இந்திய இரயில்வேயின் ஆல் இந்தியா லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசன் (AILRSA)  மற்றும், ஆல் இந்தியா கார்ட்ஸ் கவுன்சில் (AIGC) தலைமையில் என்ஜின் டிரைவர்கள் மற்றும் கார்டுகளாக இரயில்களை இயக்கும் ஊழியர்களின் போராட்டங்களைத் தொழிலாளர் ஒற்றுமை குரல் தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கிறது.  இப் போராட்டங்களின் காரணமாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் இந்த பிரிவு தொழிலாளர்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக மார்ச் 2012 இல் ஒரு தேசிய டிரைபியூனலை நியமித்தது. இரயில் ஒட்டும் ஊழியர்களின் மன உறுதியை அழிக்கும் முயற்சியாக இந்த டிரைபியூனலின் முன் இரயில்வே அதிகாரிகள் வர மறுத்து வருகிறார்கள் என்பதையும் தொழிலாளர் ஒற்றுமை குரல் வெளியிட்டிருக்கிறது.

இதே தொழிலாளர் விரோத நிலைப்பாட்டில், ஆல் இந்தியா லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசனுக்கும், ஆல் இந்தியா கார்ட்ஸ் கவுன்சிலுக்கும் தெரிவிக்காமல், இரயில்வே நிர்வாகம் அண்மையில் ஒரு ரன்னிங் அலவன்சு கமிட்டியை நியமித்திருக்கிறது. இக்குழு, ரன்னிங் ஸ்டாபினுடைய ஊதிய முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும், கிலோ மீட்டருக்கான படியைத் தீர்மானிப்பதற்கான ஒரு வாய்பாட்டை உருவாக்குவதற்காகவும் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆல் இந்தியா லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசனும் ஆல் இந்தியா கார்ட்ஸ் கவுன்சிலும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் இல்லையென்றும், அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களோடு மட்டுமே தான் பேச்சுவார்த்தை நடத்துவோமெனவும் ஒரு பொய்யான வாதத்தை இரயில்வே அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட "அங்கீகாரமற்ற" சங்கங்களின் தலைமையின் கீழேதான் 2010 மே 3 மற்றும் 4 இல் முழு மும்பையும் செயல்படாமல் நின்றுவிட்டது.

மே 17-இல் மும்பையில் அண்மையில் நடைபெற்ற தேசிய டிரைபியூனலில் ஆல் இந்தியா லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசன் மற்றும் ஆல் இந்தியா கார்ட்ஸ் கவுன்சிலினுடைய பிரதிநிதிகள் இந்தப் பிரச்சனையை எழுப்பி, இரயில்வே நிர்வாகத்தினுடைய உள்நோக்கங்கள் பற்றி கேள்வியெழுப்பினர். ஊதியங்களில் உள்ள வேறுபாடுகள், நியாயமான கிலோ மீட்டர் அலவன்சு உட்பட இரயில் வண்டிகளை இயக்குகின்றவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகத் தான் தேசிய டிரைபியூனல் நிறுவப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர். இந்த தேசிய டிரைபியூனலின் முன்னர் இஞ்சின் டிரைவர்களையும், கார்டுகளையும் ஆல் இந்தியா லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசனும், ஆல் இந்தியா கார்ட்ஸ் கவுன்சிலும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர். எனவே, நீதி மன்றத்தின் கீழ் விசாரணையில் உள்ள பிரச்சனைகளை கவனிப்பதற்கு நீதி மன்றத்தைப் புறக்கணித்துவிட்டு, இரயில்வே நிர்வாகம் வேறு ஒரு குழுவை எப்படி அறிவிக்க முடியுமென்று அவர்கள் கேள்வியெழுப்பினர்.

ஆல் இந்தியா லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசன் மற்றும் ஆல் இந்தியா கார்ட்ஸ் கவுன்சிலினுடைய எதிர்ப்புகள் நீதி மன்றத்தின் முன் பதிவு செய்யப்பட்டன. இரயில்வே நிர்வாகத்தினுடைய தொழிலாளர் விரோத, தான்தோன்றித் தனமான அணுகுமுறைக்கு தொழிலாளர் ஒற்றுமை குரல் கண்டனம் தெரிவிக்கிறது. இஞ்சின் டிரைவர்களும், கார்டுகளும் தங்களுடைய போராட்ட ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டுமென நாம் கேட்டுக்கொள்கிறோம். இரயில் வண்டிகளை இயக்கும் பணியாளர்கள் இடையில் உள்ள இந்த ஒற்றுமையை உடைக்க வேண்டுமென்பதே அதிகாரிகளுடைய முயற்சியாகும்.

Pin It