ram avedesh19.08.1978 முதல் 20.07.2020 வரை அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் பேரவையின் தலைவராக விளங்கிய பாட்னாவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தோழர் இராம் அவதேஷ் சிங் 20.07.2020 மாலை 5.30 மணிக்கு பாட்னாவில் மருத்துவமனையில் மறைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

யார் இராம் அவதேஷ் சிங்?

பீகார் மாநிலத்தில் ரோட்டாஸ் (Rotahs) மாவட்டத்து க்கும் போஜ்பூர் மாவட்டத்துக்கும் இடைப்பட்ட சோன் ஆற்றங்கரையில் உள்ள பிப்பரா (Pippara) என்னும் சிற்றூரில் பிறந்த இராம் அவதேஷ் சிங், எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். பிப்பரா போஜ்பூர் மாவட்டத்தில் உள்ளது. இவர் மெட்ரிகுலேசன் வகுப்பில் படித்துத் தேறியதானது, இவருடைய யாதவ சமுதாய மக்களுக்கு ஓர் அரிய பெரிய காரியமாகத் தோன்றியது. இவர் கல்லூரி வாழ்க்கையின் போது டாக்டர் இராம் மனோகர் லோகியாவின் தலைமையில் தன்னை ஓர் சமதர்மக் காரராக (Socialist) உருவாக்கிக் கொண்டார். 

பெரியாரின் சிந்தனைகள் இவருக்கு 1967ஆம் ஆண்டு வாக்கில் எட்டின. பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கைக்குத் தம்மை உட்படுத்திக் கொண்ட இவர் முதன் முதலாகத் தாம் இந்தியில் எழுதிய ஒரு நூலில் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கைகளைச் சுருக்கமாக எழுதியமைக்காக, சோசலிஸ்ட் கட்சி இவர் பேரில் நடவடிக்கை எடுத்தது. அந்த ஒரே காரணத்துக் காகவே அக்கட்சியினர் இவரை “நாயக்கர்” என்றே அழைத்தனர். பார்ப்பனரை வெறுத்து ஒதுக்கும் ஒரு சோசலிஸ்ட்டாக மாறிய இவர், வடநாட்டிலுள்ள பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் காத்திட உறுதி பூண்டு 1968 முதல் முழுவதுமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 

வே.ஆனைமுத்து, சீர்காழி மா.முத்துசாமி ஆகிய நாங்கள் இருவரும் மய்ய அரசின் கல்வியிலும் வேலையிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு பெற வேண்டும் எனும் ஒற்றைக் குறிக் கோளுடன் அதற்கான வேலைத் திட்டத்துடன் 27.4.1978 இல் சேலம் நகரிலிருந்து புதுதில்லிக்குப் புறப்பட்டு 29.4.1978 காலை புதுதில்லி அடைந்தோம். எங்க ளுடைய கோரிக்கையை விளக்கும் தமிழ் 4 பக்க அறிக்கையை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழி யாக்கம் செய்து தனித்தனியாக அச்சிட்டு, அவற்றின் 2000 படிகளை உடன் சுமந்து சென்றோம். எங்களுடன் சேர்ந்து பணியாற்ற சேலம் தாதம்பட்டி ம.இராசு முன்னதாகப் புறப்பட்டு புதுதில்லி சென்று சேர்ந்தார்.

புதுதில்லியில் நாங்கள் அமைச்சர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை விளக்க அறிக்கைகளைக் கொடுத்து ஆதரவு திரட்டினோம்.

அந்தப் பணியின் ஒரு நிகழ்வாக, 6.5.1978 மாலை 6 மணிக்கு, 18, இராசேந்திர பிரசாத் சாலை, புதுதில்லி முகவரியில், வே.ஆனைமுத்து, சேலம் தாதம்பட்டி ம.இராசு, சீர்காழி மா.முத்துசாமி ஆகிய மூவரும், பெரியார் சம உரிமைக் கழகம் சார்பில் சனதா கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் இராம் அவதேஷ் சிங் அவர்களைச் சந்தித்தோம்.

