நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அந்தந்தத் திங்களுக்கென்று, அந்தந்தப் பகுதிகளுக்கென்று சமய நிகழ்ச்சிகள், விழாக்கள், திருவிழாக்கள் என வெறும் வெற்று ஆரவாரத்திற்கும், மக்கள் மேம்பாட்டிற்கென்று இல்லாமல் வெற்றுக் கூச்சலுக்குமாக வந்து போவது போல், பொதுவாக அய்ந்தாண்டுக்கொரு முறை வரும் இந்தியா முழுவதற்குமான நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் திருவிழாவும் 2014 ஏப்பிரல் - மே திங்களில் நடைபெற உள்ளது.

இதற்கு அரசு பல ஆயிரம் கோடி ரூபாயை வீணாகச் செலவிடுவதுடன் தேர்தல் களத்தில் உள்ளோர் பல பத்தாயிரம் கோடி ரூபாயைச் செல விட்டு மக்களைப் பாழடிக்க உள்ளனர். இந்தப் பொதுத் தேர்தல், குடியரசு இந்தியாவில் 1952இல் தொடங்கி 57, 62, 67, 71, 77, 80, 84, 89, 91, 96, 98, 99, 2004, 2009 என நடந்தது; 2014இல் 16ஆம் தடவையாக நடைபெறவுள்ளது. இதன் விளைவாக சனநாயக அரசமைப்பின் ஓர் அலகு எனக் கருதப்படும் நாடாளுமன்ற மக்களவை அமைக்கப்பட உள்ளது. ஆனால், இந்த நாடாளுமன்ற மக்களவையால், உறுப் பினர்களால் வெகுமக்களுக்கு நன்மை விளைந்ததா? கேடுதான் சூழ்ந்ததா? என ஆராயலாம்.

1947இல் சுதந்தரம், 1950இல் குடியரசு நாடு என்று சொல்லப்படும் இந்தியாவை 1976 வரை காங்கிரசுக் கட்சி தனது முற்றுரிமை என்பதுபோல் ஆட்சி செய்தது. அதுவரையிலான நாடாளுமன்றத் தேர்தல்களில், அது தானடித்த மூப்பாகப் பெயரளவில் பொதுவுடைமைக் கட்சி தவிர்த்த வேறு எவ்வித எதிர்ப்புமின்றி காங்கிரசு வெற்றி கண்டது. அதன்பின் மூன்றாண்டுகள் சனதாக் கட்சி ஆட்சி, அடுத்து 1980-89இல் காங்கிரசு ஆட்சி தான்.

பின்னர், 1989-91 சனதாதளக் கட்சி தலைமை யிலான ஆட்சி. அடுத்தும் காங்கிரசுக் கட்சி ஆட்சி தொடர்ந்தது. இடையில் 1996-98இல் பிற கட்சி களின் கூட்டணி ஆட்சி, 1998-2004இல் பாரதிய சனதாக் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சி. பிறகு 2014 வரை பத்தாண்டுகளாகக் காங்கிரசுக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

மொத்தத்தில் சுதந்தரத்திற்குப் பிந்தைய இந்தியா வில், 55 ஆண்டுகளுக்கும் மேலாகக் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருந்துவந்துள்ளது. 12 ஆண்டுகள் காங் கிரசுக் கட்சிபோன்ற முதலாளியக் கட்சிகளான சனதா, சனதா தளம், பாரதிய சனதா முதலான கட்சிகள் ஆட்சிப் பொறுப்பிலிருந்தன.

கடந்த 67 ஆண்டைய சுதந்தர இந்தியாவில், எந்தக் கட்சி ஆட்சியிலும் வெகுமக்களாக உள்ள ஒடுக்கப்பட்ட உழைப்புச்சாதி மக்களான வேளாண் தொழிலாளிகள் - பாட்டாளிகள் வாழ்வில் மேம்பாடு சார்ந்த தன்மையில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்திட வில்லை. குறிப்பாக, அவர்களுக்குப் பொதுக்கல்வி, பொதுமருத்துவம், வேலை வாய்ப்பு எல்லாம் மறுக்கப் பட்டு அடித்தட்டு நிலையிலேயே அமிழ்த்தி வைக்கப் பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை.

