பூமியில்தான் வாழ்கிறோமா? இந்தியாவில்தான் இருக்கிறோமா? என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில்தான் தவித்துக் கிடக்கிறோம் என்பது நன்றாகவே உறைக்கிறது. சண்டைக்காரன் தொட்டான் என்ற ஒரே காரணத்திற்காக குழந்தையை கொலை செய்யத் துணியும் அம்மாவின் (அப்படியான அம்மாக்கள் இல்லை) மனநிலையில் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறையும், கண்டு கொள்ளப்படாத அல்லது கண் துடைப்பைச் செய்கிற கல்விச் சட்டங்களும், கொந்தளிக்கும் விலைவாசி உயர்வும் கன்னத்தில் அறைந்து சொல்கிறது வந்தாரை வாழ வைத்து, இருப்போரை விரட்டியடிக்கும் தமிழகத்தில்தான் இருந்து தொலைக்கிறோம் என்பதை.

விலைவாசி உயர்வை எப்போதும் எதிர்த்தே குரல் கொடுக்க வேண்டுமா? ஏற்றுக் கொண்டால் என்ன? என பண்பலையில் விவாதம் நடக்கிறது. ஆளாளுக்கு அவரவர் சூழலுக்கேற்றவாறு பதில்களை வாரி இறைத்த வண்ணம் இருக்கிறார்கள்.

தமிழகத்தை விட மற்றமாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்வாகத்தான் இருக்கிறது. அதனால் பேருந்து கட்டண உயர்வு தவறில்லை.

வருடத்துக்கொருமுறையா ஏற்றுகிறார்கள். ஐந்து வருடத்திற்கு ஒருமுறைதானே ஏற்றுகிறார்கள். வருடத்திற்கொருமுறை சம்பளம் உயர்கிறதல்லவா?

கடந்த ஆட்சியில் கஜானா காலியாகிவிட்டது. அதனால் வேறு வழியில்லை.

இது நிச்சயம் மேல்தர வர்க்கமாகவோ, மேலாதிக்க உணர்வுள்ளவனாகவோ இருக்கக்கூடிய பலரின் குரலாகத்தான் இருக்கும். நடுத்தர மக்களின் குரலாக இருக்க துளியும் வாய்ப்பில்லை.

தினமும் குழந்தைக்கு ஒருலிட்டர் பால் வாங்குவேன். இனி அரை லிட்டராகக் குறைக்க வேண்டியதுதான்.

பேருந்து கட்டணம் இருமடங்குக்கும் மேலே அதிகரித்திருக்கிறது. கூலி வேலை செய்பவர்கள் நூற்றி ஐம்பது ரூபாய் கூலிக்கு நாற்பது ரூபாய் செலவழித்துப் போய் வந்தால் என்ன மிஞ்சும்?

மக்கள் கட்டும் வரிப்பணங்களை வைத்தே இலவசங்கள் வழங்கப்படுகிறது. எனவே இலவசங்களைக் குறைத்தாலே போதும். இந்த சிக்கலை அடியோடு தீர்க்கலாம்.

ஒரு தனியார் பேருந்து வைத்திருக்கும் உரிமையாளரே அடுத்த ஆறு மாதங்களில் அந்த பேருந்தில் வசதிகளையும் ஏற்படுத்தி, இரண்டு புதிய பேருந்தை இயக்கும் போது அரசுத் துறையில் மட்டும் நட்டம் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் அதிகம் எனில் அதன் வசதிகளும், கட்டமைப்பும் வேறு.

இது நடுத்தர மக்களின் அல்லது நடுநிலையாளர்களைச் சார்ந்த குரல்களின் எதிரொலி.

இதில் வராத குரலொன்று உள்ளது. அடித்தட்டு மக்கள், அன்றாட கூலி வேலை கிடைத்தால்தான் அரை வயிற்றுக் கஞ்சி குடிக்க முடியும் என்பவர்கள். இவர்களுக்கு பத்திரிக்கையோ, பண்பலையோ, தொலைக்காட்சியோ புரியவைத்து விட முடியாத, புரிந்து கொள்ள முடியாத தொலைவில்தான் உள்ளன.

