tamilvillageபொருள்

கடல்நீர், மேகம், மழைநீர், மேகம், ஆறு, மீண்டும் கடல் என நீரினது போக்குவரவைச் சங்ககால மக்கள் கவனித்து இருந்தனர். மலைத் தலைய கடற்காவிரி எனத் தமிழகம் சார்ந்து சுட்டினர்(பட்டின.6). உடலின் தலை, கழுத்து, நெஞ்சு, பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் என்ற எட்டு உறுப்புகளின் வழியாகக் காற்றானது வெளியே வரும்போது வேறுவேறாக ஆக்கம் பெற்று எழுத்துக்கள் பிறக்கின்றன (தொல்.எழு.83).

நீரானது புறநிலையினில் பல்வேறு நிலைகளை அடைகின்றது. காற்றானது உடலின் அகநிலையினில் பல்வேறு நிலைகளாக ஆக்கம் பெறுகின்றது. நீர், காற்று என்ற பூதப் பொருள்களினுடைய இருப்பானது உண்மை என்பது அந்த மக்களுடைய ஏற்புரை. நீர், காற்று மட்டும் அல்லாது மண், தீ, விசும்பு ஆகியனவும் இவைகளோடு உண்மை என அவர்களால்

ஏற்கப்பட்டு இருந்தன. மண்ணில் பல வகை உண்டு. தீயும் பலநிலைகளில் உள்ளது. அகன்ற விசும்பு என்ற அளவினில் இது இருக்கின்றது என்று ஏற்றிருந்தனர். நிலம், தீ, நீர், வளி. விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்(தொல்.பொருள்.635). இந்த உலகினில் இந்த ஐந்து பேரும் பொருள்களினால் பலவகையான பொருட்கள் ஆகி உள்ளன.

இந்த உலகியல் பொருட்கள் இலக்கியங்களில் பேசப்பட்டன. அவற்றினில் பேசப்பட்ட பொருட்களைப் புறம், அகம் என இருதிணைகளாக இலக்கண ஆசிரியர் பகுத்தனர். இதில் அகத்திணை இலக்கியப் பொருளை முதல், கரு. உரி எனப் பிரித்தனர். அகத்திணையானது ஐந்து நிலங்களுக்கு உரியது.

அவற்றை மலை, கடல், காடு, வயல், கடற்கரை, பாலை எனக் காட்டினர். உதகமண்டலம் உறைபனி மலைப் பகுதி இதனில் அடங்க வில்லை. அகத்திணைச் செய்யுள்களில் குறிக்கப் படும் காலத்தினை ஆறு பிரிவாக வகுத்தனர். அவற்றினை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்ற பருவங்களாகக் கண்டனர். அவைகளோடு மாலை, யாமம், விடியல், நண்பகல், எற்பாடு என ஒவ்வொரு நாளினையும் பிரித்தனர்.

அகத்திணையினில் பயிலப்படும் நிலமும், காலமும் முதற்பொருள்கள் எனக் காட்டினர். அகத்திணைப் பாடல்களில் பேசப்படும் தெய்வங்கள், குலதெய்வங்கள் மற்றும் வரந்தரும் வழிபடு தெய்வங்கள் ஆவார். படைப்புக் கடவுள் அகத்திணை இலக்கியங்களில் உருவாகி இருக்கவில்லை. மலை, காடு, வயல், கடற்கரை, பாலைப் பகுதிகளில் வழக்கினில் இருந்த உணவு, மரம், பறவை, பறை, தொழில், யாழின் பண், பூ, நீர் ஆகியனவும், கடவுளும் கருப்பொருள்கள் ஆகும்.

ஐந்து நிலப் பகுதிகளில் வாழும் ஆண்--பெண் வாழ்வு சார்ந்து, புணர்தல், பிரிதல், ஊடல், இரங்குதல், இருத்தல் என்ற உரிப் பொருள்களைப் பாடினர். இவை உடல் மற்றும் அகம் சார்ந்ந உணர்வுகளாகும். காலம், இடம், பொருள்கள், உணர்வுகள் என இவற்றைப் பொதுமைப்படுத்தலாம். இவை செய்யுள்களுக்கே உரிய பகுப்புகளாகும்.

இகஉலகிற்கும் இவை பொருந்தும் என உரையாசிரியர் கருதினர். அவ்வாறு வகுக்கப்பட்ட பொருளை உறுப்பினானும், தொழிலினானும். பண்பினானும் பாகுபடுத்தி நோக்க வரம்பிலவாய் விரியும். இக்கருத்தினானே இவ்வாசிரியர்(தொல்காப்பியர்) உலகத்துப் பொருள் எல்லாவற்றையும் முதல், கரு, உரிப் பொருள் என ஓதினார் என உணர்க என்று இளம்பூரணர் இடைக் காலத்தில் கருதி உரைத்தார் (தொல்.பொருள்.முன்னுரை). உலகத்துப் பொருள்தொகுதி எல்லாம் உணர்தல் வேண்டுமெனின், அது முதல், கரு, உரிப்பொருள் எனப் பகுநிலையில் அடங்கும்.

பொருள், உறுப்புகள், தொழில், (செயல், வினை), பண்பு என்ற பகுப்பானது மெய்யியல் துறை சார்ந்த பகுப்பு ஆகும். சங்ககாலச் சமண நெறியினரும், வைசேடிக நெறியினரும் இதனை மேற்கொண்டு இருந்தனர். இடம், காலம், பொருள், சினை (உறுப்பு), குணம், தொழில் என்ற வினை சொல்கள் சார்ந்து இலக்கண ஆசிரியர் கூறியனவும் இதனோடு ஒத்ததே ஆகும்.

சமணரும், வைசேடிகரும் சங்க காலத்தினில் நிலவினர். இருவரும் அணுக் கொள்கையர். ஓர் அணு என்பது உறுப்புக்களோ, பக்கங்களோ அற்றது. ஓரணுவிற்குள் நிலம், நீர், தீ, காற்று என்ற தன்மைகள் உண்டு. இரண்டு, மூன்று அணுக்கள் சேர்ந்து பெருகிப் பலப்பல தன்மை நிலவும் உலகியல் பொருட்கள் ஆகின்றன.

இந்தப் பொருள்கள் உறுப்பு, பக்கம், செயல், குணம் ஆகியனவற்றைக் கொண்டு இலங்குகின்றன. இவை அனைத்தும் உண்மை. புறத்தையும், அகத்தையும் விவரித்த தொல்காப்பியம் ஐந்து பெரும் பூதக் கொள்கையினை அனுசரித்தது. அணுக் கொள்கையினை அனுசரிக்கவில்லை.

புறம், அகம், முதல், கரு, உரிப் பொட்களுக்குள் காட்டலாகாப் பொருட்களைத் தொல்காப்பியம் எடுத்து உரைப்பது சிறப்புற அமைந்தது. உரு, ஒப்பு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை போன்ற அகவய உணர்வுத் தன்மைகள் புறவயமாக முன்வைத்துக் காட்டலாகாதவை. மக்களுடைய மரபின் வழியினில் நெஞ்சினுள் இவற்றை உணர்ந்தே உணர வேண்டும்.

உரு என்பது முன்னர் இதுவரை அறியாத ஒரு பொருளைக் காணும் போது அகத்தினுள் வரும் மன நிகழ்ச்சி. ஒப்பு முதலான மற்றவை ஏற்கனவே அறிந்துள்ள பொருள் உணர்வுகள். எழில் என்பது அழகு. உறுப்புக்களின் அமைப்பினால் வருவது இது. இவன் அழகியன் என்றபோது உடல் உறுப்புக்களில் இருந்து அழகினைப் பிரித்துக் காட்டல் ஆகாது(தொல்.பொருள்.243.உரை). பொருளும் அழகும், உறுப்பும் அழகும் பிரிவற்றவை. பொருளும் பண்பும் பிரிவற்றவை.

புறத்திணை வாழ்வியல் பொருட்கள், அகத்திணை உணர்வியற் பொருட்கள் மற்றும் உரு என்பதனுடன் ஒப்பு முதலானவை நெஞ்சினுள்ளே உணரப்படும் உணர்வுகளும் என்ற இவை அனைத்தும் இகஉலகினில் மட்டும் அல்லாது, இமையோர் வாழும் மேலுலகிலும் உள்ள பொருள்களும், உணர்வுகளும் ஆகும். மேலும் இகஉலகினில் உள்ளது போல் மேலுலகிலும் காலம் என்பதுவும் உண்டு. இருஉலகிலும் பொருளும், காலமும் உண்டு(தொல்.பொருள்.244).

உணர்வுகள்

புல், மரம் ஆகியன ஓரறிவு உடையவை. மக்களுக்கு ஆறறிவு உண்டு (தொல்.பொருள்.572,577). மக்களுக்கு உள்ள ஐந்து பெரிபுலன் மட்டும் அல்லாது நினைவு, நினைத்தல், உணர்தல் என்ற அகவய பண்புகளையும் ஓர் அறிவாக மதிப்பிடப் பட்டது. இந்த அகவய தன்மைகள் புல், மரம் ஆகியனவற்றிற்கு இல்லை. கார்காலத்தினில் தன்னுடைய கணவன் வருவான் ஏன மனைவி எதிர் நோக்கி இருந்தாள். அகவய அறிவுடைய அவன் வரவில்லை. என்றாலும் அந்த முல்லை நிலப் பிடவு, கொன்றை, காந்தள் மலர்கள் அறிவின்றி மலர்ந்து விட்டன. அறிவு உள்ளதால் அவன் வரவில்லை என நையாண்டி யாக அவள் புலம்பிக் கொண்டு இருந்தாள்(நற்.99).

