டாலருக்கு வந்த வாழ்வு (11)

2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இரண்டாவது முறையாக 2020இல் டாலர் குறியீட்டின் மதிப்பு 90க்கும் கீழ் வீழ்ந்து 89.21ஆகக் குறைந்துள்ளது. இதையும் அமெரிக்கா தன் ராணுவ எதேச்சதிகாரத்தாலும், அரசியல் அதிகாரத்தாலும், அமெரிக்காவைப் பற்றி கட்டமைக்கப்படும் பொய்யான பிம்பங்கள், மூடநம்பிக்கைகள், ஊடகப் பரப்புரைகள், இன்றுள்ள அமைப்பு முறையின் கலாச்சார, பண்பாட்டுக் கூறுகள், பழக்கவழக்கங்கள் இவற்றால்தான் மேலும் வீழாமல் பாதுகாத்து வருகிறதே தவிர, முழுக்கமுழுக்கப் பொருளாதார அடிப்படையில் அல்ல. பொருளாதார அடிப்படையில் அது 1970களிலே வீழ்ந்து போனது.

ஆகையால் டாலரின் வீழ்ச்சிக்கு கோவிட்-19 என்ற கொள்ளை நோய்தான் காரணம் என்று சமாதானம் அடைய முடியாது. ஏனென்றால் கோவிட்-19 நோய் தோன்றி பரவுவதற்கான அடிப்படையை ஏற்படுத்தித் தந்ததே இந்த முதலாளித்துவ அமைப்புதான். நவீன தாராளமய கொள்கைகளால் பெரும்பாலான உலக நாடுகளில் பொதுச் சுகாதாரத்திற்கான அரசு முதலீடுகள் குறைக்கப்பட்டுத் தனியார்வசம் சென்றதாலே உலகெங்கும் கோடிக் கணக்கான மக்கள் உரிய சிகிச்சை பெற இயலாமல் இறந்துள்ளனர்.

ஏழை மக்களுக்கும், ஏழை நாடுகளுக்கும் கோவிட்-19 தடுப்பு மருந்தை கிடைக்கப் பெறச் செய்வதற்காக உலக வர்த்தக அமைப்பில் கொண்டுவரப்பட்ட முன்னெடுப்பை வளர்ந்த நாடுகள் தடுத்துள்ளன. கோவிட்-19 தொற்று நோயால் ஏற்பட்ட பேரிழப்புகளுக்கு முதலாளித்துவ அமைப்பு முறையும் லாப நோக்குடன் இயங்கும் அதன் தனியார் மருத்துவமனைகளும், மருந்து நிறுவனங்களுமே காரணமாய் இருந்துள்ளன.

முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சன் டாலருக்கான தங்கத் தரத்தைக் கைவிட முடிவெடுத்த போது அமெரிக்க மத்திய வங்கியின் அப்போதைய தலைவர் ஆர்தர் பர்ன்ஸ் என்ன சொன்னார் தெரியுமா? பனிப் போரின் உச்சத்தில் தங்கத் தரத்தை விட்டு வெளியேறுவது அமெரிக்காவின் மோசமான அடையாளமாக மாஸ்கோவிலும் ரஷ்ய ஊடகங்களிலும்  பார்க்கப்படும்.

இதை முதலாளித்துவத்தின் சரிவின் அடையாளமாக ‘பிராவ்தா’வில் எழுதுவார்கள் என நிக்சனை எச்சரித்துள்ளார். அவர் குறிப்பிட்டதில் உண்மை உள்ளது, ஏனென்றால் டாலரின் வீழ்ச்சி என்பது வெறும் நாணயம் / பணம் சார்ந்த சிக்கல் மட்டுமல்ல. பணம் பொருளாதார அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்ற போதிலும் இது அதைக் காட்டிலும் ஆழமான சிக்கல், இன்றுள்ள முதலாளித்துவ அரசியல் பொருளாதார அமைப்பின் சிக்கலே டாலர் சிக்கலாக வெளிப்படுகிறது.

டாலரின் சரிவை அமெரிக்கா என்ற நாட்டின் பொருளாதாரச் சரிவாக மட்டும் பார்க்க இயலாது. டாலர் அமெரிக்க தேசியப் பணமாக இருப்பதுடன் உலகப் பணமாகவும் இருப்பதால் இதை இன்றுள்ள அரசியல் பொருளாதார அமைப்பின் வீழ்ச்சியாகவும் பார்க்க முடியும். குறிப்பிட்டுச் சொன்னால் இன்றுள்ள முதலாளித்துவ அமைப்பின் வீழ்ச்சியாகவும் இருக்கிறது. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு இறுதியானதோ இயற்கையானதோ நிலைபேறுடையதோ அல்ல என்பதையும் நாம் ஒருபோதும் மறந்து விடக் கூடாது.

வரலாற்று வழியாக மனிதச் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் சமூக அமைப்புகள் தொடர்ந்து மாற்றத்திற்குட்பட்டு ஆதிப் பொதுவுடைமைச் சமூகம், அடிமைச் சமூகம், நிலக்கிழாரியச் சமூகம், முதலாளித்துவச் சமூகம், சோசலிச சமூகம் எனப் புதிய சமூக அமைப்புகள் தோன்றியுள்ளன. இவற்றில் எதுவுமே  நிரந்திரமானதோ இறுதியானதோ அல்ல.

அவை சமூக வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியையே குறிக்கும். ஆகவே முதலாளித்துவ சமூகமும் கடந்து செல்ல வேண்டிய ஒன்றுதான். காலமெல்லாம் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது சமூக இயங்கியல் நெறிகளுக்கு புறம்பானது.

ஆதிப் பொதுவுடைமைச் சமூகம் வர்க்கமற்ற சமூகமாக இருந்தது. அங்கே அனைத்துமே பொதுவுடைமையாக இருந்தன. சாதி, சமய, இன, பாலின அடிப்படையில் வேறுபாடுகளோ, சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளோ காணப்படவில்லை. ஆனால் அதற்குப் பின் தோன்றிய சமூக அமைப்புகளான அடிமைச் சமூகம், நிலக் கிழாரியச் சமூகம், முதலாளித்துவச் சமூகம் ஆகியவை உழைப்புச் சுரண்டலையும், தனியார் சொத்துடைமையையும் அடிப்படையாகக் கொண்ட வர்க்கச் சமூகங்களாகவும் இருந்துள்ளன.

முதலாளித்துவமும் என்றென்றும் ஒரேமாதிரியாக மாறிலி வடிவில் காணப்படவில்லை. அதுவும் தோற்றத்திலிருந்தே தொடர்ந்து மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது. எப்படி ஒரு உயிரினத்தின் வாழ்க்கைச் சுழற்சியை பிறப்பு, வளர்ச்சி, முதிர்ச்சி இறப்பு என வெவ்வேறு காலக்கட்டங்களாகப்  பிரித்துப் பார்க்க முடியுமோ அதேபோல் ஒரு சமூக அமைப்பின் / உற்பத்திமுறையின் பரிணாம வளர்ச்சியையும் பிறப்பு, வளர்ச்சி, முதிர்ச்சி, இறப்பு என வெவ்வேறு காலகட்டங்களாகப் பிரித்துப் பார்க்கலாம்.

