உலகாயதம் - முன்னோர் மொழிந்த பொருள்
லோகாயதம் என்பதை லோகே + ஆயதம் என நாலாயிர திவ்வியப் பிரபந்த ஈடு பேருரையின் அவதாரிகையில், (முன்னுரை) நம்பிள்ளை (கி.பி.1147--1252) கூறினார். இதனை, ராமாநுஜ ஜீயரும் அந்தப் பேருரையின் போக்கிலேயே விவரித்தார்.
இதன் பொருள் உலகினில் பரவலாக நடப்பினில் உள்ளது என்பதாகும். (ஆயுதம் = கருவி, ஆயுத பூஜை. ஆய்தம் = ஃ எழுத்து, எஃகு). அழகிய மணவாளப் பெருமாள் உலகின் / நாட்டின் இயல்பு எனச் சுட்டிக் காட்டினார் (கி.பி.1207-1309, ஆச்சாரிய ஹிருதயம் 93-94).
உலகாயதம் என்பது உலகத்தினது நடைமுறை என்பது அழகிய மணவாளப் பெருமாள் அவர்களது வாக்கு. வடக்குத் திருவீதிப் பிள்ளை உலகாயதம் கைக் கொண்டு உள்ளவர்களை நாத்திகர் எனச் சித்திரித்தார் (திருவாய் மொழி.1-3-3). ஆச்சாரிய ஹிருதயம் தரும் நடப்பினில் உள்ளது, நாட்டு இயல்பு என்ற சுட்டுரைகள் ஒளி தருவன. நாட்டு நம்பிக்கையில் உள்ளது மற்றும் நாட்டு நம்பிக்கை எனச் சுட்டாதது கவனத்திற்கு உரியது.
உலகாயதம் -- எதிர்ப்புகள் சுற்றி நின்றபடி
1. உலகமானது மண், தீ, நீர், காற்று ஆகிய நான்கு பூதப் பொருட்களால் ஆனது. இவை உண்மையானவை.
2. நான்கு பூதங்களின் கலப்பால் உடல் ஆகி, வாழ்கின்றது.
3. அப்போதே அந்த நான்கு பூதங்களின் கலப்பாலேயே உயிரானது, உடலில் உண்டாகி நிலவுகின்றது.
4. உடல் அழிந்தால் அதனோடு உயிரும் அழியும்.
5. உலக வாழ்க்கையில் அழகுடன், மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
6. பெண்ணிடம் பெறும் பாலியல் இன்பம் முக்தி, சொர்க்கம்.
7. காட்சிப் பிரமாணம் மட்டுமே, உண்மையான அறிவைத் தரும்.
இந்தியாவினில் நிலவும் சமண, வேதாந்த, சித்தாந்த தத்துவ ஞானிகள் இப்படியே எடுத்துக் கூறுவர். இப்படிக் கூறுவதோடு, வினைகள், முன்பிறவி, அடுத்த பிறவி, கடவுள் ஆகியன இல்லை எனவும் உலகாயதம் கூறுவதாக எடுப்பாகச் சுட்டிக் காட்டுவர்.
அனுமானப் பிரமாணம் உண்மையான அறிவைப் பெறுவதற்குரிய நம்பகமான முறையியல் அன்று என்றும் உலகாயதம் கூறுவதாகச் சிறப்பாகக் காட்டி உரைப்பர்.
காட்சிப் பிரமாணத்தையும், அழகு, மகிழ்ச்சி இன்பங்களை உலகாயதம் போற்றுவதால் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என எதிரி நிலைநிலையாக் குறிப்பிடுவர்.
அழகு என்பது ஒருவர் தன்னை அழகுபடுத்திக் கொள்வது. நறுமலர் மாலை, சந்தனம் (அருள்நந்தி சிவாசாரியார் வாக்கு - உலகாயதன் மதம்.11) மற்றும் வாசனையான கஸ்தூரி, சுகந்தமான மாலிகை, குங்குமம் (இரக்ஷணிய சமய நிர்ணயம் :3.2), மதுரமான திரவம், மணமுள்ள சவக்காரக் கட்டி ஆகியன அழகு சாதனங்கள்.
மங்கல நிகழ்வுகள், விழாக்கள், மரியாதைக்கு உரியவரைக் காணச் செல்லும் போது பெண்டிர், ஆடவர் தம்மை அழகுபடுத்திக் கொள்ளுவர். ஒவ்வொரு வயதினரும் அவரவருக்கு உரிய விதம், சமூகபாணி. இது அன்றாட நடப்பு. மேனாமினிக்கம் அன்று. மகிழ்ச்சி என்பது சுயநல மகிழ்ச்சி அன்று. மக்களிடம் பரவசமாக நிலவுவதே.
சித்தாந்த விற்பன்னர்கள் உலகாயத நெறியாளனாக ஓர் ஆடவனை முன்நிறுத்திக் கொண்டு, பாலியல் உறவு மற்றும் பெண்மை ஆகியனவற்றைச் சிறுமைப்படுத்திச் சித்திரிக்கின்றனர். மாறாக, உலகாயத விற்பன்னர் உலக ஆடவர் - பெண்டிர் உறவு சரிநிகரானது எனப் பெருமைப்படுத்தி உரைப்பர். மனமொத்து ஒருவருக்காக ஒருவர் பரஸ்பரமாக தூய்ப்பது என்கின்றனர்.
