கடந்த 2006 உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நக்கலமுத்தன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் திரு.ஜக்கன் அதே ஆண்டிலும், மருதங்கிணறு பஞ்சாயத்துத் தலைவர் திரு.சேர்வரான் மற்றும் திருவாரூர் திரு.ஜெயக்குமார் ஆகியோர் 2007ம் ஆண்டிலும் சாதி இந்துக் கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் 2011 தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தலித்துகளுக்கு 26 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழகத்தின் மொத்த கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களின் எண்ணிக்கை 12,524. இவற்றில் 3,136 (25 சதவீதம்) தலித்துகளுக்கும், 156 (1 சதவீதம்) பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டது. இதேபோன்று கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கான இடங்கள் தமிழகத்தில் 99,333. இவற்றில் 25,360 (26 சதவீதம்) இடங்கள் தலித்துகளுக்கும், 1039 (1 சதவீதம்) பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்ட பஞ்சாயத்துத் தலைவருக்கான இடங்கள் தமிழகத்தில் 31 உள்ளது. இவற்றில் தலித்துகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இவையெல்லாம் சமூகநீதி அடிப்படையில் வரவேற்கப்படவேண்டிய நடவடிக்கைகளாகும். அதே நேரத்தில் அரசு எதனடிப்படையில் இத்தகைய அரசியல் அதிகாரங்களை தலித்துகளுக்கு வழங்கியிருக்கிறதோ அவற்றின் நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகிறதா? என்பதையும் ஆராய்வது சிவில் சமூகத்தின் முக்கிய கடமையாகும்.

சாதிய ரீதியாகவும் தீண்டாமையின் அடிப்படையிலும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாகி வரும் தலித்துகளுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டுமென்கிற அடிப்படையில் உள்ளாட்சி, சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகிய தேர்தல்களில் தலித்துகள் மட்டுமே போட்டியிடுகிற தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கிராமம், மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் தலித் பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட்டு அதன் மூலம் அம்மக்களின் அரசியல் அங்கீகாரத்தை உறுதிபடுத்தவும், சமவாய்ப்பினை ஏற்படுத்தி சமஅந்தஸ்த்தினை உருவாக்கவும் இம்முறை கொண்டு வரப்பட்டது. ஆனாலும் சாதி இந்துக்களும் சாதிய மனோபாவத்துடன் இருக்கக்கூடிய அரசு அதிகாரிகளும் தலித் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு எதிராக செயல்படுகின்றனர் என்கிற விமர்சனம் சமூக ஆர்வலர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமாக, தன்னிச்சையாக தங்கள் பொறுப்பினை செயலாற்ற முடிகிறதா? தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு குறுக்கீடாக இருப்பவர்கள் யார்? தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது ஏதேனும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றனவா? உள்ளிட்ட பல்வேறு நிலைகளை ஆராய்வதற்காக எமது எவிடன்ஸ் அமைப்பு ‘தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதான பாகுபாடுகள்’ என்கிற ஆய்வினை கடந்த மார்ச் - ஏப்ரல் 2012 மாதங்களில் நடத்தியது.

ஆய்வு எல்லைகளும் முறைகளும்

‘தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதான பாகுபாடுகள்’ என்கிற ஆய்வு மதுரை (24 பஞ்சாயத்துகள், சிவகங்கை (17 பஞ்சாயத்துகள்), திண்டுக்கல் (21 பஞ்சாயத்துகள்), தேனி (21 பஞ்சாயத்துகள்), கோயம்புத்தூர் (13 பஞ்சாயத்துகள்), ஈரோடு (8 பஞ்சாயத்துகள்), விழுப்புரம் (19 பஞ்சாயத்துகள்), கடலூர் (19 பஞ்சாயத்துகள்), நாகப்பட்டிணம் (10 பஞ்சாயத்துகள்), தஞ்சாவூர் (19 பஞ்சாயத்துகள்) ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள 171 பஞ்சாயத்துகளில் நடத்தப்பட்டது.

ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 171 பஞ்சாயத்துகளின் தலித் தலைவர்கள் அனைவரும் தங்கள் மீதான பாகுபாடுகளை உண்மை என்று கூறி ஆய்வுப் படிவத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளனர். இதில் 32 பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்கள் மீதான பாகுபாடுகளை வாக்குமூலமாக பதிவு செய்து கொடுத்துள்ளனர். பஞ்சாயத்துத் தலைவர்களின் வாக்குமூலமும் கையொப்பமிட்ட ஆய்வுப் படிவமும் எங்களது ஆய்வின் முக்கிய ஆதாரமாகக் கருதுகிறோம்.

