நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த நிகழ்வு. அப்போது எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தார். மைய அரசில் ராசீவ் காந்தி. கடும் மழை. சென்னை மூழ்கி விட்டது என்கிற நிலை. எம்ஜியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, நெடுஞ்செழியன் பொறுப்பு முதல்வராய் இருந்தார். நீர் சூழ்ந்த பகுதிகளில் மக்கள் உணவுக்கு தவித்தார்கள். மாநகராட்சி பொது அடுப்புகளில் சமைக்கப்பட்ட உணவினை கட்சிக்காரர்கள் கொடுக்க, இடுப்பளவு நீரில் நின்றுக்கொண்டு மக்கள் வாங்கினார்கள். கழிப்பிட வசதி ஏதும் இல்லை. திறந்த வெளிகளை மக்கள் தேடி அலைந்தார்கள். பரந்திருந்த நீரில் அவர்களுக்கு ஏது இடம். பெண்களின் நிலையை சொல்லவே வேண்டாம். இரவுதான் அவர்களுக்கு வசதியான நேரம் ஆனால் பாதுகாப்பான நேரமல்ல. மேயும் பாம்புகளுக்கு பயந்து திறந்த வெளிகளை பெண்கள் வெறுத்தார்கள், ஆயினும் கழிப்பதற்கு உயிரைப் பணயம் வைக்க வேண்டும். வைத்தார்கள்.

chennai flood 602

வெள்ளச் சேதங்களின் மதிப்பை யாரும் உறுதியாக அறிந்துக்கொள்ள முடியவில்லை. தினசரிகளும், ரேடியோவும்தான் சேதங்களைப் பற்றி அறிந்துக்கொள்ள வாய்ப்பளித்தன. ஆனால் அவை முற்றிலும் தணிக்கை செய்யப்பட்டவை. எனவே யாருக்கும் சரியான விவரம் தெரியவில்லை. மீட்பு பணிகளைப் பற்றின எல்லை எதுவென அதிகம் புரிதலில்லாதக் காலம். சில இடங்களில் தீயணைப்பு வீரர்கள் மட்டுமே மீட்பில் ஈடுபட்டார்கள் என்பதையும் அவர்களின் சாகசங்களையும் கதைகளாக வெள்ளம் முடிந்தப் பிற்பாடு மக்கள் பேசிக்கொண்டார்கள். எத்தனைப் பேர் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போனார்கள் என்கிற துல்லிய விவரங்கள் ஏதும் இல்லை. ஆனால் வெள்ளத்தின் பாதிப்பு கடுமையாக இருந்தது. அது மைய அரசுவரை எட்டியது. அப்போதுதான் பொறுப்பேற்றிருந்த ராஜீவ்காந்தி மழையின் சேதங்களைப் பார்வையிட சென்னை வந்தார். குறிப்பாக இன்றைய ஆர்கே நகருக்கு.

ராஜீவ் வருகின்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது. மழை குறைந்து சாலைகள் வற்றியிருந்தன. பேசின் பாலத்தை தாண்டி, சி.பி சாலை வழியாக பிரதமரின் பாதுகாப்பு வண்டிகளும், ஊடகங்களும் பெரிய கேமராக்களோடு குறுகிய சாலையை அடைத்துக்கொண்டுப் பறந்தன. ராஜீவ் காந்தியும் நெடுஞ்செழியனும் ஒரு திறந்த ஜீப்பில் நின்றபடி வந்தார்கள். நான் அந்த வண்டியுடனே ஓடினேன். திடீரென அந்த வண்டி நின்றது. ராஜீவ் மட்டும் இறங்கினார். அவர் இறங்கியதை ஓடியபடி இருந்த பாதுகாப்புப் படையினர் கவனிக்கவில்லை. அதற்குள் சாலையின் வலதுபுறம் தண்டவாளத்தை ஒட்டி இருந்த குடிசைகளின் குறுகிய சந்து ஒன்றில் ராஜீவ் நுழைந்தார். நான் அவர் பின்னால் ஓடினேன். அது மூன்றடி அகலமும் நாற்பது அடி அகலமும் கொண்ட சந்து. அங்கேயிருந்த குடிசைகள் நீரில் மூழ்கி இருந்தன. அடியில் சேறு. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வெண்ணிற காலணியோடு ராஜீவ் உள்ளே போய்விட்டார். அவர் பின்னாலே நான் ஓடினேன். அவருக்கு முட்டிவரை தண்ணீர். எனக்கு இடுப்புவரை. அந்த சந்தில் இருந்த கடைசி குடிசையைப் பார்த்து அவர் நின்றுவிட்டார். அதற்குப் பிறகு தண்டவாளம். அந்த குடிசை ஐந்தடிக்கு ஐந்தடி இருக்கும். முற்றிலும் சாய்ந்திருந்தது.

