மார்க்சும் - எங்கல்சும் 1848இல் முதன் முதலாகத் தம் கொள்கைகளை அறிவித்தனர். அது கம்யூனிஸ்ட் அறிக்கை (Communist Manifesto) என அழைக்கப்படுகிறது.
மூலதனக் குவிப்பு என்பது உழைப்பாளி யின் உழைப்பு நேரத்தில் அவருக்குச் சேரவேண்டிய முழு உழைப்புக்குரிய கூலி கொடுக்கப்படாமல், உழைப்புநேரத்தில் பெரும்பகுதிக்கான கூலியை நிறுவனத் தின் உரிமையாளரே திருடிக் கொள்ளையடித்துக் கொண்டதால் குவிந்ததே அவருடைய செல்வம் என்பதை உறுதிசெய்து, அந்த அறிக்கை அறிவித்தது.
அத்துடன் உலக வரலாறு (அ) மானிடப் போராட்ட வரலாறு என்பது சுரண்டுவோர்க்கும் - சுரண்டப்படுவோர்க்கும் இடையே இடையறாது நடந்த போர்களின் ஒட்டுமொத்த வரலாறுதான் - அந்த வரலாற்றை, அதனால் அமைந்த சமூக அமைப்பை அடியோடு மாற்றி அமைத்திடப் போராடுவதே மார்க்சியர்களின் குறிக்கோள் எனவும், 1848இல் மார்க்சும் - எங்கல்சும் வெளியிட்ட பொதுவுடைமை அறிக்கை கூறியது.
ஒரு நாடு அல்லது தேசத்திலுள்ள எல்லா வகை உற்பத்திச் சாதனங்களும் இயற்கை வளங்களும் சமூகத்தின் உடைமையாக ஆக்கப்பட்டால்தான் - அதற் கான அரசை அந்த நாட்டில் அமைத்தால்தான் அந்தக் குறிக்கோளை அடைய முடியும் என்பதை, உலக வரலாற்றில், முதன்முதலில், 7-11-1917இல் இரஷ்ய தேசத்தில் நிலைநாட்டிக் காட்டியவர்தான் புரட்சியாளர், வி.இ.லெனின்.
இரஷ்ய நாட்டில் சுரண்டப்படுவோரான ஆலைத் தொழிலாளர்களும், குறு, சிறு வேளாண் நில உடைமையாளரும், சொந்த நிலம் அற்ற வேளாண் கூலிகளும்; குறு, சிறு தொழிற் சாலைக்காரர்களும்; இரஷ்யன் மொழி அல்லாத வெவ்வேறு தேசிய மொழிகளைப் பேசு வோரும் ஆன பெருங்கூட்டத்தாரை ஒன்று திரட்டினால்தான் இரஷ்யாவில் புரட்சி வெல்லும் என்பதை 1907க்கும் 1914க்கும் இடையே, தம் பட்டறிவால் இலெனின் கண்டார்.
மார்க்சியத் தத்துவத்தை வடிவமைத்த மார்க்சும் - எங்கல்சும் தந்த “அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!” என்ற முழக்கத்துடன் “தொழிலாளர்களே! சிறு விவசாயிகளே ஒன்று சேருங்கள்!”
“ஒடுக்கப்பட்ட தேசியஇன மக்களே ஒன்று சேருங் கள்!” என்ற புதிய இரண்டு போராட்ட முழக்கங்களை யும் சேர்த்து முழங்கினார், இலெனின். ஏன்?
1905இல் தொடங்கப்பட்டு 1907இல் தோற்றுப் போன முதலாவது புரட்சியின் பட்டறிவு காரண மாகவே அன்றைய இரஷ்யாவில் இருந்த மேலே கண்ட சமூக அமைப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளச் செய்தது. இலெனின் அதைச் செய்தார்.
