வேலூர் மாவட்டம் சோளிங்கபுரம் இயக்கப் பணி தொடர் பாக நான் ஆண்டு தோறும் சென்று வந்த ஊர்.

சென்னை மாநகருக்கு மிகப் பல தடவைகள் வருவதை, 1962க்குப் பிறகு நான்மேற்கொண்டேன். வரும்போதெல்லாம் நான் செல்லும் இடங்கள் கன்னிமரா நூலகம், சென்னைப் பல்கலைக் கழக மெரினா வளாகம், எழும்பூர் பெரியார் திடல், முருகேச நாயகர் மாளிகை.

thu murthiபல்கலைக் கழக மெரினா வளாகத்தில் பேராசிரியர் ந.சஞ்சீவி, முனைவர் பொற்கோ ஆகியோரைக் கண்டு திராவிடர் இயக்கம், தமிழ்ப் பண்பாடு, பொதுவுடைமைக் கட்சி பற்றி நீண்டநேரம் அவர்களுடன் உரையாடுவதைத் தவறாமல் நான் மேற்கொண்டேன்-1976க்குப் பிறகு. அவ்வளாகத்தில் தான், தோழர் து.மூர்த்தி அவர்களை முதன்முதலில் நான் கண்டேன். அப்போது நானும் என் தோழர்களும் “பெரியார் சமஉரிமைக் கழகம்” என்னும் தனி இயக்கத்தை நிறுவியிருந்தோம். அதன் பெயரை “மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி” என 1988இல் மாற்றினோம்.

எங்களின் முதலாவது வேலைத் திட்டமாக, அனைத் திந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய அரசில் கல்வியிலும் அரசுப்பணியிலும் இடஒதுக்கீடு பெறுவது என்பதை மேற்கொண்டோம்.

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள முருகேச நாயகர் மாளிகை அரசு அலுவலர்கள், மாணவர்கள், தங்குமிடம். அங்கு 1978 முதல் இரவு நேரத்தில் சி.பெரியசாமி, கலச. இராமலிங்கம, மாணவர் க.தென்னன், மற்றும் பலருடன் நீண்ட உரையாடல்களை மேற்கொண் டேன். மெரினா வளாகத்தில பேராசிரியர்கள் ந.சஞ்சீவி, பொற்கோ, ஆய்வு மாணவர் து.மூர்த்தி, பல்கலைக்கழகத் தில் பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோருடன் பல தடவைகள், பிற்பகலில் கலந்துரையாடல்களை மேற் கொண்டேன்.

என் குடியிருப்பையும் கட்சித் தலைமை இடத்தை யும் 1982க்குப் பிறகு சென்னை திருவல்லிக்கேணிக்கு மாற்றிக் கொண்டேன். அங்கு பெரியார் அச்சிடுவோர்-வெளியிடுவோர் குழுமம் சார்பில் அச்சகம் நிறுவப்பட்ட நாள்முதல்-எப்போதெல்லாம் சென்னையில் நான் தங்கிட நேருகிறதோ அப்போதெல்லாம்-கலச.இராம லிங்கம், சி.பெரியசாமி, க.தென்னன், து.மூர்த்தி, நாஞ்சில் சி.நடராசன், தலைமைச் செயலக அலுவலர் இரா.பச்சமலை ஆகியோர் குழுவாகச் சந்தித்து நீண்ட நேரம் கட்சிப் பணிகளைப் பற்றிக் கலந்துரையாடினோம்.

1983 சூலையில் தமிழீழத்தில் பெரும் போராட் டம் வெடித்தது. அங்கு நடந்த தமிழர் அழிப்புப் பற்றி, முதலாவதாக ஒரு கண்டனச் சுவரொட்டியை, பெ.ச.க. சார்பில், சென்னையின் பல பகுதிகளிலும், நகரப் பேருந்துகளிலும் ஒட்டிப் பரப்புரை செய்தோம்.

நானும் சீர்காழி மா.முத்துச்சாமியும், சேலம் எம்.இராஜு வும் மாதக்கணக்கில் வடநாட்டில் தங்குவதை 1978 செப்டம்பருக்குப் பிறகு மேற்கொண்டோம்.

சென்னை மாவட்டப் பெரியார் சமஉரிமைக் கழச் செயலாளராக முதன்முதலில் பொறுப்பேற்றவர் முனைவர் து.மூர்த்தி ஆவார். அடுத்து க.தென்னன்; அவரை அடுத்து து.இராமகிருஷ்ணன்.

