ஒரு கடத்தல், ஒரு கொலை, ஒரு என்கவுண்டர் அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற அமளி. ஆங்காங்கே தமிழகக் காவல் துறையைப் பாராட்டி ஒட்டப்பட்டிருக்கும் வீர வணக்கச் சுவரொட்டிகள். குற்றவாளியைக் காவல் துறை சுட்டுக் கொன்றது நரகாசுரனைக் கொன்றது போன்ற மகிழ்ச்சியான இரண்டாம் தீபாவளி எனப் பொதுமக்களின் பேட்டிகள்...

பள்ளி மாணவர்கள் கடத்திக் கொலை...

பள்ளி மாணவன் கடத்தல்...

பள்ளிக்குச் சென்ற மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...

9 வயது குழந்தையின் மீதான பாலியல் வன்முறை...

இவைதாம் தமிழகத்தின் முதன்மைச் செய்திகள். இவற்றில் மேற்கூறிய இரண்டு செய்திகள் ஊடகங் களின் முதன்மைப் பக்கங்களை ஆக்கிரமித்துக் கொள்ள கீழே சொன்ன பின்னிரண்டு செய்திகள் வந்த சுவடே தெரியாமல் வெறும் பெட்டிச் செய்திகளோடு மறக்கடிக்கப்பட்டு விட்டன.

குழந்தைகள் கடத்திக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக மக்களிடையே ஏற்பட்ட அனுதாபம், கொந்தளிப்பு போன்றவற்றைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட காவல் துறை ஒரு விசாரணைக் கைதியைச் சுட்டுக் கொன்றதன் மூலம் தனது அதிகார பலத்தை மேலும் ஒரு படி உயர்த்திக் குற்றவாளிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் காட்டிக் கொண்டது. ஆனால் இதன் பின்னும் உடுமலை, சென்னை ஆகிய இடங்களில் கடத்தல்கள் தொடர்ந்தன.

என்கவுண்டர் மூலம் குழந்தைகள் கடத்தல் கொலைக் குற்றவாளியை நரகாசுர வதம் செய்ததாய்ச் சமூக நீதியைக் காக்க "சூரனை' வதம் செய்த அவதாரமாய்ச் காட்சியளித்த காவல்துறை அதே வாரத்தில் நடந்த அரசுப் பள்ளி மாணவியின் படுகொலையில் முதல் கட்ட விசாரணையில் கூட அக்கறை காட்டவில்லை. பொள்ளாச்சி அருகே உள்ள இரமண முதலிப் புதூர் என்ற கிராமத்தில் பள்ளிக்கு அருகில் இருந்த தென்னந் தோப்பின் முள்கம்பி வேலியில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு தாரணி என்ற பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்டாள். தனது தோப்பில் உள்ள ஒரு தேங்காய் கூட பறிபோகக் கூடாது என்ற நோக்கத்தில் தொட்டால் சாகட்டும் என்ற கொலை வெறியோடு சாதாரண முள்கம்பி வேலியில் மும்முனை மின் இணைப்பில் மின்சாரத்தைப் பாய்ச்சிக் கொலை செய்துள்ளான் அந்த உரிமையாளன் அரிராஜ் என்பவன். ஒரு தேங்காயின் விலையை விட ஒரு மனித உயிரின் விலை மலிவானதாகக் கருதிய இந்தக் கொலைகாரன் மீது காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு எளிதில் பிணையில் வெளிவரக் கூடிய 304 (ஆ) பிரிவில் வழக்கினைப் பதிவு செய்துள்ளது. மேலும் கொலையாளி எங்கு உள்ளான் என்று தெரியவில்லை எனக் கூறி நாடகமாடிக் கொண்டிருக்கிறது. ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட கைப்பேசியினைக் கூட துல்லியமாகக் கண்டறிந்து மோகன்ராஜைக் கைது செய்த காவல்துறை, அரிராஜ் எங்கு உள்ளான் என்று தெரியவில்லை என்று மழுப்புகிறது.