வேதாந்த, சித்தாந்த தத்துவ ஞானிகள் உடலும் உயிரும் தனித்தனி என்ற கருத்தியலில் உறுதியாக நிற்பர். மேலும், தமது கடவுளானவர் சடப் பொருட்களை ஒன்றோடு ஒன்று இணைக்கின்றார். அப்போது, சடப் பொருட்களில் இருந்து சடப்பொருட்கள் மட்டுமே தோன்றும். உயிர்ப் பொருட்கள் தோன்றவே தோன்றாது என்பதில் வலிமையோடு நிற்கின்றனர்.
தேகமே ஆத்மா, உடலினது பண்பே உயிர் என்பதில் உலகாயதம் உறுதியாக நிற்கின்றது. மேலும், சடப் பொருட்கள் தாமே ஒன்றுடன் ஒன்று அணையும். அப்போது சடப்பொருட்களில் இருந்து உயிர்ப் பொருள்கள் தோன்றும் என்பதில் உலகாயதம் வலிமையோடு நிற்கின்றது.
உலகாயதம் - அவசியமானது
சங்க காலத்தில் பூதப்பொருள்கள் தரும் அறிவை அறிவதற்குக் கண்ணின் காட்சி அறிவும், செவியின் கேள்வி அறிவும் முன்னிலை வகித்தன. தமிழக சிந்தனை வரலாற்றில் படைப்புக் கடவுள் தோற்றம் பெற்றது. அனைத்தும் அதனிடம் இருந்து வந்து, இறுதியில் அதனிடமே போய் அணையும் (கலி : 119,129) என்ற சிந்தனை வலுப் பெற்றது. இதனால், அனுமானம் வலுக் கண்டது.
கண்ணால் நேரடியாகக் காணாமல், சிந்தனையிலேயே முடிவு செய்து கொள்ளுவது ஓர் அளவையாக வகுக்கப் பட்டது. கண்ணால் காணாமலே எப்படி முடிவு செய்ய இயலும் என்னும் கருத்தியல் கொண்ட பெருமக்கள் கோப் பெருஞ்சோழனோடு விளக்கம் கொண்டு அமர்ந்து இருந்தனர் (காணாமலேயே நட்பு பூண்ட சோழன், பிசிராந்தையார் வடக்கு இருக்க வருவார் உரைத்தார். புறம் : 216). அந்தப் பெருமக்களது கருத்தியலானது உலகாயதம். நூல்கள் எழுதப் பட்டும் அன்று விளங்கின. உலகநூல் என நாலடியார் சுட்டியது (140).
உருவம் இல்லாத கடவுள் உருவம் உள்ள பொருள்களைப் படைக்கிறது. உருவம் உள்ள கடவுள் உருவம் உள்ள பொருள்களைப் படைக்கிறது. வினையின் நீங்கியோர், உலகத்து உச்சியில் இன்பம் காண்பர். பூதப் பொருள்களால் ஆனது இந்த உலகம் என்ற கருத்தியல்களைச் சாத்தனாரது மணிமேகலை காவியம் உரைத்தது (21:92102).
மேலும் சாத்தனார், காணப்படும் தோற்றத்தில் பஞ்சவித கற்பனைகள் இருப்பதாலேயே அது பொருள் ஆகின்றது. அவை தேசம், பெயர், சாதி, குணம், தொழில் என்பன எனவும் தமது கருத்தியலைக் கூட்டிக் கொண்டார் (27:23, 29:49-51). இவை ஐந்தும் கி. மு. 600 முதல் கி. பி. 450 வரையான தமிழகச் சிந்தனையின் குவிமையம்.
அடுத்து வந்த பக்திக் காலத்தின் விரிமையம். உருவம் அற்ற கடவுளை யூதர், கிரேக்கர், அரபுக்கள் அடங்கிய யவனர் போற்றினர். யவனர் தேசத்து அலெக்சாண்டிரியா நகரில் வாழ்ந்த பிலோ, கிரேக்கத்துப் பிளாட்டினஸ் ஆகியோர் உருவம் இல்லாத கடவுளை உணர்ந்த ஞானிகள். உலகப் பொருள்கள், உயிர்கள் அந்தக் கடவுளிடம் இருந்து வந்து மீண்டும் அதனையே அடைகின்றன என்று உரைத்தனர் (Philo of Alexandria. Paulist Press Newyork 1981. The Neoplatonists Thomas Wittaker 1901).
இந்த உலகமானது பூதப் பொருள்களால் ஆனது என்று உலகாயதம் உரைத்தது. இதனை நீலகேசி விவரித்தது. மண், நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய பூதப் பொருள்களால் உடலும், உயிரும் பொருள்களும் ஆகி உள்ளன. உடலின் குணம் உயிர். உடலில் இருந்து பிரிக்க இயலாதது. பொருள், குணம், தொழில் ஆகியன ஒருங்கு இணைந்தவை.
குணம் - குணி என்றால் இரண்டும் தனித்தனி என ஆகி விடும். ஆதலால், இந்தப் பகுப்பை உலகாயதம் ஒப்பவில்லை. பூதப் பொருள்கள் கூடித் தொழில் புரிவதால், குணங்களான உயிர், உணர்வு உண்டாயின. உடலானது இறக்கும் போது புதிய உடல் - உயிர்களைச் சந்ததியாகப் புறந்தந்து இறக்கும். புதியதாக உருவான கருச்சிசுவிற்கு உணர்வு, சிந்தனை, நினைவு உண்டு.