நினைவுணர்வு மக்களுக்கு அன்றிப் பிற உயிர்களுக்கு இல்லை. மரம் போன்றவற்றிற்கு இல்லை. தீக்கடைக் கோலானது மரம். அந்த மரத்தினைக் கடைந்து தீயினை உண்டாக்கலாம். இது ஒரு படைப்பு. முன்னர் இல்லாதது, படைக்கப் பட்டது(புறம்.331). தீக்கடைக் கோல்களை வீடுகளிலும், பயணச்சுமைப் பைகளிலும் குறிஞ்சி, முல்லை நில மக்கள் வைத்துக் கொண்டு இருந்தனர் (புறம்.315, நற்.142,அகம்.169).

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அடங்கிய தம்பலத்தினைச் சிலர் எப்போதும் வைத்துக் கொண்டு இருப்பர்(கலி.65). இல்லறத்தினர் தம்முடைய வீட்டினிலும் கொண்டு இருப்பர். உழவு நிலங்களில் கமுகு மரங்கள் தவறாது பயிரிடப்பட்டன (பட்டின.17, நெடுநல்.23, பெரும்.7). பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு என்ற இந்த மூன்றும் கலந்து கொள்ளும் போது சிவப்பு நிறமும், இனிய சுவையும் உண்டாகின்றன.

இந்த இரண்டும் முன்பு அவைகளில் இல்லாதவை. இரண்டும் இங்கே புதியன. அது போல நிலமும், நீரும் சேரும் போது உணவு உண்டாகிறது. நிலனும், நீரும் சேர்ந்து உடம்பையும், உயிரையும் படைக்கின்றன. உணவானது உயிரை ஆக்குகிறது. உடலுக்கு நீர் இன்றியமையாதது(புறம்.18). பூதப் பொருள்களான நிலம், நீர், காற்று. தீ ஆகியன சேரும் போது முன்பு இல்லாத உயிர், உணர்வுடைய பொருளானது அவற்றால் படைக்கப் படுகின்றன. இயற்கைப் பொருள்களின் சேர்க்கையினால் அறிவுடைய உடல் உண்டாகிறது.

புறவய வாழ்வு நிகழ்வுகள் அகவய உணர்வுகளை மாற்றுகின்றன. வெளிநாடுசென்ற தன்னுடைய கணவன் வரும் பருவம் தவறியதால், அவளுடைய அறிவு மயங்கியது, வேறாகியது (நற்.397). வாடைக் காற்று துன்ப உணர்வைத் தருகின்றது(அகம்.243). அவளது நீர் போன்ற குளிர்ந்த சாயலானது அவளுள் தீயாக ஆகி அவளது வலிமையைக் கெடுக்கின்றது(குறுந்.95). எதிரான விளைவைத் தருகின்றது. அவனது பிரிவினால் அவள் அறிவு பேதுற்றாள்(அகம்.135). புறநிலையானது அகநிலையை ஆக்குகின்றது.

அளவு

காலம், இடம், பொருள், மக்கள் ஆகியன எல்லாம் அளவுக்கு உட்பட்டவை ஆகும். பொழுதினை அளந்து அறிபவரான கணியர் பெருமக்கள், பெய்யா மாக்கள் என்று மதிக்கப் பட்டனர்(முல்லை.55). சூரியனைச் சூழ்ந்த மண்டிலத்தினை, காற்று வீசும் திசைகளை, ஆகாய இடத்தினை நேரினில் சென்று அளந்து அறிந்தவர் போல, அவை இப்படி உள்ளன, இத்துணை அளவு உடையன என்று அளவறிந்து உரைக்கும் வானவியல் நுட்பவியலாளராக அவர் இருந்தனர்(புறம்.30). ஆட்சி நிர்வாகத்தினில் காவலர்கள் கணக்குகளை ஆய்ந்தனர்(குறுந்.261).

பெருவழிகளில் சுங்கம் வசூலிப்பவர், பண்டகசாலைகளில் வரி வசூலிப்பவர், அளந்து அறியாப் பல பண்டங்கள் எல்லை அறியாது வந்து குவிந்த போது அரச முத்திரை பெரித்து உரிய இடங்களுக்குப் போக விட்டனர்(பெரும்பாண்.81,பட்டின.125). பெருவேந்தர்கள் முன்னே, சீறூர் மற்றும் கானக வேந்தர்கள் நெல்லினை மரக்காலால் அளந்து அம்பாரமாகக் குவித்தனர்(பதிற்.66,71).

மன்னரது குடியிருப்புகளில் மீன்வாய் நீர்க்குழல்களை அளந்து நிறுத்தப் பட்டதால் அருவியிசை ஒலி தந்து நீரானது வீழ்ந்தது (நெடுநல்.66). தாழ்ந்த கூந்தலையும், ஒளிகொண்ட நெற்றியையும் கொண்டு குளிர்ந்த நீர்மை உடையவளாகத் திகழ்ந்தாள். அந்தப் பொலிவானது அணங்கினது அழகாக அவனுக்கு உவகை அளித்தது.

இத்தகையவள் என்று அவளைப் புனைந்து உரைக்க அவனுக்கு அளவு தெரியவில்லை (குறுந்.70). எந்த ஒன்றுக்கும் அளவுகள் உண்டு. அளவு அறியப் பட்டாலேயே எதையும் அறிந்து கொள்ள இயலும். அளத்தல் என்பது நிகழ்ந்தால்தான் பொருளை அதனது சொந்த அடுத்த நிலைக்கு மற்றும் பொருளினை நாம் மாற்ற விரும்பும் அடுத்த நிலைக்குக் கொண்டு செலுத்த இயலும். பொருளின் அடுத்தடுத்த நிலைகளைக் காணாமல் எந்த ஒரு தொழிலும் இல்லை.

பொருளின் மேலான சமூகசெயல்

கானகத்து இனக்குழு மக்களுக்கு உணவுக்கான பொருள் என்பது ஆமான்(காட்டுப்பசு) ஆகும். ஒரு கானவன் காட்டினில் அந்த இனப் பசுவை நோக்கி அம்பினைச் செலுத்தினான். பொருளின் மேல் அவன் புரியும் செயல் அது. ஆனால் குறி தவறிவிட்டது. அந்தப் பசுவானது அவனுக்கு அகப்படவில்லை. அப்படித் தவறியதானது தனது குல தெய்வத்தினது கோபம் என அவன் கருதிக் கொண்டான். வில், அம்பு எனக் கருவி கொண்டு பொருளின் மேல் செயல் மேற்கொள்ளப் படுவது இங்கே குறிப்பிடுவதற்கு உரியது.

நாஞ்சில் (அகம்.42, பதிற்.19,25,26,58, பெரும்.199, புறம்.19,20,40,56,138,பரி.1:4,15,20), மேழி (புறம்.388, பட்டின.205), கலப்பை (பெரும்பாண்.186), கரும்பு அறவை ஆலை(பதிற்.19, பட்டின.9) ஆகிய கருவிகள் உழவுத் தொழிலில் வளத்தினைப் பெருக்கின. நிலத்தினில் நெல், கரும்பு, கமுகு, தெங்கு, வரகு, தினை, துவரை, ராகி, இருங்கு, கொள்ளு, எள்ளு, பயிறு, உளுந்து, அவரை, கடலை, மொச்சை, சோளம், கம்பு, காராமணி ஆகிய கூலங்கள் (நற்.93, பதிற்.23,29, புறம்.381) விளைந்து வணிகப் பண்டங்கள் ஆயின. இரும்பின் உபயோகம் கருவிகளைச் சாத்தியம் ஆக்கியது.

ஊதுலையானது கருவிகளை வடிவமைக்க ஏற்பட்டது(அகம்.96). இவை எல்லாம் சம்பந்தப் பட்ட சமூகத்தின் வடிவமைக்கும் அறிவு நுட்பத்தை, செயல் படுத்தும் ஆற்றலைப் பெருக்கியது. எருது இழுக்கும் இரு சக்கரம் உள்ள அச்சுவண்டி இருப்பதினால் ஊருக்கு ஊர் பொருள்களைக் கொண்டு செல்ல இயலுகிறது(நற்.141, ஐங்.405).

பண்டங்கள் ஏற்றப் பட்ட வண்டிச் சக்கரங்கள் பெருவழியில் உருண்டு முன்னேற, சிறுமணற் கற்கள் நொருங்கித் தூள் ஆயின(புறம்.90). மேட்டிலும், பள்ளத்திலும் எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகளில் வாணிகப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன (புறம்.102). ஒரு நாளினில் எட்டுத் தேர்கள் செய்ய வல்லதச்சன் இருந்தான்(புறம்.87). கலன்களும்(கலி.5,புறம்.338,386), நாவாய்களும்(அகம்.110, நற்.295, புறம்.13,66,126, பட்டின.174, மதுரை.83, பெரும்பாண்.321, பரி.10:39). கடல் வழிகளில் கனிமங்கள், மணிகளோடு மூலிகைகளையும் பலமொழி பேசும் தேசங்களுக்குக் கொண்டு சென்றன.