நின்ற ராஜீவ் என்னைப் பார்த்து ஏதோ கேட்டார் எனக்கு புரியவில்லை. நாங்கள் இருவர் மட்டும் அங்கே இருந்தோம். நான் திரும்பி பார்த்தேன். அப்போதுதான் பாதுகாப்பு படையினர் ஓடி வந்து நீரில் இறங்கினார்கள். அவர்களின் பின்னால் கட்சிக்காரர்கள். அதற்குள் இரண்டு நிமிடம் ஆகியிருக்கும். பாதுகாப்பு படையினரும் கட்சியினரும் திமுதிமுவென நீரில் இறங்கினார்கள். வந்த கட்சியினரிடம் ராஜீவ் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார். நான் அவரின் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் மிக கவர்ச்சியாக இருந்தார். ஒப்பிட்டுப் பார்க்க முடியாத நிறத்தோடு இருந்தார். அந்த அருகாமை நெடு நேரம் நீடிக்கவில்ல. வந்த கட்சிக்கார கூட்டம் என்னை எங்கே நீரில் அழுத்தி விடுமோ என பயந்து கால்களிடையே புகுந்து சாலைக்கு வந்துவிட்டேன். நெடுஞ்செழியன் ஜம்மென ஜீப்பிலேயே தனியாக நின்றுக் கொண்டிருந்தார். சிலபேர் வந்து அவரிடம் கைகொடுத்தார்கள். அவரோ ராஜீவை காட்டிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் நீர் நிரம்பிய குடிசைகளில் யாரும் இல்லாததால் ராஜிவ் திரும்பிவிட்டார். எல்லா வண்டிகளும் போய்விட்டன.

ராஜீவ் போனபிறகு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் கவலைகள் வேறுமாதிரி இருந்தன. எவ்ளோ பெரிய மனிதர், சேற்றில் இறங்கி போனார் பாருங்க.. என்று அவர்கள் வருத்தப்பட்டார்கள். பலர் அவரின் தோற்றம் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.. என்ன கலருப்பா அவரு..

சில நாட்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்களுக்கு பத்து கிலோ அரிசி, ஒரு புடவை, வேட்டி, பாதி பாதிப்பிற்கு ஐம்பது மற்றும் முழு பாதிப்பிற்கு நூறு ரூபாய் பணம். நிவாரணத்தை வாங்குவது பெரும் பாடாய் இருந்தது. கட்டுக்கடங்காத கூட்டம். அரசின் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அலை மோதினார்கள் , வரிசையில் நிற்கும் பழக்கம் இல்லாததால் நிவாரணப் பொருட்களை வழங்கும் இடங்களில் போலிசார் முறைப் படுத்தினார்கள். சில இடஙகளில் தடியடி நடந்தது. வழங்கப்பட்ட பொருட்களின் மதிப்பு நுறு மற்றும் நூற்றைம்பதிற்கு மேல் இருக்காது. ஆனால் மக்கள் அதற்கு மெனக்கெட்டார்கள், அவர்களின் தன்மாண்பு, தன்னம்பிக்கை அத்தனையும் அந்த நிவாரணப் பொருட்களின் முன் மண்டியிட்டுக் கிடந்தன.

இதற்குமுன்னர், ஒரு தீ விபத்து நடந்தபிறகு எம்ஜியார் வந்திருந்தார். அவர் வந்தது ராஜீவ் வந்துப் போன அதே பாதைதான். ராஜீவ் பார்த்த அந்த குடிசையும் அப்போது எரிந்துப் போயிருந்தது. நீரினால் மூழ்கியபோது என்ன நிவாரணமோ, அதே தான் தீயினால் எரிந்தபோதும். தீயினால் பாதிக்கப்பட்டவர்கள் அலறி அழுதார்கள். தேற்றுவதற்கு சுற்றத்தைத் தவிர யாரும் இல்லை. சில நாட்கள் மாநகராட்சியினர் சோறு போட்டார்கள், பிறகு நிவாரணப் பொருட்களை வாங்க மக்கள் அலைந்தார்கள்.