இது ஓர் அவல நிலை. ஆனால், மேல்தட்டிலுள்ள 10-15 விழுக்காடு கூட்டத்தினரே எல்லா வளங்களும் கிடைக்கப் பெற் றவர்களாக, 85 விழுக்காடு மக்களை, அவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்வதற்கே வழிவகுக்கப்பட்டு விட்டது. எனவே, இந்தத் தேர்தல்கள் வந்து போகும் விழா என்ற இலக்கணத்திற்குரியதன்றி வெகு மக்க ளுக்கு எவ்வித நலனும் பயக்காது. இது பற்றிச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இக் கட்சிகளின்றி இந் நாட்டிலுள்ள பொது வுடைமைக் கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரிகள், ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ள அனைத்து உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் போராட்டங்கள் வாயிலாக இந்த முதலாளிய இந்திய அரசை நெருக்கு தலுக்குள்ளாக்கி, உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக் காகத் திட்டமிட்டுச் செயலாற்றியிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை.

மாறாக, சனநாயக நாடாளுமன்றம் பன்றித் தொழுவம் போன்றதாகும் என்றும், ஒடுக்கப்பட்ட பாட்டாளி உழைக்கும் மக்க ளுக்கானதல்ல என்றும் இலெனினால் தெளிவாக வறையறுக்கப்பட்ட பொதுவுடைமைக் கொள்கை களையும் கோட்பாடுகளையும் கொண்ட இவர்களும் இந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பிறகட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகளிலிருந்து பெரிதும் வேறுபடாத வகையில்தான், சில பன்றித் தொழுவ நாடாளுமன்ற இடங்களுக்காக, அவ்வப்பொழுது கழிசடைக் கட்சி களுடன் மதச்சார்பற்றோர் எனக் கூறிக் கூட்டுவைத்து இழிவான மலிவான அரசியல்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியோ, மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியோ கட்சி தொடங்கி 90 ஆண்டுகளுக்குப் பின்னும் குறைந்த அளவு பொதுக்கல்வி பற்றியோ, பொது மருத்துவம் பற்றியோ, வேளாண்மைத் தொழில் பற்றியோ தங்கள் நிலைப்பாட்டை ஆவணப்படுத்தியுள்ளனரா என்பதே பெரும் வினாவிற்குரியதாகும். அல்லது அந்தத் தடத் தில் மக்களிடம் தொடர்ந்து பயணித்து அவர்களை அவற்றிற்காக அணியமாக்கி யுள்ளனரா என்பதும் வினாவிற்குரியதுதான்.

இவர்கள் ஊதிய உயர்வு, ஊதிய மாற்றம் போன்ற பொருளாதாரச் சிக்கல்கள் பற்றி மட்டும் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதால், அமைப்பு சார்ந்த நான்கைந்து கோடி மக்களுக்கு மட்டும் பயன் கிட்டும். அதுவும் இம் மக்களில் பெரும்பாலோரின் பொருளா தார முன்னேற்றமும் நிலைப்படுத்தப்படாத நிலையில் சந்தைப் பொருளாதாரத்தைப் பின்பற்றும் இந்நாட்டில், அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறை விடம், மருத்துவம், கல்வி போன்றவற்றிற்கே ஈட்டிய வருவாய் முழுவதும் கடலில் கரைத்த பெருங்காயம் போல் சுவடே தெரியாமல் மறைந்து, அவர்களின் வாழ்க்கை மென்மேலும் சீர்கெட்டுக் கொண்டேதான் இருக்கும்.

இதுதான் இன்றைய இருப்பு நிலை.

உலகிலுள்ள எந்த நாட்டிலும் இன்று மக்களின் பொருளாதார நிலை மேலும் கீழுமாக இருக்கிறது. இருக்கத்தான் செய்யும். இது பண்டைப் பொது வுடைமைச் சமூகம் மறைந்து பல்லாயிரம் ஆண்டு களாகச் சமூகத்தின் பல தளங்களில் ஏற்பட்ட பல்வேறு காரணங்களின் விளைவுதான் எனலாம். இதனைச் சமனாக்குவது என்பது மீண்டும் பொதுவுடைமைச் சமூகம் தோன்றும் காலத்தில்தான் இயலும்.

