“ஓனர் காலைலே தருவாராம்… வந்தவொடனே மொத வேலையா ஒங்க கணக்க பாத்து க்ளியர் பண்ணிடலாம்னு சொல்லிட்டாரு… என்ன செஞ்சுக்கலாம்…” புருவம் உயர்த்தி கேட்டார் மேனேஜர்

உள்ளுக்குள் கனன்ற அனல் பொசுங்கியதே தவிர வெடிக்கவில்லை.. வேறுவழி..!

“சரிங்சார் அப்ப காலைல வர்றேங்… . கண்டிப்பா கெடைச்சுடு;ம்ல”

“கண்டிப்பா… அதோ டேபிள்ல உங்க டைரிய எடுத்து ரெடியா வச்சுட்டேன். கூல் கூல்..” சொல்லிவிட்டு பைக்கில் கிளம்பினார்.

 மறுபடியும் கடலைமில்லிலே காண்ட்ராக்ட் எடுத்த தன் புத்தியை ‘எதைக் கொண்டு அடிப்பது’ என நொந்து நகர்ந்தான் அவன்

பத்து ஆண்டுகளுக்கு முன் ஜோசியர் சங்கரன் கடலை மில்லுக்கு கூட்டி வந்து தன்னை அறிமுகப்படுத்திய போது வாழ்க்கையில் ஒளி வீசத் துவங்கியது போல் உணர்ந்தான். தென்னை, மா,  பலா, வாழைத் தோப்புகளுக்கிடையே அமைந்த பழமையான பிரபல மில் அது.

சுண்ணாம்பு குழைத்து கருங்கல்லில் கட்டிய உயரமான சுற்றுச் சுவர்கள், கம்பீரமான இரும்புக் கதவு, உள் பக்கவாட்டில் இருபதுக்கு இருபது அடி அகலம் கொண்ட விலாசமான கிணறு, வேம்பு மற்றும் புங்க, தென்னை மரங்கள்.. தொலை தூரத்தில் அஸ்பெட்டாஸ் சீட் வேய்ந்த பெரிய பெரிய குடவுன்கள், கிரிக்கெட் மைதானம் போல கடலைகளை காயப்போட கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிமெண்டினால் ஆன தரைக்களங்கள், தூர இருந்து வந்து ஓய்வெடுக்கும் லாரிகளும் ஓட்டுனர்களும்,  ஃபைல்கள் நிறைந்த அலுவலக அரைகள், பணியாளர்கள்,  மாடுகள் அடங்கிய கொட்டம், மேலும் ஒரு குட்டிக் கோவில் அதற்கு மாதச் சம்பளத்தில்  ஒரு பூசாரி, ஓனர்களின்  மின்னிய கார்கள் என்று எல்லாமே வாழ்வின் அடுத்த கட்ட முன்னேற்றப் படிகளாய்த் தென்பட்டன அவனுக்கு.

“கதிரேசா.. பெரிய எடத்து சமாச்சாரம். எத்தனையோ பேரு வேல கேட்டு அலையுராக.. நீ நம்மபய.. பாத்து பேசி அனுசரிச்சுப்போனையின்னா காலம்பூராம் கட்டுற எல்லா கட்டடத்தையும் நீயே பாக்கலாம்..”

மேஜைக்குப்பின்னால் சக்கர நாற்காளியில் அமர்ந்திருந்தார் மில் ஓனர். கஞ்சிபோட்டு தேய்த்த வேட்டி சட்டையும்,  ஜவ்வாதும், நெற்றியில் பட்டையுமாய் காட்சி தந்தார். ஜோசியர் சங்கரன் அடிக்கடி அவர்களுடன் தொடர்பிலிருப்பவர் போல பேச்சில் தெரிந்தது.

கூலிக் காண்ட்ராக்ட்தான்.. சதுர அடிக் கணக்கில் தட்ட முடியாத அளவுக்கு ஓனர் பேரம் பேசினார்.

“செய்யிங்க தம்பி.. நம்ம ஒர்க் பூராம் நீங்களே பாருங்க.. இப்ப ஏற்கனவே பெண்டிங் இருக்கறதெல்லாம் முடிச்சு விடுங்க.. அடுத்து நம்ம அண்ணாச்சிக்கு என்.ஆர்.டி-ல  பில்டிங் எடுக்கனும்.. எல்லாமே ஒங்களுக்குத்தான்..”

ஆனால் பேசிய கூலிதான் கையைப் பிடிக்கும் போலிருந்தது. தானும் நின்று பார்ப்பதால் கைந~;டத்திற்கு இடமிருக்காது எனத் தோனியது. ஊருக்குள் பார்க்கின்ற நாலு பேர் “ஒனக்கென்னய்யா பெரிய எடத்த புடிச்சிட்ட..:” என ஊதிவிட்டுப் போவதுண்டு.

