நம் சமூகத்தில் அறிவியல் வளர்ந்துள்ளது. வசதி வாய்ப்புகள் பெருகியுள்ளன. இருப்பினும் உடல் நலமும் பேணுவோர், பெற்றோர் அரிதினும் அரிதாகவே உள்ளனர். இதற்குக் காரணம் நம் மக்கள் படிப்பறிவு அடைந்த அளவிற்கு பயனறிவு (Practical Knowledge) அடையாதவர்களாகவே உள்ளனர்.
நோய்களுக்கு அடிப்படை, ஒன்று மலச்சிக்கல்; மற்றொன்று மனச்சிக்கல். இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. மனத்தில் சிக்கல் இருந்தால் மலத்தில் சிக்கல் இருக்கும். மலத்தில் சிக்கல் இருந்தால் அவர்களுக்கு மனத்திலும் சிக்கல் இருக்கும்.
“காலை மலமொடு கடும்பகல் பசி, நிசிவேளை நித்திரை பிழைத்தும்” என்பது தமிழறிஞரின் கூற்று.
காலையில் மலங்கழித்துப் பிழைக்க வேண்டும். நண்பகல் தேவைக்கு உண்டு பசியினின்று பிழைக்க வேண்டும். இரவில் நன்றாகத் தூங்கி தூக்கத்தினின்று பிழைக்க வேண்டும் என்றும், இரவில் தூக்கம் வராமல் புரண்டு,புரண்டு படுத்து உறக்கமின்றி அவதிப்படுவதிலிருந்து பிழைக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். இக்கருத்தினையே நம் திருமூலர்,
“காணுமே மந்தம் கவளிக்கும் அன்னத்தால்
காணுமே மந்தம் கடுமாமிசம் மீறிப்
காணுமே மந்தம் கலந்தமாப் பண்டத்தால்
காணுமே மந்தம் கடுமேதிப் பாலுக்கே”
என்று குறிப்பிடுகின்றார். வாயிலிட்ட உணவை பற்களால் நன்றாக மென்று விழுங்குதல் (செரிமானப் பாதையில் வாயைத் தவிர வேறெங்கும் பற்கள் இல்லை). இறைச்சி உணவினாலும், மாவினால் செய்த இட்லி, தோசை முதலிய பலகாரங்களினாலும், எருமைப் பாலினாலும் மந்தம் உண்டாகி மலச்சிக்கல் ஏற்படும் என்கின்றார். இதனை நாம் கவனத்தில் கொண்டு கடைபிடித்தல் அவசியம்.
மலச்சிக்கலும், மனச்சிக்கலும் அடையாதிருக்க, காலையில் எழுதல், காலைக்கடன்களை முடித்தல், காலை, மாலை உடற்பயிற்சி இசைவிருக்கை என்கின்ற யோகாசனம் செய்தல், காலை எழுந்தவுடனும் இரவு படுக்கும் முன்னும் தேவையான தூய நீர் அருந்துதல், அடிவயிற்றுப் பயிற்சி, இடுப்புக் குளியல், மலச்சிக்கல் செய்யாத உணவை தேர்ந்து உண்ணல், இவைகளை கடைபிடித்தால் மலச்சிக்கலின்றி நலமுடன் வாழலாம்.
மலச்சிக்கல் இல்லை என்று அறிவதெவ்வாறு?
