2023 ஆகத்து 15 அன்று 76ஆம் விடுதலை நாளில் உரையாற்றிய இந்திய ஒன்றியத்தின் தலைமை யமைச்சர் நரேந்திர தாமோதரதாசு மோதி விசுவகர்மா என்ற திட்டத்தை அறிவித்தார். அதன்படி அவர் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று விசுவகர்மா திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

2023-2024 முதல் 2027-2028 வரையில் அய்ந்து நிதியாண்டுகளுக்கு விசுவகர்மா திட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 30 இலட்சம் குடும் பங்கள் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய கைவினைஞர்கள் விசுவகர் மாக்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். கொல்லர்கள், பொற்கொல்லர்கள், குயவர்கள், தச்சர், சிற்பி, முடிதிருத்து வோர், துணி வெளுப்போர் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள இவர்கள் குரு-சீடர்களாக தொடர்ந்து தலை முறை தலைமுறையாக இத்தொழிலைச் செய்து வருகின்றனர். அந்தக் கைவினைஞர்களின் தயாரிப்பு களை உள்நாட்டு மற்றும் பன்னாட்டளவில் சந்தை மதிப்பை உயர்த்தப் போவதாக மோதி கூறுகிறார். ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருள் உடலு ழைப்பை மட்டுமே நம்பி வாழும் இப்பிரிவினருக்கு உதவுவது போல் காட்டி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களின் வாக்குகளைப் பெறுவதே விசுவகர்மா திட்டத்தின் அரசியல் நோக்கமாகும்.modi vishwakarma yojanaவிசுவகர்மா திட்டத்தில் 1. தச்சர், 2. படகு உற்பத்தி யாளர், 3. கருவி செய்வோர், 4. இரும்பு கொல்லர், 5. சுத்தி மற்றும் சாதனங்கள் உற்பத்தியாளர், 6. பூட்டு, 7. சிற்பி, கல் உடைப்பவர், 8. பொற்கொல்லர், 9. குயவர், 10. மிதியடி தயாரிப்போர், 11. செங்கல் தொழிலாளர், கட்டடக்கலை மற்றும் கட்டுமானத் தொழிலாளர், 12. கூடை, பாய், துடைப்பம் மற்றும் தென்னைநார் தொழில் புரிவோர், 13. பொம்மை செய்வோர், 14. முடி திருத்துனர், 15. பூ மாலை கட்டுபவர், 16.சலவைத் தொழிலாளர்கள், 17.ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் 18. மீன்பிடி வலை உற்பத்தி யாளர்கள் என பரம்பரையாக சாதியின் அடிப்படையில் குலத்தொழில் செய்பவர்களே இத்திட்டத்தில் பயனடையத் தகுதியுடையவர்கள் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.

விசுவகர்மா திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ள ரூ.மூன்று இலக்கம் கடன் தொகையில், முதல் தவணையாக ரூ.1 இலக்கம் வட்டி இல்லாமலும், இரண்டாம் தவணையாக அளிக்கவுள்ள ரூ.2 இலக்கம் 5 விழுக்காடு வட்டியுடனும் அளிக்கப்படுமாம். முதல் தவணையை 18 மாதங்களில் திருப்பி செலுத்திய பிறகுதான் இரண்டாம் தவணை அளிக்கப்படும். இதை 30 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

பயனாளிகள் ஒரு வாரகாலம் குலத்தொழில் பயிற்சி பெற வேண்டும். பயிற்சி பெறுபவர்களுக்கு ஒரு நாளைக்கு உரூ.500 உதவித் தொகை வழங்கப்படும். சுயதொழிலி லிருந்து ஒரு நிறுவனமாக விரிவடையும் அளவிற்குத் தொழில் முனைவோரின் குலத்தொழில் அறிவை மேம் படுத்த திறன் பயிற்சி அளிக்கப்படும் என்கிறது இந்தத் திட்டம்.

