இன்றைய மலேசியாவின் மக்கள் தொகை 260 இலட்சம் பேர். இதில் மலாய் இனத்தவர் 110 இலட்சம் பேரும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் 22 இலட்சம் பேரும் ஆவர். மற்றும் தமிழீழத் தமிழர்களும் சில இலட்சம் பேர் அங்கு உள்ளனர். சீனர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருந்தாலும், வெள்ளையர் வெளியேறிய பிறகு வணிகத்திலும், உணவு விடுதிகள் தொழிற்சாலைகள் நடத்துவதிலும் அவர்களே செல்வாக்கோடு இருக்கிறார்கள். ஆனால், மலேசியாவில் தமிழகத் தமிழர்களுள் இருக்கிற இந்துக்கள், கிறித்துவர்கள், இசுலாமியர் களின் நிலை 2014லும் மிகவும் இரங்கத்தக்கது.

தமிழகத் தமிழரின் முன்னோர், 1830 முதற்கொண்டு, மலாய் நாட்டுக்கு, இரப்பர் தோட்டத்தில் பால் இறக்கவும், காப்பிச் செடி பயிரிடவும், நிலங்களைத் திருத்தவும் கூலிகளாக வெள்ளையர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

வெள்ளையர்களே பெரிய பெரிய தோட்ட முதலாளிகளாக அன்று இருந்தனர். அங்கு வேலை யாள்களாக இருந்து உழைத்தவர்களுள் அதிகம் பேர் தமிழர்களே. அத்தமிழரின் குழந்தைகள் படிப்பதற்காகத் தமிழில் கற்பிக்கும் முதலாவது பள்ளி 1887இல் தான் பினாங்குப் பகுதியில் தோற்றுவிக்கப்பட்டது.வெள்ளையர்கள் வெளியேறியபோது, 1338 தமிழ்ப் பள்ளிகள் மலேசியா முழுவதிலும் இருந்தன.

வெள்ளையர் வெளியேறியபோது, சீனர்களும் மலாய்க்காரர்களும் துண்டுதுண்டாக சிறு சிறு இரப்பர் தோட்டங்களை விலைக்கு வாங்கினர். எனவே, தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் எண் ணிக்கை படிப்படியாகக் குறைந்தது.

தந்தை பெரியாரும் அன்னை நாகம்மையாரும் முதன்முதலாக 1929இல் மலாய் நாட்டுக்குச் சென்ற போது, தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் தத்தம் பிள்ளைகளைப் படிக்க வைக்கவேண்டும் என அறிவுறுத் தினர். அதை உணர்ந்து தமிழர்கள் தம் குழந்தை களுக்குப் படிப்புக் கொடுத்தனர்.

1990க்குப் பிறகு இரப்பர் தோட்டங்கள் பெரிய அளவில் அழிக்கப்பட்டு, செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்பட்டன. தமிழர்கள் பெருங்கூட்டமாக மய்யங்கொண்டிருந்த நிலைமை மாறி, இன்று பலப்பல ஊர்களில் சிறு சிறு எண்ணிக்கையினராக உள்ளனர்.

ஆங்காங்குத் தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகள் குறைந்தன. அன்று இருந்த 1338 தமிழ்ப் பள்ளிகள் குறைந்து குறைந்துவந்து, இன்று வெறும் 523 தமிழ்ப் பள்ளிகள் மட்டுமே மலேசியாவில் உள்ளன.

1990 முதல் உலக அளவில் உலகமயம், தனியார் மயம், தாராளமயக் கொள்கைகள் பரவி வரும் நிலையில் - மொத்தம் உள்ள 22 இலட்சம் தமிழருள் இன்று 5 இலட்சம் பேர்களே தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் களாக இருக்கிறார்கள்.

பள்ளியில் படிக்க விரும்புவோர், மலாய் மொழி, ஆங்கில மொழி வழியில் கற்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர். படிப்பறிவும் பணவசதியும் உள்ள தமிழ்ப் பெற்றோர்கள் தத்தம் குழந்தைகளை ஆங்கிலவழிப் பள்ளிகளில் இப்போது சேர்க்கிறார்கள்.

அத்துடன் பெரிய எண்ணிக்கையிலுள்ள மலாய் இன மக்கள் “பூமி புத்திரர்கள்” மண்ணின் மைந்தர்கள் - மலாய் நாட்டின் ஆதிக்குடிகள் - அவர்களே மலாயா பூமிக்கு உடை யவர்கள் என்கிற சட்டம் நிறைவேற்றப் பட்டவுடன், அவர்களின் நிலங்களையும் வீட்டு மனைகளையும் மற்ற இன மக்கள் விலைக்கு வாங்க முடியாத தடை இருக்கிறது.

