தமிழ், தமிழன், தமிழ்நாடு, இந்தியா, திராவிடன், திராவிடம், திராவிட நாடு என வரும் சொற்கள், சொல்லாட்சிகள், அவை குறித்த - குறிக்கிற செய்திகள் யாவை என்பது பற்றிச் சுருக்க மாகச் சில செய்திகளை இங்கே பதிவு செய்ய முயற்சித்துள்ளேன். இவற்றை எல்லோரும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என உரிமையுடன் வேண்டுகிறேன்.
‘தமிழ்’, ‘தமிழ் கூறும் நல்லுலகம்’ என உள்ள சொற்கள் தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளன.
தொல்காப்பியம் தமிழர்க்குக் கிடைத்துள்ள முதலாவது தமிழ் நூல் ஆகும். அது குறைந்தது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
‘தமிழ்’ என்ற சொல்லும், தமிழ் கூறும் நல்லுலகம்-தமிழ் பேசப்பட்ட உலகம்-தமிழ்மொழி பேசப்பட்ட நாடு என்ற கருத்து இதனால் 2500 ஆண்டுக்கு முந்தைய வரலாற்றைப் பெற்றிருக்கிறது.
அடுத்து, தமிழ் மறுமலர்ச்சிக் காலம் அல்லது சைவ சமய எழுச்சிக் காலம் எனப்படுகிற கி.பி.6ஆம் நூற் றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில், கி.பி.6ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் என்னும் அப்பர் பாடிய தேவாரத்தில், திருத் தாண்டகப் பகுதியில், ‘ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்’ என்னும் ஒரு வரி, ஓர் அடி வந்துள்ளது. தமிழன் என்ற சொல் லாட்சிக்கு அதுவே தோற்றுவாய் எனக் கொள்ளலாம்.
அதன்பின்னர், 1300 ஆண்டுகள் கழித்து. 1908இல் மேதை பண்டித அயோத்திதாசர் “தமிழன்” என்ற பெயரில் ஓர் இதழினைவெளியிட்டு, “தமிழன்” என்னும் சொல்லை ஆட்சிக்குக் கொண்டு வந்தார். இதற்கு முன்னரே, “தமிழகம்” என்னும் பெயரில் ஓர் இதழினை 1905இல் தஞ்சாவூர் உலகநாதம் பிள்ளை என்பவர் வெளியிட்டுள்ளார். 1920இல் “செந்தமிழ்க் களஞ்சியம்” என்னும் ஏட்டினை மறைமலையடிகள் வெளியிட்டுள்ளார்.
தமிழ், தமிழ் உலகம், தமிழன், தமிழகம், செந்தமிழ் என்னும் சொல்லாட்சிகள் இப்படியே எழுத்து வழக்கிலும், பேச்சு வழக்கிலும் பதிவாகியுள்ளன.
கி.பி.8ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் எனக் கருதப்படும் மாணிக்கவாசகர், “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என மனமாரப்பாடி மகிழ்ந்தார். சிவன் தமிழர்க்குரிய முழுமுதற் கடவுள் என்று நம்பப்பட்டாலும், இந்தியா முழுவதிலும் சிவனிய மதம் பரவிவிட்டது. ஆயினும் தென்னாட்டுக்கு உரிய கடவுள் சிவன் என்பதைக் குறிக்கவே அவர் அவ்வாறு பாடினார்.
சேரர், சோழர், பாண்டியர் வரலாறுகள் கடைச் சங்ககால நூல்களில் - குறிப்பாகப் புறநானூற்றில் பதிவாகியுள்ளன. பழந்தமிழர் வாழ்வு பற்றிய ஆய்வு 1866க்குப் பிறகுதான், அகழ்வு ஆராய்ச் சிகள் வாயிலாக நிலைநாட்டப்பட்டது. கி.பி.850க்குப் பிற்பட்ட காலத் தமிழ் அரசர்களின் வரலாறுகளையும், ஆட்சிக் கால வரையறைகளையும் அறிய உதவும் நிலைத்த சான்றுகளாக கல் வெட்டுகளும், செப்பேடுகளும் உள்ளன.
