படிப்பு வாசனையை இளம் வயதிலேயே தொலைத்துவிட்ட ஒரு பழங்குடிப் பெண். ஆனால் அவர் மேற்கொண்ட போராட்டம் கேரளாவை நடுநடுங்க வைத்தது. எந்த அரசியல் கட்சியின் ஆதரவும் இன்றி ஏ.கே. அந்தோனியின் அரசை மண்டியிட வைத்தார். வேறு வழியின்றி கேரள அரசு இறங்கி வர வேண்டி இருந்தது. அந்தப் போராட்டம் கேரள தலைமைச் செயலகத்துக்கு முன் குடியிருப்புகளை அமைத்த போராட்டம்.

Januபடிப்பறிவு மிகுந்த, அரசியல் உணர்வு அதிகமுள்ள கேரளாவிலும் மண்ணின் மைந்தர்களான பழங்குடிகள் உரிமைகளை பெற இயலவில்லை. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் பழங்குடிகள் மட்டும் மூன்றரை லட்சம் பேர். இடதுசாரி, காங்கிரஸ் கட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்தாலும் வறுமை, ஒதுக்கப்படுதல், அலட்சிய உணர்வு போன்றவற்றால் மண்ணின் மைந்தர்கள் அவதிப்பட்டனர். அவர்களது நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் பிடித்துக் கொண்டனர். அரசோ எதையும் சட்டை செய்யாமல் இருந்தது. கேரளாவில் வேரூன்றியுள்ள இடதுசாரிக் கொள்கைகளும், முன்னேற்றமும் பழங்குடிகளுக்கு உரிய காடுகளை, உரிமைகளை முழுமையாக வழங்கவில்லை. அவர்களது கோரிக்கைகளுக்கு 90கள் வரை உரிய பதில் கிடைக்கவில்லை.

இந்தப் பின்னணியில் வயநாடு மாவட்டத்திலுள்ள மனந்தவாடி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஜானு, பழங்குடிகளின் குரலை ஓங்கி ஒலித்தார். எந்த அரசியல் கட்சி, சமூக அமைப்பின் ஆதரவும் இன்றி அவரது குரல் உயர்ந்து நின்றது.

வயநாடு மாவட்டத்தில் உள்ள பழங்குடி கிராமமான வெள்ளமுண்டாவில் பிறந்தவர் சி.கே. ஜானு. வறுமையும், அடிமை வேலைகளும் ஜானுவை வாழ்க்கையின் சோகமான பக்கத்துக்குத் திருப்பின. ஏழு வயதில் வீட்டு வேலை செய்யப் போனார். 12 வயதில் தினக்கூலியானார். பிறகு தையல் வேலை செய்யத் தொடங்கினார். கடன், வியாபாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக தையல் கடையை மூடினார். பள்ளி படிப்பைத் தொடராத ஜானு, 80களில் நடைபெற்ற எழுத்தறிவு இயக்கம் மூலம் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டார்.

பழங்குடிகள் காலம்காலமாக அனுபவித்து வரும் பல்வேறு பிரச்சினைகளை அப்போதுதான் அவர் உணரத் தொடங்கினார். சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பேசத் தொடங்கினார். தீர்மானமான எண்ணம், மனோதிடத்தால் மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். அது தங்களின் குரல் என்று மற்ற பழங்குடிகள் அடையாளப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியில் சில காலம் இருந்தார். ஆனால் அக்கட்சித் தலைவர்கள் பழங்குடிகள் முன்னேற்றத்துக்கு உரிய கவனம் கொடுக்கவில்லை என்று நினைத்தார். 1982ம் ஆண்டு கட்சியை விட்டு விலகினார்.

பழங்குடிகளின் பிரச்சினைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள ஒவ்வொரு பழங்குடி கிராமமாக பயணம் செய்தார். அதில் கற்றுக் கொண்ட விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு பழங்குடிகளை போராட்டத்துக்கு தயார்ப்படுத்தினார். அனுபவமே எனது வழிகாட்டி என்கிறார் ஜானு. பழங்குடிகளை மேம்படுத்துவதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும் என்று உணர்ந்திருந்தார். அடிப்படை உரிமைகள் பற்றி பழங்குடிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான சாகுபடி நிலம் அவர்களது பிறப்புரிமை என்று உணர்த்தினார். அவரது தீவிர அக்கறையாலும், சொல்வன்மையாலும் வயநாடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பழங்குடிகள் அணிதிரண்டனர்.

2001ம் ஆண்டு. 32 பழங்குடிகள் பட்டினிக்கு பலியாகி இருந்தனர். அவர்கள் விஷச்சாராயம் குடித்ததால் பலியானவர்கள் என்று அமைச்சர் ஒருவர் விவகாரத்தை திசை திருப்ப பார்த்தார். அப்போது கேரள பழங்குடிகள் வரலாற்றில் மிக முக்கியமான அத்தியாயத்தை ஜானு எழுதினார்.

தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தை ஜானுவும், அவரது சக போராளிகளும் ஒரு மாதத்துக்கு மேல் முற்றுகையிட்டனர். தலைமைச் செயலக அலுவலகங்கள் முன் பழங்குடிகள் குடிசைகளை அமைத்தனர். 48 நாட்களுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்தது. அவர்களது கோரிக்கை மிகவும் அடிப்படையானது. 'பழங்குடிகளின் நிலத்தை திரும்பத் தரவேண்டும்' என்பதே அது. மேலும் மேலும் பழங்குடிகள் ஜானுவின் பின்னால் அணிதிரண்டனர். ஆட்சியிலிருந்த ஏ.கே. அந்தோனியின் காங்கிரஸ் அரசுக்கு இது கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது.

கடைசியில் வேறு வழியின்றி, ஒவ்வொரு பழங்குடி குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் சாகுபடி நிலம் வழங்கப்படும் என்று அரசு உறுதியளித்தது. ஆனால் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற மிகமிகக் குறைவான முயற்சிகளை மட்டுமே அரசு மேற்கொண்டது. அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வழக்கம்போல் அரசு வார்த்தை தவறியது.

அதன்பிறகு ஜானுவும் அவரது சக தோழர்களும் தங்கள் போராட்டத்தின் மற்றுமொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்தனர். 2003ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஜானுவும், நக்சலைட்டாக இருந்து பழங்குடிப் போராளியாக மாறிய எம். கீதானந்தனும் ஒரு போராட்டத்தை தொடங்கினர். நூற்றுக்கணக்கான பழங்குடிகளுடன் வயநாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியான முத்தங்காவை கைப்பற்ற முனைந்தனர். விவசாயம் செய்வதற்கான எளிய கருவிகளைத் தவிர அப்போது அவர்களிடம் வேறு எந்த வசதியும் இருக்கவில்லை.

ஜானுவின் போராட்ட உணர்வால் பழங்குடிகள் உத்வேகம் பெற்றனர். அரசு அதிகாரிகளின் தொடர் எச்சரிக்கைகளை புறங்கையால் புறக்கணித்தனர். குடிசைகளை அமைத்தனர். பிறகு நிலங்களை உழுவதற்கு ஆரம்பித்தனர். 'இந்த மண் எனது தாய்மண். இது எனது நிலம்' என்பதே அவர்கள் உணர்த்த விரும்பிய விஷயம்.

முள்ளை முள்ளால் எடுக்க அரசு தீர்மானித்தது. முத்தங்காவில் அமைக்கப்பட்டிருந்த பழங்குடி குடிசைகளை போலீஸ் அடக்குமுறையால் அகற்ற அரசு முயற்சித்தது. இதில் ஒரு பழங்குடியும், போலீஸ்காரரும் பலியாயினர். நூற்றுக்கணக்கான பழங்குடிகள் காயமடைந்தனர்.

போலீசின் அத்துமீறலைக் கண்டித்து பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் பெயர் 'உங்கள் கைகளில் ரத்தக் கறை படிந்திருக்கிறது'. ஜானுவை கைது செய்த போலீஸ், அவரை சித்திரவதை செய்ய ஆரம்பித்தது. போலீஸ்காரரை கொன்றது தொடர்பான வழக்கு உட்பட பல குற்ற வழக்குகள் அவருக்கு எதிராகத் தொடரப்பட்டன.

பதற்றத்தில் தொடர்ந்து தவறுகளை செய்து வந்த மாநில அரசு, அரசியல் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் முத்தங்கா வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைத்தது. போலீஸ் எந்த அத்துமீறலையும் செய்யவில்லை என்று ஏமாற்றம் அளிக்கும் வகையில் இடைக்கால அறிக்கையை சிபிஐ சமர்ப்பித்துள்ளது. மாநில அரசே பழங்குடிகளை ஆதரிக்கவில்லை. சிபிஐ ஆதரிக்கப் போகிறதா என்ன?

உரிமைகளைக் கோரும் பழங்குடிகளின் போராட்டம் தொடர்கிறது. ஆதிவாசி கோத்ரா மகா சபை, அதன் அரசியல் பிரிவான ராஷ்டிரிய மகா சபையின் தலைவராக ஜானு தொடர்கிறார். அவரது கருத்துகளை ஏந்திச் செல்லும் வாகனமாக அந்த அமைப்புகள் இருக்கின்றன. பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வரை ஜானுவின் போராட்டம் ஓயாது.

''பிறந்த மண்ணில் வாழ்வதற்கான உரிமையை பெற, இறக்கும் வரை நாங்கள் போராடுவோம்...'' அதோ ஜானுவின் குரல் ஒலிக்கிறது.

- ஆதி

Pin It