‘பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த விளைமாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியோடு பெயரும்
வளம் கெழு முசிறி' .. (அகம் - 149)

என சங்க காலக் கவிஞன் எருக்காட்டூர் தாயங் கண்ணனார் அவர்களால் பாடப்பட்ட, பேரியாற்று நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைதான ‘முல்லைப் பெரியாறு' அணையாகும்.

முல்லையாறு என்பது பெரியாறு நதியின் ஒரு கிளைஆறு ஆகும். பெரியாறு கடலோடு கலக்கும் இடத்தில் முன்பு முசிறி என்ற நகரம் இருந்தது. இன்று பெரியாறு கடலில் கலக்கும் இடத்தின் அருகே கொச்சி நகரம் உள்ளது. முசிறி நகரம், கி.மு.500க்கு முன்பிருந்தே தமிழக மூவேந்தர்களில் ஒருவரான சேரர்களின் ஒரு உலகப் புகழ் பெற்ற வணிக நகராக, ஒரு புகழ் பெற்ற துறைமுகமாக இருந்து வந்துள்ளது.

தொல்பொருள் ஆய்வுகள், இன்றைய பட்டணம் என்ற சிற்றூர்தான் பழைய ‘முசிறி” என்பதை நிரூபித்துள்ளன. ஆக 2500 வருடங்களாக ‘பெரியாறு” என்பது, தமிழர்களின் வரலாற்றோடு தொடர்புடைய ஒரு பழம் பெரும் நதி ஆகும்.

அணையும் கழிங்கும்

mullai_periyar_dam_380கடல் மட்டத்திலிருந்து 2200 அடி உயரமுள்ள மேற்கு மலைத் தொடரில், மேற்கு நோக்கி  ஓடிக் கொண்டிருந்த பெரியாற்றின் குறுக்கே மூன்று குன்றுகளை இணைத்து, தென்வடலாக 1200 அடி நீளமும், 162 உயரமும் கொண்டு ஒரு பிரதான அணை ஒன்றும், அதன் தென் பகுதியில் இருந்த, உயரம் குறைவான பகுதியில் 240 அடி நீளமுள்ள பேபி அணை எனப்படும் சிறிய அணை ஒன்றும் 1881-ல் தொடங்கப்பட்டு, 1895-ல் ஆங்கிலேயர் ஆட்சியில், கர்னல் பென்னி குயிக் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது.

இதன் வட பகுதியில் இருந்த உயரமான பாறைக் குன்றுகள் வெட்டப்பட்டு, 420 அடி நீளமுள்ள அணையின் அடிமட்டத்திலிருந்து144 அடி உயரம் கொண்ட இயற்கையான தாம்போக்கி கலிங்கு அமைக்கப்பட்டது. கலிங்கு என்பது அணையில் அல்லது ஏரியில், நீரை வெளியேற்றும் பகுதியாகும்.

அணைக்கு வரும் அதிகபட்ச நீரை வெளியேற்றும் அளவுக்கு கலிங்கானது அகலமும், நீளமும் கொண்டதாக இருக்க வேண்டும். கலிங்கின் அகலம், உயரம் என்பதை விட, அதன் நீளம் போதுமான அளவு இருப்பதுதான் மிக மிக முக்கியம். அதன் அடித்தளம் வேகமாக வெளியேறும் நீரைத் தாங்கும் அளவு இருக்க வேண்டும். கலிங்கு போதிய நீரை வெளியேற்றா விட்டால் அணை உடையும். மேலும் கலிங்கின் மட்ட அளவில்தான் அணையின் நீர் மட்டம் இருக்கும்.

ஆகவே பின்னர் இந்த கலிங்கின் உயரம் கேரள மக்களின் பயத்தைப் போக்கவும், அணையின் (முல்லைப் பெரியாறு அணையின்) பாதுகாப்பு கருதியும் 136 அடி உயரமுள்ளதாக வெட்டி குறைக்கப்பட்டது. இதன் மேல் 16 அடி உயரமுள்ள 10 பெரிய இரும்பு பலகைகள் (சட்டர்கள்) கலிங்கு மட்டத்தின் மேல்இறக்கி, நிறுத்தி வைக்குமாறு கட்டப்பட்டுள்ளது.

கலிங்கின் உயரம் 136 அடியும்,சட்டர்களின் உயரம் 16 அடியும் சேர்ந்து மொத்தம் 152 அடி உயரத்திற்கு அணையில் நீரைத் தேக்கி வைக்க முடியும். அப்பொழுது அணையின் மொத்த கொள்ளளவு 15.562 டி.எம்.சி. ஆக இருக்கும். வெள்ளம் ஏற்படும் காலங்களில் அணைக்கு அதிகபட்சமாக வரும் வினாடிக்கு 2,12,000 கன அடி நீரையும் 155 அடி உயரத்திற்குள் வெளியேற்றும் வகையில் கலிங்கின் நீளம், அகலம், உயரம் முதலியான வடிவமைக்கப்பட்டுள்ளது.

கலிங்கானது இயற்கையான கடினப் பாறையை வெட்டி உருவாக்கப்பட்டது ஆகும். அதன் அடித்தளம் என்பது மேற்கு மலைத் தொடரின் கடினப் பாறையால் ஆன மலையாகும். ஆகவே அது எவ்வளவு வெள்ளப் பெருக்கிலும் உடையவே உடையாது. அணைப் பகுதி மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாகும்.

அணையின் மொத்த உயரம் 162 அடி ஆகும். சட்டர்கள் இல்லாமல் இயற்கையான கலிங்கின் மட்ட உயரம் 136 அடி. சட்டர்கள் இறக்கிய பின் கலிங்கின் மட்ட உயரம் 152 அடி. அதிகபட்சமாக நீர் வரும்பொழுது அணையின் நீர்மட்டம் 155 அடி. ஆக மேலும் '7' அடி உயரம் அதிகம் கொண்டதாக அணை கட்டப்பட்டுள்ளது. இந்த உயரங்கள் அணையின் அடிமட்டத்தில் இருந்து கணக்கிடப்பட்டுள்ளது.

