பொதுமக்களே!

கயிறு வாங்கி மேடை போட்டு நாள் குறித்து உலகிற்கே அறிவித்துத் தமிழர்களைப் பச்சை படுகொலை செய்ய முயற்சி செய்கிறது இந்திய அரசு. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்து, கொடூரமாக‌ சித்திரவதை செய்து உளவுத்துறையினரே எழுதிக் கொண்ட ஒன்றை இம்மூவரின் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லி, வேறு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் நீதியின் பெயரால் ஒரு அநீதி வழங்கப்பட்டு மூன்று தமிழர்கள் 21 ஆண்டுகாலம் சுருக்கு கயிற்றுக்குக் கீழே தனிமைச் சிறைக் கொட்டடியில் தங்கள் வாழ்நாளைக் கழித்தபின் இப்போது கயிறு இழுக்க நாள் குறிக்கிறது இந்திய அரசு.

1987 -ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படை என்ற பெயரில் ஆக்கிரமிப்பு விரிவாதிக்கவெறி கொண்ட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் ஏவி விடப்பட்ட அராஜகப்படை ஈழத்தில் 6000 அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்தது. 2000 –க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்தது. திலீபனின் மாபெரும் தியாகத்தால் சர்வதேச அரங்கத்தில் அம்பலப்பட்டுபோன (சோனியா) காந்தி - தேசம் மேலும் தனது இராணுவ பலாத்காரத்தை (பயங்கரவாதத்தை) ஏவி விடுவதன்மூலம் ஈழ மக்களின் விடுதலைத் தீயை அணைக்க நினைத்தது. ஆனால் விடுதலை மீது தீராத வேட்கை கொண்ட தமிழ் ஈழ மக்களின் போராட்டத்தால் உலகின் நான்காவது பெரிய இராணுவம் பின்னங்கால் பிடறிபட இந்தியா திரும்பியது.

அன்று தொடங்கிய ஆக்கிரமிப்பு விரிவாதிக்க இந்திய அரசின் தமிழர் எதிர்ப்புஅரசியல் பேரினவாத சிங்கள அரசுடன் கைகோத்து 2009 -ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் ஒன்றரை இலட்சம் தமிழரின் இரத்தம்குடித்த பின்னும் இந்திய அரசு தனது இரத்த வெறி அடங்காமல் முருகன், சாந்தன், பேரறிவாளனைத் தூக்கிலிட நாள் குறித்திருக்கிறது. 

சோனியா, மன்மோகன் கும்பல் தலைமையிலான இந்திய அரசின் இத்தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து மூன்று தமிழர் உயிர் காக்கத் தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டம் நடந்து வரும் தருணத்தில் தனது உயிரை ஆயுதமாக்கித் தமிழ் மக்கள் மனங்களில் விடுதலைத் தீயைக் கொழுந்து விட்டெரியச் செய்திருக்கிறார் தோழர்செங்கொடி!

மிகவும் பின்தங்கிய இருளர் பழங்குடிச் சமூகத்தில் பிறந்த தோழர் செங்கொடி சிறுவயதிலேயே 'காஞ்சி மக்கள் மன்றத்தில்' தன்னை இணைத்துக் கொண்டு, தனது போர்க்குணமிக்க போராட்ட வாழ்க்கையைத் தொடங்கியவர். ஆண்டாண்டு காலமாய்க் கொத்தடிமைகளாய் இருக்கும் இருளர் மக்களை மீட்டெடுப்பதிலும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலும், பெண்கள் விடுதலைக்கான போராட்டத்திலும், கொலைகாரச் சங்கரமடக் கும்பலுக்கு எதிராகவும், கோயில் கருவறைக்குள்ளேயே தனது பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றிய பார்ப்பனர்களுக்கு எதிராகவும் சமரசமற்ற போராட்டங்களிலும் 'காஞ்சி மக்கள் மன்றத்தின்' முன்னணி ஊழியர்களில் ஒருவராய் இருந்தவர் தோழர் செங்கொடி. தமது பாட்டு ஒலியாலும், பறைஒலியாலும் தமிழக மக்களை விடுதலைப் போராட்டத்திற்கு அறைகூவி அழைத்த செங்கொடி இன்று தமிழக மண்ணில் தன்னையே விதையாக்கி இருக்கிறார். 