பொன்னையும், மணிக் கற்களையும், காசுகளையும் ஆராய்ந்து தரம் நோக்கும் வண்ணக்கன்மார், பொழுது அறியும் கருவியினில் காலம் கணிக்கும் கண்யன்மார் வாணிகராகத் திகழ்ந்தனர். பொருள்களை, கருவிகளைக் கொண்டு சென்றனர். இதனால் தொழில் நுட்பங்களின் திறன் கொண்டு பொருளின் மேல் மக்களின் செயல் மேம்பட்டது.

பொருளையும், அதன் நியதிகளையும் அறிவது செயல் வழியிலேயே இயலும். ஒரு பொருளினை உள்ளம் விழையும்போது., அந்தப் பொருளினைப் பற்றி முன்பு கேட்டு அறிந்து உள்ளனவற்றை நினைவினில் கொண்டு, அந்தப் பொருளையும், அதனது தன்மை வழியினில் பிழைபடாது அணுகி, தனது தகுதியை அறிந்தபடி எண்ணியதைச் செயலில் முடிக்க வேண்டும்.

அந்த நிலையினில் பொருளின் உண்மை தெளிவாகும்(அகம்.286). செயலுக்கு உட்படுத்தப்படும் பொழுதே பொருளானது தனது உண்மையைப் புலப்படுத்தும். செயல் என்பதுவே பொருளோடுதான்.

யாரும் காணவில்லை என்று ஒரு கொடிய செயலைச் செய்துவிட்டு, அந்தச் செயலை மறைத்தாலும் நெஞ்சு அதனை அறிந்துள்ள சாட்சி ஆகிவிடும்(கலி.125). செயல், தன்னுணர்வு, தன்னைத் தானே உணர்தல், நினைவு ஆகியன இணைப்பானவை. செயலானது உணர்வினை நுட்பமாக்குகின்றது. இதனால் பொருளானது மேலும் அறிந்து உணரப் பட்டது.

ஒரு யானையானது புலியை வென்ற பின்னர், உடல் களைப்பினால் துயில் கொண்டது. வென்ற உணர்வானது அகத்தினில் நிலவியது. தூக்கத்தில் கனவினில் புலியைக் கண்டு திடுக்கிட்டு விழித்து எழுந்தது. எதிரில் வேங்கை மரம் இருந்தது. அதனைப் புலி என்று கருதிச் சிதைத்தது. பிறகு சினத்தினைத் தணித்துக் கொண்டது.

ஆனால் மரத்தினைக் காண்பதற்கு அந்த யானையானது நாணியது(கலி.49). நனவினில் செயலாக நடந்ததே உண்மை. அதுவே பெருமிதத்தினை அளிக்கும். உணர்வில் கனவினில் நிகழ்ந்தது பொய். அதை உண்மை எனக் கொள்ளுவது நாணத்தினை அளிக்கும். படுக்கையினில் தன்னுடைய கணவனை எண்ணியபடியே அவள் தூங்கினாள். தூக்கத்தில் அவளது தோள் மேல் அவன் அவளை அணைத்தபடி கிடப்பதாகத் துணிபாக உணர்ந்தாள்.

இப்படித் துணிந்ததினால் உண்மை என்று நினைத்துத் தழுவ விழைந்தாள். ஆனால் அவனைக் காணாது, அது கனவு என அவள் கலங்கினாள்(கலி.126). செயலைக் கனவினில் காண்பது புலனுக்கு உவகையினை நல்காது. செயலை நனவினிலேயே காண்பது மனதிற்குக் கலக்கத்தினை அளிக்காது.

காட்சி

சொல்லால் புறவயமாகக் குறிக்கப்படும் பொருளும், பொருளின் பெயரும், அந்தப் பொருளினைப் பற்றி முன்னர் கேட்டதுவும், அகவயமாக முடிவு கொள்ளுவதற்காக ஏற்கப் பட்டன (பதிற்.21). அகவய நிலையினில் சுவை உணர்வுகள் கண்ணால் பொருளைக் காண்பதாலும், காதால் பொருளைப் பற்றிக் கேட்பதாலும் உணரப் படுகின்றன (தொல்.பொருள்.271).

மற்றும், தோல், மூக்கு, நாக்கு ஆகிய பெரிகளாலும் பொருளினில் நிலவும் சுவைகள் உணரப்படுகின்றன. பூதப்பொருள் தரும் அறிவை அறிதலில் கண்ணின் காட்சி அறிவும். செவியின் கேள்வி அறிவும் முன்னிலை வகிக்கின்றன. பொருளை நேராகக் காண்புது காட்சியறிவு. பொருளை நேராகக் கண்டவர் கூறச் செவியால் கேட்பது கேள்வியறிவு.

பழங்காலமாகவே சூரியனானவன் தனது ஒளிக் கதிர்களாலே பொருளை விளக்கும்படியாகச் செயலாற்றுகிறது(கலி.147,148). கண் இருப்பதால் பொருள்கள் கண்ணால் நேரடியாகப் பார்க்கப் படுகின்றன. சூரியன் மறைந்தபின் இருளினில் கண் காண்பது இல்லை(கலி.123). காதானது இரவிலும், பகலிலும் கேட்கும் திறனுடையது.

மருத நிலத்தினில் உள்ள இல்லத் தலைவி, வெளி ஊர் சென்ற தன்னுடைய கணவனை எதிர் நோக்கியபடி இருந்தாள். அப்போது வந்த பாணன் அவளுடைய கணவனைப் பற்றிக் கூறினான். அதைக் கேட்ட அவள் “நீயே கண்டாயா அல்லது கண்டவர் கூறக் கேட்டு வந்தாயா” என வினவினாள். நேரடிக் காட்சியும், உரியவர் கூறக் கேட்டலும் அறிவுக்கு முகாந்தரம் ஆகின்றன. நல்ல புகழ் என்பதனைச் செவியால் கேட்டவர் உள்ளனர். ஆனால் கண்ணால் காணாது உள்ளனர்.

பொதிகை வேந்தன் ஆய் அண்டிரனைக் கண்டால் போதும். அவனே நல்ல புகழ் ஆவான்(புறம்.133). காதால் கேட்பது என்பதை விடக் கண்ணால் காண்பது அறிவினுக்கு உறுதி அளிக்கிறது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனது புகழானது கேட்பதற்கு இனிமையானது. அதனைக் கேட்ட குமட்டூர் கண்ணனார், விருப்பம் மேலிட அவனைக் காண வந்தார்(பதிற்.12). கேள்வியறிவானது காட்சியறிவிற்கு வழி கோலியது. கேள்வியறிவானது காட்சியறிவினால் உறுதி பெறுகின்றது.

கேட்டது மட்டும் போதாது, நேரினில் காண வேண்டும். அதுவே இனிமையானது. அதே நேரத்தினில், கண்ணானது தொலைவினில் உள்ள பொருளைக் காணும். ஆனால் தன்னிடம் உள்ள வடுவைக் காண மாட்டாது. பிறர் காட்டினாலும் காணாது (கலி.99). பிறர் மற்றவர் கண்ணில் உள்ள வடுவைக் காண்பர்.

எனினும் கண்ணானது தன்னிடத்து உள்ள வடுவைக் கண்ணாடியின் பிம்பம் வழி காண இயலும். கண்ணாடி என்ற கருவி கொண்டு தனது முகத்தினையும். முதுகுப் புறத்தினையும் காண இயலும். கருவி மூலம் பொருளினுடைய நேரடிக் காட்சியைக் கண்ணானது காணும். ஓர் இளம் மனைவி தன்னுடைய உருவத்தினைக் கண்ணாடியின் நிழலில் கண்டு, தனது அணிகலன்களை அழகுறச் சீர்திருத்திக் கொண்டாள் (பரி.21: 23). ஒரு பொருளினை நேரடிக் காட்சியில் அறிய ஒரு கருவியானது கண்ணினுக்கு நம்பகமான துணை ஆகின்றது.

கேள்வி

புறவயப் பொருள் நிலைமைகளால் அகவயத்தினில் உணர்வுகள் பிறக்கும். அவற்றினை முகமானது வேறு படுத்திக் காட்டும். இதனைக் கண்ணால் காண்பவர் அந்த முகத்தினில் புலப்படும் பொருள் கோளினை உணர்வர். மேலும், பேச்சும் வேறுபடுத்திக் காட்டும். இதனைச் செவியால் கேட்பவர் அந்தப் பேச்சினில் புலப்படும் பொருள்கோளை உணர்வர் (தொல்.பொருள்.275 பேரா.உரை).

கண்ணால் காண்பதுவும், காதால் கேட்பதுவும் புறவறப் பொருளின் உண்மை அறிவைப் பெற அறிதலியலும் உறுதி பெற்று இருந்தன. காதால் கேட்டு உறுதி பெறும் அறிவு என்பது கேள்வி அறிவு. நேரினில் கண்ட ஒருவர், தான் கண்ட ஒரு பொருளின் நிலைமையை அல்லது செயலின் நடப்பை அல்லது பண்பின் தன்மையை இன்னொருவருக்குச் சொல்ல, கேட்பவர் அது பற்றிப் பெறும் அறிவானது கேள்வி அறிவு.