அதிகாலை துயிலெழுதல் வேண்டும். விழித்த பத்து அல்லது பதினைந்து மணித்துளிகளில் (நிமிடங்களில்) மலம் கழிக்கப்பட வேண்டும். அவ்வேலை ஓரிரு மணித்துளிகளில் முடிந்துவிட வேண்டும். விழித்தெழுந்து ஒரு மணிநேரம் கழித்தபின் மலம் கழிப்பவர் மலச்சிக்கல் உடையவரே. மலம் கழிக்க பத்து அல்லது பதினைந்து மணித்துளிகள் எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் உடையவரே. காலையில் மலம் கழித்து, பின் தேநீர் முதலானவற்றை உட்கொண்டு பின்னர் மீண்டும் மலங்கழித்தால் மலச்சிக்கல் உடையவரே. காலையில் போகாமல் மாலையில் மலம் கழிப்பவர் மிகுதி யான மலச்சிக்கல் உடையவரே என்பதில் அய்யமில்லை. காலையில் போய்விட வேண்டும். சிறிது நேரத்தில் அவ்வேலை முடிய வேண்டும். தாராளமாய் போய்விட வேண்டும். சிரமம் இல்லாமல் கழிக்கப்பட வேண்டும். துர்நாற்றம் இல்லாமல் இருத்தல் வேண்டும். பிசுபிசுப்பும் ஒட்டுத்தன்மையும் இல்லாதிருத்தல் வேண்டும். மற்ற உயிரினங்களைப் போல் மலம் கழிபட வேண்டும். இவைகள் அனைத்தும் கிடைத்திட உட்கொள்ளும் உணவை நெறிபடுத்துதல் அவசியம்.
நம் முன்னோர்களாகிய தமிழறிஞர்கள் ஒவ்வொன்றிற் கும் பெயர் சூட்டும் போது, அறிவில் சிறந்தவர்களாகவும் நுண்ணுணர்வாளர்களாகவும் இருந்து ஆய்ந்தறிந்து பெயர்களைச் சூட்டியுள்ளனர். அதனடிப்படையில் பெயர் சூட்டும் போது “மலசலம்” (மலசலம் என்பது வடமொழிச் சொல் அல்ல; தூய தமிழ்ச் சொல்லே. அருவியில் தண்ணீர் சலசலவென கொட்டுகிறது என்று குறிப்பிடுகின்றோம் அல்லவா!) என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையிலே மலம் கழியும் போது, முதலில் மலம் வெளிவர வேண்டும். பின்னர் சிறுநீர் வெளியேற வேண்டும். இவ்வாறு இருப்பின் அவரிடம் மலச்சிக்கல் இல்லை என்று உணரலாம்.
மலச்சிக்கலை தவிர்க்க: அந்தந்த காலங்களில் கிடைக்கக் கூடிய நம் நாட்டுப் பழங்களை உட்கொள்ள வேண்டும். எப்பொழுதும், எல்லா காலங்களிலும் கிடைக்கக் கூடிய தேங்காயை உண்ணப் பழகுதல் வேண்டும். வயதானவர்கள் தேங்காயை திருகி உண்ணலாம். அல்லது பாலெடுத்து உண்ணலாம். தேங்காயை சமைத்து உண்ணும் போது அது கெட்ட கொழுப்பாகிறது. சமைக்காமல் உண்ணும் போது நல்ல கொழுப்பாகிறது. பழங்கள், தேங்காய், கொடிகாய்கள், கீரைகளையும் முக்கிய உணவாகப் பயன்படுத்த வேண்டும். இவைகளில் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் மிகுந்துள்ளது. எனவே இவைகளை உண்ணும் போது மலச்சிக்கல் இருக்காது. மலச்சிக்கல் இல்லாத போது நமக்கு மனச்சிக்கலும் இருக்காது.
இசைவிருக்கை (யோகாசனம்) :
மலச்சிக்கலில் இருந்து விடுபட நாளும் இசைவிருக்கை பழகுவது அவசியம்.
கைகால் தொடு இருக்கை (பாத அஸ்தாசனம்) :
காலைக்கடன்கள் முடிந்தபின், தரைவிரிப்பின்மீது நேராக நிற்கவும். இப்பொழுது மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயர்த்த வேண்டும். கைகள் காதுகளை ஒட்டினார்போல் நேராக இருக்க வேண்டும். மூச்சை வெளிவிட்டவாரே கைகள், தலை, முதுகு ஆகியவற்றை முன்பக்கமாக வளைத்து, கைவிரல்களால் கால் பெருவிரலைத் தொட வேண்டும். கால்கள் முன்பக்கம் வளையாமல் நேராக இருக்க வேண்டும். முழங்கை, கால்களை ஒட்டி இருக்க வேண்டும். தலைப்பகுதி கால்களின் முட்டிப் பகுதியை தொட வேண்டும். மூச்சை இயல்பு நிலையில் உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். பழக்கம் இல்லாதவர்களுக்கு கைகளால் கால்களைத் தொட முடியாத நிலை இருக்கும். சோர்வடையாமல் தொடர்ந்து முயற்சி செய்து முடியும் வரை குனிந்து, நிமிர்ந்து, காலை, மாலை வெறும் வயிற்றில் இப்பயிற்சியை இருபது, இருபது முறை செய்து வந்தால் நன்கு பழக வரும். முயற்சித்தால் முடியாதது இல்லை. கால்களை மடக்காமல், நேராக நின்று பழகுதல் அவசியம்.
