கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்திய பொதுவுடைமைக் கட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு குறித்து இருவேறு கருத்துகள் உள்ளன. எம்.என். ராய், எல்லின்ராய் - டிரெண்ட், அபானி முகர்ஜி, ரோசாஃபிட்டிங் கோவ், முகமது அலி, முகமது ஷாபிக், ஆச்சாரியா ஆகிய ஏழு பேர் கூடி தாஷ்கெண்ட்டில் 17.10.1920-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைக் கட்டினர். 1913-14-இல் கதார் கட்சி என்ற ஒன்றும் கட்டப்பட்டது. இதனால் எழுச்சி பெற்ற முசாஃபர் அகமது, எஸ்.ஏ. டாங்கே, சிங்காரவேலர் ஆகியோர் மும்பை, கொல்கத்தா, சென்னை, இலாகூர் மற்றும் கான்பூரில் சிறுசிறு பொதுவுடைமைக் குழுக்களைக் கட்டினர். 1925-இல் இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி தொடங்கப்பட்டதை வைத்து அதையே தொடக்க ஆண்டாகச் சிலர் எடுத்துக் கொள்கிறார்கள். நாம் தாஷ்கெண்டில் தொடங்கப் பட்டதை வைத்து இவ்வாண்டை நூற்றாண்டாகக் கொள்கிறோம். இதன் வரலாறை 1969 வரையில் ஒரு பகுதியாகவும், 1969-இல் நடந்த நக்சல்பாரி எழுச்சி நடந்த ஆண்டுக்குப் பிறகு இன்னொரு பகுதியாகவும் காணலாம்.

communist leaders1920-ஆம் ஆண்டு தாஷ்கெண்ட்டில் இ.பொ.க. தொடங்கப்பட்ட காலம் முதலே முஸ்லிம்கள் தலையாய பங்காற்றி வருகின்றனர். தமிழே தெரியாத அமீர் ஹைதர் கான் தமிழ்நாட்டில் கட்சி கட்ட அனுப்பப்பட்டார். பி.சுந்தரய்யா அவரால் கட்சியில் சேர்க்கப்பட்டவர், 1920-30களில் அமைப்பு நிலை வலுவின்றி இருந்தது. பல குழுக்களாகச் செயல்பட்டனர். 1934-இல் பிரிட்டிஷார் கட்சியைத் தடை செய்தனர். 1921-க்கும் 1924-க்கும் இடையில் பெஷாவர், மீரட், கான்பூர் சதிவழக்குகள் போடப்பட்டன. சிங்கார வேலர் உடல்நலக் குறைவால் விடுவிக்கப்பட்டார். எம்.என்.ராய் ஜெர்மனியிலிருந்தார். ஆர்.சி. சர்மா புதுவையிலிருந்தார். இவ்வழக்குகளில் பலர் சிறைப்பட்டனர். கடும் அடக்குமுறைகள் ஏவப்பட்டன. வெளிப்படை யான பொதுவுடைமைக் கட்சி நடவடிக்கைகள் உழைப்பாளர், உழவர் கட்சியின் (WPP) வாயிலாக நடந்தன.

பொதுவுடைமை அகிலத்தின் 6-ஆவது பேராயம் கோமிண்டாங்கில் கூடியது. வன்குடியேற்ற (காலனி) நாடுகளில் தேசிய முதலாளிகளுடன் சேர்ந்து கூட்டணி கட்டலாம் என்ற தீர்மானத்தை மீளாய்வு செய்தது. இந்திய தேசியக் காங்கிரசின் தேசியச் சீர் திருத்தவாதத்தை எதிர்த்து முகமூடியைக் கிழிக்குமாறு அறைகூவல் விடுத்தது. அது அமைதி வழிப் புரட்சியை எதிர்த்தது. காங்கிரசு சுயராச்சியக் கட்சியை நம்பக் கூடிய கூட்டாளி யாகவோ, எதிரியாகவோ பார்க்க முடியாது என்ற நிலைபாடு எடுத்தது. தேசிய முதலாளிகளுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்துமாறு பொதுவுடைமையர் கேட்டுக் கொள்ளப்பட்டனர். எனவே பொதுவுடைமையர் இந்தியப் பேராயக் கட்சியில் ஊடுருவினர். 1936-37-ல் பேராய நிகர்நிலைக் (சமத்துவக்) கட்சியாக வேலை செய்தனர். பேராய நிகர்நிலை கட்சி மாநிலப் பேரவைக் கோரிக்கையை ஏற்றது. ஆனால் அது ருஷ்ய சோவியத்துகளுக்கு ஈடாகாது என்று கருதியது.

