திண்ணியத்தில் மட்டுமல்ல....
தினந்தோறும் தின்று கொண்டிருக்கிறது
பீயை என் சனம்
தெரிந்து பாதி தெரியாமல் பாதி....

Athiyaman
எண்ணும் மதிவண்ணனின் கவிதை வரிகள் சமூக அவலத்தை தெளிவாகக் காட்டுகிறது.

மரபணு உயிரியல் வளர்ச்சி, ஆளில்லாத ராக்கெட், அணு ஆயுதப்புரட்சி, இயந்திரப்புரட்சி, தொலைத்தொடர்புப் புரட்சி, கணினிப்புரட்சி என எத்தனையோ புரட்சிகள் தினம் தினம் நடந்தேறும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் சக மனிதனின் மலத்தை சக மனிதன் அள்ள வைக்கும் மிகப் பெரும் சமூகக் கொடுமை இந்தியத் துணைக் கண்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதே சத்தமில்லாமல் திணிக்கப்படுகிறது.

இந்தியத் துணைக் கண்டத்தில் சாதி ரீதியாக மட்டுமே தூய்மைத் தொழிலை அவர்கள் மீது பார்ப்பனீய இந்துச் சமூகம் திணித்துள்ளது. இது காலங்காலமாக அவர்கள் மீது திணிக்கப்படும் வன்கொடுமைச் செயலாகும்.

தீண்டாமை என்பது மனித இனத்திற்கு எதிரானது என்று பேசுகிறது இந்திய அரசியல் சாசனப்பிரிவு 17 ஆனால் இன்று இந்தியாவில் தீண்டாமையின் முதன்மைச் சின்னங்களாக காட்சி தந்து கொண்டு இருப்பவர்கள் தூய்மைத் தொழிலாளர்கள். காரணம் அவர்கள் செய்யும் தூய்மைத் தொழில் அதாவது துப்புரவுத் தொழில். இந்தியா முழுவதும் 5.77 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவான இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை லட்சக்கணக்கான மக்கள் தூய்மைத் தொழில் என்னும் இழிவான தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக படி நிலையில் கடைநிலையாக இருக்கும் அருந்ததிய மக்கள் மீது மட்டுமே இவ்விழி தொழில் திணிக்கப்பட்டு வருகிறது.

இது பார்ப்பனீயத்தின் வெற்றியாக (!) நம்மீது படிந்துள்ள வரலாற்றுக் கறையாகும் கிராமப்புறத்திலிருந்து சாதிய ஒடுக்கு முறையின் கீழ் இருந்து விடுபட எண்ணி நகரத்தை நோக்கி வந்த மக்களையும் மலம் அள்ளும் மக்களாக மாற்றிவிட்டது இந்த நாற்றமெடுத்த சாதியச் சமூகம். தூய்மைத் தொழிலாளியாக மாற்றிவிட்டது மட்டுமல்லாமல் நோய்களை உண்டாக்கி, தூய்மைத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி கிடைக்காத மக்களாகவும், மேலும் மேலும் இத்தொழிலை அவர்களின் வாரிசுகளே செய்யுமளவிற்கு தொழிலாகவும், புது அடிமைகளை தலைமுறை தலைமுறை உருவாக்கித் தந்திருக்கிறது (அ) தருகிறது. இந்த சாதியச் சமூகம் உடலியல் மற்றும் உளவியல் அடிப்படையில் மிகவும் பாதிப்புகளைத் தந்து கொண்டிருக்கும் இத்தொழிலைச் செய்பவர்களை சமூக அளவில் தாழ்த்தப்பட்டவர்களிலும் மிகக் கேவலமாகப் பார்ப்பதும், நடத்துவதுமே இன்றைய நடைமுறை என்பது உண்மை.

செத்துப் போன எலிகள், பூனைகள், பிராணிகளின் தசைகள், மக்கிச் சிதைந்து அரைகுறையாக மிதந்து கொண்டிருக்கும் பாதாளச் சாக்கடையில், நகர மக்களின் மலங்களும், சிறுநீர்களும், அசுத்தங்களும் கரைந்து கூடியிருக்கும் பாதாளச் சாக்கடையில், நோய்க்கிருமிகளைச் சுமந்து கொண்டிருக்கும் பாதாளச் சாக்கடையில், அந்த அசுத்த நீரில் தலை நனைய உடல் நனைய, காது மூக்கு துவாரங்களில் நீர் நுழைய, வாயிலும் அந்த அசுத்த நீர் பட்டு வெளியேறுவதால் ஏற்படும் உடல், உளவியல் அடிப்படையில் ஏற்படும் கொடுமையான பாதிப்புகளை சொல்லி முடிவதில்லை.