அவர் அப்போது ஏதோ ஒரு பஞ்சாயத்துப் பேசிக் கொண்டிருந்தார்; அரை மணி நேரம் காத்திருந்தோம். பின்னர் அவரிடம், நாங்கள் பெரியார் தொண்டர்கள்; பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை தொடர்பாக உங்களுடன் பேச தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என்று சொன்ன வுடன், தம்முடைய எல்லாக் குழந்தைகளையும் அழைத்து எங்கள் காலில் விழுந்து வணங்குமாறு செய்தார். அது அந்நாட்டுப் பழக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் அரை மணிநேரம் எங்கள் கோரிக்கையைக் கேட்டுப் புரிந்து கொண்டவுடன், அடுத்த நாள் 7.5.1978இல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மிசாபர் நகரில் நடைபெற உள்ள உத்தரப்பிரதேசப் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரியார் தொண்டர் வே.ஆனைமுத்து பேசுவார்” என்று அறிவிக்குமாறு, தொலைபேசியில் தில்லியிலிருந்து முசாபர் நகருக்குத் தெரிவித்தார். அது எங்களுக்கு வியப்பாக இருந்தது.

அவர் எங்களிடம், நாளை காலை 7 மணிக்கு இங்கு வந்து விடுங்கள்; இரயிலில் முசாபர் நகர் போகலாம் என்று உற்சாகமாகத் தெரிவித்தார். நானும் மா.முத்துசாமி ஆகிய இருவர் மட்டும் மறுநாள் காலை அவதேஷ் சிங் வீட்டுக்குச் சென்றோம். அங்கு எதிர்பாராமல் சிற்றுண்டி கோழிக்கறியுடன் உண்டோம். இன்னும் சிலர் எங் களுடன் வந்தனர். எல்லோரும் இரயிலில் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் வேண்டுமென்றே எல்லோரும் பயணம் செய்தோம். முசாபர் நகர் இரயில் நிலையத்தி லிருந்து மாநாட்டு அரங்கத்துக்கு ஒரு மைல் தொலைவு, ஊர்வலமாக மேளதாளத்துடன் எங்களை உற்சாகம் பொங்க அழைத்துச் சென்றனர். அங்குப் பெரிய மாநாடு நடைபெற்றது.

இலக்னோவைச் சேர்ந்த சிவ் தயாள் சிங் சௌராசியா தலைமை ஏற்றார். நான் மாநாட்டைத் தொடக்கி வைத்து ஒன்றரை மணி நேரம் பேசினேன். அப்பேச்சு வடஇந்தியா முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. பெரியாரை நன்கு அறிந்த, டாக்டர் செடிலால் சாத்தி, என் ஆங்கில உரையை இந்தியில் மொழிபெயர்த்தார். மாநாடு முடிந்தவுடன் நாங்கள் இருவரும் புதுதில்லி திரும்பினோம். ஆவலோடு சேலம் ம.இராசு தில்லியில் எங்கள் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

அடுத்த நாள் 8.5.1978இல் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வாழப்பாடி கூ.இராமமூர்த்தி, வே.ஆனைமுத்து, ம.இராசு, சீர்காழி மா.முத்துசாமி ஆகிய நாங்கள் நால்வரும் குடிஅரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி அவர்களை நேரில் பார்த்து எங்களுடைய கோரிக்கை விண்ணப்பத்தையும், பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் நூலின் 3 தொகுப்புகளையும் கொடுத் தோம். அவர் பொறுப்பில்லாமல் பேசினார்.

தமிழகக் குழுவினரான நாங்கள் மூவர் மட்டும் அப்போது மய்ய அரசின் உள்துறை இணை அமைச்சராக இருந்த தனிக்லால் மண்டல் அவர்களைப் பார்க்க 12.5.1978 மாலை அவருடைய இல்லம் சென்றோம். அவர் வெளியில் சென்றிருந்தார். அவர் வருகைக்காகக் காத்திருந்தோம். அவர் நாங்கள் காத்திருக்கும் செய்தி யைக் கேள்விப்பட்டவுடன், “வீட்டிலிருங்கள்; உடனே போய்விடாதீர்கள், விரைவில் வந்துவிடுகிறேன்” என்று தொலைபேசியில் எங்களிடம் கூறினார்.

சொன்னவாறே அவர் விரைவில் வந்துவிட்டார்; எங்களுடன் மனம் திறந்து பேசினார். “சென்னையில் இடஒதுக்கீடு மாநாடு நடத்தப் போகிறோம். அதில் பங்கேற்க வாருங்கள்” என்று நான் அவரை அழைத்தேன். அவரும் ஒப்புக் கொண்டார்.