அப்படிப் பார்த்தோமானால் இன்று முதலாளித்துவம் முதிர்ந்து வயோதிக நிலையில் உள்ளது. ஆனால் அதை ஏற்க மறுத்து, தான் என்றும் இளமையாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளப் பெரும்பாடு படுகிறது. அதனால் பிரச்சனைகள் தீவிரமடைந்துள்ளனவே தவிர குறைந்தபாடில்லை.

முதலாளித்துவத்திற்கு முன்பிருந்த சமூக அமைப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அங்கிங்கே தன்னிச்சையாகத் தோன்றியிருந்தாலும், முதலாளித்துவம் தோன்றிய பிறகு உலகின் எந்தப் பகுதியும் அதன் ஆளுகைக்கு உட்படாமல் இல்லை. அனைத்தின் மீதும் அது தாக்குதலையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

முதலாளித்துவம் என்ற உலகளாவிய அமைப்பு ஏகாதிபத்தியத்தின் மூலமே தொடர்ந்து வளர்ச்சி பெற்றது, ஏகாதிபத்தியத்தின் மூலமே தன்னை அழிவிலிருந்து தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. 18-20ஆம் நூற்றாண்டுகளில் காலனியாதிக்கத்தால் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவம் 20-21ஆம் நூற்றாண்டில் நவீன தாராளமயம் என்ற ஏகாதிபத்தியத் தற்காப்புக் கருவியின் மூலம் புதிய காலனியாதிக்கத்தால் முதலாளித்துவ அமைப்பை அழிவிலிருந்து பாதுகாத்து வருகிறது.

ஏகாதிபத்தியத்தை  மூன்று காலக்கட்டங்களாகப் பிரிக்கலாம் வரலாற்றுக் கட்டங்கள்: (1) ஆரம்பகாலக் காலனியாதிக்கம், (2) லெனின் குறிப்பிடும் ஏகபோக முதலாளித்துவம் - 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இரண்டாம் உலகப் போர் வரை, (3) உலகளாவிய அமெரிக்க மேலாதிக்க ஏகாதிபத்தியம்.

(1) ஆரம்பகாலக் காலனியாதிக்கம்:

இக்காலக்கட்டம் 16ஆம் நூற்றாண்டிலிருந்து 1870 வரையிலான காலப் பகுதியைக் குறிக்கும் இக்காலக்கட்டத்தில் பிரிட்டன் உலகளாவிய மேலாதிக்கம் பெற்றது. இதைப் போட்டிக்கால முதலாளித்துவம் என்றும் குறிப்பிடலாம். இங்கிலாந்தில் முதலில் முளைத்த முதலாளித்துவப் பெருங்கணவாயின் பெருங்கரங்கள் உலகெங்கும் நீட்சி பெற்றன. காலனியாதிக்கத்தின் மூலமே முதலாளித்துவம் வளர்ச்சி பெற்றது.

அமெரிக்காவில் தங்கம், வெள்ளி கண்டுபிடிப்பு, சுரங்கங்களைக் கைப்பற்றுதல், கொள்ளையடித்தல், அக்கண்டத்தின் பூர்வகுடியினரை அழித்தல், அடிமைப்படுத்துதல், ஆப்பிரிக்காவைக் கறுப்புத் தோல்களின் வணிக வேட்டைக் காடாக மாற்றுதல் இத்தகைய சிறப்பியல்புகளுடன்தான் முதலாளித்துவச் சகாப்தத்தின் விடியல் அமைந்ததாக  மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

(2) ஏகபோக முதலாளித்துவம்:

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இரண்டாம் உலகப் போர் வரையிலான காலப்பகுதியை ஏகாதிபத்தியத்தின் இரண்டாம் காலகட்டமாகக் குறிப்பிடலாம் இதையே லெனின் ’ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்’ என்ற நூலில் விவரிக்கிறார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கனரகத் தொழிற்சாலைகளில் புதிய உற்பத்தி முறைகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டுப்பங்கு நிறுவனங்களும், ஏகபோக அமைப்புகளும் உருவெடுத்தன. முதலாளித்துவம் ஏகபோக வடிவைப் பெற்றது.

பிரிட்டனின் உற்பத்தித் திறன் குறைந்தது, ஜெர்மனியும், அமெரிக்காவும் தொழில் நுட்ப வளர்ச்சியால் அதிக உற்பத்தித் திறனுடன் புதிய போட்டியாளர்களாகப் பொருளாதார மேன்மை பெற்றன. உலகளவில் ஆற்றல் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டது. பிரிட்டானிய ஸ்டெர்லிங் வீழ்ச்சியடைந்து, தங்கத் தரத்தை விட்டு வெளியேறியது.

உலகைப் பங்கிடுவதற்காகக் காலனியாதிக்க நாடுகளிடையே ஏற்பட்ட போட்டி உலகப் போராக வெடித்தது. ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி ஏற்பட்டு முதலாளித்துவ அமைப்பைக் காட்டிலும் மேம்பட்ட ஒரு சமூக அமைப்பை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்தது. 1928இல் பொருளாதாரப் பெருமந்த நிலை ஏற்பட்டது. முதல் உலகப் போரில் ஜெர்மனியின் வீழ்ச்சி, பாசிசத்தின் வளர்ச்சி, என பிரிட்டனின் வீழ்ச்சியிலிருந்து உலகை மறு பங்கிடுவதற்கான இரண்டாம் உலகப் போர் வரையிலான காலத்தை ஏகாதிபத்தியத்தின் இரண்டாம் காலகட்டமாகக் குறிப்பிடலாம்.

(3) உலகளாவிய அமெரிக்க மேலாதிக்க ஏகாதிபத்தியம்:

இதைத் தங்கத் தரத்துடன் டாலர் இருந்த காலகட்டம் (1944-73) எனவும், தங்கத் தரத்திலிருந்து விலகிய டாலரின் மிதவைக் காலகட்டம் எனவும் இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். இரண்டு உலகப் போர்களின் மூலம் லாபமும், வளர்ச்சியும் பெற்று பொருளாதார மேன்மையடைந்திருந்தது அமெரிக்கா. பிரெட்டன்வுட்ஸ் அமைப்பின் மூலம் அமெரிக்க டாலர் உலகப் பணமாக அங்கீகரிக்கப்பட்டுத் தங்கத் தரத்துடன் இணைக்கப்பட்டது.

காலனிய நாடுகள் விடுதலை பெற்றன. சோஷலிச நாடுகளின்  வளர்ச்சியால்  உலகம் முதலாளித்துவ முகாம், சோஷலிச முகாம் என இரு துருவங்களாகப் பிரிந்தது. அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ முகாம், சோவியத் ரஷ்யாவின் தாக்கம் தங்கள் நாடுகளில் பரவாமலிருக்க முயற்சிகள் மேற்கொண்டது. இருந்த போதும் இரு துருவச் சூழலில் முதலாளித்துவ நாடுகள் ரஷ்யாவின் முன்னுதாரணத்தால் தங்கள் நாடுகளில் புரட்சி வெடிக்காமல் தடுக்கவும், உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கு அணை போடவும் உழைக்கும் மக்களின் எழுச்சிக்குக் காது கொடுக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது.