தடுப்பணை

1900 ஆண்டிலிருந்து 1962 வரை ஒரு சில ஆண்டுகள் தவிர பிற ஆண்டுகளில் எல்லாம் அணையின் நீர்மட்டம் 152 அடிதான் இருந்து வந்துள்ளது. 1963 முதல் 2006 வரை 44 ஆண்டுகளில் நான்கு ஆண்டுகளில் மட்டும்தான் அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. எனவே வெள்ளப்பெருக்கு மிக அதிகம் எனக் கருத இயலாது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நேரடியாக பாசனம் செய்யப் படுவதில்லை. இது, நீரைத் தேக்கி, திருப்பி விடக்கூடிய ஒரு ‘தடுப்பணை' ஆகும். 162 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 101 அடி உயரம் வரை உள்ள நீரை எதற்கும் பயன்படுத்த இயலாது. 101 அடி உயரத்திற்குப் பின் மேலும் 3 அடி அளவு நீர் மட்டம் உயர்ந்த பின்தான், தமிழ்நாட்டுக்கு நீரைத் திருப்பி விட முடியும். ஆக மொத்தம் 104 அடி உயரம் வரை உள்ள நீர் பயன்படுத்தப்பட இயலாத நீர் ஆகும்.

பாசனப்பகுதி

அணையில் இருந்து கிட்டத்தட்ட 4 கி.மீ. தூரமுள்ள வெட்டுக் கால்வாய்களையும், சுரங்கக் கால்வாய்களையும் கடந்து மலைப் பகுதியில் இருந்து 1700 அடி உயரம் அருவியாக விழுந்து, இறுதியில் தமிழகத்தின் வைரவனாறுக்கு பெரியாற்று நீர் வந்து சேருகிறது. இந்த இடத்தில் 140 மெகாவாட் திறனுள்ள ஒரு நீர் மின் நிலையம் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ளது.

வைரவனாற்றில் இருந்து மேலும் 75 கி.மீ. தூரம் கடந்த பின் இந்தப் பெரியாற்று நீர் வைகை அணையை வந்தடைகிறது. வைகை அணையில் இருந்து 27 கி.மீ. நீளமுள்ள கால்வாய் மூலம் இந்நீர் பேரணையை வந்தடைகிறது. அதன்பின் 58 கி.மீ. நீளமுள்ள பெரியாறு பிரதான கால்வாய் மூலமும், 27 கி.மீ. நீளமுள்ள திருமங்கலம் பிரதான கால்வாய் மூலமும், பிற பழைய அணைக்கட்டுகள், பாசனக் கால்வாய்கள் மற்றுமுள்ள பல பெரிய கண்மாய்கள் ஆகிய வகைகளின் மூலமும் இரண்டு இலட்சம் ஏக்கருக்கு மேலான நிலங்கள் பாசனம் பெறுமாறு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பழைய பாசனங்களும் அடங்கும்.

தேக்கடி

முல்லைப் பெரியாறு அணை மூலம், கிட்டத்தட்ட 104 அடி உயரம் தேக்கப்பட்ட பின் நீர், தமிழகத்திற்கு திருப்பி விடப்படுகிறது என பார்த்தோம். இவ்வாறு தேக்கி வைக்கப்பட்ட நீர்த் தேக்கம்தான் ‘தேக்கடி' என அழைக்கப் படுகிறது. இதில் வருடம் முழுவதும் நீர் தேங்கி நிற்பதால், வன விலங்ககுகள் வசிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை இந்நீர்த் தேக்கம் வழங்குகிறது.

ஒப்பந்தம்

இந்த அணை கட்டப்படுவதற்கு முன் 20.10.1886 அன்று திருவிதாங்கூர் அரசுக்கும், சென்னை மாகாண ஆங்கிலேய அரசுக்கும் இடையே ஒரு குத்தகை ஒப்பந்தப் பத்திரம் கையெழுத்தானது.

சென்னை மாகாணம், அணையைக் கட்டி நீரை தமிழகத்திற்கு திருப்பி விடவும், அணையின் நீர்த் தேக்கத்திற்காகவும் 8000 ஏக்கர் பரப்புள்ள நிலம், சென்னை மாகாணத்திற்கு 999 வருடங்களுக்கு திருவிதாங்கூர் அரசு குத்தகைக்கு விடுவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

சுதந்திரத்திற்குப் பின் நீர் மின் நிலையம் அமைக்கவும், பிற பணிகளுக்காகவும் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, அவைகளின் அடிப்படையில் பல பணிகளை இரு அரசுகளும் செயல்படுத்தின. பின் 29.05.1970 அன்று மூலக் குத்தகைப் பத்திரத்தில் செயல்படுத்தப்பட்ட பணிகளின் அடிப்படையிலும், பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலும் திருத்தங்கள் பல மேற்கொள்ளப்பட்டன. ஆக 1886ல் போடப்பட்ட 999 வருடங்களுக்கான குத்தகை ஒப்பந்தம் இன்று வரையிலும் நடைமுறையில் இருந்து வருகிறது.

கேரள அரசும், பத்திரிக்கைகளும்:

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது; அது உடைந்து விடும்; உடைந்தால் மிகப் பெரிய மக்கள் சேதம் ஏற்படும்; எனவே அணையின் நீர் மட்டத்தைக் குறைக்க வேண்டும். அல்லது புதிய அணை கட்ட வேண்டும் என்ற கருத்தை கேரள அரசும், கேரள பத்திரிக்கைகளும் தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றன.

மழையால் அணையிலிருந்து வெளியேறிய வெள்ளத்தைக் கண்டு, அணை உடைந்து போகும் என்று 10.05.1925 அன்றே, அதாவது இன்றைக்கு 85 வருடங்களுக்கு முன்பே சில கேரள பத்திரிக்கைகள் உள்ளூர் மக்களின் கருத்து என செய்திகளை வெளியிட்டன. பின் 1961-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறித்து, 11.05.1962 அன்று பம்பாயிலிருந்து வெளிவரும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா' என்ற பத்திரிக்கை, அணை பழையதாகி விட்டதாலும், சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டுள்ளதாலும், அணை அபாய நிலையில் இருப்பதாகவும், எந்நேரத்திலும் அது உடைந்து விடலாம் என்றும் செய்தி வெளியிட்டு மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது.