'இந்திய அமைதிப்படை' தனது அட்டூழியங்களை ஈழத்தில் நிகழ்த்தியதற்கு எதிராக அங்கே 'மாவீரர்' திலீபன் தமது உயிரை ஆயுதமாக ஏந்தியபோது தாய்த்தமிழகத்தில் நாம் அணியணியாய்த் திரண்டு இந்திய துரோகத்திற்கு எதிராய்ப் போராடினோம். 2009ல் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது தடுத்து நிறுத்தக் கோரி முத்துக்குமார் உள்ளிட்ட 16 தாய்த் தமிழக மக்கள் வீரமரணம் எய்தினர். அப்பொழுது தமிழகத்தில் எழுந்த எழுச்சியை அரசு ஒருபுறம் அடக்குமுறையை ஏவியும், மறுபுறம் நயவஞ்சகச் சூழ்ச்சியின் மூலமும் அடக்கியது. ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களைப் பலி கொடுத்தோம். இன்று அங்கே இலட்சக்கணக்கான தமிழீழ மக்கள் உறவுகளற்று, உடைமைகளற்று, தாய்மண் இழந்து முள்வேலி முகாம்களுக்குள் அன்றாட உணவிற்குத் தன்மானம் இழந்து கையேந்தி நிற்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

இன்று சர்வதேச சமூகத்தின் முன் தமிழ்ச்சமூகம் இனப்படுகொலைக்கு நீதிகேட்டுப் போராடி வரும் தருணத்தில் ஐ.நா சபையின் குற்றவாளிக் கூண்டில் நிற்கப்போகும் சிங்களப் பேரினவாத அரசைக் காப்பாற்றத் துடிக்கும் இந்திய அரசு 21 ஆண்டு காலம் கழித்து மூன்று தமிழர்களின் கழுத்தில் சுருக்குக்கயிறு மாட்டி உலகத் தமிழர்களை மிரட்டுகிறது. இத்தனை ஆண்டுகளாக ஈழ மண்ணில் நிகழ்ந்த கொலை வெறியாட்டத்தை இன்று தாய்த் தமிழகத்தில் நிகழ்த்த விரும்புகிறது இந்தியா.

நூற்றாண்டு காலமாய் சுயமரியாதைக்காகப் போராடியது தமிழ்ச் சமூகம். பிச்சை கேட்டுப் பெறுவதல்ல விடுதலை! அதனால்தான் 'மாவீரர்கள்' திலீபன், முத்துக்குமார் வரிசையில் தோழர் செங்கொடி தமது உயிரை ஆயுதமாக ஏந்தி, தமிழக மக்களை ஒன்றுதிரட்டியிருக்கிறார். 

இந்திய அரசே! தமிழர் ரத்தம் குடிக்கும் காங்கிரசே!
நாங்கள் கேட்பது மூன்று தமிழர் உயிர் பிச்சையல்ல!
எம் இனத்தின் அரசியல் உரிமை!

மூவர் உயிரைக் காவு கேட்கும் இந்தியாவே!
1987-இல் 6000 ஈழத்தமிழர்களைக் கொன்ற ராஜீவ்காந்தியிடம் யார் நீதி கேட்ப்பது?
2009-இல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேரைக் கொன்ற சோனியாவிடம் யார் நீதி கேட்பது?

சிங்கள இறையாண்மையின் பெயரால் தமிழர் ரத்தம் குடிக்கும் இந்தியாவே! நீ எங்கள் தாய்நாடா?

இனமா? நாடா? எதை நாங்கள் பாதுகாப்பது?

நீ கொல்வதைத் தொடர்வாய் என்றால், எமது உரிமையைக் கொல்வாய் என்றால், எம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

எம் இனத்தைப் பாதுகாக்க ஒரு நாடு வேண்டாமா?

நீயே பதில் சொல்! இந்தியாவே, நீயே முடிவு செய்!

ஓராயிரம் போராட்டம், ஓராயிரம் குரல்கள் தமிழர் உயிர் காக்க உன்னிடம் கோரியதே? அப்போதெல்லாம் உன் அமைச்சர்களும் காங்கிரசுக்காரர்களும் “ஈழத்தமிழர்களைப் பாதுகாப்போம்” என்று சொல்லியே எங்களை ஏமாற்றினார்களே!

நீயே முடிவு சொல்! எங்களை நாங்கள் எப்படி பாதுகாத்து கொள்வது? என்று!

- தமிழ்நாடு மக்கள் பேராயம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It