சைவத்துறையில் தமிழகத்தில் பதின் எட்டாம் நூற்றாண்டில் மாதவசிவஞான முனிவர் சிவஞான மாபாடியம் அறிவித்துச் சித்தாந்த சைவத்திற்குப் புதுப்பொலிவு அளித்தார்.  அவர் காலத்தில், பதின் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் உணர்ந்த பரமாத்துவிதம் என்ற வேதாந்தம் சைவத்துறையில் வீறார்ந்த நிலையில் விளக்கம் பெற்று நின்றது.  பட்டினத்தார், அருணகிரியார், தாயுமானவர் பற்றிய போற்றி உணர்வுகள் சைவத்துறையினில் சிறப்பிடம் பெற்று இருந்தன. 

சிவஞான முனிவர் தமது மாபாடியத்துள் வேதம் மற்றும் ரௌரவம், பவுட்கரம், மதங்கம் மற்றும் மிருகேந்திரம் ஆகிய ஆகமங்களையும், சுவேதாச்சுவதரம், சாந்தோக்கியம், சுபாலம் ஆகிய உபநிடதங்களையும், நீலகண்ட சிவாச்சாரியார், அப்பைய தீட்சதர், சிவாக்கிரயோகிகள் ஆகியோருடைய பேருரைகளையும் போற்றிச் சித்தாந்த  சைவத்தின் பசு, பதி, பாசம் ஆகிய முப்பொருள்களுக்கு பேருரை அளித்துச் சைவத்தை வளப்படுத்தினார்.

சிவஞான முனிவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் கிறித்தவ நெறியானது வேர் ஊன்றிக்கொண்டு இருந்தது.  ஜெர்மனி ஹாலே நகர வேதசாஸ்திரப் புராட்டஸ்டண்ட் பாடசாலையில் பயிற்சி பெற்ற லூத்ரன் சபை உபதேசிமார் தரங்கம்பாடி வந்து இறங்கிச் சென்னை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் நகரங்களில் பணி மேற்கொண்டனர்.  கோவாவைத் தலைமை இடமாகக் கொண்டு கத்தோலிக்க சபையினர் மதுரை, திருநெல்வேலி, தெற்குக் கரைக் கிராமங்களில் திருத்தொண்டைக் கைக்கொண்டனர்.  அர்ச், சேவியர்  அண்ட்ரிக் பிரிட்டோ, ராபர்ட் டிநொபிலி பணிகளுக்குப் பிறகு, சீகன் பால்க், புளுச்சோ, சூல்ட்ஸ், வால்ட் சுவார்ச் மற்றும் கான்ஸ்டன்டைன் பெஸ்கி ஆகியோர் தமது லூத்ரன் சபை சார்ந்து திருப்பணிகள் ஆற்றினர்.  உறுதிப் பொறுப்பான நிறுவனம், செயல் உறுதி, பணிபுரியும் களம் பற்றிய குறிப்பான மதிப்பீடு, கருத்தியல் கண்டிப்பு ஆகியன அவர்களிடையே மின்னியது.  அப்போது கத்தோலிக்க சபையினரும், புராட்டஸ்டண்ட் சபையினரும் தமக்குள் விரோதம் பூண்ட மனப்பாங்கினில் போட்டி இட்டுக் காரியம் ஆற்றினர்.  தமது செயல் பொறுப்புகளில் சுயசிந்தனைக் கண்டிப்போடு இயங்கினர். 

