இந்திய முதலாளி வர்க்கத்தின் முன்னணி பொருளாதார இதழ்களில் ஒன்றான தி எக்னாமிக் டயம்சு அண்மையில் "வேளாண்மை கருத்தரங்கு 2015" நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த கருத்தரங்கின் அறிக்கைகள், வேளாண்மையில் முதலாளித்துவப் போக்கை வளர்க்க ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த முதலாளி வர்க்கம் கொண்டுள்ள திட்டத்தைப் பிரதிபலிக்கிறது. வேளாண்மையில் முதலாளித்துவத்தின் ஊடுறுவல் 1960 களில் அரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு உத்திரப் பிரதேசத்தில் பசுமைப் புரட்சியில் துவங்கியது. அது தெற்கு, கிழக்கு, மேற்கு என நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இது கடந்த இருபது ஆண்டுகளில் சீராக அதிகரித்து வந்திருக்கிறது. பெரிய ஏகபோக நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் அடிப்படையில் நடைபெறும் முதலாளித்துவ வேளாண்மை, டிராக்டர்கள், பிற இயந்திரங்கள் மற்றும் உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி அதிவிரைவாக வளர்ந்து வருகிறது.

உணவைப் பதப்படுத்தும் துறையில் இந்தியாவில் இருக்கும் இலாபத்திற்கான பெரும் வாய்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென இந்திய மற்றும் அயல்நாட்டு பெரிய நிறுவனங்களிடையே மிகுந்த ஆர்வம் இருக்கிறது. வேளாண்மைத் துறையின் எதிர்காலத்தை, "வளர்ச்சி நிறைந்ததாகவும், உற்பத்தி திறன் மிகுந்ததாகவும், போட்டியுள்ளதாகவும், பல்வேறு கூறுகளைக் கொண்டுள்ளதாகவும், தொடர்ந்து நீடிக்கக் கூடியதாகவும்" உள்ள பொருளாதாரத் துறையாக, ஒரு வண்ணமயமான காட்சியை இந்திய முதலாளி வர்க்கம் தீட்டுகிறது. ஆனால், உற்பத்தியாளர்களில் ஒரு பெரும் பிரிவு - உழவர்கள் முறையாக சீரழிக்கப்பட்டு, பெருந்துன்பங்களுக்கும் சாவுக்கும் தள்ளப்படுகின்றனர்.

உற்பத்தியிலிருந்து கொள்முதல் வரையிலும், பண்ணையின் வாயிலிருந்து அவர்களுடைய பெரிய சில்லரை கடைகள் வரையிலும், உலக சந்தை வரையிலும் இந்தத் துறையில் பெரிய அளவில் தடம் பதிக்க வேண்டுமென இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகள் ஆர்வம் கொண்டிருக்கின்றனர். இதற்காக அவர்கள், ஒப்பந்த வேளாண்மையைத் தீவிரமாக நுழைத்தும், திட்டமிட்ட முறையில் அரசு அல்லது அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மிச்சமுள்ள கொள்முதலை ஒழித்துக்கட்டியும், வேளாண்மை விளை பொருட்களை கொண்டு செல்வதில் உள்ள தடைகளை உடைத்தும், வேளாண்மைப் பண்டங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளை அகற்றியும் வருகின்றனர்.

இந்தக் கொள்கை நடவடிக்கைகளோடு, முதலாளி வர்க்கம் நடத்திவரும் மிகப் பெரிய கருத்தியல் தாக்குதலானது, கடந்த 10 ஆண்டுகளாக வேளாண்மையில் வளர்ச்சியானது 5% த்திற்கும் குறைவாக இருந்து வருகிறது, ஏனெனில் வேளாண்மையில் முதலாளித்துவ ஊடுறுவலுக்கு உள்ள தடைகள் என்பதாகும். உழவர்களின் வளமைக்கான வாய்ப்பு, முதலாளித்துவ வேளாண்மையில் இருப்பதாக முதலாளி வர்க்கம் கூறிக் கொள்கிறது.

வேளாண்மை அதிக அளவில் வணிகமயமாக்கப்பட்ட கடந்த இருபது ஆண்டுகளில், பேரழிவையும், நாசத்தையும் சந்தித்து வரும் கடுமையாக உழைக்கும் இந்திய உழவர்களை இது கொடூரமாக கேலி செய்வதாகும். இந்தியாவின் 2011 புள்ளிவிவரங்களை, 2001 உடன் ஒப்பிடுகையில் நாட்டிலுள்ள உழவர்களுடைய எண்ணிக்கை 90 இலட்சம் குறைந்திருக்கிறது. 1997 இலிருந்து 3 இலட்சம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் பலர் பொருளாதார துன்பங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர் அல்லது, கடன் சுமை காரணமாக வேளாண்மையை விட்டுவிட்டனர். இந்த வருடங்களிலும் அல்லது வேளாண்மை வளர்ச்சி 5%-க்கும் அதிகமாக இருந்த ஆண்டுகளிலும் (2007-08 இல் 5.8% மாகவும், 2010-11இல் 8.6% மாகவும் இருந்திருக்கிறது) பெரும் எண்ணிக்கையிலான உழவர்கள் அதிக அளவில் அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பது மறைக்கப்படுகிறது.