அந்த மாநாடு சென்னையில் 24.6.1978இல் நடைபெற்றது. இணை அமைச்சர் தனிக்லால் மண்டலும், இராம் அவதேஷ் சிங் மற்றும் பல தலைவர்களும் அம்மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.

மாநாடு முடிந்த பிறகு அடுத்த மாதம் நானும் இராம் அவதேஷ் சிங்கும் கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங் களுக்குச் சென்று இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினோம். பின்னர் நாங்கள் இருவரும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக, அரசியல் கட்சிச் சார்பற்ற-அனைத்திந்திய அமைப்பினை உருவாக்க விரும்பி னோம். இதன் தொடர்பாக நாங்கள் இருவரும் சென்னை எழும்பூரில் 19.8.1978இல் “பீப்பிள்ஸ் லாட்ஜில்” சந்தித் துப் பேசினோம்; ஆதரவாளர்களின் கருத்துக்களையும் கேட்டோம்.

அன்றே வே.ஆனைமுத்து புரவலர்- தலைவராகவும், இராம் அவதேஷ்சிங் தலைவராகவும், பெங்களூர் பேராசிரியர் ஏ.எம்.தர்மலிங்கம் துணைத் தலைவராகவும் பிற பொறுப்புகளுக்கு மற்றவர்களையும் கொண்ட “அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான் மையினர் பேரவை” என்னும் அமைப்பினைத் தொடங்கினோம். பேரவையின் முதல் பணியாக பெரியார் நூற்றாண்டு விழாவை பீகார் மாநிலம் முழுதும் கொண்டாடி இடஒதுக்கீட்டுப் பரப்புரை செய்திட, இராம் அவதேஷ் சிங் விரும்பினார்.

அதற்காக வே.ஆனைமுத்து தலைமையில் ஒரு குழுவாக பெரியார் தொண்டர்கள் பீகாருக்கு வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண் டார். அதன்படி வே.ஆனைமுத்து, மா.முத்துசாமி, திருச்சி து.மா.பெரியசாமி, வேலூர் நா.ப.செந்தமிழ்க்கோ ஆகிய நால்வர் குழு, 17.9.1978 முதல் 18.10.1978 முடிய 32 நாள் பீகார் மாநிலம் முழுவதும் விகிதாசார வகுப்புரிமைக் கோரிக்கைக்காகத் தொடர் பரப்புரை செய்தது.

விழிப்பும் எழுச்சியும் பெற்ற பீகார் மக்கள் அதைத் தொடர்ந்து 19.10.1978 முதல் 31.10.1978 முடிய தொடர்ந்து கிளர்ச்சி செய்தனர். கிளர்ச்சியின்போது 1978 அக்டோபர் 25, 26 நாள்களில் பீகாருக்கு வந்த பிரதமர் மொரார்ஜி தேசாயை மக்கள் கூட்டத்தில் பேசவிடாமல் செய்தனர். தில்லி சென்ற பிரதமர் மக்களின் கோபத்தை உணர்ந்து, இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்படும் என்று 20.12.1978இல் அறிவித்து 1.1.1979இல் அதை அமைத்தார். அதுதான் மண்டல் குழு.

பீகார் கிளர்ச்சியின்போது 10 ஆயிரம் பேர் சிறைப்பட்டனர்.

அப்போது பீகார் சட்டமன்றத்துக்கு சமஸ்திபூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது. அதில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றாக வேண்டும். எனவே முதலமைச்சர் கர்ப்பூரி தாகூர், 10.11.1979இல் மாநில அரசின் வேலை களில் பிற்படுத்தப்பட்டோருக்கு முதன்முறையாக 20 விழுக்காடு அளித்து ஆணை பிறப்பித்தார்.

புதுதில்லியில் 23.3.1979இல் வே.ஆனைமுத்து, இராம் அவதேஷ்சிங் இருவரின் ஏற்பாட்டில், பெரியார் நூற்றாண்டு விழா, ராம் மனோகர் லோகியா 80ஆம் பிறந்தநாள் விழா, ஒடுக்கப்பட்டோர் உரிமைப் பேரணி, போட் கிளப் திடலில் பொதுக்கூட்டம், பெரியாரின் கட்டுரைகளும் பேச்சும் அடங்கிய இந்தி மொழி பெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா ஆகியவை நடைபெற்றன. கர்நாடக அமைச்சர் எல்.ஜி.அவானூர், துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மய்ய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜ் நாராயண் விழாவில் இந்தி நூலை வெளியிட்டுச் சிறப்பித்தார்.