அதனால்தான் – “Workers of All Countries” என, மார்க்சும் - எங்கல்சும் தந்த முழக்கத்துடன், “Workers and Peasants, Unite” என்னும் இரண்டாவது முழக்கத்தை உருவாக்கினார்.
அன்றைய இரஷ்யா பெரிதும் வேளாண்மை சார்ந்த நாடாகவே இருந்தது.
தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக இருந் தோர், சில இலக்கம் பேர்.
குறு, சிறு விவசாயிகள் பல கோடி பேர்.
குறு, சிறு விவசாயிகளும் தொழிலாளர்களோடு சேர்ந்தால் புரட்சிக்கு வேண்டிய பெரும்படை உருவாகி விடும் என உணர்ந்தார் இலெனின்.
அன்றைய இரஷ்யாவிலும், இன்றைய இரஷ்யாவிலும் இரஷ்யமொழி பேசுவோர், சிறுபான்மையினர், இரஷ்யாவில் மற்ற மொழிகளைப் பேசுவோரை, புரட்சிக்குப்பின் அமைக்கப்படப்போகும் அரசு, தங்கள் தங்கள் மொழிக்குச் சமமான - ஒத்த உரிமையைத் தராமல் அடக்கி ஆளும் என்கிற அச்சத்தை நீக்க வேண்டும் - புரட்சிக்கு முன்னரே நீக்கிட வேண்டும் எனத் தம் பட்டறிவால், இலெனின் கண்டார்.
எனவே, “All Oppressed Nations Unite!” என்னும் இன்னொரு புரட்சிமுழக்கத்தையும் இலெனின் தந்தார்.
இம்மூன்று முழக்கங்களும் பெரும்பான்மையான இரஷ்ய மக்களை - இலெனினின் பின்னால் அணி திரட்ட உதவின.
1917 நவம்பரில், இரஷ்யாவில், 10 நாள்கள் போராட்டத்தில் சோசலிசப் புரட்சியை அவர் வென்றெடுத்தார்.
“நிரந்தரமான புரட்சி - அனைத்து நாடுகளி லும் ஒரே நேரத்தில் புரட்சி வரவேண்டும்” என்ற கோட்பாட்டை முன்னிறுத்தியவர், மேதை டிராட்ஸ்கி.
ஆனால், ஒரே நாட்டில் கூட, சோசலிசப் புரட்சி வெல்லும் என்பதை இரஷ்யாவில் செயல்படுத் திக் காட்டிவிட்டார், மாமேதை இலெனின்.
எப்படி? எதனால்?
அன்றைய இரஷ்யாவில் இருந்த குறு, சிறு விவசாயிகள் “குலாக்குகள்” (Kulaks) அல்லர் எனக் கண்டார். அவர்கள் ஆண்டில் ஆறு மாதம் வேளாண் பண்ணையில் கூலிக்கு வேலை செய்யும் பகுதிநேர வேளாண் தொழிலாளர்கள் எனக் கண்டு கொண்டார். அவர்களும் உழைக்கும் வகுப்பு என்பதை உறுதி செய்து கொண்டார்.
அதேபோல், அன்றைய இரஷ்யாவிலிருந்த குறு, சிறு வணிகர்கள் “பூர்ஷ்வாக்கள்” அல்லர் எனவும், அவர்கள் சொந்தமாக ஊதியம் தேடும் உதிரிப் பாட்டாளிகள் எனவும் கண்டார். அவர்களும் இணைந்தனர். சோசலிசப் புரட்சி வென்றது.
சமூகஅமைப்பு நிலைமைகள் எல்லா நாடு களிலும் ஒரே தன்iமையில் இருக்காது - இருக்க முடியாது-வேறு வேறு வடிவங்களில் இருக்கும் எனவும் துல்லியமாகச் சொன்னார், மாமேதை இலெனின். அது என்ன?
“மார்க்சியத் தத்துவம், அறிவியல் பார்வைக் கான அடிக்கல்லைப் பதித்துள்ளது.
