கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கொத்துக் கொத்தான நோய்த் தொற்று மரணங்களை கொரோனா வைரஸ் மூலமாக இப்போது உலகம் எதிர்கொள்கிறது. உலகின் பல நாடுகளின் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், பொது மக்களும் நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இருக்கின்றனர்.

கொரோனா நோய்த் தொற்றுக்கு இன்று வரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையில் உலக அளவில் சீனா, ஐரோப்பா, அமெரிக்கா என பல நாடுகளில் லட்சக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது, இந்த நோய்த் தொற்று. இந்த நோய்த் தொற்றால் 2.9 லட்சம் பேர் உலக அளவிலும், 2,293 பேர் இந்தியாவிலும் மரணமடைந்து உள்ளனர் (மே 13, 2020 நிலவரப்படி)

modi with corona maskநோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் சமூக அளவில் நோயைப் பரப்பி விடாமல் நோய்ச் சங்கிலியை உடைக்க தனிமைப்படுத்திக் கொள்வதும், அனைவரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகாமல் சமூக விலக்கலில் இருப்பதும்தான் ஒரே தீர்வாகக் கருதப்பட்டது. எனவே, சென்ற மார்ச் மாத இறுதியில் நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பித்தது இந்திய அரசு. உலக அளவில் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளைப் பின்பற்றி இந்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.

ஆனால், உலக நாடுகளில் பெரும்பாலானவை இந்த ஊரடங்கினால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பை சமாளிக்க பில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கி சமூக நலத் திட்டங்களை அறிவித்து அமல்படுத்தி உள்ளன. உதாரணமாக, அமெரிக்க அரசு வேலையில் இருக்கும் அல்லது வேலை இழந்த ஒவ்வொரு நபருக்கும் கணிசமான ரொக்கத் தொகையை (குடும்பத்துக்கு சுமார் $1,200 முதல் $3,000 வரை - சுமார் ரூ 90,000 முதல் ரூ 2 லட்சம் வரை) அவர்களது வங்கிக் கணக்கில் மாதா மாதம் செலுத்தி வருகிறது. அதற்காக அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%-க்கும் மேல் ஒதுக்கியுள்ளது.

ஆனால், இந்தியாவிலோ நிலைமை வேறு, அந்த நாடுகளைப் பார்த்து ஊரடங்கை மட்டும் படாடோபமாக அறிவித்து விட்ட பிரதமர் மோடி நல்ல நம்பிக்கை அளிக்கிறேன் என மட்டும் மூன்று முறை டிவியில் தோன்றி பேசினார். இப்பேரிடரை அரசு எவ்வாறு எதிர்கொள்கிறது, மக்களுக்கு என்ன செய்கிறது/ செய்யப் போகிறது என ஒரு வார்த்தையோ, திட்டமோ கூட அவரது தலைமையிலான அரசு வைத்திருக்கவில்லை.

இப்போதும் ரூ 20 லட்சம் கோடிக்கான பொருளாதாரத் திட்டங்களை வகுத்திருப்பதாக மோடி சொல்லியிருப்பது கார்ப்பரேட் நிறுவனங்களை குளிப்பாட்டுவதற்காகவே! உண்மையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள் அவர்களின் தயவை நாடி நிற்கும்படி விடப்படுவார்கள்.

முழு ஊரடங்கின் காரணமாக இந்தியா முழுதும் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், பட்டறை உரிமையாளர்கள் என கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர், அரசு எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யாமல் அறிவித்த ஊரடங்கின் விளைவாய் டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட மாநகரங்களிலும் பிற தொழில் நகரங்களிலும் வசித்த வெளிமாநிலத் தொழிலாளிகள் எந்த உதவியும் இன்றி கைவிடப்பட்டனர், சொந்த ஊருக்குச் சென்று சேர்ந்து விட்டாலாவது உயிர் பிழைத்து விட மாட்டோமா என நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளிகள், (முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட) நடந்தே தத்தமது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லத் துவங்கினர். அப்போதும் மத்திய அரசின் கண்கள் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இப்போதோ, கொரோனா பேரிடர் காலத்தில் தொழிலாளர்களை பட்டினி போட்ட அரசுகள் முதலாளிகளின் கோரிக்கைக்கு செவிமடுத்து, குறைந்த கூலிக்கு ஆள் பிடித்துக் கொடுக்க, தொழிலாளிகள் சொந்த ஊருக்குப் போவதை தடுக்கப் பார்க்கின்றன, ரயில்களை ரத்து செய்கின்றன.

கொரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான ஊரடங்கினால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ 1.7 லட்சம் கோடி ஒதுக்கி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது. உதாரணமாக ஜன்தன் கணக்குகளில் தலா 500 ரூபாய் மூன்று மாதங்களுக்கு (முதல் தவணை மட்டும் வந்திருக்கிறது), மற்றும் உஜ்வாலா திட்டத்தில் சிலிண்டர் பெற்றவர்களுக்கு மட்டும் மூன்று மாத இலவச சிலிண்டர் தவிர, மற்றவை ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அரசின் செலவுகள் (உதாரணம் விவசாயக் குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2,000) மற்றும் வெற்று அறிவிப்புகளே (உதாரணம் காப்பீடு திட்டங்கள், அதற்கான பிரீமியத்தை அரசு காப்பீட்டு நிறுவனங்களுக்குக் கொடுப்பது)

தமிழகத்தைப் பொருத்தவரை ரேசன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் கூடுதல் அரிசி, ரேசன் பொருட்கள், தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளிகளுக்கு மட்டும் இரண்டாயிரம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு அளித்திருக்கும்/ அளிக்கப் போகும் பயனைப் பெற்றவர் என்றாலும் கூட ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் உணவுச் செலவுக்குக் கூட 10-15 நாளுக்குக் கூட தாக்குப் பிடிக்காத சொற்ப உதவிகளாகும். இதற்கிடையில் வீட்டு உரிமையாளர்கள் வாடகை வாங்கக் கூடாது, சிறு தொழில் அதிபர்கள் தவறாமல் சம்பளம் கொடுத்து விட வேண்டும் என்று உத்தரவு மட்டும் போடுகிறது, அரசு.

ஊரடங்கின் இரண்டாவது வாரத்தின் இறுதியில் மோடி விளக்கு வைத்து கொண்டாடிக் கொண்டிருந்த அதே வேளையில் புலம் பெயர்ந்த தொழிலாளர் பலர் பாதம் வெடித்து சொந்த ஊரைச் சென்றடைந்தனர். பத்திரிகைச் செய்திகளின் படி 300க்கும் மேற்பட்டோர் இறந்து போயினர். இன்னும் பல்வேறு மாநிலத் தலைநகரங்களிலும் தொழில் நகரங்களிலும் அத்தகைய தொழிலாளிகள் ஆயிரக்கணக்கானோர் மிச்சமிருக்கின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 50 வது நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இப்போதுதான் இத்தகைய தொழிலாளிகளை சொந்த ஊருக்கு அனுப்ப மத்திய அரசு கண்களைத் திறந்திருக்கிறது. அதுவும், வேலை இல்லாத உணவுக்கே வழியில்லாத அவர்களையே ரயில் கட்டணத்தைக் கட்டச் சொல்லி கிஞ்சித்தும் இரக்கமற்ற காரியத்தையும் செய்தது.

போன வாரம் வரை சமூக விலகலை போலீசின் லத்தி கொண்டு பராமரித்த அரசு, உன் நலனுக்காகத்தான் வீட்டிலிருக்கச் சொல்கிறேன் என அன்பொழுகப் பேசிய அரசு, உணவுக்கு வழி சொல்ல வக்கில்லாத போது நாடு முழுதும் சாராயக் கடைகளை திறக்கச் சொல்கிறது; ஒரு மாதமாக அரிசி வாங்க வெளியில் வந்தவனை குற்றவாளியைப் போல அடித்து தோப்புக் கரணம் போட வைத்து அவமானப்படுத்திய அரசு இன்று சாராயக் கடைகளை வைத்து கூட்டத்தை ஒழுங்கு படுத்துகிறது! ஊரடங்கை சரியாகப் பின்பற்றிய கோடான கோடி மக்களை கோமாளிகளைப் போல நினைக்கிறது போலும் இந்த அரசு.

யாரும் கேட்க விரும்பாத நம் சாமானிய உழைக்கும் மக்களின் குரலை நாம் உயர்த்த வேண்டும்.. கோரிக்கை முழக்கங்களை கேளாத செவிகளின் காது கிழியும் வரை உரக்கப் பேச வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் இந்த மக்களை என்னதான் செய்யக் காத்திருக்கிறது என அவர்கள் பதில் சொல்ல நெருக்கடியைத் தர வேண்டும். இந்த நிலைமைகளையும் உழைக்கும் மக்களுக்கான கோரிக்கைகளையும் பரவலாகப் பிரச்சாரம் செய்து அவற்றை மக்களின் முழக்கங்களாக மாற்ற வேண்டும்.

மக்களுக்கு என்ன வேண்டும்?

1. மாதம் 10,000 ரூபாய் வீதம் அடித்தட்டு 15 கோடி குடும்பங்களுக்கு கொரோனா நோய்த் தொற்று முடியும் வரை அரசு அளிக்க வேண்டும்.