எம்.எம்.டி.ஏ.வுல இருந்து ஈக்காட்டுத்தாங்கல் வர்றதுக்கு நேத்துவரை நாலு ரூபயா இருந்த டிக்கெட் ஒன்பது ரூபா. - விடுதியில் தங்கி வேலை பார்த்து வரும் ஒரு பெண்மணியின் புலம்பல்

600ரூபாய் இருந்த பஸ் பாஸ் முடிய இன்னும் 13 நாள் இருக்கு. ஆனா உடனே 400 ரூபா கட்ட சொல்றானுங்க. 1000 ரூபாயா கூட்டிட்டாங்க – பஸ் பாஸில் வரும் அலுவலக பெண்மணியின் கண்ணீர்

தூக்கத்தைப் புறம்தள்ளுகிற பெருந்துயரம் இந்த திடீர் பேருந்து கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு. இதில் பால் விலையைக் கேட்டுவிட்டு வாங்காமல் கூட வரலாம். அல்லது எப்போதும் வாங்குவதை விட குறைவாக வாங்கலாம். மின் கட்டணம் (இன்னும் அமுல்படுத்தப்படவில்லை) மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வரக்கூடியது. ஆனால் பேருந்து கட்டணம் என்பது பேருந்தில் ஏறிய பின்தான் பயணச்சீட்டு எடுக்க இயலும். எப்படி போகக் கூடிய இடத்துக்குப் போகாமல் இருப்பது? முதல்நாள் பலர் அதிர்ச்சிக்குள்ளாகி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட்தும் அனைவரும் அறிந்ததே. போக வர மூன்றும் மூன்றும் ஆறு ரூபாய் வரக்கூடிய தொகைக்கு பத்து ரூபாயோடு வீட்டில் இருந்து கிளம்பிய ஒருவரிடம் போகக் கூடிய இடத்திற்கே ஏழு ரூபாய் வசூலித்தால் எப்படி அவர் சென்று திரும்ப முடியும்? இது இன்றைய நாளின் பிரச்சினை மட்டுமல்ல. மாதம் மூவாயிரம் ரூபாய்க்கு வேலை செய்யும் ஒருவரின் பேருந்து கட்டணம் இருநூறு ரூபாய் என்றால் இனி 500 ரூபாயாக இருக்கும். எப்படிதான் பயணிக்க முடியும்?

அதுமட்டுமின்றி சர்வீஸ் அல்லது சேவை எனப்படுகிற போக்குவரத்தில் கை வைத்தால் எப்படி சரியாகும்? சென்னை தவிர திருச்சி போன்ற மற்ற நகரங்களில் மாநகர அரசுப் பேருந்துகளை விட தனியார் பேருந்துகளே அதிகம். இதையடுத்து தனியார் பேருந்துகளும் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தி கொள்ளையடிக்க ஏதுவாக அமைந்துள்ளது அரசின் அறிவிப்பு. ஏற்கனவே நான்கைந்து மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியாருக்கு இது மேலுமொரு இனிப்பு செய்தியே. அரசை விட தனியாருக்குத் தீனி போடும் அரசின் அதிரடிப் பரிசுக்கு இணை வேறெதுவும் இல்லை.

மேற்கத்திய நாடுகள் உட்பட பெங்களூர் போன்ற இடங்களில் வாடகைக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் விட்டுச் செல்லும் முறை ஒன்று உள்ளது. அதை விரைவில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினால் போக்குவரத்து நெரிசல்களிலிருந்தும், கழுத்தை நெறிக்கும் கட்டண உயர்விலிருந்தும் தப்பிக்கலாம் போலும்.

நியாய விலை அங்காடி தவிர இலவச டிவி, ஆடு, மாடு, கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி போன்ற இலவசங்களை அறவே நீக்கினால் அரசு ஏன் நட்டத்தில் இயங்க போகிறது? இலவசங்களை ஒழிக்க வேண்டும் என்பது பெரும்பாலான சிந்தனையாளர்களின் கருத்து. இலவசத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் 'இது மாநில அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிடமுடியாது' என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதே போல் 2008ல் தாழ்தள சொகுசு பேருந்து அறிமுகப்படுத்திய போது திடீரென்று 2 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக கட்டணம் உயர்த்தியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் வழக்குத் தொடுத்தவருக்கு எதிராகவே அமைந்தது. 'உங்களை யாரும் கட்டாயப்படுத்தி பேருந்தில் ஏற்றினார்களா? உங்களை யார் அந்த பேருந்தில் பயணிக்கச் சொன்னது?' என்று வழக்கு தொடுத்தவருக்கே 10,000ரூபாய் அபராதம் விதித்தார் அப்போதைய உயர்நீதிமன்ற நீதிபதியான ரவிராஜபாண்டியன். இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் பெரும் போராட்டம் செய்த பிறகே அபராதம் ரத்து செய்யப்பட்டது.