சோசலிசவாதிகள் அந்தத் தத்துவத்தை எல்லாத் துறைகளிலும்-எல்லாத் திசைகளிலும் வளர்த்தெடுக்க வேண்டும்.
பொதுவான வழிகாட்டுக் கொள்கைகளைத்தான் மார்க்சியத் தத்துவம் கொண்டுள்ளது. குறிப்பாக, இங்கிலாந்தில் அந்தத் தத்துவத்தைச் செயல்படுத்து வதைப்போல் அன்றி வேறுபட்ட தன்மையில்தான் பிரான்சில் செயல்படுத்தமுடியும்; பிரான்சில் செயல் படுத்துவதைப் போலன்றி வேறுபட்ட தன்மையில் தான் செர்மனியில் செயல்படுத்தமுடியும்; இரஷ்யா வில் செயல்படுத்துவதுபோலன்றி வேறுபட்ட தன்மை யில்தான் செர்மனியில் செயல்படுத்தமுடியும். இரஷ் யத் தொழிலாளர் வர்க்கத்தின் இறுதி இலக்கு இரஷ்யாவில் தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தைக் கைப் பற்றுவதும், அங்கு ஒரு சோசலிச சமுதாயத்தைக் கட்டமைப்பதுமே ஆகும்.” (லெனின்-1899).
மேலேகண்ட செய்திகளின் வெளிச்சத்தில் பெரியாரியம், அம்பேத்கரியம் பற்றிய கோட் பாடுகளை - கொள்கைகளை இனி பார்ப்போம்.
1919 செப்டம்பர் முதல் 1925 நவம்பர் 22 வரை காங்கிரசுக் கட்சியிலிருந்த ஈ.வெ.ரா., காந்தியாரின் நிர்மாணத்திட்டங்களான 1) கள் ஒழிப்பு, 2) கதர் உற்பத்தி-விற்பனை, 3) தீண்டாமை ஒழிப்பு, 4) ஒவ்வொரு மக்கள் அமைப்பிலும் பார்ப்பனர் அல்லாதாருக்கு 50 விழுக்காடு பங்கு என்பவற்றை, காங்கிரசின் வேலைத் திட்டங்களாகக் கொள்ளப்பட முயன்றார்.
கள் ஒழிப்புக்காகத் தமிழகத்தில் - இந்தி யாவில் முதன்முதலாகப் போராடியவர் அவர்; கதர் வளர்ச்சி-விற்பனை இரண்டிலும் முதலாவது உழைப்பாளியாக இருந்தவர் அவர்.
“கோவில்களில் தீண்டாமையை ஒழித்திட காங்கிரசு திட்டம் தீட்ட வேண்டும்” என்ற அவருடைய தீர்மானத்தை ஏற்கமறுத்தது, திருப்பூரில், 1922 திசம்பரில் நடந்த தமிழ் நாட்டுக் காங்கிரசு மாநாடு.
மாநாட்டுத் தலைவர் வாசுதேவ அய்யர், எஸ்.சீனிவாச அய்யங்கார், சி.இராசகோபா லாச்சாரியார் ஆகியோர் அத்தீர்மானத்தை வன்மை யாக எதிர்த்தனர்.
அம் மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி அன்று மாலையில் நடைபெற்ற காங்கிரசுப் பொதுக்கூட்டத் தில், “மநுநீதி, இராமாயணம் இரண்டும் நால்வருண சமூக அமைப்பையும், தீண்டாமையையும், பாதுகாக் கின்றன. இவற்றை எரிக்கவேண்டும்” என்று, முதன் முதலாக ஈ.வெ.ரா பேசினார்.