முதல் தடவையிலேயே நாட்கணக்கில் சம்பளப்பாக்கி. அவ்வப்போதைய கணக்கு வழக்குகளில் ஓனரிடம் கையொப்பம் வாங்கவே இப்ப பெறகு என்றானது. உள்ளே வந்த பிறகுதான் ஏற்கனவே பல கொத்தனார் குழுக்கள் வந்து நொந்துபோன சேதியும் காதுகளுக்கு எட்டியது.

“மேசரி கீசரின்னு ஊருப்பட்ட பயக வந்து பாத்தாகப்பா… பிச்சக்காரப்பயக சம்பளத்த ஒழுங்கா குடுத்தாவுள, காச வாங்குறதுன்னா கரும்பு வெளஞ்சு சாரு பிதுங்கிரும்.” களத்தில் கங்கானியக்கா சொன்ன போது தொண்டையை அடைத்தது. “அதுனாலதாந் தம்பி நீயும் நானும் இப்பிடியே இருக்கோம்.. இவனுங்க கோடி கோடியா சம்பாரிச்சுட்டு கெடக்காய்ங்க..”ன்னு மேலும் ஒரு போடு போட்டது.

உருட்டி பொரட்டி முதல் முறை ஜோசியர் சங்கரனை வைத்து கணக்கு பார்த்து கிடைத்த சில்லறையைப் பெற்றுக் கொண்டு ஓடியது ஒரு அதிர்~;டம்.

“பெரிய எடம்னா அப்படித்தேன்;யா… நம்மதே விட்டுக்குடுத்துப் போகனும். ஒவ்வொரு எடத்துலயும் ரோசப்பட்டா பொழைக்கிறது எப்புடி… நாலு அப்புடித்தே, நாலு  இப்புடித்தே” அறிவுரைகள் ஏனோ க~;டங்களுக்கு ‘வேறு வழியில்லை சரித்தான்’ எனத் தோன்றியது.

ஆனாலும் மறுமுறை போகும்போது.. கட்டுபடியாகும் தொகையையும், தடையின்றிச் சம்பளம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைப்பான். ஓரு கட்டத்தில் ‘இனி இங்கு வேலைக்கு வரவே கூடாது’ என்றும் விரக்தியடைந்திருக்கிறான்.

கிளை விரிந்த மரமாய்; குடும்பம். தேவைகளுக்குப் பஞ்சமில்லை.. வேலைகள் குறைவு,  வெளி மாநிலத்தவர்களெல்லாம் இங்கே படையெடுத்து வர எல்லோருக்குமான வேலை என்பது சில நேரம் கானல் நீர் போலாகி விடுகிறது. கிடைக்கிற சில்லரை வேலைகளைக்கூடத் தட்டிக்கழிக்க மனமில்லை. ஏழெட்டுக் கொத்தனார்களை வைத்துப் பார்த்த இடத்தில் இன்று இவனும், இரண்டு மூன்று சித்தாட்களும், ஒரு நிமிந்தாலும், துணைக்கு ஒரு கொத்தனாரை மட்டுமே வைத்து கம்பெனி ஓடுகிறது.

மீண்டும் ஒருவிசை கடலைமில் வாய்ப்பு கொடுத்தது. அறநூறு சதுர அடியில் ஒரு ஹெஸ்ட்ஹவுஸ்.  பேரம் பேசினார்கள். அட்வான்ஸ் தொகை  ஒரு கடனை அடைக்கப் போதுமானதாயிருந்தது.

வழக்கம் போலவே சம்பளப் பணத்திற்கும் இழுபறி. கேட்டால் “எல்லாங் கணக்குதானங்க… கடைசியில மொத்தமா நீங்கதான வாங்கப்போறீங்க..” எனச் சொல்லுவர்கள்.

 ஓரு வழியாக கடந்த மாதம் வேலை முடிந்தது. ஆனால் ஒப்பந்தத்தில் இல்லாத  வேலைகளும் நிறையவே செய்ய நேரிட்டது. “சார் இதெல்லா எக்ஸ்ட்ரா வேலை.. கணக்கு வச்சுக்குங்க..”  அவ்வப்போது சொல்லி வைப்பான்.

“கொத்தனாரே.. எல்லாம் பர்பெக்ட்டா இருக்கு.. ஃபைனல் செட்டில்மென்ட்ல க்ளீனா வந்துரும்..”