எவரிடத்தும் பொய் சொல்லாத அறிவாளியினுடைய செவியினில் நல்லவர் விதைத்த கேள்வியாகிய பயிர் நன்றாக விளைந்தது(புறம்.237). பொய்யில்லாத சொல்லானது கேட்பவர் செவி­யினில் நல்ல அறிவைத் தரும். ஆன்றோர் பொய் சாட்சி(சொல்) சொல்ல மாட்டார் (குறுந்.184). மேலும் நல்ல சொல்லைக் கூறுவதற்கு எப்போதும் அஞ்ச வேண்டியது இல்லை (குறுந்.392). தீமை செய்பவரே அதை உணர்ந்து அறிய வேண்டும் எனப் பெரியோர் பொறுமையுடன் கூறுவர். கேட்பவர் இதனைச் செவியால் கேட்டு அறிவர்(நற்.116).

நேரினில் கண்டவர் கூறக் கேட்கும் கேள்வி அறிவு என்பது அறிதலியல் வகைப்பட்டது. இதைப் போலவே, ஒரு நூலைக் கற்றுத் தேர்ந்த ஒருவரிடம் இருந்து, இன்னொருவர் அந்த நூல் கருத்தினைக் கேட்டு அறிவதுவும் கேள்வி அறிவாகும். இது கல்வியியல் வகைப்பட்டது. வல்லார் வழிப்பட்டு ஒன்று அறிந்தான் என்பது இது(கலி.47). இப்படியாக, சங்க கால மக்களிடையே கேள்வி அறிதலானது இரு நிலைகளில் நிலவியது.

எதிரது அறிதல்

நேரடிக் காட்சி அறிவும், கேள்வி அறிவும் ஒரு சேரக் கடந்த காலம் மற்றும் நிகழ் காலம் சார்ந்தவை. எதிரது அறிதல் பொருளின் மேலான செயலில் இருந்து பிரிக்க முடியாதது. சங்க கால இனக்குழு மக்களிடையே இனிய மற்றும் கெட்ட கனவுகள், கறவை ஒலி ஆகியன எதிரது அறிய அனுசரிக்கப் பட்டன. (அகம்.141, குறுந்.218). போரினில் வெற்றியும், தோல்வியும் ஒரு கேள்விக்குறியே.

எமனானவன் உயிரினைப் பறிக்கக் காலம் பார்ப்பான். போரினில் உயிர்க் கொலையானது வலியோன் பக்கம் சார்ந்தது. கனவினில் எட்டுத் திசையும் எரிகொள்ளி எரிந்து வீழ்தல், பெரிய மரத்தினது கிளைகள் வரண்டு முறியவும், சூரியன் பல இடங்களில் தோன்றவும், பறவைகள் கொடிய குரலினில் ஓசையிடவும், பற்கள் உதிர்ந்து நிலத்தே வீழவும், தலைமுடியில் எண்ணெய் வார்த்து நீராடவும், ஆண் பன்றிமேல் அமர்ந்து செல்லவும், உடைகள் கலைந்து வீழவும், படைக்கொட்டிலில் படைக்கலன்கள் முறிந்து கவிழவும் என்பனவாகக் கனவுகள் கண்டால் தோல்வியும், உயிரிழப்பும் நிகழும்(புறம்.42). இதே காட்சிகளை நனவில் கண்டாலும் அதே நிகழும்.

இல்லத்தின் முற்றத்தினில் காக்கை இருந்து கரைந்தால் வெளியூர் சென்ற கணவன் வருவான் எனக் கானகத்து ஆனிரை மக்கள் நம்பினர்(குறுந்.210). பல்லி ஒலித்தால் பிரிந்து சென்ற துணைவன் விரைந்து வருவான் எனச் சங்க நூல்கள் பரந்து காட்டுகின்றன (அகம்.9, நற்.169, கலி.11, குறுந்.16, புறம்.256). இடது கண் துடித்தால் நல்லதே நடக்கும்(கலி.11).

நற்சொல் கேட்டல் என்னும் விரிச்சியானது அடுத்து வரும் நன்மையைக் காட்டும் என ஆனிரை மக்கள் வெட்சித் திணைக் கால்நடைகளைக் கவர்ந்து வரப் புறப்படும் என்று நம்பினர். புறப்படும் போது ஏதேனும் ஒரு நற்சொல் கேட்டால் உற்சாகம் அடைந்து மேற் செல்வர் (தொல்.பொருள்.61).தாயர், இன்னே வருகுவர் என்ற நல்லமொழிகளைக் கேட்டனர், ஆதலால் அவளுடைய துணைவன் இப்போதே வருவான் என எதிர்பார்த்தனர் (முல்லை.17). கிடங்கில் என்பது நல்லியக்கோடனது வளமான நகரம். புகழ் மட்டும் அல்லாது புனிதமும் உடையது போலும். அந்த நகரத்தின் பெயரை அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் அவளது போக்கினில் கூறினாள்.

அதைச் செவிமடுத்த இந்தப் பக்கத்து வீட்டுப் பெண் தன்னுடைய கணவன் வந்து விடுவான் என மகிழ்ந்து அவள் அமுதம் உண்க என வாழ்த்தினாள்(நற்.45). முதுபெரும் பெண்டிர் நாழி அளவுள்ள பாத்திரத்தினில் நெல்லையும், முல்லைமலர்களையும் குவித்து, தொழுது விரிச்சி கேட்டனர் (முல்லை.10-11).

சங்க கால வேட்டை மற்றும் ஆனிரை மேய்ப்பு மக்கள் சிந்தனையிலும், உண்மையை அறிவதிலும், புறநிலையில் நிலவும் ஐந்திணைக் கருப்பொருள்களை நேரினில் கண்ணால் காணும் காட்சி அறிவும், உரியவர் கூறும்போது செவியால் கேட்கும் கேள்வி அறிவும் அவர்களால் முதன்மையாகப் போற்றப் பட்டன. உரியவர் கூற்றும் முன்னர் கண்ட காட்சி அறிவின் தொடர்ச்சி என்பது குறிப்பிடுவதற்கு உரியது. எதிரது அறியச் சகுனக் குறியும், விரிச்சிச் சொல்லும் நம்பகமாக ஏற்கப்பட்டு இருந்தன. இவை அனைத்தும் மூன்று கால உணர்வுடன் பொருள்களைப் பற்றிய அறிதலில் இனக்குழு மக்களிடம் விளங்கிய பொதுத் தன்மைகளாகும்.

அனுமானம்

இனக்குழு மக்களின் கேள்வி அறிவும், விரிச்சியும் உழவு சமூகத்தினில் அனுமானமாக விருத்தி அடைந்தது. புறநிலையை அறிய ஒரு வழி முறையாகக் கருதப்பட்டது. நேரடியாகக் கண்முன் தெரியும், செவியில் கேட்கப்படும் ஒன்றைக் கொண்டு அதனோடு தொடர்புடைய இன்னொன்றை அறிய முயல்வது அனுமானம். இஃது ஓர் அகவய உணர்வே. அதுவே புறநிலை சம்பந்தப்படுவதால் அறிவு என்று மதிக்கப்பட்டது.

கடலில் இருந்து நீரானது மேகமாக மேலெழுந்து வானில் மிதந்து சென்று மலையிடங்களில் மழையாகப் பொழி;கின்றது. அந்த மழை நீர் மலைகளில் இருந்து கீழே வழிந்து இறங்கி ஆற்று வெள்ளமாகக் காட்டினில் ஓடி கடலில் கலக்கிறது. இது குறிஞ்சி, மருத நில மக்களுக்கு பொதுவான காட்சி. மழை இவர்களுக்குத் தேவையானது.

உவப்பானது. எறும்புகள் தங்களது முட்டைகளையும், உணவையும் எடுத்துக் கொண்டு வரிசையாகச் செல்லும் காட்சி இவர்களுக்கு நேரடிக் காட்சி(புறம்.173). இந்தக் காட்சியைக் கொண்டு அவர்கள் மழை பொழியும் எனக் கருதினார்கள். இப்படிக் கருதுவதே அறிவு என அவர்களால் உறுதி செய்யப் பட்டது. இது உழவு மக்களிடையே வலுப் பட்டது.

சிறிய வயலில் நெற்கதிர்கள் விளைய, அவற்றை எலிகள் கொண்டு சென்று தமது வளைகளில் சேமிக்கும்(புறம்.190). வளையினில் கதிர்களைக் கண்ட ஒருவர், அந்த வயலில் நெல்லானது முற்றி நன்கு விளைந்து உள்ளது என அறிகிறார். இப்படி அறிவது நெல்வயலைப் பற்றிய அறிவாக மதிக்கப்பட்டது. கானக இடத்தில் ஆற்றினில் வெள்ளமானது கரை புரண்டு வர, ஆற்றினது மலை இடத்தில் மழை பெய்தது என அறிவர்.

கண்ணில் தெரியும் சில குறிப்புகளைக் கொண்டு. அதன் வழியே அந்தக் குறிப்புகளின் நிகழ்வை அறிதல் இனக்குழு மக்களால் முன்னுற உணர்தல் எனப்பட்டது(தொல்.பொருள்.125). அந்த இளம் பெண் தனது களவுக் காதல் நிலையில் அவனுடன் பாலியல் உறவு கொண்டாள். இதனைச் சில தோற்ற வேறுபாடுகளால் அவளுடைய தோழி அந்தப் பாலியல் உறவை அறிந்து கொண்டாள். நேரினில் காண்பதற்கு உரியது அன்று இது. இளம் உடலில் ஏற்பட்ட வேறுபாட்டுக் குறிப்புகளை நேரடியாகக் கண்டு தோழியானவள் பாலியல் உறவை அறிவது அறிவாகவே மதிக்கப்பட்டது.