“தமிழ்நாடு தமிழருக்கே!”, “தமிழ் வாழ்க!” என்னும் முழக்கங்கள் 11.09.1938இல் முதன்முதலாக சென்னை, திருவல்லிக்கேணி கடற்கரையில் பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்க ளால் எழுப்பப்பட்டன. ‘தமிழ் வாழ்க!', ‘இந்தி ஒழிக!' என்னும் முழக்கங் களை ஏற்ற எல்லோராலும்-எல்லாத் தமிழராலும் ஒரே முகமாகத் ‘தமிழ் நாடு தமிழருக்கே’ என்ற அரசியல் கோரிக்கை தூக்கிப் பிடிக்கப்படவில்லை. பெரியாரின் தலைமையில் இயங்கிய ‘தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்’
என்கிற ‘நீதிக்கட்சி’யின் முழக்கமாகவே அது இருந்தது. 1920 நீதிக்கட்சி ஆட்சியின் தொடக்க காலந்தொட்டு, 1937இல் அக்கட்சியின் ஆட்சி முடிவுக் காலம் வரையில் தமிழர், தெலுங்கர், மலையாளிகள், கன்னடியர் ஆகிய நான்கு மொழிகளைப் பேசும் நாடுகளின் மக்களுக்கு உரிய தாகவே சென்னை மாகாண ஆட்சி இருந்தது. அப்படிப்பட்ட கட்சியின் பேரால் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் கோரிக்கையை எழுப்பிய போது, அக்கட்சியிலிருந்த தமிழர் அல்லாதார், நீதிக்கட்சியில் தங்கள் தங்கள் நிலைபாடு என்ன என வினா எழுப்பினர். அதன் விளைவாகவே, ‘தமிழ்நாடு தமிழருக்கே!' என்னும் முழக்கம், 17.12.1939க்குப் பிறகு “திராவிட நாடு திராவிடருக்கே” என (17.12.1939 ‘குடிஅரசு’) உருப்பெற்றது. ‘திராவிட நாடு’ என்பது ‘சென்னை மாகாணம்’ என அன்று இருந்த தென்னிந்திய ஆட்சிப் பகுதியையே குறித்தது.
இதனை, மேற்கண்ட நான்கு மொழியினரும் பங்கேற்ற திருவாரூர் நீதிக்கட்சி மாநாட்டில் 1940இல் துலாம்பரமாக அறிவித்தனர். ஆயினும் எந்தக் கட்டத்திலும் தமிழ்நாடு தவிர்த்த-தமிழர் அல்லாத மற்ற திராவிட மொழி நாடுகளில் இக்கோரிக்கைக்கு ஆதரவோ, செல்வாக்கோ தேடப்படவில்லை.
மேலும், 1940 முதல் 1945 முடிய அக்கோரிக்கையின் உள்ளடக்கம் தில்லி பார்ப்பன-பனியா ஆதிக்கத்திலிருந்து சென்னை மாகாணம் விடுபட்டு, வெள்ளையரின் நேரடி ஆட்சியின்கீழ் இருக்கவேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. வெள்ளையர் இக்கோரிக்கையை ஏற்க மறுத்தனர். அந்தக் கோட்பாடு, 1945 வரையில், முழு உரிமை பெற்ற சுதந்தரத் திராவிட நாடு கோருவதான உள்ளடக்கத்தைப் பெற்றிருக்கவில்லை என்பது நினைவில் கொள்ளத் தக்கது. நிற்க.
அதன்பிறகு 1945இல் திருச்சி மாநாட்டில்தான் ‘சுதந்தர திராவிட நாடு’ கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
“திராவிட நாடு திராவிடருக்கே!" என்னும் கோட்பாடு 1956 அக்டோபர் வரையில் பெரியாரால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது.
1916, 1926 தொடங்கி இரண்டு காரணங்களுக்கான அடிப்படையில் கோரிக்கைகள் எழுந்தன.
1916இல் தோற்றுவிக்கப்பட்ட, “தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்”, தென்னிந்தியாவில் - சென்னை மாகாணத்தில் சமுதாயம், சமயம், கல்வி, மாகாண, மத்திய சட்ட அவைகள், மாகாண ஆட்சி நிருவாகம், மாகாண நீதித்துறை நிருவாகம் இவற்றில் பார்ப்பனர் பெற்றிருந்த பெரிய ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் அடியோடு ஒழிப்பதை நோக்கங்களாகக் கொண்டது.
