கீற்றில் தேட...

(சென்ற இதழ்த் தொடர்ச்சி)

3. புள்ளிகளை இணைத்தல்

இந்தச் சான்றுகள் அனைத்தையும் நோக்கும் போது கூடுதலாக இரு செய்திகளை மனத்தில் நிறுத்த வேண்டும். முதலாவது, பல்வேறு துறைகளில் நடைபெற்ற பற்பல ஆய்வுகளும் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் குறிப்பிட்ட ஒரு காலத்தையே வந்தடைந்தன - கிமு 2000. எப்படி? பிரியா மூர்ஜனியும் அவர் குழுவினரும் நடத்திய ஆய்வின்படி அப்போதுதான் மக்களினக் கலப்பு பேரளவில் நடைபெறத் தொடங்கியது. எந்தளவுக்கு என்றால், துணைக்கண்டத்தில் எங்குமே மிகச் சில மக்களினக் குழுவினர்தான் விட்டு வைக்கப்பட்டனர். அந்தளவுக்குக் கொந்தளிப்புகள் சூழ்ந்திருந்த அந்தக் காலக்கட்டத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வாழ்ந்த ஒங்கே மக்களினத்தவர் மட்டுமே நாம் அறிந்த வரையில் கலப்பினால் கிஞ்சிற்றும் தாக்குறாதோர் ஆவர். மேலும், டேவிட் போஸ்னிக்கும் அவரது குழுவினரும் ஒய்-குரோமோசோம் பற்றி நடத்திய 2016 ஆய்வைப் பொறுத்த வரை, கிமு 2000 என்ற அந்தக் காலத்தில்தான் இந்தியாவில் மேலோங்கி நின்ற R1 ஒற்றைக்குழுவின் துணைக்கிளையாகிய Z93 ஆனது "பளீரென" பிரியத் தொடங்கியது. இது "துரித வளர்ச்சியையும் விரிவாக்கத்தையும்" உணர்த்துகிறது. கடைசியாக, நெடுங்காலமாய் நிறுவப்பட்டு விட்ட தொல்லாய்வுகளின் அடிப்படையில் நமக்குக் கிமு 2000 என்ற அந்தக் காலக்கட்டத்தின் போதுதான் சிந்துச் சமவெளி நாகரிகம் அழியத் தொடங்கிய செய்தியும் நமக்குத் தெரியும். எவரும் இந்தத் தரவுகள் அனைத்தையும் புறஞ்சார் முறையில் நோக்குவாரானால், இந்திய வரலாற்றுப் புதிர் ஆட்டத்தில் தொலைந்து போன வெட்டுப் படங்கள் இப்போது முழுப் படமாகிக் கொண்டிருப்பதைக் கட்டாயம் உணர்வர்.

இரண்டாவது, இங்கு குறிப்பிடப்படும் பல ஆய்வுகளைப் பொறுத்த வரை, அவை எடுத்துக் கொண்ட சிக்கல்கள் என்ற வகையிலும், சோதனைக்கு எடுத்துக் கொண்ட பதங்கள் (samples), ஆராய்ச்சி வழிமுறை என்ற வகையிலும், உலகளாவியவை. காட்டாக, R1a-Z93 மரபுவழி பிரிவுற்ற காலம் 4,000 - 4,500 ஆண்டெனக் குறித்த போஸ்னிக் ஆய்வானது ஒய்-டிஎன்ஏவின் பெரும் விரிவாக்கங்கள் பற்றி இந்தியாவில் மட்டுமல்லாது மற்ற நான்கு கண்டத்து மக்களினங்களிடத்தும் கவனம் செலுத்தியது. வட, தென் அமெரிக்காவில் Q1a-M3 ஒற்றைக்குழுவின் விரிவாக்கம் 15,000 ஆண்டு முன்பு நடைபெற்றதாக மெய்ப்பித்தது. இது புறத்திருந்து அக்கண்டங்களுக்குள் நடைபெற்ற தொடக்கக் காலக் குடியேற்றங்கள் குறித்துப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காலத்துடன் ஒத்துப் போகிறது. எனவே வெட்டுப் படங்கள் முழுப்படமாகிற நிகழ்வு இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கும் நடைபெறுகிறது. உலகப் புலப்பெயர்வுப் படம் முழு அளவில் நிரப்புற நிரப்புற, உலகில் மக்கள் தொகை எவ்வாறு அமையலாயிற்று என்பது பற்றி உருவாகிக் கொண்டிருக்கும் பொதுக் கருத்தைக் குடை சாய்ப்பது மென்மேலும் கடினமாகி விடும்.

இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன என்பதற்கு ரைக்கை விட சிறப்பாக யாரும் விளக்கமளிக்கவில்லை. அவர் சொல்கிறார்: "கடந்த ஐந்தாண்டுகளில் மிகத் துரிதமாகவும் விறுவிறுப்பாகவும் வலுவாகவும் நடைபெற்றுக் கொண்டிருப்பது என்ன என்றால், புதுமக்கால மற்றும் பழங்கால டிஎன்ஏவின் அடிப்படையில் மாந்தக் குல வரலாறு பற்றி நடத்தப் பெற்ற முழு டிஎன்ஏ ஆய்வுகளின் பேரெழுச்சி ஆகும். இதனைச் செய்து முடிப்பதற்கு மரபணுவியல் தொழில்நுட்பமும் பழங்கால டிஎன்ஏ பற்றிய தொழில்நுட்பமும் உதவின. அடிப்படையில், இன்று நடப்பது ஒரு தங்க வேட்டை. இது ஒரு புதிய தொழில்நுட்பம். அந்தத் தொழில்நுட்பம் நம்மால் இயன்ற இடத்தில் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது. தாழத் தொங்கிக் கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான பழங்கள் துரிதமாகப் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, தரை எங்கும் சிதறிக் கிடக்கும் தங்கக் கட்டிகள் துரிதமாக அள்ளப்படுகின்றன. "

இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோரின் புலப்பெயர்வுகளே பெரிய வாதுரைகளுக்கும் தர்க்கங்களுக்கும் உள்ளான வரலாற்று நிகழ்வு என்பதால்தான் நாம் இது வரையிலும் அது பற்றி மட்டுமே பார்த்துள்ளோம். இருந்தாலும் இன்னும் பெரிய படத்தை நாம் பார்க்கத் தவறி விடக் கூடாது. அதாவது R1a மரபுவழிகளில் இந்திய ஆண் மரபுவழியில் சுமார் 17.5 விழுக்காட்டினரும், இந்தியப் பெண் மரபுவழியில் இன்னுங்கூட சிறு விழுக்காட்டினரும் மட்டுமே அடங்குகின்றனர். இந்தியர்களில் மிகப் பெரும்பான்மையினரின் மூதாதையர் பெருமளவுக்கு மற்றப் புலப்பெயர்வுகளிலிருந்து வந்தோரே ஆவர். இவற்றில் 55, 000 முதல் 65, 000 ஆண்டு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து முதன்முதலில் நடைபெற்ற ஆதிப் புலப்பெயர்வுகள் அடங்கும். தொடர்ந்து கிமு 10, 000க்குப் பிறகு மேற்காசியாவிலிருந்து அலைஅலையாக நடைபெற்றதாகக் கருதப்படும் வேளாண் தொடர்பான புலப்பெயர்வுகள் அடங்கும். அடுத்ததாக, கிழக்கு ஆசியாவிலிருந்து முண்டா போன்ற ஆஸ்ட்ரோ-ஆசியாடிக் மொழி பேசுவோரால் இன்றளவும் கணிக்கவியலாமல் இருக்கும் ஒரு காலக் கட்டத்தில் நடைபெற்ற புலப்பெயர்வுகள் அடங்கும். அடுத்ததாக, மீண்டும் கிழக்கு ஆசியாவிலிருந்து திபெத்தோ-பர்மிய மொழி பேசுவோரால் இன்றளவும் கணிக்கவியலாமல் இருக்கும் ஒரு காலக் கட்டத்தில் நடைபெற்ற புலப்பெயர்வுகள் அடங்கும்.

