கல்லோடும் மண்ணோடும்
காட்டு விலங்கோடும் தோன்றிய குடி
தொல்பழங்குடி
இயற்கையின் படைப்பை
இன்னும் அடையாளம்
காட்டிக்கொண்டிருப்பவர்கள்
இவர்கள்
நகர நாகரிகத்தை
நமக்குக் கையளித்துவிட்டு
மனித நாகரிகத்திலிருந்து
மாறாதிருப்பவர்கள்
உணவு, உடை, இருப்பிடத்தின்
எல்லாப் பரிணாமங்களும்
உதிரம் பாய்ச்சி
இவர்கள் வளர்த்தவை
அரசியல், ஆன்மிகம், விஞ்ஞானம்
எனும் எல்லா நஞ்சுகளுக்கும்
எப்போதும் ‘முதல்பலி’
பழங்குடிகளே
தொழில், பொருளாதார வளர்ச்சிகளின்
முதல் பேரிடி
இவர்கள் தலையில்தான் விழும்
இராணுவம் குறித்தும்
காவல்துறை குறித்தும்
மக்களைவிட அதிகமாய்
மலைவாசிகளுக்கே தெரியும்
பூத்துக்குலுங்கும் சுதந்தர நாடுகளில்
பூச்சிகளிவிடச் சுருங்கிக் கிடக்கிறார்கள்
பூர்விகக் குடிகள்
கல்வி, மின்சாரம் எதுவுமின்றி
ஆயிரமாயிரமாண்டுக் காலமாய்
மலைகளிலும் காடுகளிலும் வசிக்கும்
இவர்களுக்கு...
அடிக்கடி அரசாங்கம் வைக்கும் பெயர்
“மாவோயிஸ்டுகள்” “நக்சலைட்டுகள்”
“தீவிரவாதிகள்”
கடவுள்கள் இப்போது
காடுகளுக்குள்ளும்
நுழையத் தொடங்கிவிட்டார்கள்
கார்ப்பரேட் வணிகர்களுக்கும்
சாமிகளுக்கும்
காடுகளில் கிடைக்கிறது
கைநிறைய வரம்
தொடர்ந்து
வன்முறைகளுக்கு ஆளாகிவரும்
பழங்குடிகளுக்கு...
மீண்டும் தேவைப்படுகிறது
ஈட்டியும் வாள்அம்பும்!