உடனே இரு மாநில அரசுகளும் கூட்டாக அணையில் பல தொழில்நுட்ப ஆய்வுகள் நடத்தி, 10.04.1964 அன்று அணை பாதுகாப்பாக உள்ளது என பிரகடனம் செய்தன. அப்பொழுதெல்லாம் கேரள அரசு பொறுப்புடனே செயல்பட்டு வந்தது.

பொறுப்பற்ற கேரள அரசு

16.10.1979 அன்று பிரபல கேரள நாளிதழான ‘மலையாள மனோரமா'வில் பி.ஜி.குரியாக் கோஸ் என்பவர் எழுதிய பொறுப்பற்ற, பொய்யான தகவல்களுடன் கூடிய கட்டுரைதான் இன்றைய பிரச்சனைக்கான ஆரம்பமாகும். அதில் அணை பழையதாகி விட்டதாகவும், யானை ஓய்வெடுக்கும் அளவு பல பெரிய வெடிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும், உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் எழுதப்பட்டிருந்தது.

அதுமுதல் கேரள அரசு தன் பொறுப்பை மறந்து செயல்படத் துவங்கியதின் விளைவே, இப்பிரச்சனை பூதாகரமாக இன்று ஒரு பெரும் பிரச்சனையாக வளருவதற்குக் காரணமாகும்.

அதேசமயம், 1976-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு சிறிய நிலநடுக்கத்தின் போது அணையைச் சோதித்த தமிழகப் பொறியாளர்கள், நீர்த்தேக்க உயரம் அப்பொழுது 152 அடியாக இருந்த போதிலும், 145 அடிக்கு மேல் ஏற்படும் அழுத்தம், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்த காரணத்தால், நீர் மட்ட அளவை 145 அடிக்கு குறைப்பது என்றும், அணையை நன்கு பரிசோதித்து, தேவையானால் அதைப் பலப்படுத்திய பின்னரே, 145 அடிக்கு மேல் நீரைத் தேக்குவது என்றும் முடிவு செய்தனர்.

இம்முடிவு கேரள அரசோ, அதன் பத்திரிக்கைகளோ, அதன் மக்களோ எந்தவிதக் கோரிக்கையும் எழுப்பாமலேயே அணையின் பாதுகாப்பு கருதி 1976-லேயே எடுக்கப்பட்ட முடிவாகும். எனவே 1976-ல் நடந்த இந்நிகழ்வு தமிழகப் பொறியாளர்கள் பாதுகாப்பு விசயத்தில் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்துள்ளனர் என்பதை உறுதி செய்கிறது.

எனினும், 16.10.1979 அன்று ‘மலையாள மனோரமா' வெளியிட்ட பொறுப்பற்ற செய்தியின் காரணமாக நடைபெற்ற 25.11.1979 கூட்டத்தில், மக்களின் பயத்தைப் போக்கவும், அணையை சோதித்துப் பார்க்கவும், அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. 17.12.1979 முதல் அம்முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டு, இன்றுவரை அணையின் உயரம் 136 அடியாகவே பேணப்பட்டு வருகிறது. கேரள அரசின் பொறுப்பற்ற போக்கும், பிடிவாதமுமே இதற்கு மிக முக்கியக் காரணமாகும்.

முல்லைப் பெரியாறு அணை - பாதுகாப்பானது:

ஒரு அணையின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள்தான் எனக் கருதப்படுகிறது. முல்லைப்  பெரியாறு அணை கட்டப்பட்டு 115 ஆண்டுகள் ஆனதால் அதனுடைய ஆயுட்காலம் முடிந்து விட்டது என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது. ஒரு அணையின் ஆயுட் காலம் என்பது அதன் பலம் அல்லது பாதுகாப்பு சம்பந்தப்பட்டதல்ல. ஆண்டுதோறும் அணையின் நீh பிடிப்புப் பகுதியில் இருந்து வண்டல் மண் கொண்டு வரப்பட்டு, அணையின் கொள்ளளவு குறைந்து கொண்டு வரும்.

100 ஆண்டுக்குள் வண்டல் மண்ணால், அணை நிறைந்து, அது பயனற்றதாகி விடும். அணையில் உள்ள மண்ணை எடுப்பது என்பது அதிக செலவாகும் காரியம். எனவேதான் மண் நிறைந்து விட்டால், அதன் ஆயுட்காலம் முடிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையைப் பொருத்தவரையில் 101 அடி உயரம் வரை மண் நிறைந்தாலும் கவலை இல்லை. அதற்கு மேல் மண் நிறைந்து வரும்பொழுதுதான் பிரச்சனை. இதற்கு இன்னும் சில நூறு ஆண்டுகள் ஆகும். அதுவரை முல்லைப் பெரியாறு அணையின் ஆயுட் காலத்திற்கு ஒரு பிரச்சனையும் இல்லை.

சுண்ணாம்புக்காரை

அடுத்ததாக, முல்லைப் பெரியாறு அணை சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டுள்ளதால் அணைக்கு பலம் இருக்காது என்ற கருத்து பரப்பப்படுகிறது. சிமெண்ட்-ஐ விட சுண்ணாம்புக் காரையின் அடர்த்தி குறைவு. அதனால்தான் இக்கருத்து பரப்பப்படுகிறது.

சிமெண்ட் கலவை கொண்டு கட்டியிருந்தால் 162 அடி உயரம் உள்ள இந்த அணைக்கு 90 அடி அல்லது 100 அடிக்கும் குறைவான அகலமுள்ள அடித்தளம்தான் போடப்பட்டிருக்கும். ஆனால் சுண்ணாம்புக் கலவை என்பதால்தான் 140 அடி அகலமுள்ள அடித்தளம் முல்லைப் பெரியாறு அணைக்கு அமைக்கப்பட்டுள்ளது. சிமெண்ட் கட்டுமானத்தைவிட 1½ மடங்கு பெரியதாகக் கட்டப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு சுண்ணாம்புக் காரை நன்கு அரைக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டுள்ளது. பொதுவாக அரைத்த சுண்ணாம்புக் காரையின் பலம் நாளுக்கு நாள் கூடும்.  அதேசமயம் சிமெண்ட் கலவையின் பலம் நாளுக்கு நாள் குறையும். மேலும் பழங்காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் சில கட்டிடங்கள் சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டு 1000 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நின்று வருவதை காணமுடியும். எனவே சுண்ணாம்புக் காரையால் அணைக்கு பலம் இல்லை என்பது தவறான வாதமாகும்.

