இந்தியா ஒரு துணைக் கண்டம். இது பல மொழிகளைப் பேசுகிற மக்களைக் கொண்டுள்ளது; பல மதங்களையும், பல்வேறு பழக்கவழக்கங்களையும், பல்வேறு பண்பாடுகளையும் கொண்டுள்ளது.
ஒரு கட்டத்தில் 56 தேசங்கள் அல்லது 56 தனிநாடுகள் இந்தியாவில் இருந்தன.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் புஷ்யமித்திர சுங்கன் என்கிற பார்ப்பன அரசன் வடநாட்டில் பௌத்தத்தை அழித்தான்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கேரளாவில் பிறந்த ஆதிசங்கரர் இந்தியா முழுவதையும் சுற்றி வந்தார். மீதம் இருந்த பௌத்தச் சுவடுகளை, ஆங்காங்கு இருந்த அரசர்களின் துணையைக் கொண்டு, கி.பி.830க்குள் ஆதிசங்கரர் அழித்தார். அவருடைய கொள்கைகளைப் பரப்ப 4 மடங்களை நிறுவினார். அம்மடங்கள் அரசு ஆதரவைப் பெற்றன.
அம்மடங்களின் மூலம் வேத பாடசாலைகள் நிறுவப் பட்டன; அரசர்களும் நிறுவினர். பார்ப்பன வகுப்பு மாணவர் களுக்கு மட்டும் சமற்கிருதமும், வேதங்களும், திருமண மந்திரங்களும், இறுதிக் கடன் மந்திரங்களும் கற்றுத் தரப்பட்டன.
பார்ப்பனர் வீடுதோறும் சென்று புரோகிதம் செய்வதை மேற்கொண்டனர். திருமணம், இறுதிக்கடன் ஆகிய வீட்டு நிகழ்ச்சிகளை அவர்களே நடத்தினார்கள்.
அதாவது, பார்ப்பனரே இந்து மதத்திலுள்ள எல்லாச் சாதி, எல்லா வகுப்புகளுக்கும் மதகுரு என்கிற நிலையை அடைந்தனர்.
பார்ப்பனப் புரோகிதம் இந்தியா முழுவதிலும் பரவி நிற்கிறது. இந்த ஏற்பாட்டுக்கு இந்துச் சட்டத்திலும், அரசியல் அமைப்புச் சட்டத்திலும் வழக்கம் என்கிற பேரால் பாதுகாப்பு இருக்கிறது.
இது முதலாவது கூறு.
அடுத்து இராமாயணம், மகாபாரதக் கதைகள் செவிவழிக் கதைகளாகவும், தெருக்கூத்துகள், நாடகங்கள், பொம்மலாட் டங்கள் வழியாகவும் பொது மக்களிடையே பரப்பப்பட்டன. இப்போது தொலைக்காட்சிகள் மூலம் இவை பரப்பப்படுகின்றன.
இராமனைக் கடவுளாக நம்பி வணங்கும் வழக்கம் இந்தியா முழுவதிலும் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு பரவியது. இது ஒற்றை இந்தியாவை உருவாக்கிய இரண்டாவது கூறு.
பகவத்கீதை, பாகவதம், மகாபாரதம் முதலானவை இந்தியா முழுவதிலும் உள்ள பார்ப்பனராலும், பார்ப்பனரல்லாத மற்ற பார்ப்பன மத மக்களாலும் மதிக்கப்படவும், பரப்பப் படவும் படுகின்றன.
இது மூன்றாவது கூறு.
கி.பி.1640இல் தொடங்கி கி.பி.1757க்குள் இந்தியாவின் பல பகுதிகளை வெள்ளைக்காரன் கைப்பற்றினான். கி.பி. 1801க்குள் தெற்கே உள்ள குமரி முதல் வடக்கே உள்ள இமயம் வரை உள்ள நாடுகளையும், கிழக்கே பர்மா, மேற்கே ஆப்கானிஸ்தான் வரையில் உள்ள நாடுகளையும் கைப்பற்றி ஒரே எல்லையைக் கொண்ட - ஒற்றை ஆட்சியைக் கொண்ட ஓர் அரசை-“இந்தியா”வை நிறுவினான்.
வடக்கே முகமதியர்களும், மராட்டியர்களும், தெற்கே இருந்த தெலுங்கர்களும் சிற்றரசர்களாகவும், பாளையக்காரர்களாகவும் மாறினர். 1947 வரை இந்நிலை நீடித்தது.
1919இல் ஆப்கானிஸ்தான் தனி நாடு ஆயிற்று, அதன் பிறகும் எஞ்சிய பகுதி “இந்தியா” என்று அழைக்கப்பட்டது.
1936இல் பர்மா (மியான்மர்) பிரிந்தது. அதன்பிறகும் எஞ்சிய பகுதி “இந்தியா” என்றே அழைக்கப்பட்டது.
1947இல் இந்தியா, பாக்கிஸ்தான் இரண்டு நாடுகளாக இந்தியா பிரிக்கப்பட்டது. அதன் பிறகும், “இந்தியா” என்றே அழைக்கப்பட்டது.
இது ஒரு தவறான பெயர். நிற்க.
1947இல் சுதந்தர இந்தியா அமைந்தது.
ஆனால், வயது வந்தோருக்கு வாக்குரிமை வராத காலத்தில் - 1946இல் வெள்ளைக்காரன் காலத்தில் நடந்த தேர்தலில், மத்திய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும், மாகாணச் சட்டமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப் பினர்களையும் கொண்டு இயற்றப்பட்ட அரச மைப்புச் சட்டம் - சுதந்தர இந்தியாவின் அரசியல் சட்டமாக 26.1.1950இல் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் நடந்த முதலாவது அரசியல் மோசடி இதுவாகும். இதை அன்றே கண்டனம் செய்தவர், பெரியார் ஒருவரே!
ஏன், அது மோசடி?
1. ஏன் எனில், வேத காலந்தொட்டுப் பின்பற்றப்பட்டுவரும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் எனப்படும் பிறவி உயர்வு தாழ்வையும்;
2. மனுநீதி, இராமாயணம், பாகவதம் இவற்றிலும் ஆகமத் திலும் சொல்லப்பட்ட பழக்கவழக்கங்கள் இன்றும் இனியும் செல்லும் என்பதையும்;
3. நூற்றுக்கணக்கான தாய்மொழிகளும், தேசிய இனங்களும், பல்வகைப் பண்பாடுகளும் உள்ளதைப் புறந்தள்ளி விட்டு-ஒற்றை இந்தியா, ஒரே மொழி இந்தி, ஒரே கலாச்சாரம் இந்து இவற்றை நிலைநாட்டுவதையும் - நம்மை ஆளும் இந்திய அரசமைப்புச் சட்டம் 2017லும் பாதுகாக்கிறது.
இவ்வகைகளால் - இக்காரணங்களால் - இந்திய அரச மைப்புச் சட்டம் மோசடியானது; முழுமோசடியானது என் பதைத் தமிழ்நாட்டிலுள்ள ஏழரைக் கோடிப் பேர்களுக்கும் எடுத்துச் சொல்லுவது நம் தலையாய கடமை.
இதைக் குன்றின்மேல் நின்று கூவுவோம், வாருங்கள்!