கருவறை சிசுவிற்கு இவைகளில் குறைவு ஏற்பட்டால் அது ஊன்தடி ஆகி வெளியேறி விடும் (புறம். 74). உலகாயதமானது பாலியல் இன்பத்தைப் போற்றுகின்றது.
நான்கு பூத (மண், நீர், தீ, காற்று) சமுதாயத்தில் சைதந்யம் என்ற ஒரு தர்மம் பிறக்கும். சைதந்ய நாசமே மோக்ஷம். பிரத்தியட்சமே உயர்வான திருஷ்டி. இற்றே உலகாயதன் மதம். பொய்கை ஆழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி, 14-ஆம் பாட்டிற்கு நம்பிள்ளை (கி.பி.1147--1252) உரைத்த வியாக்கியானத்தில் உலகாயதம் பற்றிய காட்சி இது.
இதனை ராமாநுஜ ஜீயர் எடுத்து எழுதுகின்றார் (திருவாய்மொழி, வியாக்யானாதிகள், ஆழ்வார் திருநகரி, அரையர்ஸ்வாமி பரிசோதித்தது, சென்னை -ஜூலை 1878).
நிகமாந்த மஹாதேசிகன் (கி.பி. 1269--1369) தமது தேசிகப் பிரபந்தம் நூலினில் விவரிப்பது இப்படி. கண்ணால் காண்பதுவே மெய். காட்சிப் பிரமாணம் உண்மையான அறிவை நல்கும். அப்படி என்றால், வேதத்தில் உள்ள சொற்காட்சிகளைக் காண்பதால் அங்குப் புலப்படுவது அவற்றில் உள்ள அறிவு எனக் கண்டோம். கண்ணால் காணப்படாதது இல்லாதது. அப்படி என்றால், வேதத்தில் கண்டது குற்றம் இல்லை.
வேதத்தில் உள்ள சொற்கள் உண்மையான அறிவே. கண்ணால் காட்சிப் பிரமாணமாகக் கண்டது போல், வேதம் காட்டியது கண்ணால் கண்ட அறிவு அல்லவா. இது அறியாமல், நீ உணவு உண்டாய் எனப் பிறர் கண்டு சொல்வதைக் கேட்டுத் தாம் உணவு உண்டதை நம்புவர் உலோகாயதர்.
இப்படிப் பட்டவரை மீறிப் பேச முடியாது என நகையாடுகிறார் (செய்யுள் --165). வேதம் புலப்படுத்தும் அறிவானது ஆகமப் பிரமாணம் முறையியலைச் சார்ந்தது. நிகமாந்த மஹாதேசிகன் வேதத்தின் அறிவைப் புலப்படுத்த பிரத்தியட்சப் பிரமாணம் முறையியலைக் கையாளுகின்றார். உலகாயத நெறியினரை நகையாடவே இந்த உத்தியைக் கையாளுகின்றார்!
கண்ணால் முதலில் ஒன்றைக் கண்டு அறிந்தார். இது பிரத்தியட்சப் பிரமாணம். பிற்பாடு, இதனை உதாரணமாகக் கொண்டும், முன்னிட்டுக் கொண்டும், அந்தக் காரியத்தை மட்டும் தனியாகக் காணும் போது அதன் காரணத்தை முன் கண்டதை வைத்து ஊகித்து அறிகின்றார். இது அனுமானப் பிரமாணம்.
வேறு ஒருவர் கண்ணால் கண்டு உரைப்பதை இன்னொருவர் கேட்டு அறிகின்றார். இது கேள்விப் பிரமாணம். இப்படி எல்லாம் உலகாயதர் அறிகின்றார்.
ஆனால், இவர் பிரத்தியட்சப் பிரமாணத்தால் காணாததை இல்லை என்று கலங்குவர் எனக் கேலி செய்கின்றார் (செய்யுள்--166). உலகாயதர், எங்குமே இல்லாத ஒன்றை நிறுவும் அனுமானப் பிரமாணம் முறையியலையும், அதன் வழி உணர்ந்த அறிவையும் போற்றுவது இல்லை.
இதனைப் பற்றி நிகமாந்த மஹாதேசிகன் தமது தேசிகப் பிரபந்தம் நூலினில் ஒன்றும் விவரிக்கவில்லை. மலை, புகை, நெருப்பு காட்சிக்கு மட்டும் இவரது விவரிப்புகள் பொருந்தும்.
மண், குயவன், சட்டி இதனை உதாரணமாகக் கொண்ட உலகம், படைப்பு, கடவுள் என்பதற்கு அவரது விவரிப்பு பொருந்தாது. உலகாயதம் போற்றும் சம்சாரம், தேகாத்மம், ஆண் - பெண் பாலியல் சரச சல்லாபம் பற்றி நம்பிள்ளையும், நிகமாந்த மஹாதேசிகனும் எதுவும் உரைக்கவில்லை.
அகப்புற சமயமான சைவ சக்தி வழிபாட்டினில் வாம மார்க்கம் என்ற சித்தாந்தம் உள்ளது. அந்த மார்க்கத்தினர் வழிபாட்டுச் சடங்குகளில் பாலியல் உறவினில் ஈடுபடுவர்.