பஞ்சாயத்துத் தலைவர்களின் பாலின மற்றும் சாதிய விபரம்

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 171 தலித் பஞ்சாயத்துத் தலைவர்களில் 87 (51 சதவீதம்) பேர் ஆண்கள். 84 (49 சதவீதம்) பேர் பெண்கள். இவர்களில் 92 (54 சதவீதம்) பேர் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 41 (24 சதவீதம்) பேர் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 33 (19 சதவீதம்) பேர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஆவர். 171 பஞ்சாயத்துத் தலைவர்களில் தலித் ரிசர்வ் (பொது) தொகுதியைச் சேர்ந்தவர்கள் 90 (53 சதவீதம்). தலித் பெண் ரிசர்வ் தொகுதியைச் சேர்ந்தவர்கள் 77 (45 சதவீதம்). பொதுத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித்துகள் 4 (2.3. சதவீதம்).

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 171 பஞ்சாயத்துகளில் 167 பஞ்சாயத்துகள் இரண்டாவது முறையாக ரிசர்வ் தொகுதியாக உள்ளன. 896 கிராமங்களை உள்ளடக்கிய 171 பஞ்சாயத்துகளின் மக்கள் தொகை 7,23,029. இவர்களில் ஆண்கள் 50 சதவீதம், பெண்கள் 50 சதவீதம். ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பஞ்சாயத்துகளின் மொத்த மக்கள் தொகையில் 29 சதவீதம் தலித்துகளும், 71 தலித் அல்லாதோர்களும் உள்ளனர்.

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 171 தலித் பஞ்சாயத்துத் தலைவர்களில் முதன் முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 129 (75 சதவீதம்). 25 சதவீத பஞ்சாயத்துத் தலைவர்கள் ஏற்கனவே தலைவர்களாக இருந்துள்ளனர்.

பஞ்சாயத்துத் தலைவர்களுக்கான பயிற்சி மற்றும் திறன்கள் விபரம்

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 171 பஞ்சாயத்துகளில் 160 (94 சதவீதம்) பஞ்சாயத்துகளின் தலைவர்களுக்கு இதுவரை அரசு எவ்வித பயிற்சியும் அளிக்கவில்லை. இதுமட்டுமல்லாமல் 163 (90 சதவீதம்) தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு சமூக பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நீதி சார்ந்த தகவல்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. பஞ்சாயத்து வரைபடம் 2 பஞ்சாயத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்த பயிற்சி 2 பஞ்சாயத்திற்கும், பஞ்சாயத்திற்கு உட்பட்ட நிலங்கள் யார் கையில் உள்ளது என்பதை கண்டறிவது குறித்த பயிற்சி 2 பஞ்சாயத்திற்கும், தீண்டாமைப் பாகுபாடுகள் நிலவி வந்தால் அவற்றை ஒழிப்பது குறித்த பயிற்சி 1 பஞ்சாயத்திற்கும், பஞ்சாயத்து நிர்வாகம் குறித்த பயிற்சி 7 பஞ்சாயத்திற்கும், கணக்கு மற்றும் தணிக்கை குறித்த பயிற்சி 3 பஞ்சாயத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு நிர்வாகம், பொருளாதார மேம்பாடு, சமூக நீதி உள்ளிட்ட திறன் வளர்ப்புப் பயிற்சியினை அரசு தொடர்ந்து கொடுக்க வேண்டும். ஆனால் ஊராட்சி மன்றத் தேர்தல் முடிந்து 6 மாத காலம் கடந்துவிட்ட நிலையில் 94 சதவீத பஞ்சாயத்துகளுக்கு பயிற்சி அளிக்கப்படாமல் இருப்பது ஏற்புடையதல்ல. இத்தகைய பயிற்சிதான் பஞ்சாயத்துத் தலைவர்களின் ஆளுமை மற்றும் நிர்வாகத்திறனை மேம்படுத்தும். இதன் முக்கியத்துவத்தை அரசு புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற பயிற்சி பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டால் நிர்வாகம் மட்டுமல்ல தங்கள் மீதான பாகுபாடுகளையும் எதிர்கொண்டு சுமூகமான பணியினை கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும் என்பதை எமது எவிடன்ஸ் அமைப்பு அரசிற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணங்கள்

தாங்கள் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் நிற்பதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர்கள் சாதி இந்துக்கள் தான் என்று 105 (61 சதவீதம்) தலைவர்கள் கூறியுள்ளனர். குடும்பத்தினரும் காரணம் என்றும் 71 தலைவர்களும், உறவினர்களும் காரணம் என்று 29 தலைவர்களும், தலித்துகளும் காரணம் என்று 55 தலைவர்களும் கூறியுள்ளனர். அரசியல் கட்சியினர் தங்களை தேர்தலில் நிற்க வற்புறுத்தியதாக 23 பஞ்சாயத்துத் தலைவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

