உயர்நீதி மன்றங்களில் தமிழே வழக்காடு மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து தமிழக வழக்கறிஞர்கள் பட்டினிப்போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையில் தொடங்கிய போராட்டம், மெல்லப் பரவி தமிழக நீதிமன்றங்கள் முழுவதையும் ஆட்கொண்டுள்ளது.

கோரிக்கை மிக நியாயமானது என்பதை மறுப்பவர்கள் எவரும் இல்லை. அதனால்தான் அனைத்துக் கட்சியினரும் அந்தப் போராட்டத்தை நேரில் சென்றும், அறிக்கைகள் விடுத்தும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தான் ஆட்சியில் இருந்த போது இக்கோரிக்கைக்காக எதுவும் செய்யாத ஜெயலலிதா கூட இப்போது இப்போராட்டத்தை முழுமூச்சாக ஆதரிக்கிறார்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் அடிப்படையில், ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, வழக்காடு மொழியாகத் தமிழே இருக்க வேண்டும் என்னும் கோரிக்கையை ஆண்டுகள் பலவாக நாம் எழுப்பி வருகின்றோம். மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் தமிழை அறிவிக்க வேண்டும் என்று ஆளும்கட்சியான தி.மு.கழகம் தன் மாநாடு ஒன்றில் தீர்மானமே நிறைவேற்றியுள்ளது.

எனினும், மத்திய அரசில் இது குறித்த நடவடிக்கைகளை நம்மால் பார்க்க முடியவில்லை. வழக்கு மன்றங்களில் தமிழ் வேண்டும் என்னும் கோரிக்கை எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலத்திலேயே அனுப்பப்பட்டது. பிறகு 2006 டிசம்பரில், முதலமைச்சர் கலைஞர் அவர்களால் சட்டமன்றத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு தில்லிக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

அண்மையில் தில்லி உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், அவரவர் தாய்மொழியில் வழக்காட மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது. ஆனாலும் அவை நான்குமே இந்தி பேசும் மாநிலங்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நம்மைப் போலவே, மேற்கு வங்க அரசும் வங்காள மொழியில் வாதிட அனுமதி கேட்டுள்ளது. அவர்களுக்கும் இன்றுவரை விடை அனுப்பப்படவில்லை. இதிலிருந்து ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில்தான் வாதிட வேண்டும் என மத்திய அரசு கருதுகிறதோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது. முறையற்ற இப்போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லையேல் இந்தியா முழுவதும் மொழிப் போராட்டங்கள் கிளர்ந்து எழுவதற்கே இந்நிலை வழிவகுக்கும்.

அதே வேளையில் இன்னொன்றையும் இங்கே நாம் குறிப்பிட வேண்டியுள்ளது. மிக நீண்ட நாள் கோரிக்கையான இதனைப் படிநிலைகளிலும், பொதுமக்களின் ஆதரவை மேலும் திரட்டிக்கொண்டும் முன்னெடுப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும். கோரிக்கை நிறைவேறுவதற்கும் வழிவகுக்கும். மத்திய அமைச்சர் அழகிரி தலையிட்டு 15 நாட்களுக்குள் ஆவன செய்வதாக உறுதியளித்த பின்னும், வழக்குரைஞர்கள் தங்களின் பட்டினிப் போராட்டத்தைப் பிடிவாதமாகத் தொடர்வது, வேறு ஐயங்களுக்கு வழிவகுக்கும். இத்தனை ஆண்டுகாலம் பொறுத்திருந்த நாம், இப்போது உடனே தீர்வு வேண்டும் என்று கூறிப் போராட்டத்தைத் தொடர்வதும், அதனை அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரிப்பதும் அச்சமூட்டுவதாக உள்ளது. இதனை உணர்ந்து வழக்கறிஞர்கள் தங்கள் பட்டினிப் போராட்டத்தை விலக்கிக்கொள்வார்கள் என நம்புகிறோம்.

- சுப.வீரபாண்டியன்

Pin It