பாலியல் உறவை முன்னிட்டுக் கொண்டு அந்த வாம மார்க்கத்தினரை உலகாயதர் தமது வலது கரம் நீட்டித் தோழமை கொள்ளுவதாக சைவநெறி மெய்கண்ட சந்தான குரவர் அருள்நந்தி சிவாச்சாரியர் உலகாயத நெறியினரைச் சித்திரித்தார் (சிவஞான சித்தியார், உலகாயதம் மதம் - 25). இவர் விட்டுக் கொடுக்காத இருமையாளர்.
உலகாயதரைக் கொலை, களவு செய்பவர்களாகவும் எழுதினார். என்றாலும், மற்ற சைவநெறி மெய்கண்ட சந்தான குரவர் உமாபதி சிவம் அனையோர் எவரும் தமது வலது கைத்தலம் ஈந்து தோழமையாக அருள் நந்தியார் வார்த்தைகளுக்குச் செவி சாய்க்காததோடு உதவியும் புரியவில்லை. தமது சைவ மெய்யியல் பணியோடு மட்டும் நின்றனர்.
உலகாயதர் கொலை, களவு செய்பவர்களாக வைணவ ஆவணங்கள் உரைக்க வில்லை. வாம மார்க்கத்தவர் தோழமை, கொலை, களவுகளை உலகாயத நெறியினரோடு இணைத்து அருள்நந்தி சிவாச்சாரியர் மட்டுமே தனிமையாக நின்று வரைந்தார்.
சைவத் துறையினில் வேதாந்த மரபினைத் தோற்றுவித்தவர் தத்துவராயர். தூய்மையான வேதாந்தி. பரமாத்துவிதம் என்பது அந்த வேதாந்தம். கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் (1831--1878) பரமாத்துவித நெறியினில் ஒளியுடன் திகழ்ந்தார்.
மனோன்மணீயம் பேரா. சுந்தரம் பிள்ளை அவர்களுடைய குரு. சுவாமிகள் சகஜமதம் என உலகாயதத்தைக் குறிப்பிட்டார்.
இயல்பு என்பதற்குச் சகஜம் என்ற பதத்தைக் கையாண்டார்.
இந்தச் சகஜம் என்ற சுபாவமே பிரபஞ்சத்திற்கு உற்பத்தி, ஸ்திதி, நாச வல்லபமாகச் சித்திக்கின்றது. எனவே கடவுள் உளன் என்பது அவிவேகம்(நிஜானந்த விலாசம், ஏழாவது பாகம். பக்--158).
பஞ்சபூதங்களைத் தவிர வேறு ஒரு வஸ்து இல்லை. அவைகளே அதிர்ஷ்ட விசேஷத்தால் அங்கங்கே ஒன்றுகூடி, அவற்றின் சேர்க்கை விசேஷத்தால் அறிவு ஜனித்தது. ஆதலால், சகல விவகாரங்களும் உண்டாயிற்று.
பேத குணமுடைய வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இவைகளின் சேர்க்கையின் சிவப்பு போல அறிவு ஜனித்தது. இது தேகாத்மவாதி, சாருவாகர் உபதேசம். தேகம், கோசங்கள் பஞ்சபூதத்தின் விகாரம்.
பஞ்சபூதங்கள் தவிர வேறு இல்லை (சுவாநுபூதி ரசாயனம், நாலாவது பிரகரணம்). சுந்தர சுவாமிகள் உலக வாழ்வைச் சம்சார துக்கம் என்று உணர்ந்தவர்.
உலகத்தில் நான், என் பிள்ளை, என் பெண்டு, என் மாடு, என் வீடு, என் தனம், என் பந்து என்ற அபிமானத்தால்... அவைகளைத் தன் ஆத்மாவில் ஆரேர்த்து (கற்பித்து) நான் என்கிற தன்னை அறியாமல் துக்கம் உண்டாயிற்று. என்னுடையது என்ற மமதை உண்டாயிற்று.
நான் என்பது பஞ்சபூதம், சம்சாரம் அல்ல. நான் என்பது ஆத்மா (சுவாநுபூதி ரசாயனம், நாலாவது பிரகரணம்). சுந்தர சுவாமிகளது கருத்தியலின்படி உலகாயதமானது விவேகம் உடையது அன்று. சம்சாரமானது துக்ககரமானது.
உயிருக்கு மமதை ஊட்டுவது. என்றாலும், அவர் கொலை, களவு, வாம மார்க்கம் என்பவைகளோடு தோழமை உறவாக்கி உரைக்கவில்லை. இந்தக் கூற்று உற்று நோக்கத் தக்கது. மேலும், இந்திய அளவினில் வேறு எந்த ஆவணங்களிலும் உலகாயதம் கொலை மற்றும் களவுகளோடு சித்திரிக்கப்படவில்லை.
திருமறை சார்ந்த கிருஷ்ணபிள்ளை ஆடவர் வனிதையர் போகமே சௌக்கியமான சுவர்க்கம் என்று மட்டுமே வரைந்தார் (இரக்ஷணிய சமய நிர்ணயம் :3.2). எனினும், பெண்--ஆண் கலவி இன்பமானது. சந்ததி இன்பத்திற்கு முகாந்தரம், அச்சாரம், அழகானது, அவசியமானது.
