சென்னை காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தை அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள தனியார் உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி குமார், சரவணன், வேல்முருகன், ஆகிய மூன்று துப்புரவு தொழிலாளர்களும் உணவக உரிமையாளர் ராஜேஸ் உட்பட நான்கு பேரும் உயிரிழந்தனர்.

இப்படிப்பட்ட மலக்குழி மரணங்கள், விஷவாயு மரணங்கள் போன்றவை நாளும் அதிகரித்து வருவதும், அதற்கு நீதி கேட்டு மக்கள் போராடுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்ட சூழலில் சட்டத்தை வழுவாக்கி இப்பணியில் ஈடுபடுபவர்களை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழகஅரசு, துப்புரவு தொழிலாளர்களை தீண்டாமை உணர்வோடு பார்ப்பது தொடர்கதையாகி வருகிறது.

சென்னையில் மரணம் அடைந்தவர்களுக்காக போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இதே நேரத்தில் தமிழகத்தின் இன்னொறு இடத்தில் மலக்குழியில் மனிதன் இறங்கும் நிலைதான் நீடிக்கிறது, ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து போராடும் கட்சிகளும் பொதுமக்களும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இத்தொழிலில் ஈடுபடும் சக மனிதர்களை சகித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கும் வெக்கக்கேடும் நடக்கத்தான் செய்கிறது.

கெல்மெட் அணிவதை கட்டாயமாக்கிய நீதிமன்ற தீர்ப்பை நடைமுறை படுத்த தீவிரம் காட்டும் அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கத் தயாராக இல்லை.

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி 1993 முதல் விஷ வாயு தாக்கி மரணமடைந்த தூய்மைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அவர்களது குடும்பத்தின் மறுவாழ்விற்கு வழங்க வேண்டிய 10 லட்சம் நிவாரணங்களை வழங்காமலும், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப் படுத்த முயற்சி ஏதும் எடுக்காமலும் தமிழக அரசு வேடிக்கை பார்த்து சட்டத்திற்கு புறம்பாவே நடந்து கொள்கிறது.

பாதாள சாக்கடையில் இறங்கி கழிவுகளை அகற்றுவது, மலக்குழியில் (septic tank) இறங்கி மனித கழிவுகளை அகற்றுவது போன்ற தொழிலில் ஈடுபடுபவர்கள் மட்டும்தான்! கையால் மலமல்லும் தொழிலாளர்கள் என வரம்பு விதித்து தட்டிக்கழிக்கப் பார்க்கிறது.

எனவே தூய்மைப் பணியில் ஈடுபடுபடும் அனைவருமே கையால் மலமல்லும் தொழிலாளர்கள்தான்! என அரசு அறிவிப்பு செய்து அவர்களது குடும்பத்தின் மறுவாழ்விற்கு வழிவகை செய்திட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, சிற்றூராட்சி மற்றும் அரசு மருத்துவமனை, காவல்நிலையம், தனியார் ஹோட்டல்கள், விடுதிகள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவரையும் கையால் மலமல்லும் தொழிலாளர் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்.

ஒப்பந்த முறையில் உழைப்பை சுரண்டும் தனியார் முறையை முற்றிலும் ரத்து செய்து அனைவரையும் நிரந்தர பணியாளர்களாக அறிவிப்பு செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, நாட்டில் உள்ள எந்த மனிதனும் இன்னொரு மனிதனின் மலத்தை அள்ளுவது அவமானத்துக்குறியது. என்ற எண்ணத்தோடு இந்த தொழிலை மேலை நாடுகளில் உள்ளது போல நவீன எந்திரங்கள் கொண்டு அகற்றுவதற்கு ஏற்றவாறு, நவீனப்படுத்த வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

சென்னையில் விஷ வாயு தாக்கி மரணமடைந்தவர்களின் குடுப்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும், இதைப்போன்ற மரணங்களை தடுத்திட தமிழக அரசு சட்டத்தை கூர்மைப் படுத்தி போர்கால நடவைக்கையில் இறங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறது.

- இரா.அதியமான், நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.

Pin It