வே.ஆனைமுத்து, இராம்அவதேஷ் சிங் ஆகிய நாங்கள் இருவரும் தோழர்களுடன், 26.3.1979 முற்பகல் 11.30மணிக்கு இராசஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பிற்படுத்தப்பட்டோருக்கு மாநில அரசின் கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு கோரி பேரணி நடத்தினோம்; தொடர்ந்து சட்டமன்றத்தின் முன் ஆர்ப் பாட்டம் செய்தோம். எங்களை அழைத்துப் பேசிய அமைச்சர்கள் கோரிக்கையைக் கவனிப்பதாக உறுதி அளித்தனர். இரவு நாங்கள் இருவரும் ஜெய்ப்பூர் ஸ்வர்ணகார் சங்கத்தில் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை விளக்கிப் பேசினோம்.

நானும் இராம் அவதேஷ் சிங்கும், பிரதமர் சரண்சிங் அவர்களை தில்லியில் 25.9.1979இல் சந்தித்து எங்களது கோரிக்கை மனுவை அளித்தோம். மனுவைப் பெற்றுக் கொண்டு படித்த பின்னர் பிரதமர் எழுப்பிய அய்யங் களுக்கு நான் உரிய விளக்கங்கள் அளித்தேன். “நான் பரிசீலனை செய்வேன்” என்று பிரதமர் கூறினார்.

தொடர்ந்து, பிரதமர் சரண்சிங் வீட்டின் முன் 15.11.1979 முதல் 29.11.1979 வரை புதுதில்லியில் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தி நானும் இராம் அவதேஷ் சிங்கும் தோழர்களுடன் கிளர்ச்சி செய்தோம். 589 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். 810 பேர் கைது செய்யப்பட்டு விசாரித்து சிறைப் படுத்தப்பட்டு தண்டித்துப் பின்னர் விடுதலை செய்யப் பட்டனர். இவர்களில் க.தென்னன், ஆ.செ.தங்கவேலு, க.பாலசுப்பிரமணியம் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் ஆவர்.

இராம் அவதேஷ் சிங் அழைப்பை ஏற்று, நான் 1981 அக்டோபரில் பீகார் மாநிலம் சென்று மண்டல் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி பரப்புரைக் கூட்டங்களில் பேசினேன். இது பீகார் மாநிலத்தில் நான் மேற்கொண்ட இரண்டாவது பயணமாகும்.

மீண்டும் இராம் அவதேஷ் சிங்கின் அழைப்பை ஏற்று நான் 1987 மார்ச்சு முழுவதும் பீகாரில் தங்கி, மண்டல் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரி, பரப்புரைக் கூட்டங்களில் பேசினேன். இது பீகார் மாநிலத் தில் நான் மேற்கொண்ட மூன்றாவது பயணமாகும்.

1986 முதல் 1992 வரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தோழர் இராம் அவதேஷ்சிங்பதவி வகித்தார். நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் உறுப்பினர்கள் கூட்டுக் கூட்டத்தில், 12.3.1990இல் குடிஅரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் உரை நிகழ்த்தி னார். அவருடைய அந்த உரையில், மண்டல் குழுவின் பரிந்துரையான பிற்படுத்தப்பட்டோருக்கு மய்ய அரசின் கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்படுவது பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லாததைக் கண்ட மாநிலங்களவை உறுப்பினர், இராம் அவதேஷ் சிங் உடனே இடைமறித்து குடிஅரசுத் தலைவரின் உரையை நிறுத்துமாறு எதிர்ப்புத் தெரிவித்துத் தடுத்து விட்டார்.

இந்நிகழ்வு நேரலையாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது; வானொலியிலும் செய்தித் தாள்களிலும் பரப்பப்பட்டது. இந்நிகழ்வே பிரதமர் வி.பி.சிங் அவர்களின் கவனத்தை இடஒதுக்கீட்டின்பால் ஈர்த்தது; அடுத்த 5ஆவது மாதத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக் கீட்டு அரசாணையை வெளியிடுமாறு செய்தது. பிரதமர் வி.பி.சிங் 13.8.1990இல் மய்ய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்து ஆணை பிறப்பித்தார்.