உலகாயதம் சுதந்தரமானது
வார்த்தாமாலை, ஸ்ரீவசனபூஷணம் நூல்கள் வைணவ உலகினில் கீர்த்தி வாய்ந்த ஆவணங்கள். நாதமுனிகள் (9-ஆம் நூற்றாண்டு) தொடங்கி நம்பிள்ளை (1147--1217) வரையான நாநூறு ஆண்டு கால பகுதியில் தமிழக லைணவப் பெரியோர் உரைத்த வாத்தைகளைத் தத்துவ முறையியலில் வரலாறாகத் தொகுத்துக் கூறுவது வார்த்தாமாலை.
தொகுத்தவர் பின்பழகிய ஜீயர். பிள்ளை லோகாச்சாரியார் (1264--1369), வரைந்தது ஸ்ரீவசனபூஷணம். இதற்கு மணவாள மாமுனி (1390--1470) வியாக்கியானம் உரைத்தார். இந்த இரண்டு நூல்களும் தேகாத்மவாதம் குறித்து அடிப்படை நிலையினில் உரைக்கின்றன. தேகாத்ம வாதமானது உலகாயத நெறியின் சமூக வாழ்வுக் கண்ணோட்டம்.
பின்பழகிய ஜீயர் தமது வார்த்தாமாலை நூலினில், சம்சாரிகள் தேகமே ஆத்மா, தேகத்தோடு சம்பந்தம் உள்ள செல்வம், உற்றார், உறவினர், என்னுடையது என்று போற்றுவர். இவற்றைச் சரீர சம்பந்திகளாகக் கொண்டாடுவர். அநாதி காலமாகவே, சம்சாரிகள் தேகாத்மம், சுதந்தரம் சூழ்ந்தவர்கள் என்று மதிப்பிட்டார் (வார்த்தைகள் : 18, 25, 30, ,412, 414).
நாதமுனிகள் முதல் மணவாள மாமுனிகள் வரையான வைணவ ஆச்சாரியர்கள் அனைவரும் தேகாத்மவாதம், சுதந்தர சிந்தனை, பிற தெய்வ வழிபாடு ஆகியனவற்றை மறுத்தே தமது வைணவத்தைப் பேசினர் (ஸ்ரீவசனபூஷணம்:23). வியாக்கியானம் பொலிந்த ஆயிரப் படிகளை எழுதினர்.
தேகாத்ம வாதமானது சம்சாரிகளது வாழ்க்கைப் பண்பு என அந்த வைணவ நூல்கள் சுட்டுகின்றன. சம்சாரிகள் சுதந்தரம் உடையவர்கள் (ஸ்ரீவசனபூஷணம் :7). அநாதி காலமாகவே இப்படி (வார்த்தை 431). நெடு நாட்களாகச் சுதந்தரனாய் உள்ள சம்சாரியைக் கடவுளுக்கு அடிமையாக ஆக்க வேண்டும் (ஸ்ரீவசனபூஷணம் :156). அந்த வைணவ நூல்கள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட இந்திய ஆன்மிக நூல்கள் மேய்யியல் நெறியினில் விழைகின்றன.
சம்சாரிகள் தேகம், பிள்ளை, வீடு, மனை, மாடு, வயல், பணம், (வார்த்தை -225, 263) ஆகியன வற்றைத் தம்முடையன என்பர். சப்தம் (இசை) முதலான ஐம்புல விஷயங்களில் இனிமையை நுகர்வர். இவை அனைத்தையும் உண்மை என நிலைநாட்டுவர். இதனைத் தேகாத்ம வாதம் என அந்த வைணவ நூல்கள் சுட்டுகின்றன (எல்லா இந்திய ஆன்மிக நூல்களும் இப்படியே).
இப்படிச் சுட்டுவதனுடன் நில்லாது, சம்சாரிகளைப் பொருள் பற்று, தேகப் பற்று கொண்ட அஞ்ஞானிகள் எனவும் விமர்சித்தன. இப்படி விமர்சித்ததன் மூலம் சம்சாரிகளால் கைக் கொண்டு நிலவிய சுதந்தரத்தையும் நிராகரித்தன.
ஆனால், உலகாயதமானது வாழ்வியல் நிலையில் தேகாத்ம வாதம், சப்தம் ஆகிய விஷயங்களின் இனிமையில் ஆழ்வது ஆகியனவற்றோடு வாழ்வினில் சுதந்தரம் என்பதனையும் போற்றியது (வார்த்தை 315).
சம்சாரி என்பவர் தேகம் சம்பந்தப்பட்ட நிலம், மனை, மாடு, மனைவி, மக்கள் இவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொண்டு, கடவுளை விட்டு விலகுவதையே இயல்பு எனக் கொண்டவர் என அழகிய மணவாளரும், அருளாளப் பெருமாள் எம்பெருமானும், வேதாந்த தேசிகரும் விவரித்தனர் (ஆசாரிய ஹிருதயம்.94, ஞானசாரம்.19,42, பகவத்கீதை 1--18). இதன் பொருட்டு உலகப் பொருள்கள், உடல் ஆகியனவற்றை உண்மை எனச் சம்சாரிகள் போற்றுகின்றனர். இவை எதனுடைய சார்புக்கும், ஆணைக்கும் உட்படாது சுதந்தரமாக நிலவுவன.