2. நாடு முழுதும் சுய உதவிக் குழுக்களின் நுண்கடன்களையும், விவசாயக் கடன் தொகையையும், கல்விக் கடன்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்ய வேண்டும். மின்கட்டணம், தண்ணீர் வரி முதலியவற்றை இப்பேரிடர் காலம் முடியும் வரை ரத்து செய்ய வேண்டும். தனியார் மற்றும் அரசுப் பள்ளி/ கல்லூரிகள் வருகிற கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அரசு கடுமையான உத்தரவுகளை இட வேண்டும்.

3. மருத்துவத் துறை தனியார் கைகளில் இருப்பது இப்படிப்பட்ட தொற்று நோய்க் காலத்தை சமாளிக்கப் பயனற்றதாய் இருந்தது ஊரறிந்த உண்மை. மருத்துவ மனைகளை கொரோனா பேரிடர்க் காலம் நீளுவதைப் பொருத்து தற்காலிகமாகவோ/ நிரந்தரமாகவோ அரசுடமை ஆக்க வேண்டும். குடிமக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் தயாரிக்கும் ஆலைகளை அரசுடைமை ஆக்க வேண்டும். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்ப வேண்டும்.

4. விவசாய விளைபொருட்களை நியாமான விலை கொடுத்து அவர்கள் இடத்திலேயே அரசு கொள்முதல் செய்ய வேண்டும். தேசிய உணவுக் கிடங்கில் தேங்கிக் கிடக்கும் உணவு தானியங்களை மக்களுக்கு பொது வினியோகத்தில் இலவசமாக வழங்க வேண்டும். பால், முட்டை உற்பத்தியை அரசுமயமாக்கி நாடு முழுதும் உள்ள குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச் சத்து கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

5. பேரிடர்/ கோடை காலம் முடியும் வரை நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் குடிநீர் உள்ளிட்ட நீர் வினியோகம் முழுமையையும் அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு மக்களுக்கு தண்ணீரை உத்திரவாதப்படுத்த வேண்டும்.

6. கொரோனா பொருளாதார நெருக்கடி முடிவது வரை நாடு முழுவதும் சாராயக் கடைகளை மூடி வைத்திருக்க வேண்டும். சாராய விற்பனையை அரசே மேற்கொள்வதை கைவிட்டு ஒழுங்குபடுத்த வேண்டும்.

7. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிதி நிலைமையை சரி செய்ய பணக்காரர்களின் சொத்து மீது வரி விதிக்க வேண்டும், வருமானம் மீது விதிக்கப்படுகிற வரியை அதிகப்படுத்த வேண்டும்.

8. இப்பேரிடரை சாக்காக வைத்து முதலீடுகளை ஈர்க்கிறோம் என தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவதை அரசு கைவிட வேண்டும். இந்த லாக்-டவுன் காலத்தின் போது தொழிலாளர்களை பணி நீக்கம் செய்த, ஊதிய வெட்டு செய்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி, முழு சம்பளமும் வழங்கப்பட வேண்டும்.

9. இப்பேரிடரை உயிரை பணயம் வைத்து எதிர் கொள்ளும், நாடு முழுதும் மருத்துவத் துறை உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் எல்லா ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பட்டியல் சாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட நிரப்பப்படாத காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

10. நிதி ஆதாரங்களுக்கு தனியார் கையில் இருக்கும் நாட்டின் அனைத்து வளங்களையும் அதாவது அனைத்து கனிமச் சுரங்கங்கள், கச்சா எண்ணெய் உற்பத்தி மையங்கள், தொலைதொடர்புத் துறை, போக்குவரத்து ஆகிய துறைகளை அரசு கையகப்படுத்த வேண்டும். அவற்றின் லாபத்தை முழுவதும் அரசு மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

- தமிழ்நாடு நண்பர்கள் ஒற்றுமை.

(தமிழ்நாடு நண்பர்கள் ஒற்றுமை என்பது நமது சமூகத்தில் சாதி, மத, இன, மொழி பாகுபாடு இல்லாமல் நல்லிணக்கத்துடன் செயல்படுவதற்கான விவாதங்களை நடத்தி வரும் ஒரு வாட்ஸ் ஆப் குழு ஆகும். இதில் மாணவர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலாளர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்கின்றனர்.

மத நல்லிணக்கத்துக்கான பிரச்சாரங்களையும், கொரோனா ஊரடங்கை ஒட்டி ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணவு வினியோகம் செய்யும் பணிகளையும் தமிழ்நாடு நண்பர்கள் ஒற்றுமை குழு ஒருங்கிணைத்தது.)