1. "பந்தலிலே பாகற்காய்"

இழவு வீட்டில் ஒப்பாரி பாடும் போதும் பந்தலிலே தொங்கும் பாகற்காயில் கண் வைத்த பெண்ணைப் பற்றிய கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்திய அரசும் அதே நிலையில்தான் உள்ளது என்பதற்கு இன்னுமொரு சான்றுதான் அது முன்மொழிந்திருக்கும் மின்சாரச் சட்டம், 2020. இது குறித்துக் கருத்துச் சொல்ல 21 நாள் தரப்பட்டுள்ளது. அதாவது அரசாங்கம் அறிவித்துள்ள ஊரடங்கு அல்லது முழு அடைப்பு முடிந்து ஒரு வாரம்தான், அந்த ஒரு வாரமும் கூட உறுதியில்லை. 2014, 2018 ஆண்டுகளில் இப்படிப்பட்ட சட்டம் கொண்டுவர முயன்றனர். மாநில அரசுகளும் மின்சாரத் தொழிலாளர் அமைப்புகளும் வன்மையாக எதிர்ப்புத் தெரிவித்து அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தின. இந்தக் கொரோனா காலத்தைப் பயன்படுத்தி மோதி அரசு இந்த மோசமான சட்டத்தைக் கொண்டுவரப் பார்க்கிறது.

ஏன் இது மோசமான சட்டம்? (1) இந்திய அரசமைப்புச் சட்டப்படி மின்சாரம் என்பது ஏழாம் அட்டவணைப்படி அதிகாரங்களின் பொதுப் பட்டியலில் உள்ளது. புதிய சட்டம் மாநிலங்களின் அதிகாரத்தை ஒப்புக்குச் சப்பாணி ஆக்கி விடும். ஒரு மைய ஆணையத்தின் கையில் எல்லா அதிகாரமும் குவிக்கப்படும் (2) மின்சாரம் முழுக்க முழுக்க வணிகப் பொருளாக்கப்படும் இலவய மின்சாரம், மானிய விலை மின்சாரம், குறைந்த கட்டண மின்சாரம் என்பதெல்லாம் பழங்கதையாகி விடும். (3) மின்னியற்றலும் மின்பகிர்வும் பொதுத்துறையிலிருந்து விடுவிக்கப்பட்டு தனியார் துறையின் கையில் ஒப்படைக்கப்படும். "பந்தலிலே பாகற்காய்" என்ற பாட்டுக்கு மற்றொருத்தி "போகும் போது பாத்துக்கலாம்" என்று எதிர்ப்பாட்டு பாடினாளாம். மோதி அரசு கொரோனாவுக்காகத்தான் காத்திருந்ததோ? பாகற்காய் கதை இன்னும் முடியவில்லை. வீட்டுக்கார அம்மா “விதைக்கல்லோ விட்டிருக்கேன்" என்று இறுதியாக முடித்து வைத்தாளாம். அந்த விழிப்பும் எச்சரிக்கையும் நமக்குத் தேவைப்படுகிறது.

2. "பழகிப் போச்சு"

கொரோனா ஊரடங்கு உலகுதழுவிய ஒன்றாகி விட்டது. அது பாலத்தீன மக்களையும் விட்டு வைக்கவில்லை. இது குறித்து ராம்சி பரூத் என்ற பாலத்தீன எழுத்தாளர் நமக்கெல்லாம் நம்பிக்கையூட்டும் விதத்தில் எழுதியுள்ளார்! “உங்கள் மீது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆணையை மீறினால் சுடப்படுவீர்கள்" என்று நமக்கு யாராவது சொல்லக் கேட்டுள்ளோமா? ஆனால் பாலத்தீனர்களை இப்படித்தான் இசுரேல் காலங்காலமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. வெறும் மிரட்டல் இல்லை. அவ்வப்போது சுட்டுக் கொன்றும் வருகிறது. ஊரடங்கு நம்மை நெருங்கி வரச் செய்ய வேண்டும், நமது போராட்டத்தில் நம்மை உறுதிகொள்ளச் செய்ய வேண்டும், நம்மை ஒருவர் பால் ஒருவர் நேசம் கொள்ளச் செய்ய வேண்டும் என்கிறர் பரூத். "71 ஆண்டுகளாக இது எங்களுக்குப் பழகிப் போச்சு, இன்னும் எத்தனை ஆண்டுகளோ?" என்று சொல்லிச் சிரிக்கிறார். நம்மைக் காட்டிலும் காசுமீரத்து மக்களுக்கு இது எளிதில் விளங்கும் என நினைக்கிறேன்.