அந்த இளம் கணவன் பொருள் சேர்க்கும் பொருட்டாகப் பெருவழியில் காட்டினைக் கடந்து சென்றான். செல்லும் வழியினில் கலங்கிய நிலையினில் உள்ள சிறிய குளத்து நீரினை ஆண் யானையானது தனது பெண்யானையினை முதலில் அருந்தச் செய்யும். அடுத்து, சுடுவேனில் நாளினில் ஆண் புறாக்கள் தமது சிறகு விரித்துத் தமது பெண் புறாக்களுக்கு வெப்பம் தணிக்கும். ஆண் மானானது தனது நிழலைத் தனது பெண் மானினுக்கு அளித்துத் துயர் துடைக்கும்.

இதனைக் கண்டு அவன் தன்னுடைய நலனைக் காத்துத் துயர் நீக்க வருவான் என அந்த இளம் மனைவி கருதினாள். வருவான் என்பதே அவளது எதிர்பார்ப்பு அறிவு. ஒத்தது கண்டு, ஒத்ததை அவள் நினைப்பாள் என்ற எதிர்பார்ப்பே அவளது அந்த அறிவினுக்கு ஆதாரம். பெண்யானை, பெண்புறா, பெண்மான் ஆகியனவற்றிற்கு அவற்றின் ஆண் துணைகள் அருளுகின்றன. அந்த அருட்செயல்கள் அவனுக்குத் தன்னுடைய மனைவியின் துயரை நினைப்பூட்டும். அது கொண்டு அவன் வருவான் என அறிந்தாள்.

ஒத்தது ஒத்த விளைவைத் தரும் என்பது அப்போதைய அனுமான அறிதல் நிலை ஆகும். திருமணத்திற்கு முன்னர் மலையகம் மற்றும் கானக மக்கள் உடலால் கூடவர். முதல் இணைப்பு ஓர் இடத்தில், ஒரு பொழுதில், ஒரு நிகழ்வுப் போக்கினில் நிகழ்ந்தது. அடுத்து, பாலியல் இணைப்பு வேட்கை மிகுந்து எழ, அவள் அல்லது அவன் அதே மாதிரியான நிகழ்வுப் போக்கின் வாய்ப்பினில் அதே பொழுதில், அதேஇடத்தில் அது நிகழலாம் என ஆவலுற்ற எதிர்பார்ப்பு அறிவுடன் இருவரும் மீண்டும் எதிர்கொள்ளுவது இடந்தலைப்பாடு எனப் பட்டது (தொல்.செய்.487).

ஒரு சூழ்நிலையினில் ஒன்று நிகழ, அதே சூழ்நிலை­யினில் மீண்டும் அது நிகழும் என்பது அதன் கருத்தில். அதற்குரிய எதிர்பார்ப்பு அறிவானது அனுமானம் ஆகும். எதிர்பார்ப்பு அனுமானமானது மீண்டும் நிகழும் போது அது உண்மையான அறிவு ஆகிறது. நிகழாத போது வெறும் நினைப்பு அறிவாகிறது.

செஞ்ஞாயிற்று மண்டிலத்தினில் கோள்கள் அங்கங்கு இடம் பெறுகின்றன. மழை பொழியும் காலம், வெப்ப காலம், காற்று வீசும் திசை, கடலின் நிலைமை இந்தக் கோள்களின் போக்கினால் அமைகின்றன. கோள்களின் ஒரு குறிப்பிட்ட நிலை அமைப்பினில் இந்த நில உலகினில் நிகழ்வுகள் நிகழ்கின்றன.

மீண்டும் மீண்டும் இவை இணைந்து நிகழும் போது, அப்படியே இனி மேலும் எதிர் காலத்திலும் நிகழும் என்ற அறிவானது வானவியல் கணியன்மாரிடம் பொலிவு பெற்றுத் திகழ்ந்தது (புறம்.30). இறப்பு நிகழ்ந்தால் அதே மாதிரியான கோள்நிலை இருப்பினில் மீண்டும் அப்படி ஒரு துக்கம் நிகழும் என உரைக்கப் பட்டது(புறம.229). தூமகேது எரிமீன் வீழும் போது மாந்தரஞ் சேரல் இரும்பொறையனது வாழ்நாள் முடிவுறும் எனக் கூடலூர் கிழார் எதிர்பார்ப்பு அறிவு கொண்டார். இஃது அனுமானம் ஆகும்.

தொல்காப்பியம் கருதல் என்பது பற்றி மெய்ப்பாட்டியலில் குறிப்பிடுகிறது(தொல்.பொருள்.256). கருதல் என்பதை ஒரு மெய்ப்பாடாக உணர்த்துகிறது. இளம்பருவ மகள் தனது காதல் உணர்வை உட்குறிப்புக் கருத்து இல்லாதவள் போல் அவனைக் கடைக் கண்ணால் நோக்குதல் என்ற பொருளில் இதனை உணர்த்துகிறது.

தொல்காப்பியம் அனுமானம் என்பது பற்றிக் கருதவே இல்லை. ஐந்திணைக் கருப் பொருள்களில் வழங்கப் பெற்ற குலதெய்வம், அதிதெய்வம் அல்லாது படைப்புக் கடவுள் வழக்கிற்கு வரும் தான் போது அனுமானம் என்பது ஓர் அறிதல் அளவையாக அறிதலியல் வழக்கிற்கு வரத் தொடங்கியது. மேலும் அரசு நிறுவப் பட்டு, அந்த அமைப்பு கொண்ட பெருவேந்தனது அகவய ஆற்றல் ஒப்பற்றது என உயரும் போது அறிவானது முதன்மை நிலையை அடையும் போக்கினில், அனுமானமானது தனி அறிதல் அளவையாக மேம்பட்டது.

சட்டி, கலையம் வனையும் வேட்கோ குலத்து இளையோர் பசிய மண்ணைத் திரளாக்கிச் சக்கரத்தின் மேல் வைப்பர். அந்தத் திரளானது அந்த இளையோர் கருத்தைப் போலக் கலயமாக வனையப்படும். இந்தத் திரள் போல் நலங்கிள்ளியின் அகத்தினில் கொண்டிருக்கும் கருத்துப்படி அவனது நாட்டின் முடிவானது கொண்டு இருக்கும் (புறம்.32).

நலங்கிள்ளி தனது அகக் கருத்தைச் செயற் படுத்தும் மேம்பாடு உடையவன். மண் உருண்டையானது வேட்கோ இளைஞனின் கருத்துப்படிக் கலயமாக ஆக்கப்பட்டது. பெருவேந்தனான நலங்கிள்ளியின் முடிவுப்படி சோழநாடு இருந்தது. புறநிலையை உருப்படுத்தும் மேம்பட்ட அகநிலை அறிவானது முன்னிலைக்கு வரும் காட்சியே இது. அறிவானது பொருளை உருவாக்குகிறது. அகமானது புறத்தைப் பொருளாக்குகிறது. இந்த ஆதாரத்தின் மேல் அனுமானம் கட்டமைக்கப் பட்டது.

சூரியன் கிழக்கே உதித்து, மேற்கே மறைந்தது. இதனால் ஒளி மிகுந்து குறைந்தது. இதனைச் சூரியன் ஒளியை உமிழ்ந்து விழுங்கியது என உணரப்பட்டது. சூரியன் கதிர்களைத் தந்து, மீண்டும் மடங்கித் தன்னிடம் கொள்கிறது என விவரிக்கப்பட்டது. இது போன்றே படைப்புக் கடவுள் உயிர்களை, உலகைப் படைத்துத் தன்னுள் பெயர்த்தும் ஒடுக்கிக் கொள்ளுகிறது எனப் படைப்புக் கடவுளானது விளக்கப் பட்டது(கலி.119,129).

ஐந்து பெரும் பூதங்களான மண், நீர், தீ, காற்று, ஆகாயம் மற்றும் சூரியன், சந்திரன், கோள்கள் இவற்றை விட அளப்பரிய ஓன்றாகப் படைப்புக் கடவுளானது உணரப் பட்டது(பதிற்.14,15). இந்தக் கடவுளை நிறுவ அனுமானமானது ஓர் அறிதல் அளவையாக மேற்கொள்ளப் பட்டது. திங்களானது தேய்கிறது, பெருகுகிறது. அதுபோல் உயிரானது இறக்கிறது, பிறக்கிறது(புறம்.27). சந்திரன் வானிடத்தில் எப்போதும் நித்தியமாக இருப்பது போல் இறந்துவிட்ட உயிரானது மீண்டும் பிறந்து நித்தியமாக உள்ளது என உணரப்பட்டது.