ஆனால், நாடு, அரசமைப்பு என்று தோன்றி மக்களிடையே வேறுபாடு கருதாது அனைத்து மக்களுக்கும் ஒரே வகையான இலவயக் கல்வியையும், ஒரே தரமான இலவயப் பொதுமருத்துவத்தையும் சோசலிச நாடுகள், சப்பான், அய்ரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற முதலாளிய நாடுகள் வழங்கி வருகின்றன.

அதே தன்மையில் இந்திய அரசமைப்புச் சட்டத் தில் காலவரையறை கொண்ட ஒரே விதி, 45இல் சட்டம் நடைமுறைக்கு வந்த 1950இலிருந்து பத்து ஆண்டுகளுக்குள் - 1960க்குள் 14 அகவைக்கு உட் பட்ட அனைவருக்கும் கட்டாய இலவயக் கல்வி அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதில், ஒரே வகையான கல்வி அளிக்கப்படும் என்றும் சொல்லப் பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாததால் 3,5 அகவைக் குழந்தைகளை மழலையர் பள்ளிகளில், தொடக்கப் பள்ளிகளில் சேர்க்க, நாடெங்கிலும் உள்ள தனியார் கல்விக் குழுமங்கள் நன்கொடையாக இலக்கங் களிலும், பத்தாயிரங்களிலும் பணம் பறித்து வருவது பலப்பல ஆண்டுகளாக நடந்து வரும் கல்விக் கொள்ளைகள். இந்நிலைக்கு நாடே வெட்கித் தலை குனிய வேண்டும்.

இவையெல்லாம் பற்றிப் பொதுவுடைக் கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரிகள் பொறுப்புடனும் கவலை யுடனும் மக்கள் பற்றுடனும் ஆய்வுகளை மேற்கொண்டு ஒரே வகைப் பொதுக்கல்விக்குப் பாடுபட்டிருக்க வேண்டும். ஆனால், பிறப்பால் இழிந்தவன், தாழ்ந்த வன், உயர்ந்தவன் எனப் படிநிலைச் சமூக அமைப்பை ஏற்படுத்தியுள்ள இந்து மதத்தின் அடிவருடிகளாய்ப் பொதுவுடைமைக்காரர்கள் இருப்பதால்தான், ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கென்று தரமற்ற கல்வி முறை, பெரும் செல்வர்கள், மேல்தட்டு மக்களுக்கென உயர்தரக்கல்வி என்று தொடக்கக்கல்வி ஏழெட்டு வகையாக வகுக்கப்பட்டுத் தரப்படுகிறது. இது ஒரு வெட்கக் கேடான நிலை.

இந்த அவலம் தொடரும் நிலையில், நாட்டின் குடி யரசுத் தலைவர், நாட்டில் 25 கோடிப் பேரை எழுத்தறி வற்றவர்களாக வைத்துக்கொண்டு உயர் கல்வியில் அமெரிக்கா போன்று இந்தியா வளரவில்லை என்று கரிசனப்படும் இழிநிலை. இதில், பல பொருள்கள் பொதிந்துள்ளன. மாறாக, அங்கு மக்கள் பல பத் தாண்டுகளுக்கு முன்பே நூறுக்கு நூறு பேரும் கல்வி யறிவுள்ளவர்களாக உள்ளனரே; நம் நாட்டில் ஏன் இந்த இழிநிலை? என்று அங்குப் பலமுறை சென்று பார்த்து வந்த குடியரசுத் தலைவர் மனதில் தைத் திருக்க வேண்டுமல்லவா! இங்குதான் பார்ப்பனியம், இந்து மதம், மனு நீதி, வருணாசிரமம் எப்படித் தலை விரித்தாடுகின்றது என்பது படம் பிடித்துக் காட்டப் படுகின்றது. இந்நிலை தொடர நாடாளுமன்றம் ஏன் வேண்டும்? நாடாளுமன்றத் தேர்தல்தான் வேண்டுமா!

இதே நிலைதான் மக்களுக்கு மருத்துவம் வழங்கு வதில் நீடிக்கின்றது. 127 கோடி மக்களுக்கான மருத் துவத்திற்கு அரசு ஒதுக்கீடு ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வெறும் 0.8% மட்டுமே. இதன் விளைவு, ஏழை எளிய மக்களுக்கு அரசு பொது மருத்துவத்தை மறுத்து வருகிறது. ஆனால், இந்தியா போன்ற பல வளரும் நாடுகளில் 10 - 15% அளவுக்கு மருத்துவத்திற்கு ஒதுக்கப்படுகின்றது.

