நம்மிடையேயுள்ள சாதிப் பிரச்னையை எடுத்துக் கொள்வோம். ‘ஜாதி’ என்ற வடமொழிச் சொல்லை தமிழிலிருந்து எடுத்து விட்டால் அதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஒன்று கூறுங்களேன். பண்டிதர்கள்தான் கூறட்டுமே.

- பெரியார்

உலகில் எந்த ஒரு மொழியும் தூய மொழியாக இருப்பதற்கான வாய்ப்பு என்பது அறவே கிடையாது. மனிதர்கள் இடம் பெயரும்போது அவர்களுடன் சேர்ந்து அவர்களின் மொழியும் இடம் பெயருகின்றது. பல்லாயிரம்  ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இடப்பெயர்ச்சியும், போர்களும், வர்த்தகமும் உலகில் உள்ள அனைத்து மொழிகளின் தூயத்தன்மையும் இழக்கச் செய்திருக்கின்றது. மொழி கலப்படைதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும் சில சமயம் பண்பாட்டு ரீதியாக மேம்பட்ட நிலையில் இருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தை பண்பாட்டு ரீதியாக மிகவும் பின்தங்கி இருக்கும் இன்னொரு மக்கள் கூட்டத்தின் மொழி அதில் இரண்டற கலக்கும்போது நாகரிக நிலையில் இருக்கும் மக்கள் கூட்டத்தின் பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக சீரழிவிற்கு உள்ளாவதுடன் அந்த மக்களின் அறிவியல் சிந்தனை அழிக்கப்பட்டு அந்த மக்கள் தன்மான மற்றவர்களாகவும் சுயமரியாதை அற்றவர்களாகவும் மாற்றப்படுகின்றார்கள்.

பண்டைய தமிழர்கள் கிரீஸ், ரோம், எகிப்து, பாலஸ்தீனம், மெசப்பொடோமியா, பாபிலோனியா, சீனா போன்ற நாடுகளுடன் வாணிகம் செய்ததற்கான தரவுகள் கிடைக்கின்றன. ஆனால் தமிழன் இத்தனை நாடுகளுடன் வாணிகம் செய்தாலும் அவர்களின் பண்பாட்டில் நடைமுறை வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. காரணம் பல நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வாணிகம் செய்தவர்களோ இல்லை இங்கிருந்து மற்ற பல நாடுகளுக்கு சென்று வாணிகம் செய்த தமிழர்களோ பொருள் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார்கள். தம்முடைய மொழியையோ, பண்பாட்டையோ மற்றவர்கள் மேல் திணிக்கும் எண்ண மற்ற ஜனநாயகப் பண்பு கொண்டவர்களாகவே தமிழர்களும் மற்ற

நாகரிகமடைந்த நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்குள் ஆடுமாடு மேய்த்துக் கொண்டு வயிறு பிழைக்க வந்த ஆரிய கூட்டம் இதற்கு நேர்மாறாக செயல்பட்டது. வரலாற்று அறிஞர் டாக்டர் கே.கே.பிள்ளை சொல்கிறார் “தமிழரின் சமயம், சமூக வாழ்வு, மொழி, இலக்கியம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகிய துறைகள் எல்லாவற்றிலும் ஆரியர்கள் தலையிட்டு அவற்றைத் தம் இயல்புக்கு ஏற்ப மாற்றிவிட முனைந்து வந்தனர். மக்கள் பெயர்கள், கடவுளரின் பெயர்கள், ஊர்கள், ஆறுகள், மலைகள் முதலியவற்றின் பெயர்கள் யாவும் தமிழ் வடிவத்தை இழந்தன.