இது போன்ற எண்ணற்ற பாதிப்புகள் தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருப்பதோடல்லாமல். இத்தொழிலைச் செய்யும் காரணத்தினால் தாழ்த்தப்பட்ட சக சாதியைச் சார்ந்தவர்கள் கூட இவர்களை மனிதனாக ஏற்க மறுக்கிறார்கள். இந்த இழிதொழிலையும் சமூக அடிமைகளாக ஆடுமாடுகளின் மந்தைகளாக இவர்கள் கருதப்படும் வரை இந்த சமூகம் இவர்களை மதிப்பு வாய்ந்தவர்களாக திரும்பி பார்க்காத வரை இவர்களுக்கான கோபக்குரலை உயர்த்திக் கொடுக்காத வரை சமூக விடுதலை சாத்தியமே இல்லை என உணர்ந்த ஆதித்தமிழர் பேரவை சார்பில் கோவையில் தூய்மைத் தொழிலாளர்கள் மறுவாழ்வு மாநாடு நடத்தி முதல் தீர்மானமாக மனித மலத்தை மனிதன் அள்ளுவதை தடைசெய்யக் கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கும், மனித உரிமை ஆணையத்திற்கும், சமூக நீதித்துறை, இந்திய இரயில்வே துறைக்கும், மத்திய மாநில அமைச்சகங்களுக்கும், இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட அனைத்து ஆட்சியாளர்களுக்கும் அனுப்பப்பட்டது. இதை அடித்தட்டு மக்களின் கோரிக்கையாகவும், சாதி ரீதியான பார்வையுமாகவே கண்ட அனைத்து ஆட்சியாளர்களும் பாராமுகத்துடன் அலட்சியமாக இருக்கின்றனர்.

யோசித்துப் பார்க்கிறேன். இந்த நாட்டின் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் பாராளுமன்றத்தில் முதன்முறையாகப் பேசும் பொழுது பத்து ஆண்டு காலத்திலே, இந்த நாட்டில் இருக்கும் அனைவருக்கும், இலவச கட்டாய கல்வி தருகிறேன் என்று கூறினார். இன்றைக்குப் பல பத்தாண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் சொன்னதுபோல் செய்திருந்தாங்கன்னா, எங்க சக்கிலிய மக்களும் படித்திருப்பார்களே, படிக்கவேயில்லை, படிக்கவேயில்லை. படிக்கவே இல்லையே. எங்கள் மீது வன்கொடுமைகள் தொடர்ந்து பாய்ந்து கொண்டே இருக்கின்றன.

எல்லாவற்றையும் விட இன்னொரு கொடுமை தாழ்த்தப்பட்டோர் கூட எங்களை ஒதுக்கி வைக்கும் அவலம் தான், இழிவாக பார்க்கும் அவலம்தான், இந்த அவலத்தை எங்கே போய் சொல்லுவது? அதற்குக் காரணம் என்னவென்றால் நாங்கள் தான் சாலைகளைச் சுத்தப்படுத்துகிறோம். நாங்கள் தான் அனைத்து மனிதர்களின் கழிவை, மலத்தை. கையிலே எடுத்து வாளியிலே போட்டு, தோளிலே சுமந்து அதை அப்புறப்படுத்துவது போன்ற வேலைகளைச் செய்கிறோம். மனிதனுடைய மலத்தை மனிதர்களே அள்ளும் இந்த வேலையை நாங்கள் மட்டும் தான் செய்கிறோம். இந்தக் கொடுமை எங்கள் இனத்திற்கு மட்டுமே இழைக்கப்படுகிறது.