அரசு அமைப்பு நிலைப் பட்ட பின்னர் பெரு நகரங்களில் பல்கேள்வித் துறைகளில் முதிர்ந்த அனுபவமும், சீரான பயிற்சியும் பெற்று, இயற்கையான மரபுகளில் பட்டறிவும் பொலிந்த நல்லாசிரியர்கள் தமக்குள் நிலவும் கருத்தியல் குறித்து வாத உரையாடல்கள் மேற்கொள்ளுவர். இதனை முன்னிட்டுக் கொண்டு தமது புலமையின் உயர்சிறப்பினைப் புலப் படுத்தத் தாம் இருக்கும் இடத்தினில் கொடிகளை ஏற்றி வைத்தனர்(பட்டின.169-171).

அவர்கள் தமது கருத்தினை நிலைநிறுத்த விரல்கள் காட்டி வாதிட்டுக் கொண்டனர். அப்போது அவரது விரல்கள் பிரிவு பட்ட வரகுக் கதிர்கள் போல் காட்சி அளித்தன(மலைபடு.112). விவாத வடிவினில் புறநிலைப் பொருள்கள் பற்றி கௌதமரின் நியாய நெறியானது அப்போது நிலவியது. மற்றும், வைசேடிகம் அதற்குத் துணை புரிந்தது.

சமணமும், பௌத்தமும் புறத்திணைக் கருப்பொருள்கள் பற்றி விளக்கம் கூறின. சாங்கியமானது உலகியல் பொருள்களினுடைய பரிணாமத்தினை எடுத்து உரைத்தது. மதுரையில் சமணத் துறவிகளும், பௌத்த பிக்குகளும் தமது பணிகளை ஆற்றினர்.

நியாய நெறியானது உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் அழியும் என்றது. ஒரு கலயமானது அழியும் ஏனெனில் அது வேட்கோ கைவினைஞரால் உற்பத்தி செய்யப்பட்டது. வைசேடிகமும் இதனை அடி ஒற்றியது. படைப்புக்கடவுள் கொள்கையானது நிலைபெற்ற பின், கடவுள் இந்த உலகையும், பொருள்களையும் படைத்தது, படைக்கப்பட்ட பொருள்கள் நிலையற்றவை மற்றும் அழியும் எனக் கூறிப் படைப்புக் கடவுள் மட்டுமே நித்தியமானது என்பது உறுதிப் பட்டது.

வேட்கோ கைவினைஞர் சட்டியைப் படைப்பது போல, படைப்புக் கடவுள் உலகையும், பொருள்களையும் படைக்கிறது. உலகும், பொருள்களும் அழியும், ஏனெனில் அவை படைக்கப் பட்டவை. படைக்கப் பட்டவை மற்றும் உற்பத்தி செய்யப் பட்டவை அழியும் என்ற வகையினில் அனுமானமானது உறுதிப்பட்டு, அனுமானமே அறிவைத் தரும் என்பது வலுவுடன் நிறுத்தப்பட்டது.

மண்ணாணது சட்டி ஆகி, அது அழிந்து மீண்டும் மண்ணாகின்றது. சூரியன் தனது கதிர்களைத் தந்து, மீண்டும் தன்னுள் வாங்கிக் கொள்ளுகிறது. படைப்புக் கடவுளானது உலகையும், பொருள்களையும் படைத்து மீண்டும் அவற்றைத் தன்னுள் மீட்டுக் கொள்ளுகிறது (கலி:119,129). உலகும், பொருள்களும் அறிவும், உணர்வும் அற்றவை. அவைகளின் செயலை ஆக்க உணர்வும், அறிவும் உடைய ஒன்றாலேயே முடியும்.

அதுவே படைப்புக் கடவுள். சமணமும், பௌத்தமும் அணுக்களின் சுயசெயலை வலியுறுத்திப் பொருளை விவரித்தன. அறிவும், உணர்வும் உடைய ஒன்றினாலேயே பொருள்கள் செயல்பட இயலும். ஆகவே அணுக்களின் செயலானது அறிவும், உணர்வும் உடைய கடவுளாலேயே நடை பெறுகிறது.

பொருள்களானவை அறிவற்றவை. அவைகளைச் செயல்படுத்த அறிவுடைய ஒன்று இருக்க வேண்டும். அதுவே கடவுள். இந்த அடிப்படையினில் அனுமானமானது உறுதி படுத்தப் பட்டது. சாங்கியமானது மூலப்பிரகிருதி என்ற தொடக்கப் பொருளினில் உள்ளசைவு ஏற்பட, உலகும், பொருள்களும் வந்தன என்று எடுத்து உரைத்தது.

மூலப்பிரகிருதியானது உணர்வும், அறிவும் அற்றது. ஆதலால் உலகும், பொருள்களும் உண்டாக, அதனுள் உள்ளசைவு தானாகவே ஏற்படாது. உணர்வும், அறிவும் உடைய கடவுளாலேயே உள்ளசைவை ஏற்படுத்த இயலும். பொருள்கள் உள்ளசைவு கொண்டு அவை தொழிற்பட அறிவுப் பொருள் ஒன்று வேண்டும்.

அதுவே கடவுள். உணர்வும், அறிவும் அற்ற பொருள்கள் உள்ளசைவு கொள்ளுகின்றன. ஆதலால் உணர்வும், அறிவும் உடைய பொருள் ஒன்று உண்டு. அதுவே கடவுள் (பரி.2:6). நாடானது அசைவும், தொழிலும் அடைய அரசு நிறுவனம் உடைய நலங்கிள்ளி போன்ற பெருவேந்தனது அறிவாற்றல் வேண்டும் (புறம்.32).

நெல்லும் உயிர் அன்று, நீரும் உயிர் அன்று, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என மன்னன் சிந்தனையின் மையப் பொருள் ஆனான்(புறம்.186). உலகானது அசைவும், தொழிலும் அடையப் படைப்பு ஆற்றல் கொண்ட கடவுளது அருளாற்றல் வேண்டும்(பரி.3:1-10). அகவயத் தன்மை முதற்பொருளாகி புறவயத் தன்மை யானது முதற்பொருளுக்கு உட்பட்ட நிலை உறுதி பெற்றதினால் அனுமானத்தினால் அடையப்பட்ட அறிவே, புறவயப் பொருளின் உண்மை எனவும் நிலைப்பட்டது.

கருத்தியல்

தண்ணீரைக் குடிப்பவர் இனிமைச் சுவையை உணர்வர். தன்னிடம் உள்ள அந்த இனிமையை அந்தத் தண்ணீர் உணர்வது இல்லை. பிறர் அந்த உணர்வைச் சுவைப்பதுவும், அந்தத் தண்ணீர் அறியாது(கலி.62). என்றாலும் பொருளின்பால் ஒன்று செய்தால் ஒன்று வரும்(மதுரை.197). ஒரு பொருள் இன்னொரு பொருளைத் தரும்.

கானவன் அல்லது வேடன் பன்றி வேட்டைக்குச் சென்று வேட்டை ஆடினான். பன்றி அகப்பட்டால் நன்மை ஆகும். நன்மை தராதது பயன் அற்றது (நற்.75). ஒன்றிலிருந்து இன்னொன்று கிட்டா விட்டால் அந்தப் பொருளானது பயன் அற்றது. ஒரு பொருள் இன்னொரு பொருளைத் தருவதானது அந்தப் பொருளின் இயல்பும், போக்கும் ஆகும். நன்மை, பயன் என்பன அவற்றினைக் கைக் கொண்டவர் அறம் ஆகும். பொருளினை நன்மையாகவும், தீமையாகவும் கூறும் மரபு சங்க கால இனக்குழு மக்களிடையே நிலவியது (தொல் பொருள்.207).

நல்லது செய்யும் போது, அதில் இருந்து தீயது வருவதில்லை என்பது அந்த மக்களிடம் அன்றாடப் பழமொழியாக வழங்கியது(கலி.101). நல்லது செய்தால் நல்லது வரும், தீயது செய்தால் தீயது வரும். அந்த இளம் மனைவியின் கணவன் தனது வாக்குறுதியில் இருந்து மாறான். வாய்மையில் இருந்து பொய் உண்டாகாது.

திங்களில் இருந்து தீயானது உண்டாகாது. சூரியனில் இருந்து இருளானது உண்டாகாது(கலி.41). ஒரு பொருளில் இருந்து உண்டாகி வரும் இன்னொரு பொருளானது அந்தப் பொருளின் இனமே ஆகும். தங்கம் என்ற பொருளில் இருந்து வளையல், மாலை, காசு உண்டாகும். இவையும் தங்கமே. தங்கத்தில் இருந்து வெள்ளி உண்டாகாது.

இதனைச் சங்க காலச் சமணச் சான்றோர் அனுசரித்தனர். நியாய-வைசேடிகப் பெரியோர் இதனையே உரைத்தனர். ஒன்றில் இருந்து அதே இனப் பொருளே வரும். வேறு வராது. ஒரேஒரு ஒற்றைப் பொருள் எனக் கொண்டால் இது போற்றுதலுக்கு உரியது. நெல் விதையில் இருந்து நெற் பயிரே வரும். தனி ஒரு பொருளை மட்டும் முன்னிட்டுக் கொண்டு இந்தக் கருத்தியலானது சங்க கால மக்களிடம் திகழ்ந்தது.