ஆரிய வடிவத்தை ஏற்றன. ஆரியர் தம் பழக்க வழக்கங்கட்கும், மொழிக்கும் எத்தனை ஏற்றம் கற்பிக்க வேண்டுமோ அவ்வளவும் கற்பிக்கவும், அவற்றையே தமிழரின் வாழ்க்கை முறையில் ஆட்சியில் நிறுத்தவும் நுண்ணிய திட்டங்கள் பல செயற்படுத்தி ஓரளவு வெற்றியுங் கண்டார்கள்”. (தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும்)

இப்படி தமிழரின் வாழ்க்கையில் அத்துமீறி நுழைந்த பார்ப்பனியம் அவர்களின் மொழி, பண்பாடு என அனைத்தையும் ஆக்கிரமித்து இன்று தமிழனை சுயமரியாதை அற்றவனாக மாற்றியிருக்கின்றது. இன்று பெரும்பாலான தமிழ் மக்கள் தங்கள் குழந்தை களுக்கு புரியாத சமஸ்கிருத மொழியில் பெயர்வைப்பதையே நாகரிகம் என்று கருதும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. தமிழில் பெயர் வைத்தால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலமே அதனால் பாதிப்புக்கு ஆளாகிவிடும் என்று அஞ்சுகின்ற மனப்போக்கு பெற்றோர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. தமிழன் தன்னுடைய மண்ணும், காற்றும், நீரும் அழிக்கப்படுகின்ற போது அதற்கு எதிராகக் காட்டும் ஆவேசத்தை தன்னுடைய மொழி அழிக்கப்படும் போது காட்டுவதில்லை உண்மையில் தமிழ்நாட்டு மக்களுக்கு மொழி மீதான அக்கறையும் விழிப்பும் இருந்திருந்தால் இன்று அவன் தன்மீது சுமந்து கொண்டிருக்கும் சூத்திர பட்டத்தில் இருந்து என்றோ வெளியேறி இருப்பான்.

தமிழர்கள் தன் வாழ்நாளில் கடை பிடிக்கும் மூட நம்பிக்கைகள் அனைத்துமே பார்ப்பனியத்தால் இங்கே இறக்குமதி செய்யப் பட்டது என்பதை இன்னும் உணராதவனாய் உணர்ந்தாலும் அதை விட்டு வெளியேற திராணியில்லாதவனாய் இருக்கின்றான். நவமி, தசமி,  சஷ்டி, பிரதோஷம், ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், சந்திர தரிசனம், சங்கட ஹரசதுர்த்தி, இராகு, குளிகை, எமகண்டம் என காலையில் கண் விழித்து எழுந்ததில் இருந்து இரவு படுக்கப்போகும் வரை அவனை பார்ப்பனியம் சுரண்டிக்கொண்டே இருக்கின்றது. படித்தவன் படிக்காதவன் என எல்லோருமே பார்ப் பனியத்தை கடைபிடிப்பதில் எந்தக் கூச்சமும் அற்றவர்களாகவே உள்ளார்கள்.

தமிழன் மீது திணிக்கப்பட்ட இந்த இழிவுக்கு எதிராக  தமிழ்நாட்டில் அன்று பகுத்தறிவு பூர்வமாக குரல் கொடுத்த ஒரே தலைவர் பெரியார் மட்டும்தாம். தமிழ் மொழியும் தமிழர்களும் தன்மானத்தோடும், சுயமரியாதையோடும் வாழவேண்டும் என்றால் தமிழ்மொழியில் கலந்துள்ள வடமொழி சொற்களை நீக்கவேண்டும் என குரல் கொடுத்தார். அதனால்தான் இன்றுவரையிலும் பெரியார் அவர்களை தமிழுக்கு எதிரி போன்று சித்தரிக்கும் கீழ்த்தரமான வேலையில் பார்ப்பன அடிவருடிகள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

“நம்மிடையேயுள்ள சாதிப் பிரச்சினையை எடுத்துக் கொள்வோம். ‘ஜாதி’ என்ற வடமொழிச் சொல்லை தமிழிலிருந்து எடுத்து விட்டால் அதற்குச் சரியான தமிழ்ச் சொல் ஒன்று கூறுங்களேன். பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தை இல்லையே. ஆதலால் நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும், இது வடநாட்டுத் தொடர்பால் தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா? இல்லையா? கூறுங்களேன். இதேபோல் திவசம், திதி, கல்யாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம், சாலோக, சாரூப சாயுச்சிய என்ற இவ்வார்த்தையும் வட மொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனாதா? சிந்தித்துப் பாருங்கள். தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் என்ற பேர்கள் வந்த பிறகு தானே நம் பெண்கள் கணவனின் கைப்பொம்மைகள் ஆனார்கள்.

