கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

periyar 350ருஷியாவில் 1917ல் நிகழ்ந்த புரட்சிக்குப் பின்னர் அந்நாடு உலக மக்களின் கவனத்தைப் பெரிதும் தன்பால் இழுத்துக்கொண்டது. சமதர்ம நோக்கமுடைய ஆன்றோர்களும், பொருளாதார நெருக்கடியால் கஷ்டப் படும் ஏழை மக்களும் ரஷ்ய சமதர்மத் திட்டத்தின் நுண் பொருளை நன்குணர்ந்து தத்தம் நாடுகளிலும் அத் திட்டங்களைப் புகுத்தி மிகுந்த தீவிரமாய் ஒரு பக்கம் பிரசாஞ் செய்துவர, ஊரார் உழைப்பில் உடல் நோவா துண்டு வாழும் சோம்பேறிச் செல்வவான்களும் அவர்களின் தரகர்களான புரோகிதர்களும், அவர் தம் பத்திரிகைகளும் முதலாளித்துவ அரசாங்கமும் சமதர்ம உணர்ச்சியை ஒழிக்கப் பற்பல சூழ்ச்சி முறைகளையும், மிருகத்தனமான பயங்கர ஆட்சி முறையையும் கையாண்டு வருவதும் ருஷியாவைப்பற்றிப் பொய்யும் புழுகுமான வியாசங்களை உலமெங்கும் பரப்பி அந்த ஆட்சி முறையை பலவாறு குற்றஞ் சொல்லி அங்கு பட்டினியும், பஞ்சமும் நிறைந்திருக்கின்றனவென்று கூறியும் வேறு பல தீயமுறைகளைக் கையாடி வரு கின்றனர். ருஷியாவின் சமதர்மக் கொள்கை ஒரு பொழுதும் நடைமுறையில் சாத்தியமாகாது என்று புகன்ற ராஜ தந்திரிகளும், ருஷியாவில் தனியுடைமை யழிந்து பொதுவுடைமை மிளிர்வதால் அங்கு மக்களின் முயற்சியும், அறிவும் குன்றி உற்பத்திகள் குறைந்து போய்விடும் என்று தர்க்க ரீதியாய் மொழிந்த பொருள் நூலாசிரியர்களும் தங்கூற்றுத் தவரொன்று தானே இன்று ஒத்துக்கொள்ளும்படி செய்து விட்ட தோடு ஐரோப்பிய வல்லரசுகளெல்லாம் ரஷியாவை அலட்சியம் செய்து வாழ முடியாத நிர்பந்தத்திற்குள் வந்து விட்டதென்பதை எவரும் மறுக்க முடியாது.

ரஷிய சமதர்மத் திட்டமோ இன்னும் முற்றுப் பெறவில்லை. உலக மெங்கும் சமதர்ம ஆட்சியாய் விளங்குங் காலத்திலே சமதர்ம ஆட்சியின் திட்டம் வெற்றி பெறுமென்று கூறலாம். இப்பொழுது ரஷியா உலகத்திலுள்ள முதலாளித்துவத்தோடு போரிட்டுக் கொண்டிருக்கிறதென்றே கூறவேண்டும். அப்போரில் தமது எதிரிகளை நிர்த்தாக்ஷண்யமாகத் தண்டித்து வருவதை நியாய புத்தியுள்ள எவரும் தவறென்று கூறத் துணியார்.

