இஸ்ரேலிய இராணுவத்தினர் எங்களை அழித்தார்கள், அநியாயங்களுக்குள் ளாக்கினார்கள். எல்லாம் உண்மை தான். என்றாலும் அவர்களே நோயாளிகளாக மருத்துவமனைக்கு வந்தால் அவர்களுக்கும் வைத்தியம் செய்வது, எங்களது ஒழுக்கம். நாங்கள் பாலஸ்தீன் செம்பிறைச்சங்கத்தைச் சார்ந்தவர்கள் என்று அஜீசா ஹாலித் சொன்னது எனது காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.

நான் அந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்களுக்கும் மருத்துவம் செய்தேன். எந்த காஸா மருத்துவமனையை அவர்கள் துவம்சம் செய்ய வேண்டும் என முடிவுகட்டி செய்து முடித்தார்களோ அந்த மருத்துவ மனையே அவர்களுக்கு பயன்பட்டது, அஜீஸா ஹாலித் இன் பெருந்தன்மையால்.

இந்த அஜீஸா ஹாலித் தான் இஸ்ரேலிய இராணுவத்தால் இடிக்கப்பட்ட அந்த காஸா மருத்துவமனையை மீண்டும் கட்டியெழுப்பினார்கள்.

 இவையெல்லாம் என்னுள் அழுத்தமான தாக்கங்களை ஏற்படுத்தின. நான் என்னால் முடிந்த சேவைகளை (அதிகமான அறுவை சிகிச்சைகளை) செய்தேன். செய்துகொண்டே இருந்தேன். அப்போது தான் நான் அந்த செய்தியைக் கேள்விப்பட்டேன். காஸா மருத்துவ மனையில் நான் பார்த்துக் கொண்டிருந்த எலும்பு முறிவு அறுவை சிகிச்சைப் பகுதிக்கு வேறு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டதாகவும் நான் காஸா மருத்துவமனை பணிகளிலிருந்து அடுத்த நாளே விடுவிக்கப்படவேண்டும் என்றும் உத்தரவு. இந்த உத்தரவு என்னை அந்த மருத்துவ மனைக்குத் தொண்டு செய்ய அனுப்பியவர்களிடமிருந்தே வந்ததால் அஜீஸா ஹாலித் போன்றவர்களால் எதுவும் செய்திட இயலவில்லை.

“நீ வேண்டும்” என்று அடிக்கடி அழைக்கும் அஜீஸா ஹாலித் போன்றவர் களாலேயே எதுவும் செய்திட இயலாத அளவுக்கு என்னை அங்கே அனுப்பியவர்களுக்கு சில “அரிய ஆற்றல்கள்” அழுத்தங்களைத் தந்துள்ளன.

உண்மையைச் சொன்னால் என்னை அழைத்த லெபனான் அரசு தான் என்னுடைய ஒப்பந்தம் முடிந்துவிட்டது. நான் திரும்பி போய்விடவேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால் அந்த லெபனான் அரசு சொன்ன காரணம் தான் மிகவும் வேடிக்கையானது. அது, எலும்பு முறிவு சிகிச்சைப்பகுதிக்கு மருத்துவர்கள் தேவை இல்லை என்பது தான். இது மிகவும் வேடிக்கையான காரணம்.

நான் தான் காஸா மருத்துவ மனையிலுள்ள எலும்பு முறிவுப் பிரிவை தலைமையேற்று நடத்தி வந்தேன். எலும்பு முறிவுப்பிரிவில் எஃப்.ஆர்.சி.எஸ் படித்த ஒரே டாக்டர் நான் தான். அதாவது காஸா மருத்துவமனையில் இந்தப் பிரிவில் மிகவும் அதிகமாகத் தேர்ச்சிப் பெற்ற ஒரே மருத்துவர் நான்தான். அதேபோல் இஸ்ரேலியப்படைகளின் தாக்குதல்களால் அதிகமாக அந்த பாலஸ்தீன மக்களுக்குத் தேவைப்பட்டதும், இந்த அறுவை சிகிச்சை தான் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்போர் பட்டியல் மிகவும் நீளமானது. அறுவை சிகிச்சைக்கு காலதாமதமானதால் புண்கள் பழுத்து சீளும் சிராய்ப்புமாய் நொந்து நொடிந்து கொண்டிருப்பவர்கள் பலர்.