அதன் பிறகு தானே சிறிது சச்சரவு நேர்ந்து தன் வீட்டுக்கு வந்த தன் மகளைப் பார்த்து ‘ஆமாம்மா! உன்னைக் கன்னிகாதானம் செய்தாயிற்றே! உன்னை உன் புருஷனுக்குக் கொடுத்து விட்டோமே! இனி உனக்கிடம் அவன் இருப்பிடம் தானம்மா’ என்று  கூறும் தகப்பன்மார் தோன்றினார்கள். கன்னிகாதானம் என்பதற்கு தமிழ் வார்த்தை ஒன்று கண்டு பிடியுங்களேன். திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை என்றுதானே கூறுகின்றார். அதாவது புருஷனும் மனைவியும் ஸ்நேகிதர்கள், நண்பர்கள் என்றுதானே அதற்குப் பொருள். எவ்வளவு கருத்து வேறுபாடு பாருங்கள். ‘மோக்ஷம்’ என்பதற்குத் தமிழ் வார்த்தை ஏது? மோக்ஷத்தை நாடி எத்தனை தமிழர் காலத்தையும், கருத்தையும், பொருளையும் வீணாக்குகிறார்கள் கவனியுங்கள். மதம் என்பதற்கு தமிழில் சொல்லேது? மதம் என்ற வார்த்தையால் ஏற்பட்டது தானே மதவெறி? நெறி, கோள் என்றால் வெறி ஏது?

‘பதிவிரதாத் தன்மை’ என்பதற்காவது  தமிழில் வார்த்தையுண்டா? பதிவிரதம் என்ற வார்த்தை இருந்தால் சதி விரதம்  அல்லது மனைவி விரதம் என்கின்ற வார்த்தையும் இருக்க வேண்டுமே. இதுவும் வடமொழித் தொடர்பால் ஏற்றவினைதான். ஆத்மா என்ற வார்த்தைக்கு தமிழில் மொழியேது? ஆத்மாவால் எவ்வளவு மூட நம்பிக்கைக் களஞ்சியங்கள் நம் புலவர்கள், அறிஞர்களிடையேயும் புகுந்துவிட்டன. தமிழ்நாட்டு மக்களின் வழக்கங்கள் யாவும் பெரிதும் ஆண், பெண் இருபாலர்க்கும் சமஉரிமை என்ற அடிப்படடையின்  மீதும், பகுத்தறிவு என்ற அடிப்படையின் மீதும் அமைந்திருக்கக் காண்கிறோம்.

நம் நாட்டுச் சீதோஷ்ண நிலையைப் பொறுத்தும் கருத்துக்களின் செழுமையைப் பொறுத்தும் நமக்குத் தமிழ் தான் உயர்ந்த மொழியாகும். வடநாட்டானுடைய ஆச்சாரங்கள், தர்மங்கள், ஆசாபாசங்கள் முற்றிலும் நமக்கு மாறுபட்டவை. அவற்றிற் கேற்ப அமைக்கப்பட்டுள்ள அவர்களது மொழியே அவர்களுக்கு உயர்வானதாகவும், நமது மொழி அவர்களுக்குத் தாழ்வானதாகவும் தோன்றுவது இயல்பு. ஆனால் நாமும், அவர்கள் நம் மொழியை மட்டமாகக் கருதுகிறார்களே என்பதற்காக நம் மொழியை மட்டம் என்று கருதிவிடலாமா? வடமொழியை ஆதரிக்கப் புகுந்து தானே நாம் பல மூடநம்பிக்கைகளுக்கும், பல இழிவுகளுக்கும் ஆட்பட்டுத் தவிக்கிறோம். வடமொழியில் நமக்குப் பெயர் சூத்திரன். நாம் ஏன் சூத்திரர்கள் என்று இன்று கேட்க ஆரம்பித்திருக்கின்றோம்.