சோசலிசத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்காக, அதை உலக வரலாற்றிலிருந்து துடைத் தெறியவும், முதலாளித்துவம் சில சமரசங்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டது.  இதனால் சமூகத் துறைகளுக்கு, பொதுத் துறைகளுக்கு ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டன, கூலி உயர்வு ஏற்பட்டது. சொத்து வரி, வருமான வரி மூலமாக, நாடுகளுக்குள்ளே பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்பட்டது.

வளர்ந்த நாடுகளில் பெரும உற்பத்திமுறையின் அடிப்படையிலான நுகர்வு வளர்ச்சி ஏற்பட்டது. இந்த வளர்ச்சிநிலை 1973-74 வரை நீடித்தது. இந்தக் காலக்கட்டத்தில் உற்பத்தியானது பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்தது. நிதியமைப்பும் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே செயல்பட்டது.

அதே போது சோசலிசத்தை அடியோடு அழிப்பதற்கான நேட்டோ, சீட்டோ என பல ராணுவக் கூட்டமைப்புகளை அமெரிக்கா ஏற்படுத்தியது. சோசலிஸ்டுகள் அமெரிக்காவில் வேட்டையாடப் பட்டார்கள். அமெரிக்காவால் உலகெங்கும் தொடுக்கப்பட்ட போர்கள், ராணுவ நடவடிக்கைகளால் மேலும் மேலும்  அதிகரிக்கப்பட்ட ராணுவ நிதி ஒதுக்கீடுகளால் அதன் பொருளாதார வளர்ச்சியும், உற்பத்தித் திறனும் நலிவடைந்தன. 1970களில் பொருளாதாரத் தேக்கமும் லாப வீழ்ச்சியும் ஏற்பட்டது.

அமெரிக்காவின் குறையும் தங்க இருப்புகளாலும், பெருகும் டாலர் வெளியீடுகளாலும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி பெற்றுக் கேள்விக்குட்படுத்தப் பட்டதால் நிக்சன் அரசு தங்கத் தரத்தை விட்டு வெளியேறியது. பெட்ரோ டாலர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பொருளாதாரத் தேக்கத்திலிருந்து வெளிவரவும், லாபத்தை அதிகரிக்கவும் நவீன தாராளமயம் என்ற பெயரில் உழைக்கும் வர்க்கத்தையும், மூன்றாம் உலக நாடுகளையும் சுரண்டுவதற்கான நவீன காலனியாதிக்கக் கொள்கைகள் நிறைவேற்றப்பட்டன.

நிறுவனங்கள், சொத்துக்களின் மீதான வரிவிதிப்பு குறைக்கப்பட்டதாலும், கூலிக் குறைவாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு நாடுகளுக்கிடையேயும், நாடுகளுக்குள்ளும் அதிகரித்துள்ளது. இருப்பினும் நவீனக் காலனியாதிக்கக் காலக்கட்டத்தில் உலகின் மொத்தப் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே காணப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் அபரிமிதமான வளர்ச்சி பெற்றுள்ளன.

நிதிமயமான முதலாளித்துவம்:

புதிய தாராளமயக் கொள்கைகளே நிதிமயத்திற்கான கோட்பாடை வழங்கியுள்ளன. வளர்ந்த நாடுகளில் முதிர்ச்சியடைந்த முதலாளித்துவத்தில் நிதித்துறை நடவடிக்கைகளின் வெளி கணிசமாக உயர்ந்து நிதிமயமாக்கம் ஆட்சி செலுத்துகிறது. 1970களிலிருந்தே ஏகபோக முதலாளித்துவம் நிதிமய வடிவைப் பெற்றது. இது நிதிக் குமிழிகள் உருவாவதற்கும், தொடர்ந்து வரும் பொருளாதார நிதி நெருக்கடிகளுக்கும், பெருகிவரும் வேலையின்மைக்கும் காரணமாக உள்ளது.

முதலாளித்துவம் முதிர்ந்த வளர்ந்த நாடுகளில் உற்பத்திச் செயல்பாடுகளில் லாபவீதங்கள் குறைந்ததால் மூலதனத் திரட்டல் தேக்கமடைந்துள்ளது. உலக அளவில் உற்பத்திச் செயல்பாடுகள் பெருமளவில் மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற்றப்பட்டன. வளர்ந்த நாடுகளின் முதலாளித்துவ அரசுகள் நிதிமயத்தையே ஊக்கப்படுத்துகின்றன.

உற்பத்தித் துறையைக் காட்டிலும் நிதித்துறை, ரியல் எஸ்டேட், வங்கித் துறை, சேவைத் துறை ஆகிய சுற்றோட்டத் துறைகளே பெருக்கமடைந்துள்ளன. மொத்தப் பொருளாக்க மதிப்பில் உற்பத்தித் துறையின் பங்கு குறைந்து, சுற்றோட்டத் துறைகளின் பங்கு (FIRE-Finance, Insurance, Real estate) அதிகரித்துள்ள போக்கு நிதிமயத்தையே குறிப்பிடுகிறது. நிதிமயம் பொருளாதார அமைப்பெங்கும் அழிவேற்படுத்தும் தாக்கங்களை உருவாக்கியுள்ளது.

நிதிசாரா நிறுவனங்கள், வங்கிகள், இல்லத்தார்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றமே நிதிமயத்தின் மையக்கூறாக உள்ளது என கிரேக்கப் பொருளாதாரவியலாளர் கோஸ்தாஸ் லாபாவித்சாஸ் குறிப்பிடுகிறார். இதில் முதலாவதாக நிதிசாரா நிறுவனங்கள் நிதி நிறுவனங்களைச் சாராமல் தன்னிச்சையாகவே நிதி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

இரண்டாவதாக வங்கிகள் முற்றிலும் கடன் பெற்றுக் கடன் சேவையளிப்பதை காட்டிலும் திறந்த நிதிசந்தைகளில் வர்த்தகம் செய்வதன் மூலம் லாபம் பெறவே முற்படுகின்றன. மூன்றாவதாக தனிநபர்களும், இல்லத்தாரும் அத்தியாவசியப் பொருட்களையும், வீட்டுவசதி, கல்வி, உடல் நலம், போக்குவரத்துச் சேவைகள், என அனைத்திற்குமே கடன் பெற வேண்டிய நிலையும், நிதித் துறையையே அதிக அளவில் சார்ந்திருக்கும் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இவையே நிதிமயத்தின் மூன்று குறிப்பிடத்தக்க அம்சங்கள் என கோஸ்டாஸ் சுட்டிக்காட்டுகிறார்.

நிதிசாரா நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது. தற்போதுள்ள ஏகபோக மூலதன நிறுவனங்கள், தங்களது லாபத்திலிருந்தே முதலீடுகளுக்கான நிதியைப் பெறுகின்றன. நிதிசார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்கின்றன. வெளியிலிருந்து கடன் தேவைப்பட்டால் திறந்த சந்தைகளில் பெறுகின்றன.