இங்கிலாந்து, கனடா, நார்வே, பின்லாந்து, சுவீடன் போன்ற நாடுகளில் நாட்டின் மருத்துவச் செலவில் 98% வரை அரசு ஏற்றுக்கொள்கிறது. ஆனால், இதில் இந்திய அரசின் பங்கு 15% மட்டுமே. இந்தச் செல வினத்தில் 90% செலவினம் பெரும் செல்வந்தர்கள் செய்துகொண்ட மருத்துவச் செலவாகும். இதில் பெரும்பங்கைத் தனியார் மருத்துவமனைகள் கொள்ளை கொள்கின்றன.

இந்த அவல நிலையில் வறியோரும் எளியோரும் நடுத்தர மக்களும் மருத்துவத்திற்கெனத் தனியார் மருத்துவமனையில் பல இலக்கம், பல பத்தாயிரம் ரூபாய் கட்டணம் கட்டிப் பரிதவிக் கிறார்கள். இதற்கு இயலாதோர் உயிரைப் பறி கொடுக்கிறார்கள். இதுவரை சென்ற 15 நடாளு மன்றங்கள் வெகுமக்களின் மருத்துவம் பற்றிக் கவலை கொண்டிருப்பின், ஒரு குறிப்பிட்டகால வரையறைக்குள் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த அளவு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி, கல்லூரியுடன் இணைந்த ஓர் அரசுப் பொது மருத்துவ மனை என்று திட்டமிட்டு அவற்றைத் தொடங்கி யிருக்க வேண்டாமா?

இந்த முதலாளிய ஆட்சியாளர்கள்தான் மக்கள் பற்றற்று மக்களை வதைக்கிறார்கள் என்றால், பொதுவுடைமைவாதிகளும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் அடிப்படையான மருத்துவத்தை அரசு கொடுத்திட, தொடர் வேலைத் திட்டம் வகுத்துச் செயல்படவில்லையே! இவ்வாறெல்லாம் அரசியலும் அரசும் நடப்பதற்கு ஏன் வேண்டும் இப்படிப்பட்ட சனநாயகமும், நாடாளுமன்றமும்? அதற்கென்று ஏன் தேர்தல்?

இந்திய நாட்டின் உயிர்நாடியான வேளாண்மைத் துறையை நம்பி வாழும் சிறு-குறு விவசாயிகள், விவசாயக் கூலிகள் ஆகியோரின் வாழ்நிலை மிகவும் இரங்கத்தக்க நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. சென்ற பத்தாண்டுகளில் 2.5 - 3.0 இலக்கம் விவசாயிகள், அவர்கள் விளைவிக்கும் விளைபொருள் களுக்கு ஈன விலை மட்டுமே பெறுகின்றனர். ஆனால், உற்பத்திக்கான இடுபொருள்களான விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் விலையை வரை யறையின்றி உயர்த்தியதால் விவசாயிகள் பெரும் பொருள் இழப்புக்கு உள்ளாக்கப்பட்டனர். இதைத் தாளாமல் விவசாயிகள் பல்லாயிரக் கணக்கில் தற்கொலை செய்துகொண்டு மாண்டுவிட்டனர்.

இந்த அவலம் உலகின் எந்த நிலப் பகுதியிலும் நிகழாத கொடுஞ்செயலாகும். இக்கொடுமையைப் போக்கிட ஆளும் கட்சிகளோ, பிற முதலாளியக் கட்சிகளோ உருப்படியான மாற்றுத் திட்டம் வகுத்துச் செயல்படுத்தி, அம்மக்களை இத்துயரிலிருந்து மீட்பதற்கு முன்வரவில்லை. பொதுவுடைமைக் கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரிகள், இவ் விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகளைத் தடுத்திட அரசுக்கு நெருக்குதல் தந்து தொடர் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்பதுடன், நாடாளுமன்றத்தில், சொல்லத்தக்க வகையில் எவ்விதச் செயல்பாடு களையும் மேற்கொள்ளவில்லை.