அன்று ஒற்றை ஆட்சிப் பரப்பாக விளங்கிய இந்தியாவில்-25 கோடி மக்கள் இருந்த இந்தியாவில் சில இலக்கம் பிரிட்டானிய வெள்ளையரே இந்தியா முழுவதிலும் எல்லா உயர் நிருவாகத் துறைகளிலும் முழு ஆதிக்கம் பெற்றிருந்தனர். அந்த ஆதிக் கத்தை ஒழித்திட சட்ட அவைகளையும் ஆட்சி நிருவாகத் தையும் “இந்தியர் மயம் ஆக்குதல்” என்னும் கோட்பாட்டை இந்திய தேசிய காங்கிரஸ் 1885 முதலே தூக்கிப் பிடித்தது. அப்போதைய காங்கிரசில் பார்ப்பனர், பார்சி, வெள்ளையர் மட்டுமே உயரிய கட்சிப் பொறுப்புகளில் இருந்தனர். அதனால் இயல்பாகவே-தவிர்க்க முடியாததாகவே, கட்சியிலும், ஆட்சி யிலும் “இந்தியர் மயம் என்பது பார்ப்பனர் மயமாகவே” முடிந்தது.
அன்று இந்தியருள் எழுத்தறிவு பெற்றோர் மிகவும் குறைவு, சென்னை மாகாணத்தில் எழுத்தறிவு பெற்றோர் 7 விழுக்காடு பேர். இந்த 7 விழுக்காட்டில் யார், யார் இடம் பெற்றிருந்தார்கள்? பார்ப்பனர் மூவருள் 2 பேர்; பார்ப்பனர் அல்லாதாரில் மேல்சாதியினர் (கம்மவார், வெள்ளாளர், ரெட்டியார்) 3 பேர்; முகம்மதியரில் உருது பேசுவோர் 1; கிறித்துவரில் மேல் சாதியினர் 1, இவர்களே எழுத்தறிவு பெற்றிருந்தனர். 100க்கு 85, 90 பேர்களாக இருந்த சூத்திர கீழ்ச் சாதிகளிலும், ஆதித்திராவிடரிலும் எழுத்தறிவு பெற்றவர்களே இல்லை.
இந்த இழிவு பற்றி, 1885 முதல் செயல்பட்ட இந்திய தேசிய காங்கிரசோ, 1923 முதல் தனித்து இயங்கிய தமிழ் மாகாண காங்கிரசோ, இந்திய அளவில் 1925 முதல் செயல்பட்ட பொது வுடைமைக் கட்சியோ, 1936 க்குப் பிறகு காங்கிரசுக்குள்ளேயும், தனியாக வெளியே யும் இயங்கிய சோசலிஸ்டுக் கட்சியோ, கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. இவை சிந்திக்கத் தக்கவை.
சென்னை மாகாணத்தில் இயங்கிய நீதிக்கட்சியினரும், பெரியாரும்; பம்பாய் மாகாணத்தில் இயங்கிய உண்மை நாடுவோர் சங்கத்தினர், பார்ப்பனர் அல்லாத குழுவினர், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் இயங்கிய அமைப்பினரும் மட்டுமே இதுபற்றிக் கவலைப்பட்டனர்.
இந்திய அளவில் இந்து-இசுலாம்-பார்சி என்கிற வேற்றுமைகளை மூடிமறைத்துக் கொண்டு, ‘இந்தியர்’ என்கிற பெயரிலும், வடிவிலும் வெள்ளையர் ஆதிக் கத்தை எதிர்த்தது போலவே, சென்னை மாகாணத்தில் நிலவிய பார்ப்பனர் ஆதிக்கத்தை தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் ஆகிய பார்ப்பனரல்லா தார் இணைந்து, “திராவிடர்” என்ற பெயருடன் முழு மூச்சாக எதிர்ப்பது ஒரு தவிர்க்க முடியாத - ஓர் இன்றிய மையாத தேவையாக, கட்டாயக் கடமையாக இருந்தது. இதனால் எல்லோரும் அறியத்தக்க சில நற்பயன்கள் ஏற்பட்டன.
1. 1923க்கு பிறகு ஆதித்திராவிடரும், சிற்றூர்ப்புற சூத்திரச் சாதியினரும் பொதுக் கல்வி பெற முதன்முதலாக வாய்ப்பு ஏற்பட்டது. வெள்ளையர் வெளியேறிய 1947இல், சென்னை மாகாணத்தார் எழுத்தறிவு 16 விழுக்காடு. இதில் பார்ப்பனர் 3 பேர், மற்றவர் ‘சென்னை மாகாணப் பார்ப்பனர் அல்லாதார்’. இன்று தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் 70 விழுக்காடு: இதில் பார்ப்பனர் 3 பேர் போக, மீதப்பட்டோர் பார்ப்பனர் அல்லாதார்.