உலகில் வேறு எங்கும் இத்தகைய கொடுமை இழைக்கப்படுவது இல்லை. இதை யாராவது தட்டிக் கேட்டது உண்டா? யாராவது இந்த இழிநிலையைப் போக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி இருக்கிறார்களா? போராட்டம் கூட வேண்டாம், குறைந்த பட்சம் ஒருவரி தீர்மானம் போட்டு இருக்கிறார்களா? இந்த கேள்வி தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்குமானது தான். தமிழ் நாட்டில் மொத்தம் 5 லட்சம் பேர் இந்த தொழிலை செய்கிறோம். ஒரு ஆள் இரண்டு ஆள் அல்ல. ஐந்து லட்சம் பேர். இந்த வேலையை 5 லட்சம் பேர் செய்கிறோம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் பத்து பேர் மரணமடைகிறோம். எதற்குத் தெரியுமா? மேன் வேன்னு இருக்கே! இந்த சாக்கடை அடைப்பை நீக்குவதற்கு பெரிய பெரிய நகரங்களிலே அந்த குழிக்குள்ளே மனுசனே இறங்கி உள்ளே போய் சாக்கடை அடைப்பை சுத்தப்படுத்த வேண்டும். அதை யார் சுத்தப்படுத்துகிறார்கள்?

அந்த அடைப்பை நீக்குவதற்கு ஒரு சக்கிலியன் தான். ஒரு ஜட்டியை மட்டும் போட்டுக்கிட்டு, அந்த மலக்குழிக்குள் இறங்குகிறான். அந்த நாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள மது அருந்தி விட்டு உள்ளே இறங்குகிறான். உள்ளே இறங்கிப் போய் அந்த அடைப்பை நீக்கி விட்டு வெளியே வருகிறான்.

அந்த மலம் அவன் கண்ணுக்குப் போகிறது, வாய்க்குள் போகிறது, எங்கெங்கெல்லாம் துவாரம் இருக்கோ அங்கெல்லாம் போகிறது. அப்படி மலத்துக்குள் நுழைந்து அந்த அடைப்பை நீக்கி விட்டு, வெளியே வந்து உணவு சாப்பிட முடியுமா? மனித நேயம் இருந்தால் யோசியுங்கள்! அந்த மாதிரி இறங்கி வேலை செய்யும் போது ஒவ்வொரு மாதமும் பத்து பேர் விசவாயு தாக்கி இறந்து கொண்டே இருக்கிறார்கள். பத்திரிகையில் செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இதை யாரும் கேட்பது இல்லை. எங்கள் இன இளைஞர்கள் உயிர் கொசுவைப் போல் மலிவானதா? நாங்கள் செத்துப் போவது குறித்து யாரும் அரசிடம் கேள்வி கேட்பது இல்லை.

கேள்வி வேண்டாம் ஒரு சிறு வருத்தம் உண்டா? ம்கூம் கிடையாது. இவ்வாறு இறந்து போகும் நபர்களுக்கு இன்சூரன்ஸ் உண்டா? அவனது குடும்பத்தை யார் கவனிக்கிறார்கள்? என்ற கேள்வி ஒன்றும் கிடையாது. பெரிய பெரிய ஆலைகளிலே சாயத்தை தேக்கி வைக்கும், குறிப்பாக ஈரோடு, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலையின் கிடங்குகளில் உள்ள அடைப்பை நீக்குவதற்கும் எங்கள் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தான் இறங்குகிறோம். அதிலும் விசவாயு தாக்கி நிறைய இளைஞர்கள் சாகிறோம். யார் கேள்வி கேட்கிறார்கள்? யாருமே கேள்வி கேட்பதில்லை. வீட்டில் உள்ள செல்லப்பிராணியான நாய்க்கும், பூனைக்கும் உடல்நிலை சரியில்லை என்றால் அதற்காக வருத்தப்படும் சமூகமே. கொஞ்சம் யோசியுங்கள் எங்களை! தமிழ்நாட்டில் உள்ள எங்களைப் போன்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையைப் போல பக்கத்தில் உள்ள கர்நாடகாவிலும் பிரச்சனை இருந்தது.

