“சிந்தனையாளன்” சாதனைகளைச் சீர்தூக்குங்கள்! 

2018 பொங்கல் மலருக்கு விளம்பரம் தாருங்கள்! 

கூட்டாட்சி மாநாட்டுக்கு நன்கொடை தாருங்கள்!

“சிந்தனையாளன்” கிழமை இதழ் 17.8.1974இல் திருச்சியில் என் சொந்தப் பொறுப்பில் தொடங்கப்பட்டது.

“சிந்தனையாளன்” இதழ்தான், முதன்முதலாக 1975இல், “பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய மத்திய அரசில் கல்வியிலும் வேலையிலும் தனி இடஒதுக்கீடு வேண்டும்” எனக் கோரியது. அக்கோரிக்கை பற்றி அன்றையப் பிரதமர் இந்திராகாந்திக்கும், அவரால் சுவரண்சிங் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவுக்கும் நான் எழுதியதைத் தமிழர்களுக்கு அறி வித்தது. அதன் இன்றியமையாமையை உணர்த்தியது.

1977 தேர்தலில் காங்கிரசுக் கட்சி படுதோல்வி அடைந்தது. லோகியா சோசலிஸ்டுகளின் சனதாக் கட்சி கூட்டணி ஆட்சி அமைந்தது.

நம் கட்சி 8.8.1976இலேயே தொடங்கப்பட்டது. 1977 தேர்தலை நாம் புறக்கணித்தோம்.

ஆனால் தந்தை பெரியாரின் உயிர் மூச்சுக் கொள் கையான வகுப்வுhரிப் பிரதிநிதித்துவம் ஒன்றையாவது இந்திய அளவில் வென்றெடுக்க, 1978 மார்ச்சில் நாம் முடிவெடுத்தோம்.

அதற்கான கோரிக்கை விண்ணப்பத்தை “சிந்தனை யாளன்” இதழில் வெளியிட்டோம்.

அவ்விண்ணப்பத்தினை ஆங்கிலத்திலும், இந்தி யிலும் மொழிபெயர்த்து அச்சிட்டு எடுத்துக்கொண்டு, இந்திய அரசுக்கு நேரில் அழுத்தம் தர வேண்டி, வே. ஆனைமுத்து, சீர்காழி மா. முத்துச்சாமி, சேலம் எம். இராஜு ஆகிய மூவரும் 29.4.1978இல் புதுதில்லியை அடைந்தோம்.

அங்கு, சனதாக்கட்சியின்-ஆளுங்கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு நம் கோரிக்கை விண்ணப்பங் களைத் தந்து, நம் கோரிக்கையை விளக்கிச் சொன்னோம்.

7.5.1978இல் உத்தரப்பிரதேசப் பிற்படுத்தப்பட் டோர் மாநாட்டில், தந்தை பெரியாரின் நண்பர், எஸ்.டி. சிங், சௌராசியா தலைமையில் வே. ஆனைமுத்து ஆகிய நான் தொடக்க உரை ஆற்றினேன். உ.பி. மாநாட்டுப் பிரதிநிதிகள் ஆயிரம் பேருக்கும் இந்தியில் அச்சிடப்பட்ட விண்ணப்பத்தைக் கொடுத்தார், மா. முத்துச்சாமி.

1944இல் திசம்பரில், சௌராசியா தலைமையில், கான்பூரில் இந்து பிற்பட்டோர் லீக் தலைமையில் தந்தை பெரியார் ஏற்றி வைத்த வகுப்புரிமை அறிவுச் சுடரை, மீண்டும், 7.5.1978இல் என் முசாபர் நகர் உரை உ.பி. மக்களைத் தூண்டிவிட்டது. அதுபற்றிய செய்தி, சிந்தனையாளன் இதழில் விரிவாக வெளியிடப்பட்டது.

உ.பி. முசாபர் நகர் மாநாட்டுக்கு நம் குழுவினரை அழைத்துச் சென்ற பீகார் மாநிலம் ஆரா நாடாளுமன்ற உறுப்பினர் ராம் அவதேஷ் சிங் என்கிற லோகியா வாதியையும், பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (க்ஷ.யீ. ஆயனேயட) என்கிற நாடாளுமன்ற உறுப்பினரையும், 6.5.1978 மாலை நம் குழுவினர் சந்தித்தோம். இரு வரிடமும் “வடஇந்திய மாநிலம் எதிலும், பிற்படுத்தப் பட்டோருக்கு 1978 வரையில் ஒரு விழுக்காடுகூட இடஒதுக்கீடு இல்லாத அவல நிலையை” நன்கு புரிய வைத்தோம். ராம் அவதேஷ் சிங் இன்றளவும் இதற் காகச் செயல்படுகிறார்.