இப்படி நீதிமன்றமே அரசின் ஆட்டுவித்தலுக்கு ஆடும் போது அந்த அரசை நிர்ணயிக்கிற உரிமை உள்ள சாதாரண குடிமகன் என்ன செய்ய முடியும்? அடிவயிற்றில் ஈரத்துணி கட்டியபடி சொட்டுச் சொட்டாய் கண்மூடுவதைத் தவிர.

அடுத்ததாக மின் கட்டண உயர்வு என்பதை அவ்வளவு வலிமையாக யாரும் எதிர்க்கவில்லை. ஏனெனில் கூடங்குளம் பிரச்சினையை ஓரளவு உணர்ந்திருப்பார்கள் என்றோ இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதானே என்றோ அமைதி கொண்டிருக்கக் கூடும்.

விவசாயிகளுக்கு வழங்கப்படுகிற இலவச மின்சாரமானது உண்மையில் வசதிபடைத்த பெருமுதலைகளுக்கே போய்ச்சேருகிறது என்பது பலரும் ஒப்புக் கொள்ளும் விடயம். இதுதவிர 2006ல் கொண்டு வரப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஆகப்பெரும் கம்பெனிகளுக்கு 24 மணிநேரமும் வீட்டுக் கட்டணப்படி தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில் 15க்கும் மேற்பட்டவை ஐ.டி.கம்பெனிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக பால் கட்டண உயர்வு. பாக்கெட் பாலில் சேர்க்கப்படும் பொருட்கள் எல்லாம் மிக மெதுவாக உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியவை என்று மருத்துவர்களால் கூறப்பட்டு வருகிறது. அதையும் அதிரடியாக உயர்த்தியிருப்பது நகரங்களை அதிகம் பாதித்திருக்கிறது.

சந்திரபாபு நாயுடுவின் பால் பாக்கெட் கம்பெனி ஒன்று புதிதாக சந்தையில் நுழைந்திருப்பதாகவும், அதற்கு ஒத்துழைப்பு தருவதற்கே பால்விலை உயர்வென்பதும் கட்சி வட்டாரத்திலிருந்து கசியும் தகவல். நெருப்பில்லாமல் புகையுமா?

பத்துமடங்கு விலையேற்றி ஒரு மடங்கு குறைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் விலை, வீட்டு வாடகை, மளிகைச் சாமான்கள், காய்கறிகள் இவற்றின் விலைகள் ஏறுமுகமாக உள்ள நிலையில் சாரமாரியாக உயர்ந்திருக்கும் இந்த கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது.

தேவையைக் குறைத்துக் கொள்வதும், சேமிப்பை அதிகரிப்பதுமே கட்டண உயர்வின் அழுத்தத்திலிருந்து சற்று மூச்சுவிட ஏதுவான காரியம் என்றும் சொல்லப்படுகிறது.

உள்நாட்டுத் தேவைக்கான பொருட்களை ஏற்றுமதி செய்வதும், பற்றாக்குறை ஏற்படும் போது அந்த பொருளையே பலமடங்கு விலையில் இறக்குமதி செய்வதும் செய்திகள் சொல்லும் உண்மை. இதை கண்டுகொள்வாரும் இல்லை. கண்டிப்பாரும் இல்லை.

தண்ணீரைப் பணம் கொடுத்து பெற வேண்டிய சூழல் வருமென்று முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கனவில் கூட யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. இன்று குடிதண்ணீருக்காக ஒவ்வொருவரும் செலவழிக்கும் தொகை கணிசமானது என்பதை மறுப்பதற்கில்லை.

விலைவாசி என்பது ஒவ்வொருமுறையும் அவ்வப்போது உயரக் கூடியதுதான். ஆனால் இப்படி ஒரேயடியாக உச்சாணிக் கொம்பில் ஏறி உட்காரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. திமுக எதிர்க்கட்சிக்கும் தகுதியாக இல்லாமல் படுதோல்வி அடைந்தபோது கொண்ட சிறு அதிர்ச்சியை விட ஆயிரம் மடங்கு பேரதிர்ச்சி இந்த கட்டண உயர்வு.

அரசு நட்டத்தில் இருப்பதால் மக்கள் கைகொடுக்க வேண்டுமென்று சொல்லும் அரசு மக்கள் கைகளை வெட்டி எடுத்துக் கொள்ளும் முடிவோடுதான் களமிறங்கியிருக்கிறது. ஒருவேளை நட்டத்தில் இருந்து மீண்ட பின் கட்டண உயர்வு திரும்ப பெறப்படுமா என்ற கேள்விக்கு யார் பதில் தருவது? கைகளை வெட்டி எடுத்த பின் மீண்டும் எப்படி ஒட்ட வைப்பது? இரும்புக்கையோ, மரக்கையோ வைத்துக் கொள்ளவேண்டியதுதான் என்பது வாதத்திற்கு நன்கு உதவும்.