1983 நடுவில் “சிந்தனையாளன்” ஒரு கிழமை இதழாக, பெரியார் குழும ஏடாக வெளியிடப்பட்டது. அது 6 மாதம் மட்டுமே வெளிவந்தது. அவ்விதழில் முத்து. குணசேகரன் (ம.வெ.சி.அன்பன்), து.மூர்த்தி, கவிஞர் தமிழேந்தி, க.முகிலன், இரா.பச்சமலை, நாஞ்சில் நடராசன், கோவி இராமலிங்கம் ஆகியோர் சிறந்த கட்டுரைகளை எழுதி வெளியிட்டனர்.

தமிழகத்தில், மாவட்டந்தோறும் பல பொதுக்கூட் டங்களை நடத்துவதையும் தொடர்ந்து செய்தோம்.

பல கூட்டங்களில் வேலூர் மாவட்டத்திலும், சென் னையிலும் தோழர் து.மூர்த்தி பங்கேற்றார்; உணர்ச்சி ததும்பும் உரைகளை ஆற்றினார்; மார்க்சியமும் பெரியாரியமும் மட்டுமே, இந்தியாவிலுள்ள கீழ்ச்சாதி உழைக்கும் மக்களுக்கு விடுதலை தரும் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

அவர் அலிகரிலுள்ள “அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில்” தமிழ்த் துறைப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட, பேராசிரியர் சாலை இளந்திரையன் அவர் களும் துணைபுரிய வாய்ப்பு இருந்தது; அந்த வாய்ப் பைத் தேடித்தர முயன்றேன்; நற்பயன் தந்தது.

1984 முதல் 1991 முடிய எப்போது வடக்கே சென் றாலும் அலிகரில் குறைந்தது ஒருகிழமை தங்குவதை நானும் சங்கமித்ரா அவர்களும் தவறாமல் மேற் கொண்டோம். அப்போதெல்லாம் து.மூர்த்தி, பேராசிரி யர் எச்.எஸ்.யாதவ், பியாரிலால் லோதி, பேராசிரியர் அர்ஜுன்சிங் ஆகியோருடன் கலந்து பேசி, உத்தரப்பிர தேசத்தில் தீவிரமாகப் பணியாற்றிடத் திட்டமிட்டுச் செய்தோம்.

2000 ஆண்டில் தமிழகத்திலிருந்து வே.ஆனைமுத்து, சங்கமித்ரா, எம்.இராஜு, இரா.பச்சமலை, சி.பெரியசாமி, து.தில்லைவனம் ஆகியோர் சென்றோம். உ.பி.யில் அலிகரில் பேராசிரியர் து.மூர்த்தி, பேராசிரியர் எச்.எஸ். யாதவ், பியாரிலால் லோதி, பொறிஞர் அரிசிங் ஆகி யோரை இணைத்துக்கொண்டு, மேற்கு உத்தரப்பிர தேசத்தில் மட்டும் 31 மாவட்டங்களில் இடஒதுக்கீடு பற்றிப் பரப்புரை செய்தோம். மூர்த்தி பங்கேற்ற ஒவ் வொரு கூட்டத்திலும், கடல் மடைதிறந்தது போல், து.மூர்த்தி ஒருமணி நேரம் இந்தியில் உணர்ச்சி பொங்க முழங்கினார்; சங்கமித்ரா அரை மணிநேரம் பொறுமை யாக இந்தியில் பேசினார். நான் இந்தியாவில் பரப் புரை செய்திட, இந்தியைக் கற்றுக்கொள்ளாமற் போனது ஒரு குறை என்பதை அவர்கள் எனக்கு உணர்த்தினர்; நானும் மற்ற எம் தோழர்களும் அப்போது ஆங்கிலத்தில் உரையாற்றினோம்.

தமிழத்தில் “ஆரியம்-திராவிடம்” “தேவர்-அசுரர்” என்கிற கருத்துருதான், பார்ப்பனியத்தின் கொடுமையை விளக்க வலிமையான ஒரு கருவி. அக்கருவியை 1922-1973ஆம் ஆண்டுகளில் 51 ஆண்டுகள் பரப்புரை செய்து செழுமையாக்கியவர் தந்தை பெரியார். பார்ப் பனியம் ஆணிவேர் சல்லிவேர் வரை தமிழரிடம் வேர்பிடித்துவிட்டது. அந்த வேர்களை அறுக்க ஒவ் வொரு தமிழனுக்கும், “ஆரிய-திராவிடக்” கருத்தியல் கத்தியைக் கொடுத்துவிட்டுச் சென்றவர், பெரியார். அந்தக் கத்தியைத் தமிழன் கையிலிருந்து தட்டிவிடப் பலரும் இன்று முயற்சிக்கின்றனர். அதற்கு ஆப்பு வைக் கிற தன்மையில்-“பெரியார் இன்றும் தேவையே” என்கிற கூரிய கத்தியைத் தந்தவர் நம் து.மூர்த்தி.

