NACO, TANSAC, UNICEF, APAC போன்ற அமைப்புகள் HIV தொற்றைக் குறைக்கும் பொருட்டு பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறன்றன. இருப்பினும் புதிய தொற்றுகள் ஏற்படக் காரணம் மக்களின் மெத்தனப்போக்கு மற்றும் மது அருந்துதல் போன்ற சில காரணங்களால் புதிய தொற்று ஏற்பட்டுவருகிறது.  ஏனெனில் மது அருந்தியவர்கள் தன்நிலை மறந்து பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபடும்போது, புதிய தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.  ஆனால் நமது அரசு, அரசு சாரா அமைப்புகள் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக பல கோடிகள் செலவழித்து வருகின்றன. ஆனால் இதுபோன்ற சிலரால் அவை பலனில்லாமல் போய்விடுகிறது. மேலும் புதிய தொற்றுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.  HIV தொற்றை தடுக்க ஒரே வழி மனக்கட்டுபாடு மட்டும்தான். அது ஒவ்வொரு தனி மனிதன் மனதிலும் பதியவேண்டும்.  அன்று பட்டுகோட்டை தனது பாடலில் அழகாக சொன்னார் “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என அந்த வரிகள் இன்று நமக்கு வேதவாக்கு. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மன கட்டுப்பாடு கட்டாயம் இருந்தால் மட்டுமே HIV போன்ற சில கிருமிகளை தூர தள்ளிவைக்க முடியும் இல்லையெனில் பாதுகாப்பு என்பது எட்டாக்கனியாகிவிடும்.  

HIVயால் பாதிக்கப்பட்டவர்களுக்கென்றே ஒரு தனிப்பட்ட அமைப்பு HIV உள்ளோர் நல சங்கம், அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட கூட்டமைப்பாக செயல்பட்டு வருகிறது.  இவ்வமைப்பு HIVயால் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படுகிறது. தொற்றுக்குப் பிறகு அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். மேலும் புதிய தொற்றுகள் ஏற்படாமல் தடுப்பது, மனரீதியான ஆறுதல், ஆலோசனை, கல்வி உதவி, அரசுநலத் திட்டங்களை பெற்றுத் தருதல் போன்ற பல உதவிகளை செய்து வருகிறது.  HIVயால் பாதிக்கப்பட்ட எத்தனையோ குழந்தைகள் இந்த அமைப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பெற்றோரின் அறியாமையால் அவதிப்படும் பிஞ்சுகளின் எதிர்கால நிலை கேள்விக்குறியாக உள்ளது.  இதுமட்டுமா? பெற்றோர்கள் HIV தொற்றுடன் இருப்பதால் சமூகத்தில் பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு குழந்தைகள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.  UNICEF நிறுவனம் ஒரு சில மாவட்டங்களில் OVC - Orphan vulnerable Children எனும் திட்டத்தின் மூலம்  HIV தொற்று உள்ள மற்றும் HIVயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களில் தொற்று அல்லாது பாதிக்கப்பட்ட குழந்தைளையும் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி, சத்துணவு உடை மற்றும் மனரீதியான ஆறுதல்களையும், அரசுசார்ந்த மற்றும் அரசுசாரா நலதிட்ட உதவிகளையும் பெற்று குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திவருகிறது.

HIV/AIDS என்பது ஒருகாலத்தில் மருத்துவ சிகிச்சை அடிபடையில் பெரிய  விசயமாக கருதப்பட்டது.  ஆனால் தற்போது HIV/AIDS என்பது தொடர் சிகிச்சை அடிப்படையில் சர்க்கரைநோய், இரத்த அழுத்தம் வரிசையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.  ஆனால் மக்களின் மனநிலை HIVயால் பாதிக்கப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்களைப் போல் பார்க்கிறது.  HIVயால் பாதிக்கப்பட்டவர்கள் தவறான வழியில் சென்றவர்கள் அல்லர், எத்தனையோ குழந்தைகள் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள் அவர்களை எவ்விதத்தில் குறைகூற இயலும்.  கணவனால் பாதிக்கப்பட்ட மனைவிகளும், மனைவியால் பாதிக்கப்பட்ட கணவனும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள்…  அவர்களை எவ்விதத்தில் குறைகூறுவீர்கள்? சிந்தித்து அவர்களை ஒதுக்காமல் இணைந்து வாழவேண்டும்.

