ராசீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைத் தூக்கிலிடக் கூடாது என்ற கோரிக்கை தமிழகமெங்கும் மென்மேலும் வலுப்பெற்று வரும் நிலையில், இப்போது காங்கிரசார் அவர்களைத் தூக்கிலிட்டே தீர வேண்டுமெனக் கூப்பாடு போடத் தொடங்கியுள்ளனர். ராசீவ் காந்தி கொலையுண்ட போது கூடவே இறந்தோர் குடும்பத்தினர் துன்பத்தில் வாடி வருவதாக ஒப்பாரி வைக்கத் தொடங்கியுள்ளனர். எனவே அவர்கள் வடு ஆறுவதற்கு இவர்கள் மூவரையும் கொன்றே தீர வேண்டுமெனத் துடிக்கிறார்கள். நாட்டில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை ஏற்கத் தவறினால் பிறகு இங்கு சட்ட ஆட்சி நடைபெறாது, காட்டாட்சியே நடைபெறும் எனக் கூறுகிறார் ஈ.வெ.கி.ச. இளங்கோவன். மூவரையும் தூக்கிலிடாவிட்டால் நாம் காட்டுமிராண்டிக் காலத்துக்கே சென்று விடுவோம் என்கிறார் கே.வி.தங்கபாலு. காங்கிரசார் கூறுகிறார்கள், சோ, சுப்பிரமணிய சாமி போன்ற பார்ப்பன வெறியர்கள் சொல்கிறார்கள், உச்ச நீதிமன்றமே சொல்லி விட்ட பிறகு அது பற்றிக் கருத்துச் சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லையாம். உச்ச நீதிமன்றக் கோயிலுக்கு இவர்கள் அர்ச்சகர்களாகி விட்டார்கள்.

இதுவரை உச்ச நீதிமன்றத் தீர்ப்பேதும் மாற்றப்பட்டதே இல்லையா? 1950இல் கல்வி வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை நீக்கி உச்ச நீதிமன்றம் சமூகநீதிக்கு வேட்டு வைத்தபோது, அதனைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். இதற்காக இந்திய நாடாளுமன்றம் சட்டத்தில் முதல் முறையாகத் திருத்தம் செய்து பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைப் பாதுகாத்தது. எனவே இந்தியாவின் முதல் சட்டத் திருத்தமே உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதுதான் என்பதை மறந்து விட வேண்டாம்.

நீதிபதிகளும் சாதியுணர்வுக்கும் வர்க்க உணர்வுக்கும் உட்பட்டவர்களே என்பார் நீதியரசர் பி. என். பகவதி. எனவே ஒருவர் நீதிபதிப் பதவியில் உட்கார்ந்திருக்கும் காரணத்தினாலேயே புனிதராகி விட மாட்டார். அவரும் இந்த வருண, சாதி அழுக்கிலிருந்து உருவானவரே, வர்க்க பேதங்களுக்கு உட்பட்டவரே.

சென்ற அதிமுக ஆட்சி ஊதிய உயர்வு கேட்டுப் போராடிய ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்களைக் கூண்டோடு பதவி நீக்கம் செய்தபோது அதனை ஆதரித்தது உச்ச நீதிமன்றம். ஆனால் 2004இல் இந்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தபோது, அதனை தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எதிர்த்து, மருத்துவச் சேவையில் கூட ஈடுபடாது சமூநீதியைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டுமெனப் பட்டினிப் போராட்டம் நடத்தியபோது அவர்களைத் தட்டிக் கொடுத்தது உச்ச நீதிமன்றம்.

எனவே இந்தியக் கட்சிகளிடத்தும், நீதிமன்றங்களிடத்தும் சாதிய ஆதிக்க உணர்வு பரவிக் கிடப்பதே புற உண்மையாக இருக்க, அவர்கள் சொல்வதை அப்படியே நம்பி ஏற்பது என்பது அறிவுக்குப் பொருந்தாத ஒன்றாகும்.

ராசீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கச் சொல்லும் காங்கிரசார் என்ன சொல்கிறார்கள்? இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்த ஒரு மாபெரும் தலைவராகிய ராசீவ் காந்தியை விடுதலைப் புலிகள் தீர்த்துக் கட்டியது ஒரு கொடிய பயங்கரவாதச் செயல். எனவே இப்படிப்பட்ட பயங்கரவாதச் செயலைச் செய்யத் துணிந்த இந்த மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்கிறார்கள். காங்கிரசார் கூற்றுப்படி ராசீவ் காந்தி ஒரு மாபெரும் தலைவராகவே இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் உள்ளபடியே ராசீவ் காந்தி கொலை ஒரு பயங்கரவாதச் செயல்தானா? இது குறித்து இவர்கள் மதிக்கும் உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்.

ராசீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொன்றது ஏன் என்பதற்கு உச்ச நீதிமன்றமே விடையளிக்கிறது. அது சொல்கிறது, ராசீவ் காந்தி இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்த்தும் வைக்கும் நல்ல நோக்கில் இலங்கையோடு உடன்பாடு கண்டார். அதன் அடிப்படையில் இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அது அங்கு சென்று இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அத்துமீறிய வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது எனத் தெளிவாகக் கூறுகிறது. இந்த வன்முறை நடந்ததாகக் 'கருதப்படுகிறது', 'நம்பப்படுகிறது' என்பன போன்ற சொற்களை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தவில்லை என்பதைக் கவனியுங்கள். அதாவது இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இந்திய அமைதிப் படையின் அட்டூழியம் உண்மைதான் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புரையிலேயே பதிவு செய்துள்ளது. ராசீவ் காந்தியின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் காங்கிரசார் இந்தத் தீர்ப்பையும் ஏற்பார்களா? சரி, மீண்டும் செய்திக்கு வருவோம். "இந்த வகையில் இந்திய அமைதிப் படையின் அட்டூழியத்தால் தமிழர்கள் பாதிக்கப்பட்டதால், அதற்குக் காரணமாக இருந்த ராசீவ் காந்தியைப் பழிவாங்குவதற்கு விடுதலைப் புலிகள் முடிவெடுத்தனர். அதன்படி அவரைக் கொலையும் செய்தனர். எனவே தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய ராசீவ் காந்தியைப் பழிக்குப் பழி வாங்குவதுதான் விடுதலைப் புலிகளின் நோக்கமே தவிர, மற்றபடி இந்திய அரசை, இந்திய மக்களை அச்சுறுத்தும் நோக்கமேதும் அவர்களுக்குக் கிடையாது, எனவே ராசீவ் காந்திக் கொலை ஒரு பயங்கரவாதச் செயல் ஆகாது" என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளது. இது அந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளின் ஒருமித்தத் தீர்ப்பாகும்.

இந்தத் தீர்ப்பை காங்கிரசார் ஏற்பார்களா? இந்தத் தீர்ப்பை உள்ளபடியே அவர்கள் மதிப்பவர்கள் என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? ராசீவ் கொலை ஒரு பயங்கரவாதச் செயலே இல்லை எனும்போது, தடா என்னும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட அந்தக் கொலை வழக்கையே முற்று முழுதாகத் துடைத்தெறிந்து விட்டு, இந்தியத் தண்டனைச் சட்டங்களின் கீழ் விசாரணையை முதலிலிருந்து நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் தடா சட்டம் குற்றம் சாட்டப்பட்டோர் தங்கள் ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிபதியிடம் அல்லாது காவல் துறை அதிகாரியிடம் தர வேண்டும் என்கிறது; குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை மறுக்கிறது. எனவே காங்கிரஸ் அரசு மூன்று தமிழர்களுக்கும் இந்தியத் தண்டனைச் சட்டங்களின் கீழ் விசாரிக்கப்படும் வாய்ப்பைத் தந்திருந்தால், அவர்களுக்குத் தங்களது ஒப்புதல் வாக்குமூலத்தைத் தங்களைக் கொடுவதைக்குள்ளாக்கிய காவல்துறை அதிகாரியிடமே தரும் கெடுவாய்ப்பு நேராமல், எவ்வித அச்சமுமின்றி நீதிபதிகளிடம் தரக் கூடிய நல்வாய்ப்பு கிடைத்திருக்கும். மேலும் அவர்களுக்கு உயர் நீதிமன்றம் சென்று தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்குறைகளின் வெப்பத்தைத் தணித்துக் கொண்ட பிறகு உச்ச நீதிமன்றம் சென்று ஒரு ஞாயமான தீர்ப்பைப் பெறும் வாய்ப்பும் கிடைத்திருக்கும்.