அந்த நம் தோழர் து.மூர்த்தி, நோய்வாய்ப்பட் டிருக்கும் எங்கள் கட்சித் தோழர் சுந்தரமூர்த்தியைப் பார்த்திடவேண்டி, வேலூருக்கு 12.10.16 மாலை வந் திருந்தார்; நான் 13.10.16 மாலை அங்கு சென்றேன். தோழர் து.மூர்த்தியை நீண்ட இடைவெளிக்குப்பிறகு பார்த்த நான், “என்னங்க மூர்த்தி-ஒரு நோயாளி போல ஆயிட்டிங்களே! ஏன்?” என்று கேட்டுவிட்டேன். “ரெண்டு நாள் கொடுமையான காய்ச்சலில் படுத்து விட்டேன். இப்போது தேவலாம்” என்று மட்டும் மறு மொழி சொன்னார். உடனே, து.மூர்த்தி, அவருடைய தமையனார் து.அரங்கநாதன், சா.குப்பன், நான் ஆகி யோர், சி.எம்.சி. மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு ஒருமணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். எட்டு பேர் சுந்தரமூர்த்தி அவர்களைப் பார்த்தோம். அவர் கண்திறக்கவே இல்லை. கனத்த நெஞ்சுடன் வீடு திரும்பினோம்.

மறுநாள் 14-10-16 அன்று காலை 8 மணிக்கு, தோழர் து.மூர்த்தி, து.அரங்கநாதன், சாந்தி அம்மையார் ஆகியோரிடம் விடைபெறச் சென்றேன்.

“நான் போய் வருகிறேன் மூர்த்தி-உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு விடை பெற்றேன்.

பின்னும் பத்தாம் நாள், 24-10-2016 ஞாயிறு அன்று அலிகரில் மூர்த்தி மறைந்துவிட்டார் என்கிற கொடிய செய்தியை, அன்றிரவு 7.30 மணிக்குத் தோழர் க.முகிலன் சொன்னார். நான் நிலைகுலைந்துவிட்டேன்.

தந்தை பெரியார் 24-12-1973 காலை வேலூர் சி.எம்.சி. மருத்துமனையில் கடைசி மூச்சை ‘ஆ’ என்று விட்ட நேரத்தில்-நான் அவருடைய தலைமாட்டில் வலப்பக்கத்தில் நின்றேன். ஆனால் அதிர்ச்சி அடைய வில்லை. ஏன்?

“அய்யா, காலைக்குள் இறந்துவிடுவார்” என்று என் தோழர்களிடம் 23 இரவு 12 மணிக்குச் சொல்லி விட்டு, சன்னல் ஓரம், பெரியாரின் கால்மாட்டுக்கு எதிரே, மடக்கு நாற்காலிகளைப் போட்டு, திருச்சி தோழர்கள் விடிய விடியக் காத்திருந்தோம். 24 காலை 7-15க்குப் பெரியாருடைய தலைமாட்டில் போய் நின்றோம். அப் போது பக்கத்திலிருந்த நான் “நடக்கக் கூடாதது நடந்து விட்டது” என்று நினைத்து, மனதைத் தேற்றிக் கொண்டேன்.

நம் து.மூர்த்தியை 14-10-16 அன்று காலை 8 மணிக்குப் பார்த்த நான், 26-10-16 பகல் 12 மணிக்கு என் தோழர்களுடன் அவருடைய உடலைப் பார்த்த பின்னர், இன்னும் மனதைத் தேற்றிக் கொள்ள முடிய வில்லை. ஏன்? அவர் இறந்துவிடுவார் என்று நான் கருதவில்லை.

முற்றிய புற்றுநோயால், து.மூர்த்தி நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்-64 ஆம் அகவையில். இது கொடுமையானது.

நம் தோழர்களில் பலர் து.மூர்த்தி அவர்களைப் போல, “பொரியார் இன்றும் தேவை! ஏன்?” என்கிற கூரிய போர்க்கருவியை ஏந்திட முன்வரவேண்டும். அதுவே நம் தோழர் து.மூர்த்திக்கு நாம் காட்டும் உண் மையான நினைவேந்தல்!

வாழ்க! வளர்க! தோழர் து.மூர்த்தி புகழ்!

- வே.ஆனைமுத்து

Pin It