ரஷியாவில் மனிதனுக்கு சுதந்தரம் அதிக மில்லையென்று கூறப்படுகிறது. தனிமனிதனுடைய சுதந்திரத்திற்குப் போதிய இடமிருப்பதாகக் கூறப்படும் நாட்டிலுள்ள மக்களைவிட ரஷ்ய மக்களுக்கு அந் நாட்டில் அதிக சுதந்திரமும் உரிமையு மிருப்பதோடு ஜார் சக்கரவர்த்தியின் கொடிய ஆட்சியில் உண்ண உணவும், உடுக்க உடையும், ஒண்ட நிழலும், படுக்கப் பாயுமின்றி கோடானுகோடி மக்கள் தவித்து ஆயிரக் கணக்காய்-இல்லை-லட்சக்கணக்காய் பட்டினியாலும் நோயாலும் மடிந்த ரஷியா நாட்டிலே பட்டினி யென்றால் இன்னதென்பதை எவருமறியாதபடி, நோய் என்றால் இன்னதென்பதை உணராத படியும் நாளைக்கு உணவிற்கு என்செய்வது, வியாதியால் இரண்டு நாள் படுத்துக்கொண்டால் நமது நிலையென்ன? நமது குடும்பத்தின் கதியென்ன? என்றகவலையே அறியாத மக்களாய் வாழும்படி செய்து நாடெங்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்திருக்கும்படி இச்சுருங்கிய காலத்திற்குள் சோவியத் ஆட்சி செய்து உலகத்திலுள்ள எல்லா முதலாளித்துவ அரசாங்கங்களும் திடுக்கிடச் செய்து விட்டதென்பதை நன்கு அறியலாம்.

ஐந்து ஆண்டு திட்டம்

பஞ்சத்தாலும் கொடுங்கோன்மையினாலும் பொருளாதார நிலையிற் மிக மிகக் கேவலமாயிருந்த ரஷியாவை உன்னத நிலைக்குக் கொண்டுவர சோவியத் ஆட்சியினர் 5 வருடத்திட்டமொன்று தயாரித்து ஐந்து ஆண்டுகளுக்குள் இன்னின்ன வேலைகளைப் பூர்த்தி செய்துவிட வேண்டுமென்று திட்டம்போட்டுக் கொண்டு வேலை ஆரம்பித்தனர். வேலையற்று, கொள்ளையும் விபசாரமும் புரிந்து வந்த மக்களெல்லாம் தொழில் முறையில் ஈடுபட்டு தங்களின் துர்செயலை ஒழித்து நாட்டின் நலனைக் கோரி உழைக்க ஆரம்பித்து விட்டனர். பொருள் உற்பத்தி ஐந்து வருடத் திட்டத்தில் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றிபெற்று விட்டது. தங்கள் ஆட்சி முறையைப் பற்றி பெருமைபேசிக் கொண்டு கர்வம்கொண்ட ஐரோப்பாவும், அமெரிக்கா வும் உலக வர்த்தகத்தில் ரஷியப் போட்டியை எதிர்த்து போராட முடியவில்லை. உலகத்து மார்க்கட்டி லெல்லாம் ரஷியக் கோதுமை போய் மோதி உலக பொருளாதார உற்பத்தி ஸ்தானங்களையெல்லாம் திடுக்கிடுக்கும்படி செய்து விட்டது.

‘பசி வந்திடப் பத்தும் பரந்துபோம்’ என்னும் பழமொழியைப் போல் பசியால் வாடும் மக்களிடம் சுதந்திரம், உரிமை முதலியவைகளைப் பற்றி கதை கூறுவதில் பயனென்ன? பட்டினியால் வாழும் மக்களுக்கு முதலில் கொடுக்க வேண்டியது வயிறு நிரம்பும்படி ஆகாரந் தான் கொடுக்க வேண்டுமென்ற உண்மையை சோவியத் அரசாட்சி அறிந்து கொண்டதோடு தனி சொத்துரிமையை ஒழித்து பொது உடமையை மேற்கொண்ட தங்கள் ஆட்சிக்கு பிற தேசம் உணவுப் பொருளைக் கொடுத்து ஒரு பொழுதும் உதவி செய்யாது என்பதையும் நன்கறிந்து 5 வருடத் திட்டத்தில் உணவுப் பொருள்களைப் பெருக்குவதைப் பிரதானமாகக் கொண்டனர். ஐந்து வருடத்திற்குள் இத்தனை டன் கோதுமை, இத்தனை டன் பாரம் பருத்தி, இவ்வளவு யந்திரங்கள், இவ்வளவு ஆடுமாடுகள், இவ்வளவு தொழிற்சாலைகள் உற்பத்தியாக வேண்டும், இத்தனை மாணவர்களுக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டு மென்று திட்டம் போட்டு வேலை ஆரம்பித்தார்கள். நான்கு வருடத்திலே ஐந்து வருடத் திட்டத்திற் கண்ட பெரும்பாலானவைகள் பூர்த்தியாகி விட்டதால் திட்டத்தை அதிகப்படுத்தி வேலை செய்தனர். இதன் விபரமெல்லாம் அரசாட்சியாரால் வெளியிடப் பட்டிருக்கும் சோவியத் ஆட்சியின் பொருளாதார நிலை என்னும் நூலில் விரிவாய்க் காணலாம். இத்திட்டத்தின் வெற்றியைக் கண்டு இத்தகைய திட்டங்களை ஏற்படுத்தி தாங்களும் வேலை செய்யலாம் என்பது பற்றி பற்பல அரசாங்கங்களும் யோசித்து வருகின்றன.