இத்திட்டத்தின் பயனாளியாகப் பதிவு செய்துகொள்ளும் நாளில் அவர் 18 வயது நிறைவடைந்தவராகவும் அவர் சார்ந்த சாதியின் தொழிலைச் செய்பவராகவும் இருக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகத் தலைவர் ஆகியோர் பயனாளி பாரம்பரியமான குலத்தொழிலில் ஈடுபட்டுள்ளார் என்பதை உறுதி செய்து சான்றளிக்க வேண்டும்.

இது ஆர்.எஸ்.எஸ்.இன் வருணாசிரம-சாதிய அமைப்பை பாதுகாக்கும் திட்டம் தவிர வேறென்ன? பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பட்டியல் சாதியினரும் உயர்கல்விக் கற்ப தையும் அவர்கள் அரசு உயர் பதவிகளுக்கு வருவதையும் தடுப்பதற்கான சூதான திட்டமே இந்தத் திட்டம் ஆகும்.

1952ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்ச ரான இராசாசி, 6000 கிராமப்புற பள்ளிகளை மூடினார்; கிராமப்புற தொடக்கப் பள்ளிகளில் அரைநாள் படிப்பும், அரை நாள் அவரவர் சாதித் தொழிலைக் கற்க வேண்டும் என ஆணையிட்டார். இக்குலக் கல்வி திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடெங்கும் பெரியாரும், தி.மு.க.வினரும் மக்களைக் கிளர்ந்தெழச் செய்ததன் விளைவாக இராசாசி பதவி விலகினார், காமராசர் முதல்வரானப் பின்பு குலக்கல்வித் திட்டம் கைவிடப்பட்டது என்பது வரலாறு.

இதையே 70 ஆண்டுகளுக்குப் பிறகு விசுவகர்மா திட்டம் என்ற பெயரில் குலக்கல்வித் திட்டத்தைப் பா.ச.க. மோடி அரசு மீண்டும் கொண்டு வந்துள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களிலும் உயர் அதிகாரம் கொண்ட அரசுப் பதவிகளிலும் மிகச் சொற்ப அளவிலேயே பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூக மக்கள் இடம்பெற்றுள்ளனர். ஒன்றிய அரசின் நிர்வாகத்தில் மொத்தம் 90 செயலாளர்கள் உள்ளனர். இதில் வெறும் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப் பட்டவர்களாக உள்ளனர். மக்கள் தொகையில் 3 விழுக்காடு மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் 50 விழுக்காட்டுக்குமேல் அரசு உயர் பதவிகளில் இருப்பதும், 50 விழுக்காட்டுக் கும்மேல் உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் அரசுப் பதவிகளில் வெறும் 5 விழுக்காடு அளவில் இருப்பது என்பதும் மிகவும் இரங்கத்தக்க நிலை ஆகும்.

சட்டப்படி வழங்கப்பட்டுள்ள 27 விழுக்காடு அளவையும் இன்னும் எட்டாத நிலையில்தான் கல்வியிலும் வேலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இருக்கின்ற இழிநிலையில் இந்த குலத்தொழில் திட்டமான விசுவகர்மா திட்டத்தைப் பா.ச.க. மோடி அரசு கொண்டு வந்துள்ளது மிகவும் கேடானது ஆகும்.

இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் சராசரி எழுத்தறிவு பெற்றோர் 77.7 விழுக்காடு என்ற நிலையே உள்ளது. அனைவருக்கும் கல்வி என்பது பல ஆண்டுகளாக வெற்று முழக்கமாக மட்டுமே உள்ளது. அனைவருக்கும் கல்வி கொடுக்க தவறிய, அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த தவறிய, கல்வி பயின்ற அனைவருக்கும் வேலை கொடுக்கத் தவறியதற்காக கடந்த 75 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரசும் பாரதிய சனதா கட்சியும் வெட்கப்பட வேண்டாமா?

