இந்தியாவின் நீதித்துறையின் மீதிருந்த மக்களின் நம்பிக்கையை 2010 ஜுன் 7 ஆம் நாள் போபால் நீதிமன்றம் தகர்த்து எறிந்துவிட்டது.

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் அமைக்கப்பட்டிருந்த யூனியன் கார்பைட் இந்தியா நிறுவன ஆலையில் இருந்து, 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி அதிகாலை ஏறத்தாழ 3 மணிஅளவில், மிதைல் ஐசோ சயனைட் என்ற நச்சு வாயு கசிந்து அதிக அளவில் வெளியேறி போபாலைச் சூழ்ந்தது. விளைவு?

ஆவணங்களின்படி 3000 பேர்கள், அதற்கு வெளியே தொடர்விளைவுகளால் ஏறத்தாழ 25000 பேர்கள் மரணம் அடைந்தார்கள். இல்லையில்லை... படுகொலையானார்கள். ஏறத்தாழ 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உடல் உறுப்புகள் சிதைந்தும், உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டும் நடைபிணங்களாக ஆகிவிட்டார்கள்.

இதற்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவன முன்னாள் செயல்தலைவர் கேசூப் மகிந்ரா, முன்னாள் நிறுவன இயக்குனர் விஜய் கோகலே, முன்னாள் துணைத்தலைவர் கிஷோர் காம்தார், செயல் மேலாளர் ஜே.என்.முகுந்த், உற்பத்தி மேலாளர், எஸ்.பி.செளத்ரி, ஆலை கண்காணிப் பாளர் கே.வி.ய­ட்டி, உற்பத்தி உதவியாளர் எஸ்.ஜே.குரே´ ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதித்து போபால் நீதிமன்றத்தின் தீர்ப்பு, கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கும் போபால் மக்களை ஒரேயடியாகச் சாகடிப்பதைப் போல அமைந்து விட்டது - அதுவும் 26 ஆண்டுகளுக்குப்பிறகு.

இதில் முக்கியமான செய்தி 23 ஆண்டுகளுக்கு முன்னர் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக் கப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆன்டர்சன் பற்றி போபால்தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவர் 1984 ஆம் ஆண்டே அமெரிக்காவுக்குத் தப்பிச் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க இந்தத் தீர்ப்பு பற்றிக் கூறும்போது “தாமதமாகக் கிடைக்கும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமம் என்பதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம். இந்த வழக்கில் நீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது” என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா, “வழக்கை விசாரித்த சி.பி.ஐ, நீதியை நிலைநாட்டுவதில் முழுமையாகத் தோல்வியடைந்து விட்டது” என்று கூறியிருக்கிறார்.

மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி இதுபற்றிக் கூறும்போது, “இந்த வழக்கின் விசாரணை அமைப்பும் (சி.பி.ஐ), வாதாடிய அரசு தரப்பும் வழக்கைச் சரியான பாதையில் கொண்டு செல்லவில்லை... பணக்காரர்களும், அதிகாரம் படைத்தவர்களும் சேர்ந்து வழக்கைப் பூசி மெழுகிவிட்டனர். இந்த வழக்கில் நீதி நிலைநாட் டப்படவில்லை. கொடூரமான இந்தச் சம்பவத்தை ஏதோ சிறிய சாலைவிபத்து வழக்குபோல விசாரித்து முடித்துவிட்டனர்” என்று வேதனையுடன் சொல்கிறார்.

ஆக மொத்தம் உலகில் நிகழ்ந்த மிக மோசமான ஆலை விபத்தால் இறந்த மக்களைப்பற்றிக் கவலைப்படாமல், வழக்கை நீர்த்துப்போகச் செய்யவும், குற்றவாளிகள் தப்பிக்கவும் குறைந்த தண்டனை பெறவும் வழக்கு பலவீனமாக்கப் பட்டுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

மத்திய புலனாய்வு (சி.பி.ஐ)த் துறை முன்னாள் இயக்குனரும், 1994 ஏப்ரல் முதல் 1995 ஜுலை வரை இவ்வழக்கைக் கவனித்து வந்த பி.ஆர்.லால் இது குறித்து என்ன சொல்கிறார்? “யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளராக இருந்த வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்ட வேண்டாம் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் சிலர் என்னை வற்புறுத்தினர். சி.பி.ஐ விசாரணையில் சில அதிகாரிகள் தலையிட்டதனால்தான் நீதி கிடைக்க தாமதம் ஆகிறது.