பறவை பறக்கும் நிலை இருக்கை (பச்சி மோத்தாசனம்) :
தரை விரிப்பின் மீது நேராக உட்கார்ந்து கால்கள் இரண்டையும் முன்னோக்கி நீட்ட வேண்டும். கை, கால் தொடு இருக்கையில் செய்ததுபோல், கைகளை தலைக்கு மேல் நேராக உயர்த்த வேண்டும். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே உயர்த்த வேண்டும். கைகள் காதுகளை ஒட்டினார்போல் இருக்க வேண்டும். பின் மூச்சை வெளி விட்டுக் கொண்டே கைகள், தலை, முதுகு, இடுப்பு ஆகிய வற்றை முன்பக்கமாக வளைத்து கைவிரல்களால் கால் பெருவிரல்களைத் தொட வேண்டும். கால்கள் தரையோடு ஒட்டி இருக்க வேண்டும். தலையை கால்களின் முட்டிப்பகுதியின்மீது வைக்க வேண்டும். கைகள் கால்களை ஒட்டினார்போல் வைக்க வேண்டும். பார்ப்பதற்கு பறவை பறப்பது போன்று தோன்றும். மூச்சை இயல்பு நிலையில் உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். சிறிது நேரம் இருந்துவிட்டு கைகளையும் தலையையும் நேராக உயர்த்தி இருக்கையை கலையலாம். இதுபோல் ஒரு இருபது முறை எனத் தொடர்ந்து பழகி வந்தால் சில, பல நாட்களில் நன்றாகச் செய்ய வரும். ஒவ்வொரு முறை செய்து நிமிரும் போது மூன்று முறை மூச்சை நன்கு இழுத்துவிட்டு பின் அடுத்த முறை குனிந்து பழகுதல் வேண்டும். கைகளால் கால்களைத் தொட முடியாதவர்கள் சோர்வடையாமல் தொடர்ந்து பழக வேண்டும். வயிற்றில் தொப்பை உள்ளவர்களால் சிரமமாக இருக்கும். பழகப் பழக தொப்பை ஒரு தடையாக இருக்காது.
பெங்களூர் சுதந்தரம் என்று ஒரு இசைவிருக்கை ஆசிரியர் இருந்தார். அவர் தொப்பையோடுதான் இருந்தார். ஆனால் அனைத்து பயிற்சிகளையும் சிறப்பாக செய்வார். தொப்பை காரணம் இல்லை. பழக்கம்தான் காரணம். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு பழகி வந்தால், நாளடைவில் எளிதாகச் செய்ய வரும்.
மேற்கண்ட இருக்கைகளினால் வயிறு அழுத்தப்படுவதால் மலச்சிக்கல் இன்றி வாழும் நிலை ஏற்படும். அளவோடு உண்ணுகின்ற நிலை நம்மையறியாமல் நம்மிடம் குடிகொள்ளும். மலச்சிக்கல் இல்லை என்றால் நம் உடம்புக்கு எச்சிக்கலும் இல்லை. மகிழ்வோடு வாழலாம். அனைவரும் முயற்சிப்போம்; மகிழ்வோடு வாழ்வோம். அறுவை சிகிச்சை செய்து கொண்டோர், குருதி குறை நிறை உடையோர் உரிய இசைவிருக்கை ஆசிரியரின் ஆலோசனைப்படி பழகுதல் நலம்.
- மா.தசரதன்