காவல்துறை இப்படியிருக்க கல்வித் துறையோ, மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ பாதுகாப்பு குறித்தான ஒரு சுற்றறிக்கையைக் கூட அனுப்பவில்லை. கோயம்புத்தூரில் தனியார் பள்ளி மாணவர்கள் கடத்தல்கொலைச் சம்பவத்திற்குப் பிறகு தனியார் பள்ளிகளின் ஒழுங்கமைவுக் கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட்டது. பதின்மப் (மெட்ரிக்) பள்ளி இயக்ககம் உடனடியாக அரசாணை வெளியிடுகிறது.

பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆலோசிக்கிறது. பள்ளிகள் பெற்றோர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநர்கள் பற்றிய தகவல்ளை வழங்க வேண்டும், வெளியாட்களைக் கண்காணிக்க இரகசிய கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துதல் என துரித கதியில் அறிக்கையைப் பதின்மப் பள்ளி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

காவல் துறை, கல்வித் துறைக்குச் சற்றும் சளைக்காமல் நாளிதழ்களும், காட்சி ஊடகங்களும் தமது கடமைகளைச் செவ்வனே செய்தன. நடந்தது என்ன? நிஜம்? பூதக் கண்ணாடி, மறுபக்கம் என அனைத்துத் தொலைக்காட்சிகளும் கோவை கடத்தல் சம்பவத்தைப் புலனாய்வு செய்தன.

ஆனால் முதலாளித்துவ வன்மத்தால், திட்டமிட்ட சதியால் படுகொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவி தாரணியை இந்த ஊடகங்கள் காட்ட மறுத்தன. அந்த முதலாளியின் கோரமுகத்தை மூடி மறைத்தன. செய்தித் தாள்கள் தனது ஒரு நாளைய செய்தியாக அதைக் காட்டி மறந்தன.

எல்லாவற்றுக்கும் மேலாகப் பள்ளிக்கல்வித் துறையோ, தொடக்கக் கல்வித் துறையோ இச்சம்பவம் குறித்து எவ்வித அறிக்கையையும் வெளியிட

வில்லை.

பள்ளி வளாகங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு அறிவுறுத்தலின் பேரில் கூட ஒரு சிறு அறிக்கையை அனைத்துப் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அனுப்பவில்லை என்பது வேதனைக்குரியது.

இங்கே பிரச்சனைக்குரியது தனியார் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பா, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான பாதுகாப்பா என்பதல்ல. உண்மையில் இச் சமூகத்தில் குழந்தைகளுக்கான வாழ்வுரிமை அங்கீகரிக்கப்படவில்லை என்பது பற்றியதுதான்.

மேற்கண்ட கொலைகளைக் கொடூரங்களை நாம் அலசி ஆராய்வதன் நோக்கமே அரச பயங்கரவாதமும் காவல் துறையின் கொடூரங்களும் எவ்வாறு கட்டமைக் கப்படுகின்றன; மக்கள் மத்தியில் நியாயப்படுத்தப் படுகின்றன என்பதுதான்.

ஒரு கொலை நடந்த பத்தே நாளில் விசாரணைக் கைதி காவல் துறையால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இன்னொரு கொலையில் அடிப்படை விசாரணைகூட வலுவாக மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய ஏற்றத் தாழ்வுகளில்தான் அரச பயங்கரவாதம் செயல்படுகிறது. அதற்கு அனைத்து ஊடகங்களும் துணைபோகின்றன.

முதலாளித்துவமும் பணக்கார வர்க்கமும்தான் அரசை இயக்குகின்றன. இன்னும் ஆழ்ந்து பார்ப்போ மானால் இந்த அரசு என்பதைச் செயல்படுத்துகிற அரசு இயந்திரங்களும் பணக்கார வர்க்கங்களே ஆகும். இந்த பயங்கரவாதமே ஒரு குற்றவாளியை உடனடியாக சுட்டுக் கொல்லவும், கொலைக் குற்றவாளி ஒருவனை அரவணைக்கவும் செய்கிறது.

இதில் சாதி என்பது கோலோச்சி நிமிர்ந்து நின்று எக்களிக்கிறது.

Pin It