fisherman 350திசம்பர் 25 கிறிஸ்துமஸ் நாளில் இக்கட்டுரை எழுதப் படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் தூத்தூர் பகுதியில் உள்ள எட்டு மீனவக் குடும்பங்களில் மட்டும் நவம்பர் 30 அன்று அதிகாலைத் தாக்கிய ஓகி சூறாவளிப் புயலால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களில் 104 பேர் மாண்டனர். 376 பேர் கரை திரும்பவில்லை. இம்மீனவ மக்கள் அனைவரும் கிறித்துவர்கள்.

கடலில் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று மீன்பிடிக்கும் இம்மீனவர்கள் கிறிஸ்துமஸ் விழாவைக் குடும்பத்தினருடன் கொண்டாடு வதற்காகத் திசம்பர் 23க்குள் வீடு திரும்புவது வழக்கம். அதனால் பெண்களும் குழந்தைகளும் தங்கள் குடும்பத் தலைவர்கள் கடலிலிருந்து கரை திரும்பிவிடுவார்கள் என்று கனத்த நெஞ்சத்துடன் காத்திருந்தனர். திசம்பர் 21 அன்று 47 மீனவர்கள் மட்டும் கரை திரும்பினார்கள். மற்றவர்கள் சூறாவளியால் படகுகள் தகர்க்கப்பட்டு, சில நாள்கள் கடலில் தத்தளித்து, பிறகு பிணமாக மிதந்து, மீன்களுக்கு இரை யாகி, தங்களுக்கு வாழ்வளித்து வந்த கடலிலேயே கரைந்து போய் இருப்பார்கள். எனவே கிறிஸ்துமஸ் நாளில் தூத்தூர் பகுதியின் வீடுகளில் பெண்களின் ஓயாத ஒப்பாரி ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

குமரி மாவட்டத்தின் 62 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையில் 48 மீனவக் கிராமங்கள் உள்ளன. இவ்வூர் களில் 80,000 பேர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மீனவர்கள் ஓரிரு நாள்களில் கடலிலிருந்து திரும்புவார்கள். ஆனால் குமரி மீனவர்களில் பெரும்பாலோர் அரபிக் கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அப்பால் சென்று மீன்பிடிப்பார்கள். 45 நாள்கள் வரையில் கடலில் இருப்பார்கள். இலட்சத்தீவுகள், டி-கோ கார்சியா தீவு, ஆப்பிரிக்கக் கண்டத்தில் வடக்குப் பகுதி, மேற்கு ஆசிய நாடுகள் ஆகிய கடற்பகுதிகள் வரையில் சென்று மீன்பிடிப் பார்கள்.

ஓகி புயல் தாக்கிய போது கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்ட மீனவர்களில் 400க்கும் மேற்பட்டவர் கள் காணாமல் போய்விட்டனர் என்று தமிழக அரசு சொல்கிறது. மீனவர்கள் சார்பில் 700க்கும் மேற்பட்டவர்கள் கரை திரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இத்தனை பேரின் சாவுக்கு யார் காரணம்? ஓகி சூறாவளியா? இல்லை! தமிழக அரசின் பொறுப்பற்ற போக்கும், இந்திய அரசின் தமிழினப் பகை உணர்வும் காரணங்களாகும்.

36 மணிநேரத்திற்கும் முன்பாகவே புயல் முன்னறி விப்பு செய்யக்கூடிய அளவிற்குத் தொழில்நுட்ப ஆற்றல் வளர்ந்திருக்கிறது. ஆனால் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் நவம்பர் 29 மாலை தான், 30ஆம் நாள் அதிகாலையில் புயல் வீசும் என்று அறிவித்தது. ஆனால் தமிழ்நாட்டின் தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப்ஜான் நவம்பர் 29 அன்று பகல் 11.30 மணிக்கே புயல் பற்றிய எச்சரிக்கையை வெளியிட்டார். இது வெகுமக்களைச் சென்ற டைய வாய்ப்பில்லை. தமிழ்நாடு அரசு நவம்பர் 29 மாலை 6 மணிக்குக் குமரி மாவட்ட மீனவக் குப்பங்களில் புயல் பற்றிய அறிவிப்பைச் செய்து, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்தது. ஆனால் நவம்பர் 29 அன்று பகலிலேயே விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுவிட்டனர்.