உலகாயதம் போற்றிய தேகாத்ம வாதமும் பொருள், உடல் உண்மை, உலக, சமூக வாழ்வியல் இன்பம், சுதந்தரம் ஆகியன ஒன்றுடன் ஒன்று கைபிணைந்தவை. இதில் சுதந்தரம் என்பதானது சிறப்பாகச் சுட்டுவதற்கு உரியது.
தமிழக வைணவ நூல்கள், உலகாயதமானது சம்சாரிகளிடம் சுதந்தரமாக நிலவியதாகச் சுட்டிக் காட்டியதானது இந்திய அளவிலும் சிறப்பு வாய்ந்தது.
உலகாயதம் வீறார்ந்தது
ஆச்சாரியர் காலத்தில், உலகாயத நெறிக்கு, நூல்கள் இருந்ததாகப் பரிமேலழகர் உரைத்தார். நிலம், நீர், தீ, காற்று நான்கு பொருள்களின் சேர்க்கையால் உயிர், அறிவு தோன்றும். மதுவில் களிப்பு, இன்பம் போல. இறந்த உயிரானது மீண்டும் பிறக்காது.
பொருளும், இன்பமும் ஒருவரால் செய்யப்படுவன. நேரடியாகக் கண்ணால் கண்டால் மட்டுமே உண்மை. மறுபிறப்பும், இருவினைப் பயனும் இல்லை. கடவுள் இல்லை. இந்தக் கருத்தியல்களை விளக்கும் நூல்கள் இருந்தன(திருக்குறள் உரை:281,351). அவற்றின் உட்பொலிவு உலகாயதம்.
ஒரு பொருளில் இருந்து அதே இனப்பொருள் தான் தோன்றும். நெல்லில் இருந்து நெல்தான் முளைக்கும். நெல் கமுகாய் நீளாது என்பது சைவ ஞானியான அருள் நந்தி சிவாச்சாரியார் வாக்கு. ஒன்றில் இருந்து வேறான புதிய பொருளும் பிறக்கும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலக்கும் போது களிப்பு தரும் சுவையும், சிகப்பு நிறமும் பிறக்கும்.
இவை இரண்டும் அந்த மூன்றினில் முன்னர் இல்லை. வேறு புதிய பொருள், புதிய குணத்துடன் பிறந்தது. இஃது உலகாயதம்.
சடப் பொருளில் இருந்து சடப் பொருள்தான் தோன்றும். உயிர்ப் பொருள் பிறக்காது என்பது அருள்நந்தி சிவாச்சாரியார் சித்தாந்தம். மாறாகச், சடப் பொருளில் இருந்து உயிர்ப் பொருள் பிறக்கும். இதற்கு இந்தத் தாம்பூலம் மற்றும் களிப்பு இன்பத்தை இந்தியப் புகழ் படைத்த கூற்றாக உலகாயதம் உரைத்தது.
கிறித்துவத்திற்காகக் கி. பி. 1578 இல் அன்றீக்கு அன்றீக்கெஸ் தமது ‘தம்பிரான் வணக்கம்‘ நூலினில் ஆற்புமத்துக்கு (ஆத்துமம்) சத்துருக்களாவது மூன்று: பூலோகம், உடல், பேய் எனத் தமிழக சுதேசிகளை நோக்கி உபதேசித்தார்(13), அநாதி காலமாகவே, சம்சாரிகள் சாரீர சுகம், தனம், வெகுமானம், விருதுகளைப் போற்றுபவர்கள்.
இது பாவமான வியாதி. இந்த நாஸ்திக மதம் சகல பாவங்களுக்கும் காரணம் எனத் திருச்சபை உபதேசி ராபர்ட் டி நெர்லி உபதேசித்தார் (தூஷண திக்காரம்:8.6, ஆத்ம நிர்ணயம்:12.2,12.10). இவை உலகாயத மறுப்பு.
மேலும் அவர், சார்வாக மதம் லோகாயத மதத்தைச் சொன்னது இது. உலகமே உண்மை. கர்த்தரான சர்வேஸ்வரன் இல்லை. பிரத்தியக்ஷ தெரிசனம் தவிர அனுமான தெரிசனம் இல்லை.
இவ்வுலக இன்பமே தக்கது. காமத்தில் புரண்டு கிடப்பது போகம். இந்த லோகமானது காரணம் இல்லாமலேயே அனாதியாய், தானாய் எப்போதும் இருக்கும். நாசமாகாது. மரணத்திற்குப் பிற்பாடு மனுஷருடைய ஆற்றுமமானது தேகத்தோடு அழியும் (நித்திய சீவன சல்லாபம், அஞ்சாம் சல்லாபம்).
பல்லக்குச் சுமக்கிறவனும், பல்லக்கில் அமர்ந்திருக்கிறவனும் அவனவன் தான் பிழைத்திருக்கிறதுக்குப் பிரயாசைப்படுகிறான். சுமப்பவன் சம்பளம்-கூலி-வரவும் ஊழியம் செய்கிறான். அமர்ந்திருப்பவன் தனது சுகத்திற்காகக் கூலி தருகிறான்.ஊழியம் பண்ணுகிறவன் பிழைக்க வேணும் எனத் துரையானவர் பிரயாசைப் படவில்லை.