உணவு உற்பத்தியாளர்களுக்கு ஒரு தரமான வாழ்க்கைத் தரத்தையும், மக்களுக்கு உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யக்கூடிய வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு வேளாண்மை வளர்ச்சித் திட்டம் இந்திய முதலாளி வர்க்கத்திற்கு எப்போதுமே இருந்ததில்லை என்பது உண்மையாகும். எனவே தான், பாசனத் திட்டங்களுக்கும், உழவர்கள் ஆதரவுக்கும் 5 ஆண்டுத் திட்டங்களில் அதிக ஒதுக்கீடு இருந்துங்கூட, 70% வேளாண்மை நிலங்கள் மழையை நம்பியிருக்கின்றன. சிறுபான்மையான பணக்கார உழவர்கள் மட்டுமே தேவைப்படும் நீர் வேறு ஆதாரங்கள் மூலம் பெறுகிறார்கள். பசுமைப் புரட்சியின் மூலம், வேளாண்மையில் முதலாளித்துவப் போக்கை நோக்கி முதலாளி வர்க்கம் ஒரு உறுதியான அடியெடுத்திருக்கிறது.

ஒரு பக்கம், முதலாளித்துவ வேளாண்மையின் கீழ் ஒரு சிறுபான்மையானவர்கள் செழிப்படைந்து வருகிறார்கள். அதே நேரத்தில் பெரும்பான்மையான உழவர்கள் கட்டுப்படியாக முடியாத சிறிய நிலவுடமை அளவில் செயல்பட்டு வருகின்றனர். மொத்த நில உடமைகளின் எண்ணிக்கையில்  2 ஹெக்டேருக்குக் குறைவான அளவில் நிலப்பரப்பு கொண்டுள்ள சிறிய, நடுத்தர உழவர்கள் 86% மாக உள்ளனர். ஆனால் இது மொத்த வேளாண்மை நிலப்பரப்பில் வெறும் 42% மாக இருக்கிறது. சிறிய, நடுத்தர உழவர்களின் முக்கிய பிரச்சனைகளில், தரமற்ற இடுபொருட்களின் வினியோகம், நிறுவனங்கள் அளிக்கும் கடன் போதாமல் இருப்பது, அதிக வட்டி விகிதம், உற்பத்தி மற்றும் விற்பனை அபாயங்கள் ஆகியன அடங்கும். இவற்றின் காரணமாக, அதிர்ச்சிகள் அதிக அளவில் தாக்கும் நிலையில் இந்த உழவர்கள் இருக்கின்றனர். சந்தையையொட்டிய வேளாண்மையில், விளைபொருள்களுடைய நிலையற்ற ஏற்றத்தாழ்வான விலைகள் அதிக அபாயங்களை ஏற்படுத்துகின்றன. இடுபொருட்களின் அதிக விலைகளும், உழவர்களுடைய இலாபத்தைக் கடுமையாக பாதிக்கின்றன. இவை மட்டுமின்றி, இயற்கை சார்ந்த வரட்சி, அதிகமான அல்லது பருவம் தவறி பெய்யும் மழை, பூச்சிகளின் தாக்குதல் ஆகியவையும் அபாயங்களாகும். எடுத்துக் காட்டாக, பெரிய அளவிலான உழவர்களைக் காட்டிலும் சிறிய உழவர்களின் பலவீனமான பேரம் பேசக்கூடிய சக்தியாலும், பொருட்களை சேமித்து வைத்திருப்பதற்கான திறமை குறைவாக இருப்பதாலும், அவர்களுடைய விளை பொருட்களுக்கு கிடைக்கும் விலைகள் குறைவாக இருக்கின்றன.

வீழ்ச்சியடைந்து வருகின்ற வருவாயும், அதிகரித்து வருகின்ற மருத்துவ சுகாதார செலவுகளும், அதிக அளவில் கடன் வாங்குவதற்கு உழவர்களைத் தள்ளி வருகிறது. தொடர்ந்து அதிகரித்துவரும் கடன்களில் உழவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். இந்திய அரசாங்கம் அண்மையில் நடத்திய சமூகப் பொருளாதார கணக்கெடுப்பின்படி, 75% கிராமப்புறக் குடும்பங்களில் மாதத்திற்கு ரூ 5000-க்கு மேல் சம்பாதிப்பவர்கள் ஒருவர் கூட இல்லை. வேளாண்மைக் குடும்பங்களின் வருவாய் குறைந்து வருவதும், வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்து வருவதும், உழவர்களின் சீரழிவுக்குக் காரணமாகும்.

