தமிழை அலுவல் மொழியாக ஆக்கக்கோரி மதுரையை சேர்ந்த 6 வழக்குரைஞர்கள்  9/6/2010 முதல் இன்று வரை சாகும்வரை உண்ணாநிலைப்போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர். இவர்களின் போராட்டத்தை பற்றி இந்நொடி வரை தமிழக அரசும், முதல்வரும் கண்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. தமிழ் உணர்வாளர்கள் தொடர்ந்து அவர்களை சந்தித்து ஆதரவளித்துவருவதும், பல்வேறு தமிழ் இயக்கங்கள் மதுரையில் தொடர்வண்டி மறியலில் ஈடுபட்டு 100 மேற்பட்டோர் கைதாக, அவர்கள் மீது அரசு வழக்கும் போடப்பட்டுள்ளது. இதில் கல்லூரி மாணவர்களும் அடக்கம். 
 
சென்னையிலும் இவர்களுக்கு ஆதரவாக 6 வழக்குரைஞர்கள் நேற்றுமுதல் சாகும் வரை உண்ணாநிலைப்போராட்டத்தை துவங்கியிருக்கின்றனர். மதுரை வழக்குரைஞர்களுக்கு ஆதரவாக திருச்சியில் நீதிமன்ற புறக்கணிப்பும், மத்திய அரசு அலுவகம் முன் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். இன்று [வெள்ளிக்கிழமை] தமிழகம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபடவுள்ளனர். வேறு சில தமிழ் அமைப்புகளும் இப்போராட்டத்தினை மக்கள் மத்தியில் கொண்டுச்செல்லும் விதமான முறைகளை திட்டமிட்டு வருகின்றனர். தோழர். நல்லக்கண்ணு, சீமான் போன்ற தலைவர்களும் நேரில் சென்று தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். 15ந்தேதி மத்திய அமைச்சர் முக அழகிரி தலையிடுவதாக தகவல் அடிப்பட்டது. ஜெயலலிதா, விஜயகாந்த், பாஜகவில் சிலர் என தங்கள் ஆதரவை தெரிவித்துவருகின்றனர். போராட்டத்தில் இருக்கும் வழக்குரைஞர்களின் உடல்நிலை சுணக்கமாவதை நேரில் சென்ற தோழர் பகிர்ந்தார்.
 
இவை எல்லாம் நடப்பது தமிழ்நாட்டில்தான் என்பதை முதல்வர் கருணாநிதிக்கு யாராவது சொன்னால் தேவலை. திமுக அரசின் அனைத்துத் துறை அமைச்சர்கள், அலுவர்கள் அனைவருக்கும் இப்போதைய ஒரே வேலை செம்மொழி மாநாட்டுப் பணிதான். கோவையில் தமிழ் உணர்வாளர்கள் காவல் துறையால் கண்ணில் எண்ணை விட்டு கவனிக்கப்படுகின்றனர். வழக்கமாக நடைபெறும் கூட்டங்கள், போராட்டங்கள் எதற்கும் அனுமதி இல்லை.
 
அரசு பாராமுகமாக இருப்பதற்கு எவ்வித நியாயமான காரணமும் இல்லை. திமுக அரசிற்கு எதிரான நிலைப்பாடோடு போராட்டத்தை கூட வழக்குரைஞர்கள் மேற்கொள்ளவில்லை. 6/12/2006 நாள் சட்டமன்றத்தில் அனைத்துகட்சியில் ஆதரவோடு இயற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய அரசின் உத்தரவோடு நிறைவேற்றக்கோரியே இவர்களின் போராட்டம் நீடிக்கிறது. இதில் தலையிட்டு அதனை தீர்த்துவைப்பதில் முதல்வருக்கு என்ன நெருக்கடி என்றும் தெரியவில்லை.
 
முதல்வர் செய்தித்தாள்களில் பட்டியலிடுகிறார் அந்த இடத்தில் தமிழைக் கொண்டுவந்தேன் இந்த திட்டத்தில் தமிழைக் கொண்டுவந்தேன். அப்படியெனில் என்ன அர்த்தம்? நீதி மன்றத்திலும் தமிழைக் கொண்டு வருவேன் நீங்கள் எல்லாம் போராட்டமெல்லாம் நடத்தாது, திமுக மாநாட்டுக்கு இல்லை இல்லை செம்மொழி மாநாட்டுக்கு அணி திரண்டு வாரீர்... என்பதுதானே..
 
அலுவல்களில் தமிழைக் கொண்டுவருவதை அலட்சியப்படுத்துவது, தமிழில் அர்ச்சனை செய்வதை சரியாக நடைமுறைப்படுத்தாதது, ஈழத்தமிழர்கள் கொத்துகொத்தாய் கொல்லப்பட்டபோது கடிதம் மாத்திரமே எழுதியது, பயிற்று மொழியாக தமிழைக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டாமலிருப்பது என மக்கள் விரோத ஆட்சியாக மட்டுமில்லாது தமிழ் விரோத ஆட்சிமுறையாக தனதைக் கொண்டுவிட்டு தமிழ்செம்மொழி மாநாடு நடத்த முனைப்பாக இருப்பது பச்சையான சுயநலம்தான் என்பது வெளிப்படை.
 
கைது செய்தாலும் உண்ணாநிலையைத் தொடரவிருப்பதாக வழக்குரைஞர்கள் முடிவு எடுக்கவிருப்பதாகவே தெரிகிறது.
 
எத்தனை நாட்கள் போராட்டம் நடத்தி செத்துப்போனாலும் இவ்வரசு தூசிக்கு ஈடாக நம்மை மதிப்பதாகத் தெரியவில்லை. இச்செய்தியினை, அரசின் அலட்சியத்தை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் முக்கியமான பணி தமிழ் உணர்வாளர்கள், படைப்பாளிகள், உண்ணாநிலைக்கு ஆதரவளித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இருக்கிறது.
 
கையெட்டும் தொலைவில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான ஒப்பாரி பாடலாகத்தான் செம்மொழிப்பாடல் இதுவரை பார்க்கப்படுகிறது. அந்த அளவிலேயே அது இருக்கட்டும். அது தமிழகத் தமிழர்களுக்கான ஒப்பாரி பாடலாக மாறுமுன் செயலாற்றுவோம். 

- விஷ்ணுபுரம் சரவணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)