பேராசிரியர் திரு ராஜன் குறை கிருஷ்ணன் அவர்களுக்குத் திறந்த மடல்

அன்புசால் மதிப்பிற்குரிய பேராசியர் திரு ராஜன் குறை கிருஷ்ணன் அவர்களுக்கு.

“தமிழ்நாடு நாள் ஜூலை 18 - வரலாற்று தத்துவம் வலியுறுத்தும் உண்மை!” என்ற தலைப்பில் நீங்கள் எழுதியுள்ள கட்டுரையைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றேன். எது தமிழ்நாடு நாளாகக் கொண்டாடத்தக்கது? என்ற கருத்துக் களத்தில் உங்கள் பார்வையை முன்வைத்துள்ளீர்கள்:

“ஒரு மக்கள் தொகுதி தங்கள் உரிமைகள் குறித்த தன்னுணர்வினை வெளிப்படுத்துவதே அதன் வரலாற்று உணர்வாகும். மக்கள் தங்களை ஒரு தொகுதியாக உணர்வது என்பதே மக்கள் என்று கூட்டு அடையாளத்திற்கு, குழும அடையாளத்திற்கு அடிப்படை. ‘திராவிட தமிழர்’ என்ற வரலாற்றுத் தன்னுணர்வே தமிழக மக்களாட்சி அரசியலின் அடிநாதம். அதுவே திராவிட அரசியல் சித்தாந்தம். அந்த தன்னுணர்வு கொண்ட மக்கள் தங்கள் சட்டமன்றத்தில் அரசை தமிழ்நாடு அரசு என்றும், அதன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியை தமிழ்நாடு என்றும் பெயரிட்டுக் கொண்ட நாள் 1967 ஜூலை 18. அதுவே திராவிட தமிழரின் வரலாற்று தன்னுணர்வு சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமாக பதிவேற்றம் பெற்ற நாளாகும்.”

ஐயா, மக்கள் தொகுதி என்ற வரையறையில் தமிழ் மக்களை அடையாளப்படுத்த முடியாதா? தமிழ்த் தேசிய இனம், தமிழ்த் தேசம் என்ற வரையறைகளை ஏற்றுக் கொள்கின்றீர்களா? இல்லையா? தமிழ் மக்களை ஒரு மக்கள் தொகுதியாக நீங்கள் கருதவில்லையா?

“தமிழ்நாடு தமிழருக்கே!” என்பதுதான் தந்தை பெரியார் இறுதி வரை எழுப்பிய முழக்கம். இந்த முழக்கம் சரியா? தவறா? “தமிழ்நாடு திராவிடருக்கே!” என்று அவர் முழங்கியிருக்க வேண்டும் எனக் கருதுகின்றீர்களா? அல்லது “தமிழ்நாடு திராவிடத் தமிழருக்கே!” என்று அவர் முழங்கியிருக்க வேண்டுமா?

சென்னை மாநிலச் சட்டமன்றமாக இருந்த தமிழ்நாடு சட்டமன்றம் தன் ஆட்சிப் புலத்துக்கு சூலை 18ஆம் நாள் “தமிழ்நாடு” என்று பெயரிட்டுக்கொண்டது தமிழ் மக்களின் வரலாற்றுத் தன்னுணர்வு பதிவேற்றம் பெற்ற நாள் என்றுதான் அறிஞர் அண்ணா தொடங்கி அனைத்துத் தமிழர்களும் கருதினோம், கருதிக் கொண்டும் இருக்கிறோம். நீங்கள் சொல்வது போல் அது திராவிடத் தமிழரின் வரலாற்றுத் தன்னுணர்வு பதிவேற்றம் பெற்ற நாளாக இருக்க வேண்டும் என்றால் “திராவிட நாடு” என்றோ “திராவிடத் தமிழ்நாடு” என்றோ பெயரிட்டிருக்க வேண்டும் அல்லவா?

உங்கள் பார்வையில் நீங்கள் உறுதியாக இருந்தால் “தமிழ்நாடு” என்ற பெயரை மறுத்து, திராவிட நாடு என்றோ திராவிடத் தமிழ்நாடு என்றோ பெயரிடுமாறு வலியுறுத்த வேண்டும் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை?

