ராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யவேண்டுமென குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கருணை மனுக்கள், நடுவண அரசின் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் நிராகரிக்கப்பட்டுள்ளன. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்முவரும் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படலாம். இச்செய்தி தமிழின உணர்வாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் நிலைகுலையச் செய்துள்ளது.
இவ்வுயிர்களை காப்பாற்றுவதற்கு வழக்கு மன்றத்தில் உள்ள வாய்ப்புகளைத் தேடி முயற்சிப்போர் சிலர். தமிழக அரசு இந்திய அரசியல் சாசனத்தின் உறுப்புரை எண் 161ஐ பயன்படுத்தி, ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறையில் வாடியுள்ள, இந்த உயிர்களை காப்பாற்ற முதலமைச்சர் கருணைகாட்ட வேண்டுமென வேண்டி நிற்போர் பலர். மனித உரிமை கோட்பாட்டின் அடிப்படையில் ”உயிர் வாழ்வதற்கான உரிமை -அடிப்படை உரிமையாகும்”; மரண தண்டனை அவ்வுரிமையை பறித்து விடுகிறது; ஆகவே நமது அரசியல் சாஸனத்திலிருந்தே மரண தண்டனையை அறவே நீக்கவேண்டும் என்று கோரிவரும் மனித உரிமை இயக்கங்களும் ஆர்வலர்களும் மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்தை வலுப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே தமிழின ஆர்வலர்கள் ஆங்காங்கே கூடி தங்களுடைய கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் முகமாக பல்வேறு அடையாளப் போராட்டங்களையும் இயக்கங்களையும், கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுக்க ஒன்று தழுவிய இயக்கமாக இதனைக் கொண்டு செல்லும் முயற்சிகளும் தொடர்கின்றன.
இவை அனைத்தும் மிக மிக அவசரமாகவும் அவசியமாகவும் செய்யவேண்டியவை. ஆனால்.......?
-
கடந்த நான்கு மாதங்களாக தமிழகத்தில், உலகத் தமிழர்களிடையே, இந்திய அரசியல் பரப்பில் ஈழத்தமிழர் தொடர்பாக நடந்துவந்த காட்சிகளை இங்கு தொகுத்துக்கொள்வது தேவை.
-
ஏப்ரல் மாதம் ஐ.நா. நிபுணர்க் குழுவின் இலங்கை அரசு மீதான போர்க் குற்ற அறிக்கை அம்பலத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, உலக நாடுகளில் சில, இலங்கை அரசு மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன;
-
சேனல் 4 ஊடகத்தால் காட்சிப்படுத்தப்ப்ட்ட காணொலிகள் உலகின் மனசாட்சியை உலுக்கியது;
-
இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் போர் குற்றங்களுக்கும் இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டுமென எனவும், இதற்கு இலங்கை அரசை நிர்பந்தப்படுத்தும் வகையில், இந்திய அரசு இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்கவேண்டுமெனவும், தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது;
-
இதனைத் தொடர்ந்து அமெரிக்க உள்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தமிழக முதல்வரை சந்தித்தது;
-
அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசு இலங்கை அரசு மீது தொடுத்துள்ள பொருளாதார அழுத்தம்;
-
போர்க்குற்ற நடவடிக்கைக்கு இலங்கை அரசு மீது மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் எழுந்துள்ள அழுத்தங்கள்;
-
ஹெட்லைன்ஸ் டுடே சேனல் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்குப் பின்னால் இருந்த பூகோள அரசியலையும் போருக்குப் பிறகு உள்ள ஈழத்தமிழர்களின் அவல நிலையையும் திரும்பத் திரும்ப வெளிச்சம் போட்டு காட்டியது;
-
இக்காரணங்களினால் தமிழர்கள் மத்தியில் மட்டுமே பேசப்பட்டு வந்த ஈழத்தமிழர் பிரச்சனை இந்தியாவின் பிற நகரங்களில் - பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் குறிப்பாக தில்லியில் - உள்ள அரசியல் ஆர்வலர்களையும் அரசியல் கட்சிகளையும் உசுப்பியுள்ளது;
-
இறுதியாக, ஈழத்தமிழர்களின் துயரத்திற்கு தீர்வு – ‘தமிழீழம் அமைவது மட்டுமே’ என்ற கருத்து ஒரு வலுவான மனோபாவமாக மாறியுள்ள நிலை....(இதிலிருந்து விலகி நிற்க முடியாத காரணத்தால்தானோ தங்கபாலுவும் தமிழீழம் ஒன்றே தீர்வு என்று கூறுகிறார்!?)