எல்லாஞ் சரித்தான். ஆனால் ஓனர் முன்னிலையில் கணக்கு வழக்கு பார்க்கத்தான் அலைய வேண்டியிருக்கிறது. ஏற்கனவே மேனேஜரை வைத்து கட்டிடத்தை அளந்து வாங்கியது, வரவேண்டியது, அதிகப்படியாய் பார்த்த வேலைகளுக்கான கூலி என்று எல்லாவற்றையும் விளாவாரியாயப் பார்த்தாயிற்று. அதன்படி மீந்திருப்பதோ வெறும் பதினெட்டாயிரம் ரூபாய்தான்.. அதை தருவதற்கு  இப்ப பெறகு என இருதியாக நாளைக் காலை என்றாகியும்விட்டது.

அவனைப் போலவே கார்பெண்டர், ஒர்க்ஸாப்காரர், செங்கக்காள வாசல்காரர், மணல் டிராக்டருக்காரர் என்று ஒரு சிலரும் அலைவதும் தெரிந்தது.

ஊருக்குள்ளிருக்கிற எல்லாக் கட்டிடஸ்தர்களும் இப்படியில்லை. மனம்கோனாமல் பொழுது சாய்வதற்குள் எண்ணிக்கொடுப்போரும் உண்டு, இதுபோல கஞ்சப்பிசினாரிகளும், இழுத்தடிக்கிறவர்களும் உண்டு.

வாங்கியவுடன் முதலில் வேலையாட்களுக்குச் சம்பள பாக்கியைக் கொடுத்துவிட வேண்டும். அடுத்தபடியாக கடத்த மாதம் கட்ட முடியாத பைக் பைனான்ஸ்.. வரவிருக்கும் வசந்த விழாவுக்கான செய்முறை,  பிறந்தநாள் காணும் அவளுக்கு ஒரு சேலை..  வரும் மாதங்களில் பிள்ளைகளுக்கான கல்விக் கட்டணம்.. என்று போட்ட கணக்கையே மறுபடியும் மறுபடியும் போட்டு மனம் சூடேறி இரவின் நீண்ட பகுதியை தூக்கமின்றியே கழித்தான்.

…….

மில்லின் தொழிலாளர்கள் முதல் அலுவலர்கள் வரை ஒருவித பயபக்தியில் எதையோ எதிர்நோக்கியவர்;கள் போலவே காணப்பட்டனர்.

“சுவாமிஜி வர்றார்..” மேனேஜரின் பவ்யமான வார்த்தைகளில் கட்டமைத்த பணிவு வெளிப்பட்டது. வாசல் தெளித்து கோலமிட்டு, படங்களுக்கு கதம்ப மாலைகளிட்டு, கோவிலும், சிலையும் குளிப்பாட்;டப்பட்டு, கொட்டங்கள் முதல் மில் களங்கள் வரை சுத்தம் செய்யப்பட்டிருந்தது.

சற்று நேரத்தில் காவலர் துணையுடன் உயர்ரக காரில் விஜயமானார் சுவாமிஜி. கையில் நீண்ட குச்சியுடன், பட்டையும், ருத்திராட்சக் கொட்டையுமாய், பம்பைத் தலையுடன் பாதி உடம்பு தெரிய காவியில் காட்சி தந்தார்.

  பல பக்திமான்களின்  வீட்டு பூஜையரையிலும் அவரின் படம் தொங்குகிறது. அவர்    மீதான வழக்குகள் பற்றிய செய்திகளும்; அவ்வப்போது  வெளி வந்து கொண்டுதானிருக்கின்றன.  அருகாமையிலிருக்கும் ஆசிரமத்திற்கு நான்கு நாட்கள் சொற்பொழிவாற்ற வந்திருந்த அந்த நட்சத்திர சுவாமிஜி பெரும் புள்ளிகளின் சிபாரிசில் கடலைமில்லில் கால் மிதிக்க ஒப்புக்கொண்டாராம்.

ஓனர் முதல் சக தொழிலாளிகள் வரை காலில் விழுந்து எழுந்திரிக்க.. மில்லின் ஒவ்வொரு திசையிலும் எதையோ முனகியபடியே நடந்தார். மாட்டுக் கொட்டகைக்குச் சென்றவர் அந்நேரம் பெய்த கோமியத்தைக் கையேந்திப் பிடித்து முகர்ந்து மந்திரம் சொன்னவர் நாலாத்திசையிலும் அதை தெளித்து ஆசீர்வதித்தார்.. “பகவான் சதா தொடர்ந்து இந்த ஸ்தலத்துல இருந்துண்டேயிருப்பான்..”

