கீற்றில் தேட...

2011 செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் 133ஆவது பிறந்த நாள். அன்றுதொட்டு தமிழ்நாட்டின் பல மாவட் டங்களில் நம் கட்சியின் சார்பில் பெரியாரின் பிறந்தநாள் விழாவைச் சிறப்புற நடத்த உள்ளோம்.

கட்சியில் உள்ள நிருவாகிகளும், மாணவத் தோழர் களில் விருப்பம் உள்ளவர்களும் ஆங்காங்கே நடை பெறும் விழாக்களில் பங்கேற்பர். பெரியார் கொள்கை களில் எதில் எதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். எதில் எதில் வெற்றி பெறவில்லை என்பதைப் பற்றிப் பேசவேண்டும்.

“எனவே இந்து மதத்தையும் சாதியையும் இரண்டையும் பார்க்கும் போது, மதத்தை விட சாதியே அதிக பலம் உடையதாகும். ஏனெனில் சாதி பிறவியில் உண்டாவது; அது மாற்ற முடியாதது. ஆனால் மதமோ கொள்கையின் மூலம் ஏற்படுவது. அது மத உணர்ச்சிக்கும் அறிவு உணர்சிக்கும் தக்கபடி அடிக்கடி மாற்றிக் கொள்ள உரிமை உடையது என்பதாகும்” என, 3.11.1929இல் “குடிஅரசு” இதழின் தலையங்கத்தில் பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

மேலே கண்ட இரண்டில் எதிலாவது நாம் வெற்றி பெற்றிருக்கிறோமா என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சாதி என்பது வருணத்தைக் குறிப்பது. இந்து மதத்தில் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவையும்; நான்கு வருணங்களில் சேர்க்கப்படாமல் உள்ள தீண்டப்படாதார் என்கிறவர்களையும் குறிப்பதாகும், சாதி.

தென்னாட்டில் இந்துமதத்தின் தத்துவப்படி இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு. ‘பிராமணன்’, ‘சூத்திரன்’ என்பவையே அவை.

தமிழ்நாட்டில் 7.2 கோடி மக்களில் இந்துக்கள் 88 விழுக்காட்டினர். இவர்களில் 100க்கு 3 பேர் மட்டுமே பார்ப்பனர்; மீதமுள்ள 97 விழுக்காட்டுப் பேர்களில் சூத்திரர், தீண்டப்படாதார் என்பவர்கள் அடக்கம். இவர்கள் எல்லோரும் இழிசாதியினர்.

இந்த ஏற்பாடு தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது. அப்படி இருக்க எது காரணம்? மக்களிடம் மான உணர்ச்சியே இல்லாததும்; வருணத்தை நம்புவதும் அதைப் பின்பற்றுவதும்; அவ்வப்போது ஆட்சி செய்தவர்கள் சாதி அமைப்பைக் காப்பாற்றியதுமே காரணங்கள் ஆகும்.

இந்த நடப்பு அப்படியே இன்றும் இருப்பதற்கு என்ன காரணம்?

அவர்கள் பிறந்த சாதியை-வருணத்தை மாற்றிக் கொள்ள முடியாது என்பதே காரணம். ஏன் மாற்றிக் கொள்ள முடியாது? உயர்ந்த படிப்பும், நல்ல ஒழுக்கமும் மானிடத்தின்பேரில் நல்ல பற்றும் உள்ளவனாக ஒரு சூத்திரன் நடந்து கொண்டாலும் - அப்போதும் அவன் ‘பிராமணன்’ ஆக முடியாது; அல்லது சூத்திரப் பட்டத்தை ஒழித்துக் கொள்ள முடியாது. இங்கே தான் சிக்கல் உள்ளது.

அவை என்ன சிக்கல்கள்?

1.            இந்திய அரசமைப்புச் சட்டம் - நடப்பில் உள்ள நால்வருண வேறுபாட்டை, எந்தச் சட்டமும், எந்த ஆட்சியும் ஏற்கெனவே நீக்காததால் - அப்படி நீக்கப் படாத அந்த வருணப் பாதுகாப்புச் சட்டம் அப்படியே தொடரும் என்று இன்றைய அரசமைப்புச் சட்டம் பாதுகாப்பு அளித்து உள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் நான்கு வருணங்களின் பெயர்களைக் குறிக்கா மலேயே - அந்த நால்வருணத்துக்குப் பாதுகாப்பு உண்டு என்று கூறுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 13, 19, 25, 26, 372 முதலானவையே வருண வேறுபாட்டையும், பழைய பழக்கவழக்கச் சட்டங்களையும் இன்று காப்பாற்றுகின்றன.

எவ்வளவு பெரிய படிப்பும், பகுத்தறிவும், பட்டறிவும் உடையவர்களுக்கும் இது புரியாது. அப்படிப் புரிந்து கொண்ட சிலருக்கு ஆத்திரமும் மான உணர்ச்சியும் வரவே இல்லை. ஆத்திரமும் மான உணர்ச்சியும் உள்ளவர்கள் முயற்சித்து எவ்வளவு ஒழுக்கம் உடை யவர்களாக மாறினாலும் - அப்போதும் சூத்திரன் என்கிற “பிறவியினால் வந்த இழிவு” போகாது.