நிலையாமை

கரும்பின் இடைக் கண்ணானது யானையினுடைய பெரிய நகங்கள் உடைய காலடியில் மிதிபட்டு அழியும். ஒருவர் சேர்த்து வைக்கும் பொருட் செல்வமும் அதுபோல அழியும்(குறுந்.180). வெளிநாடு சென்று வாணிகத்தின் மூலம் ஈட்டும் பொருள் கைவிட்டுப் போகும். அப்படி ஒருவரது கைவிட்டுப் போவதனையே பொருள் அழியும் என்று உரைக்கப் பட்டது.

நிலையாமை என்பதுவே உறுதி பெற்றது. நல்ல புகழும், அருள்நெஞ்சமும் உடையவனது பொருளானது தங்குவதற்கு உரியது அன்று(குறுந்.143). ஒருவரிடம் உள்ள பொருளானது நிலையற்று நீங்கி விடும். பரிசில் பல பெற்றுப் பிரிந்து செல்வோர் கண்டு வருந்தி, நில்லா உலகம் எனக் கரிகால் பெருவளத்தான் உணர்கிறான்.

பொருட் செல்வமும், உலகியல் பொருட்களும் நிலையற்றன. பொருட்கள் அழியும் என்ற கருத்தியலுக்குப் பொருட் செல்வத்தின் நிலையற்ற தன்மை ஊற்று ஆகிறது. இதனால் பொருள் அழியும் எனப் பொருளடு புணர்ந்த பக்கத்தின் மெய்ப் பொருளை உணர்ந்து, அருளடு புணர்ந்த துறவறம் கண்டுப் பொருளை விடுத்து, ஆசை நீத்த பக்கம் காண்பது வாழ்வாயிற்று(தொல்.பொருள்.75).

ஒருவகைப்பட்ட பொருளில் இருந்து அதே வகைப்பட்ட பொருளே உண்டாகும். ஒரு பொருளானது உண்டாகி, இருந்து, அழியும் நிலைகளுக்கு உட்படுவதால் அந்தப் பொருளானது நிலையற்றது. ஒரு பொருளினை மட்டும் தனியாக முன்னிட்டுக் கொண்டு இவ்வாறு கருத்தியல் உருவாகி மேம்பட்டது.

உலகாயதம்

இரண்டு மற்றும் இரண்டுக்கு மேற்பட்ட பொருள்களின் சேர்க்கையை முன்னிட்டுக் கொண்டு உலகாயதமானது பொருளைப் பற்றி உரைத்தது. மலையக வேட்டை மற்றும் கானக ஆனிரை மக்கள் தம்மைச் சுற்றி நிலவிய பொருள்களை உண்மையானவை, எப்போதும் இருப்பவை என்றே ஏற்றுக் கொண்டனர்.

அகத்திணை இலக்கியப் பாடல்களுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியமானது அந்தப் பாடல்களில் நிலவும் உலகியல் மற்றும் உணர்வுப் பொருட்களை மூன்று வகையாகப் பிரித்து விவரித்தது. காலத்தையும், இடத்தையும் முதற்பொருளாக உரைத்தது. தெய்வம், உணவு, மரம், விலங்கு, மக்கள், தொழில் ஆகியனவற்றைக் கருப்பொருளாகக் கூறியது. மக்களின் சந்ததித் தொடர்ச்சிக்குத் தொடக்க முகமாக உள்ள பாலியல் உறவின் உணர்வு நிலைகளான புணர்ச்சி, இருத்தல், இரங்கல், பிரிதல் மற்றும் ஊடல் ஆகியனவற்றை உரிப் பொருளாக உணர்ந்தது.

இது இலக்கியப் பாடல்கள் தழுவிய பகுப்பாக இருந்தாலும், உலகத்துப் பொருள் எல்லாவற்றையும் ஓதினார் என இளம்பூரணர் மதிப்பிட்டார்(தொல்.பொருள்.இளம்.முன்னுரை). காலம், இடம், பொருள் பற்றி வைசேடிகம், நியாயம், சமணம், பௌத்தம் ஆகியனவும் முன்னிலைப் படுத்திக் கொண்டு தத்தமது கருத்தியல்களை விளக்கின.

இவை பொருட்கள் அணுக்களால் ஆனவை என்று தொடங்கி, அணுக்கள் மட்டுமே நித்தியமானவை என்றன. அணுக்கள் பிரியும்போது, பொருட்கள் இல்லாமல் போய்விடும் எனக் கருத்தியல் வகுத்தன. சாங்கியமானது பொருட்களின் மூலத் தொடக்க நிலையான பிரகிருதி உண்மையானது, நித்தியமானது எனக் கூறி, அதில் இருந்து உலகியல் பொருட்கள் பரிணமித்தன என விவரித்தது. உலகியல் பொருட்கள் இருந்து கொண்டே நிலவி மீண்டும் பிரகிருதியை அடையும் என விவரித்தது. உலகாயதமானது பொருள்கள் மண், நீர், தீ, காற்று ஆகியனவற்றினால் உருவாகி என்றும் இருப்பன எனக் காட்டியது.

ஒரு பொருளானது அழியும் என்பதாக அல்லாமல் இன்னொரு பொருளுடன் சேரும், இன்னொரு பொருளாக ஆகும், அவை பிரியும், இன்னொன்றுடன் இணையும் என விளக்கியது. நான்கு பூதப் பொருள்களுள் ஒன்றான காற்று எழுத்துக்களாகப் பிறக்கின்றன.

காற்றானது வயிற்றில் இருந்து தொடங்கி தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய இடங்களில் நிலை பெற்றுப் பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் ஆகிய உறுப்புகளுடன் சேர்ந்தும், பிரிந்தும் வெளி வரும் போது வேறு வேறு எழுத்துக்களாகப் பிறப்பின் ஆக்கம் பெறுகின்றது.(தொல் எழுத்..83). காற்று என்ற பொருளானது வேறு வேறாக ஆகின்றது.

வேறு வேறாக ஆகி வந்த எழுத்துக்கள் முன்னர் இல்லாமல் கலந்துப் புதிதாக ஆக்கம் பெற்றன. நான்கு பூதங்களுள் ஒன்றாகிய நீரானது உடலுக்கு இன்றியமையாதது. உணவினை ஒருவருக்கு அளிப்பது என்பதானது உயிரினை அளிப்பது ஆகும். உடம்பானது உணவினை முதலாக உடையது, உணவால் ஆனது. உணவு என்பது நிலமும், நீரும் சேர்ந்து உண்டாவது. நிலத்தையும், நீரையும் சேர்த்து வைப்பவர் உடம்பையும், உயிரையும் படைத்தவர் ஆவார் (புறம்.18). உடம்பு, உயிர் ஆகியன நிலனாலும், நீராலும், உணவாலும் ஆனவை.

உடம்பும், உயிரும் வேறு, வேறு, தனித்தனி அல்ல. நிலம், நீர், உணவு ஆகியனவற்றில் இவை இரண்டும் முன்னமேயே, ஏற்கனவே இல்லை. அவை மூன்றும் சேர்ந்ததினால் உடம்பும், உயிரும் ஒருங்கே படைக்கப் பட்டன. வாழும் நாட்களில் வாழும் தவச் செயலின் பயனை அந்த உடம்போடு கூடிய நிலையினிலேயே பெறுவர்(பொருநர்.91). இஃது உலகாயதம். வாழும் நாள் முடிவிற்குப் பின்னர் உயிரானது பெற வேண்டுமானால், இன்னொரு உடம்பு வேண்டும். இறந்த எந்தவொரு உடம்பும் மீண்டும் உயிரினைப் பெறாது.

சங்க கால வேந்தனான கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து தனது வாழ்நாளினை முடித்துக் கொள்ள தன்னுடைய நண்பர்களுடன் அமர்ந்தான். அப்போது பல்லாற்றூர் எயிற்றியனார் கூறியது குறிப்பிடுவதற்கு உரியது. உயர்ந்த விருப்பம் உடையவர் தாம் ஆற்றிய நல்ல செயல்களின் பயனை மேலுலகில் அனுபவிப்பர்.

அந்த உலகினில் அனுபவித்தல் இல்லை எனில், மாறிப் பிறக்கும் மறுபிறப்பினில் அனுபவித்தல் கூடும். அப்படி எல்லாம் மேலுலகம், மறுபிறப்பு என எதுவும் இல்லை என்று சொல்லுவார் இருக்கின்றனர். தமது ஓங்கிய புகழினை இமயத்துச் சிகரம் போல் நிறுத்திவிட்டு உடம்போடு மாய்தல் தலை சிறந்ததாகும் என்று அவர் சொல்லுகின்றார்.(புறம்.214). அப்படிச் சொல்லுபவர் உலகாயத

நெறியினர் ஆவார். உடம்போடு உயிரானது வாழ்வதாகவே அப்போது கருதினர்(தொல்.பொருள்.200).

கோப்பெருஞ்சோழனும், வெளியூரினரான பிசிராந்தையாரும் நண்பர்கள். ஆயினும் ஒருவரை ஒருவர் நேரினில் கண்டது இல்லை. கேள்வி அறிவாலேயே ஒருவரை ஒருவர் உணர்ந்து நண்பரா­யினர்.. சோழன் வடக்கிருந்து உயிர் துறக்க உறுதி கொண்டான். வடக்கிருக்கப் பிசிராந்தையார் வருவார் என்றும் உறுதியாகக் கூறினான்.