கர்நாடக மாநிலத்தில் தங்கவயல் என்ற ஊர் பக்கத்தில் இருக்கிறது. அந்த ஊரில் பெஜவாடா வில்சன் என்கிற தோழர் இருக்கிறார். துப்புரவு செய்யும் சமுதாயத்தில் பிறந்த பெஜவாடாவில்சன் எம்.எஸ்.சி வரைக்கும் படித்துவிட்டு இன்று டெல்லியில் இருக்கிறார். அவர் துப்புரவு தொழிலை ஒழிப்பதற்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் யார் என்றால் ‘மாதிகா’ சமுதாயத்தைச் சேர்ந்தவர் தமிழ்நாட்டில் சக்கிலியர் என்று எங்களைச் சொல்வது போல கர்நாடகாவிலும் ஆந்திரத்திலும் மாதிகா என்று மிக உயர்வாகச் சொல்கிறார்கள். மாதிகா இனத்தைச் சேர்ந்தவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பாட்டு பாடவும் செய்வார்கள். அந்த மாதிகா சமயத்தைச் சேர்ந்தவர் தான் பெஜவாடா வில்சன்.

அவரது அம்மா, அப்பா, உறவினர்கள் அனைவரும் இந்தத் துப்புரவு தொழிலைத் தான் செய்து வருகிறார்கள். துப்புரவு செய்யும் தொழிலைச் செய்துதான் இவரைப் படிக்க வைக்கிறார்கள். இவருக்கு அது தெரியாது. ஒரு நாள் இவரை இவர் படிக்கும் பள்ளியில் உங்களது அம்மா, அப்பா என்ன வேலை செய்கிறார்கள்? என்று கேட்ட பொழுது எங்கள் அப்பா, அம்மா, கார்ப்பரேசனில் வேலை செய்கிறார்கள் என்று கூறி இருக்கிறார். உடனே பள்ளியில் அனைவரும் சிரித்து விட்டனராம். உடனே இவருக்கு கடுமையான வருத்தம். கார்ப்பரேசன்ல வேலை பார்க்கிறதுன்னா, அனைவரும் சிரிக்கிறார்கள்! உண்மையில் நமது அப்பா, அப்பா என்ன வேலை செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்று முடிவு பண்ணுகிறார். ஆனால் இதற்கு அவரது அம்மா, அப்பா இருவரும் ஒத்துக்கொள்ளவில்லை. நாம் செய்கிற வேலையை நமது பையன் பார்க்கக் கூடாது என்று தெளிவாக இருக்கிறார்கள். ஆனாலும் அவர் மிகவும் அடம்பிடித்து வேறு ஆள்மூலம், தனது அப்பா, அம்மா என்ன வேலை பார்க்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கு அவரே நேரடியாகச் செல்கிறார்.

போய்ப் பார்த்தால் நூறு பேர் அமர்கின்ற வகையிலே ஒரு பகுதியில் உயர் கழிப்பிடம் கட்டி வச்சிருக்காங்க கீழே பிளஸ் அவுட் எல்லாம் கிடையாது. மலம் அப்படியே கொட்டிக் கிடக்கும் இந்த மலத்தை தினசரி பக்கெட்டிலே அள்ளிப் போட்டு அதை தோளிலே சுமந்து பக்கத்தில் இருக்கிற வாளியில் அதைப் போட்டு வைத்திருப்பார்கள். வாளியில் இருக்கிற மலத்தை வாரத்துக்கு இரண்டு முறை நகரத்தில் இருந்து வரும் டிராக்டர் எடுத்துட்டுப் போகும். அதையும் இவர்கள் தான் தூக்கி கொட்டணும். இந்த வேலையை செய்து கொண்டு இருந்தார்கள். இந்த வேலையைத் தான் செய்து தானா நமது அப்பா, அம்மா நம்மைப் படிக்க வைத்தார்கள்? அப்படின்னு மனம் வருந்தி, இரண்டு நாட்கள் தொடர்ந்து அழுது இருக்கிறார்.