HIV தொற்று ஒருபோதும் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுவதால் ஏற்படாது.  அப்படி தொற்று ஏற்படுவதாய் இருந்தால் நம் நாட்டில் பாதிக்கும் மேல் HIV ல் பாதிக்கப்பட்டிருப்போம்.  ஏனெனில் தினந்தோறும் நாம் HIVயால் பாதிக்கப்பட்டவர்களுடன் நமக்குத் தெரியாமலேயே பேருந்து, திரையரங்கு, பொது இடங்கள் போன்றவற்றில் தொடர்பு கொண்டுள்ளோம்.  சிந்தித்துப் பாருங்கள்… குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் மருத்துவர்களும் சமூக நலப் பணியாளர்களும் HIVயால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.  ஆனால் அவர்களுக்கு ஏன் HIV பாதிப்பு ஏற்படவில்லை... சிந்தியுங்கள்,  அதேபோல HIVயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காதீர்கள்; அவர்கள் குற்றவாளிகள் அல்லர்.  யாரோ ஒருவரால் பாதிக்கப்பட்டு அன்பு என்ற ஒன்றை வார்த்தைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நம்மில் ஒருவர்.  மனிதநேயம் மங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சமூக ஆர்வலர்கள்  அதை துளிர்விடச் செய்வதில் ஆர்வம் காட்டவேண்டும்.  ஓர் உண்மை நிகழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்  

HIVயால் பாதிக்கப்பட்ட பெண்மணி தன் கணவரை இழந்து தனது நான்கு குழந்தைகளுடன் ஆதரவின்றி வாழ்ந்து வருகிறார்.  தன் குழந்தைகளைக் காப்பாற்றும் பொருட்டு கூலிவேலை செய்து வருகிறார்.  அவர் அரசாங்க உதவி அதாவது விதவை உதவித் தொகை பெறும் பொருட்டு விண்ணப்பித்து உள்ளார்.  அதனை பெறும் பொருட்டு சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு நடையாய் நடந்தார்.  ஆனால் பலன் இல்லை, வேலைக்குச் செல்லாமல் பட்டினியாய் கிடந்ததுதான் மிச்சம்.  மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரி கூறிய வார்த்தை என்ன தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.  "உனக்கே எய்ட்ஸ் இருக்கிறது. நீ இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவாய். உனக்கு எதற்கு இந்த உதவித் தொகை" என கேட்டுள்ளார்.  அவரது வீட்டில் உள்ள யாருக்கேனும் இந்த நிலை ஏற்பட்டால் இப்படித்தான் பேசுவாரா? அப்பெண்மணி செய்த தவறு என்ன?  கணவன் மூலம் HIV தொற்றைப் பெற்று கணவனையும் இழந்து நிர்க்கதியாக நிற்பவரிடம் கூறும் வார்த்தையா இது…  மனிதநேயம் எங்கே?

இவர் மட்டுமல்ல இதுபோல் பலர் வாழ்ந்து வருகிறார்கள்.  யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு எல்லோரையும் தண்டிப்பது சரியா? உங்களுக்கு ஒன்று தெரியுமா? HIVயால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான தொடர் சிகிச்சையும், உணவும் எடுத்துக்கொண்டால் பல ஆண்டு காலத்திற்கும் மேல் வாழலாம்.  ஆனால் இதுபோன்ற வார்த்தைகளைக் கூறி மனம்மாறி வாழ விரும்பும் இவர்களை மரண வாசலுக்கு அனுப்பிவிடாதீர்கள், பெரிய, பெரிய ஊழல்வாதிகளும், கொலைகாரர்களும் குண்டு வைத்து பலரை அழிக்கும் வெறியர்களும் வாழத் தகுதி உள்ளவராய் வலம் வரும் இவ்வுலகில் ஒரு தவறும் செய்யாமல் யாரோ ஒருவரால் பாதிக்கப்பட்டு வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை இதுபோன்ற கொடும் சொற்களைக் கூறி தண்டித்து மனித நேயத்தைக் கொன்று விடாதீர்கள். மனிநேயத்தை வளர்க்காவிட்டாலும் குழிதோண்டி புதைத்து விடாதீர்கள்.

- சி.சரஸ்வதி, M.Phil முதலாம் ஆண்டு மாணவி, திருப்பத்தூர்
Pin It