2. கல்லூரிக் கல்வியில் 1910-20களில் 70 விழுக்காடு இடங்களைப் பார்ப்பனர் பெற்றிருந்தனர். இன்றைய தமிழகத்தில் இந்த நிலை மிகப்பெரிய அளவில் மாறி யிருக்கிறது. இது உண்மை.
3. மாகாண அரசு-மாநில அரசு உயர் அலுவல்களில் இன்று தமிழ் நாட்டில் பார்ப்பனர் ஆதிக்கம் பெரிய அளவுக்கு இல்லை, ஆனால் ஒற்றை இந்தியாவின் பகுதியாக மட்டுமே உள்ள தமிழகத்தில், உயர் இந்திய ஆட்சிப் பணி அலுவல்களில், பிறமொழியினர் ஆதிக்கம் பெரிய அளவில் உள்ளது. இதுவும் உண்மை.
4. சமுதாயத்திலும், சமய வாழ்விலும் பார்ப்பனர் ஆதிக்கம் 1926க்குப் பிறகு ஒரு சரிவைச் சந்தித்திருக்கிறது. பார்ப் பனியத்தின் பேரில் ஒரு எதிர்ப்பு உணர்வு எல்லாத் தரப்புத் தமிழரிடத்திலும், ஏதோ ஒரு தன்மையிலும் வடிவிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அதை உண்மை யான பார்ப்பனிய மறுப்பாக-ஒழிப்பாக வளர்த்தெடுக்கப் போதிய முயற்சிகள் இல்லை.
இப்படிப்பட்ட ஒரு நிலை, இந்தியாவிலுள்ள பிறமொழி மாநிலங்களில் 1916-2005க்கு இடைப்பட்ட 90 ஆண்டுகளில் உண்டாக்கப்படவில்லை. அங்கெல்லாம் திராவிட இயக்கம் என்பது வேர் பிடிக்கவில்லை; அதற்கான முயற்சிகளைத் திராவிட இயக்கம் மேற்கொள்ளவில்லை.
மா.பெ.பொ.க. 1978 முதல் இந்திய மாநிலங்கள் பல வற்றில் நேரடியாக மேற்கொண்ட செயல்பாட்டினால், கீழ்த்தட்டு சூத்திர வகுப்பினருக்குப் பிற்படுத்தப்பட்ட இந்து, இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய வகுப்பினருக்கு, 1994 முதல் மய்ய-மாநில அரசு அலுவல்களில் மட்டும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. பார்ப்பன ஆதிக்க ஒழிப்புக்கு இது போதாது. நிற்க.
இந்நிலையில், தமிழ், தமிழன், தமிழ்நாடு என்னும் கோட்பாடு முழு வீச்சோடு வளரவும், தழைக்கவும் ‘திராவிடம்’, ‘திராவிடர் இயக்கம்’, ‘திராவிடக் கொள்கை’ ஒரு பெருந்தடை யாக இருந்தது -இன்றும் இருக்கிறது என்று கருதப்படுவது பற்றி இங்கே சிலவற்றைக் குறிப்பது பொருந்தும்.
வெள்ளையர் வருகைக்கு முன்னரே; பிஷப் கால்டு வெல் அவர்களின் திராவிடமொழிக் குடும்பம் பற்றிய கருதுகோள் மற்றும் ஆய்வுக்கு முன்னரே; ஹீராஸ் பாதிரியாரும், சர். ஜான் மார்ஷல் என்பாரும் மொகஞ்ச தாரோ, ஹாரப்பா அகழ்வு ஆய்வு முடிவில் திராவிட அல்லது தமிழ் நாகரிகத்தின் அழிபாடுகளே அங்கு உள்ளவை என்பதை உலகுக்கு அறிவிக்கும் முன்னரே; சென்னை மாகாணப் பார்ப்பனரல்லாதார் 1916இல் நீதிக்கட்சியை அமைப்பதற்கு முன்னரே; 1944இல், பெரியார் ஈ.வெ.இரா., ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்பதன் பெயரை ‘திராவிடர் கழகம்’ என மாற்றி அமைப்பதற்கு முன்னரே - ‘திராவிட’, ‘திராவிட சங்கம்’ என்னும் சொல்லாட்சிகள் இங்கு இருந்துள்ளன. அச்சொற்கள் எதையெதைக் குறிப்பதற்காகப் பல்வேறு காலக்கட்டங்களில் கையாளப்பட்டுள்ளன. அதனால் விளைந்தவை கேடானவையா, நன்மையானவையா என்பதை நாம் சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது.