காசி முதல் இராமேஸ்வரம் வரையான சிந்து இராச்சியத்தில் அடங்கிய மலபார் எனப்பட்ட இந்தத் தென் பகுதியில் வாழும் பரதவ, முக்குவ மக்கள் இடையே ஊழியம் புரிந்தனர்.  1715 -- 1726 காலப் பகுதியில் தம்முடைய பிரமாண நூலான விவிலியத்தைத் தமிழில் திருப்பித் தந்தனர்.  ஒரே தெய்வம், உலகப் படைப்பு, மனிதப் படைப்பு, தனிப்பட்ட உயிர்களது சுயசுதந்தரம், சித்தத்தின் சுயாதீனம், ஒவ்வொருவரும் அவரவர் செயல்களுக்கு மட்டும் உத்தரவாதமான பொறுப்பு உள்ளவர் என்ற கருத்தியல்களைச் சிறிதும் விட்டுக் கொடுக்காது உபதேச உரைகளில் பெய்து வலியுறுத்தினர். 

பிரபஞ்சம், உலகப் பொருள்கள் மற்றும் மனித அகத்தில் மட்டுப்பட்டு உள்கலவாதபடி, இவைகளுக்கு அப்பால், அருவமான ஒரே கடவுள் ஆகியனவற்றை உறுதிப்படுத்தினர்.  இவைகளைக் கொண்டு மறுபிறப்பு, வினைத் தொடர்ச்சி ஆகிய கருத்தியல்களை நிராகரித்தனர்.  அப்போது இங்கு ஆட்சியில் வீறுபெற்று இருந்த இஸ்லாத்தின் வசம் இருந்து கிறித்தவர்களாகிய தம்மாலேயே விடுதலை பெற்றுத் தர இயலும் என்று இங்கு வாழ்ந்த சுதேசி மக்களிடையே உறுதி கூறினர்.

சைவத் துறையினர் சங்கர மதத்தை மாயாவாதம் என்று மறுத்தபடியே, பஞ்சராத்திரம், சமணம், பௌத்தம், உலகாயதம் ஆகிய நெறிகளை நிராகரித்தனர். இஸ்லாம் மற்றும் கிறித்தவ மார்க்கங்களைச் சைவத் துறையினர் பேசவில்லை.  எனினும், வீரசைவ நெறியினரான சிவப்பிரகாசர் இயேசு சமயத்தை நிராகரணம் செய்தார்.

சில விழுமியங்கள்

அப்போது தமிழகத்தில் மெய்யியல் துறையில் சிவம் / பிரம்மம் முதல் மண் ஈறாக உள்ள முப்பத்து ஆறு தத்துவங்கள் பேசப்பட்டு விளக்கங்கள் விவரிக்கப்படும் போதே, காலம், இடம், பொருள், நிகழ்ச்சிகள், இயக்கம் என்ற சிந்தனை மன்னிலைக்கு எழுந்து கொண்டு இருந்தது. அதே நேரத்தில், அப்போதைய ஐரோப்பிய அறிவியல் வளர்ச்சிப் பின்னணியில் தமது கருத்தமைப்புகளைத் தக அமைத்துக் கொண்டு திருச்சபையினர் உரையாடினர்.  இந்தப் பின்புலத்தினை முன்னிட்டுக் கொண்டு சிவஞான முனிவரது மாபாடியத்துள் விளக்கமுற்று நிலவும் விழுமியங்களை நோக்குலது உகந்தது.

ஒன்று: சிவஞான முனிவர் காலத்தை ஒன்று எனக் கொண்டார்.  இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியன இயற்கையானவை, உண்மை என்றார்.  மற்றபடி, ஆண்டு, அயனம், மாதம், பட்சம், நாள், நாழிகை, நொடி எனக் கொள்வதானது செயற்கை.  அதாவது, நமது வசதி பொருட்டு நாம் ஏற்படுத்திக் கொண்டது என வரைந்தார் (சூத். 2. அதி. 2.) இராபர்ட் டி நொபிலி முடிவு இல்லாக் காலம் என்றார் (தூஷண திக்காரம். 152).  இவருக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட சத்திய வேத பரிட்சை என்ற நூலானது பரமபிதாவிற்கு நிகழ்காலம் மட்மே உண்டு.  மற்றபடி, உலக நிலையில் இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம், அப்போது, இப்போது, எப்போது என்ற காலக் குறிப்புச் சொற்கள் நமது புத்தியில் மட்டும் செல்லுபடி ஆகும் என விவரிக்கின்றது.  இந்த நூலானது 1725 காலப் பகுதியில் நிலவியதாக அறிய முடிகின்றது.  இது, கான்ஸ்டன்டைன் பெஸ்கியும் கைக்கொண்டு இருந்தது ஆகலாம்.