ஒவ்வொரு நாடும் இத்தகைய திட்டம் போட்டு வேலை ஆரம்பித்தால் உலகிலே தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தியாகி, உற்பத்தியான பொருள்கள் விலையாகாமல் பலவிதத் தொல்லைகள் ஏற்படுவது நிட்சயம். இதையே ரஷியாவும் எதிர்பார்க்கின்றது. தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தி செய்ய மனிதனுக்கு சக்தி இருக்குமானால் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளி அரை வயிற்றிற்கும் சோறு கிடையாது தவிப்பதன் காரணமென்ன என்பதை ஏழைமக்கள் நினைக்க முற்படுவர். அப்பொழுது தான் முதலாளிகளும், முதலாளித்துவ அரசாங்கங்களும் தங்களை எப்படி வஞ்சித்து ஏழைகள் பட்டினியினால் தியங்கும்படி செய்கிறார்கள் என்பதின் உண்மை வெள்ளிடை மலையெனத் துலங்கும்.

ருஷிய சமுதாய அமைப்பு

உலகத்திலே இன்று நிகழ்ந்து வரும் முறைகளென்ன? கோடிக்கணக்கான மக்கள் தினசரி 8 மணிநேரம், 10 மணிநேரம் வேலைசெய்து வருகின்றார்கள். இதன் பலனை முதலாளி வர்க்கத்தினர் அனுபவித்து வருகின்றனர். இதனால் பெறும் பொருளை என்ன செய்வதென்று முதலாளிகள் அறியாது மனிதனுக்கு அவசியமில்லாத பல தேவைகளை உண்டாக்கிக்கொண்டு வருகின்றார்கள். உதாரணமாக ஒரு மனிதன் ஏறிச் செல்ல ஒரு குதிரை பூட்டிய வண்டி போதுமானது. தன்னிடத்தில் ஏராளமான பணமிருக்கிறது என்ற திமிறினால் அதே வண்டியில் 2 குதிரை, 4 குதிரை, 6 குதிரை பூட்டி யோடும் படியான வண்டியைச் செய்து அதற்கென்று பல மனிதர்களை குறைந்த சம்பளத்தில் வேலையாளாக வைத்துக் கொள்கிறான். உண்மை யான உணவுப் பொருளை உண்டாக்கவேண்டிய பல மனிதர்களை தனக்காக உபயோகித்துக் கொள்கிறான். இவன் தன் அவசியத்திற்கு மேற்பட்ட குதிரை களை உபயோகித்துக் கொள்வதால் குதிரை விலை அதிகமாய் விடுகிறது. இவன் பணக்காரனாவதற்கு உழைத்து உழைத்து தன் உடலைக் கெடுத்து, ஒண்ட இடமின்றி தெருவில் கூடுதலால் கஷ்டப்பட்டுக்கொண்டு படுத்துறங்கும் தொழிலாளி குதிரை வாங்கப் பணமில்லாது மாடு போல் தனது வேலைகளுக்கு தனது வண்டியைத் தானே இழுக்கவேண்டியதிருக்கிறது. பணக்காரன் வண்டியில் பூட்டிய தேவைக்கு அதிகமான குதிரை ஒன்றை இந்த வண்டியில் பூட்டினால் தொழிலாளிக்கு எவ்வளவு உதவியாயிருக்கும். இதன் நுண் பொருளை ஆய்ந்துதான் ரஷ்ய சமதர்மம் ஆட்சி அமைக்கப் பட்டிருக்கிறது.