எமது எவிடன்ஸ் அமைப்பு ஆய்வு செய்த 171 பஞ்சாயத்துத் தலைவர்களில் 61 சதவீதத்தினர், சாதி இந்துக்கள் தான் தங்களை தேர்தலில் நிற்க வலியுறுத்தினர் என்று கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் 146 பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்களைவிட கூடுதலாக படித்தவர்கள் தேர்தலில் நிற்க வைக்கப்பட்டு தோற்கடிப்பட்டனர் என்கிற விபரத்தையும் கூறியுள்ளனர். இதன்மூலம் சாதி இந்துக்களுக்காக தலித் தலைவர்கள் பினாமியாக நிற்கப்வைக்கப்பட்டதற்கான தந்திரம் அறிய முடிகிறது. தங்களைவிட கல்வித் தகுதியிலும் சமூகப் பணியிலும் கூடுதல் தகுதியிருந்தும் அவர்கள் எல்லாம் சாதியக் கட்டுமானத்தின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டிருப்பதையும் கண்டறிய முடிகிறது. அதே நேரத்தில் 171 பஞ்சாயத்துத் தலைவர்களில் 32 சதவீதத் தலைவர்கள் தான் தலித்துகளும் தங்களை தேர்தலில் நிற்க வலியுறுத்தினர் என்று கூறியுள்ளனர். தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு தலித்துகளின் ஆதரவு குறைவாக இருந்தது என்பது இதற்கு அர்த்தமல்ல. பஞ்சாயத்துத் தேர்தலை சாதி இந்துக்கள் தான் தீர்மானிக்கக்கூடிய சக்திகளாக இருந்து வருகின்றனர் என்பதற்கான அத்தாட்சிதான் 61 சதவீத பஞ்சாயத்துகளில் தலித்துகளை சாதி இந்துக்கள் தேர்தலில் நிற்க வற்புறுத்தியுள்ளனர் என்பது.

பஞ்சாயத்துத் தலைவர்களின் தொழிலும் மாத வருமானமும்

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 171 பஞ்சாயத்துத் தலைவர்களில் 49 (42 சதவீதம்) பேர் விவசாயக் கூலியாக உள்ளனர். கூலித் தொழிலாளியாக 10 பேரும், சுயதொழில் செய்பவர்கள் 21 பேரும் உள்ளனர். வேலை எதுவும் பார்க்காத பஞ்சாயத்துத் தலைவர்களின் எண்ணிக்கை 83 (48.5 சதவீதம்).

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 171 தலித் பஞ்சாயத்துத் தலைவர்களில் 134 (78 சதவீதம்) பேர் தங்களுக்கு தேர்தல் சம்பந்தமான கடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பஞ்சாயத்துத் தலைவர்களின் மாத வருமானத்தை ஆய்வு செய்த போது 83 பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்களது வருமானத்தைத் தெரிவிக்கவில்லை. 88 தலைவர்கள் தங்களது மாத வருமானத்தைத் தெரிவித்துள்ளனர். ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 48.5 சதவீத பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு எவ்வித வேலையும் இல்லை என்பது துயரமான சிக்கலாகும். 52 சதவீத பஞ்சாயத்துத் தலைவர்கள் விவசாயக் கூலியாகவும் பிற கூலி வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக 40 சதவீத பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு மாத வருமானம் ரூ.2000. இதுமட்டுமல்லாமல் ரூ.2000 – 5000 வரை மாதம் வருமானம் பெறக்கூடிய பஞ்சாயத்துத் தலைவர்களின் எண்ணிக்கை 40 (45) சதவீதம்.

பஞ்சாயத்துகளில் சாதி, சுயசார்பு பொருளாதாரம் இல்லாத நிலை, சாதி இந்துக்களிடம் கூலி வேலை பார்க்கிற அவலம் உள்ளிட்ட சமூக சீர்கேடுகள் பஞ்சாயத்துத் தலைவரின் ஆளுமையை கடுமையாகப் பாதிக்கும். ஆகவே அரசியல் அதிகாரம் எந்த ஆளவிற்கு முக்கியமோ அதே ஆளவிற்கு அந்த அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிற பிரதிநிதிகளுக்கு உரிய பொருளாதார அதிகாரத்தையும் இணைந்து வழங்கினால்தான் அரசியல் பிரதிநிதித்துவத்தை உரிய முறையில் செயல்படுத்த முடியும். ஆகவே இதுகுறித்த விரிவான விளக்கமான கலந்தாய்வு தேசிய ஆளவிலும் மாநில ஆளவிலும் நடத்தப்பட வேண்டும்.

தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதான பாகுபாடுகளும் மனித உரிமை மீறல்களும்

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 171 தலித் பஞ்சாயத்துத் தலைவர்களும் தங்கள் மீது பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளனர். இவற்றில் 93 (54 சதவீதம்) பஞ்சாயத்துத் தலைவர்கள் துணைப் பஞ்சாயத்துத் தலைவராலும், 51 (30 சதவீதம்) பஞ்சாயத்துத் தலைவர்கள் எழுத்தராலும் பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுவதாக கூறியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் சாதி இந்து உறுப்பினர்களால் 95 பஞ்சாயத்துத் தலைவர்களும், தலித் உறுப்பினர்களால் 27 பஞ்சாயத்துத் தலைவர்களும், குறிப்பிட்ட சாதி இந்து வன்கொடுமைக் கும்பலால் 76 பஞ்சாயத்துத் தலைவர்களும், 42 பஞ்சாயத்துத் தலைவர்கள் அரசியல் கட்சியினராலும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தங்கள் மீது சாதிய ரீதியான அணுகுமுறை காட்டப்படுவதாக 145 (85 சதவீதம்) பஞ்சாயத்துத் தலைவர்கள் கூறியுள்ளனர். சாதிய ரீதியாக இழிவு சொல்லுக்கு உள்ளாக்கப்படுகிற பஞ்சாயத்துத் தலைவர்களின் எண்ணிக்கை 104 (61 சதவீதம்). தங்களுக்கு மரியாதை கொடுக்கப்படுவதில்லை என 124 தலைவர்களும், தீர்மானத்தில் குறுக்கீடு செய்கிறார்கள் என்று 133 தலைவர்களும், பணி செய்யவிடாமல் குறுக்கீடு செய்கிறார்கள் என்று 141 தலைவர்களும் கூறியுள்ளனர். அலுவலகத்திற்குள் விட மறுக்கிறார்கள் என்று விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலம் க.செல்வராஜ், கடலூர் மாவட்டம் சு.கீனனூர் பஞ்சாயத்துத் தலைவர் செல்வராஜ், திண்டுக்கல் மாவட்டம், புளியூர்நத்தம் பஞ்சாயத்துத் தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பஞ்சாயத்துத் தலைவர்கள் கூறியுள்ளனர். இதே போன்று பஞ்சாயத்து அலுவலகத்தைப் பூட்டி வைத்துக் கொள்வதாக திண்டுக்கல் மாவட்டம், வாகரை பஞ்சாயத்துத் தலைவர் சின்னான், ஈரோடு மாவட்டம், குப்பாண்டம்பாளையம் குப்பாயி உள்ளிட்ட 5 பஞ்சாயத்துத் தலைவர்கள் எங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர். பதிவேடு மறைத்து வைப்பதாக 25 பஞ்சாயத்துத் தலைவர்களும், கட்டாயப்படுத்தி கையொப்பமிட வைப்பதாக 25 பஞ்சாயத்துத் தலைவர்களும், கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுப்பதாக 10 பஞ்சாயத்துத் தலைவர்களும், குழுவாக சேர்ந்து கொண்டு ஒதுக்கி வைப்பதாக 5 பஞ்சாயத்துத் தலைவர்களும், ஆபாசமாகப் பேசுவதாக 68 பஞ்சாயத்துத் தலைவர்களும் கூறுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், அத்திகோம்பை பஞ்சாயத்துத் தலைவர் திருமிகு.பேபி, திண்டுக்கல் மாவட்டம், புளியூர் நத்தம் பஞ்சாயத்துத் தலைவர் சண்முகசுந்தரம், மதுரை மாவட்டம், இலங்கியேந்தல் பஞ்சாயத்துத் தலைவர் முத்துச்செல்வி உள்ளிட்ட 4 பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும் ஆய்வில் தெரிய வருகிறது.

பொது பங்கேற்பில் அனுமதி மறுக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களின் எண்ணிக்கை 44. தங்களைப் பற்றி அரசு அதிகாரிகளிடம் தவறான தகவல்களைத் தருகிறார்கள் என்று 61 பஞ்சாயத்துத் தலைவர்கள் கூறுகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற ஒத்துழைக்க மறுப்பதாக 101 பஞ்சாயத்துத் தலைவர்களும், வளர்ச்சித் திட்டங்களில் உறுதுணையாக இல்லாமல் தங்களைப் புறக்கணிப்பதாக 105 பஞ்சாயத்துத் தலைவர்களும், தலித் மக்களின் மேம்பாட்டிற்கு உதவ மறுக்கிறார்கள் என்று 138 பஞ்சாயத்துத் தலைவர்களும் கூறுகின்றனர்.