“தமிழகத்தில் உருவான தன்னுணர்வு கொண்ட மக்கள் தொகுதியை திராவிட தமிழர் என்று அறிவதே பொருத்தமானது” என்கிறீர்கள். அப்படியானல் அந்த மக்கள் தொகுதிக்குரிய ஆட்சிப்புலத்தைத் “திராவிடத் தமிழ்நாடு” என்றழைக்குமாறு வலியுறுத்த வேண்டியதுதானே? “திராவிடவியம்” என்று சொல்லி விட்டு திராவிட நாட்டை ஏன் கைவிட்டீர்கள் ஐயா?

நீங்கள் சொல்கின்றீர்கள்:

“பண்பாடு, மொழி, நிலப்பகுதி ஆகிய மூன்றில் ஆரிய பண்பாட்டை மறுதலிக்கும் திராவிட பண்பாட்டு அடையாளமே முதன்மையாக விளங்குகிறது. அது தமிழ்நாட்டில் தமிழுணர்வைத் தனக்கு ஆதாரமாகக் கொள்கிறது. ஆனால் பார்ப்பனீய, ஜாதீய எதிர்ப்பின் சொல்லான திராவிடம் என்ற சொல்லை தமிழுடன் எப்போதும் இணைத்துக் கொள்கிறது.”

திராவிடப் பண்பாட்டுக்குத் தமிழ்நாட்டில் தமிழுணர்வு ஆதாரம் என்றால், கேரளத்தில் மலையாள உணர்வும், கர்நாடகத்தில் கன்னட உணர்வும், ஆந்திரத்தில் தெலுங்கு உணர்வும் அதே திராவிடப் பண்பாட்டுக்கு ஆதாரமாக இருக்க வேண்டுமல்லவா? மெய்யாகவே இருக்கிறதா? அல்லது இனியாவது இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவீர்களா? மொழிவழித் தேசியத்தை ஒரு வகைப் பண்பாட்டுத் தேசியத்தால் பின்னுக்குத் தள்ளப் பார்க்கின்றீர்கள். தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்றே இல்லையா? அல்லது அதுவும் ஆரியப் பண்பாட்டில் அடக்கமா? தமிழுணர்வு வேண்டாம், தமிழ்ப்பண்பாடும் வேண்டாம், தமிழ்நாடு என்ற பெயர் மட்டும் வேண்டுமா?

இந்த முரண்பாட்டுக்குத் தந்தை பெரியாரே தீர்வு கண்டார். 1955 அக்டோபர் 10ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் அவர் சொன்னார்:

``தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்து போன பின்பும் கூட தமிழகத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் இருக்கக் கூடாது எனச் சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள். அந்தப் பெயரை மறைத்து 'சென்னை நாடு' என்று பெயர் சூட்டவும் போகிறார்கள் என்று தெரிகிறது. தமிழ், தமிழ்நாடு என்ற பெயர் இந்த நாட்டுக்கு இல்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிடக் கூடாது.''

1956 நவம்பர் முதல் நாள் தமிழ் மக்களுக்குத் தனி மாநிலம் அமைந்ததைப் பெரியார் ஆர்வத்துடன் வரவேற்றார். மொழிவழி மாநிலப் பிரிப்பு என்பது திராவிட மக்களை இந்திய அரசு பிரித்த நாள் என்ற உங்கள் அபத்தப் பார்வையைப் பெரியாரோ அண்ணாவோ எம்ஜிஆரோ கலைஞரோ மு.க. ஸ்டாலினோ ஒருநாளும் ஏற்க மாட்டார்கள். பெரியாரும் அண்ணாவும் மொழிவழி மாநில அமைப்பை விரும்பியதால்தான் தட்சிணப்பிரதேசத் திட்டத்தை வன்மையாக எதிர்த்து முறியடிக்க உதவினார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