பொறியியல் அற்புதம்

பொதுவாக ஒரு கட்டுமானத்தின் பலம் என்பது அதன் வடிவமைப்பு, கட்டுமானத்தின் தரம், அதன் பராமரிப்பு போன்ற பலவற்றைப் பொருத்ததாகும். இந்த முல்லைப் பெரியாறு அணை ‘உலகின் கட்டுமானப் பொறியியல் அற்புதம்' எனக் கருதப்படுகிறது.

ஆறு வருடங்கள் மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு 162 அடி உயரத்தில் ஒரு பெரிய மண் அணையைக் கட்டி, அதில் 142 அடி உயரத்திற்கு நீரைத் தேக்க, முதலில் இடத்தைத் தேர்ந்தெடுத்து உயரத்தைக் கணித்து ரூ.17.49 இலட்சத்துக்கு 1867-ல் மதிப்பீடு தயாரித்தவர் உலகப் புகழ் பெற்ற நீரியல் பொறியாளர் உயர்திரு ‘மேஜர் ரைவ்ஸ்' என்பவர் ஆவார்.

அவருடைய ஆய்வுப் பணியே இவ்வணை கட்டுவதற்கான அடிப்படை பொறியியல் தொழில் நுட்பமாக இருந்துள்ளது. இவர்தான், ‘ஒரு பெரிய நிலப் பரப்பில் மழை பெய்யும் அளவைப் பொறுத்து எவ்வளவு நீர் அந்நிலப்பரப்பிலிருந்து வெளியேறும்' என்பதைக் கணக்கிடுவதற்கான சூத்திரத்தைக் கண்டறிந்தவர் ஆவார். அவர் கண்டுபிடித்த சூத்திரம்தான் இன்றுவரை உலகம் முழுவதிலுமுள்ள நீரியல் பொறியாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பென்னி குயிக்

john_pennyquick_330பின் இந்த மதிப்பீட்டில் மண் அணைக்குப் பதில் சுண்ணாம்பு காரையால் கட்டப்பட்ட அணைக்கான ஆய்வை செய்து ரூ.54 இலட்சத்துக்கு, 1872-ல் மதிப்பீடு தயாரித்து, பின் அதனை திறம்பட கட்டி முடித்தவர்தான் உயர்திரு கர்னல் பென்னி குயிக் ஆவார். இவரது ஆய்வுத் திட்டம், வரைபடம், மதிப்பீடுகள் முதலியன இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்த உலகப் புகழ்பெற்ற பொறியியல் வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திட்டமாகும். மிகுந்த தரக் கட்டுப்பாட்டோடு, முழுமையாக‌ கட்டப்பட்டு, இன்று வரை மிகச் சிறந்த முறையில் இவ்வணை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதனை மத்திய நீர்வள பொறியியல் வல்லுநர் குழுக்கள் பலமுறை பார்வையிட்டு இதன் பாதுகாப்பை, பலத்தை உறுதி செய்துள்ளன.

நீர்க்கசிவு

அனைத்துப் பெரிய நீர் கட்டுமானங்களிலும் நீர் கசிவு இருக்கவே செய்யும். ஆனால் அதன் அளவுதான் அணையின் பலத்தை நிர்ணயிக்கும் காரணியாகும். 1896 முதல் இதுவரை தினசரி அணையில் இருந்து வரும் நீர்க் கசிவு எவ்வளவு? அதில் வெளியேறிய துகள்களின் அளவு என்ன? நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டும்பொழுது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகிய அனைத்தும் இது சம்பந்தப்பட்ட கோப்புகளில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன.

1922, 1935, 1961 ஆகிய மூன்று வருடங்களில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட அளவை விட நீர்க்கசிவு அதிகமாக இருந்துள்ளது. உடனடியாக அணையைப் பலப்படுத்தும் உத்திகள் மேற்கொள்ளப்பட்டு நீர்க்கசிவு குறைக்கப்பட்டது.

மத்திய நீர்வள ஆணையம் முல்லைப் பெரியாறு அணைக்கு நிர்ணயித்த அதிகபட்ச நீர்க்கசிவு என்பது விநாடிக்கு 748 லிட்டர் ஆகும். 18.08.2001 அன்று அணைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் அதிகபட்ச நீர்க்கசிவு விநாடிக்கு 40.874 லிட்டர்தான். எனவே நீர்க்கசிவால் அணைக்கு ஆபத்து என்பது ஒரு பொய்யான தகவலாகும்.

அரசியல் தீர்வு

25.11.1979 அன்று மத்திய நீர்வளக் குழுவின் தலைவர் டாக்டர்.கே.சி.தாமஸ் அவர்களது தலைமையில் நடைபெற்ற இரு அரசுகளின் மாநிலத் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அணையைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள், இடைக்கால, நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

இம்முடிவுகளை நிறைவேற்றவும், இப்பணிகள் முடியும் வரை நீர் மட்டத்தை 136 அடிக்குள் பராமரிக்கவும் தமிழக அரசு ஒப்புக் கொண்டது. கேரள அரசு, இப்பணிகளை தமிழக அரசு முடித்த பின் அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்த ஒப்புக் கொண்டது.

பலப்படுத்தப்பட்ட அணை

இதன்படி, அணையின் பழைய மேல்மட்டம் ஒரு மீட்டர் அகற்றப்பட்டு, அதன் அகலம் கூட்டப்பட்டு, இரும்புக் கம்பி கான்கிரீட் அந்த ஒரு மீட்டர் உயரத்திற்கும் அணையின் முழு நீளத்திற்கும் போடப்பட்டு, அணையின் எடை 12,300 டன் கூட்டப்பட்டது. மேலும் கேபிள் ஆங்கரிங் எனப்படும் இரும்புக் கம்பி நங்கூர முறைப்படி, அணையானது அடித்தளப் பாறையுடன் இணைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது.