இதேபோன்ற காசோலையில் கையெழுத்திட மறுப்பதாக 65 தலைவர்களும், நாற்காலியில் உட்கார அனுமதி மறுக்கிறார்கள் என்று 7 பஞ்சாயத்துத் தலைவர்களும்; தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுக்கிறார்கள் என்று 6 பஞ்சாயத்துத் தலைவர்களும் கூறுகின்றனர். தங்களை இழிதொழில் செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள் என்று 2 பஞ்சாயத்துத் தலைவர்களும், பஞ்சாயத்திற்கான திட்டங்களை தெரியப்படுத்த மறுக்கின்றனர் என்று 45 பஞ்சாயத்துத் தலைவர்களும், ஊராட்சி பெயர்ப் பலகையில் தங்களின் பெயரை புறக்கணிக்கின்றனர் என்று 13 பஞ்சாயத்துத் தலைவர்களும் கூறுகின்றனர்.

தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது 25க்கும் மேற்பட்ட பாகுபாட்டின் வகைகள் கடைபிடிக்கப்பட்டு வருவது கண்டறிய முடிகிறது. ஆகவே தலித் ஒருவர் பஞ்சாயத்துத் தலைவராக பொறுப்பிற்கு வந்தாலும் அவர்கள் மீதான சாதிய வன்கொடுமை தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது இவ்வாய்வின் மூலம் தெரிய வருகிறது. இம்மீறல்களுக்கு இடையே 118 (69 சதவீதம்) பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்களது பஞ்சாயத்தில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு சென்றிருக்கிறோம் என்று உறுதி கூறுகின்றனர்.

தங்களது பஞ்சாயத்தில் தீண்டாமை ஒழிப்பு குறித்து நடவடிக்கை எடுத்தீர்களா? என்று எமது குழுவினர் கேட்டபோது 168 (98 சதவீதம்) பஞ்சாயத்துத் தலைவர்கள் இல்லை என்று தங்களது பதிலை கூறியுள்ளனர். தீண்டாமை ஒழிப்பிற்கு பஞ்சாயத்து உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா? என்று கேட்டதற்கு 165 (96 சதவீதம்) பேர் இல்லை என்கிற பதிலைத் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாயத்தும் குத்தகை விபரமும்

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 171 பஞ்சாயத்தில் 100 பஞ்சாயத்தில் குத்தகை விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றில் 83 சதவீத குத்தகையை தலித் அல்லாதோரும், 17 சதவீத குத்தகையை தலித்துகளும் எடுத்துள்ளனர்.

பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறபோது தங்களுக்கு சாதி ரீதியான குறுக்கீடுகள் இருந்ததாக 119 பஞ்சாயத்துத் தலைவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் பஞ்சாயத்து நிர்வாகம் குறித்து பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் வன்கொடுமைக்கு எதிராக 8 வழக்கினை பதிவு செய்திருக்கின்றனர்.

தாங்கள் திறம்பட பணி செய்வதற்கு அரசு தரப்பில் ஒத்துழைப்பு கொடுக்கப்படுகின்றன என்று 148 (86.5 சதவீதம்) பஞ்சாயத்துத் தலைவர்கள் கூறியுள்ளனர். இவர்களில் 124 பஞ்சாயத்து தலைவர்கள் விரிவாக்க அலுவலர் தமக்கு உறுதுணையாக உள்ளனர் என்று கூறியிருக்கின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஒத்துழைப்பதாக 150 பஞ்சாயத்துத் தலைவர்களும், ஊராட்சி துணை இயக்குனர் ஒத்துழைப்பதாக 115 பஞ்சாயத்துத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர் ஒத்துழைப்பதாக 105 பஞ்சாயத்துத் தலைவர்களும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒத்துழைப்பதாக 137 பஞ்சாயத்துத் தலைவர்களும் தங்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுப்பு