இப்படி மழையும் தீயும் மாறி மாறி மக்களை துன்புறுத்திய ஆண்டுகள் சில கடந்தன. எம்ஜியாரும், ராஜீவும் பார்த்த அந்த குடிசைகளை ,தேர்தல் பிரச்சாரத்தின் போது கருணாநிதியும் பிற தலைவர்களும் கடந்த அந்த குடிசைகளை நான் கடந்த போதெல்லாம் அவர்கள் கடந்துப் போன நாள்கள் பசுமையாக நினைவுக்கு வரும். ஆயினும் அந்த குடிசைகள் அப்படியே இருந்தன. நிவாரணங்களின் அளவும் அப்படியேத்தான் இருந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை.

2005 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தார் அப்போது கடும் மழை பொழிந்தது. சென்னை வெள்ளக்காடானாது. குறிப்பாக வடசென்னை. கஷ்ட காலம் முடிந்து வேதனைகள் முடிவுக்கு வராத நிலை. கடும் சேதம், தலைவர்கள் எல்லாம் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்தார்கள். பிறகு அரசு நிவாரணத்தை அறிவித்தது. குடும்ப அட்டை ஒன்றிற்கு இரண்டாயிரம் ரூபாய் பணம், அரிசி, வேட்டி, சேலை ஆகியன.

 இரண்டாயிரம் என்றவுடன் எங்கு பார்த்தாலும் இதே பேச்சாய் இருந்தது. அன்றைய பண வீக்க நிலவரத்தோடு ஒப்பிட்டால் அது இரண்டு வாரத்திற்கு மேல் ஏழைக்குத் தாங்காது. குறைந்தப் பட்சம் பாய், தலையணை, அழிந்த சிலப் பொருட்கள் மற்றும் மளிகைபொருட்கள் என வாங்கினால் அது ஒரு வாரத்திற்குத் தாக்குப் பிடிக்க உதவும். அழிந்துப் போன குடிசைகளைக் கட்டிக்கொள்ள அது போதாது. காரை வீடுகளில் இருந்தவர்களுக்கு அது ஒரு மாதத்திற்கான தொகை மட்டும்தான். ஆயினும் தான் அறிவித்த தொகை மக்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அறிய சென்னைக்குள் திடீர் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். ஒரு திருமணத்தை சாக்காக வைத்து வட சென்னைக்கு குறிப்பாக ஆர்கே நகருக்கு வந்தார். அவர் வரும்போது எங்கும் கொடிகள். வேகத் தடைகள் அகற்றப்பட்டன. காவலர்கள் குவிக்கப்பட்டார்கள், மழை வடிந்துப் போயிருந்தாலும் வாடிப் போயிருந்த மக்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். முன்பு எம்ஜியார், ராஜீவ், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வந்தார்களே அதே வழியில்தான் ஜெயலலிதா வந்தார். ராஜீவ் பார்த்த அந்த குடிசையோடு மற்ற குடிசைகளும் அப்படியே இருந்தன. எந்தவிதமான மாற்றங்களும் இல்லை. ரூபாய் இரண்டாயிரத்தைத் தவிர..

இதற்குப் பிறகு எவ்வளவோ மாற்றங்கள், மழையைப் போல தேர்தல்கள் வந்து போயின. 2015ல் அக்டோபரில் இருந்து மழைத் தொடங்கியது. குறிப்பாக நவம்பரில் கடும் மழை வட சென்னை பாதித்தது. சொந்த தொகுதியின் பாதிப்பைப் பற்றி அறிய நவம்பர் 16ல் முதல்வர் ஜெயலலிதா பயணம் செய்தார். அவர் முன்பு வந்த அதே பாதையில்தான் வந்திருக்க வேண்டும்,. ஆனால் ஒன்பது ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் ஓர் அதிசயப் பாலம் அவரின் பாதையை மாற்றிவிட்டது. அப்படியே அவர் போயிருந்தாலும் முன்பு கடந்த அந்த குடிசைகளைப் பார்க்க முடியாது, அவை அந்த அதிசயப் பாலத்திற்காக அகற்றப்பட்டிருந்தன. அவற்றில் குடியிருந்தவர்களுக்கு கொஞ்சம் பேருக்கு மாற்று இடம் அளிக்கப்பட்டது, மற்றவர்கள் சாலையோர நடைப் பாதைகளில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் முதல்வர் பார்க்க ஏராளமான குடிசைகள் இருந்தன. நீர் சூழ்ந்த வீட்டிலிருந்துக்கூட ஓடி வந்து அவருக்கு கை காட்டினார்கள். இப்போது அவர் வாக்குறுதி மட்டும் அளித்துவிட்டுச் சென்றார். எல்லாவற்றையும் நேரலையில் காட்டினார்கள்.