8.5.1978இல், வாழப்பாடி கூ.இராமமூர்த்தி அவர் களின் உதவியுடன் அன்றைய குடிஅரசுத் தலைவர் என். சஞ்சீவி ரெட்டி அவர்களிடம் நம் வகுப்புரிமைக் கோரிக்கை விண்ணப்பத்தை முதன்முதல் அளித்தோம். இவ்வளவு செய்திகளையும் பரப்பிய ஏடு “சிந்தனையாளன்”.

பீகாரில், ராம் அவதேஷ் சிங் ஏற்பாட்டில், 17.9.1978 முதல் 18.10.1978 முடிய 31 நாள்கள் 31 மாவட்டங்களிலும் வே. ஆனைமுத்து, மா. முத்துச்சாமி, திருச்சி து.மா. பெரியசாமி, வேலூர் நா.பா. செந்தமிழ்க்கோ அடங்கிய குழுவினர் இடஒதுக்கீடு பற்றிப் பரப்புரை செய்தோம்.

19.10.1978 முதல் பாட்னாவில் காந்தி மைதானத்தில் “சிறை நிரப்பும் போராட்டம்” நடத்தினோம். 31.10.1978 க்குள் 10,000 பேர் சிறை புகுந்தனர். பீகார் அரசு வகுப்புரிமைக் கோரிக்கையில் தத்தளித்தது.

இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய், நம் குழுவி னரின் பரப்புரைக்கு எதிராகப் பரப்புரை செய்ய வேண்டி, பீகாருக்கு அப்போதே பயணம் வந்தார். நம் 31 நாள் பரப்புரையால் விழிப்புணர்வு பெற்ற பீகார் ஒடுக்கப் பட்ட வகுப்பு மக்கள், பிரதமரைப் பேசவிடாமல் தடுத்தனர்.

இதனால், உடனடியாக, 2 பயன்கள் விளைந்தன.

அவை யாவை?

1.            பீகார் வரலாற்றில், முதன்முதலாக, அன்றைய முதலமைச்சர் கர்ப்பூரி தாக்கூர் பீகார் பிற்படுத்தப்பட் டோருக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு அளித்தார்.

இது நம் முதலாவது சாதனை ஆகும். இது வரலாறு.

2.            பீகாருக்குப் பயணம் வந்து, ஒடுக்கப்பட்டோர் நிலைமையைப் புரிந்து கொண்ட பிரதமர் மொரார்ஜி தேசாய், 20.12.1978இல் நாடாளுமன்றத்தில், “இந்தியப் பிற்படுத்தப்பட்டோர் நலனை ஆராய, இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவை அரசு அமைக்கும்” என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில், 1.1.1980இல் பிற்படுத்தப்பட்டோர் குழுவை அமைத்து இந்திய அரசு ஆணை வெளியிட்டது.

இது நம் கட்சியின்-“சிந்தனையாளன்” இதழின் இரண்டாவது சாதனை.

அடுத்த நம் சாதனை தமிழகத்துப் பிற்படுத்தப்பட் டோருக்கு உரியது.

1979 கல்வி ஆண்டில், தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன்-பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக் கீடு பெற வருமான வரம்பு விதித்து ஆணை வெளி யிட்டார். தமிழகத்தில் உள்ள எல்லாக் கட்சிகளும் அந்த ஆணையை எரித்தன.

ஆனால், நம் கட்சியும், நம் தலைமையிலுள்ள ஒடுக்கப்பட்டோர் பேரவையும்-தமிழக அரசின் புரியாத் தனத்தை விளக்கிக் கட்டுரைகளைச் “சிந்தனையாளன்” இதழில் வெளியிட்டன.

அத்துடன், தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோரின் நிலைமையை விளக்கி, “பொது நிலை விளக்க ஆவணம்” ஒன்றை அச்சிட்டு, ஒரு குழுவினர் தலைமையில் அந்த ஆவணத்தை 19.8.1979இல் தமிழக முதலமைச்சரிடமும், சில தமிழக அமைச்சர்களிடமும் அளித்தது.

தந்தை பெரியாரின் கோரிக்கையை ஏற்று, தி.மு.க. அரசு, 1971இல் தமிழகப் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட 25 விழுக்காடு தனி இடஒதுக்கீட்டை 31 விழுக்காடாக உயர்த்தி அளித்தது. ஆனால் புதிதாக 30 உள்சாதிகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது.