அதை எதிர்த்து பாரதிய சனதாக் கட்சியின் சார்பில் அத்வானி ராமரதப் பயணம் நடத்தி, பிரதமர் வி.பி.சிங்கின் அரசுக்கு எதிராக மக்கள் கவனத்தைத் திசை திருப்பினார். ராமரதப் பயணத்தின் சூது பற்றி மக்களுக் குப் புரிய வைக்கவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கவனத்தை இடஒதுக்கீட்டுக்கான அரசாணையின்பால் ஈர்க்கவும் வே.ஆனைமுத்து, இராம் அவதேஷ் சிங், ம.ராசு ஆகிய மூவர் தலைமையில் தில்லியிலிருந்து 12.10.1990இல் புறப்பட்டு அரியானா நோக்கி ராசரதப் பயணம் புறப்பட்டது. இந்த இராச ரதம் 29.10.1990 மாலை சாம்பூ நகர எல்லையை ஒட்டிய மசூதியை அடைந்தபோது, இராம் அவதேஷ் சிங் தோழர்களுடன் கைது செய்யப்பட்டார்; சிறீகார் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கும் சில நாள் முன்னதாக நானும் ம.இராசுவும் தில்லிக்குத் திரும்பினோம்.

நான் இராசரதப் பயணத்தில் முழுதாகக் கலந்து கொள்ள முடியவில்லை. இடையில் 18.10.1990இல் நான் அவர்களிடமிருந்து விடைபெற்றுத் தமிழகம் வந்து விட்டேன்.

சிறீகார் மாவட்டச் சிறையிலிருந்து 1.11.1990 ஆம் நாள் இராம் அவதேஷ் சிங் எனக்கு ஓர் உருக்கமான நீண்ட மடலை எழுதினார். அதில் அவர் எடுத்துக் காட்டிய இந்தியாவின் சமுதாய, அரசியல் நிலைமை இன்றைக் கும் மாறாமல், மாற்றப்படாமல் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவருடைய மடலின் அந்த வரிகளை அப்படியே தமிழில் தருகிறேன்; படியுங்கள்:

“கண்மூடித்தனமான மதத்தின் பெயரால் இதற்கு முன் இந்த நாடு கண்டிராத அளவில் காட்டுமிராண்டித் தனத்தை உருவாக்கிடப் பார்ப்பன, பனியா கும்பல் முயல்வதாகவே நான் கருதுகிறேன். வடஇந்தியாவில் பார்ப்பனியம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முரண்பட்ட நிலைகளில் இருப்பவர்களிடமிருந்து பார்ப்பனிய நஞ்சு கக்கப்படுகிறது.

இவர்களுக்கு இடையே தொடர்பு இருப்பது வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் உள்ளார்ந்த புரிதலுடனும் நெருங்கிய ஒற்றுமையுடனும் பார்ப்பனர்கள் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். அரசியல், சமூகம், மதம் ஆகிய எல்லாத் துறைகளிலும் உள்ள எல்லாத் தலைவர்களும் ஒரே தன்மையில் சிந்தித்து ஒற்றுமையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஆட்சியில் சிறிய பதவி கிடைக்க வேண்டும் என்ற அற்பத்தனமான பேராசை யால் பிற்படுத்தப்பட்டவர், பட்டியல் வகுப்பினர், பழங் குடியினர், மதச்சிறுபான்மையினர் ஆகியோரின் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுப் பிளவுண்டு கிடக்கின்றனர்; இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் இந்தத் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயல்பட்டிருப்பின் எதிர்ச் சக்தியாக எழுந்துள்ள இராம ரதத்தை முறியடித்திருப்பார்கள்; நம் இராச ரதத்தை ஆதரித்து இருப்பார்கள்.

இராம் அவதேஷ் சிங், 1.11.1990இல் சிறையிலிருந்து எனக்கு எழுதிய மடலில் சுட்டிக் காட்டியிருக்கின்ற இந்திய அளவிலான சமுதாய, அரசியல் நிலைமைகளே 2020ஆம் ஆண்டிலும் நிலவுகின்றன என்கின்ற உண்மை நிலையைக் கருத்தில் கொண்டு நாம் செயல்பட்டு பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு வகுப்புவாரி விகிதாசாரப் பங்கு பெறப் பாடுபடுவதன் மூலம் சமுதாயத்தின் எல்லா வகுப்பு மக்களுக்கும் விகிதாசாரப் பங்கு பெற வழி காண்போம் வாருங்கள்!

 - வே.ஆனைமுத்து

Pin It