அரசு நிறுவனமான டாஸ்மாக் 1983-83ல் தொடங்கப்பட்ட போது அதன் முதலீடு 15கோடி. நடப்பு ஆண்டு வருமானம் மட்டுமே 15,000 கோடி. தீபாவளி அன்று ஒருநாள் மட்டும் 100கோடியைத் தொட்டுள்ளது. அந்தளவுக்கு குடிமகன்கள் அதிகரித்து வரும் சூழலில் டாஸ்மாக்கின் விலையை இரண்டு மடங்கு உயர்த்தியிருக்கலாம். இதனால் போலிச் சரக்குகளின் தலையீடு அதிகரிக்குமே என்றும் எண்ண வாய்ப்பிருந்தாலும் இப்போதும் போலிச் சரக்குகள் புழங்குவதாகவே சர்வேக்கள் கூறுகின்றன. இது போதாதென்று எலைட் எனப்படுகிற வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு அனுமதியளித்து முதல் கட்டமாக 50 கடைகள் திறக்கப்படவுள்ளது. அதனால் சரக்கின் விலை ஏற்றப்பட்டால் இரண்டு வகையில் லாபம். குடித்தால் அரசுக்கு வருமானம், குடிக்காவிட்டால் குடும்பத்துக்கு வருமானம். எனவே அரசு இதை பரிசீலனை செய்யலாம்.

அடுத்து பெட்ரோல் விலையைக் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த சில வருடங்களில் இருபதுக்கும் மேற்பட்ட முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 2 ரூபாயைக் குறைத்து விட்டு பெட்ரோல் விலை குறைந்ததாக கண்ணாமூச்சி காட்டுகிறார்கள் என்பது வேறு விஷயம். உண்மையில் சந்தை நிலவரப்படி பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30ரூபாயே அதிகம்தான். மற்ற 41சதவீதம் வரி மத்திய மாநில அரசுகள் விதித்திருக்கும் கஸ்டம்ஸ் வரி, இறக்குமதி வரி, தமிழக அரசு வரி, அந்த வரி இந்த வரி என்பவைதான். இவற்றால் ஆண்டுக்கு பலப்பல கோடி ரூபாய் மத்திய மாநில அரசுகளுக்கு கிடைத்து வருகிறது.

ஒருவர் சராசரியாக மாதத்திற்கு 20லிட்டர் பெட்ரோல் பயன்படுத்துவதாக எடுத்துக் கொள்வோம். லிட்டருக்கு 71 எனில் சராசரியாக 1429 ரூபாய் மாதத்திற்கு செலவாகிறது. வருடத்திற்கு 17040ரூபாய் ஆகிறது. இதில் கிட்டத்தட்ட 10,000 ரூபாய் மத்திய, மாநில அரசுகளுக்கு சரிபாதி வரியாக செல்கிறது. அரசுக்கு ஒருவரிடமிருந்தே வருடத்திற்கு 10,000 ரூபாய் லாபம் வரியாக கிடைக்கிறதெனில் நூறு கோடி மக்களுக்கு? நூறு கோடியில் இருபது சதவீதம் பேர் மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்துவதாக வைத்துக் கொண்டால் (மாதம் 20லிட்டர் என்ற குறைந்தபட்ச அளவுகோளுக்கே) 20000000000000 கோடி ரூபாய் (இருபது லட்சம் கோடி ரூபாய்.. கணக்கு சரியானு நீங்களே கணக்கு பாத்துக்கங்க.. நான் கணக்குல கொஞ்சம் மக்கு) வரியாகவே மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் சரிபாதி சென்று சேருகிறது.

எல்லா நாட்டினையும் விட இந்தியாவில் பெட்ரோல் விலைக்கு வரி 65%க்கும் மேல் விதிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் போதாதென்று எத்தனையோ நமக்கு தெரியாத மறைமுகமான விஷயங்களிலும் கொள்ளை இலாபம் கிடைக்கும்போது மக்களுக்கு அதன் சிறு பகுதியையாவது செலவு செய்யாமல் மக்களை இன்னும் தாழ்ந்தநிலைக்கு தள்ளுவதில் அப்படியென்ன விருப்பமோ?