பொதுவுடமைத் தத்துவம்

உலகிலேயே உற்பத்தி செய்யும் செல்வத்திலே உற்பத்தி செய்துவரும் தொழிலாளிக்கு சரிசமமான பங்கு கிடைத்திருந்தால் உலகிலே இன்று காணக்கிடக்கும் பொருளாதார நெருக்கடியும் வேலையில்லாத் திண்டாட்டமும் உண்டாயிராதென்பதே பொது உடமை இயக்கத்தினரின் எண்ணம்.

ரஷிய பொது உடமை முறை உலகிலுள்ள ஏனைய நாடுகளும் பின்பற்றி தொழில் உற்பத்தியை அதிகப் படுத்தினால் தொழிலாளியினுடைய உண்மையாண நிலை வெளிப்பட்டுவிடும். உழைப்பதற்கென்று ஒரு வகுப்பும் அதன் பலனை அனுபவிப்பவர் என்றே மற்றொரு வகுப்புமின்றி எல்லோரும் உழைக்க வேண்டுமென்று எல்லா அரசாட்சியாரும் சட்டம் செய்து விட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் உழைத்து விட்டு உலகிலே தன் உணவிற்கு வேண்டியதைச் சம்பாதித்துக் கொண்டு இன்பமாய் அமைதியோடு வாழமுடியும்.

பொதுவுடமை என்றால் என்ன?

“எல்லா உயிர்ப் பிராணிகளுக்கும் பொதுவாகவுள்ள இந்த உணவுப் பிரச்சினை தீர்ந்து விட்டால் மக்கள் தங்களிடமுள்ள மனிஷீகத் தன்மையை விருத்தி செய்து கொள்ளமுடியும். பொதுவுடமையின் நோக்கமும் இதுவேயாகும். வருமானத்தை உழைப்பாளிகள் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதென்பதே இதன் பொருள். வயிற்றுப் பசிக்கு உணவுதேடுங் காலமும் தூங்கும் நேரமும் தவிர மீதமுள்ள நேரம் தன் வயிற்றுக்கும் பிறருக்கும் கட்டுப்படாது சுதந்திரமாய் வாழுங்காலம். அது மக்களெல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டு மென்பதே பொதுவுடமையின் உண்மையான தத்துவம்” என்று ஓரிடத்தில் பேராசிரியர் பெர்னாட்ஷா பெரிதும் வியாக்கியானம் செய்துள்ளார்.

இந்நிலை அடைய உலகிலுள்ள எல்லா தேசத் தினரும் பொதுவுடமைக் கொள்கையை ஒப்புக்கொண்டு நடந்தால் தான் முடியும். இந்தக் கருத்துடன் தான் இன்றைய ரஷிய ஆட்சி நடந்து வருகிறது. இந் நன்னோக்கம் வெற்றி பெற ஒவ்வொரு நாட்டிலும் எதேச்சாதிகாரமுள்ள தொழிலாளியின் பிரதிநிதிகளிருக்க வேண்டுமென்பதே சோவியத் நிபுணர்களின் கருத்தாதலின் ரஷியாவில் அவர்களுக்குத் தகுந்த தற்போதைய அரசியல் முறையை நிறுவியுள்ளார்கள்.

முதலாளிகளென்போர் யார்?