அதிக நீரை வெளியேற்றும் வகையில் கலிங்கின் நீளம் அதிகப்படுத்தப்பட்டு, மேலும் 3 இரும்புப் பலகைகள் (சட்டர்கள்) கூடுதலாகப் பொருத்தப்பட்டன. பிரதான அணைக்கு பின்புறத் தாங்குதலாக இருக்கும் வண்ணம் 20 அடி கனமுள்ள இரும்புக் கம்பி கான்கிரீட் முட்டுச் சுவர் அணையின் முழு நீளத்திற்கும் கட்டப்பட்டது.

அணைச் சுவரிலிருந்து கசியும் நீரை, சரியாக அளப்பதற்கு வசதியாக உரிய சோதனைப் பாதையும் கட்டப்பட்டது. அணையிலிருந்து நிரம்பி வழியும் நீரால், அரிப்பு ஏற்படாமலிருக்க உரிய கட்டுமானங்கள் அமைக்கப்பட்டன. அணையின் பலத்தை கணக்கிட உரிய எலக்ட்ரானிக் கருவிகள் பொருத்தப்பட்டன.

கின்னட்டிங்க் & கிரவுட்டிங்க்

அடுத்ததாக, கடந்த காலங்களில் மூன்று முறை நீர்க்கசிவு அதிகமாகிய பொழுது, அணையைப் பலப்படுத்தும் கீழ்க்கண்ட உத்திகள் கையாளப்பட்டன. அணையின் முன்பக்கச்சுவரில் உள்ள கல் கட்டிட சந்துகளில் சிமெண்ட் கான்கிரீட் மூலம் பெயிண்டிங் செய்யப்பட்டது. இது கின்னட்டிங் (Gunniting) எனப்படும்.

அடுத்ததாக, அணையின் மேல்மட்டத்திலிருந்து அடித்தளத்திலுள்ள பாறை வரை 200 அடிக்கு கம்ப்ரஸர் இயந்திரம் கொண்டு துளைகள் போடப்பட்டு, அதனுள்ளே உயர் அழுத்த கம்ப்ரஸர் இயந்திரங்கள் கொண்டு உயர் ரக சிமெண்ட் கரைசலை செலுத்தி, அணையின் உட்பகுதியில் உள்ள சிறு சிறு சந்துகள், இடுக்குகள் முதலியவற்றில் இக்கரைசல் சென்று அவைகளை அடைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முறைக்கு கிரவுட்டிங் (Grouting) என்று பெயர்.

இதுவும் மூன்று முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 1000 டன் சிமெண்ட் கரைசல் அணைக்குள் செலுத்தப்பட்டு அணை பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற பராமரிப்புக்குப் பின் அணையின் பலமும், எடையும் கூடியுள்ளது என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அணை பலவீனமாகும் பொழுது மீண்டும் இதனைச் செய்து பலப்படுத்த முடியும்.

கேரள அரசின் தடை

1986-ல் அனைத்துப் பணிகளும் முடிந்தபின், இப்பணிகளைப் பார்வையிட்ட மத்திய நீர்வளக் குழுவின் வல்லுனர்கள், பிரதான அணைக்குப் பின் கான்கிரீட் முட்டுச் சுவர் எழுப்பியதைப் போல் பேபி அணைக்கும் முட்டுச் சுவர் அமைக்க பரிந்துரை செய்தனர். ஆனால் அப்பணியைச் செய்யவிடாமல் கேரள அரசு தடுத்து விட்டது.

மத்தியக் குழு பரிந்துரைப்படி பிரதான அணையைப் பலப்படுத்த எடுத்த நடவடிக்கைகளுக்கு கேரள அரசின் வனத்துறை, நீர்வளத் துறை, காவல்துறை அதிகாரிகள் பல இடையூறுகளைச் செய்தபோதிலும், அவைகளை தடுக்க தமிழக அரசு கேரள உயர் நீதிமன்றத்தை அணுகி உரிய ஆணையைப் பெற்று பலப்படுத்தும் பணிகளைச் செய்து முடித்தது.

mullai_periyar_621

பேபி அணைக்கான பணியைத் தவிர பிற அனைத்துப் பணிகளும் தமிழக அரசால் தற்பொழுது செய்து முடிக்கப் பட்டுள்ளன. இவைகளின் மூலம் பழைய அணையைப் போல் பல மடங்கு பலம் கொண்டதாக தற்போதைய அணை உள்ளது.

வல்லுனர் குழு

அணையின் பலம் பாதுகாப்பாக உள்ளது என்பதை இந்தியாவின் புகழ் பெற்ற பொறியியல் வல்லுநர்கள் அணையை ஆய்வு செய்து அறிக்கைகள் தந்துள்ளனர். மத்திய நீர் வள ஆணையத்தின் பொறியியல் வல்லுனர்கள் குழு அணையை ஆய்வு செய்து, விரிவாக விவாதித்து அணையின் நீர்த்தேக்கத்தை 142 அடிக்கு உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது.

அணையின் உயரத்தை உயர்த்துவது சம்பந்தமான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இறுதியில் மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் உயர்திரு டாக்டர்பி.கே. மிட்டல் அவர்கள் தலைமையில் நாட்டின் சிறந்த நீரியல் பொறியாளர்கள்6 பேர் அடங்கிய குழு ஒன்றை அமைத்தது. அக்குழு அணையைப் பார்வையிட்டு ஆய்வுகள் செய்து, பல்வேறு கூட்டங்கள் நடத்தி விவாதித்து, கேரள அரசின் பல்வேறு கேள்விகளுக்கும் உரிய விளக்கங்கள் தந்து இறுதியாக 23.01.2001 அன்று நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்தது.

தற்போதைய நிலை :

இதனை அடிப்படையாகக் கொண்டு, 27.02.2006 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை உள்ளடக்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என உத்தரவு வழங்கியது. ஆனால் கேரள அரசு 15.03.2006 அன்று, கேரள சட்டமன்றத்தில் ‘நீர்வளப் பாதுகாப்பு (திருத்தம்) 2006' என்ற சட்டத்தை இயற்றி, உச்ச நீதிமன்ற உத்தரவை தடுக்க முயன்றது.