1. ‘திராவிட சங்கம்’ என்னும் பெயரில், கி.பி.5ஆம் நூற்றாண்டில், வச்சிர நந்தி என்பவரால் நிறுவப்பட்டது. இது ஒரு சமண சங்கம் எனக் கருதப்படுகிறது. சமணம், வேத மதம் என்கிற பார்ப்பன மதத்துக்குப் புறம்பானது; எதிர்ப் பானது.
இதனால்,வேதமதத்துக்கு எதிரான சங்கம் ‘திராவிட சங்கம்’ என்பதை,இச்சொல்லாட்சி குறிப்பதாகக் கொள்ளலாம்.
2. தென்னிந்தியப் பார்ப்பனர்களை, ‘திராவிட பிராமணன்’ எனக் குறிப்பிடும் வழக்கம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு வழக்கில் வந்தது.
இதில் உள்ள ‘திராவிட’ என்னும் சொல்லாட்சி, தென்னாடு, தெற்குப் பகுதி என்பதைக் குறிக்கவே பயன்பட்டுள்ளது.
1901-1909இல் எட்கர் தர்ஸ்ட்டன் தொகுத்து வெளியிட்ட “தென்னிந்தியச் சாதிகளும் பழங்குடிகளும்“ (Castes and Tribes of Southern India) என்னும் சென்னை மாகாண அரசு வெளியீடாக வந்த நூலில், பின்வருமாறு காணப்படு கிறது.
திராவிட-தென்னிந்திய பிராமணர்கள் ‘திராவிட’ என அழைக்கப்படுகின்றார்கள் (South Indian Brahmans are called Dravidas - Vol-II, C-J, Page 166).
பிராமணர் எனப்படும் பார்ப்பனர் இந்தியா முழுவதிலும் உள்ளனர். ஆனால் ‘தென்னாட்டுப் பார்ப்பனர்’ என்பதைக் குறிக்கவே தென்திசைப் பார்ப்பனர் ‘திராவிட பிராமணாள்’ என அழைக்கப்பட்டனர். இன்றும் இத்தன்மையில் இது வழக்கில் உள்ளது.
3. 1850க்குப் பிறகு தமிழில் பல மாத ஏடுகள், கிழமை ஏடுகள், நாள் ஏடுகள் அச்சிடப்பட்டு வெளிவந்தன.
‘திராவிட’ என்கிற சொல்லை முன்னொட்டாகக் கொண்டு முன்னால் இணைத்துக் கொண்டு 1884 முதல் பல ஏடுகள் வெளிவந்துள்ளன. அவையாவன :
திராவிட அபிமானி 1884
திராவிட வர்த்தமானி வாரம் இருமுறை செய்தி இதழ், வாசுதேவன், பெங்களூர் 1884
திராவிட பாண்டியன் ஜான் இரத்தினம் சென்னை 1885
திராவிட இரஞ்சினி டி.வி. வெங்கடராஜுலு நாயுடு, திருச்சி 1887
திராவிட வர்த்தினி மாத செய்தி இதழ், சண்முகம், சென்னை 1891
திராவிட நேசன் சைவ சமய இதழ். பார்த்தசாரதி, தஞ்சாவூர் 1891
திராவிட மந்திரி வார இதழ், ஈழத்து ச. விசுவலிங்கம், காரைக்கால் 1893
திராவிட பானு வார இதழ், தூத்துக்குடி 1895
திராவிட பாண்டியன் வார இதழ் 1896
திராவிட கோகிலம் காலாண்டு இதழ், சதாசிவம், (தமிழ் ஆங்கிலம்) யாழ்ப்பாணம் 1899
திராவிட கோகிலம் சென்னை 1907
திராவிட பாகதவன் (தென்கலை வைணவ இதழ்) டி.கே. சீனிவாச அய்யங்கர், சென்னை 1914
திராவிடன் தமிழ் நாளேடு ஜனசங்கர கண்ணப்பர் 1917
திராவிட மித்திரன் ஆர். இராசகோபால், சென்னை 1934