ஐந்து வருடத்தில் தொழிலாளிகளின் உடல் நலம், அறிவு விருத்தி முதலான நலனைப் பெருக்க பெரிதும் திட்டங்கள் ஏற்படுத்தினர். அங்குள்ள உற்பத்திப் பொருள்களை எவ்விதத் தடங்கலுமின்றி சர்க்காரே பிற நாடுகளில் கொண்டு விற்பனை செய்தனர். சில தொழிலில் லாபமும், சில தொழிலில் நஷ்டமும் ஏற்பட்டாலும் சர்க்காரே முதலாளியாக இருப்ப தால் நஷ்டத்தை லாபம் வரக்கூடிய பொருளிலிருந்து ஈடு செய்து கொள்ள முடிகிறது. உற்பத்தி செலவுகளை யெல்லாம் கழித்து 100க்கு 10 அல்லது 20 பாகம் தொழிலாளிகளின் அபிவிருத்திக்காகச் செலவழித்து வருகிறார்கள். ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்களுக்கு விளையாடுமிடம், வாசகசாலை, குழந்தைகளுக்குப்பால் கொடுக்கவும், தாலாட்ட அறைகளும், தொட்டிலும், இன்னும் பல வசதிகளும் செய்யப்பட்டிருப்பதோடு, ஆகாய வசனி (ரேடியோ) மூலம் சோவியத் ஆட்சி முறையைப் பற்றி பிரசங்கங்கள் மூலம் அறிவு விருத்தி செய்யப்பட்டு வருகிறது.

சோவியத் ஆட்சியினர் எதையும் ஆராய்ந்தே செய்வர். ஆய்ந்து நலமென்று கண்டால் இன்னதை இவ்வளவு காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டு மென்று திட்டம் போட்டுக் கொள்ளுகிறார்கள். உடனே அமலுக்குக் கொண்டு வருகிறார்கள். உற்பத்தி அதிகப் படுத்துவதென்றால் அதன் நோக்கத்தை தொழிலாளர்க்கு விளக்கிக் கூறி அவர்களுக்கு உற்சாகமூட்டி எளிதில் தங்கள் நோக்கத்தில் வெற்றியடைந்து கொள்கிறார்கள்.

விவசாயம்

ரஷியாவில் எல்லா நிலையங்களையும் சர்க்கார் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு மக்களை ஓர் இயந்திரம் போல் பாவித்து வருகிறார்கள் என்பது தவறு. விவசாயத்திற்கு லாயக்கான பூமிகளில் சில பாகம் சர்க்கார் பண்ணைகள்; சில பாகம் பல குடியானவர்கள் கூட்டுறவாகப் பயிரிடும் பண்ணைகள்; மற்றொரு பாகம் தனி விவசாயிகள் தனியாகப் பயிரிடும் நிலம் எனப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இயந்திரக்கலப்பைகளை உபயோகித்தால் தான் அதிகமான விளைவை எதிர்பார்க்க முடியும். சிறு சிறு நிலங்களாக இருந்தால் இயந்திரக் கலப்பையால் உழ முடியாது. எனவே தான் சர்க்கார் பொருளாதாரத்திற்கு அவசியமான இயற்கை மூலங்களும் மூலதனமும் பொதுவாக இருக்கவேண்டு மென்று விதி ஏற்படுத்தியுள்ளார்கள். ஆகவே தான் ஐந்து ஆண்டுத் திட்டம் (1928-1933) ஏற்படுத்தி அதற்குள் நிலத்தில் 100க்கு 20 பாகத்தை கூட்டுறவு விவசாயமாக்கி சிறுசிறு வயல்களாக ஏற்படுத்தியிருந்த வரப்புகளை யெல்லாம் வெட்டி ஒரே சமமான பாகமாக்கி இயந்திர விவசாயத்திற்கு ஏற்ற விதமாக்கி விடவேண்டுமென்று திட்டம் போட்டனர். 4 ஆண்டுகளுக்குள் 100க்கு 60 பாகம் கூட்டுறவு விவசாயத்துக்கு முன் வந்துவிட்டது. விவசாயம் விருத்தியாக வேண்டும், விருத்தியாக வேண்டும் எனக் கூவும் வீண் வெற்றுரைகளை அங்கு காணமுடியாது. இன்ன ஜில்லாவில் இவ்வளவு கோதுமை களை விளைவிக்க வேண்டும் என்று சர்க்கார் திட்டம் போடுவார்கள். உடனே அதை அமுலுக்கு கொண்டு வர ஸ்தல சோவியத்துக்கு உத்தரவு கொடுக்கப்படும். அதை உடனே அவர்கள் நடத்த முனைந்து விடுவார்கள். இதன் பயனாக இன்று அங்கு 100க்கு 80பங்கு விவசாயம் சர்க்கார் பண்ணையாக இயந்திரங்களின் மூலம் நடைபெருகிறது. 40,000 இயந்திர விவசாய கலப்பைகள் அங்கு வேலை செய்து வருகின்றன.