1940-இல் நடந்த இராம்கர் இ.பொ.க. மாநாட்டில் ‘பாட்டாளி வர்க்கப்பாதை’ என்ற கொள்கை அறிக்கையை வெளியிட்டது. முதல் உலகப் போரில் ஈடுபட்டு நலிந்த பிரிட்டிஷ் பேரரசை எதிர்த்துப் பொது வேலை நிறுத்தம், வரிகொடாமை, வாடகை/குத்தகை கொடாமை ஆகிய இயக்கங்கள் வாயிலாகவும், ஆய்த எழுச் சிக்கான தயாரிப்பு வாயிலாகவும் ஏகாதி பத்திய (வல்லரசிய) எதிர்ப்பில் ஈடுபட்டது.

பர்தோலியில் 1922-இல் ஒத்துழையாமை இயக்கம் காந்தியாரால் அறிவிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு உழவர்களைக் கடுமையாக ஒடுக்கியது. சில நாள்களில் சௌரிசௌராவில் ஒரு காவல் நிலையம், சில காவலருடன், மக்களால் எரிக்கப்பட்டது. துவக்குகள் சூறையாடப்பட்டன. இயக்கம் வன்முறைக்குத் திரும்பியது காந்தியாருக்குப் பிடிக்கவில்லை. உடனடியாக ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெற்றார். வரிகளை அரசுக்கும் நிலவுடைமையருக்கும் செலுத்துமாறு பேராயக் கட்சியின் செயற்குழு தீர்மானம் இயற்றியது. இது சிறையிலிருந்த பேராயக் கட்சியின ருக்கே பிடிக்கவில்லை. ஏனெனில், சௌரி சௌராவில் 172 பேருக்குச் சாவுத் தண்டனை கொடுக்கப்பட்டது. இயக்கம் அதே வழியில் ஆய்த எழுச்சியாகத் தொடர்ந்திருந்தால் உழவர் புரட்சி ஏற்பட்டிருக்கலாம்.

13.4.1936-இல் அனைத்திந்திய உழவர் பேரவை லக்னோவில் தொடங்கப்பட்டது. வேளாண்மைத் துறையில் நடந்த பல கொடுமைகளுக்கு எதிராக ஏராளமான போராட் டங்கள் நாடெங்கும் நடந்தன. நூற்றுக்கணக் கான இளைஞர்கள் தலைமறைவு வாழ்க்கை யிலும், சிறைகளிலும் தம் வாழ்வைத் தொலைத்தனர். பலர் உயிரிழந்தனர். கடுமையான நெருக்கடிகளையும் ஒடுக்கு முறைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. இந்த ஈகமெல் லாம் இயக்கத்தை இரும்புக் கோட்டை யாக்கியது.

குருத்துவாரர் சீர்திருத்த இயக்கம், கேரளா மாப்பிள்ளைக் கலவரம் போன்ற பல உழவர் இயக்கங்கள் நில உடைமையரையும் அவர்களைத் தூக்கிப்பிடித்த பிரிட்டிஷ் வல்லரசையும் எதிர்த்து நடந்தன. கேரளாவில் நில உடைமையர் இந்துக்கள். உழவர்களோ முஸ் லிம்கள். இதில் 3266 முஸ்லிம் மாப்பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.