1924இல் திருவண்ணாமலையில் நடை பெற்ற தமிழ்நாடு காங்கிரசு மாநாட்டிலும், பெல்காமில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரசு மாநாட் டிலும் - “பார்ப்பனரல்லாதாரின் சிறப்பான ஆட்சியை நீதிக்கட்சி நடத்துகிறது. அவர்களின் சாதனைகளைப் பொறுக்க மாட்டாத காங்கிரசுப் பார்ப்பனத் தலைவர்களின் சூழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டிக் காங்கிரசை அம்பலப்படுத்தினார்.
22-11-1925இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் மயிலாடுதுறை எஸ்.இராம நாதனும் தானும் இணைந்து முன்மொழிந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை காங்கிரசு மாநாடு தள்ளுபடி செய்தது. வெகுண் டெழுந்த ஈ.வெ.ரா, தம் குழுவினருடன் அன்றே - அங்கேயே காங்கிரசிலிருந்து வெளியேறினார்.
சென்னைமாகாணத்தில் நடைபெற்ற 1926 தேர்தலில் நீதிக் கட்சி தோல்வி அடைந்தது.
“பார்ப்பனரல்லாதாருக்குச் சுயமரியாதை - தன்மதிப்பு உணர்ச்சிகளை ஊட்டவேண்டும்” என விரும்பிய ஈ.வெ.ரா, 5-12-1926 முதல் தொடர்ந்து முயன்றார். எம்.டி.சுப்பிரமணிய முதலியார், ஏ.இராமசாமி முதலியார், பனகல் அரசர், ஊ.பு.அ.சௌந்தரபாண்டியன் ஆகி யோரின் ஒத்துழைப்புடன், 26-12-1926இல், மதுரையில் ஏ.பி.பாத்ரோ தலைமையில் நடை பெற்ற “நீதிக்கட்சி பத்தாவது மாகாண மாநாட் டில்”, பார்ப்பனரல்லாதார் விடுதலைக்காக “சுய மரியாதை இயக்கம்” தோற்றுவிக்கப்பட்டது.
அவ்வியக்கத்தின் முதன்மையான கொள்கைகள் நான்கு.
1. பார்ப்பனரல்லாதவரைவிடப் பிறவியால் உயர்ந்தவராக நினைக்கும் எவரையும் பார்ப்பனரல்லாதார் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக்கூடாது. 2. தீண்டாமை ஒழிப்பு, 3. பெண்ணடிமை ஒழிப்பு, 4. கதர் வளர்ச்சி.
1927 சூலையில் பெங்ளூரில் காந்தியாரை ஈ.வெ.ரா.வும், எஸ்.இராமநாதனும் நேரில் கண்டு பேசிய பிறகு, கதர் ஒழிப்பு, காங்கிரசு ஒழிப்பு, நால் வருண ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு இவற்றில் தீவிர நாட்டங்கொண்டார், ஈ.வெ.ரா.
1927இல் திருநெல்வேலியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் “சமதர்மம்” பற்றி முதன்முதலாக ஈ.வெ.ரா. பேசினார்.
1928 முதல் பார்ப்பனப் புரோகித ஒழிப் பில் தீவிர நாட்டங் கொண்டார் ஈ.வெ.ரா.
இந்தியாவில் 1947 வரையில் இந்துக்கள் 70%; முஸ்லிம்கள் 25%; சீக்கியர்கள் 2.0%; கிறித்துவர்கள் 2%; பார்சி, சமணர், பவுத்தர் 1% இருந்தனர். இந்துக்களுள் தென்னாட்டில் பார்ப்பனர் 3%, பார்ப்பனர் அல்லாதார் 85%.
மொத்த இந்துக்களில்-வருணத்துக்கு வெளியே உள்ள தீண்டப்படாதார் 12% பேராக இருந்தனர்.
தென்னாட்டு இந்துக்கள், மநுநீதிப்படி, பார்ப்பனர் - சூத்திரர் என்கிற இரண்டு வருணத்தாராகவும்; தீண்டப்படாதார் ஆகிய 3 பிரிவினர்களாகவும் உள்ளனர்.