திராவிட நாடு சி.என். அண்ணாதுரை, காஞ்சிபுரம் 1942
திராவிட முரசு நைனாள் 1947
திராவிடன் என்.வி. நடராசன் 1947
திராவிட முரசு வே. கரிகாலன், கோவை 1953
திருவிடம் ஜி.கேசவன், சென்னை 1954
தமிழன் ரெங்கசாமி (மாஜினி), மதுரை 1954
திராவிட மணி டி.எம்.முத்து,திருச்சி 1957
தமிழன்குரல் எஸ்.கே.டி.சவுந்தரபாண்டியன், கோவில்பட்டி 1957
தமிழர் நாடு நா.வா.கலைமணி, சென்னை 1960
திராவிடஸ்தான் தமிழ் வேந்தன், சென்னை 1962
தமிழ்நாடு நாளேடு 1962
திராவிட யூனியன் ஏ.முகமது அலி, சென்னை 1965
தமிழ்மணி எம்.கே. மணி, சென்னை 1968
திருவிடம் ஆர். ஸ்டாலின், அர. திருவிடம் 1971
தமிழன் நாளேடு (தி.மு.க.) 1991
மேலே கண்டுள்ள ஏடுகளின் பெயர்கள் எந்தக் கருத்தில், எந்தக் கோட்பாட்டில் ‘திராவிட’ என்னும் முன்னொட்டுச் சொல்லை இணைத்துக் கொண்டன என அறிவது நல்லது.
1. 1884 முதல் 1934 வரையில், ‘திராவிட’ என்ற சொல்லை முன்னொட்டாகக் கொண்ட ஏடுகள், தென்னாடு, தெற்குத் திசை நாடு. தென்னாட்டு மக்களுக்கு உரிய சிவனிய மதம், தென்னாட்டுத் தென்கலைப் பார்ப்பனர்களுக்கு உரிய வைணவ மதம் என்பவற்றைக் குறிக்கவே பயன்பட்டுள்ளன. தென்னாடு என்பது உண்மையில் தமிழ்நாட்டைக் குறிப்பதே ஆகும்.
இது விளைத்தது நன்மையா, தீமையா?
திராவிட மொழிக் குடும்பக் கோட்பாடு நிறுவப்படுவதற்கு முன்னரே வழக்கில் வந்த திராவிட என்ற சொல் தமிழர் உள்ளிட்ட தென்னாட்டாரை-தென்னாட்டுக்கு மட்டுமே உரிய சமயநெறி முறையைத் தூக்கிப் பிடித்துக் காக்கும் நோக்குட னேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று வரையில் இது தமிழர்க்குப் பாதுகாப்பாகவே உள்ளது. தென்னாடு வேறுவடநாடு வேறு; தமிழர் வேறு-வடஆரியர் வேறு என்பதைப் பிரித்துக் காட்டிட இது பயன்பட்டது; பயன்படுகிறது.
2. 1917க்குப் பின்னர் திராவிட இயக்க முன்னோர்களால் பயன்படுத்தப்பட்ட ‘திராவிடன்’, ‘திராவிடர்’ என்னும் சொற்கள். இந்து மதத்தில் 100க்கு 96 பேராக உள்ளவர்களை வேறு பிரித்துக் காட்ட, ‘பார்ப்பனர் அல்லதார்’ என்கிற எதிர்மறைச் சொல்லால் குறிக்கிற இழிவையும் மானமற்ற தன்மையையும் நீக்கிவிட்டு, குறியீட்டுச் சொல்லாக ‘திராவிடன்’ என்னும் சொல் பயன்பட்டது; இன்றும் பயன் படுகிறது.
இது மொழிக் குடும்பம் மற்றும் இன அடிப்படையில் கையாளப்பட்டுள்ளது. இதுபற்றி இன்னும் விரிவாகவும், ஆழமாகவும், எழுதிடப் போதிய தரவுகள் உள்ளன. ஆயினும், இந்நூலின் தலையாய நோக்கம் அதுவன்று. எனவே விரிவுக்கு அஞ்சி இத்துடன் இக்குறிப்பை நிறுத்திக் கொள்கிறேன்.