அதேநேரத்தில், கொல்கத்தா, மும்பை, சென்னைத் துணி, சணல் ஆலைத் தொழி லாளரும்; வடகிழக்கில் தொடர்வண்டித் துறை, நிலக்கரிச் சுரங்கங்கள், மும்பை அஞ்சல் துறை, அசாம் தோட்டத் தொழிலாளர், கொல் கத்தா டிராம் தொழிலாளர் இடையேயும் அமைப்புக் கட்டி இயக்கம் நடத்தப்பட்டது. இப்போதைக்கு உழவர் இயக்கம் ஏறத்தாழ 10 இலட்சம் பேரை உறுப்பினராகக் கொண் டுள்ளது. இதன் போராட்டம் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் நடக்காத நாளில்லை. இப்போராட்டங்களால் இனாம் ஒழிப்புச் சட்டம், நில வாரச் சட்டம், நில வெளியேற்றச் சட்டம், நில உச்சவரம்புச் சட்டம், நிலம் உழுபவனுக்கே சொந்தம் எனும் சட்டம் ஆகியவை நடைமுறைக்கு வந்தன. 1968-இல் அரைப்படி நெல் கூலி அதிகம் கேட்டதனால், கீழ்வெண்மணியில் 43 உயிர்கள் எரித்துப் பறிக்கப்பட்ட கொடிய நிகழ்வு போன்ற எண்ணற்ற ஈகங்களால்தான் இவற்றை அடைய முடிந்தது. தஞ்சை மாவட்டத்தில் சீனிவாசராவ் போன்ற தலைவர்கள் நடத்திய இயக்கத்தால் சாணிப்பால், சவுக்கடி போன்ற கொடிய அடக்குமுறைகளுக்கு முடிவு கட்டப்பட்டது.

1936-37-இல் சோசலிஸ்டுகளுக்கும் (CSP) பொதுவுடைமையருக்கும் இடையிலான கூட்டுறவு உச்சநிலையிலிருந்தது. 1936 மீரட்டில் நடந்த இரண்டாவது பேராயம் ஓர் ஆய்வறிக் கையை வழங்கியது. அது மார்க்சிய இலெனி னிய அடிப்படையில் ஓர் ஒன்றுபட்ட இந்திய சமத்துவக் (சோசலிசக்) கட்சியை நிறுவுவதற்கான தேவையை அறிவித்தது. பைஜ்பூரில் நடந்த பேராய சமத்துவக் கட்சியின் 3ஆவது பேராயத்தில் பல பொதுவுடைமையர்கள் அதன் தேசியச் செயற்குழுவில் சேர்க்கப்பட்டனர். இப்படிப் பொதுவுடைமையர்கள் தனித்தும், பேராயக் கட்சிக்குள் ஊடுருவி அழுத்தக் குழு வாகச் செயல்பட்டும் சமத்துவக் குமுகாயம் படைக்கப் பாடுபட்டனர். 1942 சூலையில் பிரிட்டனும் சோவியத் ஒன்றியமும் செர்மன் நாஜிகளுக்கு எதிராகக் கூட்டணி அமைத்ததால், இ.பொ.க. சட்ட பூர்வமாக்கப்பட்டது. இத னால் அனைத்திந்திய தொழிற்சங்கப் பேராயத் தில் (AITUC) அதன்பிடி வலுப்பட்டது.