உள்ளபடியே அவர்களுக்கு இந்த வாய்ப்புகளை காங்கிரஸ் வழங்கியிருக்க வேண்டும். ஏனென்றால் தடா சட்டத்தை விடக் கடுமை குறைவானது எனக் கருதப்பட்ட பொடா சட்டத்தையே நீக்க வேண்டுமெனச் சொல்லி வாக்கு கேட்டுத்தான் 2004இல் மத்திய ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். பொடா சட்டத்தைக் கொடுமையானது எனச் சொல்லி நாடாளுமன்றத்தைக் கூட்டி நீக்கிய காங்கிரஸ் அதனினும் கொடிய தடா சட்டத்தின் கீழ் தரப்பட்ட மூவர் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கோரிப் போராடுவது அப்பட்டமான தன் முரண்பாடாகும்.

ராசீவ் காந்தி இந்தியாவின் பெரும் தலைவர் என்பதால் அவரது கொலை வழக்கை அரிதிலும் அரிதான வழக்காகக் கருத வேண்டும் என்கின்றனர் காங்கிரசார். உச்ச நீதிமன்றத்துக்கும் ராசீவ் காந்திக் கொலை வழக்கை அரிதிலும் அரிதான வழக்கு என மெய்ப்பித்துக் காட்ட வேண்டிய தேவை இருந்தது. இதற்கு நாம் சிறு வரலாறு ஒன்றைப் பார்த்து விட்டுத் திரும்புவோம். இந்தியாவில் 1956க்கு முன்பு கொலைக்குத் தூக்கு மட்டுமே ஒரே தண்டனையாக இருந்து வந்தது. ஆனால் 1956க்குப் பிறகு கொலைக்கு மரணத் தண்டனை என்பது விதியாகவும் ஆயுள் தண்டனை என்பது விதிவிலக்காகவும் ஆனது. ஆனால் 1973இல் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட புதிய குற்றநடைமுறைச் சட்டத்தின்படி கொலைக்கு ஆயுள் தண்டனை என்பது விதியாகவும், மரணத் தண்டனை என்பது விதிவிலக்காகவும் ஆனது. பின்னர் 1980 பச்சன் சிங் வழக்குக்குப் பின்னர்தான் அரிதிலும் அரிதான கொலை வழக்குகளில் மட்டுமே  மரணத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்னும் நிலை உருவானது. எனவேதான் ராசீவ் கொலை வழக்கும் மரணத் தண்டனை கொடுக்கும் அளவுக்கு ஓர் அரிதிலும் அரிதான வழக்கே என மெய்ப்பிக்க வேண்டிய தேவை உச்ச நீதிமன்றத்துக்கு இருந்தது. இதன் பொருட்டு நீதிபதிகள் மூவரும் எடுத்து வைக்கும் வாதுரைகளே இங்கு நம் கவனத்துக்கு உரியவை.

நீதிபதிகளின் வாதுரைகள்:

1. ராசீவ் காந்தி இந்திய மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு பெருந்தலைவர்.

2. இலங்கைத் தமிழர் சிக்கலைத் தீர்த்து வைக்கும் நோக்கில் தாம் உருவாக்கிய இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து அதன் ஒப்புதலையும் பெற்றார்.

3. பிரபாகரனும் செயவர்த்தனாவும் புது தில்லி வந்து ராசீவ் காந்தியுடன் சேர்ந்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

4. இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்கும் பொருட்டு இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும், விடுதலைப் புலிகளின் ஒப்புதலையும் முறைப்படிப் பெற்று நல்ல நோக்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தைக் கொண்டு வந்த ஒரு பெரிய தலைவராகிய ராசீவ் காந்தியைக் கொன்ற கொலை வழக்கு என்பதால் இது அரிதிலும் அரிதான வழக்காகிறது.