பார்ப்பனர், சூத்திரர் தங்களுக்குள் சமூக சமத் துவம் இல்லாதவர்கள். தீண்டப்படாதார் - பாப்பனர், சூத்திரர் இரு சாதியராலும் சமூக சமத்துவ உரிமை மறுக்கப்பட்டவர்கள்.
26-12-1925இல், இந்தியாவில் நிறுவப்பட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, மேலே கண்ட சமூக அமைப்பில், பெரும்பான்மையின ரான சூத்திரர் என்கிற இழிந்த சாதியாகவும்; பெரிய சிறுபான்மையினரான தீண்டப்படாதாராகவும், வேத - ஆகம - சுருதி - ஸ்மிருதி -இதிகாச நெறிப் படியும், இந்துச் சட்டப்படியும் வைக்கப்பட்டு, அப்படியே நடத்தப்படுவது பற்றி என்ன நிலைப் பாட்டை மேற்கொண்டது? ஏன் மேற் கொள்ள வில்லை? என்பது சிந்தனைக்கு உரியது.
இந்தியாவில், புத்தருக்குப்பின் முதன்முதலாக வேதம், ஆகமம் - சாத்திரம் - வருண சாதி, உள் சாதி - கோத்திரம் - மூடநம்பிக்கை இவற்றை 1865இல் கண்டனம் செய்தவர் வள்ளலார் இராம லிங்க அடிகள். அடுத்து மகாத்மா சோதிபா புலே (1870), அ.வேங்கடாசல நாயகர் (1882), அயோத்தி தாசப் பண்டிதர் (1906), ஈ.வெ.ரா.(1922), மேதை பி.ஆர்.அம்பேத்கர் (1927).
இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளும் தன் மையில், பேரறிஞர் காரல் மார்க்சு, இந்தியாவைப் பற்றி, 10-5-1853இல், முதலாவதாக எழுதிய கட்டுரையில் - மநு ஸ்மிருதியில் பத்தாவது அத்தியாயத்தில் உள்ள சூத்திரத்தை மேற்கோளாகக்காட்டி, “மேல்சாதி மக்களுக்குக் கீழ்ச்சாதி மக்கள் எந்தப்பயனும் கருதாமல் தொண்டூழியம் செய்யும்படி விதிக்கப்பட்டிருப் பதையும் - அப்படிச்செய்தால் மோட்சம் அடையலாம் என அவர்கள் நம்புகின்றனர்” என்று கூறப்பட்டிருப் பதையும் கண்டனம் செய்துள்ளார் என்பது போற்றத் தக்கதும் பாராட்டத்தக்கதும் ஆகும். (“மூலதனம்-” CAPITAL - VOLUME-II)
மேதை அம்பேத்கர், 1927இல் மகத் குளத்தில் தீண்டப்படாதார் குடிநீர் அள்ளும் போராட் டத்தின்போது, மநுஸ்மிருதிக்குத் தீயிட்டார்.
பெரியார் ஈ.வெ.ரா. நால்வருணம், பழக்க வழக்கச் சட்டம் இவற்றுக்குப் பாதுகாப்புத் தரும் இந்திய அரசமைப்புச்சட்ட விதிகளைத் தனித்தாளில் அச்சிட்டு, 26.11.1957இல் எரித் தார்; 3000 பேரைச் சிறைக்கு அனுப்பினார். இவ்வளவையும் நேரில் கண்ட பொதுவுடைமைக் கட்சியின் கற்றறிந்த தலைவர்கள் இவற்றைப் பற்றி என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ள னர் என்று சொல்லாதது வருத்தத்திற்கு உரியது.