அப்பொழுது, இன்றைய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு சூத்திரனுக்கும் எதிரானது - அது தகர்க்கப்பட வேண்டி யது - அகற்றப்பட வேண்டியது என்பது புரிய வேண் டும்; அதை வெகுமக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

வெகுமக்கள் இவற்றை அறியாமலே கோவில்களில் வெளியே நிற்பதைச் செய்கிறார்கள். பிராமணனை-பார்ப்பானை அழைத்து வீட்டில் சடங்குகளைச் செய் வதைப் பின்பற்றுகிறார்கள்; பார்ப்பான் குறிக்கிற நல்ல நேரம், கெட்ட நேரம், அதிர்ஷ்டம், துர் அதிர்ஷ்டம் என் பவற்றை நம்புகிறார்கள்; தந்தையையும் தாயையும் இழந்தவர்கள், பார்ப்பானை அழைத்துத் திதி-திவசம் செய்கிறார்கள்; தீட்டுக் கழிக்கிறார்கள்; வீடு குடிபோகும் நிகழ்ச்சி, நீத்தார் இறுதிக்கடன், திருமணம் எல்லா வற்றையும் பார்ப்பானை அழைத்து, அவனை வணங்கி, அவனுக்குத் தட்சணை கொடுத்து மனநிறைவு அடை கிறார்கள்.

எவ்வளவு பெரிய படிப்பைப் படித்தவர்களும், பேரன் பேத்திகளைப் பெற்ற சம்பந்தம் போட்டவர்களும், நாட்டாண்மைக்காரராக - சட்டமன்ற உறுப்பினராக - அமைச்சராக உள்ளவர்களும் மேலே சொல்லப்பட்ட படியே நடக்கிறார்கள்; சாகும் வரையில் அவர்கள் அப்படியே செய்கிறார்கள். அவர் செத்தவுடன் அவரு டைய மகன் அவற்றை அப்படியே செய்கிறான்.

இந்தப் “பிறவி சாதி” என்கிற பேரால், தன்னை இழிந்தவன் - நாலாஞ் சாதிக்காரன், கீழ்ச்சாதிக்காரன் என்று சொல்லுவதை ஏற்றுக்கொண்டு, ஆயிரக்கணக் கான ஆண்டுகளாக ஒவ்வொரு சூத்திரத் தமிழனும் பார்ப்பானை மதித்து அவனைத் தன் வீட்டுக்கு அழைத்து இவற்றைச் செய்வதில் பெருமை அடை கிறான் அல்லது மனநிறைவு அடைகிறான்.

இது மானங்கெட்ட செயல் என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் தமிழன் அல்லாத மற்ற மொழிக்காரனும் பார்ப்பன னை அழைத்து, இத்தகைய சடங்குகளைச் செய்வதை நிறுத்த வேண்டும் என்கிற உணர்வு பெற நாம் ஆவன செய்ய வேண்டும். இந்தியா முழுவதிலும் உள்ள மக் களில் 83 விழுக்காடாக இருக்கிற நாலாஞ் சாதிக் காரருக்கு நாம் இவற்றை உணர்த்த வேண்டும்.

இந்தியாவில் இன்று உள்ள இந்துக்கள் 100 கோடிப் பேரில் 93 கோடிப் பேரை இழிசாதி என்று அரசமைப்புச் சட்டம் சொல்லுகிறது; பிறவியினால் ஏற்பட்ட அந்த இழிவை மாற்ற முடியாது என்றும் அரசமைப்புச் சட்டம் சொல்லுகிறது. இதற்குப் பழக்கவழக்கச் சட்டம் என்பது பாதுகாப்பாக இருக்கிறது.

இந்த இழிநிலையைக் காப்பாற்றும் அரசமைப்புச் சட்டத்தை இன்றுள்ள நாடாளுமன்றம் காப்பாற்றுகிறது; 790 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இச்சட்டத்தை ஏற்றுக்கொண்டவர்களாக உள்ளனர். எல்லா மாநிலச் சட்டமன்றங்களும், அவற்றில் உள்ள 4,200 சட்ட மன்ற உறுப்பினர்களும் இந்த அரசமைப்புச் சட்டத் துக்கு அடங்கி நடக்கிறார்கள்.

மாவட்ட நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் ஆகியவையும் இப்படிப்பட்ட கேடான அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுகின்றன.

இன்றுவரை மீட்டெடுக்கப்படாத - 93 கோடி சூத்திர மக்களுக்கு உள்ள இழிவுப் பட்டத்திலிருந்து, நாம் அவர்களை மீட்டெடுக்க வேண்டும்.

நாம் வாழுங்காலத்தில், இந்தியாவில், இந்த நோக்கத்துக்காகவே வாழ்ந்தவர்கள் - இயக்கம் கண்ட வர்கள் - போராடியவர்கள் - போராடச் சொல்லிக் கற்றுக் கொடுத்தவர்கள் தந்தை பெரியாரும், மேதை அம்பேத் கரும் ஆவர்.

இன்று, 17.9.2011இல் தந்தை பெரியாரின் பிறந்த நாள். அன்று ஊர்தோறும், தெருத்தோறும், வீடு தோறும், பள்ளிதோறும் தந்தை பெரியாரின் 133 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவோம், வாருங்கள்!