1946 மாகாண சட்டப்பேரவைத் தேர்தலில், 1585 தொகுதிகளில், 108-இல் போட்டியிட்டு 8-இல் வென்றது. இக்கட்டத்தில் கட்சிக்குள்ளே வலது-இடது ஊசலாட்டம் நிலவியது. 1948 கொல்கத்தா இரண்டாவது பேராயத்தில் பி.டி. இரணதிவே பொதுச்செயலாளரானார். அவரது வழிகாட்டலில் பல பகுதிகளில் தம் அதிகாரத்தை விட்டுக் கொடுக்கத் தயங்கிய உள்ளூர் நிலவுடைமையாளர்களை எதிர்த்துப் பல ஆய்தப் போராட்டடங்களைக் கட்சி தொடர்ந்து நடத்தியது. அத்தகைய ஆய்தக் கிளர்ச்சிகள் திரிபுரா, தெலுங்கானா மற்றும் கேரளாவிலும் தமிழ்நாட்டின் தஞ்சை மாவட் டத்திலும் நடந்தன. இவற்றில் முகாமையானது ஐதராபாத் நிசாமுக்கு எதிராக நடந்த தெலுங் கானா எழுச்சியாகும். பொதுவுடைமையர் மக்கள் படையையும், குடிப்படையையும் கட்டி, 30 இலட்சம் மக்கள் வாழ்ந்த பகுதியைத் தம் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வந்தனர். நிலவுடைமையை ஒழிக்க விரும்பாத நேருவின் நடுவணரசு படை வலி மையால் மக்களின் எழுச்சியை நசுக்கியது. பி.டி. இரணதிவேயின் ஆய்தப் போராட்டம் ‘இடது துணிச்சல்வாதம்’ என்று கட்சியால் பழிசுமத்திக் கைவிடப்பட்டது. மணிப்பூரிலும் பீகாரிலும் உழவர் போராட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. 1950-களின் முற்பகுதியில் இளம் பொதுவுடை மையரின் தலைமையில் துணி ஆலைத் தொழிலாளரையும் வங்கி ஊழியர்களையும் அமைப்புசாராத் தொழிலாளர்களையும் திரட்டியது. அதனால் வடஇந்தியாவில் மக்கள் ஆதரவு உறுதியானது. ஆனால் 1951-இல் கட்சிப் பேராயம் ‘மக்கள் குடிநாயகம்’ என்பதை மாற்றித் ‘தேசியக் குடிநாயகம், (சனநாயகம்)’ என்பதை முதன்மை முழக்க மாயிற்று. தேசத்தைக் காப்பதை முதன்மைப் பணியாக்கி மக்களை விடுதலை செய்வது பின்னுக்குத் தள்ளப்பட்டது.

கட்சியின் மக்கள் திரள் அமைப்புகள் நடத்திய போராட்டங்களால் செல்வாக்குப் பெற்ற இ.பொ.க. 1952-இல் நாடாளுமன்ற எதிர்க்கட்சியாகியது. 1952 திருவாங்கூர்-கொச்சித் தேர்தலில் இ.பொ.க. தடை செய் யப்பட்டது. ஆனால் தடை நீங்கியதும் 1957-இல் கேரள மாநில ஆட்சியைப் பிடித்தது. இ.எம்.எஸ். நம்பூத்ரிபாட் தலைமையில் அமைச் சரவை அமைந்தது. அநியாயமாக நேரு அரசு அதைக் கலைத்தது. பின்பு மணிப்பூர், திரிபுரா, மேற்குவங்கத்தில் அமைந்த அரசுகள் பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றின.

1962-இல் நடந்த இந்திய சீனப் போருக் குப் பிறகு கட்சிக்குள்ளே கருத்து வேறுபாடு கள் நிலவின. பன்னாட்டளவில் குருச்சேவ் முன்வைத்த நாடாளுமன்றப் பாதை, சமா தான சக வாழ்வு ஆகிய முழக்கங்களை ஆதரிப் போராக இ.பொ.க.வும்; ஆய்த எழுச்சி, பாட் டாளி வகுப்பு சர்வாதிகாரம் என்பதை ஆதரிப் போராக இ.பொ.க.-மாவும் பொதுவுடை மையர் பிரிந்தனர். முன்னவர் ருஷ்யாவை யும், பின்னவர் சீனாவையும் ஆதரித்தனர். இந்திரா காந்தி இறந்த பிறகு இருபிரிவுகளும் சில நிலைமைகளில் இணைந்து வேலை செய்கின்றனர்.