மேலும், வகுப்புவாரி விகிதாச்சார இட ஒதுக்கீடு என்கிற கொள்கைப்படி, சென்னை மாகாணத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு அவரவர் வகுப்புக்கு ஏற்ற விகி தாச்சாரம் அளிக்கவேண்டும் என்பதை வலி யுறுத்தியும்; நீதிக்கட்சி ஆட்சியினர் சமூகத் திலும் கல்வியிலும் பின்தங்கிய சாதிகளுக்குத் தனி இடஒதுக்கீடு கொடுக்காத அநீதியைக் கண்டித்தும், 1934-இல் “குடி அரசு” இதழில் ஈ.வெ.ரா. கண்டனம் தெரிவித்து எழுதினார்.
அவருடைய மேலேகண்ட கோரிக்கையை, 1935-இல், நாகை முருகேசன் அவர்களால் வெளி யிடப்பட்ட “புதுஉலகம்” என்னும் ஏட்டின் முதலாவது இதழில் மாமேதை ம.சிங்கார வேலர் கண்டனம் செய்தார்.
“சாதியை ஒழிக்கவேண்டும் என்கின்ற ஈ.வெ.ரா. சாதியின்பேரால் இடஒதுக்கீடு கேட்பது முரணானது” என்று கூறியே, அப்படிக் கண்டித்தார்.
நீதிக்கட்சி ஆட்சி அளித்த வகுப்புவாரி உரிமைக் கொள்கையின்படி பார்ப்பனர், பார்ப் பனரல்லாதார், இசுலாமியர், கிறித்துவர் மற் றும் ஆங்கிலோ இந்தியர், ஆதித் திராவிடர் என்கிற வகுப்புகளின் அடிப்படையில்தான் ஒதுக்கீடு வழங்கப்பட்டதே அன்றி, ஒவ்வொரு உள்சாதிக்கும் சாதி அடிப்படையில் வழங்கப் படவில்லை என்பதை, மேதை சிங்காரவேலர் அறிந்திருந்தார் எனினும், பிறழ உணர்தல் (Perverted understanding) என்கிற கண்ணோட் டத்தில், மேதை சிங்காரவேலர் அப்படிக் கரு தினார் என்றே நாம் நினைக்கிறோம்.நிற்க.
இந்தியாவில் “நாடு”, “நாட்டரசு”, “இந்திய அரசு” என்று இருப்பது “ஒற்றை இந்திய அரசு” மட்டுமே.
இந்திய அரசுத்துறைப் பணிகளில் சென்னை மாகாண எல்லைக்குள் இருக்கிற எல்லாத் துறை களிலும் பார்ப்பனருக்கு 16%, பார்ப்பனர் அல்லாதாருக்கு 44%, இசுலாமியருக்கு 8%, கிறித்தவருக்கு 8%, ஆதித்திராவிடர்களுக்கு 16%, இதர சிறுபான்மை மதத்தினருக்கு 8% என்கிற விகிதத்தில் பெரியர் ஈ.வெ.ரா.வும், பொப்பிலி அரசரும் சர்.ஏ.இராமசாமி முதலியாரும், டாக்டர் ஏ.கிருஷ்ணசாமியும் முயன்று, 1935இல், பெற்றுத் தந்தனர். இந்த வரலாற்று உண்மையை எல்லாக் கட்சியினரும் மலைமீது நின்று சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆவர்.
அடுத்து, இரண்டாம் உலகப் போர்க்காலத் தில் அமைக்கப்பட்ட போர்க்கால அமைச்ச ரவையில் ஒரு கேபினட் அமைச்சராக மேதை அம்பேத்கர் அமர்த்தப்பட்டார். அவர் அனைத் திந்திய அரசுப்பணிகளில் பட்டியல் வகுப்பினருக்குத் தனியே 12.5% ஒதுக்கீடு கோரி, அரசப் பிரதிநிதியிடம் (Viceroy) கோரிக்கை வைத்தார். அதைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டு, மய்ய அரசின் அலுவலகங்களில் மட்டும் 11-8-1943இல் 8.33% விழுக்காடு பட்டியல் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு செய்து ஆணை அளிக்கப்பட்டது.