துரையானவர் சுகிக்க வேணும் எனச் சுமப்பவனும் பிரயாசைப் படவில்லை. அவனவன் தானேதான் பிழைக்கிறதுக்குப் பிரயாசைப் படுகிறான்(ராபர்ட் டி நெர்லி, புனர்ஜென்ம ஆ«க்ஷபம், ஏழாம் சல்லாபம்). இவர் கி.பி.1640 களில் நேர்க் காட்சி வாதம் மற்றும் பிரயோசன வாதம் (Positivisam and Pragmatism) பொலிந்த தத்துவங்களில் திகழ்ந்தார். இதற்கு ஆங்கிலேய வணிகர் கம்பெனி ஆசியும் வழங்கியது.
கூலிக்கு உழைப்பை வாங்குவது, கூலிக்கு உழைப்பை விற்பது என்பதானது இவர்களது ஆசியால் வேர் விடத் தொடங்கியது. சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் புதுப் பொலிவு கண்டு இன்று வரை தொடர்கின்றது.
அன்று, சுதேசிகளின் கரங்களில் உலகாயதம் கூறும் கிரந்தங்கள் இருந்ததாகவும் தமது நூலில் காட்டினார். நிராகரித்து உபதேசித்தார் (நித்திய சீவன சல்லாபம் :5). அந்தக் கிரந்தங்கள் பற்றிய விவரங்கள் அவர் நல்கவில்லை.
திருச் சபையினரது நேர்க் காட்சி வாதம் மற்றும் பிரயோசன வாதம் ஆகியனவற்றை மறுத்து அப்போது பௌதிக வாதம், சார்வாகம், தேகாத்ம வாதம் தாங்கியோர் வீறு கொள்ளத் தொடங்கினர். இவர் உலகாயத நெறியினர். இவர்கள் இந்து சுயாக் கியான சங்கம் (Hindu Free Thought Union) என்ற அமைப்பை ஏற்படுத்தி இருந்தனர்.
இந்திய சுதந்தர சிந்தனையாளர் சங்கம் என்பது இதன் அர்த்தமாகும். இந்தச் சங்கத்தின் சார்பாக 1878 ஜனவரியில் தத்துவ விசாரிணி என்ற வார இதழ் வெளி வந்தது. தத்துவார்த்த ஆராய்ச்சியாளர் என்பது இதன் அர்த்தம். ஆசிரியர் திரு. சோமையா என்பவர். உலகாயத நெறிக்கு சங்கமும், இதழும் கைகோத்தன.
இந்து சுயாக் கியான சங்கத்தார் 1882 இல் அந்த வார இதழைத் தத்துவ விவேசினி என்ற பெயரில் வெளியிட்டனர். உண்மையை விளங்கச் செய்யும் பத்திரிகை என்று இதற்கு அர்த்தம். இந்த இதழின் ஆசிரியர் தமிழ்ப் பேராசிரியர் பு. முனிசுவாமி நாயகர்.
இவருக்குத் துணையாக அமரம்பேடு முத்துசாமி முதலியார் தெய்வசிகாமணி ஆகியோர் எழுதினர். இவர்களது உலகாயதம் இப்படி விளக்கம் கொண்டு இருந்தது. இவை இன்றும் சமூகவியல், அரசியல், இதழியல் துறைகளில் தொடர்கின்றன.
1. மனிதன் சிரேஷ்டகன், மனுஷீகத்துவம் உடையவன்.
2. கடவுள் - இது மனிதரால் சிருஷ்டிக்கப்பட்டது. இந்தக் கடவுளுக்கு மனிதரால் குணங்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
3. மனிதசெயல்கள் ஆதிபூர்வமாய் அமைந்தவை, இயற்கை அறிவு உடையவை. மனித சகல செயல்களும் பகுத்தறிவில் இருந்து உண்டாகின்றன என்பது சரி அன்று.
4. பொருள் - இது நியாய - வைசேடிக தர்க்க சாஸ்திரத்தில் உள்ள பதார்த்தம் என்கிற சொல் அன்று. பதார்த்தம் பொருள் ஆகாது. பதார்த்தத்தில் ஒன்பது திரவியங்கள் அடங்கும். பொருள் அடங்காது.
5. பொருள் முன்னது, அறிவு பின்னது, புறநிலைப் பொருளில் இருந்து அறிவு உண்டாகிறது.
6. தேகமே ஆத்மா. உடலும் ஜீவனும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒன்றே. விறகு நெருப்பு வேறுவேறு இல்லை என்று இரசாயன சாஸ்திரம் கொண்டு நிறுவினர். இது தேகாத்ம வாதம்.
7. கண் - பார்ப்பதற்காக உண்டாக்கப் பட்டது, மற்றும் செய்யப்பட்டது அன்று. கண் என்பது இருப்பதாலேயே பார்க்கிறோம். நேரடி பிரத்தியட்சமும், பரிசோதனையுமே உண்மையான அறிவுக்கு வித்து.
8. இயற்கை உலகில் சகலமும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு வாழ்கின்றன.
9. இந்தியத் தொழில் வித்துவர் (தொழிலாளர்) வல்லமை படைத்தவர்.
10. உலகம் முழுவதுவுமே எனது தேசம், நன்மை செய்வதே எனது மதம்.