அதன் விளைவாகத் தமிழகப் பிற்படுத்தப்பட் டோரின் விழுக்காடு 67.50 ஆக 1972 முதல் உயர்ந்துவிட்டது.

நம் “சிந்தனையாளன்” ஏடு மட்டுமே இதையும், உச்சநீதிமன்ற நீதிபதி மூர்த்துழா அவர்கள், 1976இல் கூறிய - “ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் 80 விழுக்காடு இருப்பார்களானால், அவர்களுக்கு 80 விழுக்காடு தனி இடஒதுக்கீடு தருவது விதி 16(4)க்கு எதிராகாது” என்கிற புதிய கருத்தையும் இணைத்து விளக்கி, தமிழக அரசிடம் ஆவணம் அளித்தது. தொடர்ந்து பண்ருட்டி ச. இராமச்சந்திரன் மூலம் 6.10.1979 முதல் எம்.ஜி.ஆருக்கு அழுத்தம் தந்தது. அதனை ஏற்று, தமிழகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடு என்பதை 50 விழுக்காடாக உயர்த்தி 20.1.1980இல் எம்.ஜி.ஆர். அறிவித்தார். 1.2.1980 அதற்கான ஆணையை அவர் பிறப்பித்தார்.

தமிழகத்துப் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக் காடு தனி இடஒதுக்கீடு பெற்றுத் தந்திடப் பாடுபட்டது “சிந்தனையாளன்”, மா.பெ.பொ.க. மற்றும் ஒடுக்கப் பட்டோர் பேரவை மூன்று அமைப்புகளும் ஆகும்.

இது நம் மூன்றாவது சாதனை.

இவை மட்டுமா?

1988 மார்ச்சு முதல் “மார்க்சியப் பெரியாரியம்” என்பது பற்றியும், “உண்மையான இந்தியக் கூட் டாட்சி” பற்றியும் விளக்கக் கட்டுரைகளை எழுதித் தமிழர்க்கு அரசியல் அறிவு கொளுத்தியது “சிந்தனை யாளன்”.

1991 ஏப்ரல்-மே இல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் - பாவேந்தர் நூற்றாண்டு விழாவை 47 நாள்கள் தமிழகத்தில் பரப்புரை செய்திடவும், 1991 அக்டோபரில் 17 முதல் தில்லியில் 3 நாள்கள் பெரியார் விழா, கூட்டாட்சி மாநாடு, வடமாநிலப் பயணம் இவற்றை வெற்றியாக நடத்திடவும், 1992 திசம்பரில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் முழு வரலாற்றையும், பாரதி தாசனின் சில கவிதைகளை - இலெனின் தங்கப்பா அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தனிநூலாக வெளியிடவும்; 1993 முதல் இன்றுவரை பெரியார் - நாகம்மை அறக்கட்டளையின் குறிக்கோளைத் தமிழக மக்களிடையே பரப்பிட ஒரு கருவியாகவும் விளங்குவது “சிந்தனையாளன்”.

தந்தை பெரியார் 138ஆம் பிறந்த நாள் இதழ் முதல், 2016 செப்டம்பர் முதல் தொடங்கி, 2017 செப்டம்பர் முடிய, இன்றைய பாரதிய சனதாக் கட்சி ஆட்சியின்,

1.            இந்தித் திணிப்பு;

2.            சமற்கிருதத் திணிப்பு;

3.            அனைத்திந்திய நுழைவுத் தேர்வுத் திணிப்பு;

4.            பணத்தாள் ஒழிப்பு மோசடி;

5.            தமிழகத் தொல்லியல் களஆய்வுகள் புறக்கணிப்பு;

ஆகிய பொருள்கள் பற்றிய தெளிவான விளக்கக் கட்டுரைகளைத் தாங்கி வருகிறது சிந்தனையாளன்.

கடந்த இருபது ஆண்டுகளாக, “சிந்தனையாளன் பொங்கல் சிறப்பு மலர்” சிறப்பாக வெளிவரத் துணை புரிந்த வணிகப் பெருமக்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ஆசிரியப் பெருமக்கள், தமிழ்ப் பெரு மக்கள் ஆகியோர் விளம்பரங்களும், நன்கொடை களும் இப்போதும் அளித்து உதவுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.

அறிஞர் பெருமக்கள், குறித்த காலத்திற்குள் கட்டுரைகளை அளித்து உதவுங்கள்.

மா.பெ.பொ.க. மாவட்டச் செயலாளர்களும், கட்சி உறுப்பினர்களும் மனங்கொண்டு, எப்போதும் போல் ஊக்கமாகப் பணிபுரிந்து, வெற்றி குவிக்க வேண்டுகிறேன்.

Pin It