ரஷியா, விவசாயத்தைப் போல் கைத்தொழிலையும் அபிவிருத்தி செய்ய முனைந்து வேலைசெய்து விருத்தி செய்துவருகிறது. அதன் கைத்தொழில் அபிவிருத்தியை கீழ்கண்ட புள்ளிவிபரங்களால் நன்கறியலாம்.

தண்டவாளத்தில் ஓடும் கார்கள் 12,000 என்று திட்டம் போட்டார்கள். 1931க்குள்ளாக 20,000

தயாராகி விட்டன. 1933க்குள் 825 ரயில் வண்டிகள் செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டார்கள். 1932 க்குள் 812 வண்டிகள் செய்யப்பட்டு விட்டன. 1913ம் வருடத்தில் 170 லட்சம் ஜோடுகள் தயாராயின. 1931ல் 768 லட்சம். இது திட்டத்திலிருந்து 167 லட்சம் அதிகம். 1913ல் 94,000 டன் சோப் உற்பத்தி செய்து விட்டனர். 1931ல் 1,89,000 டன் உற்பத்தி செய்து விட்டனர்.

முன்னேற்றம்

உலகத்திலுள்ள பெரிய இரும்புத் தொழிற்சாலை களில் ஒன்று ரஷியாவிலிருக்கிறது. அதன் பிரதம அதிகாரியாய் ஒரு இந்தியரே இருந்து வருகிறார். இங்கிலாந்தில் இரும்பு உற்பத்தி 40 லட்சம் டன்னி லிருந்து 95 லட்சம் டன் ஆக 35 வருடமாயிற்று. அமெரிக்காவில் இத்தகைய முன்னேற்றம் அடைய 8 வருடமாயிற்று. ஜெர்மனியில் 10 வருடம் சென்றது. ஆனால் ரஷியா 1 வருடத்தில் இந்த முன்னேற்றத்தை யடைந்து விட்டது. நிலக்கரியில் 530 லட்சம் டன் உற்பத்தியை செய்யத் திட்டம் போட்டு வேலை ஆரம்பித்தது. வெற்றியும் கண்டுவிட்டது. ரஷியாவில் 1930ம் ஆண்டில் புகை ரதங்கள் (மோட்டார்கள்) செய்யப்படவில்லை. 8550 கார்களுக்குத் தனி பாகங்கள் பொருத்தி வண்டியாகச் செய்யப்பட்டன. இப்பொழுது நாள் ஒன்றிற்கு 65 மோட்டார்கள் ரஷியாவிலே உற்பத்தி செய்யப்படுகிறது.

விவசாயத்திலே 100க்கு 20 பாகம் தவிர மற்றவைகள் சர்க்காருக்கே உரியது. சர்க்காரைத் தவிர தனி மனிதர்கள் ஒருவருக்கொருவர் கடன் கொடுத்து வாங்கினாலும், வியாபாரஞ் செய்தாலும் கிரிமினல் குற்றமாக ரஷியாவில் கருதப்படுகிறது.