இரண்டு: நீருக்குள் நீந்தும் உயிர்களுக்கு நீரானது இடம் அளிக்கின்றது.  ஆதலால் நீருள் இடம் உண்டு என்பது சிவஞான முனிவர் கருத்தியல் (சூத். 8, ஆதி. 2).  இரண்டு பொருள்கள் ஓரிடத்தில் இருக்காது என்பது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு யவன -- இலியா நகரச் சிந்தனை.  இதே கருத்தை இராபர்ட் டிநொபிலியும் சத்திய வேத பரிட்சை நூலாசிரியரும் மேற்கொண்டு இருந்தனர்.  இது, சிவஞான முனிவரது கருத்துடன் மாறுபடுவது நோக்கத்தக்கது.

மூன்று: விடயமாவது எது என்றால் எந்த உணர்வு நிகழும் போது எது விளங்குகின்றதோ அது விடயம்.  விளங்குதல் விடயத்தின் உரிமை.  இது சிவஞான முனிவர் கருத்து (சூத். 2, ஆதி.2).  அதாவது புறநிலையில் உள்ள விடயம் உணர்வினில் விளக்கம் கொள்கின்றது.  அகத்திற்கு வெளியே உள்ள புறப்பொருளானது அகத்தின் உள்ளே விளங்குகின்றது என்பதுவும், அப்பது விளங்குவது பொருளின்றி உரிமை என்பதுவும் நூதனமானது.  உலகியல் பூதப் பொருள்களினது சுதந்தரத்தைச் சிவஞான முனிவர் அங்கீகரிப்பது விழுமியது.

நான்கு: அப்போது நம்முன்னே உள்ள உலகம், அதன் பொருள்கள், உயிரினங்கள் இப்படியே முன்னம் ஒரு தொல் பழங்காலத்தில் இருந்தன.  சைவ முறையியலின் படி, அவை போய், ஒடுங்கி, மீண்டும் புனர் உற்பவம் ஆகி உள்ளன.  இதைச் சிவஞான முனிவர் அறிவார். கூடவே, இந்தப் பிரபஞ்சம் அநாதி.  “அம்முதற்கோடி நம்மனோரான் அறிய வாராமையின்” என அவர் உரைத்தார்.  அம்முதற்கோடி என்று உணர்த்த விழையும் தொல் பழங்காலத் தொடக்க நிலையானது பிரகிருதி, அசுத்தமாயை என்ற அவரது சித்தாந்த சைவத் தத்துவப் புனர் உற்பவ விளக்கங்களுக்கு உட்படாதது. அதோடு வரலாற்றுப் பூர்வமான உற்பவத் தொடக்கத்தை உணர்த்துவது.

ஐந்து: பிரபஞ்சத்தை விளக்கும் முகமாக அவர் சூரிய மையத்தைக் கைக்கொள்ளவில்லை.  பூமி மையத்தையே அனுசரிக்கின்றார்.  எனினும், நவகோள்கள் அந்தரத்து இயங்குவதாக அறிந்து உரைத்தது விழுமியது.  என்றாலும், சந்திர, சூரிய கிரகண விபரங்களை அறிந்தார் இல்லை (சூத். 2. அதி. 3, சூத். 6. அதி. 3). திருச்சபையினர் தொலைநோக்கி, கோள்கள், துணைக்கோள்கள் பற்றிப் பேசினர்.  சத்திய வேத பரிட்சை நூலானது வியாழன் பெருங்கோளை நான்கு துணைக் கோள்கள் சுற்றுவதைத் தொலைநோக்கி வழி கண்டதை எடுத்துச் சொல்கின்றது (பக். 81).