மீனவர்களிடம் உள்ள ஒயர்லெஸ் கருவிகள் 20 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே தொடர்பு கொள்ளக் கூடிய திறன் கொண்டவை. கடலில் 50 கி.மீ.க்கு அப்பால் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்குப் புயல் குறித்து எச்சரிக்கை செய்திருந்தால் அவர்கள் அருகில் உள்ள குட்டித் தீவுகளில் கரை ஒதுங்கியிருப்பார்கள். சூறாவளியின் கடுந்தாக்கு தலிலிருந்து தப்பி இருப்பார்கள். ஆனால் இதற்கான ஏற் பாடுகள் ஏதும் நடைமுறையில் இல்லை என்பது மீனவர் களின் உயிரை அரசுகள் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்பதையே காட்டுகிறது.

சிங்கள மீனவர்கள் வளைகுடாக் கடல் பகுதியிலிருந்து தங்கள் குடும்பத்துடன் பேசிக் கொள்ளும் வகையில் அவர் களுக்குச் சாட்டிலைட் தொலைப்பேசிகளை அனுமதித்திருக்கிறது சிங்கள அரசு. குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலில் பல நாள்கள் மீன்பிடித் தொழில் செய்வதால், கடலோரக் காவல் படையின் கப்பல்களுடன் சாட்டிலைட் அலைவரிசை மூலம் தொடர்பு கொள்ளக்கூடிய கைப்பேசிக் கருவிகளைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாகக் கோரி வந்தனர். தேசப் பாதுகாப்புக்கு இது எதிராகப் பயன் படுத்தப்படக் கூடும் என்ற காரணத்தைக் காட்டி மீனவர்களின் இக்கோரிக்கை மறுக்கப்பட்டது. கடலில் நெடுந்தொலைவில் உள்ள மீனவர்களுடன் கடலோரக் காவல் படையின் கப்பல்களிலிருந்து தொடர்பு கொள்ளும் வசதி இருந்திருந்தால், ஓகி புயல் குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்திருக்க முடியும். அவர்களின் உயிரையும் படகுகளையும் காப்பாற்றி இருக்க முடியும்.

புயலின் தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்து நவம்பர் 30 மாலையும், திசம்பர் முதல் நாள் அன்றும் கரை திரும்பிய குமரி மீனவர்கள், 250க்கும் மேற்பட்ட படகுகளில் நடுக் கடலில் மீனவர்கள் தத்தளித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களைக் காப்பாற்றுமாறும் கடலோரக் காவல் படையி னரிடம் மன்றாடினர். 3.12.2017 அன்று துணை முதல மைச்சர் பன்னீர்செல்வமும் மற்ற இரண்டு அமைச்சர்களும் நாகர்கோயிலுக்கு வந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்திக்காமல் அதிகாரிகளுடன் மட்டும் பேசிவிட்டுத் திரும்பிவிட்டார்கள். அதே நாளில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குமரிக்கு வந்தார். கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மீனவர்களைக் காப்பாற்ற உடனே நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள், நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தினார்கள். ஆனால் நிர்மலா சீதாராமன் உருப்படியாக எதையும் செய்யவில்லை.