எண்ணெய் உற்பத்தி செய்யும் தேசங்களில் ரஷியா இரண்டாவது ஸ்தானத்தையும் இயந்திர உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும் விவசாய இயந்திரக் கருவிகளில் முதலாவதாகவும் இடம்பெற்று விளங்கு கின்றது.

தங்க உற்பத்தியின் மதிப்பு அவர்கள் திட்டத்திற்கு ஒன்றரை மடங்கு அதிகமாகக் கிடைத்து விட்டது.

கல்வி

1914 ல் 70,00,000 குழந்தைகள் கல்வி பயின்றனர்; 1928 ல் 1,50,00,000 படிக்க வேண்டுமென்றும் 1933ல் 1,70,00,000 படிக்க வேண்டுமென்று திட்டம் போட்டு வேலை செய்து வெற்றிபெற்று விட்டனர்.

ரஷியாவில் முதியோர்களுக்கும் கல்வி கற்பிக்கப் படுகிறது. 1928ல் வாசக சாலை 22,000 இருந்தன.

1933 ல் 34,000 ஆக்கி விட்டார்கள். ஊர் ஊராய்க் கொண்டுபோகும் லைபரெரிகள் 40,000-ஏற்படுத்தி விட்டனர். ரேடியோவின் மூலம் பலவிடங்களில் கல்வி கற்பிக்கப்படுகிறது. 1928ல் 3,50,000 ஆகாயவசனிகள் (ரேடியோக்கள்) இருந்தன. 8,250 சினிமா நிலையங் களிருந்ததை இப்பொழுது 50,000 மாக அதிகப்படுத்தப் போகின்றார்கள்.

ரஷியாவின் இத்தகைய வெற்றிக்கு முக்கிய காரணம் தாங்கள் செய்யப் போகும் காரியத்தை முதலில் திட்டமிட்டுக் கொண்டு அதில் தொழிலாளருக்கு போதிய ஊக்கமும் கொடுக்கும்படி தங்கள் நோக்கத்தைக் கூறி அவர்களுக்கு உற்சாகமாய் விடுவதால் தொழிலாளி கட்கு என்ன கஷ்ட நஷ்டம் போதிலும் ஊக்கங் குன்றாது வேலையையே கருத்தாகக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.

இந்திய நாடு

பிற நாடுகள் இத்தகைய நோக்கங்களை கையாண்டு திட்டத்தைக் கண்டு வெற்றியடைந்து கொண்டு போகும் பொழுது இந்தியா வாளாவிருக்குமேயானால் சீக்கிரத்தில் பொருளாதார நெருக்கடியென்னும் சூழலில் பட்டு அதோ கதியாய் விடுமென்பது நிட்சயம்.

சில மாதங்களுக்கு முன் ரஷியா தோழர் ஒருவர் கவி. ரவிந்தரநாத் தாகூருக்கு நிருபம் ஒன்று எழுதி யிருந்தாராம். அதில் சோவியத் ஆட்சியில் தொழில் முன்னேற்றமடையக் காரணம் என்னவென்று கருது கிறீர்கள்? உங்கள் தேசம் அத்தகைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாயிருப்பவை எவைகள்? என்று வினாவியிருந்தார். அதற்கு கவி-தாகூர் “தங்கள் நாட்டில் செல்வப் பெருக்கை தனி மனிதர்களிடமிருந்து எல்லாப் பொது மக்களுமடங்கிய சமுதாயத்திற்கு பயன்படுமாறு செய்திருப்பதுதான் உங்கள் ரஷிய நாட்டின் வெற்றிக்கு காரணம் சமுதாய விசயங்களில் முயற்சியற்று எல்லாம் இறைவன் செயலென்றிருப்பதே எங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கிறது” என்று பதில் எழுதியிருந்தார்.

(தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 23.07.1933)