இப்பின்னணியில்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களின் உயிருக்கு நீதிக்கேட்டு கொந்தளித்துள்ளனர். இந்த கொதிப்பு மாபெரும் ஆற்றலாக மாறவேண்டிய தருணம் இது.
ஆனால், நாடாளுமன்றத்தில் இலங்கை அரசு மீதான போர்க்குற்ற நடவடிக்கை தொடர்பான விவாதம் நடத்துவதற்கு நாள் குறித்துவிட்டு அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ”போர் குற்ற நடவடிக்கை” தொடர்பான விவாதம் என்பதை மாற்றி ”இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு” தொடர்பான விவாதம் என்று விவாதப் பொருள் மாற்றப்பட்டிருக்கிறது. இனப்படுகொலை செய்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையின் தீர்மானத்தை அரசியல் இலாபத்திற்காக போடப்பட்ட தீர்மானம் என அவமதித்து அறிக்கை விடுக்கிறார் கோத்தபய்யா இராஜபக்சே. இதனை இந்திய அரசு இதுவரை கண்டுகொள்ளவுமில்லை; கண்டிக்கவுமில்லை.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் இலங்கை அரசின் மீதான நடவடிக்கை சர்வதேச அரங்கில் எடுப்பதற்கு இந்திய அரசு முன்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழக மக்களின் குரலாக தமிழக அரசு முன் வந்திருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் மூவர் உயிரைக் காப்பாற்றுதற்கான இயக்கமும் கட்டமைக்கப்படவேண்டும். ஒன்றரை லட்சம் தமிழர்களின் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க காங்கிரஸ் அரசு முன்வரப் போகிறதா? அல்லது இந்த மூவர் உயிரையும் பறித்து இராசபக்சே அரசின் இனப்படுகொலைக்கு காங்கிரஸ் அரசு தொடர்ந்து துணை நிற்கப் போகிறதா? இதுதான் நாம் உரத்து கேட்க வேண்டிய கேள்வி.
ராஜீவ் கொலைக்கு நேரடி தொடர்பு அற்றவர்களும், நிரபராதிகளானவர்களுமான இம்மூவரின் உயிரை பறிப்பதற்கு எத்தனிக்கிறது காங்கிரஸ் அரசு.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்டால் காஷ்மீர் கொந்தளிக்கும் என முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் எச்சரிக்கிறார். பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூவரின் உயிரைப் பறித்தால் தமிழகம் கொதித்தெழும் என தமிழக முதல்வர் காங்கிரஸ் அரசை எச்சரிக்க வேண்டும்.
ஆம், ஒன்றரை லட்சம் உயிர்களை படுகொலை செய்ததற்கு நீதி கேட்டு ஏழு கோடி தமிழர்களும், உணர்வுள்ள ஜனநாயக சக்திகளும், மனித உரிமை ஆர்வலர்களும் பொங்கி எழவேண்டும். தமிழக முதல்வர் இதற்கு தலைமையேற்க வேண்டும். அதே நேரத்தில் அரசியல் சாசனத்தில் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மூவரின் உயிர்களை கருணையோடு காப்பாற்ற வேண்டும்.
உலகில் 136 நாடுகள் மரண தண்டனையை அடியோடு ஒழித்துள்ளன. மரண தண்டனையை இந்திய நிலப்பரப்பிலிருந்து அகற்றுவது நமது அறைகூவலாக இருந்தாலும், தற்போது தமிழ் மண்ணிலிருந்து அடியோடு நீக்கப்படுவதற்கு தமிழக முதலமைச்சர் முன்வரவேண்டும். இதன் வழி உலகத் தமிழர் மற்றும் மாந்தநேய உலக வரைபடத்தில் நீங்காத இடம்பெற வேண்டும். ஈழத்தமிழர்களுக்கான நீதியின் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்!