நீங்கள் சொல்கின்றீர்கள்: “அ.இ.அ.தி.மு.க பெயரில் அண்ணாவையும், திராவிடத்தையும் வைத்திருந்தாலும் அகில இந்திய சார்புள்ள எதிர்ப்புரட்சி இயக்கம். அதனால்தான் இந்திய அரசு தன் நிர்வாக வசதிக்காக மொழிவாரி மாநிலங்களை உருவாக்கிய தினத்தை தமிழ்நாடு நாளாக அறிவித்தது. நவம்பர் 1ஆம் தேதி என்பது திராவிட கூட்டாட்சி குடியரசை இந்திய ஒன்றியம் தன்வயப்படுத்திக்கொண்ட நாள் என்று வேண்டுமானால் கூறலாம். அதில் திராவிட இயக்கம் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது என்பதே கேள்வி.”

தமிழ்நாடு நாளின் வரலாறு தெரியாதா உங்களுக்கு? மொழிவழி மாநிலங்கள் அமைப்பதற்கான போராட்ட வரலாறு தெரிந்துமா இப்படி எழுத முடிகிறது உங்களால்? கர்சான் பிரபுவின் வங்கப் பிரிவினை, காந்தியார் தலைமையேற்ற 1920 நாகபுரி காங்கிரஸ் மாநாடு தொடங்கி மொழி வழி மாநிலத் தேவையை அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தி திராவிட நாடு ஏட்டில் அண்ணா எழுதினாரே, நீங்கள் படித்ததில்லையா?

ஆந்திர மாநிலம் அமைவதற்காக பொட்டி சிறிராமுலுவின் உயிரீகம், “விசலாந்திரத்தில் மக்கள் இராச்சியம்” முழக்கத்துடன் பொதுமையர் (கம்யூனிஸ்டுகள்) வழிநடத்திய வீரத் தெலங்கானா ஆய்தப் போராட்டம், மார்சல் நேசமணி தலைமையிலான குமரி விடுதலைப் போராட்டம், மங்கலங்கிழார் தலைமையிலான வட எல்லை மீட்புப் போராட்டம், மபொசியின் போராட்டம், சங்கரலிங்கனாரின் உயிரீகம் எல்லாமே உங்களுக்குத் துச்சமா?

திராவிட இயக்கம் தமிழர்களுக்கான மொழிவழி மாநில அமைப்பை வரவேற்றிருக்கக் கூடாது, எதிர்த்திருக்க வேண்டும் என்பதுதான் உங்கள் நிலைப்பாடா? வெளிப்படையாகச் சொல்லுங்கள்

ம.பொ.சி. கேட்டுக் கொண்டபடி முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 1981 நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு உருவான பொன்விழாவாக அறிந்தேற்றுக் கொண்டாடினார். அதே போல 2006ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் நவம்பர் முதல் நாளை அறிந்தேற்று தமிழ்நாடு உருவான பொன்விழாவைக் கொண்டாடினார். சான்றோர் பேரவை சார்பில் நடந்த தமிழகப் பெருவிழாக்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

பல ஆண்டுக் கால வற்புறுத்தலுக்குப் பிறகு 2019ஆம் ஆண்டுதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “நவம்பர் முதல் நாள் இனி ஒவ்வோராண்டும் தமிழ்நாடு உருவான நாளாகக் கொண்டாடப்படும்” என்றார். 2020 நவம்பர் முதல் நாளுக்கு மு.க. ஸ்டாலினும் வாழ்த்துச் சொன்னார்.

சூலை 18ஆம் நாளைக் கொண்டாட வேண்டும் என்று இதற்கு முன் எப்போதாவது நீங்கள் கேட்டதுண்டா? 1967 சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை முன்மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றிக் கொண்ட அறிஞர் அண்ணா அடுத்த ஆண்டு 1968 சூலை 18ஆம் நாளைக் கொண்டாடினாரா? 1969ஆம் ஆண்டு சூலை 18ஆம் நாளைக் கலைஞர் கொண்டாடினாரா? பிறகு எப்போதாவது கொண்டாடினாரா? யாரும் எக்காலத்திலும் கொண்டாத சூலை 18ஆம் நாளைக் கொண்டாட வேண்டும் என்று 2021 நவம்பர் 1 நெருங்கும் போது சாலமன் பாப்பையா போன்றவர்களுக்குத் தோன்றியதன் மருமம் என்னவாக இருக்கக் கூடும்? மொழிவழி மாநில அமைப்பைச் சீர்குலைக்கும் திட்டம் கொண்ட தில்லி வல்லரசியத்துக்கு நவம்பர் ஒன்று கசந்ததன் விளைவுதானா இந்த சூலை 18 ஞானோதயம்?

