(ரோஹித் வெமுலா தலித் அல்ல என்ற தி இந்து தமிழ் நாளிதழுக்கு எழுதிய என் எதிர்வினையை இதுவரை இந்து வெளியிடவில்லை. அதனால், கீற்றில் வெளியிடுகிறேன்.)

rohit vemula 340அன்புள்ள தி இந்து ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.

ஜனவ 24, 2016 நாளிட்ட தங்களின் நாளிதழ் பக்கம் 12-இல் ஹைதராபாத் பல்கலை.யில் தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வெமுலா தலித் அல்ல என்று தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியான செய்தியின் இறுதியில் ஹைதராபாத் சைபராபாத் காவல்துறை ரோஹித்தின் பூர்வீக ஊரான குண்டூருக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளது. விசாரணையின் முடிவில் தாய் தலித் இனத்தவர் என்றும் தந்தை கல் உடைக்கும் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது என்றும், ரோஹித் தொடக்கத்தில் கல் உடைக்கும் சமுதாயம் சார்ந்தவர் என்றும் பின்னர் தலித் இனத்தவர் என்றும் சான்று பெற்றிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளாகக் கூறப்பட்டுள்ளது.

தற்கொலைச் செய்துகொண்ட ரோஹித் பெற்றோர் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது தெளிவாகின்றது. அடுத்து இப்படி இருவேறு சாதிகளில் திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்குத் தாய் சாதியோ, தந்தை சாதியோ எந்தச் சாதியை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம் என்பதுதான் அரசாணை சொல்வது. தாய் வழியில் ரோஹித் தலித் என்பது உறுதியாகின்றது. இந்து நாளிதழ் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். என்னவெனில் தலித் என்பது இனம் அல்ல. தலித் என்னும் மராட்டியச் சொல்லுக்கு அடக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், நொறுக்கப்பட்டவர்கள் என்றுதான் பொருள் உள்ளது.  எந்தச் சாதியில் ஒருவருக்கு உரிமை மறுக்கப்படுகின்றதோ அவர்தான் தலித். இது SC என்னும் பட்டியலின மக்களையும் குறிக்கும் சொல்லாகவும் உள்ளது என்பதுதான் உண்மை.

கல் உடைக்கும் சமுதாயத்தவர் BC என்றே வைத்துக்கொள்வோம். அவர்கள் SCயை விட சாதியப் படிக்கட்டுகளில் வேண்டுமானால் உயர்வாக இருக்கலாம். ஆனால் வாழ்வு நிலை ஒன்றே என்பதை அறியவேண்டும். கல் உடைப்பவர்கள் பெரும்பாலும் ஒரு முதலாளியிடம் கொத்தடிமையாகவே தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்து வருபவர்கள். அவர்களுக்கு என்று எந்த உரிமையும் கிடையாது என்பதை உணர்ந்தால் தற்கொலை செய்துகொண்ட ரோஹித் தந்தை வழியிலும் தலித் என்பதை உணரலாம்.

ரோஹித் தந்தை வழியில் பிற்படுத்தப்பட்டவர்தான். பட்டியலின சாதி இல்லை என்பதால் அவர் தலித் இல்லை என்றால், தாழ்த்தப்பட்டவர் வீட்டு இல்லத் திருமண வீடுகளில் விருந்து முடிந்து வெளியே வீசப்படும் எச்சில் இலைகளை நக்கிச் சாப்பிடும் நரிக்குறவர்கள் சாதியப் படிக்கட்டுகளில் BC என்பதை உணரவேண்டும். நரிக்குறவர்கள் தங்களை ST பிரிவில் சேர்க்கவேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறுசெய்தி.

ஒடுக்கப்பட்டவர்கள், உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள், அடக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் SC,BC,OC என்று யாராக இருந்தாலும் தலித் என்ற வரையறைக்குள் அடக்கிப் பார்ப்பதுதான் தலித்தியம் என்ற வகைப்பாடு ஆய்வூலகில் இருக்கும்போது ரோஹித் வெமுலா பெற்றோர் வழியில் தலித் அல்ல என்று தி இந்து செய்தி வெளியிட்டு, ஆளும் பாஜகவின் மோடி அரசின் அமைச்சர்களின் பொய்யுரைகளுக்கு வெண்சாமரம் வீசுவது ஏன்? ஜல்ரா போடுவது ஏன்? முழுபூசுணைக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சி ஏன்? இதுதான் இதழியல் அறமா? சமூக பொறுப்புணர்வுடன் தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட வேண்டும் வாசகன் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்.

- முனைவர் தி.நெடுஞ்செழியன், தமிழ் இணைப் பேராசிரியர், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி -2

Pin It