இந்த வாதுரைகளின் மெய்ம்மைத் தன்மையை நாம் பார்ப்போம். ராசீவ் காந்தி எப்படிப்பட்ட தலைவர் என்பது அவரவர் தனிப்பட்ட கருத்து. 1985-89 காலக் கட்டங்களில் வாஜ்பாய், அர்கிஷன்சிங் சுர்ஜித், பரதன், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், ராம்விலாஸ் பஸ்வான், வி. பி. சிங், என். டி. ராமாராவ், முலாயம்சிங் யாதவ், லல்லுபிரசாத் யாதவ், கருணாநிதி என இந்தியாவின் அன்றைய அனைத்துக் கட்சித் தலைவர்களும் போஃபர்ஸ் பீரங்கி ஊழலை முன்வைத்து ராசீவ் காந்தியின் முகத்திரையைக் கிழித்தனர், திருவாளர் பரிசுத்தம் (மிஸ்டர் க்ளீன்) என்னும் அவரது படிமத்தை உடைத்தனர். இலங்கையில் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் போது அவரைச் சுட்டுக் கொல்லும்படி ராசீவ் காந்தி தமக்கு உத்தரவிட்டதாக அன்றைய இந்திய அமைதிப் படையின் தலைவர் அர்கிரத் சிங் இலங்கையில் தலையீடு (Intervention in Srilanka) என்ற தமது நூலில் எழுதியுள்ளார். எனவே ராசீவ் காந்தி நல்லவரா? கெட்டவரா? என்பதெல்லாம் அந்தந்த மனிதரின் அரசியல் பார்வையைப் பொறுத்தது. ஆனால் விருப்பு வெறுப்பின்றித் துலாக்கோல் போல் செயல்பட வேண்டிய நீதிபதிகள் ராசீவ் காந்தி துதி பாடும் வேலையில் இறங்குவது என்பது அவர்கள் வகிக்கும் பதவிக்கு அழகன்று. இருக்கட்டும், நமக்கு இதை விட முக்கியமானது அடுத்த இரு செய்திகளாகும்.

ராசீவ் காந்தி இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வைத்ததாக நீதிபதிகள் சொல்கிறார்கள் இல்லையா? ஆனால் அந்த ஒப்பந்ததுக்கு ராசீவ் காந்தி நாடாளுமன்ற ஒப்புதல் பெற்றார் என்பது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும். உள்ளபடியே அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு முன்வைக்கப்படக் கூட இல்லை என்பதே உண்மையான செய்தியாகும். அடுத்து, பிரபாகரனும், செயவர்த்தனாவும் புது தில்லி வந்து அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது இன்னுங்கூட வேடிக்கையான செய்தியாகும். பிரபாகரன் புது தில்லிக்கு வரவில்லை என்பது மட்டுமன்று, அவர் ஒருபோதும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் இல்லை என்பதே உண்மை. இந்த ஒப்பந்தம் உண்மையிலேயே ராசீவ் காந்திக்கும் செயவர்த்தனாவுக்கும் இடையே கொழும்புவில் கையெழுத்தான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்துக்கு விடுதலைப் புலிகளின் ஒப்புதலைப் பெறவே இல்லை என்பதுதான் இன்று வரை இருந்து வரும் குற்றச்சாட்டு ஆகும். இது தமிழகத்தில் ஓரளவுக்கு அரசியல் விழிப்புணர்வுள்ள எவருக்கும் தெரிந்த ஒரு சாதாரணச் செய்தியாகும். இது கூடத் தெரியாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்புரையிலேயே இப்படிப்பட்ட செய்தியைக் குறிப்பிடுவது நகைச்சுவைதான். இன்னுங்குறிப்பாக, அவர்கள் உண்மைக்குப் புறம்பான இந்தச் செய்திகளை ராசீவ் காந்தி கொலை வழக்கு அரிதிலும் அரிதான ஒரு வழக்கு என மெய்ப்பிப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

ஆக, ராசீவ் காந்தி கொலை ஒரு பயங்கரவாதச் செயல் அன்று, அரிதிலும் அரிதான கொலையும் அன்று என உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலேயே தெளிவாகத் தெரிந்து விட்ட பிறகு, இந்தத் தீர்ப்பை வேத வாக்காகக் கொண்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்பதும், நளினியை வாழ்நாளெல்லாம் சிறையிலேயே அடைத்து வைத்திருக்க வேண்டும் என்பதும் அடாத செயலாகும், ஈவிரக்கமற்ற அநீதியாகும்.

காவிரிச் சிக்கலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கச் சொல்லி கர்நாடகக் காங்கிரசுக்கு ஆணையிட வக்கில்லாத தில்லி காங்கிரஸ் தலைமை, பெரியாற்று அணைச் சிக்கலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கச் சொல்லி கேரளக் காங்கிரஸ் தலைமைக்குக் கட்டளையிடத் துப்பற்ற தில்லி காங்கிரஸ் தலைமை இப்போது உப்புச் சப்பில்லாத ஓர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வைத்துக் கொண்டு மூன்று தமிழர் உயிரைக் குடிக்கத் துடிப்பதுதான் உண்மையிலேயே சட்டத்துக்குப் புறம்பான காட்டுமிராண்டிச் செயலாகும்.