இவ்வளவு நீண்டகாலமாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டும், இன்றைய இந்தியாவில் 19% உள்ள பட்டியல் வகுப்பினருக்கு, 2016 கணக்குப்படி, 13% அளவுக்கே இந்திய அரசுப் பணிகளில் இடம்பெற்று உள்ளனர் என்பது மிகமிக இழிந்த நிலையாகும்.
“கல்வியிலும் சமூகத்திலும் பிற்படுத்தப்பட் டோர் யார்?” என்கிற பட்டியல் இல்லாத நிலையில், அப்படி ஒரு பட்டியலை இந்திய அரசு உருவாக்கித்தரவேண்டும் என்று விரும்பி, மேதை அம்பேத்கர் 1949ஆம் ஆண்டில் 340 ஆம் விதியை எழுதினார். அரசமைப்புச் சட் டம் 26-1-1950இல் நடப்புக்கு வந்துவிட்ட நிலையில், பார்ப்பனரான பிரதமர் பண்டிதர் நேரு, 1953 இல் தான் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை உருவாக்கும் ஆணையத்தை அமைத் தார். காகா கலேல்கர் தலைமையில் அமைந்த அந்த ஆணை யம் தமது அறிக்கையையும் பரிந் துரைகளையும் 1955இல் பிரதமர் நேருவிடம் அளித்தது.
காகா கலேல்கர் உருவாக்கிய உள்சாதிப் பட்டியலில் - பார்ப்பனர்களில் ஏழைகளாக உள்ள பிரிவினரையும் அறிக்கையில் சேர்க் காத காரணத்தால், அந்த அறிக்கையை உடனே அமல்படுத்த பிரதமர் நேரு முன்வரவில்லை.
ஆனால், குதிரை கீழே தள்ளியதும் அல் லாமல் குழியும் பறித்த கதையாக, பிரதமர் நேரு 1961 மே திங்களில் மய்ய அரசு அமைச்ச ரவையைக் கூட்டி, “காகா கலேல்கர் அளித்த சாதிப் பட்டியலை மய்ய அரசு ஏற்கவில்லை எனவும், பிற்படுத்தப்பட்டோருக்கு மய்ய அரசில் இடஒதுக்கீடு கொடுக்கப்படமாட்டாது என வும்” தீர்மானம் நிறைவேற்றினார். அத்துடன் நில்லாமல் அப்போதைய எல்லா மாநில முத லமைச்சர்களுக்கும் கமுக்க மடல் (Demmy Official Letter) எழுதி, “எக் காரணத்தைக் கொண்டும் அந்தந்த மாநிலப் பிற்படுத்தப் பட்டோருக்குச் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது” என்றும், “அவர்களுக்கு ஏதாவது உதவிஅளிக்க விரும்பினால் பணஉதவி அளிக்கலாம்” என்றும் அறிவுறுத்தினார். இந்தச் செய்தியை, அப்போதே முத லமைச்சர் கு.காமராசர், கோட்டையில் வே.ஆனை முத்துவிடம், மறைமுகமாகத் தெரிவித்தார். இது உண்மை.
மண்டல் குழு அமைக்கப்பட மார்க்சியப் பெரி யாரியப் பொதுவடைமைக் கட்சியும், பீகார் மாநிலப் பிற் படுத்தப்பட்டோர் பேரவையும் இணைந்து முறையே வே.ஆனைமுத்து, இராம் அதேஷ் சிங் எம்.பி ஆகியோர் தலைமையில் பீகாரில் போராடியது ஒன்றே காரணமாகும்.