வங்கிகள் உற்பத்தி அடிப்படையிலான தொழில் நடவடிக்கைகளுக்கு நிதிக்கடன் அளிப்பதைக் காட்டிலும், நிதிச் செயல்பாடுகளுக்கும், தனி நபர்களுக்கும், சில்லறைக் கடன் துறைகளுக்குமே அதிக அளவில் கடன் அளிக்கின்றன. நிதி மயமாக்கத்தில் வங்கிகள் முக்கியப் பங்கு வகுக்கின்றன. 1980களில் மிகச் சிறு பகுதியாக இருந்த வருவிப்புச் சந்தைகள் (derivative markets) 2011இல் 700 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்தன. பெருமளவு விரிந்து பரந்த இந்த வருவிப்புச் சந்தைகளின் மையமாகச் செயல்படும் சர்வதேச வங்கிகள் நிதிமயமாக்கத்தின் உந்துசக்தியாகவும் உள்ளன.

லாபம் பெறுவதற்கான அடிப்படை உற்பத்தித் துறையிலிருந்து சுற்றோட்டத் துறைக்கு மாற்றம் பெற்றுள்ளது. நிதி லாபம் முன்னிலை பெற்றுள்ளது. ஊதியங்களிலிருந்தும், கூலிகளிலிருந்தும் சுரண்டுவதன் மூலம் நேரடியாகவும் அமைப்பு சார்ந்தும் லாபம் அபகரிக்கப்படுகிறது. உற்பத்தித் துறையில் தொழிலாளரின் ஊதியமற்ற உழைப்பைச் சுரண்டி லாபம் பெறுவது முதல் வகைச் சுரண்டல். ஒரு தொழிலாளருக்குக் கடன் கொடுப்பதன் மூலம் கூலியைச் சுரண்டுவது இரண்டாம் வகைச் சுரண்டல். இது உபரி மதிப்பு சாராத சுற்றோட்டத் துறைகளில் நடைபெறும் கூடுதல் சுரண்டல். இதை மதிப்புச் சுரண்டல் எனவும் குறிப்பிடலாம்.

முதலாளித்துவப் பொருளாதாரத்தில் உற்பத்தி, சுற்றோட்டம், விநியோகம் ஆகியவற்றில் உற்பத்தியே முதன்மைப் பங்கு வகிக்கிறது. முதலாளித்துவத்தில் உற்பத்தியின் நோக்கம் மூலதனத் திரட்டலே, உபரி மதிப்பாக்கத்தைப் பெருக்குவதே ஆகும். மூலதனம் என்பது அதன் உடைமையாளருக்கு உழைப்பைச் சுரண்டுவதற்கான வாய்ப்பைத் தருகிறது.

உற்பத்தி நிகழ்முறையில் தொழிலாளர்களின் ஊதியமற்ற உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் பெறப்பட்ட உபரி மதிப்பே லாபமாகிறது.  லாபத்தின் ஒரு பகுதியே கடனுக்கான வட்டியாக  நிதி மூலதன உடைமையாளருக்குச் செலுத்தப்படுகிறது. உபரி மதிப்பிலிருந்து நிதி மூலதனத்திற்கான வட்டி கிடைக்கிறதே தவிர நிதி மூலதனம் தன்னிச்சையாக தன்னைத்தானே பெருக்கிக் கொள்வதால் அல்ல. நிதி மூலதனம் குட்டி போடுவதில்லை. அப்படிப்பட்ட ஒரு மாய்மாலத் தோற்றத்தையே ஏற்படுத்துகிறது.

முதலாளித்துவப் பொருளாதாரத்தில் இரண்டு வகையான மூலதனத் திரட்டல் காணப்படுகிறது. பங்குச் சந்தையின் மூலம்  மூலதனம் திரட்டப்படுவதை நிதி மூலதனத் திரட்டல் எனலாம், இது இரண்டாம் வகையான மூலதனத் திரட்டல். இதன் மூலம் திரட்டப்படும் மூலதனம் அனைத்துமே உற்பத்தித் திறனுள்ள முறையில் முதலீடு செய்யப்படுவதில்லை.

அப்படி என்றால் முதலாளித்துவச் சமூகத்தில் உண்மையான / முதன்மையான மூலதனத் திரட்டல் எங்கு  நடைபெறுகிறது? நிச்சயமாக நிதித்துறைகளில் அல்ல. உற்பத்தித் துறைகளில் உழைப்பாளரின் ஊதியமற்ற உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் திரட்டப்படும் உபரி மதிப்பின் திரட்டலே உண்மையான / முதன்மையான மூலதனத் திரட்டல் ஆகும். உபரி மதிப்பிலிருந்தே லாபம் பெறப்படுகிறது.

உண்மையான மூலதனத் திரட்டல்:

உற்பத்தித் துறையில் உபரிமதிப்பாக்கத்தின் மூலம் செய்யப்படும் மூலதனத் திரட்டலே உண்மையான மூலதனத் திரட்டல் ஆகும். உபரி மதிப்பாக்கத்திற்குத் தொழில்துறை மூலதனமும், உபரிமதிப்பைப் பணமாக ஈடேற்றம் பெற வணிக மூலதனமும் பங்களிக்கின்றன.

நிதி மூலதனத் திரட்டல்:

பங்குச் சந்தைகள், நிதி நிறுவனங்கள் போன்ற சுற்றோட்டத் துறைகளின் மூலம் செய்யப்படும் மூலதனத் திரட்டல் நிதி மூலதனத் திரட்டல் எனப்படுகிறது. நிதித் துறையில் புதிய மதிப்பு உருவாக்கப்படுவதில்லை. உற்பத்தித் துறையில் பெறப்பட்ட லாபத்திலிருந்தும், பெரும் தரப்பு மக்களின் வருவாய், ஓய்வூதியம், கூலி என அனைத்து விதமான வருவாய்களும் நிதிச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டும்  நிதி மூலதனம் திரட்டப்படுகிறது. உபரி மதிப்பு சாராத சுற்றோட்டத் துறைகளில் நடைபெறும் இந்தக் கூடுதல் சுரண்டலில், மதிப்பு சுரண்டல் பிரதான பங்கு வகுக்கிறது.

நிதிமயமாக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் நிதி பரிவர்த்தனைகளின் மூலமே அதிக லாபம் பெறப்படுகிறது, உபரிமதிப்பாக்கத்துக்கு நேரடியான தொடர்பில்லாத(மறைமுகத் தொடர்பு கொண்ட) லாப வடிவங்கள் அதிகரித்துள்ளன. இந்த ஒட்டுமொத்த சுரண்டல் அமைப்பை நிதிமூலமான அபகரிப்பு (financial expropriation) என கோஸ்தாஸ் குறிப்பிடுகிறார்.

பங்குச் சந்தைகள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளன.ஆனால் பங்குச் சந்தையின் சந்தை மூலதனத்தின் மொத்த மதிப்புமே உற்பத்தித் துறையில் முதலீடு செய்யப்படுவதில்லை. சந்தை மூலதன மதிப்பிற்கும், உற்பத்தித் துறையில் செய்யப்படும் மூலதன மதிப்பிற்கும் இடையிலான வேறுபாடே நிதிமுதலீட்டாளர் லாபம் என்று பொருளாதார அறிஞர் ஹில்ஃபெர்டிங்க் வரையறுத்துள்ளார்.