எங்க அப்பா, அம்மா, இந்த வேலையையா செய்கிறார்கள்? ஊரில் இருக்கிறவன் பீயை எல்லாம் நம்ம, அப்பா, அம்மா தான் வளிக்கிறாங்களா? அப்போ, இது எவ்வளவு மோசமானது, இதை எப்படிச் செய்கிறாங்க. அன்று ரெண்டுநாள் தொடர்ந்து அழுதிருக்கிறார். பெஜவாடா வில்சன் அப்புறம் தான் அவருக்குப் புரிந்தது. இது நம்ம தொழில். பரம்பரை பரம்பரையா நாம் தான் இதைச் செய்து கொண்டிருக்கிறோம். நம்ம சொந்தக்காரங்க எல்லோரும் இந்த வேலையை தான் செய்து கொண்டே இருக்கிறார்கள் என்று. இந்த வேலையை மாதிகா சாதிக்காரன் மட்டும் தான் செய்கிறார்கள். (தமிழ்நாட்டில் சக்கலியர் மாதிரி) வேறு யாரும் இதைச் செய்யவில்லை என்று. உடனே இதை பரிசோதிப்பதற்கு தனது மாதிகா சமயத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படித்த நண்பன் ஒருவனிடம் போய் நீ வேலைக்குப் போறியா? என்று கேட்டார். அவன் உடனே நான் வேலைக்கு போவதற்காகத்தான் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்திருக்கிறேன். ஆனால் அங்கிருந்து எனக்கு மலம் அள்ளும் வேலைக்கு மட்டும் தான் இண்டர்வியூ அழைப்பு வருகிறது. வேறு வேலைக்கு வருவதில்லை என்று பதில் கூறுகிறார்.

உடனே வில்சன் வேலை வாய்ப்பு அலுவலகம் சென்று ஏன் எங்கள் சாதிக்காரர்களுக்கு மட்டும் இந்த வேலைக்கு கார்டு அனுப்புகிறாய்? பியூன் வேலை இல்லை. காவலாளி வேலை கொடு. இல்லை வேறு ஏதாவது வேலை கொடு என்று கேட்கிறார்.

அதற்கு அதிகாரி இந்த வேலைக்கு உங்க சாதிக் காரனுக்குத்தான் அனுப்ப முடியும். வேற சாதிக்காரனுக்கு அனுப்பினா, உதைக்க ஆள் அனுப்புவான். உங்க ஆள் தான் இதுக்கு லஞ்சம் கொடுத்து வேலை எனக்கு தாங்கன்னு கேட்டுக் கொண்டிருக்கிறான், வேலை கொடுத்தா, லஞ்சத்தை கொடுத்து சந்தோசமாக சேர்ந்து கொள்வான் என்று கூறுகிறார்.

அப்பொழுது தான் வில்சன் முடிவு பண்ணுகிறார். இந்த உலர் கழிப்பிடம் (டிரை லெட்ரின்) முறையை ஒழிக்க வேண்டும், பாம்பே கக்கூஸ் என்று சொல்லக் கூடிய பிளஸ் அவுட் செப்டிக் டேங் வசதியுடன் இந்த மாதிரி கட்டிக் கொடுத்தால்தான் பிரச்சனையே இல்லாமல் இருக்கும் என்று முடிவு கட்டுகிறார். முதல் கட்டமாக அரசாங்கத்திடம் மனு அளிக்கிறார். அசைந்து கொடுக்கவில்லை அரசாங்கம். உடனே ஒரு சங்கத்தை தொடங்கி போராட்டம் நடத்துகிறார். என்ன போராட்டம்ன்னா, யார் யார் வீட்டில் எல்லாம் ஆள் வந்து மலம் அள்ளிட்டுப் போற மாதிரி வச்சிருக்காங்களோ, அங்கெல்லாம் கடப்பாறையும், மண் வெட்டியும் எடுத்திட்டு போய் உடைத்து எறியறதுன்னு அதுக்கு மக்களை திரட்டுகிறார். போராட்டம் நடத்துகிறார். அப்படிப் போராட்டம் நடத்தும் பொழுது நீதிமன்றம் ஒன்றிலும் உடைக்கப் போறாங்க. ஜட்ஜ் உடைக்க கூடாது அப்படின்னு உத்தரவு போடறார். மீறி இவங்க உடைக்கிறாங்க. உடனே இவர்களை கைது பண்ணிக் கொண்டு செல்கிறார்கள். இவர் அதன் பின் தொடர்ந்து அலசி ஆராய்ந்து, நம்ம மக்கள் இந்த தொழில் செய்யக் கூடாது என்று முடிவு செய்து திட்டங்கள் தீட்டுகிறார். மக்கள் ஆதரவு அதிகரிக்கிறது.