ஆறு: சுட்டி அறியப்படும் உலகு என்பது சைவ மரபு.  என்றாலும், காணப்படும் உலகு என்று சிவஞான முனிவர் உரைக்கிறார் (சூத். 1, உரை).  இது Visible World என்ற ஐரோப்பிய மற்றும் திருச்சபையினர் வழக்கு.  புறநிலை உலகு -- Objective World -- என்பதாக அல்லாமல், புலன்களால் உணரப்படும் உலகு என்ற முறையில் காணப்படும் உலகு என்ற இந்தத் தொடரானது புலன் உணர்வுகளுக்கு முதல் தகுதி அளிக்கும் போக்கினைச் சார்ந்தது.  இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் (Positivism) நேர்க்காட்சி வாதமாகத் தமிழகத்தில் ஆங்கிலேயரிடையே உலவியது.

ஏழு: சிவஞான முனிவர் வினை குறித்து விளக்கும் போது “வினை சடமாகலின் சென்றணைய மாட்டா.  ஆன்மாக்கள் சேதனமாகலின் அவையே வினைப்பயன்களை அறிந்து எடுத்துக் கொண்டு நுகரும்.  இதற்கு ஒரு முதல்வன் வேண்டா” என்ற ஒரு தடை ஐயத்தைச் சுட்டுகின்றார் (சூத். 2, ஆதி. 2).  இந்தத் தடை ஐயமானது கிறித்தவ சார்பானது.  ஆத்மாக்கள் புண்ணியம், பாபம் இவைகளில் ஒன்றைத் தேர்வு செய்து அறிந்து எடுக்கும் சுயசுதந்தரம் உடையன என்பது இராபர்ட் டி நொபிலி (ஆத்ம நிர்ணயம். 66), சத்திய வேத பரிட்சை கூற்று (பக். 152).  சிவஞான முனிவர் உரைக்கும் அறிந்து எடுத்தலும், திருச்சபையினர் சொல்லும் சுயசுதந்தரமும் ஒன்று.  வினைக் கருத்தியலை நிராகரிக்கும் திருச்சபையினர் கருத்தியலைத் தடை ஐயமாகச் சுட்டித் தமது வினைக் கருத்தியலைச் சிவஞான முனிவர் உறுதி செய்கிறார்.  இந்த விவாதம் அவரது சமகாலத் தன்மை பூண்டது.  அவர் சுட்டும் தடை ஐயமானது அவரது உரையின் விழுமியம்.

எட்டு: சரியையாளர் நுண்ணுணர்வு அற்றவர்.  உருவத் திருமேனியாகிய தூல வடிவத்தைப் பொருள் எனப் பாவித்து வழிபடுவர் (சூத். 8, ஆதி. 1).  நுண்ணுணர்வு என்பது தூல வடிவத்தைக் கொண்டு சூக்கும உட்பொருளை உணரும் திறன்.  இந்த வழிபாடு விக்கிரகாராதனை எனப்படும்.  அளவும், வடிவமும், உறுப்புகளும் உடையது தூலப் பொருள் என்று கொள்ளப்படும்.  இது இறைவனாலோ, மனிதனாலோ செய்யப்பட்டவை.  இந்தப் பொருள்கள் அவைகளாகவே இருக்கும்.  அதாவது, அவைகளுக்கு உரிய சுயபண்புகளுடன் நிலவும்.  இந்தப் பொருள்களது பண்பு இறைவனது பண்புகள் அல்ல என்று திருச்சபையினர் உறுதி பேசினர்.  மேலும், இறைப் பண்புகள் அவைகளில் குடிகொள்ளாது.  ஏனெனில் இறைப் பண்புகள் அளவு அற்றவை.  மேலும், இவை அளவு உள்ள பொருள்களில் அடங்க மாட்டா.