இந்திய அளவில் தீண்டாமை, வருண வேறுபாடு, உள்சாதி வேறுபாடு இன்றும் நிலைத்துள்ளது. இதன் உயிர்ச் சத்தாக இருப்பது பார்ப்பனர் அல்லாத எல்லா உள்சாதியினரும் - சற்சூத்திரர், சூத்திரர், ஆதிசூத்திரர் எல்லோரும் பார்ப்பனியத்தை அன்றாட வாழ்வில் ஏற்றும் நம்பியும் பின்பற்றியும் வருவதும் வழக்கம்தான்.
வடநாட்டில் கி.மு.2ஆம் நூற்றாண்டில் தொடங்கி. கி.பி.5ஆம் நூற்றாண்டில் வலிமை பெற்றுப் பார்ப்பனிய வாழ்க்கை முறை படிந்தது.
அதேபோல் தமிழை வளர்த்த சங்ககாலம் தொடங்கி, பிற்காலச் சோழர், பாண்டியர் காலமான கி.பி.850க்குப் பிறகு 1300க்குள் வலுப்பெற்று, விசயநகர நாயக்கர், மராட்டியர்கள் ஆட்சிக்காலமான 14, 15, 16, 17ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பார்ப்பனிய வாழ்க்கை முறை கெட்டிப்பட்டுப் படிந்தது. வடநாட்டைக் காட்டிலும் வைதிகம் தோய்ந்த பார்ப்பனிய மதம் தமிழ்நாட்டிலும் மலையாளத்திலும் நன்கு வேரூன்றியது.
பார்ப்பனியம் இறுகிப்போன தமிழகத்தில். 1818 முதல் மார்க்க சகாய ஆச்சாரியும், 1865 முதல் வடலூர் வள்ள லாரும். 1872 முதல் அத்திப்பாக்கம் அ. வெங்கடாசல நாயகரும், 1890 முதல் பண்டித அயோத்திதாசரும், 1916 முதல் தென் னிந்திய நல உரிமைச் சங்கமும், 1926 முதல் பெரியாரும் மேற்கொண்ட பணிகளால் பார்ப்பனியம் ஆட்டம் கொடுத் திருக்கிறது. அவ்வளவே.
வடநாட்டில் புரட்சியாளர் மகாத்மா ஜோதிராவ் புலே. சாகுசத்திரபதி, மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் மேற்கொண்ட பார்ப்பனிய எதிர்ப்பு உணர்வு பிற்காலத்தில் பெரிய அளவுக்குத் தூக்கிப் பிடிக்கப்படவில்லை.
திராவிட இயக்கம் அனைத்திந்திய இயக்கமாக உரு வாக்கப்பட வேண்டும் என, 1945 முதலே பெரியார் விரும்பினார். 1971இல் இதை மிகவும் வலியுறுத்தினார்.
மேதை அம்பேத்கர் தம் வாழ்நாள் முழுவதும் இத் துறைகளில் பெரியாருடன் இணைந்தே செயல்பட்டார். இன்று அம்பேத்கர் அவர்களைப் போற்றுவோரும், பெரியார் அவர்களைப் போற்றுவோரும், மார்க்சியத்தைப் போற்று வோரும், ‘திராவிடம்', என்கிற கருத்தாடலுடன் போராடுவது சரிதானா என்பதை நடுநிலையிலிருந்து காண வேண்டும்.
“திராவிட நாடு திராவிடருக்கே” என்கிற கொள்கையை, மனமார 1.11.1956 முதலே பெரியார் கைவிட்டு விட்டார்
என்பதை, மூடிமறைத்துவிட்டு, “திராவிடம்” என்கிற கருத்தியல் 1500 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர்க்குத் தந்துள்ள மேற்கண்ட தனித்தன்மையையும், நன்மையையும் புறக் கணித்துவிட்டு, சிக்கல் இல்லாத சிக்கலை (Making non-issues as problems) முன்வைத்துப் பார்ப்பனர்க்கும், பார்ப்பனியத்துக்கும் உரம் சேர்த்திட அறிஞர்கள் முயலுவது சரியற்றது ஆகும்.
வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு இந்தியத் தேசியம்இல்லாத-ஒரு தேசியம்; இல்லாத “இந்தியா” என்கிற நாடு பயன்பட்டது, உண்மை.
இந்தியா என்பதாக ஒரு நாடு இல்லை என்பதை, இந்திய வரலாற்றில், முதன்முதலில், 1930 மே திங்களில் அடித்துச் சொன்னவர், பெரியார்.