ஒடிந்துபோன எலும்புகள், சதைப்பகுதியை பறிகொடுத்து பளிச்சென வெளியே தெரிந்து கொண்டிருந்தன. இந்த பகுதிகளுக்கு வேறிடத்திலிருந்து சதையைக் கொய்து வைத்திட வேண்டும். எலும்புகளை மறைத்திட வேண்டும். இல்லையேல் இவை பழுத்து கெட்டுப்போகும். விரைந்து இந்த அறுவை சிகிச்சையை செய்யாவிட்டால் இதுவே அவர்களை அழிக்கப்போதுமானது. இப்படி எண்ணற்ற சிகிச்சைகள் மீதமிருக்க காஸா மருத்துவமனையில் எலும்பு முறிவு பகுதிக்கு ஆட்கள் தேவை இல்லை என்பது வேடிக்கையானது. விசித்திரமானது.

 இத்தோடு மட்டுமல்லாமல் சிலருடைய உயிரைக் காப்பாற்றிட வேண்டும் என்றால் நொடிந்துபோன சில உறுப்புகளை முற்றாக மாற்றியாக வேண்டும்.

 பாலஸ்தீன முஸ்லிம்களிடம் பரிவும் பாசமும் காட்டியவர்களுள் மிகவும் முக்கியமானவர் அபூஅலீ என்பவர். இவர் தான் அந்த அறுவை சிகிச்சை பகுதியிலுள்ள அரங்கத்தை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருப்பவர். இவர் சதா சர்வ காலமும் அறுவை சிகிச்சை உபகரணங்களை அங்காடியில் வாங்குவதற்கு அலைந்து கொண்டே இருப்பார். இப்படி அலைந்து கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது, லெபனானைப் பொறுத்தவரை. காரணம் லெபனானின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த இஸ்ரேலிய இராணுவம் யாரை வேண்டுமானாலும் அதுவும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம்.

ஒரு முறை ஆண்கள் கைது செய்யப்பட்டு விட்டால் அத்தோடு அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுவிடுவார்கள். அவ்வளவுதான். இத்தகையதொரு கடினமான சூழலில் தான் அபூஅலீ எதுவரினும் சரியே என தன் நொடிந்துபோன மக்களுக்காக மருத்துவ பொருள்களை வாங்கிட அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

 அடுத்தடுத்து இஸ்ரேலிய இராணுவம் போட்டிருந்த தடைகளையும் சோதனை சாவடிகளையும் அவர் கடந்து சென்றிட வேண்டியிருந்தது. இப்படி அபூஅலீ அலைந்து கொண்டிருப்பதற்கு காரணம் நான் அடிக்கடி அவரிடம் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை செய்கின்ற அளவில் நாம் இன்னும் தயாராகவில்லை என்பதை சொல்லி வந்தேன். அவர் இன்னும் ஒரு வாரத்திற்குள் நான் அந்த அறுவை சிகிச்சை அரங்கத்தை பெரிய அறுவை சிகிச்சை களையும் செய்வதற்குரியதாக ஆக்கித் தந்து விடுகின்றேன் என வாக்களித்தார். அதற்காகத்தான் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்தார்.

இந்த அரங்கம் முழுமையாகத் தயாரானால் தான் பல பழைய காயங்களுக்கு மருத்துவம் செய்திட இயலும். இவற்றில் பல லெபனானின் ஒரு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிக்கும்போது வீசிய குண்டுகளில் பட்டக் காயங்களாகும்.