இதிலிருந்தே, நிறுவனங்களின் முதன்மை பங்குதாரர்களும், நிதி நிறுவனங்களும், இடைத்தரகர்களும் பெரும் லாபம் அடைகிறார்கள். நீண்ட கால அளவில் மட்டும் தான் பங்குச் சந்தை நிலைகள், மூலதனத் திரட்டலுக்கான சுழற்சியுடன் ஒத்து போகிறது. குறுகிய கால அளவில் செய்யப்படும் ஊக முதலீடுகளே இந்த வேறுபாடு ஏற்பட காரணமாகிறது.

இந்த ஊக முதலீடுகளை கட்டுப்படுத்தவும், நிதிச் செயல்பாடுகளை ஒழுங்குமுறை படுத்தவும் வரிகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக பங்கு பரிவர்த்தனை வரியை (security transaction tax) விதிக்க வேண்டும். டோபின் என்ற பொருளாதார அறிஞர் நாணயப் பரிவர்த்தனைகளில் செய்யபடும் ஊக முதலீடுகளைத் தடுக்க ஒரு வரிமுறையை முன்மொழிந்தார். இது டோபின் வரி என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த வரிவிதிப்பினால் நிதித்துறையின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று நடைமுறைபடுத்தப்படாமல் தடுக்கப்படுகிறது.

யார் யாருக்கு உதவுகிறார்?

டாலரின் மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்ட நிதிமயமாக்கத்தின் உறிஞ்சு குழல்கள் உலகெங்கும் பரவியதால் அங்கிருந்தெல்லாம் மதிப்பு / செல்வம் அமெரிக்காவுக்குக் கடத்தப்படுகிறது. அமெரிக்கா மிகப்பெரும் கடனாளி நாடாக உள்ளது. வளரும் நாடுகளிலிருந்து வரும் கடன் மூலதனங்களே அமெரிக்க நுகர்வுக்கு நிதியளிக்கின்றன.

வளரும் நாடுகளின் நிதித்துறை அமைப்புகள் வளர்ந்த நாடுகளின் நிதித்துறை அமைப்புகளைச் சார்ந்திருக்கும் நிலை உள்ளதால் வளரும் நாடுகளிலிருந்து வளர்ந்த நாடுகளுக்கு மதிப்பு கடத்தப்படக் காரணமாகிறது. இது வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளுக்குக் கப்பம் கட்டுவதைப் போல் உள்ளது என கோஸ்டாஸ் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய முதலீடுகள் வளரும் நாடுகளில் வளர்ச்சியை ஏற்படுத்தும் எனப் பரிந்துரைக்கப்பட்டாலும், உண்மையில் அவை வளரும் நாடுகளிலிருந்து நிதியை அபகரிப்பதற்கான கருவியாகவே செயல்படுகின்றன. அது போலவே அந்நிய நிறுவனங்களாலும் நமக்குப் பெரும் இழப்பே ஏற்படுகிறது. பொருளாதார அறிஞர்கள் பால் பரனும், ஹாரி மேக்தாஃபும் எந்த  நாடும் அதன் எல்லைக்குள் அந்நிய நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது, அந்நிய நிறுவனங்கள், வளங்களை வெளிநாட்டுக்குக் கடத்துவதற்கான குழாய்களே என குறிப்பிடுகின்றனர்.

1870லிருந்து 1914 வரை பிரிட்டனிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மூலதனத்தின் அளவு 2.4 பில்லியன் பவுண்ட். ஆனால் அதிலிருந்து பிரிட்டன் பெற்ற வருவாய் மதிப்பு 4.1 பில்லியன் பவுண்ட் . அமெரிக்க நிறுவனங்கள் 1950-63க்கு இடைப்பட்ட பகுதியில் 17.4 பில்லியன் டாலர் மூலதனங்களை ஏற்றுமதி செய்தன. ஆனால் அதன் மூலம் 29.4 பில்லியன் டாலர் லாபமடைந்தன. இதெல்லாம் பழங்கதை இப்பொழுதெல்லாம் அந்நிய முதலீடுகள் வளர்ச்கிக்கே உதவுகின்றன எனக் கருதுவோமானால் அது தவறு.

உலகளவில் பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு வறுமையை ஒழிக்கவும், வளர்ச்சிக்காகவும் தாராளமாக தங்கள் செல்வத்தை வழங்குகின்றன, என்பது தான் நம் காதுகளில் தொடர்ந்து ஓதப்படும் கதை. அமெரிக்காவை மையமாகக் கொண்ட உலகளாவிய நிதி ஒருமைப்பாட்டிற்கான அமைப்பும் (ஜி.எஃப்.ஐ), நார்வே பொருளியல் பள்ளியின் பயன்பாட்டு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை இதை அப்பட்டமான பொய் என நிரூபித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையில் நடக்கும் அனைத்து விதமான நிதி பரிவர்த்தனைகள், பரிமாற்றங்கள், நிதி உதவி, வெளிநாட்டு முதலீடு, வர்த்தகம், கடன் ரத்து, வெளி நாட்டில் வேலை செய்வோரால் பரிமாற்றப்படும் நிதி, பதிவு செய்யப்படாத மூலதன கடத்தல் அனைத்துமே இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.

2012இல், வளர்ந்த நாடுகளிடமிருந்து வளரும் நாடுகள் மொத்தம் 1.3 லட்சம் கோடி டாலர் பெற்றன (இதில் நிதி உதவி, முதலீடு, வெளிநாட்டு வருமானம் ஆகியவை அடங்கும்). ஆனால் அதே ஆண்டு  வளரும் நாடுகளிலிருந்து 3.3 லட்சம் கோடி டாலர் வளர்ந்த நாடுகளைச் சென்றடைந்துள்ளது. வளரும் நாடுகளிடமிருந்து 2 லட்சம் கோடி டாலர் பறிக்கப்பட்டுள்ளது. 1980 முதல் 2012 வரை வளரும் நாடுகளிலிருந்து மொத்தம் 16.3 லட்சம் கோடி டாலர் வளர்ந்த நாடுகளால் அபகரிக்கப்பட்டுள்ளது. இதில் வட்டித் தொகை மட்டும் 4.2 லட்சம் கோடி டாலர் செலுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது சொல்லுங்கள் இதில் யார் யாருக்கு உதவுகிறார்?

பணக்கார நாடுகள் ஏழை நாடுகளை வளர்க்கவில்லை; ஏழை நாடுகளைச் சுரண்டியே பணக்கார நாடுகள் வளர்ந்து வருகின்றன.

1990களிலிருந்து நிலையற்ற வெளிநாட்டுத் தனியார் முதலீடுகள் நிதிச் சமநிலையைக் கடுமையாகப் பாதித்து, நிதி நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. வளரும் நாடுகளுக்கு அளிக்கப்படும் அந்நிய மூலதன பாய்ச்சல் வரமா  சாபமா? என்று பார்த்தால் சாபக்கேடுதான் என்கிறது பாகிஸ்தானின் வளர்ச்சிக்கான ரிவீயுவில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை.