இதுகுறித்து, ‘அணையின் நீர் மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என்ற உச்சநீதி மன்றத்தின் உத்தவை செல்லாக் காசாக்கிய கேரள சட்டமன்றத்தின் சட்டத்தை உடனே உச்ச நீதிமன்றம் இரத்து செய்துவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கேரளத்தை தண்டித்திருக்க வேண்டும்' என்கிறார் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு. கே.எம்.விஜயன் அவர்கள்.  ஆனால் எதுவும் நடைபெறவில்லை. பின்னர், கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரியது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதனை நிராகரித்து விட்டது. பின் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி, இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தின.

முடிவு எதுவும் எட்ட முடியாததால், தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது. வழக்கு தற்பொழுது மீண்டும் நடந்து வருகிறது. இதுவே தற்போதைய நிலை.

கேரள அரசின் உள்நோக்கம் :

முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே இடுக்கி என்ற இடத்தில் மிகப் பெரிய அணை ஒன்றை கேரள அரசு, 1979-ல் கட்டத் துவங்கி 1984-ல் முடித்தது. இதன் முக்கிய நோக்கம் மின்சாரம் தயாரிப்பது ஆகும். ஒவ்வொன்றும் 130 மெகா வாட் திறன் கொண்ட 6 பெரிய மின் நிலைய இயந்திரங்கள் மூலம் மொத்தம் 780 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த அளவு மின்சாரம் தயாரிக்க வினாடிக்கு 10,000 கன அடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்க வேண்டும்.

முறையான ஆய்வுகளின்படியான கணக்கைக் கண்டுகொள்ளாது, எதார்த்த நிலைக்கு மாறுபட்ட கூடுதல் கணக்குப்படி இவ்வணை கட்டப்பட்டுள்ளதன் காரணமாக மின்சாரம் தயாரிக்கத் தேவையான நீர் கிடைக்கவில்லை. ஆகவே பெரியாறு அணையில் இருந்து நீர் பெறுவதன் மூலம் அக்குறைபாட்டை போக்கிக் கொள்ள கேரள அரசு முடிவு செய்து, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை பெரிதுபடுத்தி வருகிறது.

புதிய அணை ஒன்றைக் கட்டி பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் எனக் கூறுவதன் மூலம், 1886‍ல் பெரியாறு அணையில் இருந்து 999 வருடங்களுக்கு நீர் தர வேண்டும் என்ற குத்தகை ஒப்பந்தம் மற்றும் 142 அடி உயரத்திற்கு பெரியாறு அணையைத் தேக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு ஆகிய இரண்டையும் உடைத்தெரிய விரும்புகிறது. அல்லது குறைந்த பட்சம் 136 அடிக்கு மேல் நீர் மட்டத்தை உயர்த்தாது பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறது கேரள அரசு.

புதிய அணை :

ஒரு அணையைக் கட்டுவதற்கு, அதற்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பது என்பதே மிக முக்கிய அடிப்படை. இங்கு பெரியாறு அணைக்குக் கீழ் மிகப் பெரிய பள்ளம்தான் இருக்கிறது. அங்கு உரிய இடம் இல்லை. உரிய இடம் கிடைத்தாலும், தமிழ்நாட்டுக்கு நீரைக் கொண்டு செல்ல மிக மிக உயரமான அணையைக் கட்ட வேண்டும். அது பல ஆயிரங் கோடி செலவு பிடிக்கும் காரியம் என்பதோடு, கட்டி முடிக்க மிக நீண்ட காலமாகும்.

மேலும் இன்றுள்ள முல்லைப் பெரியாறு அணை, மூன்று கடினப் பாறைகளால் ஆன குன்றுகளை இணைத்துக் கட்டப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2200 அடி உயரம் கொண்டது. இதன் கலிங்கு கடினமான பாறைகளால் ஆனது. ஆக பலவிதத்திலும் இன்றுள்ள அணை மிக மிக பலமானது, தேவையான உயரத்தை இயற்கையாக உடையது.

ஆனால் புதிய அணைக்கு இதுபோன்ற உயரத்தில் இடம் இல்லை. இதனை அடுத்து 200 அடி பள்ளம்தான் உள்ளது. அங்கு அணை கட்டுவதாக இருந்தால் பல அடி உயரத்துக்கு மிகப் பிரமாண்ட கட்டுமானங்கள் தேவைப்படும். அதற்கு மிக மிக அதிக செலவாகும். அப்படிக் கட்டப்படும் அணையும் தொழில்நுட்ப முறையில் இதைவிட பலமாக இருக்க இயலாது. அதன் உயரம் காரணமாக தொழில்நுட்ப முறையில் அதன் பலம் இன்னும் பலவீனமாகவே இருக்கும். எனவே அப்பொழுதும் இப்பொழுதுள்ள பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

கேரள அரசின் உள்நோக்கம்

எனவே புதிய அணை என்ற கருத்து பலரை திசை திருப்பவும், தமிழக மக்களை ஏமாற்றவும் கேரள அரசு ஆடும் நாடகும் ஆகும். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும், அதனை மதிக்காத கேரள அரசு, தனது உள்நோக்கமான இடுக்கி அணைக்கு அதிக நீரைப் பெற, பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர் செல்வதைத் தடுக்கவே விரும்புகிறது என்பதுதான் உண்மை.

இடுக்கி அணையின் மொத்தக் கொள்ளளவு 70 டி.எம்.சிக்கும் மேல். 136 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவு வெறும் 11.2 டி.எம்.சி.தான். ஆக பெரியாறு அணையைப் போல் 6 முதல் 7 மடங்கு பெரியது இடுக்கி அணை. மேலும் பெரியாறு அணையில் பயன்படுத்தப்படும் நீரின் அளவோ 6 டி.எம்.சி.க்கும் குறைவு.  ஏனெனில் மீதியுள்ள சுமார் 5 டி.எம்.சி. நீர் 104 அடிக்குள் சேமிக்கப்படுவது என்பதால் அது பயனற்றது ஆகும். எனவே அணை உடைந்து அனைத்து நீரும் வெளியேறினால்கூட இடுக்கி அணை அவற்றை தாங்கிக் கொள்ள முடியும்.