வெறும் ஐந்து நிமிட தரிசனம் நிறைவடைந்த தருவாயில் சுவாமிஜிக்கு காணிக்கையாக பழங்கள் நிறைந்த புதிய வெள்ளித்தட்டில் ஒரே கட்டாக ஐம்பதாயிரம் ரூபாய் வைத்து நீட்டப்பட்டது. மெய்க் காப்பாளர் அதைப் பெற்றுக்கொள்ள மகிழ்சியோடு புறப்பட்டார் சுவாமிஜி.

 அரைமணிநேரம் காத்திருந்த அவனை ஓனர் உள்ளே வரச்சொன்னார். மேனேஜரும் இருந்தார். கொத்தனாரின் கணக்கு டைரி விரிக்கப்பட்டிருந்தது.

“என்ன கதிரேசா.. எல்லாஞ் சரியாப்போச்சே.. பின்ன என்ன பணம் பணம்னு வந்துட்ரிக்கீங்க..” முதல் பேச்சிலேயே அதிர்ந்தான்;.

“இல்லைங்சார்.. ஏகப்பட்ட வேல எச்சா பாத்துருக்கு.. ரேட்டுங் கம்மி.. நா அப்பவே சொன்னே.. நீங்கதா முடியப்பா பாத்துக்கலாம்னீங்க..”

“என்னத்த அப்புடி எக்ஸ்ட்ரா..”

“அந்த ஒன் சைடு காம்பவுண்டு கட்டுனது கணக்குல வரலைங்க.. மாடியிலயுந் தளம் போடுறதாதா பேச்சு.. கடைசியில தட்டோடு பதிக்கனும்னுட்டாங்க.. அப்பறும் இந்த டிசைன் வேலையெல்லா நெறையா பாத்துருக்குங்..”

“இதென்னப்பா கோமாளித்தனமா இருக்கு.. இப்ப.. டெய்லர் கிட்ட சட்டைய தைக்க குடுக்குறோம்.. அவெ தச்சபெறகு பட்டன் வச்சிருக்கே.. காசா போட்டுருக்கேன்னு எச்சா கேப்பானா.. ஒனக்கு சதுரஅடி கணக்குதானப்பா.. எதுவா இருந்தாலும் செஞ்சு குடுக்குறதுதான மொற.. ஏங்கணக்குப் பிரகாரம் நீதேந் தரனும்..”

“ கட்டாத ரேட்டுங்சார்.. அதெப்பிடிங்சார் எச்சாப் பாத்ததெல்லாம்… சட்ட தைக்கிறது வேற.. இது வேறங்.. ரொம்ப செரமஞ் சார்..”

இவனது புலம்பலை பொருட்படுத்தாதவராய் “வந்ததுக்கு கதிரேசனுக்கு ஒரு ரெண்டாயிரம் குடுத்தனுப்ச்சு கணக்க க்ளோஸ் பண்ணீரு.. அடுத்தடுத்து வேல நெறையா இருக்கப்பா எல்லாமே ஒனக்குத்தான..”  இவனிடமும் மேனேஜரிடம் சொன்னபடி கொத்தனாரின் டைரியை மூடினார் ஓனர்.

“சார்..சார்;..”

“வாங்கிக்கப்பா.. ரொம்ப டைட்டா இருக்கு..”

 வழியின்றி இரண்டாயிரத்தை வாங்கிக்கொண்டு போனவனை இடையில் ஜோசியர் சங்கரன் சந்தித்தார்.. “என்னா கதிரேசா… கணக்கு முடிஞ்சிருச்சா.. காலைலயே நல்ல வருமானமா..”

. “நல்லா வருதுய்யா வாயில.. கணக்கு முடிச்சிருக்காங்ஙே பாரு.. கணக்கு..! உழைக்கிறவனுக்கு ஒழுக்கமா கூலி தரமாட்டீங்க.. சாமியாருங்கற பேருல கொலைகாரன், கொள்ளைக்காரன், பொம்பளப்பொருக்கி, காட்ட அழிக்கிறவன், நாட்ட நாசப்படுத்துறவனுக்கெல்லாம் கட்டு கட்டா தூக்கி குடுப்பீங்க… இ இவெங்களுக்கு வேல பாக்குறதுக்கு முதியோர் இல்லம், அனாத ஆஸ்ரமம், ஏழை பாழைங்களுக்கு வேலையபாத்துட்டு குடுக்குறத வாங்கீட்டு போயிறலாம்.. திருந்துங்கய்யா மொதல்ல..” பொறுமித்தள்ளிவிட்டு திரும்பிப் பார்க்காமல் பைக்கில் பறந்தான் அவன்.

- மொசைக்குமார்

(ஏப்ரல் 2017 இளைஞர் முழக்கம் இதழில் வெளியான சிறுகதை)

Pin It