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட சேந்தநாடு ஊராட்சி மன்றத் தலைவர் திரு.அறிவுக்கரசு எமது குழுவினரிடம், கடந்த ஜனவரி 26, 2012 அன்று சேந்தநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தன்னை தேசியக் கொடி ஏற்றவிடாமல் சாதி இந்துவான திரு.செண்பகராமன் என்பவர் தடுத்தார் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பஞ்சாயத்து நாற்காலியில் அமரவும் அலுவலகத்திற்கு செல்லவும் தடை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திற்கு உட்பட்டது புளியூர்நத்தம் பஞ்சாயத்து. இதன் தலைவர் சண்முகசுந்தரம் எமது குழுவினரிடம், நான் கடந்த அக்டோபர் 2011ல் புளியூர் நத்தம் பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதுமுதல் பஞ்சாயத்து துணைத் தலைவரான திரு.சடையப்பன் என்பவர் என் மீது பல்வேறு வன்கொடுமைகளை நடத்தி வருகிறார். நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் இதுவரை பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலியில் உட்காரவும் இல்லை. பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செல்லவும் முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் பஞ்சாயத்து பணிகளை திறம்பட செய்வதற்கு சடையப்பன் குறுக்கீடு செய்கிறார். என் தந்தை முருகேசன் அவர்கள் 2006ல் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக இருந்தார். என் தந்தையும் பல்வேறு அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டார் என்று கூறினார்.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டம், சேந்தமங்கலம் பஞ்சாயத்துத் தலைவர் திரு.கனகஅன்பேத் எமது குழுவினரிடம், இதுவரை நான் பஞ்சாயத்து அலுவலகத்திற்கே சென்றதில்லை. நாற்காலியில் உட்கார்ந்தும் பணி செய்ய முடியவில்லை. இப்பகுதி சாதி இந்துக்கள் என்னை சாதிய ரீதியாக இழிவாகப்பேசி வருகின்றனர் என்று கூறினார்.

பஞ்சாயத்துத் தலைவர் மீது கொடூர தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், அப்பனூத்து பஞ்சாயத்துத் தலைவர் திரு.முத்தன் எமது குழுவினரிடம், ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு சாதி இந்துக்களான தங்கராசு, சேதுபதி கவுண்டர் ஆகிய இருவரும் தங்களது ஊறவினர் ஒருவரை நியமிக்க முயற்சி செய்தனர். ஆனால் தலித் பெண் ரேகா என்பவர் துணை பஞ்சாயத்துத் தலைவர் ஆனார். இதனால் ஆத்திரமடைந்த சாதி இந்துக்கள் என் மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து கீரணூர் காவல்நிலையத்தில் குற்றஏண்.345/2011 பிரிவுகள் 341, 323, 506(1) இ.தச. மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(10) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் மேற்குறிப்பிட்ட வன்கொடுமை கும்பல் என்னை சாதி ரீதியாக இழிவாகப்பேசி வருவது மட்டுமல்லாமல் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர் என்று கூறினார்.

பதிவேடுகள் கொடுக்காமல் நிர்வாக குறுக்கீடு

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்டது கொட்டானிப்பட்டி பஞ்சாயத்து. இதன் தலைவர் திரு.ஜனகர் (50) த.பெ.பொன்அழகிரி எமது குழுவினரிடம், பஞ்சாயத்து எழுத்தரான திரு.முருகேஸ்வரி என்பவர் பஞ்சாயத்து பதிவேடுகளை தம்மிடம் கொடுக்காமல் தானே வைத்துக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து எழுத்தர் முருகேஸ்வரியிடம் பஞ்சாயத்து பதிவேடுகளை கொடுங்கள் என்று நான் பலமுறை கேட்டதற்கு, உனக்கெல்லாம் பதிவேடு கொடுக்க முடியாது. நான் கையெழுத்துப் போடச் சொன்னால் நீ பேசாமல் கையெழுத்துப்போடு என்று கூறி வருகிறார். இதுகுறித்து நான் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 19.11.2011 அன்று புகார் கொடுத்தேன். மாவட்ட ஆட்சியரும் ஊராட்சி துறை இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு எனது புகாரினை விசாரிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார். ஆனால் இதுவரை என்னிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை. நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

பஞ்சாயத்துத் தலைவருக்கு தெரியாமலேயே குத்தகை நடத்திய கொடுமை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழடி பஞ்சாயத்துத் தலைவர் திருமிகு.ஜானகி எமது குழுவினரிடம், பஞ்சாயத்து துணைத் தலைவரான திருமிகு.தீபா என்பவரின் கணவர் கருப்புசாமி என்பவர் என்னிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வருகிறார். என் மீதும்ஏன் கணவர் மீதும் கருப்புசாமி காவல்நிலையத்தில் பொய்யான புகாரினை கொடுத்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் வேங்கடசுப்பிரமணி என்கிற சாதி இந்துவின் தலைமையில் தான் அனைத்து நலத்திட்டங்களும் நடைபெற வேண்டும். நீ பஞ்சாயத்து நிர்வாகத்தில் தலையீடு செய்யக்கூடாது என்று மிரட்டி வருகிறார். இதுமட்டுமல்லாமல் ஊர் பொது கண்மாயை எனக்குத் தெரியாமலேயே வேங்கடசுப்பிரமணி உள்ளிட்ட சாதி இந்துக் கும்பல் குத்தகை விட்டுள்ளனர் என்று கூறினார்.