இது கண்டு, இந்த இருவரும் நேரினில் காணாது இருக்கும் நிலையை அறிந்திருக்கும் அவனுடைய உள்ளூர் நண்பர்கள் இது பற்றி வியப்புற்று வினவினர். நேரினில் காண்பதுவே உறுதியான அறிவிற்கும், முடிவிற்கும் சிறந்ததாகும் என்று உரைப்போர் சோழனுடைய நண்பர்களாகத் திகழ்ந்தனர். ஆந்த நண்பர்களது கருத்தியல் உலகாயதம்.

அரசு அமைப்பினை நிறுவி இனக்குழு மக்களை உள்ளடக்கியும், உடன்இணைத்தும் ஆண்ட பெருவேந்தன் நலங்கிள்ளி. உழவைப் பெருக்க நிலத்தினையும், நீரினையும் இணைத்து முறைப் படுத்தியவன். இவனுடைய நண்பர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார். அரசு அமைப்புடைய அதன் தலைவனும் உயர்வானவன்.

அவனது அகவியல் ஆற்றலானது எட்டமுடியாதது என உணர்ந்த நுட்பமான கருத்தியலாளர். அரசு அமைப்பிற்கு உரிய செவ்வியோர் வாழ்வு பெறவும், கொடியோர் தண்டனை பெறவும் பெரிதும் விழைந்தார். நல்லது என்பதில் நன்மையோ, தீயது என்பதில் தீயதோ இல்லை என்பவர் கருத்தியலை அவர் ஏற்கவில்லை.

நல்லதில் இருந்து நல்லதே விளையும், தீயதில் இருந்து தீயதே விளையும் என அப்பாலான அறிவு ஆற்றலும், அனைத்தையும் அகப்படுத்தி ஆளும் செயல் திறனும் உடைய அரசனை முதல்நிலை ஆக்கியும், சார்ந்தும் இந்த அறத்தினைச் சிரமேற் கொண்டார்(புறம்.29). பொருள்கள் சேர்ந்து தமக்குள் கலக்கும் போது, வேறுபட்ட வேறுபட்ட பொருள்கள் விளைவதுவும் கூட அரசனின் செயலாண்மைக்கு உட்பட்டது என மேம்பாட்டு உணர்வு கொண்டார்.

எனினும் பொருள்களின் இணைப்பினால் அவைகளில் இருந்து மாறுபட்ட பொருள்கள் விளைவதை உலகாயத நெறி­யினர் போற்றினர். இதனை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அரசனுக்கு உகந்ததாக மதிக்கவில்லை. அரசின் அறத்திற்கு மாறான ஒன்று விளைவதை அவர் ஏற்கவில்லை. நல்லதில் இருந்து மாறுபட்டதும் விளையும், தீயதில் இருந்து வேறுபட்டதும் விளையும் என்போர் சோழ நாட்டினில் இருந்தனர். அவர் உலகாயதர் ஆவார்.

அப்பாலைக் கருத்தியல்

பிறர் நோயைத் தன் நோய் போலக் கருதுதல் கடன். பிறருடைய உணர்வுகளைத் தன்னுள் உட்கொண்டு, அவர் உணர்ந்ததாகத் தானும் உணர்தல் இது. இது வாரணவாசி பதம் என்று குறிக்கப்பட்டது(கலி.139). கண்ணிறைந்த இளம் பெண்ணைக் கண்ட ஒருவன் அகத்துள்ளே நோய் கொண்டு, உயிர் போகும்படியாகத் துயர் கொண்டு, இப்படித் துயர் தருவது பெண்தன்மை என்று என நடுங்கினான், உருகினான் எனத் தோழி அவன் நிலையை விவரித்தாள்.

இதைக் கேட்ட தலைமகள், என்னைக் கண்டு, காரணம் இல்லாமலேயே சிலர் கலங்குவர். அவரைக் கண்டு உன்னில் இருந்து வேறாக இருப்பனவற்றை உன்மேல் ஏறிட்டுக் கொண்டு உள்ளாய். வாரணாசியில் உள்ளவரது அருளை உன்மேல் ஏற்றிக் கொள்ளுவது போல் உள்ளது. நமக்கு அதனால் என்ன விளைந்து விடப் போகிறது?” எனத் தனது சுயகருத்தை உரைத்தாள்(கலி.60). ஒருவருக்கு இனிமையாக இருப்பது, பிறருக்கு இனிமை அற்றதாக இருக்கும் (கலி.62).

ஒருவர் போல இன்னொருவர் இல்லை. அவர் வேறாகத் தனியாக இருக்கிறார். அவரது உணர்வை, இவர் தனது உணர்வாகத் தன்னகத்தில் உட்கொள்ளும் போது என்ன விளைந்து விடப் போகிறது. மேலும் ஒவ்வொருவரும் உணர்வது அவரவருக்கு உரியது. இப்படியான ஒரு பன்மைத் தன்மை அகவயமான விளைவாக இருப்பது குறிப்பிடுவதற்கு உரியது.

இன்னொரு இளம் தோழி அவன் செய்த நோயினுக்கு அவனே மருந்து ஆவான். மற்றொரு மருந்து இல்லை என்று அவள் சொல்லுவது குறிப்பிடுவதற்கு உரியது(நற்.247). ஒருவர் செய்த செயலுக்கு அவரே பொறுப்பு. இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் செயலுக்கு உரியவர் ஆவது இனக்குழு சமூக வாழ்நிலையை விட உழவு சமூக வாழ்நிலையில் மேலும் உறுதி பெற்றது. நிலத்தின் உழவு உரிமையும், வாணிகத்தில் பண்ட உரிமையும், அரசின் ஆணை உரிமையும் உறுதி ஆகும் போது இது பொலிவு பெற்றது.

கூடவே படைப்புக் கடவுளானது காலம்--இடம், இயற்கை--அறிவு, பொருள்--உணர்வு, உடம்பு-உயிர், புறம்--அகம் ஆகியன அல்லாது வேறாகவும், அப்பாலாகவும் நித்தியத் தன்மை பெற்றுத் திகழ்ந்தது. அந்த ஒன்றில் இருந்து இயற்கையும், உலகும், பொருள்களும், உடம்பும், உயிரும் உண்டாகி வந்தன. வந்தவை மீண்டும் ஒவ்வொன்றும் அதனையே அடையும். இந்தப் போக்கிலேயே உயிர்களின் வாழ்க்கையானது நிலவுகிறது. எதில் இருந்து வந்தனவோ அதனையே மீண்டும் அடைகின்றன என்ற அப்பாலைக் கருத்தியல் வலுப் பெறத் தொடங்கியது(கலி.119,129).

முடிப்புரை

சங்க காலத்தில் பக்குடுக்கை நன்கணியார் இந்த உலகமானது இன்னாதது, இதைப் படைத்தோன் பண்பற்றவன் என்று வரைந்தார். ஏனெனில் மணமுழவு போலியும் இனிமையுடனும், மரணப்பறை ஒலிக்கும் இன்னாமையுடனும் ஒவ்வாமையாகப் படைப்புக் கடவுளானவர் இந்த உலகைப் படைத்து விட்டார்.

இதில் இனிமையை மட்டும் காண்க எனப் பக்குடுக்கையார் ஆலோசனையாகப் பரிந்து உரைத்தார். படைக்கப் பட்ட இந்த உலகமானது இன்னாதது. இந்த அறிவுக்கு ஆதாரம் காட்சிப் பிரமாணம். படைத்தவனைப் பற்றிய அறிவை கருத்து அளவையால் / அனுமானப் பிரமாணத்தால் மட்டுமே அடைய இயலும். பக்குடுக்கை நன்கணியார் அனுமானப் பிரமாணத்தைப் போற்றி, கடவுளையும் பாடினார்.

திருவள்ளுவரது திருக்குறள் நூலினில் உலகியற்றியான், இறை என்ற சொல்லாட்சிகள் நயம் பொலிந்தவை. உலகியற்றியான் எனப் படைப்புக் கடவுளைச் சுட்டுகின்றார். இறை என அரசனை வைகின்றார். காட்சி அளவை மற்றும் கேள்வி அளவைகளால் இறையாகிய அரசனைப் பற்றிய அறிவை அடையலாம். உலகியற்றியானை அனுமான அளவை / கருத்து அளவை வழியினில் மட்டுமே அறிய வேண்டும்.

இதனை முன்னிட்டுக் கொண்டு திருக்குறளினது முப்பாலையும் உற்று நோக்கினால்அந்தக் குறட்பாக்களில் காட்சிப் பிரமாணம், கேள்விப் பிரமாணம் ஆகியன மட்டுமே பொதிந்து உள்ளன. அனுமானப் பிரமாணம் / கருத்து அளவை கைக்கொள்ளப் படவில்லை. போற்றப் படவில்லை.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், பரிமேலழகர் குறட்பாக்களுக்கு நுட்பமான பதவுரை தந்தார். தொடர்ந்து விளக்கமும் நயந்தார்(உ-ம்:710). ஓரிடத்தில், ஆய்வு விளக்கமாக உபதை கூறிக் கருத்து அளவை முறை­யியலையும் கையாண்டார்(501). அனுமானப் பிரமாணம் / கருத்து அளவையானது திருக்குறட்பாக்களில் முறை­யியலாக இல்லை. எனினும், உரை விளக்கங்களில் பரிமேலழகர் கருத்து அளவை முறையியலைக் கையாண்டார்.

- முப்பால்மணி

Pin It