக இருக்கலாம். புத்த ஜாதகக் கதைகளும் கூட வாய்மொழி மரபின் வளர்ச்சியாக இருக்கலாம்.

இந்தியப் பண்பாட்டு வரலாற்றுக்கான மிகுதியான தரவுகள் வாய்மொழி மரபில் உள்ளன. அரசவை சார்ந்த பனுவல்களின் சித்தரிப்பிற்கு மாறான சித்தரிப்பை வாய்மொழிப் பனுவல்கள் வழங்கும் தன்மையன. கதைகளும் கூட கடந்தகாலச் சமூக அமைப்பை வெளிப்படுத்துகின்றன. சான்றாக, மகாபாரதக் கதை கணச் சமூக அமைப்பையும் இராமாயணக் கணச் சமூகத்திற்கும் புதிதாக உருவாகும் மன்னராட்சிக்கும் இடையிலான முரண்பாட்டையும் சித்தரிக்கின்றன.

நூலின் சிறப்பு

மன்னர்களின் பரம்பரை சார்ந்த வரலாறாகவும், படையெடுப்புகள், மதங்களின் பங்களிப்புகள், நுண் கலைகள் என்ற எல்லைக்குள் மட்டுமே ஆராயப்பட்டு வந்த இந்தியாவின் பண்டைக்கால வரலாற்றை, சமுதாயக் கண்ணோட்டத்துடன் எழுதியவர் ரொமிலா தாப்பர். பண்டைக் கால இந்தியா தொடர்பான அவரது ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் இந்திய வரலாறு என்ற பரந்த தளத்தில் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களின் பண்டைய வரலாற்றை அறிவியல் முறையில் எழுதுவதற்கான வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகின்றன.

அவரது உரையாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்நூல் பல சிக்கலான வினாக்களுக்கு விடைதரும் சிறப்புடையது. அவரது ஆய்வு அனுபவங் களின் பிழிவாக இந்நூல் அமைந்துள்ளது. அவரது ஆய்வுகள் அனைத்தையும் படித்து முடித்த அனுபவத்தை இந்நூலை வாசித்துப் பெறமுடியும். இச்சிறு கட்டுரையில் தொட்டுக்காட்டப்படாத பல அரிய செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கீழைத்தேயவாதமும், அதைப் பயன்படுத்தியோரும், ஆசியக் கொடுங் கோன்மை, இந்து தேசியவாதம், சோமநாதபுரம், சகுந்தலை குறித்த உரையாடல்களும், மார்க்ஸ் குறிப்பிடும் ஆசிய உற்பத்தி முறை, இந்திய வரலாற்று வரைவுக்கு கோசாம்பியின் பங்களிப்பு, இந்திய மார்க்சிசம் என்ற ஒன்று உண்டா, வரலாற்று வரைவில் புதிய வரலாற்றுப் பள்ளிகள் என்ற தலைப்பிலான உரை யாடல்களும் குறிப்பிடத்தக்கன.

மொத்தத்தில், வரலாறு வாசிப்பில் ஆர்வம் கொண்டோருக்கு மட்டுமின்றி வரலாறு பயிலும் மாணவர்களுக்கும் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் பயன்தரும் நூல் இது.

Pin It