மனிதர்களைப் படுகொலை செய்ததற்காக இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 304 ன் கீழ் சி.பி.ஐ பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்படி அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் பின்னர் 304 ஏ பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்தப்பிரிவு சாதாரண சாலை விபத்துக்குக்குப் பயன்படுத்தப் படுகிறது. எந்த ஆதாரத்தில், எந்தச் சூழ்நிலையில் இதுபோன்று வழக்கை சி.பி.ஐ நீர்க்கச் செய்தது என்பது தெரியவில்லை. மற்ற நாடுகளில் எல்லாம் நீதித்துறை, அதிகார வர்க்கம், அரசியல் தலைவர்களின் குறுக்கீடு இல்லாமல் மத்திய புலனாய்வு ஏஜெண்டுகள் சுதந்திரமாக இயங்கி வருகின்றன”.

இதில் லால் சொல்லும் குற்றச்சாட்டு 1. ஆண்டர்சன் விசயத்தில் மத்திய வெளியுறவுத்துறை தலையீடு (நிர்பந்தம்) இருந்தது. 2. 304 என்ற பிரிவு பின்னர் 304 ஏ என்ற சாதாரணப்பிரிவுக்கு சி.பி.ஐயால் மாற்றப்பட்டு இருக்கிறது. 3. சி.பி.ஐ. ஏதோ ஒரு சூழ்நிலையில் வழக்கை நீர்த்துப்போகச் செய்திருக்கிறது. 4. அதிகார வர்க்கம், அரசியல் தலைவர்களின் குறுக்கீடு இருந்திருக்கிறது.

வழக்கில் சம்பந்தப்பட்ட சி.பி.ஐ அதிகாரியின் இந்த நான்கு குற்றச்சாட்டுகளும் நிராகரிக்கப்படக் கூடியவை அல்ல. அதே சமயம், இந்தத் தீர்ப்பைப் “புதைக்கப்பட்ட நீதி” என்று முதலில் சொன்ன வீரப்பமொய்லி, இப்போது, “லாலின் அறிக்கை பொறுப்பற்றது. அவர் கூறுவது போல நடக்கவே இல்லை” என்று அடித்துக் கூறுகிறார்.

அப்படி “நடக்கவே இல்லை” என்று மொய்லி சொன்னால், நடந்தது என்ன என்று அவர் விளக்கியிருக்க வேண்டுமே? ஏன் இதுவரை விளக்கவில்லை? குறைந்தபட்சம் 304 பிரிவு, 304 ஏ என்று மாற்றப்பட்டது என்று லால் கூறியதை இல்லை என்று மறுக்கிறாரா மொய்லி?

அடுத்து ஈழத்தில் மக்கள் படுகொலை செய்யப்பட்டாலும், போபாலில் மக்கள் படு கொலை ஆனாலும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத மத்திய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி என்ன சொல்கிறார் பார்ப்போம்!

“போபால் வி­வாயு கசிவு ஏற்பட்ட சமயத்தில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்பட்டதாக அர்ஜுன் சிங் தெரிவித்திருந்தார். இதனால் அப்போதைய சூழ்நிலை கருதி ஆண்டர்சனை விடுவிக்க அவர் முடிவெடுத்திருக்கலாம். அப்படி விடுவித்திருந்தால் அது சரியான நடிவடிக்கைதான்” என்கிறார் முகர்ஜி.

மிகக் கொடுமையான படுகொலை நிகழ்வுக்குக் காரணமான, முதல்நிலைக் குற்றவாளியான ஆண்டர்சனை சூழ்நிலை கருதி, அன்றைய மத்தியப் பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் விடுவித்துள்ளார் என்பதை முகர்ஜியின் வாக்குமூலம் தெரிவிப் பதோடு, அதை சரியான நடவடிக்கை என்றும் உறுதி செய்கிறார்.