1925 - க்குப் பின்னர், மா சிங்கார வேலர் மார்க்சிய இயக்கவியல், சமூகவியல் பொருள் முதல் வாதங்களைக் கற்றுத் தமிழகத்தில் வலம் வந்தார் (கடவுளும், பிரபஞ்சமும், பெரியார் சுயமரியாதை நிலையம், சென்னை. 1932).
பின்னர், கே.பாலதண்டாயுதம் (மார்க்ஸிய ஞானரதம், என். சி. பி. எச்., சென்னை . 1973), ஆர். கே. கண்ணன் (மார்க்ஸிய மெய்ஞ்ஞானம், மொழிபெயர்ப்பு, என். சி. பி. எச்., சென்னை . மே.1957) ஆகியோர் இயக்கவியல், சமூகவியல் பொருள்முதல் வாதங்களைத் தமிழக உலகாயதத்தில் பொலிவு பெறச் செய்தனர். இவர்களது பணி சகாப்தகரமான பங்களிப்பு.
உலகாயதம் - மனிதன் மகத்தானவன்
அநாதியான இந்தப் பிரபஞ்சத்தில் நமது பூமிக் கிரகமானது உயிரற்ற பொருள்களோடு கோடிக் கணக்கான ஆண்டுகள் நிலவி வந்தது. ஓர் அம்முதற்கோடியில் அந்த உயிரற்ற பொருள்களில் இருந்து உயிர்ப்பொருள்கள் உருவாயின.
காலம் செல்லச் செல்ல கருவினில் தோன்றிச் சந்ததியைப் பிறப்பித்துப் பின்னர் இறக்கும் உயிரினங்கள் வந்தன.
இந்திய மரபுக் கணக்குப்படி நிலத்திலும், நீரிலும் வாழும் உயிரினங்கள் 84,00,000 வகைகள். அதனாலேயே, இந்தப் பூமி கிரகமானது சூரியப் பிரபஞ்சத்தில் “உலகம்” எனச் தலைமையானதாகத் திகழ்கின்றது.
உலகத்து உயிர்களுள், மனிதன் மட்டும் தனது இரண்டு கைகள் மற்றும் உரிய அறிவியல் கருவிகள் கொண்டு சிற்றண்டம், பேரண்டம் ஆகியனவற்றின் மேல் செயல்படுகின்றான். அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என ஒரு நியாய மொழி உண்டு.
அண்டத்தில் சுழலும் கனிமம் மற்றும் வேதியல் தாதுப் பொருள்கள் போன்றே பிண்டத்திலும் கனிமம் மற்றும் வேதியல் தாதுப் பொருள்கள் சுழல்கின்றன. இவைகளின் சேர்க்கை அளவு விகிதத்தால் பல்வேறு பண்புகளுடைய பொருள்களாக இயங்குகின்றன. இதுவே நிலையான நித்திய காட்சி.
சிற்றண்ட ஆய்வும், பேரண்ட ஆய்வும் ஒன்றோடு ஒன்று பரஸ்பரமாக நிலவுகின்றன. தமக்குள் ஊடாட்டம் கொள்கின்றன. இதனால் இந்த இரண்டு பொருள்களையும் அறிய, அறிய மனிதக் கரங்களும், கருவிகளும், அறிவும் மேலும் மேலும் நுட்பம் எய்துகின்றன. பழைய கருவிகள் கழிந்து புதியன தோன்றுகின்றன.
இன்றைய புதிய கருவிகள் மூலம் மனிதன் தனது ஐம்புலன்களின் காட்சிகளுக்குள் அண்டப் பொருள்களை அகப் படுத்தி உள்ளான். பொருளின் உள்ளேயும், வேளியேயும் நிலவும் இயக்கம் எல்லை அற்றது. அவற்றின் பால் கரங்களின் உழைப்பானது ஊடாட்டம் கொள்ளுகின்றது.
நாளை இந்தக் கருவிகள் கழிந்து புதியன தோன்றும். ஒரு சம்சாரியினுடைய உழைப்புக்குக், கூலி கொடுத்து இன்னொரு சம்சாரி விலைக்கு வாங்குவது காலாவதி ஆகிவிடும். மனித உழைப்பு சரிநிகர் சமம் ஆகி சுதந்தரம் எய்தும்.
கரங்களால் மூளை வளர்கின்றது. அறிவு ஒளிர்கின்றது. இதனால் மனிதனுடைய சமூகவழி இல்லற சம்சார வாழ்வும் தொடர்ந்து வளம் ஆகின்றது. அதனால், மேலும் மேலும் சந்ததி ஆனந்தம் பெருகுகின்றது. மனிதன் உட்பட, சந்ததியை ஈன்று புறம் தரும் நீர், நிலங்களில் உயிர் வாழும் அனைத்தும் சம்சாரிளே. இவைகள்தான் உலகாயதத்தின் பௌதிக அடிப்படை.
இயற்கையானது மனித நிலையில் இருந்தபடி. தனக்குத் தானே மனிதக் கரங்களால் செயலாற்றுகின்றது. இப்படி, தன்னை மாற்றி கொள்ளுகின்றது. அதற்காக. மனித மூளையாக இருந்தபடி தனக்குத் தானே சிந்திக்கின்றது.
சுயநினைவொடு திட்டமிட்டு இயங்கி முன்னெறுகின்றது. அவனும் அதனோடு ஒளி விடுகின்றான். மனிதன் மகத்தானவன். இஃது இன்றைய உலகாயதம்.
- முப்பால்மணி