கல்வி, மருத்துவம், வேளாண் துறையில் வளர்ச்சிக்குப் போதுமான திட்டமிடாமல் வெகுமக்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டனர். இதன் நேர் விளைவாக உலக அளவில் மானுடமேம் பாட்டுக் குறியீடு அடிப்படையில் 173 நாடுகளைப் பட்டியலிட்டதில் இந்தியா 137ஆவது இடத்தைப் பெற்று, நாட்டின் அவல நிலையை வெளிப்படுத்து கின்றது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்தல் என்ற பெயரில் விளைநிலங்கள் சூரையாடப்பட்டு வருகின்றன. இதனால், சிறு-குறு விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலங்கள் பறிக்கப்படுவதால், அவர்களின் வாழ்க்கையே சிதறுண்டு வருகின்றது. இதற்குப் பொதுவுடைமைக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், இதில் சிறுமை என்னவென் றால், இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்படும்போது அதற்கு ஏற்பளித்து அரசுக்கு இவர்களும் துணை போயினர். மக்களுக்கெதிரான செயலற்ற இந்த நாடாளுமன்றமும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேண்டுமா? நாடாளுமன்றத் தேர்தலை இதற்காக ஏன் நடத்த வேண்டும்?

1977க்குப் பிறகு கூட்டணிக் கட்சி ஆட்சிகள் அமைக்க வேண்டி, குறைந்த அளவுப் பொதுத் திட்டங்களை நிறைவேற்றுவோம் என உறுதியளித்து அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டன. 1998, 1999லிருந்து பாரதிய சனதா கூட்டணி அமைத்தபோது குரங்குகள் ரொட்டியைப் பிரித்துக்கொள்வதுபோன்று எல்லாக் கட்சிக ளுக்கும் தொகுதிகள் பங்கீடுதான் முதன்மையான குறிக்கோ ளாகிவிட்டது.

வெகுமக்கள் நல்வாழ்வுக்கெனக் குறைந்த அளவுப் பொதுத் திட்டம் வேண்டுமென்ற பேச்சே எழாமற் போய்விட்டது. அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏழை எளிய மக்களின் உழைப்பையும் வாழ்க்கையையும் சுரண்டிச் சூரையாடி, முடிந்த அளவுக்கு எப்படியெல்லாம் கொள்ளை கொள்ளலாம் என்றுதான் திட்டமிடுகின்றன எனத் தெளிவாகின்றது. இதற்கு ஏன் மக்களுக்கென் றில்லாத ஒரு நாடாளுமன்றம்! அதற்கென ஏன் ஒரு தேர்தல்?

அரசை நடத்துகின்ற அரசியல் கட்சிகள் பெரிதும் வெகுமக்கள் நலன் கருதாத் தன்மையில் - எவ்விதப் பொறுப்பான, பயனுள்ள திட்டங்களையும் வகுக்கா மல் செயல்படுகின்றன. இதே தன்மையில்தான் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் செயல்படு கின்றனர் என்பதை அவர்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்வதை, 790 பேருள் பெரும் பாலோர் அவ்வாறு பயன்படுத்தாமல் பெரும்பகுதி ஒதுக்கீட்டை அரசுக்கே திருப்பிச் செலுத்திவிடுகின் றனர் என அறியமுடிகின்றது. இதில் பொதுவுடைமைக் கட்சியினரும் விதிவிலக்கல்ல. இவர்கள் உண்மையில் வெகுமக்கள் பற்றுள்ளவரெனில் அவரவர் தொகுதி யில் பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனைக் கட்டடங்கள் கட்டிட நிதியை ஒதுக்கியிருக்கலா மல்லவா?

நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை உற்று நோக்கினால், உறுப்பினர்களில் பெரும்பாலோர் பெரும்பகுதி நேரங்களில் அவைக்கே வருவதில்லை. வந்தவர்களில் பெரும்பாலோர் மக்கள் நலன் குறித்த விவாதங்களில் உருப்படியாகப் பங்கெடுத்துக்கொள் வதும் இல்லை. இவர்களில் யாரும் தன் முனைப்பாக அவையில் எந்த ஒரு திட்டத்தையும் முன்னெடுத்து வைப்பதுமில்லை.