அந்த மக்களுக்கு இன்றளவும் எந்த சிகிச்சையும் கிடைக்கவில்லை. அவர்கள் மருத்துவம் பெற்று உயிருடன் வாழ்ந்திடுவதை இஸ்ரேலிய இராணுவம் நிச்சயமாக விரும்பிடவில்லை. இதற்கெல்லாம் ஓர் அருமருந்தாக காஸா மருத்துவமனை தயாராகும் போது நான் வெளியே சென்றிடவேண்டும் என என்னை காஸா மருத்துவமனைக்குத் தருவித்தவர்கள் கூறுகின்றார்கள் இது வேடிக்கையிலும் வேடிக்கை.

இந்தச்சோக செய்தியை நான் யாருக்கும் சொல்லவில்லை. சொன்னால் நிச்சயமாக என்மீது பாசங்கொண்டவர்கள் பதறிப் போவார்கள். அவர்களின் மனம் கிஞ்சிற்றும் சோர்வடைவதை நான் விரும்பவில்லை.

 எல்லாமிருந்தாலும் உண்மையிலேயே என்னை வெளியேற்றுவதற்கு யார் காரணம் என்பதை நான் அறிவேன்.
பாலஸ்தீன செம்பிறை சங்கத்திற்கும் இதற்கும் எள்ளளவும் சம்மந்தமில்லை. அவர்களுக்கு நான் வேண்டும். ஆனால் அந்த மேலை நாட்டுப்பெண்கள் அந்த கிருஸ்தவ பெண்கள் இவர்களெல்லாம் என்னைக்குறி வைக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களை பொருத்தவரை நான் பாலஸ்தீன முஸ்லிம்களின் மேல் அதிகப்பற்று கொண்டவள். இஸ்ரேலியருக்கு எதிரானவள். ஆகவே அகற்றப்பட வேண்டியவள். அவர்களுக்கு ஒரு நிமிடம் கூட என்னோடு வேலை செய்ய இயலவில்லை. மனமுமில்லை. அவர்கள் என்னை அகற்றுவதில் வெற்றிக்கண்டு விட்டார்கள்.

உலகில் மன அழுத்தம் தரும் செய்திகளையே சிந்தித்துக் கொண்டிருப்பது சரியல்ல. மாறாக சுற்றி இருப்பவர்களோடு சந்தோசமாக இருக்கத்தலைப்பட்டேன். அரபு டீயை வரவைத்து அருந்தினேன். என்னோடு இருந்தவர்களிடம் உரையாடினேன். நொடிந்தும் நொறுங்கியும் போன அந்தக் குழந்தைகளை தொட்டு வருடினேன். அவர்கள் அந்த வலியிலும் சற்று ஆறுதல் அடைந்தார்கள். நான் அவர்களைப்பார்த்து திருப்தி அடைந்தேன்.

இதற்குள் காலை 4 மணி ஆகிவிட்டது. அதாவது நான் காஸா மருத்துவமனையைக் காலி செய்திட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. வேகவேகமாக ஆடைகளை மாற்றிவிட்டு எல்லோரிடமும் என்னை விட்டுவிடுங்கள். நான் தென் பெய்ரூத் ஐ சுற்றிப்பார்க்க விரும்புகின்றேன் என்றேன். அப்போது எல்லோரும் என்னைக் கேள்வியால் துளாவினார்கள். நான் சொன்ன பதிலால் எல்லோரும் அதிர்ந்தார்கள்.

திரும்பிப்பார்த்தேன். அஜீஸா ஹாலித் கண்களில் கண்ணீருடன் நின்றுக் கொண்டிருந்தாள். எந்த சோதனையையும் இன்முகத்தோடு எதிர்கொள்ளும் அவள் எனக்காக மட்டுமே அழுதாள். நான் செய்த மொத்த சேவைக்கும் அவளது கண்ணீர் எனக்குப்பரிசு. அவளை நான் தேற்றினேன் என்னை அவள் தேற்றினாள்.