பிறகு திசம்பர் ஒன்றிலிருந்து மழை பொழிந்தது. எல்லாம் நமுத்துப் போய்விட்டது. அடித்த மழையில் அரசும் மக்களும் அடித்துக்கொண்டுப் போனார்கள், நிர்வாகமும் வீடுகளும் மூழ்கின. யாரையும் விட்டுவைக்கவில்லை மாமழை. மக்களால் நடுத் தெருவில்கூட நிற்க முடியவில்லை. குடிசைகளில் வாழும் ஏழை மக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், அவ்வளவு அவலம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்ட காட்சிகள் அத்தனையும் மறுபடியும் உயிர் பெற்றன. மாநகராட்சி சோறு போட்டது. அதன் ரசனைக் கெட்ட உணவை மக்கள் விரும்பவில்லை, அவசரகதியில் சமைக்கப்பட்ட உணவு மக்களின் வயிற்றைப் பதம் பார்த்தது. வயிறு கெட்டுப்போனால் கழிப்பதற்கு எங்கே போவது. இடுப்பளவு நீரில் எந்த திறந்த வெளியும் உதவாது. எத்தனை நாள்கள் வயிற்றை இறுக்கிப் பிடிக்க முடியும், எனவே உணவும் வெறுத்துவிடும். உணவை பசியோடு அவர்கள் வாங்கினாலும் அவர்களால் உண்ண முடியாது.

நீர் சுற்றி வளைத்தக் காலங்களில் மக்கள் எதிர் கொள்ளும், குறிப்பாக குடிசை மக்கள் எதிர் கொள்ளும் சிக்கல். இது தொடர் பிரச்சனைகளை உருவாக்கி மக்களின் தன்னம்பிக்கையை வெகுவாக குலைத்து, சுயமரியாதையை முற்றிலும் சிதைத்துவிடுகிறது. இவையெல்லாம் எந்த நிவாரண வகையிலும் வருவதில்லை. இதனால் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்த அழுத்த மாறுபாடு, தொற்று நோய்கள், உடலில் நீர் வற்றிப் போதல் மற்றும் மனநலப் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. வெள்ளம் வடிந்தப் பிறகு உடலின் எல்லாப் புலன்களுக்கும் ஆற்றல் தேவைப்படுகிறது, இதனால் மக்கள் ஊட்டம் நிறைந்த உணவிற்கு தவிக்கிறார்கள். அதனால்தான் எங்குப் பார்த்தாலும் உணவு வண்டிகளை முற்றுகையிடுகிறார்கள். உணவு தரும் கைகளை நோக்கி அவர்களின் கைகள் இறைஞ்சுகின்றன. தன்மாண்பு, சுய மரியாதை, தார்மீக கோபம் என எல்லாம் மழை காட்டிய வயிற்றின் முன்னே மண்டியிடுகின்றன. இதற்கு அரசு பொருப்பில்லை என்று தட்டிக் கழிக்க முடியுமா..?

இந்த காட்சிகளை மழை பாதித்தப் பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும், கிராமங்களில் பிரச்சனைகள் உருவாகும் மூலங்கள் வேறுமாதிரியாக இருக்கலாம், ஆனால் அவர்கள் சந்திக்கும் உடல்நல மற்றும் மனநல பாதிப்புகள் தீவிரமாகவே இருக்கும். மக்கள் தேர்ந்தெடுத்தார்களே தங்களின் பிரதிநிதிகள் அவர்களுக்கு இதைப்பற்றின துளி அக்கரையும் கிடையாது. அதிகாரத்தில் அமர்ந்தவுடன் அவ்வளவு அலட்சியம். அதனால் மக்கள் ஆபத்தில் இருக்கும் போது வந்தால் அவர்களை விரட்டி அடிக்கிறார்கள். இப்படி அரசின் அலட்சியங்களால் அவர்கள் தமக்குள் போராடிப் போராடி எல்லா இடர்களிலிருந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வருகிறார்கள். அதற்காக அரசுகள் பெருமைப் பட்டுக்கொள்ள முடியாது. மக்களின் இந்த இடர்களை போக்குவதற்கு பயிற்சிப் பெற்ற எந்த அமைப்பும் அரசிடம் இல்லை. அப்படி இருப்பவர்களும் அரசிற்கு வெளியேதான் இருக்கிறார்கள். அவர்களோடு அரசுக்கு எந்த ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. அரசிற்குத் தெரிந்த ஒரே பணி நிவாரணம்..

