"நாட்டார் வழக்காறு கடந்த காலத்தின் எதிரொலி மட்டுமல்ல.
இது நிகழ்காலத்தின் உரத்த குரலும் ஆகும்."
-ருஷ்ய நாட்டு நாட்டார் வழக்காற்றியலாளர் சொக்கலோ.

மனித குல வரலாற்றில், மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், சிந்தனைகள், பண்பாடு ஆகியவற்றோடு மிகுந்த தொடர்புடையது நாட்டார் வழக்காறுகள் ஆகும். இது வாய்மொழிக்கதைகள், தொழிற் பாடல்கள், காதல் பாடல்கள், தாலாட்டு, ஒப்பாரி, பழமொழிகள், விடுகதைகள், நிகழ்த்துக்கலைகள் என்றவாறு மக்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவை குறித்த ஆய்வுகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. நாட்டார் வழக்காறுகளில், இன்று (இன்றைய தலைமுறையினர்) நாம் இழந்தது பல என்றபோதிலும், நம்முள் எந்தவொரு சூழலிலும் நம்முடைய பழமரபு சார்ந்த சிற்சில நம்பிக்கைகள், சடங்குகள் செயல்படுவதை நம்மால் உணரமுடியும். அது நாம் சார்ந்துள்ள இருப்பிடம், சாதி, பால், மதம்,மொழி சார்ந்து ஒருவித தொன்மத் தன்மையுடன் வெளிப்படும். இதனை நாம் குலக்குறி (Vote Mistic ) என்று கூறலாம்.

இந்தக் குலக்குறி, தொன்மக்கதை, கதைப்பாடல் , நிகழ்த்துதல், உருவம், வழிபாட்டுச் சடங்கு முறைகள், பழக்கவழக்கங்கள், அழகியல் சார்ந்த வெளிபாடுகளாக அடையாளம் கொள்கிறது. இத்தன்மை குல தெய்வ வழிபாடாக நீட்சி கொள்கிறது. குலக் குறியின் தோற்றம் குறித்து ஆண்ட்ரூஸ் வாங்க், பிரேசர், வில்கெம் ஸ்மித், ரெட்கிளப் பிரென் போன்ற மேலை நாட்டார் ஆரர்ய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த தெய்வ வழிபாட்டு முறை அதாவது நாட்டார் வழிபாடு என்பது பண்பாடு மரபு சார்ந்த, அதிகாரப்பூர்வமற்ற, நிறுவனமயமாக்கப்படாத தன்மையில் உள்ளது. நாட்டார் வழக்காறுகள் குறித்தும், குல தெய்வ வழிபாடு குறித்தும், தே.லூர்து, நா.வானமாமலை, ஆ.சிவசுப்பிரமணியன், அ.கா.பெருமாள், பி.எல்.சாமி, டி,தருமராஜன், இ.முத்தையா போன்றோர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மனிதன் இயற்கையோடு இணைந்த வாழ்வு முறையை மேற்கொள்ளும்போது, இயற்கையின் பல்வேறு ஆற்றல்களையும், அதீத தன்மைகளையும் கண்டு அஞ்சியும், அதன் சீற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கவும் இயற்கையைச் சக்திகளான நிலம், நீர், காற்று, ஆகாயம், இடி, மழை, மின்னல், சூரியன், சந்திரன் போன்றவற்றை வழிபடலானான். இதனை,
"ஞாயிறு, திங்கள், தீச்டர்" (தொல். பொருள். நூற்பா, 85 )
"ஞாயிறு போற்றுதும்..., திங்களைப் போற்றுதும்...., மாமழைப் போற்றுதும்....," (சிலம்பு. கடவுள் வாழ்த்து 1 :1 :7 )
என்ற பாடல்களின் வழி அறிய முடிகிறது.
இதன் நீட்சி விலங்கு, செடி, சடப் பொருள்களையும் வணங்கச் செய்தது. இந்த நம்பிக்கைகள் தான், ஆற்றங்கரை ஓரங்களில் குடியமர்த்தல், பயிரிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடவும் தூண்டியது. இந் நம்பிக்கையுடையவர்கள் குலக்குரியுடைய மக்கள் (Vote MiStic People ) என்று மானுடவியலாளர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தில் மிகப் பரவலாக குலக்குறி வழிபாடு காணப்படுகிறது. தமிழகத்தில் வாழும் பழங்குடிகளான புலையர், வளியர், குன்னுவர், தோடர் முதலியவர்களிடத்திலும் பள்ளர், பறையர், நாயக்கர், கவுண்டர் இனத்தவரிடதிலும் குலக்குறி வழிபாட்டின் எச்சங்கள் காணப்படுகிறது என்று டாக்டர் தே.ஞானசேகரன் கூறுகிறார்.