 நான் வெளியே வருமுன் மீண்டும் சென்று அந்த எலும்பு முறிவுப் பிரிவை அறுவை சிகிச்சை அரங்கை ஏறிட்டுப் பார்த்தேன். அங்கே டாக்டர் அமின் என்பவர் சிகிச்சை செய்துகொண்டிருந்தார். அவருடைய இளமை அவருடைய சிகிச்சைக்கு ஒரு வேகத்தைத் தந்திருந்தது.

“ஒன்றும் கெட்டுப்போகவில்லை இந்த மருத்துவமனை வாழும். நீண்ட சேவையை செய்யும். காரணம் அஜீஸா அதன் முதன்மை நிர்வாகி.”

 “இந்த எலும்பு முறிவுப் பிரிவும் நன்றாக இயங்கும். டாக்டர் அமின் போன்றவர்கள் அதனைக் கைவிட மாட்டார்கள்.”

 உண்மையில் என்னை மருத்துவ மனையிலிருந்து அகற்றியவர்கள் அதாவது லெபனான் அரசு அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது என்பதை நான் புரிந்துக்கொண்டேன். நான் அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு என்னுடைய மே ஃபயர் ரெசிடென்சி வந்தேன். தெற்கு லெபனானைச் சுற்றிப்பார்க்கத் தொடங்கினேன்.

 - இத்துடன் புதைக்கப்பட்ட மக்கள் மறைக்கப்பட்ட வரலாறு தொடர் முற்றும்

 அன்பார்ந்த வாசகர்களே

ஆங் சுவீ சென் அவர்கள் லெபனானில் அகதிகளாக வாழ்ந்த பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஆற்றிய சேவையை நாம் இங்கே தந்தோம். அவர் சேவை செய்தார் என்பதைவிட அவர்தான் ஷாப்ரா ஷத்திலா படுகொலைகளின் நேரடி சாட்சியம். 

 ஷாப்ரா ஷத்திலாவில் தாங்கள் மூன்று நாள்களாக நடத்திய படுகொலைகள் உலகுக்குத் தெரியாது என்றே நினைத்தார்கள் இஸ்ரேலியர்கள். ஏனெனில் இந்த படுகொலைகளை உலகுக்கு காட்டிட வேண்டிய ஊடகங்கள் அந்தப் பணியைச் செய்திடவில்லை. இதனால் கண்ணால் கண்ட சாட்சியங்கள் எதுவும் இல்லை என்றே இஸ்ரேலிய படையினர் எண்ணினார்கள். ஆனால் ஆங் சுவீ சென் நானிருக்கின்றேன் என்றார். அத்தோடு உலகில் நடைபெற்ற அத்தனை விசாரணைகளுக்கும் சென்று அந்த விசாரணைக் குழுக்களிடம் சாட்சியம் சொன்னார்.

அத்தோடு உலகெங்கிலும் நன்கொடைகளை வசூல் செய்து பாலஸ்தீன அகதிகளுக்கு உதவிகளைச் செய்தார். 2007ம் ஆண்டு இந்த ஷாப்ரா ஷத்திலா அகதிகள் முகாம் கொலைகள் நடந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது இந்த நூலை மறுபதிப்பும் செய்தார். உலகெங்கிலும் சென்று இதனைப் பிரசாரமும் செய்தார். இவற்றை நவம்பர் 2012 வைகறை வெளிச்சத்தில் வெளியிட்டிருக்கிறோம் (வாசகர்கள் அதைப் படிக்கவும்)

ஆங் சுவீ சென் தன்னுடைய சேவைகளை தொடர்ந்து தருகின்றார். பாராட்டுகள்.

நாம் அவர் ஓர் ஐ விட்னஸ் கண்ணால் கண்ட சாட்சியம் என்ற அளவிலான அனைத்துத் தகவல்களையும் தந்துள்ளோம். 

- எம்.ஜி.எம் 

Pin It