இராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், அறிவு என்கிற பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப் பட்டிருந்த தூக்குத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்து, 18.02.2014 அன்று, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் அவர்கள் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது.

மேலேகண்ட மூவரும் 23 ஆண்டுகள், எப்போது தூக்குப் போடுவர்களோ என்கிற மனக்கொதிப்பிலும், கவலையிலும் கூட-நல்லொழுக்கமுள்ளவர்களாகச் சிறை வாழ்க்கையில் நடந்து கொண்டார்கள். அவர்களின் இரங்கத்தக்க இந்த நிலையைக் கண்டு, “தமிழ் நாட்டு அரசினர், அவர்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திக் குற்றவியல் தண்டனைக் சட்டம் பிரிவு 435 இன் கீழ், அம்மூவரையும் விடுதலை செய்யலாம்” என்று உச்சநீதிமன்ற அமர்வு அத்தீர்ப்பில் தெளிவுபடத் தன் கருத்தைத் தெரிவித்தது.

இதனையடுத்து இம்மூவருடன் வாழ்நாள் கைதிகள் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் சேர்த்து ஏழு பேரையும் விடுதலை செய்வதாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செயலலிதா, அடுத்தநாளே அறிவித்தார்.

sinthana ya lan march2014

தமிழ்நாட்டு அரசின் அந்த முடிவை எதிர்த்து, இந்திய அரசு, முதல் மூன்று பேர்களையும் விடுதலை செய்வதற்குத் தமிழ்நாட்டு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, அவர்களின் விடுதலையைத் தடை செய்யக்கோரி ஒரு வழக்கையும் அதன்பின் ஏனைய நால்வரின் விடுதலையையும் எதிர்த்துப் பிரிதொரு வழக்கையும் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்து உள்ளது.

இதன்படி 18.02.2014 அன்று, உச்சநீதிமன்றம், ‘சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தமிழ்நாட்டு அரசு விடுதலை செய்யலாம்’ என்று கூறியதற்கு மாறாக, 24.02.2014 அன்று உச்சநீதி மன்றத்தில் இந்திய அரசு வழக்குத் தொடுத்திருப்பது 18.02.2014 அன்று சொல்லப்பட்ட தீர்ப்புக்கு எதிரானது. மேலும் இந்திய உச்சநீதிமன்றத்தின் அத்தீர்ப்பை இது அவமதிப்பதும் ஆகும்.

படுகொலைக்குள்ளான இராசீவ் காந்தி அவர்கள், 1991 மே 21 இல் தமிழகத்திற்கு வந்தார். அப்போது அவர் முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சராவார். அவருடைய வருகையைப் பற்றி அன்றையத் தமிழ்நாட்டுக் காங்கிரசுத் தலைவர் வாழப்பாடி கூ.இராமூமூர்த்திக்கு எதுவும் தெரியாது. ஏனெனில் இராசீவ் காந்தி, முன்னாள் இந்திய அமைச்சர் மரகதம் சந்திரசேகர் அழைப்பின் பேரிலேயே தமிழகம் வந்தார்; அந்த அம்மையாருடைய மகள் வீட்டில்தான், யாழ்ப் பாணத்துத் தமிழ்ப் பெண்மணி தாணு தங்கியிருநதார்.

அவளுடைய வீட்டிலிருந்துதான் அவர்களுடன் ஈழப்பெண்மணியும் திருப்பெரும்புதூர் கூட்ட மேடைக்கு அருகில் சென்றார். இராசீவ்காந்தி திருப்பெரும் புதூருக்கு வரும்போது, அவருடன், மகிழுந்தில் இரண்டு அயல் நாட்டுப் பெண்மணிகள் நேர்காணல் செய்கிற சாக்கில் வந்தனர். அவர்கள் யார்? இதுபற்றியெல்லாம் இராசீவ் கொலைவழக்கில் எந்தப் புலனாய்வும் செய்யப்படவில்லை.

இராசீவ் காந்தியுடன் வந்த இரண்டு அயல்நாட்டுப் பெண்மணிகள் என்ன ஆனார்கள் என்ற கவலை யாருக்கும் இன்றுவரை இல்லை.இந்த நிலையில் சோனியாகாந்தி அவர்களும், இராகுல்காந்தி அவர்களும், “ஒரு முன்னாள் பிரதமரைக் கொலை செய்யக் காரணமாக இருந்தவர்களை விடுதலை செய்யக்கூடாது” என்று கூறித் தங்களுக்கு இன்றைக்கு உள்ள பேரதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இன்று வாழ்நாள் கைதிகளாக உள்ள ஏழு தமிழர்களும் மிச்சக்காலம் முழுவதும் சிறையிலேதான் இருக்கவேண்டும் என்று ஈவு, இரக்கம் இல்லாமல் பழிவாங்கும் வன்னெஞ்சத்தோடு செயல்படுகிறார்கள். இவை மட்டுமா?