மீண்டும் அரசாங்கத்துக்கு கடிதம் எழுதுகிறார், இந்தத் தொழிலை ஒழிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு, மனிதர் கழிவை மனிதர் அள்ளும் வேலை நாட்டில் இல்லைன்னு அறிக்கை அளித்தது. உடனே இவர் மீண்டும் கிளம்புகிறார். அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து யார் யார் எங்கெல்லாம் போய் மலம் அள்ளுறாங்களோ, அங்கே போய் போட்டோ, வீடியோ எடுத்து ஆதாரங்களை சேகரித்து அரசாங்கத்திற்கு அளிக்கிறார். நீங்க யாரும் இல்லைன்னு சொல்றீங்க. இந்தாங்க ஆதாரம்னு சொல்கிறார். அதன் பிறகு அரசாங்கம் கொஞ்சம் இறங்கி வந்தது. முதன்முறையா 5 ஆண்டுகளுக்கு முன்பா நீங்க வயல் மாவட்டத்தில் மட்டும், இந்த தொழிலை ஒழிச்சு நவீன முறை கக்கூஸ்களை கட்டுவதற்கு பணத்தை ஒதுக்கினார்கள்.

அதற்கடுத்து அடுத்த திட்டம் போட்டார். மத்திய அரசில் 1993ல் ஒரு சட்டம் போட்டாங்க. என்ன சட்டம் என்றால், மனித மலத்தை, மனிதனே அள்ள கூடாது, யாராவது வற்புறுத்தினால் அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று. இந்தச் சட்டத்தை எந்த அரசாங்கமும் நடைமுறைப்படுத்தவில்லை. இதைக் கையில் எடுத்து உச்சநீதி மன்றத்துக்கு வழக்குத் தொடுக்கிறார். எல்லா மாநில அரசாங்கங்களும், எங்க மாநிலத்தில் இந்த அவலம் கிடையாதுன்னு அறிக்கை அளிக்கிறாங்க. வில்சன் மறுபடியும் போட்டோ ஆதாரம் அளிக்கிறார். இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினா யாருக்குத் தண்டணை அளிக்கணும்னா.

ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் கார்ப்பரேசன் நிர்வாக அதிகாரி அவர் தானே ஒவ்வொரு ஊரிலும் போய் நீ காலையில மலம் அள்ளிட்டு வான்னு ஆள் அனுப்புறாரு, கமிசனர் தான் இதுக்கு பொறுப்பு இவங்களுக்குத் தான் ஓராண்டு தண்டணை மற்றும் அபராதம் விதிக்கணும். இவ்வாறு வில்சன் டெல்லியில் அமர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு போராடிக் கொண்டு இருக்கிறார். விரைவில் வெற்றி பெறுவார்.
தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சனையை முதலில் நாங்கள் கையில் எடுத்தோம். மனிதர் கழிவை மனிதனே அகற்றும் தொழிலைத் தடை செய்ய வேண்டும் என்று கூறினோம். இந்தத் தொழிலை யாரும் செய்யாதீர்கள் என்று எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களிடம் கூறினோம். நான் முதன்முதலில் இந்த தீர்மானத்தை சொல்லும் போது என் உடன் இருந்தவர்களே எதிர்ப்புத் தெரிவித்தார்கள். என்னங்க எல்லோர் வேலைக்கும் நீங்க ஆப்பு அடிச்சுருவீங்க போலிருக்கு அப்படின்னாங்க அப்ப நான் சொன்னேன். மலம் வழிக்கிற வேலை ஒரு வேலையா? பிறகு அதற்கு ஒரு எடுத்துக் காட்டைச் சொன்னேன்.

கர்நாடகாவில் பெஜவாடா வில்சன் தங்க வயல் மாவட்டத்துல மலம் அள்ளுன வாளியை தோளிலே சுமந்து கொண்டு ஒரு நபர் வேலை செய்து கொண்டு இருக்குற போட்டோவை அங்கிருக்கிற மாஜிஸ்திரேட்டிடம் கொண்டு போய் காட்டுகிறார். அதை வாங்கிப் பார்த்த மாஜிஸ்திரேட் சொல்றாரு. இப்படி யாரும் மலத்தை தோளிலே தூக்கி வச்சுட்டு நிக்க மாட்டாங்க! இது ஒரு போகஸ். இது உண்மை கிடையாது. அப்படின்னு கூறுகிறார். உடனே வில்சன் கூறுகிறார். இது போகஸ் என்று நீங்கள் சொன்னீர்களானால் உங்களில் யாராவது ஆதிக்க சாதியைச் சேர்ந்த, ஒரு ஆளை ஒரு பக்கெட் மலத்தை தோளில் சுமந்து, கொஞ்ச நேரம் நின்று போட்டோவுக்கு, போஸ் கொடுக்கச் சொல்லுங்க. நான் 2 லட்சம் தருகிறேன் என்று சொல்கிறார்.
போட்டோவுக்கு போஸ் கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும். 2 நிமிடம் ஆகுமா? 2 நிமிடம் செய்யும் வேலைக்கு 2 லட்சம் தருகிறேன். யாராவது வருவார்களா? என்று கேட்கிறார். யாரும் முன்வரவில்லை.