பொதுவுடைமையர்கள் கொடுத்த அழுத்தத்தாலே இங்கே பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டன. உலகெங்கும் பொருளியல் வீழ்ச்சி நடந்த போதும், இந்தியா சரிவை அன்று சந்திக்காமைக்கு இதுவே காரணம். அதேவேளையில் 2004-இல் பேராயக் கட்சியுடன் சேர்ந்து (UPA) பொது வேலைத் திட்ட அடிப்படையில் அரசமைத்த பொது வுடைமையர் வடஅமெரிக்காவுடனான இந்தி யாவின் அமைதிவழி அணு ஆற்றல் ஒப்பந் தத்தை எதிர்த்து விலகியதால், மன்மோகன் அரசு தானடித்த மூப்பாக மக்களுக்கு எதிராகச் செயல்பட்டது.

1948-இல் பிடி இரணதிவே பொதுச் செயலரானபின் ‘குடிநாயகப் புரட்சி வேலைத் திட்டத்தை’ ஏற்றது. சாதிக்கு எதிரான போராட்டம் இந்த ஆவணத்தில்தான் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டது. இன்றைக்கு நாம் எதிர்கொள்ளுகிற பிரிவினை, சாதி, மதச் சிக்கல்களும்கூட 1947-க்கு முன் பின்னாகப் பேராயக் கட்சியின் கொள்கை களிலிருந்தே தோன்றுகின்றன. உழைக்கும் வகுப்போடு கூட்டுச் சேர்ந்து உழவர் புரட்சி யை நடத்தி முடிக்கத் தடையாக இருந்தனர். நிலக்கிழாரியத்தைத் துடைத்தழிக்காமல் புதிய சட்டங்கள் வாயிலாக அவர்களுக்குச் சலுகைகளை வாரி இறைத்தமை ஆகியவை, அடித்தட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எங்கெல்லாம் நிலக்கிழாரிய, அரை நிழக்கிழாரிய உறவுகள் ஒழித்துக் கட்டப்பட்டு உழவர் புரட்சி முழுமையாக நடந்ததோ அங்கேதான் சாதி, மதவாதம் வெல்லப்படும் என்று வரலாறு காட்டுகிறது. உடைமையாளர்கள் தலைமை யேற்று நடத்திய தேசிய விடுதலைப் போராட்டங்கள் முற்றுப் பெறாத நாடுகளில் சிக்கல்கள் அப்படியே நிலவுவதோடு அதை மிகுவித்து, மக்களின் மனநிறைவின்மையைத் திசைதிருப்பி, சனநாயக இயக்க ஒற்றுமையைக் குலைக்கப் பயன்படு கின்றன. உழவர் இயக்கங்கள் வலிமையோடிருந்த இடங்களில் சாதி ஒற்றுமையும், இந்து-முஸ்லிம் ஒற்றுமையும் கட்டப்பட்டது. உழவர் பேரவை (அகி கிசான் சபா) அதன் மேடையில் சாதிவாதமோ, மதவாதமோ ஏற ஒருபோதும் அனுமதிக்கவில்லை. பஞ்சாப், பீகார், வங்காளத்தில் நடந்த கலவரங்களின் போது, உழவர் பேரவை தன் மதச்சார்பின்மையைப் பேணியதுடன் மதவாதக் கருத்தி யலை அம்பலப்படுத்தி, அந்த நச்சுயிரியை எதிர்த்துப் போரிட்டது. இப்போரில் கொள்கைக்காக அதன் தலைவர்களும் ஊழியர் களும் உயிர் நீத்தனர்.