அப்படியானால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், டில்லியில் செய்தி யாளரிடம், “வாரன் ஆண்டர்சன் எப்படி அமெரிக் காவிற்குத் தப்பினார் என்று விசாரிக்கப்படும்” என்று சொன்னாரே - அது எப்படி? முகர்ஜிக்கும், குலாம்நபிக்கும் இடையே முரண்பாடு இருப்பது தெரிகிறது.

சரி! சம்பவம் நடந்தபோது ஆண்டர்சன் எப்படித் தப்பினார் என்பது இருக்கட்டும். அவர் மாநில முதல்வர் அர்ஜுன்சிங்கின் தனிவிமானத் தில்தான் போபாலில் இருந்து டில்லிக்குத் தப்பி வந்தார் என்ற குற்றச்சாட்டு பலமாக இருக்கிறது. அர்ஜுன்சிங் அனுமதி இல்லாமல் ஆண்டர்சன், முதல்வரின் விமானத்தில் வரமுடியுமா?

அதே மாநிலத்தின் இன்றைய முதல்வர் சிவராஜ்சிங் செளகான் “ஆண்டர்சன் தப்பியது குறித்து உண்மைகளை அறிய அர்ஜுன் சிங் மவுனத்தைக் கலைத்து உண்மையைப் பேச வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் தெளிவா கக் கூறுகிறார்.

ஆனால் அர்ஜுன் சிங் மட்டும் கல்லுளி மங்கனாக இன்னமும் வாய்திறக்காமல் இருக்கிறார் என்றால், அர்ஜுன் சிங்கும் அவரைச் சார்ந்தவர் களும் குற்றவாளிக்குத் துணைபோன குற்றவாளி களாகக் கருத வேண்டிய நிலை வரலாம்.

அப்போதைய பிரதமர் இராஜீவ் காந்தியின் முதன்மைச் செயலாளர் பி.சி.அலெக்சாண்டர், ராஜீவ்காந்தியின் தலையீடும் ஆண்டர்சன் நாட்டைவிட்டு வெளியேற இருக்கலாம் என்று கூறியிருப்பதைக் காங்கிரஸ் கட்சி மறுத்திருக்கிறது.

ஒரு முதன்மையான வழக்கில் சந்தேகம் என்று வந்துவிட்டால் அனைத்தையும் விசாரிக்க வேண்டிய கடமை சட்டத்துக்கு உண்டு. அங்கே கட்சிச் சாயம் பூசுவது அழகல்ல! மாறாக இது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தும்.

இவை எல்லாவற்றையும் ஆய்வு செய்து முழுஅறிக்கையைத் தனக்கு வழங்கவேண்டும் என்று, மத்திய அமைச்சர்கள் குழுவுக்கு (26 ஆண்டுகளுக்குப் பிறகு ) பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டி ருக்கிறார் என்பது பத்திரிகை செய்தி. போபால் நச்சுவாயு வழக்குப் பற்றியும், பிறவும் பிரதமருக்கு இதுவரை எதுவும் தெரியவில்லை என்பது போல இது இருக்கிறது.

காலம் கடந்தாலும் சரி! மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!

அமெரிக்காவுக்குத் தப்பிச்சென்ற ஆண்டர்சன் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டும். அவரைத் தப்ப உதவி செய்தவர்களை நீதியின்முன் நிறுத்தவேண்டும். அனைத்துக் குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் - மேல் முறையீட்டின் மூலம் அப்போதுதான் சி.பி.ஐ. மீது படிந்துள்ள கறை நீங்கும்!

அனைத்தையும் விட, உயிரிழந்த - பாதிக்கப் பட்ட போபால் மக்களுக்குச் சரியான நிவாரண நிதியும், நிவாரண உதவிகளும், மருத்துவமும் அவர்களுக்குக் கிடைத்தே ஆகவேண்டும்.

இல்லாவிட்டால் நீதி செத்துவிட்டது என்பதில் எந்தத் தவறும் இருக்க முடியாது!

- மாதியக்கவிராயர்

Pin It