நிலையற்ற அமெரிக்க டாலர் அதைச் சார்ந்து ஊசாலாடும் மற்ற நாணயங்களின் பரிமாற்ற விகிதங்களிலும், வட்டி வீதங்களிலும் பெரும் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச நிதிச் சந்தைகள் பெரும் வளர்ச்சியும், லாபமும் அடைந்துள்ளன. இது உலகெங்கும் பணவீக்கம் அதிகரிப்பதற்கே காரணமானது பணவீக்கம் அதிகமானால் நிதிமயமாக்கத்தின் மூலம் பெறப்படும் லாபம் குறைந்து விடும் என்பதற்காகத்தான் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முறை (inflation targeting) உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இவ்வாறு பணவீக்கத்தைக் குறைப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் வளரும் நாடுகளில் அதிக வட்டி வீதங்கள் விதிக்கப்படுவதற்கும் பொருளாதார வளர்ச்சியை மட்டுப்படுத்தி பொருளாதாரக் குறுக்கத்தை ஏற்படுத்தவும் காரணமாக அமைந்துள்ளன.

வளரும் நாடுகளில் காணப்படும் உயர்ந்த வட்டி வீதம், அந்நிய முதலீட்டாளர்கள் வளர்ந்த நாடுகளில் மலிவுக் கடன் பெற்று, வளரும் நாடுகளின் நிதிச் சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் நிதி லாபம் பெறுவதையே ஊக்கப்படுத்துகிறது. அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும் போதும், வெளிநாட்டு நாணயங்களில் கடன் பெறுவது அதிகரிக்கும் போதும்  நாணயப் பரிவர்த்தனை ஏற்ற இறக்கங்களில் ஏற்படும் இழப்புகளைக் காப்பீடு செய்ய அந்நிய செலவாணி இருப்புகளை அதிகளவில் சேமிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

வளரும் நாடுகளின் மத்திய வங்கிகள் அந்நியச் செலவாணி இருப்புகளை அதிகரிக்க அமெரிக்க அரசின் நிதிப் பத்திரங்களை வாங்கிக் குவிக்குமாறு நிர்பந்திக்கப்படுகின்றன. இதுவும் வளரும் நாடுகளிலிருந்து வளர்ந்த நாடுகளுக்கு மூலதனம் அபகரிக்கப்படுவதற்குக் காரணமாகிறது.

டானி ரோட்ரிக்கின் ‘அந்நிய செலாவணி இருப்புகளுக்கான சமூகச் செலவு’ என்ற ஆய்வறிக்கை 1990களின் முற்பகுதியிலிருந்து வளரும் நாடுகளின் அந்நியச் செலவாணி இருப்புக்களில் மிக விரைவாக உயர்ந்துள்ளது எனவும், இந்த இருப்புக்கள் வளரும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 30 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டுகிறது. மேலும் வெளிநாட்டு கடன் வாங்குவதால், இந்த நாடுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு உலக அளவில் மொத்த உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 1 சதவீதத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிடுகிறது.

2000களில் அமெரிக்காவின் மொத்த லாபத்தில் நிதி லாபத்தின் பங்கு 45%ஆக உயர்ந்துள்ளதாக கோஸ்தாஸ் குறிப்பிடுகிறார்.

நிதி முதலீடுகளில் இழப்புகளைத் தவிர்ப்பதற்காக ‘ஹெட்ஜிங்’ (hedging) எனப்படும் இழப்புக் காப்புமுறை செயல் படுத்தப்படுகிறது. ஆனால் இதையே லாபம் ஈட்டுவதற்கான கருவியாகப் பயன்படுத்தி ஊக முதலீட்டாளர்களும், நிதி நிறுவனங்களும் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. வேலியே பயிரை மேயும் கதையாக இழப்புகளைத் தடுப்பதற்கான கருவியும் எதிர்மறையாக இழப்புகளை அதிகப்படுத்துகின்றன.

இதனால் சிறு முதலீட்டாளர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்காகவே வர்த்தக வங்கிகள் சொத்து நிதி வருவிப்புகளில் புத்தாக்கங்களை ஏற்படுத்தி சந்தைகளை விரிவுபடுத்தின. சொத்து வருவிப்புகளில் ஏற்படும் அபாயங்களைப் போக்கப் பாதுகாப்புக் கருவிகள் (securitization) செயல்படுத்தப்பட்டன.

இவை எதிர்பார்த்த படி அபாயங்களைக் குறைக்கவில்லை, ஊக லாபங்களை பெறுவதற்கான புதிய வாய்ப்புகளை வழங்கியதுடன் எதிர்பாராத புதிய நெருக்கடிகளையே அதிகரித்துள்ளன. உண்மையான மூலதனத் திரட்டல்,நிதி மூலதனத் திரட்டல் இடையில் பொருந்தா நிலையை,முரண்பாடுகளை நிதிமயமாக்கம் அதிகரித்துள்ளது. முதலாளித்துவம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு முரண்பாடுகளுள் இது ஒன்று மட்டுமே.

சமூகத்தின் அனைத்து தரப்பினருமே  நிதிமயமாக்கத்தின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். நிதிமயமாக்கத்தின் மூலம் தனி நபர்கள்,குடும்பங்களின் கடன் நிலை அதிகரித்துள்ளது. அமைப்புகள், நிறுவனங்கள், அரசுகள் என அனைத்தின் கடன் நிலையும் அதிகரித்துள்ளது.

உலகெங்கும் கடன் நிதி சார்ந்தே பொருளாதாரம் இயங்கி வருகிறது. நிதிமயமாக்கம் மூன்றாம் உலக நாடுகளை கடன் பொறியில் சிக்கும் நிலையை அதிகப்படுத்தியுள்ளது. கட்டற்று எங்கும் பரவிய நிதிமயமாக்கத்தாலும், நிதி நெருக்கடிகளை குறைப்பதற்கான புத்தாக்க முயற்சிகளாலும் நிதி நெருக்கடிகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதே ஒழிய குறைந்தபாடில்லை.

நிதி முதலீடுகளின் மூலம் உலகின் பெரும்பணக்காரரான வாரன் பஃபெட் நிதியமைப்பில் பேரழிவை ஏற்படுத்தும் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முதலாளித்துவ பொருளியலாளர்களில் பலர் நிதித்துறையை ஒழுங்குமுறைக்குள் கொண்டு வரவேண்டும் நிதிமுதலீடுகளில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தையே முன் வைத்துள்ளனர். முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாக்கும் விதமாக நவீன தாராளமயத்தை சீர்திருத்துவதன் மூலம் மட்டுமே பொருளாதார நெருக்கடிகளுக்கு முடிவுகட்ட முடியாது. அரசியல் பொருளாதார அமைப்பு மாற்றத்தின் மூலமே நீடித்தத் தீர்வைப் பெற முடியும்.

ராணுவ மேலாதிக்கம்:

உலகச் சந்தையின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகளால் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் அமெரிக்காவின் அரசியல் அதிகாரம், ராணுவ பலத்தைச் சார்ந்துள்ளது.