இவ்வாறாக நாட்டு விடுதலை இயக்கத் தலைமை உடைமையாளரிடம் இருந்தாலும் தொழிற்சங்க இயக்கங்களும், உழவர் பேரவை களும் சார்புப்படுத்திய போர்க் குணமிக்க மாற்று அரசியல் ஆற்றல்கள், உலகப்போர் முடிவில் உடைமையாளருக்கு ஒரு மெய்யான சவாலாக எழுந்தன. இது முதலாவது இந்தியப் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தெளிவானது. எங்கெல்லாம் உழவர் அமைப்புகள் வலுவாக இருந்தனவோ அங்கெல்லாம் இடது மற்றும் எதிர்ப்பாற்றல்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

இருப்பினும் பின்வந்த ஆண்டுகளில் நாடாளுமன்றவாதத்தில் மூழ்கி, நிலக்கிழாரிய, முதலாளிய ஆற்றல்கள் கிழித்த கோட்டுக்குள்ளே பொதுவுடைமையர் ஆடியதால் மக்கள் கொதிநிலையில் இருந்தார்கள்.

1967-இல் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் நக்சல்பாரி வட்டாரத்தில் ஆயுதமேந்திய உழவர்கள் நிலக்கிழாரியத்துக்கு எதிராகக் கலகம் செய்தனர். அப்போது இ.பொ.க. (மார்க்சிஸ்ட்) அமைப்பில் வேலை செய்த சாரு மஜூம்தார் அப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார். பழங்குடி மக்களும், ஏழை-கூலி உழவர்களும் நடத்திய இந்தப் போராட்டம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வரலாற்றில் இன்னொரு தொடக்கமாக அமைந்தது. மார்க்சியக் கட்சி இதை விரும்பவில்லை. சாரு மஜூம்தார் கட்சியிலிருந்து வெளியேற் றப்பட்டார்.

1969-இல் அவரால் இ.பொ.க. (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தொடங்கப்பட்டது. நக்சல்பாரி எழுச்சி மேற்குவங்கம், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்த புரட்சியாளர்களுக்கு ஊக்கம் ஊட்டியது. ஆங்காங்கே நிலப்பறி இயக்கம் தொடர்ந்தது. 3.3.1967-இல் நக்சல்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும் ஒரு குழந்தையும் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உழவர் குழுக்கள், ஆங்காங்கே நிலக்கிழார்களின் நிலங் களைக் கையகப்படுத்துதல், தானியங்களையும் ஆயுதங்களையும் பறித்தெடுத்தனர். இது சுரண்டிக் கொழுத்த ஆளும் வகுப்புக்கு அச்சமூட்டியது.

வகுப்பு எதிரிகளை அழித்தொழிப்பதே வகுப்பு (வர்க்க)ப் போராட்டத்தின் உயர்ந்த வடிவம் என்றும், எதிரியின் குருதியில் கைவைத்தவரே உண்மையான பொதுவுடைமையர் என்றும் சாரு மஜூம்தார் கூறினார். கட்சிக்கொள்கையாக எட்டு ஆவணங்களை வெளியிட்டார். இளைஞர்கள் படிப்பை நிறுத்திவிட்டுச் சிற்றூர்களுக்குச் சென்று கட்சிப் பணி ஆற்றி னர். ஸ்ரீகாகுளம், கொல்கத்தா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் காவல்துறை நூற்றுக்கணக்கான இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது; கொன்று கொண்டிருக்கிறது.

சிரீகாகுளம் பழங்குடி உழவர் இயக்கம் பல போராடடங்களை நடத்தியது. பழங்குடி மக்கள் காலங்காலமாகப் பயிரிட்ட நிலத்தை விட்டு வெளியேற, அரசு கட்டாயப்படுத்தியது. ஆனால் அவர்கள் 10000 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றினர். 1967-72 காலக்கட்டத்தில் சிரீகாகுளம் மலைவாழ் உழவர் புரட்சியின் போது 350 உழவர்களும், பொதுவுடைமைப் புரட்சியாளரும் கொல்லப்பட்டனர். இப்பகுதி யில் பழங்குடியினரால் 6000 ஏக்கருக்கு மேல் கைப்பற்றப்பட்டது. தரிமெலக நாகிரெட்டி தலைமையில் அவரது சொந்த மாவட்டமான அனந்தப்பூரில் நிலமற்ற உழவர்கள் 3600 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றினர். இவ்வளவும் கடுமையான அடுக்குமுறைகளைச் சந்தித்தும், ஈகங்களைச் செய்தும் குருதி சிந்திப் பெற்ற வெற்றிகள்! தமிழகத்திலும், கேரளாவிலும் நடந்த போர்க் குணமிக்க போராட்டங்கள் ஆளும் வர்க்கம் பழைய முறையிலேயே நடத்த முடியாமல் கூலி உயர்வு, நில உச்சவரம்பு போன்றவற்றை நிறைவேற்ற வைத்தது.