இதற்கு நம் தமிழ் மொழியிலிருந்து ஒரே ஒரு ஆதாரமாவது காட்டட்டுமே. ஒன்றுகூட இல்லையே. வடமொழியை எடுத்துக் கொள்ளுங்கள், எவ்வளவு ஆதாரங்கள், கடவுள் வாக்குகளே அதற்கு ஆதாரமாய் வந்து விடுமே. இதே போல் மேலே கூறிய எந்த மூட நம்பிக்கைகளுக்கும் தூய தமிழ்மொழி இலக்கியத்திலிருந்து ஒரு ஆதாரங்கூட காட்ட முடியாதே. தற்போது தமிழில் வந்து புகுந்து கொண்ட வடமொழி வார்த்தைகளை எடுத்துவிட்டால் நம் குறைகள், தொல்லைகள் எவ்வளவு நீங்குமென்பதும், தொடர்பை ஏற்றுக் கொண்டால் எவ்வளவு இழிநிலைக்கு ஆளாக வேண்டியிருக்கிற தென்பதும் புரிகிறதல்லவா? பெரியார். (நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும் (தொகுதி 1)

வடமொழி சொற்களின் அர்த்தம் புரியாமல் அதை ஏற்றுக்கொண்ட தமிழர்கள் இன்று வரையிலும் பார்ப்பனியத்துக்கு அடிமையாய் வாழ்ந்துவருகின்றார்கள். சக மனிதனை ‘ஜாதி’ என்ற வார்த்தையாலும், ‘மதம்’ என்ற வார்த்தையாலும் ஒதுக்கி வைத்தான். தான் வாழும் சமூகத்தில் உள்ள மனிதர்களுக்காக வாழ்வது என்பது போய் மோட்சத்துக்காக வாழும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டான். அவனின் வாழ்க்கையே அர்த்தமற்றதாக பார்ப்பனியத்தால் மாற்றப் பட்டது. தமிழ்நாட்டை ஜாதியாலும், மதத்தாலும், மூடநம்பிக்கையாலும் நாசம் செய்த பார்ப்பனியம் தமிழ்மன்னர்களை தன்னுடைய பார்ப்பனிய சூழ்ச்சியால் ஆட்டுவித்தது.

தன் சொந்த நாட்டு மக்களுக்கு அவர்களின் தாய்மொழியில் கல்வி கொடுக்க மறுத்த மன்னர்கள் வந்தேறி பார்ப்பனர்கள் படிக்க தமிழகம் முழுக்க வேதபாடசாலைகளை நிறுவினர். மனுநீதி படி சூத்திரர்கள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டது. தமிழ்மக்கள் தாங்கள் உழைத்துச் சேர்த்த செல்வங்கள் பார்ப்பன கடவுள்களுக்கு கோயில்கள் கட்டவும், அதில் மணியாட்டும் பார்ப்பனர்கள் படிக்கவும் பயன்பட்டன. தமிழ்மக்களின் நிலங்கள் பிரம்ம தேயங்களாக பார்ப்பனர்களுக்கு கொடுக்கப் பட்டன. இப்படியாக பார்ப்பனியத்தைக் காப்பாற்ற தமிழ்மக்களை முட்டாள்களாகக் கல்வியறிவு அற்றவர்களாக மன்னர்கள் வைத்திருந்தனர். இதன் மூலம் மிக வலுவாக கேள்வி இன்றி தமிழ்மக்கள் மீது பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தியது.