நவம்பர் 30 அன்று ஓகி புயல் தாக்கியது. சூறாவளியால் படகுகள் தகர்க்கப்பட்டு, அவற்றின் உடைந்த பாகங்களைப் பிடித்துக் கொண்டு தத்தளித்த மீனவர்களால் மூன்று, நான்கு நாள்கள் மட்டுமே தாக்குப்பிடித்து உயிர் வாழமுடியும். அதற்குள் இந்திய அரசின் கடலோரக் காவல் படையும், கடற்படையும் வானூர்திகளும் அவர்களைத் தேடிக் கண்டு பிடித்துக் காப்பாற்றியிருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசு இத்தகைய நடவடிக்கை எதையும் எடுக்காமல் நடுக்கடலில் தமிழ் மீனவர்கள் துடிதுடித்துச் சாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

kanniyakumari fisherman 600குமரியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணா நிலைப் போராட்டம், குழித்துறை தொடர்வண்டி நிலையத்தில் பத்து மணிநேரம் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் என்று தங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய பிறகுதான் கடலோரக் காவல் படையின் கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் 60 கடல் மைல்களுக்கு அப்பால் செல்வதற்குத் தங்களுக்கு அனுமதியில்லை என்று கடலோரக் காவல் படையினர் கூறி, அதற்கு அப்பால் ஆழ்கடல் பகுதியில் உள்ள மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட மறுத்து விட்டனர். அதேபோல் ஒன்றரை மணிநேரம் பறக்கக்கூடிய எரிபொருள் மட்டுமே கொண்டுள்ள ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. எனவே இந்திய அரசின் தேடுதல் பணி என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருந்தது.

இந்திய அரசு உண்மையான அக்கறையுடன் இருந்தி ருக்குமானால் விமானந்தாங்கிய கப்பல்களை உடனடியாக ஆழ்கடல் பகுதிக்கு அனுப்பி குமரி மீனவர்களைத் தேடி மீட்டிருக்க வேண்டும். ஆழ்கடல் பரப்பில் ஒரு சதுர மீட்டர் பகுதியில் என்ன இருக்கிறது என்பதைச் சாட்டிலைட் மூலம் கண்டறியும் தொழில்நுட்ப ஆற்றல் இந்தியக் கடற்படைக்கு இருக்கிறது. ஆனால் இந்த ஆற்றலைiப் பயன்படுத்தி ஆழ்கடலில் சூறாவளியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தமிழ் மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும் கவலையும் இந்திய அரசுக்கு இல்லை என்பதே கொடிய உண்மையாகும். திசம்பரில் நடந்த உலக வணிக அமைப்பு மாநாட்டில் மீனவர்களுக்கு அளிக்கப்படும் அனைத்து மானி யங்களையும் நிறுத்திவிடுவதாக இந்தியா ஒப்புக்கொண்டது. இதனுடைய நோக்கம் தமிழக - இந்திய மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலைப் பன்னாட்டு நிறுவனங் களுக்குத் தாரை வார்ப்பதேயாகும்.

குமரி பகுதியைத் தாக்கிய ஓகி புயல் அரபிக் கடலில் வடதிசை நோக்கிச் சென்றதால், அரபிக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவர்களின் படகுகள் திசைமாறி அடித்துச் செல்லப்பட்டு, கோவா, மகாராட்டிரம், குசராத் கடற்கரைகளில் ஒதுங்கின. இவ்வாறு படகுகள் சேதமடைந்து கரை ஒதுங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பிட, கடலோரக் காவல் படையினர் உதவினார்கள். ஆனால் இந்திய அரசு இம்மீன வர்களை நடுக்கடலிலிருந்து கடலோரக் காவல் படையினர் மீட்டதாகப் பொய்யான அறிக்கையை வெளியிட்டது.

குமரி மாவட்டத்தை ஓகி புயல் தாக்கியதில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் தென்னை, வாழை, இரப்பர், பலா முதலான மரங்கள் அடியோடு சாய்ந்தன. மின் கம்பங்கள்  அனைத்தும் அடியோடு வீழ்ந்தன. வீடுகள் பெருமளவில் சேதமாயின. ஆனால் நான்கைந்து நாள்கள் வரையில் கிராம நிர்வாக அலுவலர்கள்கூட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லவில்லை.