இப்போது சாரு மஜூம்தாரின் கோட்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப் படுகின்றன. 1970 வேலைத் திட்டம் கொள்கை வேறுபாடுகளாலும், தனிமனித விருப்பு வெறுப்புகளாலும் மா.லெ. கட்சி பல சிறிய குழுக்களாகப் பிளவுபட்டுள்ளது. எனினும் மதவாத ஆற்றல்கள் எல்லா அரசியல் கட்சிகளிலும் ஊடுருவியுள்ளதாலும், இந்துத்துவ பா.ச.க. பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பாசிச மயமாக்கி வருவதாலும் இக்குழுக்கள் சிக்கல்களின் அடிப்படையிலாவது ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டிய தேவையை உணர்கின்றன.

உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கிற கூட்டிணைவு நிறுவனங்கள், தமக்கு எதிர்ப்பு வராமலிருக்க இந்தியாவுக்கே உரித்தான சாதிப் பிளவுகளையும், மத வெறுப்பையும் தூண்டி வளர்க்கின்றன. மக்களின் உணவு உற்பத்தி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையிலும் அரசியலிலும் இறைமை இல்லை. இந்த நிலையிலும் கூட நிலக்கிழார்களிடமிருந்தும், பெரிய கூட்டிணைவு நிறுவனங்களிடமிருந்தும் நிலங்களைப் பறித்து மக்களின் உடைமையாக்க வேண்டியுள்ளது. இதற்கு மக்களை வகுப்பு அடிப்படையில் திரட்ட வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் வகுப்பு அடைப்படையில் மக்களைத் திரட்டிய பொதுவுடைமைக் கட்சிகளும் வெல்ல முடியவில்லை. ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு இடஒதுக்கீடு போன்ற சலுகைகளின் வாயிலாகவும் அச்சாதிகளுக்கு விடுதலை கிட்டவில்லை. பொதுவுடைமைக் கட்சிகள் ஆண்ட மாநிலங்களில் உழவர்களின் தலையாய சிக்கலான நிலச் சிக்கலைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மார்க்சியமோ, பெரியாரியமோ, அம்பேத்கரியமோ தம்மளவிலான போராட்டங்களால் மட்டுமே வெல்ல முடியவில்லை. இதை உணர்ந்து மூன்று தரப்பும் கூட்டாக வேலை செய்வது வரவேற்கத்தக்கது.

மொத்தத்தில் பொதுவுடைமை இயக்கங்களின் போராட்டமில்லாமல், இந்தியா இப்போதுள்ள வளர்ச்சியைக் கூடப் பெற்றிருக்க முடியாது. மாநில அரசுகளின் உரிமையையும், மக்களின் உரிமைகளையும் பறித்து ஒற்றை அடையாள ஆட்சியை நிறுவுவதை நோக்கிப் பாசிச மயமாகும் பா.ச.க. அரசைப் - பொது மக்களும், சிறு இயக்கங்களும், தேசிய இனங் களும், பொதுவுடைமையரும் ஓரணியில் மக்களி டையே வேலை செய்து, முறியடிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் 8.5 விழுக்காட்டிலிருந்து 4.5 விழுக்காடாகச் சரிந்துவிட்ட பொருளியல் வளர்ச்சி எதிர்த் திசையில் போய் மக்களை வாட்டி வதைத்து விடும்.

பேராசிரியர் சே. கோச்சடை