இராசீவ்காந்தி விரைவில் கொலை செய்யப்படுவார் என்று, 1991 தொடக்கத்திலயே கூறி, அன்றையப் பாலஸ்தீன விடுதலைப் போராளியாசர் அராபத், இராசீவ் காந்தியை நேரில் எச்சரித்தார். அதை இராசீவ் காந்தி உதாசீனம் செய்தார்.

அதற்கு முன்னரே, “தி டைம்ஸ் ஆஃப் அஸ்ட்ராலஜி  (The Times of Astrology)  என்கிற ஒரு சோதிடப் பத்திரிக்கையின் ஆசிரியர் கே.என்.இராவ் என்பவர், “இராசீவ் காந்தியின் சாதகக் கணிப்பின்படி 06.06.1990 முதல் 20.08.1991க்கு இடைப்பட்ட மீன-தன கால கட்டம், இவருக்குச் சிம்ம லக்கினம் நடக்கும் கால மாகும். அதாவது இராசீவின் அரசியல் நடவடிக்கை களில் மாறுதலான ஒரு போக்கு இருக்கும் காலமாகும் இது”, என்று கூறியிருந்தார்.

அதேபோல் “இல்லஸ்ட் ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா (Illustrated Weekly of India) என்கிற ஆங்கில வார ஏட்டின் மே 25-31 இதழில் வெளிவந்த பல சோதிடர்களின் கருத்தை மேற்கோள் காட்டி, “தி டெலிகிராப்” என்கிற ஆங்கில நாளேட்டில், 1991 மே 12இல், “தேர்தலுக்கு முன்னாள் பேரதிர்ச்சி தரக்கூடிய அரசியல் படு கொலை நடக்கக்கூடும்; அதற்கான முயற்சி கட்டாயம் நடக்கும்” என்று மேலே கண்ட சோதிடர்களில் ஒருவ ரான பிரயாக் பந்தோபாத்யாயா என்பவர் எழுதி விட்டார்.

மேலே கண்டவர்கள் ஏன் அப்படி எழுதினார்கள் என்று, எந்த இந்தியப் புலனாய்வுத்துறையும், தமிழகப் புலனாய்வுத் துறையும் ஆய்வு செய்யவில்லை. இதில் உள்ள கமுக்க முடிச்சு இன்றுவரை அவிழ்க்கப்படவில்லை.

‘இராசீவ்காந்தி கொலை செய்யப்படுவதற்குச் சுப்பிரமணியசாமியும், சந்திராசாமியும் ஏற்பாடு செய்தார்கள்’ என்று உலகம் முழுவதும் அன்று பேசப் பட்டது. மேலும் இராசீவ் காந்தியின் கொலைக்கான உள்நோக்கம்  என்ன என்பதைக் கண்டுபிடிக்க பிரிதொரு ஆணையம் அமைக்கப்பட்டு, அதனுடைய ஒரு இடைக்கால அறிக்கையும் வெளியிடப்பட்டது. ஆனால் இறுதி அறிக்கை வெளியிடப் படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளதின் உள்நோக்கம் என்ன என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டுத் தன் கணவனைக் கொன்றதாகப் பொய்யான வழக்கில் பிணைக்கப்பட்ட ஏழு அப்பாவித் தமிழர்களை, அவர்கள் சாகும்வரையில், சிறையில் வைத்துப் பழி வாங்கவேண்டும் என்ற கல்நெஞ்சத்தோடு சோனியா காந்தி செயல்படுவதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாளைக்கே இந்தியத் தலைமை அமைச்சராக ஆகப்போவதாக நினைத்துக் கொண்டு, தன் தந்தையின் கொலையில் பிணைக்கப்பட்ட ஏழு அப்பாவித் தமிழர்கள் சிறையிலேயே செத்துத்தான் போகவேண்டும் என்று இராகுல் காந்தி நினைப்பது அறிவுடைமையும் அன்று; அறமும் அன்று.

இத்தகைய காங்கிரசுக் கொடுங்கோலர்களைத் தமிழகத்தில் வருகிற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வச் செய்கிற வகையில் தமிழக மக்கள் ஒட்டுமொத்தத் தேர்தலையும் புறக்கணிக்க வேண்டும். ஏழு தமிழர்களும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படும் வரையில் ஓயாது தமிழர்கள் போராட வேண்டும்!

Pin It