அதைத்தான் நான் என் தோழர்களிடம் கேட்டேன். 2 நிமிட வேலைக்கு 2 லட்சம் கொடுத்தாலும் மல வாளியை தோளில் சுமக்காத சமூகத்திற்கு, நீங்கள் ஏன் மாதம் 600 ரூபாய் சம்பளத்துக்கு, இந்த வேலையைச் செய்கிறீர்கள்? என்று கேட்டேன். அதன் தொடர்ச்சியாக தோழர்களிடம் தயார்ப்படுத்தி, பல்வேறு போராட்டங்களையும் துவங்கினோம். சென்ற வருடம் நவம்பர் 2005ல் சாலை மறியல் போராட்த்தை தடை கடந்து நடத்தினோம்.

தூய்மைத் தொழிலையும் அதன் மீதான நிகழ்வையும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற வண்ணத்தில் ஆதித் தமிழர் பேரவையின் முயற்சியால் தொடர்ச்சியான தொடர் முழக்கப் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திய நிலையில் ஒட்டு மொத்தமான சமூகப் பார்வையும் இம்மக்கள் மீது திரும்பியிருக்கிறது (அ) திருப்பப் பட்டுள்ளது.

ஆதித்தமிழர் பேரவை தொடர்ந்து நடத்திய போராட்டங்களின் விளைவாக தி.மு.க தேர்தல் அறிக்கையில் தூய்மைத் தொழிலாளர் மறுவாழ்விற்கான கோரிக்கையை இடம் பெறச் செய்ததும், தமிழக ஆளுநர் தமது உரையில் ரூ.50 கோடி செய்ததும் ஆதித்தமிழர் பேரவையின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

மேலும் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்வது மட்டுமே இம்மக்களின் விடுதலைக்குத் தீர்வாகாது. அத்தொழிலிருந்து முற்றிலும் விடுதலையடைவதற்கு அத்தொழிலை ஒழிக்க தமிழக அரசு தடை விதித்து கையால் மலம் அள்ளும் மனித நேயமற்ற இத்தொழிலை ஒழிக்க வேண்டுமென்பதே மனிதத்தை நேசிக்கும் ஒட்டு மொத்த மக்களின் முன் நிற்கும் சவாலாகவும், அதையே கோரிக்கையாகவும் ஆதித்தமிழர் பேரவை முன் வைக்கிறது.

மனித உள்ளம் கொண்ட எந்த ஒரு மனிதனும் சக மனிதனின் மலத்தை கையால் அள்ளுவதை அனுமதிக்கக்கூடாது. அருந்ததியர் மட்டுமே இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுவதால் இதை ஆதித்தமிழர் பேரவை எதிர்க்கவில்லை. மனிதத் தன்மையற்ற, மனித உரிமைக்கெதிரான தூய்மைத் தொழிலை எந்த ஒரு மனிதனும் செய்யக்கூடாது என்பதே ஆதித்தமிழர் பேரவையின் நிலைப்பாடு எதற்கெடுத்தாலும் மேல்நாட்டாரைச் சுட்டிக் காட்டும் மேதாவிகள், கையால் மலம் அள்ளுவதற்கு மாற்றாக, இயந்திரங்களைப் பயன்படுத்தும் வெளிநாட்டாரை ஏன் சுட்டிக்காட்ட மறு(றை)க்கிறார்கள், ஏனென்றால் தூய்மைத் தொழில் தொழிலோடு தொடர்புடையது மட்டுமல்ல அது சாதியத்தோடு இரண்டறக் கலந்துள்ளது (அ) பிணைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்வதே மனிதத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் முன் நிற்கும் கேள்வி.

(கட்டுரையாளர் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர்)
Pin It