இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 17ஆவது பகுதியில் விதி 343 பின் வருமாறு கூறுகிறது. இந்திய அரசின் அலுவல் மொழியாக தேவநாகரி எழுத்து வடிவிலான இந்தி இருக்கும் என்று கூறுகிறது.
இதன் பொருள் இந்திய மத்திய அரசின் கீழ் உள்ள எல்லா அலுவலங்களிலும் அஞ்சல்துறை, தொடர் வண்டித்துறை, தொலைப்பேசித்துறை, சுங்கத்துறை, வருமானவரித்துறை, கப்பல் போக்குவரத்துத்துறை, வானூர்தி போக்குவரத்துத் துறை முதலான துறைகளின் அலுவலங்களில், 1965-முதல் இந்தி அலுவல் மொழியாக இருக்கும் என்பதே ஆகும். இதன்படி தமிழ்நாட்டில் உள்ள மேற்கண்டத்துறைகளைச் சார்ந்த எல்லா அலுவலங்களிலும் இப்போது அலுவல் மொழியாக உள்ள ஆங்கிலம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் இந்தி அலுவல் மொழியாக அமுல்படுத்தப்படும்.
இதேபோல் இந்தியா முழுவதிலும் எல்லா மாநிலங்களிலும் அவரவர் மாநில தாய்மொழி அலுவல் மொழியாக இருப்பதற்கு மாறாக எல்லா மாநிலங்களிலும் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக நடப்புக்கு வரும். இது பல்வேறு மொழிகளும் பல்வேறு தேசிய இனங்களும் உள்ள இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் எல்லா மக்களுக்கும் உள்ள தாய் மொழி உரிமையைப் பறிப்பதாகும்.
(Official Language) இந்திய அலுவல் மொழிச் சட்டம், என்பது உண்மையில் இந்தியத் தாய்மொழிகளை அலுவல் மொழியாக இருக்காமால் அகற்றிவிட்டு அன்னிய மொழியான ஆங்கிலத்தைத் தொடர்ந்து அலுவல் மொழியாக இருக்க வழி செய்வதாகும். இதை ஆச்சாரியார் எப்போதும் ஆங்கிலமே ஒருபோதும் இந்தி வேண்டாம். Hindi Never English Ever என்கிற முழக்கத்தை முன்நிறுத்தி தமிழர்களையும் திராவிட முன்னேற்றக் கழகத்தினரையும் ஏமாற்றிவிட்டார். மறைமுகமாகப் பார்ப்பன ஆதிக்கம் இந்தியா முழுவதும் நீடிப்பதற்குத் தந்திரமாக ஆச்சாரியார் ஏற்பாடு செய்து விட்டார். தந்தை பெரியார் அவர்களும் அறிவியல் வளர்ச்சி வளர்ந்திருக்கிற மொழியாக ஆங்கிலம் இருப்பதால் எல்லா அறிவியல் கலைகளையும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்புச் செய்யுங்கள் என்று சொல்லுவதற்கு மாறாக - பிறழ உணர்தல் என்கிற குறைபாட்டுக்கு ஆளாகி Perverted understanding ஆங்கிலமே படிப்பு மொழியாக, வீட்டுமொழியாக இருக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது தவறே ஆகும்.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அவனவன் தாய்மொழியிலேயே எல்லாக் கல்வியையும் கற்க வேண்டும். எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியே மய்ய அரசு அலுவலங்களில் அலுவல் மொழியாக இருக்க வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் அரசியல் சட்டம் 17ஆவது பகுதியின் கீழ் உள்ள விதிகள் 343 - 351 முடிய உள்ள எல்லா விதிகளும் அடியோடு திருத்தப்படவேண்டும். இது எழுதுவதற்கும் சொல்வதற்கும் அச்சம் தரும் நிலைப்பாடே ஆகும். ஆனால் இதுதான் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் தேர்ந்த முடிவாகும்.
இந்திய துணைக்கண்ட அளவில் நேரடி நடவடிக்கை எடுத்து, இந்தி பேசாத மாநில மக்களை ஒன்றாகத் திரட்டினாலோழிய இதற்கு நாம் விரும்புகிற தீர்வு கிடைக்காது என்று மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் திடமாக கருதுகிறது.
இந்த நிலைப்பாட்டைப் பற்றி தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்ப் பெருமக்கள் நடுநிலையில் நின்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மேலே கண்ட கருத்துக்களை விளக்கியும் இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத்திணிப்பு ஆகியவற்றைக் கண்டனம் செய்தும் 2017 சூன் 12 திங்கட்கிழமை அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகில் உள்ள திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அருள் கூர்ந்து. திராவிடத் தேசிய, தமிழ்த் தேசிய இயக்கத்தினரும் தமிழ்ப் பெருமக்களும் கட்சி வேறுபாடு கருதாமல் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.