ஒரு மனிதன் தனது உணர்வுகளைத் தான் பேசும் மொழியின் ஊடாகவே இன்னொருவருக்கு வெளிப்படுத்துகின்றான். அந்த மொழி தெரிந்தவர்கள் அதனை அதே உணர்வுடன் கேட்பர்.

ஒவ்வொரு மனிதனும் தனது உச்சமான உணர்வைத் தனது தாய் மொழியிலேயே முழுமையாக வெளிப்படுத்துகின்றான். அதாவது ஒரு மனிதனின் அடிமனச் சிந்தனை அவனது தாய் மொழியிலேயே இருக்கும் என்பதே இதன் பொருளாகும்.

இந்த வகையில் இசை என்பது அனைவரையும் இன்புறச் செய்யும் சிறந்த கலை வடிவமாக இருக்கின்ற போதும் இசைக்கலையிலும் மொழியின் முக்கியத்துவம் பேணப்பட்டால் அந்த இசைவடிவமானது அனைத்து நிலை மக்களையும் சென்றடையும்.

தமிழ் மக்கள் முன்னிலையில் தெலுங்கு மொழியிலோ வடமொழி யிலோ இசையரங்கை அமைத்துக் கொண்டால் அந்த இசையரங்கானது முழுமையாக வெற்றிபெறும் என்று கூறமுடியாது.

பார்வையாளர்கள் விளங்கிக்கொள்ளக் கூடிய மொழியில் பாடல்களைப் பாடுவதன் ஊடாகவே ஓர் இசையரங்கைச் சிறப்புற நிகழ்த்த முடியும். ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் நடைபெறும் இசை விழாக்கள் முழுமையாகத் தமிழ் மக்களால் விரும்பப்படும் விழாக்களாக நடைபெறாமைக்கான காரணம் தமிழ் மொழிப் புறக்கணிப்பே ஆகும்.

தமிழிசையானது தென்னக இசை ஆற்றுகைகளில் முக்கியத்துவம் பெறாமைக்கான காரணங்களையும் எதிர்காலத்தில் தமிழிசையானது சிறப்படைவதற்கான வழிமுறைகளையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.

தமிழிசையின் நிலை

உலகில் காணப்படும் மொழிகளுள் தமிழ் மொழி யானது மிகவும் தொன்மையான மொழியாகும். மிகவும் செழுமையான இலக்கிய, இதிகாச, புராண வரலாறுகளைத் தன்னகத்தே கொண்ட மொழியாகவும் தமிழ் மொழியானது காணப்படுகின்றது.

எனினும் தமிழ் மொழியை, தமிழ் இசையைப் பயன்படுத்துவதிலும் அதனைக் கேட்டு இன்புறுவதிலும் தற்காலத் தமிழ்ச் சமூகத்தின் ஆர்வம் குறைந்து வருவது கவனிக்கத்தக்க விடயமாகும்.

சங்க இலக்கிய காலம் முதல் இன்று வரையான காலம் வரையில் தமிழ் மொழியில் ஏராளமான பாடல்கள் உருவாக்கம் பெற்று வந்துள்ளன. எனினும் ஏனைய மொழிப்பாடல்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், தமிழகத்திலும் ஈழத்திலும் நடைபெற்று வரும் தென்னக இசையரங்குகளில் தமிழிசைப் பாடல் களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்பதும் தமிழிசை ஆய்வாளர்களால் உற்று நோக்கப்பட வேண்டிய விடயங்கள் ஆகும்.

தமிழிசைப் பாடல்கள்

தமிழ் மொழியில் அமைந்த பாடல்களே தமிழிசைப் பாடல்கள் ஆகும். திருமுறைப் பாடல்களும் தமிழிசைக்குள் அடங்கும். தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் எண்ணற்ற தமிழிசை வாக்கேயக்காரர்கள் பல நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றியுள்ளனர். முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவிராயர், பாபநாசம் சிவன், கோபால கிருஷ்ண பாரதியார், நீலகண்ட சிவன், கோபாலையர், கோடீஸ்வர ஐயர், பெரியசாமி தூரன், அண்ணாமலை ரெட்டியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஊத்துக்காடு வெங்கட சுப்பையர், எம்.எம்.தண்டபாணி தேசிகர், லால்குடி ஜெயராமன், எம்.பாலமுரளி கிருஷ்ணா, அம்புஜம் கிருஷ்ணா, ஜி.என்.பாலசுப்பிரமணியம் போன்ற இயலிசைப் புலவர்களும்,  இராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய பாரதியார், பாரதிதாசன், வாலி போன்ற இயற் புலவர்களும் எண்ணற்ற தமிழ்ப் பாடல்களை இயற்றியுள்ளனர்.