சாதி இந்துக்களின் கட்டுப்பாட்டில் பஞ்சாயத்து அலுவலகமும், ஆவணங்களும்

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், காடனேரி கிராமத்தில் வசித்து வரும் பஞ்சாயத்து தலைவர் திரு.பெருமாள் எமது குழுவினரிடம், காடனேரி துணைப் பஞ்சாயத்துத் தலைவர் பாண்டி மற்றும் எழுத்தர் சுரேஷ் ஆகிய இருவரும் பஞ்சாயத்து அலுவலகம் முதல் ஆவணங்கள் வரை அனைத்தையும் அவர்களது கட்டுபாட்டிலேயே வைத்துள்ளனர். பஞ்சாயத்து தலைவருக்கான இருக்கையில் கூட என்னால் சுயமாக அமர முடியவில்லை என்று கூறினார்.

இதுமட்டுமல்லாமல் நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பஞ்சாயத்து எல்லையில் என் பெயர் கொண்ட பலகையை வைத்தேன். அதனை பொறுத்துக் கொள்ள முடியாத சாதி இந்துக்கள் அந்தப் பலகையபடித்து நொறுக்கினர் என்று கூறினார்.

பஞ்சாயத்திற்கு வரும் நிதியை துணைத் தலைவரும் உறுப்பினர்களும் செலவு செய்கிற அவலம்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது துக்காச்சி குமாரமங்கலம் பஞ்சாயத்து. இதன் பஞ்சாயத்துத் தலைவர் திரு.கலியமூர்த்தி எமது குழுவினரிடம், சாதி இந்துவான துணைத் தலைவரும் உறுப்பினர்களும் அரசு வழங்கக்கூடிய திட்டங்கள் அனைத்தையும் அவர்களே செய்ய வேண்டுமென்று கட்டாயப்படுத்துகிறார்கள்.

பஞ்சாயத்திற்கு வருகின்ற நிதிகளை அவர்களே எடுத்து வேலை செய்ய கட்டாயப்படுத்தி என்னிடம் கையெழுத்து வாங்குகிறார்கள். இது முறையில்லை என்று நான் எதிர்ப்பு தெரிவித்தால், என் மீது காவல்நிலையத்தில் பொய் வழக்கு பதிவு செய்வோம் என்று மிரட்டுகிறார்கள் என்று கூறினார்.

ஆய்வின் முடிவுகள்

 தமிழகத்தில் ரிசர்வ் பஞ்சாயத்துகளின் மூலம் 3136 தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்ளனர். இவர்களில் 167 பஞ்சாயத்துத் தலைவர்களை எமது குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். பொதுத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 தலித் பஞ்சாயத்துத் தலைவர்களையும் எமது குழுவினர் ஆய்விற்கு எடுத்துக் கொண்டுள்ளனர். ஆய்வின் மூலம் தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் கடந்த 6 மாத காலமாக சுதந்திரமாக தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலையில் இருப்பது கண்டறிய முடிகிறது. கிராமங்களில் நிலவக்கூடிய சாதிய ஆதிக்கம், சாதி இந்துக்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள், சாதிய மயமாகிப்போன அரசியல் சூழல்கள் போன்ற பல்வேறு நெருக்கடிகளில் தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் அவதிப்பட்டு வருவது கண்டறிய முடிகிறது. 6 மாதத்தில் ஏன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்கிற ஒருவிதமான சலிப்போடு மனக்குமுறலோடு பஞ்சாயத்து தலைவர்கள் நிர்வாகப் பணியில் ஈடுபட்டு வருவது கண்டறிய முடிகிறது. இதுமட்டுமல்லாமல் எமது ஆய்வில் பல பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்கள் மீது பல்வேறு விதமான சாதிய கொடுமைகள் நடக்கின்றன. ஆனால் தற்போது அவற்றை நாங்கள் வெளியே சொல்ல முடியாத நிலையில் தவித்து வருகிறோம் என்றும் கூறினார்கள். அவர்களது வாக்குமூலங்கள் எமது ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

 அதே நேரத்தில் தங்களுக்கு ஏற்படக்கூடிய நிர்வாக குறுக்கீடுகள் மற்றும் சாதியப்பாகுபாடுகளை தைரியமாக வெளியே சொன்னால் தங்களுக்கு அரசு அதிகாரிகளும், சாதியக் குழுக்களும் பல்வேறு விதமான நெருக்கடிகள் கொடுப்பார்கள் என்கிற அச்சமும் பஞ்சாயத்துத் தலைவர்களிடையே உள்ளன. கடந்த 2006ம் ஆண்டு எமது எவிடன்ஸ் அமைப்பு தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதான பாகுபாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வறிக்கை பத்திரிக்கைகளில் வந்தவுடன் அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களை சந்தித்து விசாரணை நடத்தினர். ஆனால் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகளதெடுக்கப்படவில்லை.