புயலுக்கு முன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற வர்கள் எத்தனை பேர், புயலுக்குப்பின் கரை திரும்பியவர்கள் எத்தனை பேர், கரை திரும்பாதவர் எத்தனை பேர், இறந்த வர்கள் எத்தனைப் பேர் என்கிற விவரத்தைக் கண்டறிவதில் கூட தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. மாறாக முதல மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவதிலும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பரப்புரை செய்வதிலும் மூழ்கியிருந்தார். கேரள மாநில அரசு இறந்த மீனவர்களுக்கு ரூ.20 இலட்சம் நிவாரணம் அறிவித்த பின், முதலமைச்சர் ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்ததுடன் தன் கடமை முடிந்து விட்டதாகக் கருதிச் சென்னையிலேயே முடங்கிக் கிடந்தார்.

முதலமைச்சர் குமரிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களைச் சந்திக்க வேண்டும் என்கிற நெருக்குதல் முற்றிய பிறகுதான் திசம்பர் 12 அன்று குமரிக்குச் சென்றார். தூத்தூர் கல்லூரி வளாகத்தில் மீனவர்களின் சில பிரதிநிதிகளை மட்டும் சந்தித்தார். இறந்த மீனவர் ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் ரூ.20 இலட்சம் இழப்பீடும் அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிப்பதாக அறிவித்துவிட்டுத் திரும்பிவிட்டார். இதைவிடக் கொடுமை, குமரியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நடுவண் அரசில் இணை அமைச்சராக இருப்பவருமான பொன். இராதா கிருட்டிணன் பத்து நாள்கள் கழித்துதான் புயலால் பாதிக் கப்பட்ட தன் தொகுதி மக்களைச் சந்திக்க சென்றார் என்பதாகும்.

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கடலுக்குச் சென்று திசம்பர் 31க்குள் கரை திரும்பாத மீனவர்கள் பற்றி துல்லியமாகக் கணக்கெடுத்து, அவர்களை இறந்தவர்களாக அறிவித்து, அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சம் நிதி உதவி அளிக்க வேண்டும். கடலில் காணாமல் போகும் மீனவர்களை ஏழு ஆண்டுகள் கழித்துதான் இறந்தவர்களாக அறிவிக்கும் நடைமுறை தற்போது இருக்கிறது. கன்னியா குமரி மாவட்டத்தில் 1992 முதல் 2016 வரையில் 188 மீனவர்கள் கடலில் காணாமல் போயிருக்கின்றனர்.

ஏழு ஆண்டுகள் கழித்து இறந்தவராக அறிவிக்கப்பட்ட பிறகுதான் நிவாரண உதவி பெறமுடியும் என்று இருக்கின்ற நிலையை ஒழிக்க வேண்டும். ஓகி புயலில் இறந்தவர்களைக் கணக் கெடுத்து அவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். இதில் ஊழல் நடைபெறாமல் தன்னார்வ அமைப்புகள் கண்காணிக்க வேண்டும். இறந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதை யும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

ஓகி புயல் பாதிப்பைத் தேசியப் பேரிடராக அறிவித்து, அதன் அடிப்படையிலான உதவிகளை நடுவண் அரசும் மாநில அரசும் வழங்க வேண்டும். ஓகி புயலால் கிட்டத்தட்ட ஆயிரம் மீனவர்கள் இறந்த நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க, மீனவர்களின் நீண்ட நாளையக் கோரிக்கையின்படி, சாட்டிலைட் மூலம் உடனுக்குடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒயர்லெஸ் கருவிகளை மீனவர்களுக்கு வழங்க வேண்டும். வானிலை முன்னறிவிப்புத் தொழில்நுட்பத்தை வளர்ந்த நாடுகளின் நிலைக்கு உயர்த்த வேண்டும்.

தென்னை, வாழை, இரப்பர் மற்றும் பிற பயிர்களின் இழப்புக்கு உரிய தொகையை உடனடியாக வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் துயரத்தை ஒட்டுமொத்தத் தமிழர்களின் துயரமாகக் கருதி, அவர்கள் மீண்டும் மறுவாழ்வு பெறும் வரையில் எல்லா வகையிலும் அவர்களுக்குத் துணையாக விளங்க வேண்டியது தமிழரின் கடமையாகும்.

Pin It