இந்த மழை பாதிப்பிற்கும் அரசு நிவாரணங்களை அறிவித்தது அரசு. அரிசி, பருப்பு, புடவை, வேட்டி, பாய் மற்றும் ஐந்து/பத்தாயிரம் பணம். இவற்றை வாங்குவதற்கு மக்கள் சாரை சாரையாக திரள்கிறார்கள். மந்திரிகள் வந்து தொடங்கி வைக்கிறார்கள். மக்களுக்கு அத்யாவசியப் பொருள்களைக் கொடுக்க மந்திரிகள் நிகழ்ச்சி நடத்தும் கொடுமை இங்கு மட்டுமே நடக்கிறது. மற்ற மாநிலங்களில் அது உணவு பங்கீட்டு அட்டை மூலம் ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது. இருந்தும் இப்போது வழங்கப்பட்ட நிவாரணங்களின் அளவை பார்க்கும் போது பழைய காலங்களில் வழங்கப்பட்டதற்கும் இப்போது வழங்கப்பட்டதற்கும் என்ன வித்தியாசத்தைப் பார்க்க முடியும். உணவு மற்றும் பண வீக்கங்களின் அளவுகளோடு ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அதே நேரத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளாக நிவரணம் என்று அளிக்கப்படுவதில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லையே ஏன்? அதை வழங்குவதிலும் எந்த மாற்றமும் இல்லையே ஏன்..? வாங்கும் மக்களின் கவுரமும் காக்கப்படவில்லையே ஏன்..?

இவை தவிர இன்னொரு நிவாரணம் இருகிறது. குறிப்பாக சென்னை குடிசை மக்களுக்கென்று தனித்துவமானது. சின்ன இடர் என்றாலும் பேரிடர் என்றாலும் முதலில் குறிவைக்கப்படுவது இவர்கள்தான். மாற்று இடம் என்கிற பெயரில் இவர்கள் சென்னையை விட்டுத் துறத்தப்படுவார்கள். ஒரு சின்ன குடிசையை கட்டிக்கொண்டு எத்தனையோ ஆண்டுகளாக வசித்தவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்டு, ஈவு இரக்கம் இன்றி வேறோடு பிடிங்கி எறியப்படுவார்கள். 1972லிருந்து சுமார் 1500 குடிசை குடியிறுப்புகள் அப்படி துறத்தியடிக்கப்பட்டுள்ளன. இந்த பேரிடரும் அதைச் செய்யும். எனவே இவையெல்லாம் தற்செயலானது அல்ல மாறாக மக்களைப் பற்றி கடந்த நாற்பது ஆண்டுகளாக அரசுகள் வைத்திருக்கும் மதிப்பீடு.

ஆட்சிகள் மாறினாலும் அவர்களின் திட்டங்களில் மாற்றம் ஏதும் வரவில்லை பேரிடர்களின் போது மக்களின் அடிப்படைத் தேவைகள் எப்படி கொடுக்ககப்பட வேண்டும் என்றும், அவர்களின் கௌரவம் எவ்வாறு காக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் அவை வழிகாட்டியிருக்கிறது. ஆனால் இவையெல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள். ஏழைகளைப் பொருத்த மட்டில் ஆளுபவர்கள் இன்னும் தங்கள் கை மேலே இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். மக்களை பிச்சைக்காரர்களாக நடத்தும் ஓர் அரசு எப்படி மக்கள் நல அரசாக செயல்பட முடியும். தங்களுக்கு நிரந்தரமாக ஓட்டுபோட ஒரு கூட்டம் தேவை என்கிற எண்ணமா என்றுகூடத் தோன்றுகிறது. ஆயினும் மக்களின் சுய கவுரவத்தைக் காக்காமல், அதற்கான நீண்டகாலத் தீர்வுகளை நோக்கிப் போகாமல் இருப்பது கையாலாகதத் தனம் அல்ல, அது அலட்சியத்தின் வெளிப்பாடு. இதை இப்போதைய ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, கடந்த ஆட்சியாளர்களுக்கும், வரப்போகும் ஆட்சியாளர்களுக்கும் சேர்த்துதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

எல்லா நேரத்திலும் அரசினால் சோறு போடமுடியாது. நிவாரணம் என்பது சோறும் கொஞ்சம் பணம் மட்டுமல்ல. மக்களின் மாண்பையும் கவுரவத்தையும் காத்து, அதன் மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் அரசுதான் ஒரு நல்லரசாக இருக்க முடியும். வெறும் அற்ப நிவாரணம் கொடுத்து, வயிற்றுக்கு முன்னால் அடிபணிய வைத்து பின்பு வரும் அந்த ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று நினைத்தால் அது பச்சை மோசடியாக இருக்கும். 

- ஜா.கௌதம சன்னா, கொள்கைப் பரப்பு செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

(தி இந்து தமிழ் நாளிதழுக்கு அனுப்பி அவர்கள் வெளியிடாத கட்டுரை)

Pin It