சூலை 18 தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட நாளன்று என்பதால்தான் அண்ணா அந்த நாளைக் கொண்டாட வில்லை. ஏனென்றால் அந்த அதிகாரம் மாநிலச் சட்ட மன்றத்துக்கு இல்லை.

இந்திய அரசமைப்புச் சட்டப்படி (உறுப்பு 3) நாடாளுமன்றத்துக்குத்தான் அந்த அதிகாரம் உண்டு. 1968 நவம்பர் 24ஆம் நாள்தான் நாடாளுமன்றம் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் இயற்றியது. தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட நாள் சூலை 18 அல்ல, நவம்பர் 24தான் என்பது நம் மாநிலத்துக்கு நாமே பெயர் சூட்டிக் கொள்ள முடியாத நம் அடிமைநிலையைத்தான் நினைவூட்டும்.

அப்படியிருந்தும் நம் போராட்டத்தால்தான் இந்தப் பெயர் கிடைத்தது என்பதால் கொண்டாடலாம். தமிழ்நாடு பெயர் சூட்டிய நாளைக் கொண்டாடலாம். அண்ணா கொண்டாடவும் செய்தார். 1968 திசம்பர் முதல் நாள் தமிழ்நாடெங்கும் விழாவெடுத்தார் – அந்த விழாக்களில் சங்கரலிங்கனாருக்கு நன்றி பாராட்டினார். ஆனால் தமிழ்நாடு பெயர் மாற்றம் 1969 சனவரி 14 பொங்கல் நாளில்தான் நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாடு நாள் நவம்பர் முதல் நாள், தமிழ்நாடு பெயர் வென்ற நாள் சனவரி 14 அல்லது தை முதல் நாள் என்பதுதான் சரியாக இருக்க முடியும்!

இப்படியிருக்க, நவம்பர் முதல் நாள் தமிழ்த்தேசிய எழுச்சி நாளாக வளர்ந்து வருவதைப் பொறுக்க முடியாதவர்கள் இவ்வாண்டு அந்த நாள் நெருங்கி வரும் போது அதைக் கெடுக்கவே சூலை பதினெட்டைக் கிளப்பி விட்டுள்ளார்கள் என்பது என் ஐயப்பாடு!

போகட்டும். உங்கள் கட்டுரையில் விவாதத்துக்குரிய பல செய்திகள் இருப்பினும் நவம்பர் ஒன்று – எதிர் – சூலை பதினெட்டு என்ற இந்தப் புள்ளியை மட்டும் எடுத்துக் கொண்டேன். நீங்கள் தொடர்வீர்களானால் மற்றச் செய்திகளைப் பற்றியும் விவாதிக்க விரும்புகிறேன்.

இந்தத் தலைப்புக்குத் தொடர்பில்லாத ஒன்றே ஒன்றை மட்டும் இப்போதே சுட்டி வைக்கிறேன். “உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பதுதான் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையின் முழக்கமாக இருந்தது” என்று எழுதியுள்ளீர்கள். பொதுமைக் கட்சியின் கொள்கையறிக்கையில் (COMMUNIST MANIFESTO) அப்படி ஒரு முழக்கமே இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். “WORKERS OF ALL COUNTRIES, UNITE!” என்பதைத் தவறாக மொழிபெயர்த்துள்ளார்கள். இந்தத் தமிழாக்கப் பிழை எவ்வளவு மோசமான கருத்தாக்கப் பிழைகளுக்கு வழிகோலுகிறது என்பதற்கு உங்கள் கட்டுரையே சான்று!

- தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

Pin It