தனித் தமிழ்நாடு என்னும் எண்ணத்துக்கான வித்து, பின்வரும் பேச்சில்தான் பெரியாரால் ஊன்றப்பட்டது. அப்பேச்சு வருமாறு :
“இந்தியா ஒரு நேஷனா?
அக்கிராசனரவர்களே! சகோதரர்களே!
இந்தியா ஒரு நாடு என்று ஆனால்தானே, இந்தியா முழுமையும் பற்றிப் பேச நமக்கு உரிமை உண்டு. இப்போது இந்தியா ஒரு நாடாயிருக்கின்றதா?
இந்தியா சாதிகள் காட்சி சாலையாக, மதக் கண்காட்சி சாலையாக, பாஷைகள் கண்காட்சி சாலையாக, சாமிகள் காட்சி சாலையாக இருக்கின்றதே ஒழிய, வேறு என்ன வாயிருக்கின்றது! இந்த நிலையிலுள்ள இந்தியா, விடுதலையோ முன்னேற்றமோ அடைவது என்பது சாத்தியமானதாகுமா! மற்ற நாட்டார்கள், தங்கள் நாட்டை ஒரு நாடாக்கி நம் நாட்டையும் அதோடு சேர்க்கப் பார்க்கின் றார்கள். யார், எந்த நாட்டோடு சேர்த்துக் கொள்ளுவ தென்று போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” (சேலத்தில் சொற்பொழிவு, ‘குடிஅரசு’ 1.6.1930)
மிகப் பெரிய படித்த தேசியவாதிகளும், பொதுவுடைமை சித்தாந்திகளும், புரட்சி பற்றிப் பேசும் சிந்தனையாளர்களும் கடந்த 75 ஆண்டுகளில் என்றைக்காவது இதன் உண்மை நோக்கத்தை உணர்ந்து, அவரவர் கட்சியும் இதை ஏற்கச் செய்தார்களா? இல்லை. அப்படி ஏற்கச் செய்யாதது, இந்திய சமூகத்தின் இருப்பு நிலையை-யதார்த்த நிலையை அடியோடு புறக்கணித்ததால் ஏற்பட்டதே ஆகும்.
பெரியார் மேலே சொன்னது ஓர் உண்மை. இந்த மாபெரும் உண்மையை அடியோடு புறக்கணித்துவிட்டு, “இந்தியா ஒரு நாடுதான்” என நம்புவோரும்; மற்றும் மொழிவழியாகத் தன்னுரிமை பெற்ற குடிஅரசுகள் அமைய வேண்டும் என்போரும் தனிச் சுதந்தர நாடு களாக மாநிலங்கள் பிரிய வேண்டும் என்போரும் உண்மையில் இந்தியா முழுவதையும் கட்டிப்பிடித் துள்ள, பார்ப்பனியம் வீட்டு வாழ்க்கை, சமய வாழ்க்கை, சமுதாயம் ஆகிய துறைகளில் ஆதிக்கம் பெற்றுள்ள தோடு, கல்வி, அரசு நிருவாகம், பொருளாதார அடித்தளமான நில உடைமை அமைப்பு, செல்வம் கொழிக்கும் இன்றைய தொழில்-வணிக அமைப்புகள் எல்லாம் சாதி அமைப்பு என்கிற கட்டுக் கோப்பின் மேல்தான் நிற்கின்றன என்பதை முழுவதுமாக உணர்ந்து, இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இவற்றை ஒழிக்கும் நோக்குடன் இணைந்து போராட முன்வந் தால் நன்றாகும்.
இவற்றை உணரவும், இணைந்து செயல்படவும் தமிழ்த் தேசியர்-அமைப்புத் தன்மையில் வெவ்வேறாக இருப்பினும் ஒரே திசையில் பயணிப்போம் என்கிற சிந்தனையை இக்கருத்துக்கோவை விளைவிக்குமானால், நன்றி பாராட்டுவேன். இத்திசை நோக்கிப் போவோர் இந்நூல் பற்றிக் கூறும் மாற்றங்கள் மற்றும் திருத்தங்களை மனங் கொண்டு ஏற்பேன். நன்றி.
(“தன்னுரிமைத் தமிழ்த்தேச எழுச்சி முரசு-நூல்” முன்னுரை, 2006)
- வே.ஆனைமுத்து