இவை தவிர சுவாமி விபுலானந்த அடிகள், ஆறுமுக நாவலர், உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், யோக சுவாமிகள், இயலிசை வாரிதி ந.வீரமணி ஐயர், அருட்கவி வினாசித்தம்பி, ஏ.கே.ஏரம்பமூர்த்தி, பொன்னாலை சிவகுருநாதன், பொன்னாலை கிருஷ்ண பிள்ளை, எல்.திலகநாயகம்போல், பொன்.ஸ்ரீவாமதேவன், அரியாலை ச.பாலசிங்கம் போன்ற ஈழத்தின் இசைப் புலவர்களும் எண்ணற்ற தமிழ்ப் பாடல்களை இயற்றி யுள்ளனர்.  

தமிழ்ப் பாடல்கள் பற்றிய கருத்தியல்கள்

தமிழ்நாட்டில் தோன்றிப் பெருவளர்ச்சி கண்ட செந்நெறி இசையானது மிகவும் தொன்மையானது என்னும் பொருள்பட கர்நாடக இசை எனப் பெயர் பெற்றது. இவ்விசையைத் தென்னக இசை என்றும் கூறுவர். தமிழ்நாட்டில் வாழ்ந்து இசைப்பணியாற்றிய தொடக்ககால வாக்கேயக்காரர் பலர் தெலுங்கிலும், வடமொழியிலுமே உருப்படிகளை (பாடல்களை) இயற்றினர். இவர்களது புதிய படைப்புக்கள் இவர்களது மாணவர்கள் ஊடாகத் தமிழ்நாட்டிற்கும் ஏனைய இடங்களுக்கும் பரவலாக்கம் பெற்றன.

இதனால் இசையரங்குகளில் தமிழ் மொழி அல்லாத பாடல்களே முக்கியத்துவம் பெற்று வந்தன. நீண்ட காலமாக இந்நிலை தொடர்ந்து வந்ததால் கர்நாடக இசை என்பதன் ஆழம் தெலுங்கு, வடமொழி போன்ற மொழிக் கீர்த்தனைகளிலேயே பொதிந்து கிடக்கின்றது என்னும் கருத்து கலைஞர்கள் மத்தியில் நிரந்தரமாக வேரூன்றி விட்டது.

பாபநாசம்சிவன் காலத்திற்குப் பின்னரே தமிழ்க் கீர்த்தனைகள் இசையரங்குகளில் ஓரளவு சேர்த்துக் கொள்ளப்பட்டன எனலாம். இசைச் செழுமை கொண்ட பாடல்கள் தமிழில் குறைவு எனும் எண்ணம் இசையாளர்கள் மத்தியில் இருந்தமையால் பிரதான உருப்படியாகத் தமிழில் பாட எவரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழிசை மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் பலர் முயற்சிகள் செய்தாலும் இசையரங்குகளில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை எனலாம்.  தமிழிற்கென எடுக்கப்படும் விழாக்களில் மட்டும் தமிழிசைப் பாடல்களைப் பாடும் இசையாளர்கள் ஏனைய இசையரங்குகளில் தமிழ் மொழிக்கு முக்கியத் துவம் கொடுக்க விரும்புவதில்லை என்பதும் உண்மையான விடயங்கள் ஆகும்.

தமிழ்நாட்டில் நிலவிய அதே நிலை ஈழத்திலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் நிலவியது. இன்றும் அதே நிலையே நீடித்து வருகின்றது. முது கலைஞர்கள் பலர் தமிழிசையின் பால் நாட்டம் குறைந்தவர்களாகக் காணப்படுகின்றமையே இதற்கான முக்கிய காரணம் ஆகும்.

முதுகலைஞர்கள் தமது சிறுபிராயத்தில் கற்றுக் கொண்ட தெலுங்கு, வடமொழிக் கீர்த்தனைகளைத் தவிரப் புதிதாகத் தமிழ்க் கீர்த்தனைகளைக் கற்றுக் கொள்ளவோ புத்தாக்கச் செயற்பாடுகளில் ஈடுபடவோ இவ்வகையான சிந்தனை கொண்டவர்களாக மாணவர் களை உருவாக்கவோ எவரும் விரும்பவில்லை. 