ஆங்கிலேயர்கள் நவீன அறிவியல் கல்வியை சாதிவித்தியாசம் இன்றி கல்வி நிலையங்கள் நிறுவி இங்கு கொடுக்கவில்லை என்றால் இப்போது இருப்பதைவிட தமிழன் இன்னும் மோசமான இழிநிலையிலேயே இருந்திருப்பான். ஆங்கில மொழியின் வாயிலாகவே தமிழனுக்கு உலக தத்துவங்களும், அறிவியலும் அறிமுகமாயின. பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட தமிழர்கள் சிந்திக்கும் ஆற்றலை இழந்து அறிவியல் துறையில் மற்ற நாடுகளைவிட கீழ்நிலைக்குப் போனார்கள். இன்றுவரையிலும் நாம் பயன்படுத்தும் அனைத்து அறிவியல் சாதனங்களும் மேற்குலகில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்று சொல்லி சில பொருட்களை பயன்படுத்தினாலும் அந்தப் பொருட்களை தயாரிப்பதற்கான தொழிற் நுட்பம் நம்முடைய சுய கண்டுபிடிப்பாக இருக்காது. இதற்காக ஒட்டுமொத்த தமிழனும் மூளை இல்லாவன் என்று சொல்ல வரவில்லை.மேற்குலக நாடுகளை ஒப்பிடும் போது இங்கே தன்னுடைய சுய சிந்தனையால் அறிவியல் உலகிற்கு பங்களிப்பு செய்தவர்கள் மிக குறைவு என்பதுதான்.

தன்னுடைய வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக பார்ப்பன சடங்குகளைச் சார்ந்து கட்டமைத்துக்கொண்ட ஒருவனால் ஒருநாளும் சுய சிந்தனையாளனாய் மாறமுடியாது என்பது தான் உண்மை. ராகுகாலமும், எமகண்டமும்,  அஷ்டமியும், நவமியும், மோட்சமும் இல்லாத நாடுகளில் அறிவியல் அதன் உச்சத்தை தொட்டுக்கொண்டு இருக்கின்றது. ஆனால் இங்கே இருக்கும் பார்ப்பன நயவஞ்சக சக்திகள் தங்களுடைய மனிதகுல விரோத மூட நம்பிக்கைகளை அறிவியல் சாயம் பூசி இன்னும் இந்த மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப் பதற்கு முயன்றுகொண்டிருக்கின்றார்கள். மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு அறிவியல் சிந்தனையை ஊட்ட வேண்டிய விஞ்ஞானிகளின் சிந்தனையோ இந்தியாவில் மிக ஆபத்தான நிலையில்தான் இருக்கின்றது. விண்வெளிக்கு ராக்கெட்டை விட்டாலும் நல்ல நேரம் பார்த்து பார்ப்பனர்களை வைத்து பூஜை போட்டு விடும் நிலையில் தான் இந்திய விஞ்ஞானிகளின் அறிவு வளர்ச்சி இன்றும் இருக்கின்றது.

“இந்திய விஞ்ஞானிகளிடையே அண்மை யில்  அமெரிக்காவிலுள்ள சமூக-கலாச்சார மதச்சார்பின்மை பற்றிய ஆய்வு நிறுவனத்தினர் (ஐஎஸ்எஸ்எஸ்சி) நடத்திய ஆய்வில் (பங்கேற்றோர் 1100 விஞ்ஞானிகள், எல்லாரும் அடிப்படை அறிவியல்களிலும், பொறியிய லிலும், மருத்துவத்திலும் ஆய்வுப் பட்டம் பெற்றவர்கள்) அவர்களில் 26 சதவீதத்தினர் ஒரு தனிப்பட்ட கடவுளின் இருப்பிலும், மற்றொரு 30 சதவீதம் தனிநபர் சாராத ஆன்மீக சக்தியிலும் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர்.