இப்போது காங்கிரசார் ராசீவ் கொலையின் போது கூடவே இறந்து போனவர்களின் குடும்பத்தினரைக் கூட்டிக் கொண்டு வந்து ஒப்பாரி வைக்கிறார்கள். நாம் அவர்கள் குடும்பத்தினருக்குக் கூறிக் கொள்கிறோம், அன்புத் தமிழர்களே, உங்கள் குடும்பத் துயரத்தில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம். ஆனால் அதற்காக இந்த மூவரின் சாவில்தான் உங்கள் துயரம் தணியும் என்பதில் எந்த ஞாயமும் இல்லை. ஏனென்றால் தனு உட்பட இந்தக் கொலைச் சதியில் நேரடியாக ஈடுபட்ட 12 பேரும் கொலை செய்யப்பட்டு விட்டனர், அல்லது தற்கொலை செய்து கொண்டு விட்டனர். நேரடிக் கொலையாளிகள் எவரும் கிடைக்காத நிலையில்தான் கையில் கிடைத்த 26 பேரையும் தூக்கிலிடுவோமெனப் பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது, அவர்களில் நால்வரை உச்ச நீதிமன்றம் தூக்கிலிடச் சொன்னது. எனவே நேரடிக் கொலையாளிகள் யாரும் பிடிபடாத நிலையில் கிடைத்தவரையாவது தூக்கிலிட முயலும் ஒரு கொடூரப் பேரமே இந்த நீதிமன்றப் படிக்கட்டுகளில் அரங்கேறி முடிந்துள்ளது என்பதை ராசீவ் கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் தயவுகூர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

மகாத்மா காந்திக் கொலை வழக்கு அனைவருக்கும் இன்னும் தெளிவான புரிதலைத் தரும். காந்தியாரைச் சுட்ட நாதுராம் கோட்சே தூக்கில் தொங்கிய கதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தச் சதித் திட்டத்தில் நேரடியாக ஈடுபட்ட கோபால் கோட்சேக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது என்பதை நாம் நினைவுகூர வேண்டும். சிறைத் தண்டனை முடிந்து வெளியே வந்த கோபால் கோட்சே பின்னர் அமெரிக்கப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் அந்தக் கொலைக்கு வருந்தவில்லை எனக் கூறினார். இந்தியாவின் தந்தை எனப்படும் காந்தியடிகளின் கொலைக்கே ஒருவருக்கு மட்டுந்தான் தூக்கு வழங்கப்பட்டது. எனவே ராசீவ் ஒரு பெரிய தலைவர் என்பதற்காகக் குற்றத்தில் நேரடியாகத் தொடர்பில்லாதவர்களும் தூக்கில் தொங்க வேண்டும் எனக் கோருவது எவ்வளவு முரணானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அல்லது காந்தியடிகளை விட ராசீவ் காந்தி இன்னும் உயர்ந்த தலைவர் எனக் கருதுகிறதா காங்கிரஸ்?

இஃதன்னியில், கொலைக் குற்றங்களுக்கு மரணத் தண்டனைகள் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த ஒரு காலக் கட்டத்தில் காந்தியடிகள் போன்ற ஒரு பெருந்தலைவரின் கொலை வழக்கில் ஒரே ஒரு மரணத் தண்டனைதான் வழங்கப்பட்டது. ஆனால் அரிதிலும் அரிதான கொலைக் குற்றங்களுக்கு மட்டுமே மரணத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்னும் கருத்து நிலவுகிற இன்றைய காலக் சூழலில் ராசீவ் காந்தி போன்ற ஒரு பெருந்தலைவரின் (?) கொலைக்கு மூன்று மரணத் தண்டனைகள் வழங்கப்படுமானால் அது எந்தளவுக்குப் பெரிய வரலாற்று முரண் என்பதையும் ஒவ்வொரு மனித நேயரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் தூக்குத் தண்டனைக்குக் கருணை மனு கேட்பதே கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத செயல் போன்றும், சட்ட திட்டங்களுக்குப் புறம்பான குறுக்கு வழி போன்றும் ஒரு தோற்றத்தை காங்கிரசார் உருவாக்கி வருகின்றனர். இதே போன்ற கருத்துகளைக் கூறி சுப்ரமணியசாமி, வழக்குரைஞர் விஜயன் போன்றோர் பிதற்றி வருகின்றனர். நமது நீதிமன்றங்கள் எந்தச் சார்புமற்ற நடுநிலைத் தீர்ப்புகளை எல்லா நேரங்களிலும் வழங்கி விடுவதில்லை என நாம் தெளிவாகக் கண்டோம். இந்தியா போன்ற வருண சாதிப் பின்னணி கொண்ட, ஊழல்கள் மலிந்து போன ஒரு நாட்டில் எந்த ஒரு குற்றத்தையும் அய்யந்திரிபற மெய்ப்பிக்கவியலாது என்கிறார் பேராசிரியர் கிலானி. இந்தக் காரணங்களினால்தான் மக்கள் மன்றங்களுக்கு, அதாவது 161 உறுப்பின்படி சட்டமன்றத்துக்கும், 72 உறுப்பின்படி நாடாளுமன்றத்துக்கும் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை இந்திய அரசமைப்புச் சட்டமே வழங்கியுள்ளது. இந்தச் சட்ட வழிமுறைகளின்படிதான் தமிழர் மூவரும் தூக்குத் தண்டனைக் குறைப்பு கேட்டுத் தமிழக ஆளுனரிடமும், இந்தியக் குடியரசுத் தலைவரிடமும் விண்ணப்பித்துள்ளனர். எனவே இது மிக நேர்மையான, ஞாயமான, சனநாயக வழியாகும்; எவ்வகையிலும் குறுக்கு வழியன்று.