இறைவனது பண்புகள் வடிவமும், உறுப்பும் பெற்றவை அல்ல.  இந்தக் கருத்தியலில் திருச்சபையினர் உறுதியாக நின்றனர் (நித்திய சீவன சல்லாபம். 78, சத்திய வேத பரிட்சை -- தெய்வ பரிட்சை. 10).  தொழுவதற்கு ஆவாகனம் புரியப்பட்ட தூல வடிவத்தில் இறைவன் குடிகொண்டு அருளாட்சி புரிகிறார் என்பது சிவஞான முனிவரது சைவம்.  காணப்படும்  பொருளைக் கொண்டு, காணப்படாத சூக்குமப் பொருளை அந்தப் பொருளிலேயே உணர்வது நுண்ணறிவு.  இது பக்குவத்தால் விளையும் என்பது சிவஞான முனிவரது உறுதி.

ஒன்பது: பொருட்களுடைய சக்தியின் ஒரு பகுதியே இன்னொரு பொருளாக ஆகின்றது.  முழுவதும் ஆவதில்லை.  அப்படி முழுவதும் இன்னொன்றாகக் காரியப்பட்டால், சக்தியானது அழியும் பொருளாக, அநித்தியப் பொருளாக ஆகி விடும் (சூத். 2, ஆதி. 4).  சிவஞான முனிவரது இந்தக் கருத்தியல் விழுமியது.  காரணத்தில் இருந்து உண்டாகும்  காரியம் அழியும், எந்த ஒரு காரியப்பொருளும் அநித்தியமானது. இது சித்தாந்த சைவக் கருத்தியல்.  சிவஞான முனிவர் சக்தி அழிவு அற்றது என்ற கருத்து உடையவர். 

மேலும், சக்தியே பொருளினது வடிவம் ஆகிறது என்ற கருத்தும் உடையவர்.  எனினும், சக்தியின் ஒரு பகுதியே இன்னொரு பொருள் ஆகின்றது என்று சித்தாந்த சைவ மரபிற்கு உட்பட்டே உரை காண்கிறார்.  காண்பதற்கு உரிய எல்லாப் பொருள்களின் குறிப்பிட்ட வடிவத்தில் சக்தியே உள்ளது.  சக்தி மாறுதல் அடையும் இயல்பு உடையது.  இது நேர்க்காட்சி வாதக் கருத்தியல்.  இதனுடன் சிவஞான முனிவரது கருத்தியல் ஒத்திசைவு காண்கிறது.  பொருள்களின் வடிவம் மட்டுமே காரியப்படும், உள்தன்மை மாறாது என்ற கருத்தியலில் வடிவத்தோடு அழியாத, நித்தியமான சக்தியைச் சாற்றி உரைக்கப்படும் சிவஞான முனிவரது கருத்தியல் விழுமியது.

ஆதார ஆவணங்கள்

1) சிவஞான மாபாடியம்.  சிவஞான முனிவர்.

2) ஆத்தும நிர்ணயம். இராபர்ட் டி நொபிலி (1577 -- 1656) ச. அராசமாணிக்கம், சே.ச. பதிப்பு தூத்துக்குடி.  1967.

3) சத்திய வேத பரிட்சை.  கிளெமென்சு பொனாந் துரிசிப்பார் (அனுமதி) சன்மவிராக்கினி மாதா கோயில், புதுவை. 1846.

4) தூஷண திக்காரம்.  இராபர்ட் டி நொபிலி தூத்துக்குடி. 1964.

5) நித்திய சீவன சல்லாபம்.  இராபர்ட் டி நொபிலி தூத்துக்குடி. 1964.

6) A Short History of the Madras Diocese (1835 - 1935). S.K.Devasikhamani. B.A. Head Master. Heber High School. Trichinopoly. The Diocesan press. Vepery, Madras. 1935.

Pin It