ஏறத்தாழ 40 சதவீத இந்திய விஞ்ஞானிகள் கடவுள் அற்புத செயல்களைச் செய்கிறார் என்றும் 24 சதவீத விஞ்ஞானிகள் சிறப்பு தெய்வீக ஆற்றல் படைத்த ஆடவரும் பெண்டிரும் அற்புதச் செயல்களைச் செய்ய முடியும் என்றும் நம்பினர். குறிப்பிட்ட எண்ணிக்கையினர் (29 சதவீதம்) கர்ம வினையிலும் இன்னும் சிலர்(26 சதவீதம்) மரணத்திற்குப் பிறகு வாழ்க்கையிலும் மறு பிறப்பிலும் நம்பிக்கை கொண்டவர்கள். நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் என்ற வகையில் அடங்கக்கூடிய பலரும் பொது வழிபாடுகளில் பங்கேற்பதோடு, அற்புதங்களைச் செய்யும் சாமியார்களைப் பின்பற்றினர்(கடவுள் சந்தை-மீரா நந்தா).

இன்று மக்களை முட்டாள்களாக மாற்றும் வேலை கல்விநிலையங்களில் இருந்தே தொடங்கப்படுகின்றது. யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு முழுக்க ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அது திட்டமிட்டு இந்திய மாணவர்களின் மனங்களில் மூடநம்பிக்கையையும், பார்ப்பனி யத்தையும் பரப்பிவருகின்றது. ஜோசியம், யோகம், வேத அறிவியல்கள்(போலி அறிவியல்) போன்றவற்றை பல்கலைக்கழகங்களில் பட்ட படிப்புகளாக வைத்து இவற்றை உண்மை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இந்திய மக்களை அவர்கள் என்றென்றும் பார்ப்பனி யத்தின் பிடியில் இருந்து மீண்டுவிடாதபடி சதி செய்கின்றது.

நாம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சமஸ்கிருத வார்த்தைக்குப் பின்னாலும் இந்த மண்ணின் மக்களை முட்டாள்கள் ஆக்கும் மிகப்பெரிய பார்ப்பன சதித்திட்டம் இருக்கின்றது.  ஒரு மொழியோடு இன்னொரு மொழி கலக்கும் போது கலக்கும் மொழி அறிவியல் மொழியாக இருந்தால் அதனால் பிற்போக்கான நிலையில் இருக்கும் மக்கள் கூட்டம் கூட நாளடைவில் அறிவியல் சிந்தனைக்கு ஆட்பட்டு நாகரிக நிலையை அடைந்துவிடும். ஆனால் கலக்கும் மொழி அடிமைத்தனத்தையும், அநாகரிக தன்மையும் கொண்டிருக்குமேயானால் இருக்கும் கொஞ்சநஞ்ச நாகரிக நிலையில் இருந்து மக்கள் அநாகரிகத்தின் படுகுழிக்குள் விழுந்துவிடுவார்கள். தமிழன் தன்னை ஒரு சமூக மனிதனாக உணரவேண்டும் என்றால் முதலில் அவன்மொழியில் கலந்து அவனை இழிவுபடுத்திக்கொண்டிருக்கும் வட மொழி சொற்களுக்கு எதிரான போராட்டத்தை உடனே துவங்க வேண்டும்.

அதை முதலில் அவனின் வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு வடமொழியில் பெயர்கள் வைப்பதையும், நம்மை சூத்திரன் என்று  இழிவு படுத்தும் கடவுள்களின் பெயர்களை சூட்டாமலும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களின் பெயர்களும் தமிழ்மொழியில் மாற்றப்படவேண்டும். இன்று மண்ணுக்காகவும், நீருக்காகவும், இயற்கை வளங்களைக் காப்பாற்றவும் தமிழர்கள் போராடிக்கொண்டு இருக்கும் போது தமிழனை முட்டாளாகச் செய்யும் இந்த வடமொழி சொற்களுக்கு எதிரான போராட்டத்தையும் இதனோடு இணைத்து நடத்த வேண்டும் அப்போதுதான் தமிழன் சாதியையும் மதத்தையும், பெண்ணடிமைத்தனத்தையும் தூக்கி எறிந்துவிட்டு தன்மானமுள்ளவனாகவும் சுயமரியாதையுள்ளவனாகவும் மாறுவான்.

Pin It