மண்டல் குழு அறிக்கையை நாடாளுமன் றத்தில் வெளியிடுவதற்கும், நடப்புக்குக் கொண்டு வருவதற்கும் அப்போதைய உள்துறை அமைச் சர். கியானி ஜெயில்சிங்கிடம் 4-3-1982இல் வே.ஆனைமுத்து வைத்த கோரிக்கையை ஏற்று, அன்று மாலையே “மண்டல்குழு அறிக்கையை அரசு நாடாளுமன்றத்தில் வெளியிடும்” என்று அறிவித்தார். அதைப் பொறுத்துக்கொள்ள முடி யாத பிரதமர் இந்திராகாந்தி, கியானி ஜெயில் சிங்கை உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கி, எந்த அதிகாரமும் இல்லாத குடிஅரசுத் தலைவராக ஆக்கினார்.
எதிர்பாராத தன்மையில், 1989இல் பிரதமராகப் பொறுப்பேற்ற வி.பி.சிங் அவர்கள், எம் ஒடுக்கப்பட்டோர் பேரவையின் அனைத்திந் தியத் தலைவர் இராம் அவதேஷ்சிங், மாநிலங் களவையில் அன்றாடம் இடஒதுக்கீடு பற்றி எழுப்பிய கோரிக்கையை நெஞ்சில் கொண்டு, 6-8-1990இல், மய்ய அரசின் வேலையிலும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27ரூ ஒதுக்கீடு அளித்து அறிவித்தார். அது 1994இல் தான் நடப்புக்கு வந்தது.
இந்திய அளவில் 57% உள்ள - எல்லா மதங் களையும் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோருக்கு அனைத்திந்திய ஆட்சிப் பணியில் 2016ஆம் ஆண்டின் கணக் குப்படி 6% மட்டுமே இடஒதுக்கீடு கிடைத்துள்ளது என் பது எல்லோரும் நாணப்படவேண்டிய நிலையாகும்.
இவ்வளவு செய்திகளையும் நேரில் கண்டறிந் துள்ள பொதுவுடைமைக் கட்சியினர், நாடாளு மன்றத் தேர்தல் அரசியலில் ஈடுபட்டபின்ன ரும், அனைத்திந்திய அளவில் இது பற்றி இணக்கமான ஒரு கொள்கையினையும் வேலைத்திட்டத்தினையும் மேற்கொள்ளாதது தவறு அல்லவா என்று, அவர்கள் எல்லோரும் சிந்திக்கவேண்டு மாய் அன்புடன் வேண்டுகிறோம்.
மேலும், தமிழகத்தில் மார்க்சியப் பெரி யாரியப் பொதுவுடைமைக் கட்சியின் தனிப் பட்ட முயற்சியால், பிற்படுத்தப்பட்டோருக் கான ஒதுக்கீடு 50 விழுக்காடாக உயர்த்தப் பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கை பற்றியும்; கேரளாவில் 5 உள்சாதிகளுக்கு மட்டும் தனித் தனியாக விகிதாசார இடஒதுக்கீடு கல்வியிலும் வேலையிலும் அளிக்கப்படுவதையும், மீதமுள்ள 68 உள்சாதிகளுக்கு குறிப்பிட்ட விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படுவதையும் தெரிந் திருந்தும்-பொதுவுடைமைக் கட்சிகளின் ஆட்சி கள் நடந்த மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும், மற்ற வட மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 57% ஏன் வழங்கப்படவில்லை என்கிற வினாவை, அவரவர் சார்ந்த கட்சியின் இந்திய தேசியக் குழுவில் எழுப்பாமல் போனதும் - இருப்பதும், அந்தக்குறை நீக்கப்படப் பாடுபடா மல் போனதும் - இருப்பதும் சரியா என்பது பற்றியும்; இதில் இந்தியச் சமூக அமைப்பைப் பற்றிய மார்க்சிய-லெனினியர்கள் என்ன நிலைப் பாடு கொண்டுள்ளனர் என்பதையும் இனியேனும் வெளியிடுமாறும்; முன்னேறிய பிரிவினர் உள்ளிட்ட நான்கு வகுப்புகளுக்கும் விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு வந்து சேர இணக்க மான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரு மாறும் வேண்டுகிறோம்.
- வே.ஆனைமுத்து