நாம் ஏற்கெனவே கண்டவாறு உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகிய நால்வரும் 1999இல் மரணத் தண்டனை பெற்றனர். இவர்களும் அதே ஆண்டு அன்றைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவியிடம் தண்டனைக் குறைப்பு கேட்டு விண்ணப்பித்தனர். இதன்படி அன்றைய கலைஞர் தலைமையிலான அமைச்சரவை நளினிக்கு மட்டும் தண்டனைக் குறைப்பு அளித்து விட்டு மற்ற மூவர் விண்ணப்பங்களையும் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து அந்த மூவரும் குடியரசுத் தலைவரிடம் தண்டனைக் குறைப்புக் கேட்டு விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பத்தைத்தான் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைப்படி 2011 ஆகத்து 29 அன்று நிராகரித்தார். இடையில் 12 ஆண்டுகள் கழிந்து விட்டன. எந்தக் காரணமுமற்ற இந்தக் காலத்தாழ்வால் மூவரும் ஆயுள் தண்டனையை அனுபவித்து விட்டனர். அவர்கள் கைதாகிய தேதியிலிருந்து கணக்கிட்டால் 20 ஆண்டுகளாக இந்தத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இந்தக் கால இடைவேளையில் இவர்கள் ஒரு நாள் கூட வெளியுலகைக் காணவில்லை.

தூக்குக் கயிறு இன்று வருமா, நாளை வருமா எனச் சாவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி வாடி வதங்கி விட்டனர். ஆங்கிலத்தில் vegetable state என்பார்களே, அப்படியொரு காய்கறி நிலையை இவர்கள் அடைந்து விட்டனர். காய்கறியாய் வாடிப் போன இந்த மூன்று உயிர்களையும் அறுக்க நினைப்பது மரணத் தண்டனையை விட இன்னும் கொடுமையானது. சொல்லப்போனால், இப்படி ஒரு காலத் தாழ்வைச் செய்து இவர்களை வாட்டி வதைத்ததற்கு தில்லி மத்திய அரசுதான் இந்த மூவரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆனால் இதற்கு நேர்மாறாக, எல்லா மனித அறங்களையும் காலில் போட்டு மிதித்து இந்தப் படுபாதகச் செயலைச் செய்வதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு துணிந்துள்ளது.

தில்லியின் இந்தக் கொடுநோக்கு கண்டு பெரும் எழுச்சி கொண்ட நாம் தமிழகச் சட்டமன்றம் மூவர் தூக்குக்கு எதிராகத் தீர்மானம் இயற்றிய பிறகு, சென்னை உயர் நீதிமன்றம் மூவரின் தூக்குக்கு இரு மாதத் தடை விதித்த பிறகு அடங்கிப் போய் விட்டோம் என்பதே உண்மை. ஏற்கெனவே வாடி வதங்கிப் போய் விட்ட அந்த இளைஞர்கள் இரு மாதமில்லை, இனி ஒரு வினாடி கூட சிறைக் கொட்டடியில் இருக்கக் கூடாது. இப்போதே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே நமது உடனடிக் கோரிக்கையாக இருக்க வேண்டும். சரியாகச் சொன்னால், ராசீவ் கொலை வழக்கில் இருபதாண்டுக்கு மேலாகச் சிறைத் துயரத்தை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய எழுவருக்கும் உடனடி விடுதலை வேண்டும் என்னும் முழக்கமே இனித் தமிழக வீதிகளில் ஒலிக்க வேண்டும். 

Pin It