இந்த நிலையில்தான் இந்தியா முழுமைக்குமான ஒரே கல்விக் கொள்கையாக பா.ச.க. அரசு கொண்டு வந்துள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020, இயல் 4.26இல் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பயிலும் மாணவர்கள் உள்ளூரில் தேவைக்கு ஏற்ப அந்தந்த சமூகங்களால் அடையாளப் படுத்தப்பட்ட குலத்தொழில்களான தச்சுவேலை, மின் வேலை, உலோக வேலை, தோட்ட வேலை, மண்பாண் டங்கள் செய்தல், நுண் கலைகள், கைவினைக் கலைகள் மற்றும் இன்னபிற தொழில்களை அனுபவ பயிற்சி பாடங்களாகக் கற்றுக்கொள்வார்கள் என்று கூறுகிறது. 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்குத் தோதான ஒரு தொழில் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டதொரு பாடத் திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதிதான் இந்த விசுவகர்மா திட்டம்.

இந்தக் கேடான புதிய தேசியக் கல்விக் கொள்கையை இந்திய அளவில் தமிழ்நாடு மட்டுமே முழுமையாக எதிர்க்கின்றது.

புதிய கல்விக் கொள்கையும் விசுவகர்மா திட்டத்தையும் ஒரேகோட்டில் இணைத்து பார்க்கலாம். குலத்தொழிலை பாதுகாக்கவே கொண்டு வந்திருக்கும் விசுவகர்மா திட்டத்தில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களை, உயர்கல்வி பயிலும் எண்ணத்தை மழுங்கடிக்கச் செய்வது அல்லது வாய்ப்பை மறுக்கச் செய்வது என்ற நுட்பமான பார்ப்பனிய அரசியல் செயல் வடிவமே இந்த புதிய கல்விக் கொள்கையும், விசுவகர்மா திட்டமும் ஆகும்.

இந்திய அளவில் பெரும்பான்மையினராக உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடிகளின் அடிப்படை உரிமைகளான, கல்வி, வேலை மற்றும் அரசியல் உரிமையை அடையக் கூடாது என்பதற்காக அனைத்து நிலைகளிலும் திட்டங்களை வகுத்து 9 ஆண்டுகளாக செயல் படுத்திக் கொண்டுள்ளது இந்துத்துவ சனாதன மோதி அரசு.

மேதை அம்பேத்கர் அவர்கள் மூக்நாயக் இதழில் கூறியது போல், இந்திய விடுதலை என்பது மக்கள் தொகை யில் வெறும் 3 விழுக்காடு மக்களாக உள்ள பார்ப்பனர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் மாற்றப்படுவதாக இல்லாமல், பெரும்பான்மை மக்களாக உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் கைகளில் இந்திய ஆட்சி அதிகாரம் கிடைக்கும் போதுதான் இது உண்டையான விடுதலை பெற்ற நாடாக இருக்கும் என்றார். இந்த நிலையை இன்றளவிலும் நாம் அடைய முடியாமல் இருப்பது, கவலை யோடு சிந்திக்க வேண்டியது ஆகும்.

தற்போது நாம் பெற்றிருக்கும் குறைந்தபட்ச கல்வி மற்றும் அதிகார உரிமைகளையும் இல்லாமல் ஆக்குவதும், பார்ப்பனர்களே என்றென்றைக்கும் ஆதிக்கம் செய்வதை நிலைக்கச் செய்யும் புதிய கல்விக் கொள்கையும் விசுவகர்மா திட்டத்தையும் செயல்படுத்தி மீண்டும் மநுதர்மப்படி சூத்திரர் களை பழைய நிலைமைக்குக் கீழே தள்ளும் பார்ப்பனிய­கார்ப்பரேட் பாசிச பா.ச.க.-மோடி ஆட்சியைத் தூக்கிய எறிய வேண்டும்.

இந்தக் கேடான விசுவகருமாத் திட்டத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிப்போம். சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் போராடுவோம், வெற்றி பெறுவோம்.

- நா.மதனகவி

Pin It