இரண்டு உலகப் போர்களின் போதும் ராணுவத் தளவாட உற்பத்தியால் பொருளாதார வளர்ச்சி பெற்ற அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறைவதற்கும் ராணுவ ஆதிக்கமே முக்கியக் காரணமாக உள்ளது. இழந்த பொருளாதார மேன்மையை இட்டு நிரப்ப அது ராணுவ பலத்தையே நம்பியுள்ளது.

சோசலிசம் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று பல பொய்ப் பரப்புரைகள் செய்து, சோசலிசத்தை நீக்க வேண்டும் என்ற நோக்குடன் போர் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டது. சோவியத் ரஷ்யா இருந்த போது அதன் வளர்ச்சியைத் தடுக்கவும், உலக வரைபடத்திலிருந்து சோஷலிசத்தைத் துடைத்தெறியவும் ராணுவக் கூட்டமைப்புகளை ஏற்படுத்தியது. பனிப் போர் என்று கூறப்பட்டாலும் அமெரிக்கா வெளிப்படையாகவே சீனா, கொரியா, வியட்நாம், கியூபா, வெனிசுலா ஆகிய நாடுகளின் மீது போர் தொடுத்தது.

சோவியத்து ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு பனிப்போருக்கு மாற்றாக தீவிரவாதத்திற்கு எதிரான போர், ஜனநாயகத்துக்கான போர், மனித உரிமைகளுக்கான போர், சர்வாதிக்கத்திற்கு எதிரான போர் எனப் பல்வேறு போர்வையில் போர் தொடுப்பதற்காக ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறையாமல் பார்த்துக் கொண்டது. இதன் மூலமே தன் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துள்ளது. அணு ஆயுத வளர்ச்சியைத் தடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமெரிக்கா மறுத்தது. அது உலகெங்கும் தீவிரவாதத்தையே விதைத்துள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் சரிவை அடுத்து அமெரிக்காவில் எல்.எல்.டபிள்யூ. புஷ் நிர்வாகத்தின் பாதுகாப்புத் துறை மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக் கொள்கையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது மார்ச் 1992 பாதுகாப்புத் திட்டமிடலுக்கான  வழிகாட்டுதல், பாதுகாப்புத் துறைக் கொள்கை துணைச் செயலாளர் வொல்போவிட்ஸினால் உருவாக்கப்பட்டது. அதன் படி அமெரிக்காவின் முதன்மையான தேசியப் பாதுகாப்பு இலக்கானது "எந்தவொரு உலகளாவிய போட்டியாளரின் தோற்றத்தையும் தடுக்கும்" விதமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

செப்டெம்பர் 11, 2001ஐத் தொடர்ந்து இந்த அணுகுமுறையே  அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு உத்திக்கான கொள்கையானது. இதைத் தொடர்ந்து ஈராக்கின் மீதான அமெரிக்கா தொடுத்த போரானது ஒரு புதிய உலகப் போரை பிரகடனப்படுத்தியதாக பெலாமி ஃபொஸ்டர் (Naked Imperialism) குறிப்பிடுகிறார்.

ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகம், அமெரிக்கப் பாதுகாப்பின் மறுகட்டமைப்பு என்ற பெயரில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும், ஆக்கிரமிக்கும் போக்கையும் பட்டவர்த்தனமாக்கும் வெளிநாட்டுக் கொள்கைக்கான அறிக்கையையே மீண்டும் உறுதிப்படுத்தியது.

சீன எதிர்ப்பு குவாட்:

வளர்ந்து வரும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து அதைத் தனிமைப்படுத்தும் வகையில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகளைக் கொண்ட குவாட் என்ற ராணுவக் கூட்டணியை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது. அணிசேரா நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப் பின் அதிக அமெரிக்கச் சார்பு கொண்ட நாடாக மாறியுள்ளது. அதன் வெளிப்பாடே ’123’ ஒப்பந்தம். தற்போது நரேந்திர மோடி அரசு அமெரிக்காவுடன் மேலும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆட்சியில் 2015ல் அமெரிக்காவும், இந்தியாவும்  “ஆசிய-பசிபிக், இந்தியப் பெருங்கடலுக்கான கூட்டு மூலோபாய நோக்கு” குறித்த அறிக்கையில் கையெழுத்திட்டன. அதற்கடுத்த ஆண்டில், இரு நாடுகளும் தளவாடப் பரிமாற்றங்களுக்கான ஒப்பந்த அறிக்கையில் (லெமோவா) கையெழுத்திட்டன.

அமெரிக்க இராணுவப் படைகளுக்கு முதன்முறையாக இந்திய இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட அமெரிக்க இராணுவத் தளத்தை இந்தியாவில் நிறுவியதற்குச் சமானமானது என்றே கூறலாம். தென் கொரியா, நியூசிலாந்து, வியட்நாம் போன்ற பிற நாடுகளையும் குவாட் கூட்டணியில் இணைத்து குவாட் பிளஸ் ஆக விரிவுபடுத்தும் முயற்சியிலும் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆசியாவின் நோட்டோ ஒப்பந்தம் என சீனா இதை வன்மையாகக் கண்டித்துள்ளது.

ரஷ்யாவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மைக் பாம்பியோவும், ட்ரம்பும் அவக்கேடான முறையில் சீன வெறுப்புப் பிரசாரத்தைத் தூண்டியதை உலகறியும். ஜோ பிடன் நிர்வாகமும் சீன எதிர்ப்புப் போக்கையே கடைப்பிடிக்கிறது. ஜோ பிடனின் நிர்வாகம் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் ‘குறைமதிப்பிற்கு’ உட்படுத்தும் "சீனாவின் தவறான, நியாயமற்ற, சட்டவிரோத நடைமுறைகளை"த் தடுப்பதற்கான அனைத்துக் கருவிகளையும் பயன்படுத்தும் என்றே அமெரிக்கக் நிதியமைச்சர் ஜேனட் யெல்லன் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த டிரம்ப் நிர்வாகத்தின் முடிவிலிருந்து (ஜோ பிடன் நிர்வாகம்) பின்வாங்க மாட்டோம் என்றும், ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தொடர்ந்து செயல்படும் என்றும்  இஸ்ரேல் சார்புடன் ஜோ பிடன் நிர்வாகம் செய்துள்ள அறிவிப்பு பாலஸ்தீனியர்களுக்கு வழக்கம் போல் ஏமாற்றமே அளித்துள்ளது.

பிடன் தலைமையிலான நிர்வாக மாற்றம் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் வெளிநாட்டுக் கொள்கையிலிருந்தும் இராணுவக் கூட்டணியிலிருந்தும் பின்வாங்கப் போவதில்லை. உலகச் சந்தை அமெரிக்காவின் மீது வைத்துள்ள குருட்டு நம்பிக்கைகள் தொடரும் வரை உலக நாடுகளிடமிருந்து அமெரிக்கா மலிவுக்கடன் பெறும்.வீழும் டாலரை அவைத் தாங்கிப் பிடிக்கும். ஆனால் இந்நிலை என்றென்றும் தொடர முடியாது.