மேலும் இடுக்கி அணை வரை உள்ள மக்கள் நிறைந்த பகுதிகள் மிகக் குறைவே. அவையும் பல நூறு அடி பள்ளத்தில் உள்ளன. எனவே அவை மூழ்கவோ, அதிக பாதிப்பு ஏற்படவோ வாய்ப்பே இல்லை. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்த, கேரளத்தைச் சார்ந்த, கே.சி.தாமஸ் அவர்கள், ‘அணையின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் அர்த்தமற்றது' என்கிறார்.

எனவே கேரள அரசு உள்நோக்கத்தோடுதான் அணை பலமற்றது என்ற பரப்புரையை செய்து வருகிறது என்பதே யதார்த்தம். முல்லைப் பெரியாறில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு என்பது 172 டி.எம்.சி. ஆகும். இதில் கேரளம் பயன்படுத்திக் கொள்வது 80 டி.எம்.சி.தான்.  அதில் பெரும் பகுதி மின்சாரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நீர்ப் பாசனத்துக்கு அல்ல. தமிழகத்துக்குத் தேவைப்படும் நீரின் அளவோ 20 டி.எம்.சி.க்கும் குறைவு. தமிழகத்துக்கு முழுமையாக நீர் தந்த பின்னரும் கடலில் வீணாவதோ 70 டி.எம்.சி.க்கும் அதிகம்.

தமிழகத்தின் இழப்பு

முல்லைப் பெரியாறு அணையை 136 அடி உயரத்துக்கு குறைத்ததனால், தமிழகம் பல ஆயிரம் கோடியை இழந்துள்ளது. பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. மிகப் பெரிய அளவு மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. 1979 முதல் இத்தனை இழப்பையும் ஏற்றுக் கொண்டு, பெரியாறு அணையை தமிழகம் பல கோடி ரூபாய் செலவு செய்து பலப்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடி 142 அடி வரை உயர்த்த உத்தரவையும் பெற்றது. ஆனால் கேரளமோ புதுப் புதுப் பிரச்சனைகளைக் கொண்டு வந்து, தமிழகத்தின் முயற்சிகளை முறியடிக்க விரும்புகிறது. தமிழக மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. மத்திய அரசோ இவைகளை வேடிக்கை பார்க்கிறது.

இந்திய இறையாண்மை

இந்திய இறையாண்மையும், தேசிய ஒருமைப்பாடும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் புனிதமும் கேள்விக்குள்ளாகி உள்ளன. 1979ம் ஆண்டில் மத்திய நீர் வளத்துறை ஆணையம் மற்றும் தமிழக, கேரள அரசுகள் ஆகிய அனைத்தும் இணைந்து எடுத்த பாதுகாப்பு சம்பந்தமான முடிவுகள் அனைத்தையும் தமிழகம் செய்து முடித்து விட்டது.

ஆனால் அன்று எடுத்த முடிவுகள் எதனையும் கேரள அரசு நிறைவேற்றாததோடல்லாமல், அன்று எடுத்து முடிவுகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து எதிராக செயல்பட்டும் வருகிறது.

மத்திய அரசையோ, உச்ச நீதிமன்றத்தையோ எதனையும் மதிக்க அது தயாராக இல்லை. மேலும் காரண, காரிய அடிப்படையிலும் அது செயல்படவில்லை. பொய்களைக் கூறி, மக்களை திசை திருப்பி தனது உள்நோக்கத்தை பூர்த்தி செய்யவே விரும்புகிறது.

அறிவதும் உணர்வதுமே தீர்வுக்கு வழி (i):

உலக நாடுகள் பலவற்றில் நீர் சம்பந்தமான பிரச்சனைகளும், தகராறுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை அனைத்தும் உலக நாடுகளுக்கு இடையேயான நீர் பிரச்சனைகள் சம்பந்தமான, உலக வழிகாட்டு நெறிமுறைகளின் படி சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன.

mullaiperiyar_378இந்தியாவும், பாகிஸ்தானும் பரம எதிரிகளாக இருந்தபோதிலும், அவைகளுக்கிடையேயான நீர் பிரச்சனைகள் பலவும் சுமூகமாகவே தீர்க்கப்பட்டுள்ளன. அதுபோன்றே இந்தியாவுக்கும், பங்களாதேசுக்கும் இடையேயான நீர்த் தகராறுகளும் கூட உலக வழிகாட்டு நெறிமுறைகளின்படி தீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஆப்ரிக்காவில் ஓடும் நைல் நதி, ஐரோப்பாவில் ஓடும் டான்யூப், வால்கா போன்ற நதிகள் பல நாடுகளுக்கு இடையே ஓடி பின் கடலில் கலக்கின்றன. அந்நாடுகளுக்கிடையே உள்ள பல நீர் சம்பந்தமான தகராறுகளும், பிரச்சனைகளும் அதற்கான உலகவழிகாட்டு நெறிமுறைகளின்படியே தீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தின் காவேரிப் பிரச்சனையும் சரி, முல்லைப் பெரியாறு பிரச்சனையும் சரி, பாலாற்றுப் பிரச்சனையும் சரி முறையாகத் தீர்க்கப்படவே இல்லை. மேலும் மேலும்நாம் நமது தலையாய உரிமைகளைத் தொடர்ந்து இழந்து வருவதுதான் மிச்சம்.

இதற்கான காரணம் என்ன? இந்திய அரசும், அதன் சிறைக்கூடங்களாக இருக்கிற தமிழக, கேரள, ஆந்திர அரசுகளும்தான் மிக முக்கியக் காரணம். பிரச்சனை என்பது இரு சுதந்திரமான தனி நாடுகளுக்கு இடையே எனில், இன்றைய சூழ்நிலையில் அது எளிதில் தீர்க்கப்பட்டு விடுகிறது. மூன்றாவது நபர்கள் தலையிடும் போது மட்டுமே பிரச்சனை எளிதில் தீர்க்கப்படுவதில்லை.