ஈழத்து இசையரங்குகளின் தன்மை

தமிழ் மக்கள் செறிந்து வாழும் இடங்களில் தமிழ் மொழியல்லாத பாடல்களுக்கே இசை அரங்குகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் தென்னக இசை யானது மக்கள் மயப்படவில்லை என்று கூறலாம். இசை விழாக்கள், கலை விழாக்கள் நடைபெறும் இடங்களில் தமிழ் அல்லாத பாடல்களுக்கே இசையாளர்கள் முக்கியத் துவம் கொடுக்கின்றனர்.

இசையரங்கின் நிறைவில் ஒரு சில மெல்லிசைப் பாடல்களை மட்டும் தமிழில் அமைந்தனவாகச் சேர்த்துக்கொள்ளுகின்றனர். இதனால் ஈழத்து இசையரங்குகளில் தமிழிசையின் பயன்பாடு மிகவும் குறைந்தே காணப்படுகின்றது எனலாம். எனினும் யாழ்ப் பாணத்தின் நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் தெய்வீக இசையரங்கில் தமிழ்க் கீர்த்தனைகள் மட்டும் பாடப்பட வேண்டும் எனும் நியமம் ஏற்பாட்டாளர்களால் பல ஆண்டுகளாகக் கோரப்பட்டு வந்தாலும் இந்த நியமத்தைப் பல கலைஞர்கள் பின்பற்றுவதில்லை.

நிறைவுரை

தென்னக இசையரங்குகளில் தமிழிசைப் பாடல் களை அதிகரிப்பதற்கான வழிமுறைகளுள் முதன்மை யானதாகத் தமிழிசை விழாக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இளையோரிடையே தமிழிசை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் தமிழிசை பற்றிய கருத்தரங்குகள்  போட்டிகள் என்பன நடாத்தப் பட வேண்டும்.

தமிழிசைப் பாடல்கள் ஒலிப்பதிவு களாகவும் நூல்களாகவும் வெளியிடப்படுவதும் முக்கிய மானதாகும்.

அத்துடன் இசையரங்கில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பல நூற்றுக்கணக்கான பாடல்களை முது இசைக் கலைஞர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புதிய மாணவர் பரம்பரையை உருவாக்கிக் கொண்டிருக்கும் இசையரங்க ஆற்றுகையாளர்கள் தமது  மாணவர்களைத் தமிழிசைப் பற்றுள்ள மாணவர்களாகவும் புதிய தமிழ்க் கீர்த்தனைகளை அறிமுகம் செய்யும் ஆற்றல் கொண்டவர் களாகவும் உருவாக்க வேண்டும்.

மேலும் யாழ்ப்பாணத்திலும் ஈழத்தின் ஏனைய பகுதிகளிலும் இயங்கி வரும் அரச இசை நிறுவனங்களும் பாடசாலைகளும் தமது இசைக் கற்பித்தலில் தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அத்துடன் தமிழிசை பற்றிய ஆராய்ச்சிகளையும் ஊக்குவிக்க வேண்டும்.  வினைத்திறன், ஆற்றுகைத்திறன்  கொண்ட இசையாளர்கள் தமிழிசையின் வளர்ச்சி பற்றி அதிகூடிய அக்கறை கொள்ளும் பட்சத்தில் இசையுலகில் தமிழிசையை நிச்சயமாக வெற்றிபெறச் செய்யமுடியும்.

உதவிய நூல்களின் விபரம்

1. பக்கிரிசாமி பாரதி கே.ஏ. இந்திய இசைக் கருவூலம், குசேலர் பதிப்பகம், 2004

2. திலகநாயகம் போல் எல்., தமிழிசையின் தொன்மையும் திண்மையும், கரிகணன் பதிப்பகம், 2010

3. அருணாச்சலம் மு, தமிழிசை இலக்கிய வரலாறு, கடவு பதிப்பகம், 2009

4. அருணாச்சலம் மு, தமிழிசை இலக்கண வரலாறு, கடவு பதிப்பகம், 2009

5. சேமாஸ்கந்த சர்மா அ.நா, ஈழத்து இசை முன்னோடிகள், திருமகள் அச்சகம், 1995

6. பாலசிங்கம் ச. இசைவாழ்வில் எழுபதாண்டுகள், ஷாம்பவி பதிப்பகம், 2011

7. நீலகண்டன் கா, சுதர்சன் செ, உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு, 2014

Pin It