periyar and kolathoor mani

(பெரியாருடன் கொளத்தூர் மணி)

தலைவரவர்களே! தோழர்களே!

இது உண்மையில் குடிஆட்சியல்ல. இதற்குமுன் ஆண்டிருந்த வெள்ளையனுக்கு இலஞ்சம் கொடுத்து, அவனுடைய சுரண்டலுக்கு நிரந்தர வசதி செய்துகொடுத்து மேட் ஓவர் (Made Over) செய்துகொள்ளப்பட்ட ஆட்சிதான்; தங்கள் பேருக்கு மாற்றிக்கொள்ளப்பட்ட ஆட்சிதான்.

காங்கிரசுக்காரர்கள் வெள்ளையனை வெற்றிகொண்டு, இந் நாட்டு ஆட்சியைப் பெற்றவர்களாகார். வெள்ளையன்தான், தான் கொடுத்த வாக்குறுதிப் படி ஆட்சியை இவர்களிடம் ஒப்படைத்தான்.

இக் குடிஅரசுச் சட்டத்தைத் தோற்றுவித்தவர்களும் ஒரே கட்சிக் காரர்கள்தாம். அதுவும் வெள்ளையன்காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தாம். நாட்டில் 100க்கு 10 பேரான பணக்காரர்களுக்கும் படித்த பார்ப்பனர்களுக்கும்தான் இவர்கள் பிரதிநிதியாவார்களே ஒழிய, மற்ற 90 பேருக்கும் இவர்கள் பிரதிநிதிகளாக ஆகமாட்டார்கள்.

குடிஆட்சி என்றால் குடிமக்களின் பிரதிநிதிகளால் ஆளப்படும் ஆட்சியாக இருக்கவேண்டும். குடிஅரசுச் சட்டம் என்றால் எல்லாக் குடிமக்களின் பிரதிநிதி களாலும் தோற்றுவிக்கப்பட்ட சட்டமாயிருக்கவேண்டும்.

இந்தச் சட்டத்தை உண்டாக்கினவர்களுக்கு அவ்விதம் கூறிக்கொள்ளத் தகுதியில்லை. ஏனெனில், அத்தனைப் பேருமே காங்கிரசு மேலதிகாரத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டசபைக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

எனவே, நமக்குக் குடிஆட்சி என்றால், நம் நாடு தனி நாடாகி நம்மவன் ஒருவன் அக் குடியாட்சியின் தலைவனாக இருக்கவேண்டும்.

நமக்கு வேண்டிய பொருள்களை நாமே வாங்க உரிமை உடையவராக ஆக வேண்டும்; நம் நாட்டு வளப்பம் நமக்கே சொந்தமாக வேண்டும்; இந் நாட்டுப் போக்குவரத்து மூலம் வரும் இலாபம், வருமானவரி மூலம், புகையிலை வரி மூலம் வரும் இலாபம், தபால் தந்தி இலாக்காக்கள் இவற்றின் மூலம் வரும் இலாபம் இவையாவும் இந் நாட்டவரான நமக்கே உரியதாக வேண்டும். அதுதான் உண்மைக் குடியரசாகும்.

இன்று வடநாட்டான்தான் இத்தனை இலாபத்திற்கும் உரிமையுடையவனாக இருந்துவருகிறான்.

இன்று பிரிவினை கேட்கும் நான் கிழவனாக இருக்கலாம். அதன் காரணமாக பலாத்காரத்தில் நம்பிக்கையற்றவனாக இருக்கலாம். நாளை நம் இளைஞர்களும் இப்படியே இருந்துவிடமாட்டார்கள். இரத்த வெள்ளத்தின் மத்தியில் பிரிவினை கேட்பார்கள்; கத்திமுனையில் பிரிவினை கேட்பார்கள்.

ஆட்சியாளர்கள் இப்படியெல்லாம் நடக்கவிடாமல் நம் நாட்டை ஒழுங்காக நமக்குப் பிரித்துக்கொடுத்துவிடவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன்.

(சென்னை சைதாப்பேட்டையில், 25.1.1950இல் சொற்பொழிவு. விடுதலை 27.1.1950)

Pin It