இங்கு இந்தியாவில், இந்திய அரசு மூன்றாவது நபராக இருப்பதோடு, மாநில அரசுகள் சுதந்திரமான தனி அரசுகளாக இல்லை என்பதும் முக்கியக் காரணம். இந்திய ஆளுங்கட்சிகள் தனது சுயநல தேர்தல் நலன்களோடு மாநிலங்களின் நீண்ட கால நீர்ப் பிரச்சனைகளை அணுகுகின்றன. மாநில அரசுகளும் சுதந்திர அரசுகளாக இல்லாததால், குறுகிய தேர்தல் சுயநலத்துடனேதான் செயல்படுகின்றன.

இவைகளின் காரணமாக மிக எளிதில், இருவருக்கும் பயன்படும் விதத்தில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன. அல்லது தமிழகம் போன்று, நீரை பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வந்த அரசுகள், மத்திய அரசின் நடுநிலை தவறிய செயல்பாடுகளால் அதனை இழக்க நேர்கின்றன. எனவே இவைகளைப் புரிந்து கொண்டு மாநில மக்கள் நடுநிலையோடும், காரண காரியத்தோடும் செயல்பட வேண்டியது அவசியம்.

அறிவதும் உணர்வதுமே தீர்வுக்கு வழி (ii):

அடுத்ததாக, கேரளத்தின் உணவுத் தேவையில் பெரும் பகுதியை தமிழகம்தான் பூர்த்தி செய்கிறது. அரிசி போன்ற தானியங்கள் மட்டுமல்ல, காய்கறிகள், முட்டை, இறைச்சி போன்ற கேரளத்தின் பிற உணவுத் தேவைகளை தினமும் 10,000-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கொண்டு சென்று தமிழகம் பூர்த்தி செய்து வருகின்றது. இவைகளை உற்பத்தி செய்ய 200 டி.எம்.சி. நீருக்கு மேல் தேவைப்படும்.

உதாரணமாக கேரளாவின் நெல் தேவையில் ஒரு பகுதியை, அதாவது 8 இலட்சம் டன் நெல்லை தமிழகம் கேரளத்துக்கு வழங்குகிறது எனில், இவ்வளவு நெல்லையும் விளைவிக்க 7 இலட்சம் ஏக்கருக்கும் மேல் தேவைப்படும்.

ஒரு இலட்சம் ஏக்கருக்கு 20 டி.எம்.சி. நீருக்கு மேல் தேவை என்றால்கூட, 7 இலட்சம் ஏக்கருக்கும் சுமார் 150 டி.எம்.சி. நீர் தேவைப்படும். பிற உணவுப் பொருட்களின் உற்பத்தியையும் கணக்கில் கொண்டால் 200 டி.எம்.சி.க்கு மேல் நாம் கேரளாவுக்கு மறைமுகமாக தந்து கொண்டுள்ளோம் என்பதுதான் உண்மை.

இதனை கேரளா உணர்ந்து கொண்டதாகவோ, நாம் அதனைப் புரிந்து கொண்டதாகவோ தெரியவில்லை. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் விளைபொருட்களின் அளவைக் கணக்கிடுவது அவசியம். அதன் மூலம் துல்லியமாக எவ்வளவு நீரை கேரளாவுக்குத் தாரை  வார்க்கிறோம் என்பதை நாம் அறிவதும், நாம் அறிந்ததை கேரள மக்களுக்கு உணர்த்துவதும் மிக அவசியம்.

அறிவதும் உணர்வதுமே தீர்வுக்கு வழி (iii) :

இறுதியாக, மின்சாரத் தேவைக்காகத்தான் கேரளம் இடுக்கி அணையில் முல்லைப் பெரியாறு நீரை எதிர்பார்க்கிறது. அந்நீரை மின்சாரத் தேவைக்குப் பின் அது அதனை பாசனத்துக்குப் பயன்படுத்த இயலாது. தமிழகத்தில், 1700 அடி உயரம் மின் நிலையம் அமைக்க வைரவனாற்று அருவியில் வாய்ப்புள்ளது.

இடுக்கியில் அந்த அளவு உயரம் இல்லை. எனவே கேரளம் பயன்படுத்தும் நீரை விட மிகக் குறைந்த நீரைக்கொண்டு நாம் அதிக மின்சாரம் எடுக்க முடியும் என்பதோடு, அந்த நீரை நாம் பாசனத்துக்கும் பயன்படுத்த இயலும். எனவே கடலில் வீணாகும் நீரின் ஒரு சிறு பகுதியை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

அந்த நீரைக் கொண்டு மின்சாரம் எடுப்பதோடு, அதனை நாம் பாசனத்துக்கும் பயன்படுத்திக் கொள்ள இயலும். 500 ஆண்டுகளுக்கு முன் இன்றைய கேரளம், அன்றைய தமிழகமாக இருந்தது என்பதை நாம் இருவருமே மறந்து விட முடியாது.

பழந்தமிழகம்-கேரளம்

3000 வருட தமிழக வரலாற்றில், கேரள மக்கள் 2500 வருடங்களாக நம்மோடு சேர்ந்து தமிழர்களாக பயணம் செய்து வந்தவர்கள் என்பதை வரலாறு உறுதிப்படுத்துகிறது. செங்குட்டுவனும், இளங்கோவும், சேரர் பகுதியைச் சார்ந்த நூற்றுக்கணக்கான சங்கப் புலவர்களும் தமிழர்களாக இருந்தனர் என்பதோடு, இன்றைய கேரள மக்களின் முன்னோர்கள் அவர்கள்.

அவர்களிடமிருந்து வந்தவர்கள்தான் இன்றைய கேரள மக்கள். இவைகளை இருவரும் மறந்து விட முடியாது. இவைகளை நாம் அறிவதும், நாம் அறிந்ததை கேரள மக்களுக்கு உணர்த்துவதும் அவசியம். இவை போன்ற புரிதல்களும், உணர்தல்களும் மட்டுமே முல்லைப் பெரியாறு பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர உதவும்.

இறுதியாக இந்த புரிதல்களோடும், உணர்தல்களோடும் நமது உரிமைக்காக நடுநிலையோடும், காரண காரியங்களோடும் இறுதி வரை தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பதும், நமது அரசுகளை போராட வைப்பதும், சக மக்களுக்கும், அரசுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பதும்தான் நமது இறுதி வெற்றிக்கான ஒரே வழியாகும்.

- கணியன் பாலன்

Pin It