3. கொரோனா காலக் குடியாட்சியம்

பாலத்தீனர்களையும் அவர்களை அடக்கி ஒடுக்குவதையே பிறவிப் பயனாகக் கருதும் இசுரேலர்களையும் கொரோனா ஒரு வகையில் ஒன்றுபடுத்தியுள்ளது. இசுரேலில் ஊழல் பிரதமர் நெட்டன்யாகு பதவி விலக வேண்டும் என்பதற்காக இசுரேலியர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆர்ப்பாட்டம் செய்துள்ளர்கள். சற்றொப்ப மூவாயிரம் பேர் திரண்ட போதும் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளனர். கறுப்புக் கொடி ஏந்தியுள்ளனர், முகக்கவசங்களின் மேல் “கிரைம் மினிஸ்டர்" என்று சிலர் எழுதியிருந்தது சிறப்பு. ஆர்ப்பாட்டத்தின் போது அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடித்து சீரான இடைவெளி விட்டு விலகி நின்றது கண்கொள்ளாக் காட்சி. இரண்டு குறிப்புகள்: முதலாவதாக தாங்கள் துய்த்திடும் குடியாட்சியம் பாலத்தீனர்களுக்கும் தேவை என்பதை இந்த இசுரேலர்களுக்குச் சொல்ல வேண்டும். இரண்டாவதாக நமக்கும் நம் வருங்காலப் போராட்டங்களுக்கும் இது ஒரு கைகாட்டி.

4. கல்லா கட்ட உதவுமா?

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கொரோனாவின் கொலைத் தாண்டவத்தை புதுத்தாரளிய முதலியத்தின் தோல்வி என்று நோம் சோம்ஸ்கி விளக்குவதை அறிவோம். ஆனால் கொரோனாவை சீனத்தின் குமுகிய (சோசலிச) அமைப்பின் தோல்வியாகக் காட்ட முயன்று கொண்டிருந்த அமெரிக்கப் பெருங்குழும ஊடகங்கள் இப்போது என்ன சொல்கின்றன? நியூ யார்க் டைம்ஸ் மெதுவாகத் தடவிக் கொடுத்து எழுதுகிறது: “எளிதில் பயன்படுத்தும்படியான புது வகை மூச்சுக்கருவிகளை உருவாக்கும் முயற்சிகள் தடைபட்டுப் போயின. மக்கள் நல்வாழ்வுக்கு முகன்மையான விளைவுகள் கொண்ட திட்டப் பணிகளைத் தனியார் குழுமங்களிடம் விடுவதில் உள்ள ஆபத்துகளையே இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. தனியார் குழுமங்கள் அதிகபட்ச இலாபம் ஈட்டுவதிலேயே குறியாக இருப்பதால், எதிர்கால நெருக்கடிக்கு அணியமாக வேண்டும் என்ற அரசின் இலக்குக்கு எப்போதும் ஒத்துவர மாட்டா." புரிகிறதா? உயிர்காக்கும் மூச்சுக் கருவிகள் செய்வதால் கல்லா கட்ட முடியாதென்றால் உயிரே போனாலும் அதைச் செய்ய மாட்டார்கள் ஈட்டம் ஒன்றையே குறியாகக் கொண்ட முதலாளர்கள். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் கூட!

5. "நம் புரட்சி"

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் முயற்சியில் பெர்னி சாண்டர்ஸ் மீண்டும் தோற்றுப் போய்விட்டார் என்பது சற்றே வருத்தமளிக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் தோற்றிருகிறார். சென்ற முறை ஹிலாரி கிளிண்டனிடம், இந்த முறை ஜோ பிடனிடம் தோற்றுப் போனார். அமெரிக்க ஆளும் நிறுவனத்தைப் பலவகையிலும் வெளிப்படையாக எதிர்த்துப் பேசி வந்தவர் தோற்றுப் போனார் என்பது வருத்தமளிக்கிறது. அவர் தன்னை “ஜனநாயக சோசலிஸ்டு" என்று சொல்லிக் கொண்டவர். நம் புரட்சி என்ற இயக்கமும் நடத்தி வந்தவர். கொரோனா நெருக்கடி அமெரிக்க வல்லரசை அம்மணமாக்கி நிறுத்தியிருக்கும் வரலாற்றுப் பகைப்புலத்தில் பெர்னி சண்டர்ஸ் முன்வைத்த நிலைப்பாடுகள் இப்போதும் முகன்மைப் பங்கு வகிக்கும் என்பது என் கணிப்பு. பொறுத்திருந்து பார்ப்போம்.

Pin It