ஆனால், இவர்கள் வெறும் வெற்றுக் கூச்சல் போட்டு, அவையின் பெரும்பகுதி நேரத்தை முடக்கியே வைக்கின்றனர். இவ்வாறு அவை நடக்கும் காலத்தின் பெரும்பகுதியை வீணடித்து, அவை நடத்தச் செலவிடப்படும் பல ஆயிரம் கோடி ரூபாயை விரயம் செய்து, அவர்கள் சம்பளம், படிகள் எனப் பல ஆயிரம் கோடி ரூபாயை விழுங்கிக் கொண் டிருக்கிறார்கள்.

இறுதியாக எல்லா அரசியல் கட்சிகளையும் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் முதன்மை அமைச்சர்கள், குடியரசுத் தலைவர் பல கால கட்டத்தில், பல அயல்நாடுகளுக்கும், பல நாள்கள் ஏதாவதொரு வேலை என்று சொல்லிக்கொண்டு இந்த 67 ஆண்டுகளிலும் பயணம் மேற்கொண்டுதான் வந்துள்ளனர். இவர்கள் ஸ்காண்டிநேவிய நாடுகளான பின்லாந்து, சுவீடன், அய்ரோப்பிய நாடுகள் - குறிப் பாக இங்கிலாந்து, பிரான்சு, கனடா, அமெரிக்கா, சப்பான் போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்றபோது, அங்குள்ள மக்களுக்கு அளிக்கப்படும் கல்வி, மருத் துவம் குறிப்பாக வேளாண் மக்களுக்கு அளிக்கப்படும் அரசு உதவிகள் எல்லாவற்றையும் கவலையுடன் தெரிந்துகொள்ள முற்பட்டிருக்க வேண்டும்.

குறைந்த அளவு எல்லா மக்களுக்கும் இலவயப் பொதுக் கல்வி யும், பொது மருத்துவமும் அந்நாட்டு அரசுகள் அளித்து வருகின்றன என்ற உண்மையையும் இதுவரை அறியாமலே இருந்து வருகின்றனரா? என்பதே அதிர்ச்சியாக இருக்கின்றது. குறிப்பாக இவை பற்றியெல்லாம் பொருளாதார வல்லுனர்களான மன்மோகன், மான்டேகு அலுவாலியா, ப.சிதம்பரம் மற்றும் அத்வானி, அருண் ஜேட்லி, பரதன், து.இராஜா, பிரகாஷ் காரட், சீத்தாராம் யெச்சூரி போன்ற இவர்களுக்காவது அறிய வராமல் இருந் திருக்க முடியாது. அதன் பின்னும் இவர்களுக்கெல் லாம் நம் நாட்டு மக்கள் நல்ல வாழ்வின்றித் தவித்து வருவது பற்றி இவர்கள் மனச்சான்று உறுத்தவே இல்லையா? குறைந்த அளவு இவர்கள் அரசியல் வாழ்வில் இது பற்றியெல்லாம் ஏதாவது ஒரு தளத்தில் கலந்துரையாடி உள்ளனரா?

உண்மையில் வெகுமக்களுக்கெதிராகக் கல்வி, மருத்துவம், வேளாண் துறை என்றில்லாமல் எல்லாத் தளங்களிலும் எல்லையில்லாக் கேடுகளையும் துரோகத் தையும் செய்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நாட்டிற்குத் தேவையா? நாடாளுமன்றம்தான் தேவையா? இந்த வெற்று மன்றத்திற்கென்று தேர்தல் ஒரு கேடா?

இவற்றையெல்லாம் பொதுமக்களாகிய நாம் அனை வரும் மனச் சான்றுடன் சீர்தூக்கிப் பார்த்து, இந்த நாடாளு மன்றம் வேண்டுமா? என உரத்துச் சிந்திப்போம். இந்த நாடாளுமன்ற வெற்றுத் தேர்தலைப் புறக்கணிப்போம். உண்மையான மக்கள் நாயக, மதச்சார்பற்றச் சோசலிச மக்களரசை நிறுவுவதற்கு வெகுமக்களான பாட்டாளிகள், தொழிலாளிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரளுவோம்; போராடுவோம்; வெற்றி பெறுவோம்!

Pin It