வேளாண்மை வளர்ச்சியை ஊக்குவிக்க, இலட்சக் கணக்கான உழவர்களுடைய எதிர்காலத்தை விலையாகக் கொடுத்து, வேளாண்மையில் "அதிக" முதலாளித்துவத்தைக் கொண்டுவர வேண்டுமென இந்திய முதலாளி வர்க்கம் பேசி வருகிறது. உற்பத்தியாளர்களுடைய வளத்தோடும், நல்வாழ்கையோடும், கார்கில், பேயர், மோன்சான்டோ ஆகியவற்றின் நலன்கள் இணைந்து செல்வதில்லை. மாறாக, முதலாளித்துவ வேளாண்மையானது மிகவும் இரத்தம் உறிஞ்சுவதாகவும், இயற்கை வளங்களையும், இந்த வளங்களிலிருந்து செல்வத்தை உருவாக்குபவர்களையும் அழிப்பதாகவும் இருக்கிறது. மிகப்பெரிய முதலாளித்துவ ஏகபோகங்களுடைய இலாபத்தை அதிகரிப்பதும் மட்டுமே முதலாளித்துவ உற்பத்தியின் உந்து சக்தியாக இருக்கிறது. இந்த அமைப்பில் உழவர்களுக்கு எந்த எதிர்காலமும் இல்லை. எனவே, வேளாண்மையில் முதலாளித்துவ அமைப்பைத் தீவிரப்படுத்த வேண்டுமென முதலாளி வர்க்கம் முன்வைக்கும் தீர்வுகள், உழவர்களுடைய கழுத்தைச் சுற்றியிருக்கும் தூக்குக் கயிற்றை இறுக்கவும், அவர்களுடைய மூச்சை நிறுத்தி மேலும் சாவுக்கும் வழிவகுக்கும்.

அவ்வப்போது செய்யப்படும் ஒரு கொள்கை மாற்றத்தால் இந்த உண்மையை மாற்ற முடியாது. அண்மைக் காலத்தில் பருப்புகளுக்கு அறிவிக்கப்பட்டதைப் போல, மாறிமாறி வந்த அரசாங்கங்கள் அவ்வப்போது குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்து வந்திருக்கின்றனர். இடுபொருட்களுடைய விலைக்கு எந்த ஆதரவும் இல்லாமல், கொள்முதல் செய்யப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லாமல், பெரும்பான்மையான உழவர்களுக்கு எவ்வித பயனும் இல்லை.

உற்பத்தியாளர்களின் நலன்களையும், உழைக்கும் மக்களுடைய ஊட்டச் சத்துகளுடைய தேவைகளையும் நிறைவேற்ற வேளாண்மை உற்பத்தி மற்றும் விளைபொருட்களின் வினியோகத்தின் மீது முழு சமூகக் கட்டுப்பாடு அவசியமாகும். இதற்கு எல்லா உணவு தானியங்கள், காய்கறி வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு என உழவர்கள் உற்பத்தி செய்யும் அனைத்தையும் உத்திரவாதமான விலைகளில் கொள்முதல் செய்வது அவசியம். இதற்கு மொத்த வணிகமும், வினியோகமும் பொது உடமையின் கீழ் இருப்பது தேவை. இதற்கு, விதைகள், உரங்கள், தண்ணீர், மின்சாரம்  என தரமான இடுபொருட்கள், எல்லா உற்பத்தியாளர்களுக்கும் கட்டுபடியாகக் கூடிய விலையில் கிடைப்பதற்கு உத்திரவாதமான வினியோகம் தேவை. இவையனைத்தும், முதலாளித்துவத்தின் கீழ் கிடைக்காது என்ற முடிவுக்கு உழவர்கள் தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து வர வேண்டும். எனவே, வேளாண்மையில் முதலாளித்துவத்தின் பங்கை விரிவடைய விடாமல், தொடர்ந்து குறைத்துக் கொண்டே வரவேண்டுமென தொழிலாளி வர்க்கம் கோருகிறது.

தேவை என்னவென்றால், தொழிலாளி வர்க்கத்தோடு உழவர்கள் கூட்டாக இந்த சுரண்டலான அமைப்பை முடிவுக்குக் கொண்டுவர போராட வேண்டும். உற்பத்தியிலிருந்து, வணிகம் வரை, உற்பத்தியாளர்களுடைய நலன்களை நிறைவேற்றவும், கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் உள்ள தொழிலாளர்களுடைய ஊட்டமான உணவுத் தேவையைப் போதுமான அளவிற்கு வழங்கும் வகையில் அமைப்பு திருத்தியமைக்கப்பட வேண்டும். உழவர்களை விடுவிக்கவும், ஒரு செழிப்பான, உற்பத்தித் திறன் நிறைந்த, நீடித்து நிலைக்கக் கூடிய வேளாண்மையை உறுதிப்படுத்தவும் இது மட்டுமே ஒரே வழியாகும்.

Pin It