தெள்ளத் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், இந்தியர்கள் அனைவருமே பல தோற்றுவாய்களைக் கொண்ட ஒரு பல்மூல நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள், ஒற்றைமூல நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அந்தப் பல்மூல நாகரிகம் என்பது அதன் உந்துவிசைகளை, அதன் பாரம்பரியத்தை, அதன் பழக்கவழக்கங்களைப் பற்பல மரபுவழிகளிலிருந்தும் புலப்பெயர்வு வரலாறுகளிலிருந்தும் எடுத்துக் கொண்டு வளர்ந்த ஒரு நாகரிகம் ஆகும். பெருந்துணிச்சலும் தேடல் வேட்கையும் கொண்ட முன்னோடிப் பயணிகளாகிய ஆப்பிரிக்க வந்தேறிகளே இந்த இந்திய மண்ணில் முதன்முதலில் கால்பதித்த ஆதிக் குடிகள் ஆவர். இன்றளவும் அவர்களின் மரபுவழிகளே இந்திய மக்களினத்தின் அடித்தளமாகத் திகழ்கின்றன. அடுத்த வருகை புரிந்தோர் வேளாண் தொழில்நுட்பங்களுடன் இந்தியாவில் கால் பதித்தனர். அவர்களே சிந்து சமவெளி நாகரிகத்தைக் கட்டி எழுப்பியவர்கள். அவர்களின் பண்பாட்டுச் சிந்தனைகளும் பழக்க வழக்கங்களுமே இன்றைய நமது பாரம்பரியங்களின் வளம் பெருக்குகிறது எனலாம். கிழக்கு ஆசியாவிலிருந்து வந்து சேர்ந்தவர்களே அரிசி பயிரிடும் முறையை கொண்டு வந்திருக்க வேண்டும். அதன் பலனை நாம் அறிவோம். பிற்பாடு வந்தவர்கள் சமஸ்கிருதம் என்கிற மொழியையும் அது தொடர்பான நம்பிக்கைகளையும் வழக்கங்களையும் கூடவே கொண்டு வந்தார்கள். இந்தியச் சமுதாயத்தை அடிப்படை வழிகளில் மாற்றியமைத்தார்கள். அதற்கும் பிறகு வணிகத்துக்காக வந்தவர்களும் சரி, ஆள வந்தவர்களும் சரி, ஆள வந்து இங்கேயே தங்கி விட்டவர்களும் சரி, அனைவருமே இங்கு கூடிக் கலந்து இந்திய நாகரிகம் என நாம் இன்று அழைக்கும் இந்த நாகரிகத்துக்குப் பங்களிப்புச் செய்துள்ளார்கள். ஆக, நாம் அனைவரும் வந்தேறிகளே.

(கட்டுரையாளர் டோனி ஜோசஃப் எழுத்தாளரும் பிசினஸ் வேல்டு இதழின் முன்னாள் ஆசிரியரும் ஆவார். ) 

கட்டுரையாளர் குறிப்பு:

உலகப் புலப்பெயர்வுகள் பற்றிய என் புரிதல்

  • முதல் குழு – கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்கா – L0 – மைட்டோகாண்ட்ரியாவின் முதல் மரபுவழி – 1,44,000 ஆண்டு முன்பு. L1, L2, L3 ஆகிய ஒற்றைக்குழுக்கள் ஆப்பிரிகாவுக்குள் அடங்கி விடுகின்றன.
  • அடுத்து L3இன் M, N மரபுவழிகள் – முதல் ஆப்பிரிக்கப் புலப்பெயர்வு – செங்கடலைக் கடந்து செல்லுதல்.
  • L3 ஒற்றைக்குழுவின் அகவை 84, 000 ஆண்டுகள், M, N ஆகியவற்றின் அகவை 63,000 ஆண்டுகள். எனவே செங்கடலைக் கடந்து சென்ற நிகழ்வு 63,000 ஆண்டுகளுக்கு மேல் முற்பட்டது.
  • L3 மரபுவழிகள் மட்டுமே ஆப்பிரிக்காவுக்கு வெளியே காணப்படுகிறது.
  • M, N மரபுவழிகள் ஆப்பிரிக்காவில் மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்றன.
  • M, N ஆகியவை செங்கடலையும் மத்திய தரைக் கடலையும் கடந்த பிறகு M ஆனது தென் கடற்கரை வழியில் செல்லத் தொடங்குகிறது. இது தெற்குக் கடற்கரைப் புலப்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது. N ஐரோப்பாவுக்கு புலம்பெயர்கிறது.
  • M ஆனது செங்கடலைக் கடந்து அரேபியாவுக்கும் பெர்சியாவுக்கும் செல்கிறது.
  • M ஒன்றைக்குழு பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் ஏராளமாய்க் காணக் கிடைக்கிறது.
  • இந்தியாவின் 60% மக்கள் M ஆவர்.
  • அந்தமான் மக்கள் M மட்டுமே.
  • தெற்குக் கடற்கரைப் புலப்பெயர்வுப் பாதை இந்தியாவிலிருந்து தாய்லாந்து, இந்தோனேசியா வரை நீண்டு, அப்படியே பபுவா புது கினியா, ஆஸ்திரேலியா சென்று முடிகிறது.
  • M ஒற்றைக்குழுவின் தகவு அராபியா, இந்தியாவிலிருந்து கிழக்கு நோக்கி நகர நகர அதிகரித்துச் செல்கிறது.
  • கிழக்கு இந்தியாவில் M, N தகவு 3:1.
  • இந்த N பெரும்பாலும் அதன் R துணைக்கிளையின் வழித்தோன்றல்களின் வடிவமாக உள்ளது.
  • N ஆனது ஆஸ்திரேலிய ஆதிக் குடிகளிடம் மேலதிகமாய் உள்ளது.
  • M ஆனது R1a ஒற்றைக்குழுவாகக் கிளை விடுகிறது. அதன் துணைக்குழு R1a-Z93 ஆனது 4000 ஆண்டு முன்பு இந்தியத் துணைக் கண்டத்துக்குப் புலம்பெயர்ந்தது. அவர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்கள், ஆரியர்கள் என அழைக்கப்படுபவர்கள். கூடுதல் துணைக்குழுவாகிய R1a-Z282 ஆனது ஐரோப்பாவுக்குப் புலம்பெயர்ந்தது.
  • இந்தியாவின் 17. 5% மக்கள் R1a குழுவைச் சேர்ந்தவர்கள்.

மனிதனின் கால்வழி (Descent of Man) என்பது டார்வின் எழுதிய நூல் இந்நூலில் அவர் மாந்தர்கள் மனிதக் குரங்குகளின் வழி வந்தததாக ஊகித்தார். அந்த மனிதக் குரங்குகளுக்கு அப்போதுங்கூட சிறு மூளையே இருந்தாலும், நிமிர்ந்து நடந்தன. இதனால் கைக்குரிய வேலையிலிருந்து விடுபட்ட நிகழ்வு அறிவு வளர்ச்சிக்குத் துணைசெய்தது. இந்த மனிதக் குரங்குகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை என டார்வின் கருதினார்:

உலகின் பெரும் வட்டாரங்கள் ஒவ்வொன்றிலும் வாழும் பாலூட்டிகள் அவ்வட்டாரத்தின் அழிந்துபோன உயிரினங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தன. இதுபோலவே கொரில்லா, சிம்பன்சி ஆகிய இனங்களுக்கு மிகவும் நெருக்கமான அந்த அழிந்து போன குரங்குகளின் இருப்பிடமாக ஆப்பிரிக்கா இருந்திருக்கக் கூடும். இந்த இரு இனங்களும் இன்று மனிதனின் மிக நெருக்கமான கூட்டாளிகள் என்பதால், நமது முந்தைய மூதாதையர்கள் வேறெந்த இடத்தை விடவும் ஆப்பிரிக்காவில் வாழ்ந்திருப்பதற்கே மிகுந்த வாய்ப்புள்ளது. இந்தப் பொருள் பற்றி ஊகிப்பது பயனற்றது, ஏனென்றால் மனிதன் அளவுக்குப் பெரிய ஒரு குரங்கு, அதாவது லார்டட்டைச் சேர்ந்த ட்ரையோ பிதிகஸ் ஆனது ஹைலோபேட்ஸ் பேரினத்தைச் சேர்ந்த மனிதத் தோற்றம் கொண்ட பெரிய குரங்கு, அதாவது லார்டெட்டைச் சேர்ந்த ட்ரையோ பிதிகஸ் என்ற இனம் அப்பர் மையோசின் ஊழியின் போது ஐரோப்பாவில் இருந்தது. அந்தப் பழங்காலம் தொடங்கி புவியில் பலப் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே பேரளவில் புலப்பெயர்வுகள் நடந்திருப்பதற்கு வெகுவான காலம் இருந்துள்ளது.

- சார்லஸ் டார்வின் எழுதிய மனிதனின் கால்வழி (Descent of Man)