இன்றும் தமிழர்கள் சமூக அளவில் ஒன்றுபட்டிருக்க வில்லை; அரசியல் விழிப்புணர்ச்சி பெறவில்லை; அண்மைக்காலமாகச் சாதி உணர்ச்சிக்கும் ஆளாகிப் பிரிந்து பிரிந்தே தமிழர்கள் வாழ்கிறார்கள்.

எண்ணற்ற இடங்களில் இந்துக் கோவில்களைக் கட்டவும், குடமுழுக்கு விழா, தேர்த் திருவிழாக்கள் நடத்தவும், மதுக்குடிக்கும் பெரும் பொருளைத் தமிழர்கள் செலவழிக்கிறார்கள்.

1930-1960களில் இருந்த கோ. சாரங்கபாணி போன்ற - துன்.சம்பந்தன் போன்ற தமிழர் தலைவர்கள் இன்று இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் தமிழ ரிடையே உள்ள திரைப்படப் பண்பாட்டையும், குழு வினராகவும் - கட்சியினராகவும் பிரிந்து கிடக்கும் தன்மையையும் மலேசியத் தமிழர்களும் பின்பற்று கிறார்கள்.

“மலேசிய நண்பன்”, “தமிழ் மலர்”, “நம் நாடு” முதலான பல தமிழ் நாளேடுகள் தமிழ்நாட்டுச் செய்திகளை உடனுக்குடன் முதன்மை தந்து வெளியிட்டு அங்குப் பரப்புகின்றன. ஏனெனில், ஒரு தமிழ் நாளேடு 70,000 படிகள் அச்சாகிறது என்றால், தமிழ்நாட்டிலிருந்து அண்மையில் அங்குப் பிழைக்கப் போனவர்கள் அதில் பாதி எண்ணிக்கைப் படிகளை விரும்பி வாங்கிப் படிக்கிறார்கள்.

மலேசிய நாட்டு அரசியலில் தமிழர்கள் போதிய செல்வாக்குப் பெற முடியாமல் இருப்பதற்கு இந்தப் போக்கும், தமிழரிடையே ஒற்றுமை இன்மையும், பொருளாதாரச் செழுமை இன்மையும், ஒழுக்கச் சிதைவும் பெருங்காரணங்களாக உள்ளன.

திராவிட இயக்கம் பரவி, தமிழின உணர்வையும், தமிழ் மொழி உணர்வையும், தன்மான உணர்வையும் 1929-1955 காலக்கட்டத்தில் தந்தை பெரியாரும், அங்கிருந்த சாரங்கபாணி, நல்லத்தம்பி, திருச்சுடர் இராமசாமி போன்றவர்களும் வளர்த்திருந்தாலும் - அந்த உணர்வும் சிதறிப் போகச் செய்யப்பட்டு, பெரியார் கொள்கையாளர்களே - இங்கே பல குழுக்களாகப் பிரிந்து பிரிந்து இருப்பது போல், மலேசியாவிலும் பிரிந்து பிரிந்தே இயங்குகிறார்கள்.

மலேசியாவில் தமிழ்வழிக் கல்வி வளர்க்கப்படவும், அரசியல் விழிப்புணர்வு உண்டாக்கப்படவும், தமிழர்கள் கூட்டுறவு முறையில் வணிகம் - தொழில்கள் - கூட்டுறவு நிதி நிறுவனங்கள் முதலியவற்றை நிறுவி நடத்திடவும் முன்வந்தாலன்றி, மலேசியத் தமிழரின் இன்றைய நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட உள்ள வாய்ப்பு மிகவும் குறைவே ஆகும்.

1996, 2005, 2012, 2013 ஆக நான்கு தடவைகள் மலேசியப் பயணத்தை நான் மேற்கொண்டிட அடிப்படையாக அமைந்த என் தோழர்கள் மலேசிய உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகச் செம்மல் மறைந்த மு. மணிவெள்ளையன் அவர்களும், இப்போது - மலேசியத் தமிழர் தன்மான இயக்க நிறுவனரும் தேசியத் தலைவருமான முனைவர் பெரு. அ. தமிழ்மணி அவர்களுமே ஆவர். இவர்கள் என் நன்றிக்கு உரியவர்கள்.

2016 வரையில் நான் வாழ்ந்தால், 2016இல் ஒரு பத்து நாள்கள், மலேசியாவில் தங்கி, மார்க்சியப் பெரியாரிய அம்பேத்கரியக் கொள்கைப் பயிற்சி வகுப்பு களை அங்குள்ள தோழர்களுக்கு நடத்த விரும்புகிறேன்.

Pin It