இனக்குழு சமுதாயத்தில் தன்னுடைய சந்ததிகள் பெருகுவதற்கு பெண்ணிடம் மிகை சக்தி இருப்பதை உணர்ந்து பெண்ணை தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். இதன் நீட்சியாக நாம் தமிழ்ச்சூழலில் அம்மன் வழிபாட்டைக் கூறலாம். குல தெய்வ வழிபாட்டில் ரேணுகாம்பாள், மாரியம்மாள், பூங்காவனத்தாள், பாளையக்காரி , மகமாயி, பச்சையம்மாள், அங்காளம்மன், கெங்கையம்மன், பொன்னியம்மன், எல்லையம்மன் என பல தெய்வங்களைக் கூற முடியும். இங்கு வீட்டு தெய்வம், குல தெய்வம், கிராம தேவதை அல்லது ஊர்க் காக்கும் தெய்வம் என்றவாறு மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தி வணங்குகின்றனர். அதே போல ஆண் தெய்வங்களான ஐயனார், காத்தவராயன், மதுரைவீரன், சுடலைமாடன், கருப்பசாமி போன்ற தெய்வங்களை ஊருக்கு வெளியே வைத்து காவல் காக்கும் தெய்வமாக வணங்குகின்றனர்.

குலதெய்வ வழிபாட்டில் இறந்து போன தனது முன்னோர்களையும், தாய், தந்தையரையும் வழிபடத் தொடங்கினர். அவர்களை அடக்கம் செய்த இடத்தில் கல்லை நட்டும் வணங்கி வந்தனர். பழங்கதை ஒன்றில் ஒன்பது அக்கா தங்கைகள் இறந்த பின் அவர்கள் வாழ்ந்த ஒவ்வொரு ஊரிலும் கிராம தேவதைகளாக இருந்து ஊரைக் காக்கின்றனர். அவர்கள் செல்லி, வில்லி, வைணவி, பூஞ்சோலை, துர்க்கை, புரையாறு, இருச்சம்மா, பொன்னி, கங்கை என்பதாகும். இந்த தொன்மக் கதைகளின் வழி அம்மன் வழிபாட்டில் சாதி, சாதியக்கிளை, உறவுமுறை, குலம் ஆகியவற்றை மிக எளிதில் இனங்காணமுடியும்.

குறிப்பிட்ட சாதி முறையினருக்கும், அவர்கள் வணங்கும் குல தெய்வ வழிபாட்டு முறைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தங்கள் வீட்டில் நடக்கும் எந்த நிகழ்வானாலும் காது குத்தல், குல தெய்வ பொங்கல் வைத்தல், இறந்தவர்களை வர்ணித்தல் மற்றும் பூவாடை வர்ணிப்பு போன்றவற்றை நடத்தி உயிர்ப்புத் தன்மையை மீட்ருவாக்கம் செய்கின்றனர். குறிப்பாக, புதிய வீடு கட்டுபவர்கள் குடி புகுமுன்னும், வீட்டில் நடைபெறும் முதல் திருமணம் போன்ற நிகழ்வுகளில் இதனை காணலாம். மேலும் இந்த நிகழ்வுகளில் உயிர்ப்பலி கொடுத்தல், சாமியாட்டம் ஆடுதல் போன்றவற்றைக் காணலாம். "நாட்டார் தெய்வங்கள் பெரும்பாலானவை கொலையில் உதித்த தெய்வங்கள். குறிப்பிட்ட தெய்வம் கொலையுண்ட முறைக்கும் அதற்கு உயிர்பலி கொடுக்கும் முறைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு" என்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். இந்தச் சூழலில், நாட்டார் குல தெய்வ வழிபாடு என்பது மக்களின் வாழ்வியலின் அடிநாதமாக இருப்பதை உணர முடிகிறது.

அதே வேளையில், இன்றைய குல தெய்வ வழிபாடு குறித்த ஆய்வுகள் பெரும்பாலும் இன வரைவியல், மானுடவியல், இருத்தலியல், குறியியல் போன்ற கோட்பாடுகளின் வழி நின்று நாட்டார் வழக்காற்றியலை விளக்குவதை காண்கிறோம். இதன் முடிந்த முடிபில் சில சூழலில், நாட்டார் குல தெய்வ வழிபாடு என்பது (திரௌபதியம்மன், ரேணுகாம்பாள்) வைதிக இந்து சமயத்திற்குள் இழுக்கப்படுதலைக் காணலாம். மேலும் இது போன்ற (இன வரைவியல், மானுடவியல், இருத்தலியல்) ஆய்வுகளால் நாட்டார் வழக்காறுகள் என்பது அதிகாரம் சார்ந்து, நிறுவனம் சார்ந்து அடையாளப்படுத்தப்படும் அபாயமும் இருக்கிறது. இந்த வகையில் நாட்டார் குல தெய்வ வழிபாடு என்பது மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள், ஓர் அமைப்பு முறை, சாதி, சாதியக்கிளை சார்ந்து திகழ்கிறது என துணிந்து கூறலாம்.

Pin It