எப்படிக் கடவுள் மீதான நம்பிக்கைகள் பக்தர்களுக்குப் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகின்றனவோ, அதே போல் அமெரிக்க வல்லரசின் சர்வ வல்லமை பற்றிய குருட்டு நம்பிக்கைகளும், மற்ற நாடுகளுக்கும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளுக்கும், அவற்றின் உழைக்கும் மக்களுக்கும் பொருளாதார இழப்புகளையே ஏற்படுத்துகின்றன. குருட்டு நம்பிக்கைகளால் மட்டுமே ஒரு பொருளாதார அமைப்பை, முதலாளித்துவப் பொருளாதார அமைப்பை நீண்ட நெடுங்காலம் பாதுகாக்க முடியாது.

வரலாற்றுப் பாடம்:

இங்கிலாந்தில் நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சி பொருளாதார உபரியை உற்பத்தித் திறனுள்ள முறையில் பயன்படுத்தாமல் மேட்டுக்குடியினர் தங்களது ஆடம்பரச் செலவுகளுக்காகவும் மாதா கோவில்கள், மாட மாளிகைகள் கட்டவும், போர்களில் ஈடுபடவும் செலவளித்ததாலே ஏற்பட்டது என்ற பால் பரணின் கோட்பாட்டை தாமஸ் லேம்பர்ட் என்ற பொருளியலாளர் தரவுகளின் அடிப்படையில் நிரூபித்து ‘மந்த்லி ரிவியூ’ மாத இதழில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார்.

இதற்கு சுன்சு என்ற அறிஞர் உருவாக்கிய பரன் விகிதம் என்ற கோட்பாட்டைப் பயன்படுத்தியுள்ளார். முதலீட்டு மதிப்பிற்கும், பொருளாதார உபரி மதிப்பிற்கும் இடையிலான விகிதம் பரன் விகிதம் என அழைக்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுகளின் தரவுகள் இங்கிலாந்தில் 13ஆம் நூற்றாண்டிலிருந்து 15ஆம் நூற்றாண்டு வரை பொருளாதார உபரி மதிப்பின் அளவில் ஏற்பட்ட குறைவு அதன் பொருளாதார நெருக்கடியை விளக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்திற்கான பரன் விகிதத்தைக் கணக்கிட்டு ஆய்வு செய்த அவர் 1200இலிருந்து 1860 வரை பரன் விகிதம் குறைந்ததாகவும், 1800க்கு பிறகே ஒன்றிற்கும் மேல் அதிகரித்ததாகவும் கண்டறிந்துள்ளார்.

முதலாளித்துவத்தின் எதிர்கால மாற்றம் அல்லது மற்றொரு பொருளாதார அமைப்பின் பரிணாமம் என்பது ஒரு சமூகத்தின் பொருளாதார உபரி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமைந்துள்ளது. நிலப்பிரபுத்துவத்தில் உபரிமதிப்பு வீணாகச் செலவிடப்பட்டதைப் போலவே முதலாளித்துவத்திலும் உபரி மதிப்பு உற்பத்தித் திறனற்ற  முறையில் பயன்படுத்தப்பட்டால், முதலாளித்துவத்திற்கு அதுவே ஆபத்தாக முடியும் என்று குறிப்பிடுகிறார்.

பொது சுகாதாரத்தில் போதுமான அளவு முதலீடு செய்வதிலும், கோவிட்-19 தொற்றுநோய் போன்ற நெருக்கடியை எதிர்கொள்வதிலும் முதலாளித்துவம் அடைந்த தோல்வியானது, பஞ்சம் மற்றும் நோய்களைத் தடுப்பதில் தோல்வியடைந்த நிலப்பிரபுத்துவத்தின் தோல்வியை ஒத்ததாகும். கோவிட் தொற்றுநோய் முதலாளித்துவத்தைத் தாக்கியது போல கரும் இறப்பு எனப்படும் பிளேக் நோயினால் ஏற்பட்ட அழிவு ஒரு பலவீனமான நிலப்பிரபுத்துவ அமைப்பை மிகவும் கடுமையாகத் தாக்கியது.

உற்பத்தி முதலீடுகளுக்குப் போதுமான முதலீட்டுப் புலங்கள் பெரும்பாலும் இல்லை என்பதையும், பரன், சுவீஸி குறிப்பிட்டுள்ளபடி முதலீட்டை சமூகமயமாக்குவதற்கான தேவை அதிகரித்து வருவதை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதும், முதலாளித்துவத்திலிருந்து இறுதியாக சோசலிசத்தை நோக்கிய மாற்றத்தின்  தொடக்கமாகலாம். நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியும் அதன் பின்விளைவும் ஒரு நீண்ட தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாகவே மாற்றம் ஏற்படும் என்பதையே குறிப்பிடுவதாக கூறுகிறார்.

முதலாளித்துவத்தில் சமூகத்தின் உபரிமதிப்பை உற்பத்தித் திறனுள்ள முறையில் பயன்படுத்தாமல் ஊக முதலீடுகளுக்காகவும், ராணுவத்திற்காகவும் செலவு செய்யப்படுமானால் அதை அழிவிலிருந்து  பாதுகாக்க முடியாது. ஆகவே முதலாளித்துவத்தைக் கடந்து செல்வோம்.

காலனியாதிக்கம் நேற்றைய வரலாறு மட்டுமல்ல இன்றைய நிஜமாகவும் உள்ளது. நாளையும் தொடருமா என்பது மூன்றாம் உலக நாடுகளின் விழிப்பு நிலையையும், செயல்திறனையும் பொறுத்தே அமைந்துள்ளது. ஏகாதிபத்திய அமைப்புகளையும் நவீன தாராளமயக் கொள்கைகளையும் புறக்கணிப்பதன் மூலம் மூன்றாம் உலக நாடுகள் கூட்டணி சேர்ந்து தங்களுக்குள்ளே வர்த்தகப் பரிவர்த்தனைகளையும், பொருளாதார ஒத்துழைப்பையும் உதவிகளையும் செய்வதற்கான அமைப்பு முறைகளை ஏற்படுத்த வேண்டும்.

இதை சர்வதேசியவாதத்திற்கு எதிரானதாகப் பார்க்க வேண்டியதில்லை. இன்றைய உலகமயமாக்கமும், நிதிமயமாக்கமும் சுரண்டலையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதை எதிர்த்துப் பொருளாதாரத் தற்சார்பை ஏற்படுத்துவதன் மூலமே சுரண்டலற்ற உலகமயமாதலையும், உண்மையான சர்வதேசியத்தையும் அடைய முடியும். மூன்றாம் உலக நாடுகளின் தேசியவாதமும், அவை தேசியநலன்களை முன்னிறுத்துவதும் சர்வதேசியவாதத்திற்கு எதிரானதல்ல.

தேசியத்தையும் தேசநலன்களையும் புறக்கணித்து சர்வதேசியவாதத்திற்கு நீளம் தாண்டவோ, உயரம் தாண்டவோ முடியாது. டாலருக்கு வந்த வாழ்வு மூன்றாம் உலக நாடுகளிலிருந்து பறிக்கப்பட்டது, டாலருக்கு வாழ்வு கொடுத்தது போதுமே,  என்று விழிப்புப் பெற்று மூன்றாம் உலக நாடுகள் வாழத் தொடங்குவோமே!

(தொடரும்)

- சமந்தா