அரிசியை இலவசமாகக் கொடுத்து அடுப்பெரிய விடாமல் செய்கிற அரசின் இத்தகைய சுயநலப் போக்கு சர்வாதிகாரம் மற்றும் கொடுங்கோலதிகாரத்தின் வெளிப்பாடு. இலவச அரிசித் திட்டத்திற்கு தேவைப்படுக்கிற தொகை 15,000 கோடி முதல் அது இதென்று அத்துணை இலவசங்களையும் நிறுத்தினாலே அரசு தன் நட்டத்தை(அப்படி சொல்லப்படுகிற) சரிகட்ட இயலும்.

21 நாட்கள் தொடர்ந்து செய்யும் பழக்கம் வாழ்நாள் முழுக்க பழகிவிடுமாம். இந்த சூட்சுமத்தை யாரோ, எப்போதோ இந்த அரசியல்வாதிகள் காதில் ஓதியிருக்க வேண்டும். அதன் பக்க விளைவுகள்தான் இவை. ஆனால் முதல் நாள் அதிர்ச்சியடைந்த மக்கள் இரண்டொரு நாட்களிலேயே இதை ஏற்க முடியாதென ஆங்காங்கே போர்க்கொடி தூக்கியுள்ளனர். புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இலவசங்களான மிக்ஸி, கிரைண்டர் என எதுவும் வேண்டாம். இந்த கட்டண உயர்வை திரும்பப் பெற்றால் போதுமென கூறுகிறார்கள்.

இன்னும் சாலைவசதியே சரியாக இல்லாத நாட்டில் மழை வந்தால் அதனோடு மல்லுக்கு நின்று தோற்றுப் போய் நிற்கிற நிலையில் அரசின் இந்த போக்கு அவ்வளவு அல்ல எள்ளளவும் ஏற்புடையதல்ல.

இனி இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டோர் சந்தித்துக் கொள்ளும்போது பேசுவதற்கு விஷயம் கிடைத்துவிட்டது. ஊடகங்களுக்கு எழுதுவதற்கு, பேசுவதற்கு பெரிய தலைப்பு கிடைத்துவிட்டது.

எங்கோ உட்கார்ந்து நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், எங்கோ இருந்து நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் கணத்தில் எத்தனையோ பேர் பேருந்து கட்டண உயர்வால் சாலையில் நடந்தே சென்று கொண்டிருக்கலாம். எத்தனையோ பேர் பாலுக்காக அழும் குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டோ அல்லது தொண்டை அடைக்கும் துயரம் கண்ணீராய் பெருகிக் கொண்டிருக்கலாம். சிலர் சாலை மறியலிலும் ஈடுபடலாம். வேதனையில் மரித்தும் போகலாம். யார் கண்டது? இந்த தமிழ்நாட்டில்தான் ஏதேதோ எப்படியெப்படியோ நடந்து கொண்டு வருகிறது. குடும்ப ஆட்சியைத் தட்டிக் கேட்க குடும்பம் இல்லாத ஒருவர் மக்களையே குடும்பமெனக் கருதுவார் எனத் தேர்ந்தெடுத்தால் அவரே நம்மைத் தட்டி வைத்து நமக்கு குடும்பமே இல்லாமல் செய்து விடுவார் போல என மக்களின் முணுமுணுப்பு விண்ணைப் பிளக்காமலில்லை.

துரைப்பாக்கத்தில் தங்கி கட்டிட வேலை செய்துவரும் செந்தில் தனது சொந்த ஊரான திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு திரும்பிய போது பேருந்து கட்டண உயர்வின் கொள்ளையால் தாம்பரத்திலிருந்து நடந்தே தனது இரு குழந்தைகள், மனைவியோடு சென்றிருக்கிறார். அவரின் உள்ளத்தில் அப்போது தெறித்திருக்கும் வேதனை ஆவியாகி அமில மழையாக பொழிந்துவிடவும் கூடும்.

பேசுவதற்கு வாய்களும், எழுதுவதற்கும் கைகளும் தயாராக இருக்கின்றன. களத்தில் இறங்கிப் போராட கால்களைத்தான் காணவில்லை. கேட்க உயர் காதுகளும் திறப்பதில்லை.

இந்த இரவு தூக்கம் வருமா? என்று தெரியவில்லை. இனிவரும் இரவுகள் தூங்கமுடியாமல் போய்விடுமோ? என்பதே பெருந்துயரம்.

முத்து முத்தாய் வாழ்க அம்மா!?

கொத்து கொத்தாய் ஒழிக மக்கள்?!

Pin It