 தமிழகத்தில் கடந்த 2006ல் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது பல்வேறு விதமான கொடுமைகளும் சித்திரவதைகளும் கடைபிடிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக திருநெல்வேலி, தாழையூத்து பஞ்சாயத்துத் தலைவர் கிருஷ்ணவேணி அவர்கள் மீது கடந்த 13.06.2011 அன்று கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கரஆயுதங்களைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோன்று சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆருகில் உள்ள கள்ளங்குடி பஞ்சாயத்துத் தலைவர் பூமயில் அவர்களை 03.11.2010 அன்று சாதி இந்து வன்கொடுமை கும்பல் பொது இடத்தில் வைத்து ஆடைகளைக் கிழித்து செருப்பால் தாக்கி அவமானப்படுத்தினர். பல தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது சாதி இந்துக்களால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஏராளம். ஆகவே தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதான பாகுபாடுகளையும் நிர்வாக குறுக்கீடுகளையும் தடுப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வருங்காலங்களில் தலித் தலைவர்கள் மீதான கொடுமைகளும் மீறல்களும் அதிகரிக்கக்கூடியஆபத்து ஏற்பட்டுவிடும்.

பெயரளவில் மட்டுமே தலித் ஒருவர் தலைவராக இருப்பதைவிட, ஜனநாயகப் பூர்வமாக சுதந்திரமாக தன்னிச்சையாக தலித் ஒருவர் பஞ்சாயத்துத் தலைவராக செயல்பட்டால்தான் சமூக நீதி உறுதிபடுத்தப்படும். இதனடிப்படையில் சில பரிந்துரைகளை எமது எவிடன்ஸ் அமைப்பு அரசிற்கு முன்வைக்க விரும்புகிறது.

பரிந்துரைகள்

• தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு சமூகநீதி, நிர்வாகம், பொருளாதார மேம்பாடு, வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

• தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது நடக்கக்கூடிய பாகுபாடுகள் சித்திரவதைகள் சம்பந்தமாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய குறைகேட்பு கூட்டத்தினை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்துவதற்கு அரசு நடவடிக்கை ஏடுக்க வேண்டும்.

• தலித் பஞ்சாயத்துத் தலைவர்களாக இருக்கக்கூடிய பெரும்பாலான பஞ்சாயத்துகளில் துணைத் தலைவரும் எழுத்தரும் சாதி இந்துக்களாக உள்ளனர். இதனால் தலித் தலைவர்கள் சுதந்திரமாக செயல்படமுடியாத அவதிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆகவே ரிசர்வ் தொகுதிகளுக்கு மட்டும் தலித் தலைவர்களுக்கான தன்னிச்சை அதிகாரம் கூடுதலாக வழங்குவதற்கு அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிசர்வ் பஞ்சாயத்துகளின் துணைத் தலைவர் மற்றும் எழுத்தர் ஆகியோர் தலித்துகளாக நியமனம் செய்வதற்கு அரசு நடவடிக்கை ஏடுக்க வேண்டும்.

• ரிசர்வ் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படுகிற தலித்துகள், தலித் பெண்கள், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டோர் குடும்ப ஆதிக்கத்திலிருந்தும் சாதி ஆதிக்கத்திலிருந்தும் விடுபட்டு, சுதந்திரமாக பஞ்சாயத்து நிர்வாகம் செய்வதற்கு அரசு சில கண்காணிப்பு முறைகளை உருவாக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இத்தகைய பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

• கிராமப் பஞ்சாயத்தில் எடுக்கப்படுகிற குத்தகை 25 சதவீதம் தலித்துகளுக்கு வழங்குவதற்கு அரசு சிறப்பு உத்தரவினை வெளியிட வேண்டும்.

• தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதான வன்கொடுமைகளை தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் பதிவு செய்வதற்கு அரசு சிறப்பு உத்தரவினை வெளியிட வேண்டும்.

• தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்கிற வன்கொடுமை கும்பல் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(8), 3(1)(9) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- A.கதிர், செயல் இயக்குனர், எவிடன்ஸ் அமைப்பு

Pin It